நம்பிக்கை ஒரு வலி! By சிவா.
- melbournesivastori
- May 7, 2023
- 5 min read

மனிதம் இல்லை என்றால் மாக்களும் மக்களும் வேறல்ல…
எது நாகரீகம்? நாகரீகம் நாகரீகம் என்று எங்கும் கேள்விப்படுகிறோம். மேலைநாட்டு நாகரீகம், கீழைநாட்டு நாகரீகம், பண்டைய கால நாகரீகம், எகிப்திய நாகரீகம், சுமேரிய நாகரீகம் இப்படி பல பல…. மிடுக்காக உடை உடுத்தி விலை உயர்ந்த காரில் பயணப்படுவது நாகரீகமா? வளர்ந்த நாடுகள் என்ற பட்டியலில் உள்ள நாடுகளில் புழங்குவது நாகரீகமா? நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுவது அப்படி பேசுபவரிடம் பழகுவது நாகரீகமா? நாகரீகத்தின் வரையறுத்தல் தான் என்ன…. நாகரீகத்தின் முதல் மூலாதாரமே தேடுதலில் துவங்க வேண்டும் தேடினதை புரிந்து கொள்ள வேண்டும் புரிந்ததை உள்வாங்கி தெளிதல் வேண்டும்….. இப்படி நாகரீகம் துவங்கியிருந்தால் நினைத்துப் பாருங்கள் மேற்குறிப்பிட்ட எல்லா நாகரீகங்களிலும் போர் என்ற காட்டுமிராண்டித்தனம் இருந்திருக்காது. ஆம் போர் ஒரு காட்டுமிராண்டித்தனம்! போரில் மனிதத்தின் ஆணிவேரே களையப்படுகிறது ….. கொல்பவனும் கொல்லப்படுபவனும் கடவுள் நம்பிக்கை உடையவர்கள், எல்லோரும் கடவுளால் படைக்கப்பட்டவர்கள் என்று நம்புபவர்கள். உன்னைப் படைத்தவனும் கடவுள் தான், உன் எதிரியை படைத்தவனும் கடவுள் தான் என்ற நியதியை புரிந்து கொள்ள மறுக்கிற குணம் தான் மனிதத்தை இழக்கிற தான்மை, பொறாமை, வஞ்சம், ஏற்றத்தாழ்வு போன்ற குணங்கள் ஆட்டி படைக்கின்றன.
நான் பழனிவேல், புகைப்படத்துறையில் நீங்காத காதல் கொண்டவன். குடும்பத்துக்கான வேலை நேரம் தவிர்த்து மற்ற நேரத்தில் புகைப்படம் எடுப்பது.. இல்லை மனிதத்தின் மாண்பு அழிவதை நினைத்து வருந்துவது… அதிக வருத்தம் இருக்கும் போது புகைப்படம் எடுத்து வருத்தத்தை சிறிது மறக்கடிப்பேன். இது என் வாழ்க்கையின் அன்றாடம்… வருடா வருடம் நல்ல நிறுவனங்கள் நடத்தும் புகைப்பட போட்டிகளில் தவறாமல் கலந்து கொள்வேன். நான் எடுக்கும் புகைப்படங்கள் என்னை சுற்றி உள்ளவர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும் எந்த ஒரு புகைப்பட போட்டியிலும் இதுவரை வெற்றி பெற்றதே இல்லை… போட்டியில் வெற்றி பெற்ற புகைப்படங்களை பார்க்கும்போது எப்போதும் அதிக வருத்தமே மிஞ்சும்.
இதோ இப்போது காட்பாடியில் பெங்களூரு செல்ல தொடர்வண்டிக்காக காத்திருக்கிறேன்.
இன்னும் நேரம் இருப்பதால் மற்றவர்கள் பாதிக்கா வண்ணம் காதில் கருவியை மாட்டிக் கொண்டு கைபேசியில் காணொளியை காண முற்பட்டேன்.. முதல் காணொளியே ஏற்கனவே வருத்தத்தில் தடுமாறிக் கொண்டிருக்கும் என்னை மேலும் தடுமாற வைத்தது… ஆமாம் அதில் பார்த்த மணிப்பூரில் கலவரம்.. நூற்றுக்கணக்கான தமிழர்களின் வீடுகள் தீக்கிரியாக்கப்பட்டது.. உலகத்தின் பார்வைக்கு தெரிவது இரு பெரும் பிரிவுகளுக்கிடையே நடக்கும் கலவரம். அந்தக் கலவரம் ஏன் என்று புரிதல் உள்ளவர்களுக்கு தெரியும்… அதற்குள் செல்ல போவதில்லை.. என் வீடு பற்றி எரியும்போது ஊரெல்லாம் ஆங் ஆங்கே பற்றி எரிந்தாலும் என் உள்ளுணர்வு என் வீட்டை காப்பாற்ற தான் தூண்டும்… அதே காரணம் தான் இப்போது அங்கு தீக்கிரையாக்கப்பட்ட தமிழர்களின் வீடுகளைப் பற்றி நினைத்து வருந்துகிறேன்.. இந்த அவசரகால உலகில் நாகரீகத்தின் உச்சமாக கருதிக் கொள்ளும் எவரும் எந்த பொறுப்பையும் ஏற்றுக் கொள்வதில்லை எதைப்பற்றியும் கவலையும் படுவதில்லை… இளைஞர் சமுதாயமோ அடுத்து என்ன திரைப்படம் வரப்போகிறது அதற்கான முன்னோட்டங்கள் எப்போது வரப்போகிறது எவ்வளவு கோடிகளில் இந்த அந்த திரைப்படத்தை எடுத்தனர் எவ்வளவு சம்பளத்தை ஒவ்வொருவரும் பெற்றனர் என்று இதில் ஒவ்வொருவரும் 90 சதவீதத்திற்கு மேலான அறிவினை பெற்றிருந்தனர்.
தீக்கிரையான ஒரே ஒரு தமிழ் குடும்பத்தை மாதிரியாக எடுத்து சொல்கிறேன்.. பிறப்பால் தமிழர்கள் தமிழ்நாட்டின் தொடர்பு வெகு சொச்சமே. சென்ற நூற்றாண்டின் மத்தியில் பர்மாவில் குடியேறி கடுமையாக உழைத்து சம்பாதித்து ஒரு நல்ல நிலையை எட்டி நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது திடீரென பர்மா ராணுவம் எடுத்த முடிவினால் ஆயிரக்கணக்கானோர் தத்தளிக்க அப்போது இருந்த இந்திய பிரதமர் உதவிக்கரம் நீட்ட எல்லோரும் மணிப்பூரில் தஞ்சமடைந்தனர்… எப்படி வாழ்ந்தோம் என்று நினைத்து வருந்துவதற்கு கூட நேரமில்லை அடுத்து என்ன எங்கே செல்ல போகிறோம் எப்படி வாழ போகிறோம்? எப்படி குழந்தைகளை காப்பாற்ற போகிறோம் என்ற எண்ணமே கலக்கமாக மாறி இருந்து.
இதோ பெங்களூர் செல்ல தொடர்வண்டி வந்து விட்டது மற்றவற்றை பிறகு சொல்கிறேன். நின்ற வண்டியில் உள்ளே சென்று என்னுடைய இருக்கையின் எண்னை பார்த்து அது ஜன்னல் ஓரமாக இருக்க அமர்ந்து கொண்டேன். எதிரே இருந்த தம்பதிகள் பேசிக்கொண்டது எனக்கு பாட்டு கேட்கும் பழக்கம் இல்லாததால் தானாக என் காதுகளுக்கு வந்து சேர்ந்தது..
‘ என்ன மனுஷி அவங்க? உங்கள உங்க பெரியப்பா சாவிற்கு மரியாதை செய்ய அனுமதிக்காதது பெரிய தவறு’
‘ விடு அதை நானே பெரிது படுத்தவில்லை’
இருப்பினும் அம்மையார் தொடர்ந்து பேசினார்…
‘ மனசு கேட்கவில்லை, உங்க பெரியப்பா அவருடைய வீட்டில் தங்கியிருந்ததால் தானே நீங்கள் சென்று பார்க்கவில்லை… இது தெரியலையா அந்த மனுஷிக்கு?’
‘அவங்களுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்… இந்த பேச்சை அப்படியே விடு ‘
சிறிது நேரம் அமைதி.
ஒருவருடைய இறப்பில் ஆழ்ந்த துக்கத்தில் இல்லாமல் இறுதி மரியாதை செய்ய யாரை அனுமதிக்கலாம் யாரை அனுமதிக்க கூடாது என்று நினைத்துக் கொண்டிருப்பதே பூத உடலுக்கு செய்யும் அநீதி! மனிதம் அவசர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவே தோன்றுகிறது….
என் பக்கத்தில் இருந்தவர் ஐபேடில் ஏதோ படித்துக் கொண்டிருந்தார். அதற்கும் பக்கத்தில் இருந்தவர் பொறுமை இல்லாமல் சுய நாகரிகம் இல்லாமல் அவரைப் பார்த்து,
‘ என்னங்க, ஏதோ தீவிரமா படித்துக் கொண்டிருக்கிறீர்கள் ‘ என்று கேட்டார்.
‘ ஆமாம், என் நண்பர் ஒருவர் அவர் எழுதுவதை நெருங்கியவர்களுக்கு அனுப்புவார் அதுதான் இது அதை படித்துக் கொண்டிருக்கிறேன் ‘
‘ எதைப் பற்றி?’
‘ பகுத்தறிவை பற்றி ‘
‘ உங்கள் நண்பர் என்ன கடவுள் மறுப்பாளரா?’
‘ ஏன், எதை வைத்து எதற்காக அப்படி கேட்கிறீர்கள்?’
‘ இல்லை பகுத்தறிவு பற்றி எழுதியிருக்கிறாரே என்று’
‘ பகுத்தறிவு பற்றி எழுதினால்?’
‘ அவர் கடவுள் மறுப்பாளராக தானே இருக்க முடியும்?’
‘என்ன அநியாயம் இது, கடவுள் மறுப்புக்கும் பகுத்தறிவுக்கும் என்ன தொடர்பு?’
‘ இல்லையா பின்ன?’
‘ நீங்கள் நினைப்பது தவறு, பகுத்தறிவு என்பது எந்த ஒரு விஷயத்தையும் படித்து, புரிந்து, தெளிவது என்பது… கடவுள் மறுப்புக்கும் இதற்கும் எந்த தொடர்பும் கிடையாது’
‘ என்ன புது விளக்கமாக தரீங்க… காலம் காலமாக பகுத்தறிவு என்றால் கடவுள் மறுப்பு என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம் ‘
‘ அதுதான் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்கிறேன்’
அந்த மனிதர் யோசிக்க ஆரம்பித்து விட்டார்… பக்கத்தில் இருந்தவர் அருமையான விளக்கத்தை தந்தது எனக்கு மகிழ்ச்சியை தந்தது.
தொடர்வண்டி ஆம்பூரில் நிற்க எதிரேயிருந்து தம்பதியர் இறங்கிச் செல்ல, மற்றொரு இளம் தம்பதியினர் அங்கே அமர்ந்தனர்.
வண்டி நகரத் துவங்கியது…..
சிறிது தூரம் சென்றிருக்கும், அந்த இளம் மனைவி,
‘ சாவுக்கு அவ பசங்கள கூட்டிட்டு வராதது ரொம்ப தப்புங்க ‘
‘ ஓ, அதுதான் ரொம்ப வருத்தமா இருக்கிறாயா?’
‘ ஆமாங்க எனக்கு மனசே ஆறல ‘
‘ புரியுது, சரி…. அவங்க கிட்ட கேட்டியா ஏன் பசங்கள கூட்டிட்டு வரவில்லை என்று?’
‘ இல்லை நான் ஏன் கேட்கணும்?’
‘ கேட்டிருந்தால் தெரிந்திருக்கும் என்ன காரணம் என்று’
‘ கூட்டிட்டு வராதது தப்புன்னு சொல்றேன்.. நீங்க என்னன்னா ஏன் கூட்டிட்டு வரலன்னு கேட்க சொல்றீங்க ‘
‘ அதைத்தான் சொல்கிறேன்… தவறு என்று முடிவு செய்வதற்கு பதிலாக ஏன் கூட்டிக் கொண்டு வரவில்லை என்ன காரணம் என்று தெரிந்து கொண்டால் நீ தொடர் வருத்தமோ கோபமோ பட தேவையில்லை ‘
இதற்கு மேலும் அந்த இளம் தம்பதிகளுடைய உரையாடலை கேட்காமல் யோசிக்க ஆரம்பித்தேன்..
அந்தப் பெண் தன் பிள்ளைகளை கூட்டி வராததற்கு பல பல காரணங்கள் இருந்திருக்கும் அதில் ஒன்று அழைத்துக் கொண்டு வரக்கூடாது என்று இந்தப் பெண் நினைப்பது போல் இருக்கலாம்… அதைக் கேட்டு தெரிந்து கொண்டிருந்தால் வருத்தம் கோபமாக மாறி ஓரிரு நாளில் மறந்து விட்டிருக்கலாம்.. அவ்வாறு இல்லாமல் நினைத்துக் கொண்டே இருப்பது எவ்வளவு மன அழுத்தத்தை அந்த பெண்ணுக்கு தரும் என்பதை உணர்ந்ததாகத் தெரியவில்லை. அதுவே குடும்பங்கள் நிரந்தரமாக பிரிய காரணமாகவும் அமைந்துவிடும்.
வேறு வகையாக அந்தப் பெண்ணின் பிள்ளைகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கலாம் இல்லை தேர்வோ வேறு ஏதாவது அவசர வேலையாகவோ இருந்திருக்கலாம்….. கேட்டிருந்தால் தெரிந்து இருக்கும், தெளிந்திருக்கும்.
தேவையில்லாமல் மனிதம் பல வகையில் சிதைக்கப்படுவது தெரிகிறது.
திடீரென்று மணிப்பூர் ஞாபகம் வந்தது, உங்களுக்குச் சொல்கிறேன் என்று சொன்னேன் அல்லவா….
பிள்ளைகளை குழந்தைகளை எப்படி வளர்க்க போகிறோம் என்று இந்த நாட்டில் இருக்கும் காட்டில் திக்குத் தெரியாது திண்டாடிக் கொண்டிருக்கும்போது ஏன் நம் தாய் மண் தமிழ்நாடு இருக்கிறதே செல்வோம் என்று கடினப்பட்டு தமிழ்நாடு வந்தடைந்து பிழைக்க வழி தேடினர்….. வந்தோரை வாழவைக்கும் தமிழ்நாடு இவர்களுக்கு கை கொடுக்கவில்லை.. வேற்று நாட்டில் இருந்து வந்தவர்கள் என்பதாலோ என்னவோ. வாழ முடியாதவர்கள் திரும்பி மணிப்பூரே வந்தனர்… பர்மாவில் இருந்து தப்பி பிழைத்ததை நினைத்து இங்கு காலத்தை ஓட்டிய போது… இங்கு…இப்போது…. இந்த 2023 ல் இரு பிரிவினருக்கிடையே நடக்கும் கலவரத்தில் இரு ரொட்டித் துண்டுகளுக்கு இடையே மாட்டிய இடை சொருகல் போல் மாட்டி திண்டாடி இப்போது தீக்கிரையாகி நின்றனர்… நம்பிக்கையுடன் இந்தியாவிலிருந்து சென்று பர்மாவில் வாழ்ந்து துரத்தி அடிக்கப்பட்டு இந்தியாவிற்கே வந்து தாய் தமிழ்நாட்டிற்கு வந்து பிழைக்க வழி இல்லாமல் மணிப்பூருக்கே வந்து வாழலாம் என்று நம்பியிருந்தபோது……….
வருத்தப்படுவதை தவிர நாம் என்ன செய்ய முடியும்? முடியும்… சரியான தலைவரை தேர்ந்தெடுக்க முடியும்…. என்ன செய்வது வறுமை…. எவர் அதிக பணம் கொடுக்கிறாரோ அவருக்கே ஓட்டு போட வைக்கிறதே! தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு எங்கே நேரம் இருக்கிறது இனத்திற்கு குரல் கொடுக்க? பர்மா கலவரத்தில் இந்தியா வந்தோருக்கு தாய் தமிழ்நாட்டில் உதவி கிடைக்கவில்லை என்றாலும் இந்த வலியை அதிகம் உணர்ந்த ஈழத்து உறவுகள் உதவி செய்தன அப்போது…. இப்போது அவர்களுக்கே உதவி தேவைப்படுகிறது… என்னப்பன் ஞான பண்டிதன் முருகனுக்கு உடல்நிலை சரியில்லையோ என்னவோ…… உதவிக்கு வரவில்லை.
தொடர்வண்டி ஜோலார்பேட்டையில் நின்றது… இளம் தம்பதியருக்கு பக்கத்தில் இருந்த ஒருவர் செல்ல மெல்லிய தேகத்துடன் பக்தி மார்க்கமாக வந்தார்.. நாகரீகம் கருதி அவர் எந்த மதத்தை சேர்ந்தவர் என்று நான் கூற விரும்பவில்லை.
தொடர்வண்டி நகர துவங்கியது.
நான் வெளியே பார்த்துக் கொண்டே யோசித்துக் கொண்டிருந்தேன்…
‘ஹலோ சார் என்ன தீவிரமாக யோசித்துக் கொண்டு ஏதோ பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?’
‘ பலமான யோசனை ஏதுமில்லை சும்மா பார்த்துக் கொண்டிருந்தேன் ‘
எனக்கு தேவையற்ற பேச்சுக்களில் விருப்பமில்லை… இருப்பினும் இவர் வலுக்கட்டாயமாக கேட்டதற்கு பதில் கூறினேன்.
‘ ஏதோ வருத்தத்தில் இருப்பது போல் தெரிகிறது… “……..” சென்று வாருங்கள் எல்லாம் விலகிவிடும் ‘
‘ நன்றி, நான் மதவாதி அல்ல ஆன்மீகவாதி ‘
‘ என்ன நீங்க ஆன்மீகவாதி என்கிறீர்கள் மதவாதி அல்ல என்கிறீர்கள் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கிறதே?’ என்று கோபமாக கேட்டார்.
‘ ஆன்மீகத்திற்கும் மதத்திற்கும் சம்பந்தம் இல்லையே?’
அவருக்கு கோபமே வந்துவிட்டது.. நிதானத்தை இழக்க ஆரம்பித்தார்…
‘ என்ன முட்டாள்தனமாக சொல்கிறீர்கள்? உங்களைப் போன்று அறிவு இல்லாமல் பேசுவோர் தான் இந்த நாட்டையே குட்டிச்சுவர் ஆக்குகிறார்கள் ‘ என்றார்.
நான் பொறுமையாக, ‘எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு ஆனால் மத நம்பிக்கை இல்லை அதைத்தான் கூறினேன் ‘
ஏளனமாக சுற்றிலும் முற்றிலும் பார்த்து சிரித்தார்…
‘ கடவுள் நம்பிக்கை உண்டாம் ஆனால் மதத்தில் நம்பிக்கை இல்லையாம்….. இந்த நூற்றாண்டின் முதல் தர ஜோக் இது ‘
என் வாழ்நாள் முழுவதும் இது போன்றவர்களை நிறைய சந்தித்து இருக்கிறேன் அதனால் இவர்களுக்கு விளக்கி என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை… அமைதியாக மறுபடியும் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன்.
மக்களுக்கு நல்லவிதமான புரிதல் வரும் என்று திடமாக நம்பிய என் நம்பிக்கைக்கு ஆக்சிஜன் குறைந்துவிட்டது….. வலி எடுத்தது.
வீட்டிலும் வெளியிலும் நாட்டிலும் எங்கும் புரிதல் இல்லை என்றே தோன்றியது மனிதம் சிறுக சிறுக செத்துக் கொண்டிருப்பது கண்கூடாக தெரிந்தது… இங்கு மட்டுமா என்றால் இல்லை எங்கும் இதே.
தொடர்வண்டி ஒயிட் பீல்டை கடந்து சென்று கொண்டிருக்கும்போது ஒரு பெரிய விளம்பர பதாகையை பார்த்து என் மகிழ்ச்சிக்கு அளவில்லாமல் போனது..
காரணம் நான் சென்ற வருடம் புகைப்பட போட்டிக்கு அனுப்பிய என் புகைப்படம் ஒரு விளம்பரமாக கம்பீரமாக நின்றது..
மகிழ்ச்சி ஓரிரு வினாடிகளில் தொலைந்தது… எனக்கு எந்த ஒரு செய்தியும் இல்லை என் புகைப்படத்தை பயன்படுத்தப் போகிறார்கள் என்று… அந்தப் போட்டியில் நான் வெற்றி பெறவும் இல்லை.
அதற்குப் பிறகு நேரம் எப்படி கடந்தது என்று தெரியவில்லை பெங்களூர் சிட்டி ஸ்டேஷன் வந்தடைந்து என் அலுவலகத்தில் பதிவு செய்திருந்த பெரிய விடுதிக்கு வந்து முதல் காரியமாக அந்த நிறுவனத்தை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டேன்.
அந்த விளம்பர பதாகை பற்றி விளக்கி கூறினேன்..
அடுத்த முனையில் இருந்த பெண் அளித்த விளக்கம் என் ஒட்டுமொத்த உலக நம்பிக்கையையும் வலிக்க செய்தது.
” நீங்கள் போட்டிக்கு அனுப்பும் எல்லா புகைப்படங்களும் இந்த நிறுவனத்திற்கு சொந்தம் அதை எந்த வழியிலும் பயன்படுத்த நிர்வாகத்திற்கு அனுமதியை நீங்கள் கையெழுத்திட்டு கொடுத்திருக்கிறீர்கள், தேர்ந்தெடுக்கப்படும் புகைப்படங்களுக்கு மட்டும் பரிசுகளும், பரிசுத் தொகைகளும் அளிக்கப்படும்”
என் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் இந்த ‘ஸ்மால் பிரண்ட்ஸ்’ வலிக்கச் செய்தது!