top of page

விமர்சனங்களில் “Lag!” By சிவா.

  • melbournesivastori
  • May 26, 2023
  • 8 min read

விகாஷ், நெட்பிளிக்சில் வரலாற்று வெப் சீரிஸ்களை எழுதி புகழ்பெற்ற தமிழர். இவருடைய சீரியல்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு ஃபிரேமும் அளவெடுத்து வார்த்தது போன்ற கதை திரைக்கதை எழுதியவர். உலக நெட்ப்ளிக்ஸ் வட்டாரங்களில் இவருக்கு என்று தனி மதிப்பு உண்டு.

அன்று காலை விகாஷிற்கு வந்த கைபேசி அழைப்பு அளவு கடந்த மகிழ்ச்சியை தந்தது… அழைத்தவர் யார் என்று தெரிந்தால் அந்த மகிழ்ச்சி நம்மையும் தொற்றிக் கொள்ளும்…..

ராகவன், தமிழர்.. பூர்வீகம் தமிழ்நாடு.

நெடுங்காலமாக ஜப்பானில் இருக்கும் நெட்ப்ளிக்ஸ் இன் ஜப்பான் சீரியல்களில் புகழ்பெற்ற இயக்குனர்.. ஆம் அவரிடம் இருந்துதான் விகாஷிற்கு அந்த கைபேசி அழைப்பு வந்தது.

‘ ஹலோ தேர், குட் ஐ ஸ்பீக் டு மிஸ்டர் விகாஷ்?’

‘ எஸ் ஸ்பீக்கிங், ஹூ இஸ் இட்?’

‘ ஐ அம் ராகவன் பிரம் ஜப்பான், கேன் வி ஸ்பீக் இன் தமிழ்?’

‘ தாய் மொழியில் பேச கேட்க வேண்டுமா… எந்த ராகவன் நீங்கள்?’

‘ நீங்கள் வெப் சீரிஸ் எழுத்தாளர் விகாஷ், நான் வெப் சீரிஸ் இயக்குனர் ஜப்பான் ராகவன்’

‘ ஹலோ சார் உங்களை சந்திக்க வேண்டும் என்று பல நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன் ‘

‘ சார் எல்லாம் வேண்டாம் விகாஷ், நாம் இருவரும் ஒத்த வயது உடையவர்கள்…தமிழர்கள்… அருமையான பெயர் இருக்கும் பொழுது ஏன் அதையே பயன்படுத்திக் கூடாது?

‘ நல்லது ராகவன், என்ன ஒரு ஆச்சரியம்… சொல்லுங்கள் என்னை அழைத்ததற்காண காரணம் ‘

‘ அமெரிக்காவில் இருந்தும் ஐரோப்பிய வரலாறுகளை எழுதி நல்ல அனுபவம் வாய்ந்தவர் நீங்கள், நானும் ஜப்பான் வரலாறுகளை இயக்கி அனுபவம் வாய்ந்தவன்….. ஏன் நம் அனுபவங்களை நம் தாய் தமிழுக்கு பயன்படுத்தக் கூடாது என்று பல மாதங்களாக சிந்தித்து வந்துள்ளேன்’

‘ எனக்கும் அதே எண்ணம் தான் பல மாதங்களாக…. என்ன ஒரு ஒற்றுமை… மேலே சொல்லுங்கள்’

‘ விகாஷ், நம் தமிழ் நாயகர்களில் ஒருவரை உள்ளது உள்ளபடியே பெருமைப்படுத்தி அருமையாக ஒரு திரைப்படம் எடுக்க நினைத்துள்ளேன், நெட்ப்ளிக்ஸ் நிர்வாகமும் ஒரு பிரம்மாண்ட திரைப்படத்திற்கான அனுமதியும் அளித்துள்ளது …. திருவள்ளுவரில் இருந்து காமராஜ் வரை ஒரு 10 பேரை சிபாரிசு செய்ய முடியுமா?’

‘ நல்லது, இதைவிட வேறு மகிழ்ச்சி என்ன வேண்டும் எனக்கு? நாளை சொல்கிறேன்… பரவாயில்லையா?’

‘ மிக்க மகிழ்ச்சி நாளை இதே நேரத்தில் உங்களை அழைக்கிறேன் ‘

‘நான் அறிவு!’ யூடியூப் சேனல் தமிழ் அறிந்த மக்களிடையே மிகவும் பிரபலமான சேனல், சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்களை கொண்ட சேனல்.

அந்த சேனலின் நிறுவனர் அறிவு எல்லாவித சப்ஜெக்டுகளிலும் சளைக்காமல் பதில் கூறுபவர்…. பீங்கான் தட்டில் இருந்து பறக்கும் தட்டு வரை… பிற உயிரினங்களில் இருந்து பிரபஞ்சம் வரை…. இவர் அளிக்கும் பதில்கள் அவருடைய சப்ஸ்கிரைபர்களுக்கு அவர் ஒரு மேதை ஆகவே தெரிந்தார். அவர் பேட்டி எடுக்கும் போது பேட்டி கொடுப்பவரிடம் அவர் கேட்கும் கேள்விகள் மிகவும் வரவேற்பை பெற்றன.

ஒரு சில உதாரணங்களை பார்க்கலாம்….

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒருவரை பேட்டி எடுத்தார்..

‘ இரு வார வெளிநாட்டு பயணத்திற்குப் பிறகு இப்பொழுது தான் திரும்பி இருக்கிறீர்கள், நீங்கள் அங்கு பார்த்த முக்கியமான ஏதாவது ஒன்றை கூறுங்கள் ‘

‘ வணக்கம் அறிவு, முக்கியமானதாக ஏதும் படவில்லை.. எல்லாம் பலமுறை நான் பார்த்ததே தான்.. எதையாவது பற்றி குறிப்பாக கேளுங்கள் நான் பதில் அளிக்கிறேன் ‘

‘ என்னுடைய சப்ஸ்கிரைப்பர்கள் பெரும்பாலும் இளைஞர்கள் அவர்களுக்கு பிடித்தது போல ஏதாவது ஒன்று…’

‘ ம்ம்ம்ம்… ஒரு இரவு விடுதிக்கு சென்றேன் அதில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு பார் அட்டெண்டரை பார்த்து ஆச்சரியப்பட்டேன் இந்தியர் போல் தெரிந்தார் ‘

‘ அப்படியா?’

‘ ஆமாம், எனக்கு சிறிது குடிக்கும் பழக்கம் உண்டு… நேராக அவர் முன் சென்று அமர்ந்தேன்.. ஆச்சரியம் அவருக்கு என்னை தெரிந்திருக்கவில்லை…..

‘வேர் ஆர் யூ ஃப்ரம்’ என்று கேட்டேன்… ‘ஒய்? ஐ அம் லோக்கல்’

‘ சாரி யூ லுக் லைக் இந்தியன் ‘

‘ எஸ் ஐ எம் அ இந்தியன் ‘

‘ யூ செட் யூ ஆர் ஏ லோக்கல்’

‘ எஸ் ஐ அம் ‘

எனக்கு சிறிது நேரம் புரியவில்லை.

பிறகு விவரமாக கூறினார்..

அவர் இந்தியன் தான் என்றும் அவரது பெற்றோர்களும் இங்கே பிறந்து வளர்ந்தவர்கள் என்றும்.

இந்தியாவின் எந்த பகுதியில் இருந்து என்று கேட்டேன். தமிழ்நாடு என்றவுடன் எனக்கு அதிர்ச்சி தாங்கவில்லை… தமிழராக இருந்தும் என்னை தெரிந்திருக்கவில்லையே என்று… இதுதான் உங்களுடைய முழு வேலையா என்று கேட்டேன், அதற்கு அவர் இல்லை என்னுடைய பகுதி நேர வேலை என்றதும் எனக்கு மேலும் தெரிந்து கொள்ள ஆவல் இருந்து கேட்டேன்.. அப்படி என்றால் முழு நேர வேலை என்ன..

முழு நேர வேலை எனக்கு இல்லை என்றதும்

ஏன் தேடிக் கொள்ளக் கூடாதா என்று கேட்டேன்..

அது முடியாது ஏனென்றால் நான் படித்துக் கொண்டிருக்கிறேன்.. மேலும் நான் அதிர்ச்சி அடைய, என்ன படித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டேன்…

பயோடெக் இன்ஜினியரிங் இல் பிஎச்டி செய்து கொண்டிருக்கிறேன் என்றதும் நான் திக்கு முக்காடி போனேன்.

பேச்சை மாற்றி நல்ல ட்ரிங்க்கா உங்களுக்கு பிடித்தது ஒன்றை தாருங்கள் என்றதற்கு…. நான் இதுவரை குடித்ததில்லை ஆனால் கஸ்டமர்ஸ் பெரும்பாலும் விரும்புவது எது என்று தெரியும் அதை உங்களுக்கு அளிக்கிறேன் என்றார்.

இது உங்கள் சப்ஸ்கிரைப்ர்களுக்கு மிகவும் முக்கியமானதாக படும் என்று நினைக்கிறேன்.. என்று அந்த அரசியல்வாதி பேட்டியில் கூற,

‘ அட என்னங்க சார், அட்வைஸ் பண்றதுக்கு ஆயிரம் பேர்கள் இருக்கிறார்கள்… இளைஞர்களுக்கு பிடித்த ஏதாவது ஒன்றைச் சொல்லுங்கள்…’ என்று அறிவு கேட்டது விமர்சனத்தில் பெரும்பாலும் பெரும் வரவேற்பு பெற்றது.

பேட்டியை பற்றி தொடர்ந்து பேசுவது இங்கு தேவையற்றது.

மற்றும் ஒரு உதாரணம்….

அறிவு ஒரு ‘நான் அறிவு’ காணொளியில் ஒரு புகைப்படத்தை காண்பித்து நக்கலாக கூறிய வாசகங்கள் 5 லட்சத்துக்கும் மேல் லைக்குகளை பெற்றது….

அந்தப் புகைப்படம்

தமிழர்களின் தொன்மை வாய்ந்த கேழ்வரகு கூழ் விற்கும் கடையின் முன்பு மூன்று இளைஞர்கள் கோட்டு சூட்டுடன் கூழ் குடிப்பது போன்றது.

அந்தப் புகைப்படத்திற்கான அறிவின் நக்கல்….

‘ கூழ் குடிப்பதற்கு கோட்டு சூட்டு எதற்கு?’

இந்த மேல் உள்ள விமர்சனத்திற்கு தான் ஐந்து லட்சத்துக்கு மேலாக லைக்குகள்….லைக்குகளைப் பெற்ற வேகம் கொரோனா உலகத்தில் பரவிய வேகத்தை விட அதிகமாக இருந்தது….

‘ எதிர்காலம் ‘ என்ற காணொளி தளத்தை விசாகன் நடத்தி வந்தார்.. விசாகனும் கிட்டத்தட்ட அறிவு வயதை ஒத்தவர் தான்.. ஆனால் தன் காணொளியில் வேடிக்கை, கேளிக்கை, நக்கல், நையாண்டிக்கு இடமளிக்காமல் தமிழரின் கலாச்சாரம், தொன்மை, பண்டைய வரலாறு மட்டுமல்லாது நவீன தொழில்நுட்பம், தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள் போன்ற பலவற்றை எளிதான தமிழில் விளக்குவார்.

மற்ற காணொளிகளில் வருவதைப் போல “நான் உங்கள்” என்று கூறாமல் நான் விசாகன் என்று கூறுவார்.. நேரடியான தொடர்பில் இல்லாதவர்களுக்கு உங்கள் என்று குறிப்பிடுவது தவறு என்று நினைப்பவர்.

தமிழின் சாபக்கேடு விசாகன் காணொளி தளத்திற்கு 8,000க்கும் சற்று அதிகமான சந்தாதாரர்களே.

எதிர்காலம் காணொளியில் இருந்து ஒரு சில உதாரணங்கள்……

‘நான் அறிவு’ காணொளியின் கூழ் குடிப்பதற்கு கோட்டு சூட்டு எதற்கு என்ற விமர்சனத்திற்கு நேரடியாக இல்லாமல் எளிதான மக்களுக்கு புரியும் படியான விளக்கத்தை தந்தது….

நிழலை நிஜம் என்று நம்புவது நிகழ்கால தமிழகத்தில் எங்கு பார்ப்பினும் நிதர்சனம்…

ஆங்கிலத்தை மொழி என்று பார்க்காமல் அறிவு என்று பார்க்கும் கூட்டம் பட்டி தொட்டியில் இருந்து பளிங்கு கட்டிடம் இருக்கும் சிங்காரச் சென்னை வரை இருக்கிறது…. இந்தக் கூட்டம், ‘இருப்பதோ ஒரு வாழ்க்கை அனுபவித்து விட்டு சாவோம்’ என்று வாழ்க்கையில் பெரும் பகுதியை கேளிக்கையிலேயே செலவழிக்கலாம் என்ற குணம் படைத்தவர்கள். விதியின் கொடுமை இக்கூட்டத்தில் பெரும்பாலோர் 50 வயதை தாண்டுவதில்லை.. இவர்கள் விட்டுச் செல்லும் குழந்தைகளை நினைத்திருந்தால் புரிதல் உண்டாகி இருக்கும்…. ஆனால் இவர்களின் புரிதலோ மடைமாறி எங்கோ சென்று விட்டது… இக்கூட்டத்தைப் பொறுத்தவரை நாகரீகம் என்பது….

நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுவது..

கான்ப்பிளேக்ஸ் அல்லது சீரியல் காலை, மதியம் பிரியாணி போன்றவை மாலை நூடுல்ஸ் இல்லை பாஸ்ட் புட் வகைகள்..

இரவு தவறாமல் குடியும் கும்மாளமும்..

அநாகரிகம் என்பது…..

தமிழில் பேசுவது.. அதுவும் மற்றவர்களை மரியாதையுடன் அழைப்பது…

தமிழர்களின் தொன்றுதொட்ட உணவுகளை சாப்பிடுவது…

எளிமையான உடைகளை உடுத்துவது.

தவறான புரிதல் கொண்ட விஷயங்கள்….

கோட்டு சூட்டு உடுத்தியவர்களுக்கு தமிழ் தெரியாது…

நல்ல உடை உடுத்துபவர்கள் பாரம்பரிய உணவுகளான கூழ், களி போன்றவர்களை உண்ணாதிருப்பர்.

தமிழ் அதிகம் பேசினால் முன்னேற முடியாது..

வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பயணம் செய்ய தமிழ் பெயர் வைத்திருப்பது ஒத்து வராது…

இந்த மேலுள்ள காணொளிக்கு கிடைத்த லைக்குகள் வெறும் 34.

ஒரு அற்புதமான காணொளியில் தமிழர்களின் ஜாதிகளை பற்றி வித்தியாசமாக கூறியது..

தமிழர்கள் ஜாதிகளாக பிரிந்து இருக்கிறார்கள் என்று எப்போதும் போல துவங்கி, நீங்கள் நினைக்கும் ஜாதிகளை சொல்லவில்லை என்று தொடர்ந்து….

நாம் வலதுசாரிகளாக, இடதுசாரிகளாக, பொதுவுடைமை கொள்கை கொண்டவர்களாக, பூவுலக நண்பர்களாக, பல வகுப்பின் இயக்கங்களாக பிரிந்திருப்பதை தான் கூறுகிறேன் என்பது தான்…

தமிழர்களின் பண்டைய வரலாறும் நாகரிகமும் தெரிந்தவர்கள் இவைகளை எல்லாம் ஒட்டுமொத்தமாக அளவாக கொண்டிருந்தால் அவர்கள் தான் தமிழர்கள் என்று புரிந்து கொண்டிருப்பார்கள்.. தமிழர் நாகரீகம் வளமையானது, வரலாற்று சிறப்புமிக்கது..

முல்லைக்கு தேர் கொடுத்தவனும்…

மயிலுக்கு போர்வை கொடுத்தவனும்…

பசுவிற்கு நீதிக் கொடுத்தவனும்… ( இந்த இடத்தில் நீதி பற்றி சொல்ல வேண்டும்…. இப்போது நீதிமன்றங்களில் நமக்கு கிடைப்பது எல்லாம் தீர்ப்பே அதனால் தான் மேல் முறையீட்டிற்கு சென்றால் மாறுதலான தீர்ப்பு கிடைக்கிறது… அதுவே நீதியாக இருந்தால் அதுவே முடிவாக இருந்திருக்கும் )

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறி ஜோதி வடிவில் இறைவனை கண்டேன் என்றவனும்….

காக்கை குருவிகள் எங்கள் ஜாதி என்றவனும்….

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றவனும்….

தமிழர்களே!

இவர்களில் வலதுசாரி, இடதுசாரி,பொதுவுடமை, பூவுலக நண்பர்கள் யார்?

இந்த எல்லா குணங்களையும் அளவுக்கு அதிகம் இல்லாமல் அளவாக கொண்டவனே தமிழன் என்று புரியும்.

இந்த காணொளிக்கு கிடைத்த லைக்குகள் 63.

செயற்கை அறிவைப் பற்றி ( ஏ ஐ ) விசாகன் அளித்த காணொளி தமிழில் வெளிவந்த அற்புதமான காணொளி…. முழுவதுமாக விளக்க நேரமில்லை அதனுடைய சாராம்சம் மட்டும் தருகிறேன்…

ஏ ஐ கிட்டத்தட்ட மத, ஜாதி வெறியை போன்றது… அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று நம் முன்னோர்கள் கூறியது போல, எல்லோருக்கும் தெரியும் முடிவு மோசமாகத்தான் இருக்கப்போகிறது… யாருக்கும் பயன் தரப் போவதில்லை… இவைகள் நம்மை ஆட்கொள்ள போகிறது என்று….

மத, ஜாதி பற்றுதல் அளவான அமிர்தம் என்று வைத்துக் கொண்டால் அதுவே தீவிர பற்றுதலாகும்போது வெறியாக மாறுகிறது அது நஞ்சின் விளைவுகளை ஏற்படுத்தும்…. அவர்கள் நிறுத்தினால் நாங்கள் நிறுத்துகிறோம் என்பது செயற்கை அறிவு செயலிகளை வெளியிடும் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

இந்த காணொளிக்கு விசாகனுக்கு கிடைத்த லைக்குகள் 48… மக்கள் நல்ல விஷயங்களை புரிந்து கொள்ளவில்லையா அல்லது தேவையில்லை என்று நினைக்கிறார்களா…. விசாகன் ஏ ஐ யை புரிந்து கொள்வதே எளிது என்று நினைத்தார்.

ராகவன் கூறியது போலவே விகாஷை மறுநாள் காலை அழைத்தார்.

‘ காலை வணக்கம் விகாஷ், எப்படி இருக்கிறீர்கள்? தமிழ்நாட்டு வரலாற்றின் 10 நாயகர்களை தேர்ந்தெடுத்து விட்டீர்களா? ‘

‘ சில நிமிடங்களுக்கு முன்பு தான் உங்கள் வாட்ஸ் அப்பில் அனுப்பினேன் ‘

‘ இதோ ஒரு நிமிஷம் பார்த்துவிட்டு பேசுகிறேன் ‘

‘ அருமையான தேர்ந்தெடுப்பு… இப்பொழுது தான் ஒரு யோசனை வருகிறது….. நம் இருவரின் முதல் படைப்பாக இருக்கப் போகிறது இது … அது ஏன் தமிழ் தாய்க்கு காணிக்கையாக இருக்க கூடாது?’

‘ புரியவில்லை என்ன சொல்கிறீர்கள் ராகவன்?’

‘ ஏன் தொடக்கம் ஒரு தமிழ் நாயகியாக இருக்கக் கூடாது?’

‘அருமை அருமை… அப்படியே செய்யலாம் யாரையாவது மனதில் வைத்து இருக்கிறீர்களா?

‘ இதுவரை இல்லை நீங்கள் கூறுங்கள்….’

விகாஷ் சில நிமிடங்கள் யோசித்து விட்டு, ‘ வெள்ளையர்களின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட இந்தியாவின் முதல் ராணி அதுவும் தமிழ் ராணி வேலு நாச்சியார் தான் என் கண் முன்னே முதலில் வருகிறார்.’

‘ அருமையான தேர்வு, இந்தியா முழுவதும் ஜான்சி ராணியை கொண்டாடும் அளவிற்கு ஒரு சில சதவிகிதம் கூட நம் ராணிக்கு கொடுப்பதில்லை… நிறைய முறை வருத்தப்பட்டு இருக்கிறேன்… மேலும் ராணி வேலு நாச்சியார் ஜான்சி ராணிக்கு சுமார் நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர் ‘

‘ ராகவன் வேறு ஒரு யோசனை தோன்றுகிறது… வேலு நாச்சியாரை திரைப்படமாக எடுப்பதற்கு பதில் வெப் சீரியஸ் ஆக எடுக்கலாமே ‘

‘மிகவும் சரி, இந்தத் திரைப்படத்திற்குப் பிறகு மக்களின் வரவேற்பு இருக்கும் பட்சத்தில் தெற்காசியாவில் பேரரசை பரப்பிய மன்னாதி மன்னன் அஞ்சா நெஞ்சத்திற்கு பேர் போன  ராஜேந்திர சோழனின் வரலாற்றை வெப் சீரிஸாக எடுக்கலாம் என்று யோசித்து இருந்தேன் ‘

‘ ராஜராஜ சோழனை விட பல மடங்கு தமிழ் பெருமை காத்த மன்னன் ராஜேந்திர சோழன்….. அருமையான தேர்வு… அப்படி என்றால் நம் முதல் திரைப்படம் யாரைப் பற்றியது?’

‘ விகாஷ், வேலு நாச்சியாரின் தளபதி குயிலி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’

‘ நினைப்பதற்கு என்ன உலகிலேயே நாட்டுக்காக தன் உயிரை மாய்த்துக் கொண்ட முதல் வீரமங்கை… அதுவும் நம் தமிழ் பெண். தமிழ் பெண்கள் மட்டுமல்ல இந்தியப் பெண்கள் பெருமைப்பட வேண்டிய மாவீர மங்கை குயிலி!’

‘ தமிழ்த்தாய் பெருமைப்பட குயிலியைப் பற்றியே நாம் திரைப்படமாக எடுக்கலாம்… மாற்றுக்கருத்து உண்டா விகாஷ்?’

‘ 100% எனக்கும் உடன்பாடே ‘

‘ நெட்ப்ளிக்ஸ் ஏற்கனவே எனக்கு ஓகே சொல்லிவிட்டார்கள் நீங்கள் உங்கள் வேலையை துவங்குங்கள் ‘

‘ இப்போதே துவங்கி விடுகிறேன் .. டென்மார்க்கின் டேன்கள் ஏன் இவ்வளவு மூர்க்கத்தனமாக ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இருந்தார்கள் என்பதைச் சென்ற வாரம் தான் எழுதி முடித்தேன்… ஒரு மாதம் ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்று இருந்தேன், இது எனக்கு அற்புதமான முழு மனதுடன் செயல்படக்கூடிய நம் மண்ணுக்கு பெருமை அளிக்க கூடிய வேலை… ஒரு மாதத்திற்குள் முடிக்க முயற்சிக்கிறேன்’

இதன் பிறகு விகாஷ், ராகவன் இருவரும் பலமுறை பேசி சில முறை சந்தித்து முடிவு செய்து குயிலி பற்றிய திரைப்படத்தை துவங்கினார்கள்.

திரைப்படத்தை எடுத்து முடித்து தணிக்கை வரை சென்றதை பற்றி கூறினால் இது நாவலாக மாறிவிடும்…. சுருக்கமாக கூறி விடுகிறேன்.

இந்தியா மட்டுமல்லாது உலகில் உள்ள எல்லா இந்தியர்களும் இந்தத் திரைப்படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து காத்திருந்தனர். மற்ற தமிழ் திரைப்படங்களுக்கு கிடைக்காத இனம் புரியா மாபெரும் வரவேற்பு ஏன் கிடைத்தது என்றால்…. விகாஷ் ராகவன் இருவரும் நெட்பிலிக்ஸ் மூலம் உலகம் முழுவதும் மக்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள்.

அமெரிக்க ஐரோப்பிய ஜப்பானிய செய்தி ஊடகங்களும் இதைப் பற்றி அடிக்கடி செய்தி வெளியிட மாபெரும் எதிர்பார்ப்பை கொண்டிருந்தது.

தமிழ்நாட்டு ஊடகங்களை பற்றி கேட்கவே தேவையில்லை.. திரைப்படம் எடுக்கும் போது இருந்த வேலை சுமையை விட ராகவனுக்கும் விகாஷ்க்கும் சுற்றி சுற்றி எல்லா ஊடகங்களுக்கும் பேட்டி கொடுப்பது அதிக சுமையாக தெரிந்தது… தாய்மண், தாய்மொழி என்பதால் இந்த சுமையை விருப்பத்துடன் ஏற்றுக் கொண்டார்கள்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தனி காட்சி ஏதும் இல்லாமல் நேரடியாக திரையரங்குகளில் வெளியிட நெட்பிலிக்ஸ் நிர்வாகம் முடிவு எடுத்தது. இது தமிழ்நாட்டின் சில பிரபலங்களுக்கு வருத்தமாக இருந்தாலும் OTT யின் தயவு தேவை என்பதால் அமைதி காத்தனர்.

அந்த நாளும் வந்தது…

தமிழர் திருநாள் பொங்கலன்று உலகம் எங்கிலும் “வீரமங்கை குயிலி” திரையிடப்பட்டது.

தற்போதைய தமிழ்நாட்டு கலாச்சாரம்…..

முதல் காட்சி முடிந்து வெளியே “நான் அறிவு” காணொளி ஊடகத்தின் அறிவு வெளியே வருவதைப் பார்த்து எல்லோரும் சூழ்ந்து கொண்டு கேட்டனர்,

‘ படம் எப்படி இருக்கிறது?’

‘ம்ம்ம்ம்ம்…. என்ன சொல்வது என்று தெரியவில்லை…. பிரம்மாண்டமான விளம்பரங்களை பார்த்து நிறைய எதிர்பார்த்தேன்.

ஒரு சில இடங்களில் லேக் இருந்தால் பரவாயில்லை.. படத்தின் பல இடங்களில் லேக் இருக்கிறது…’ என்று கூறி விட்டு சற்று நிறுத்த

‘ என்ன சொல்றீங்க படம் போரா?’

அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல் அவர்களைப் பார்த்தே கேள்வி கேட்டார்,

‘ பணம் கொடுத்து திரைப்படம் பார்க்க வருவது எதற்காக?… நேரத்தை ஜாலியாக செலவழிக்க தான்.. வரலாற்றுப் படம் எடுக்கிறோம் என்று சொல்லிவிட்டு ஒரு பாட்டு இல்லை.. அந்த காலத்துல வரலாற்றுப் படம் என்றால் நிறைய பாடல்கள் இருக்கும் இதில் ஒரு சில பாடல்கள் ஆவது எதிர்பார்த்தேன்… அதுவும் அருமையான வெளிநாட்டு லொகேஷன்களில்…. காலம் காலமாக நாம் எல்லா திரைப்படங்களிலும் எதிர்பார்ப்பது காமெடி… இதில் மருந்துக்க கூட காமெடி இல்லை.. ஏன் நம் பழைய வரலாற்றுப் படங்களில் காமெடி இல்லையா? தமிழர்கள் எடுக்கிறார்கள் என்று பார்த்தேன்… தமிழர்களின் தேவையை இது பூர்த்தி செய்யவில்லை ‘

‘ இசையை பற்றி ‘

‘ அதை ஏன் கேக்குறீங்க, குதிரையில் செல்லும்போது குதிரை குலம்படி சத்தம் மட்டும் கேட்கிறது… காட்டில் நடக்கும் போது காலில் நசுங்கும் உலர்ந்த இலைகளின் சத்தம் மட்டும் கேட்கிறது… ஊம்ம்…. நிறைய எதிர்பார்த்தேன் ஏமாற்றுமே ‘

எதிர்பார்த்த விமர்சனம் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் இருந்த கூட்டத்திற்கு “எதிர்காலம்” காணொளி ஊடகத்தின் விசாகன் வருவது தெரிந்து அவரை நோக்கி ஓடினார்கள்…

‘ விசாகன் படத்தைப் பற்றி ஒரு இரு வரிகள்..’

‘ ஓரிரு வரிகளா…. திரைப்படம் மொத்தம் இரண்டரை மணி நேரம்… ஒவ்வொரு நொடியைப் பற்றியும் புகழலாம். முதலில் அந்த இரு தமிழர்களுக்கும் இதுபோன்ற அற்புத படைப்பை தந்ததற்கு தமிழர்கள் அனைவரும் கடமைப்பட்டு இருக்கின்றனர். தேவையற்ற பாடல் செருகல் இல்லை, திரைப்படத்திற்கு சம்பந்தமே இல்லாத காமெடி இல்லை, காது ஜவ்வு கிழியும் படியான இசை இல்லை… மொத்தத்தில் அவர்கள் இருவரின் ஒட்டுமொத்த அனுபவத்தையுமே இதில் பார்க்க முடிந்தது’

‘ எவ்வளவு மார்க் கொடுப்பீங்க?’

‘ என்னங்க இப்படி கேக்குறீங்க, தமிழில் இது போன்ற அற்புதமான படைப்பு இதுவரை வந்ததே இல்லை என்று கூறுகிறேன் அவர்களுக்கு போய் மார்க் போட சொல்கிறீர்களே…. நம் தரத்தை நாமே குறைத்துக் கொள்ள வேண்டாம் ‘

‘ படத்தில் பிடித்தது எது உங்களுக்கு?’

‘ இந்தத் திரைப்படத்தில் பிடிக்காதது எது என்று வேண்டுமானால் சொல்லலாம் ‘ என்று கூறிவிட்டு விசாகன் சில நொடிகளே தாமதிக்க…

பேட்டி எடுத்தவர்கள் நெற்றியை சுருக்கி பார்க்க…

‘ இந்த திரைப்படத்தில் பிடிக்காத விஷயம் திரைப்படம் முடிந்து விட்டது என்பது தான்… இரண்டரை மணி நேரம் அந்த காலத்திற்கே சென்று விட்டேன்.. திரைப்படத்தின் ஒவ்வொரு நொடியையும் ரசித்தேன்’

‘ குயிலியாக நடித்த அந்த நடிகையின் நடிப்பு எப்படி?’

‘ உங்களுக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன்….. திரைப்படத்தின் ஒவ்வொரு நொடியும் ரசித்தேன் என்றால் ஒட்டுமொத்த திரைப்படமும் கதை, திரைக்கதை, வசனம், இசை, இயக்கம், கதாபாத்திரங்களின் நடிப்பு 100% மேல் மார்க் இருந்தால் கொடுக்கலாம்’

‘ படத்தில் நிறைய லேக் இருக்கிறது என்று சொல்கிறார்களே’

‘ தமிழ் மீதும், தமிழ் மண்ணின் மீதும், தமிழ் வீரவரலாற்றின் மீதும், நம் முன்னோர்களின் தியாகங்கள் மீதும் ஈடுபாடும் புரிதலும் இல்லாதவர்கள் மட்டுமே இந்தத் திரைப்படத்தில் குறை காண முடியும் ‘

தொடர்ந்து இதைப்பற்றி கூறுவதை விட இந்த திரைப்படத்தின் இந்தியா மற்றும் உலகத்தின் வரவேற்பு பற்றி பார்க்கலாம்.

முதல் நாள் தமிழ்நாட்டுத் திரையரங்குகளை தவிர மற்ற இந்திய மாநிலங்கள், உலக நாடுகளில் திரையரங்குகள் நிறைந்தன.. தமிழ்நாட்டில் மட்டும் வித்தியாசமான பாதிப்பு ஒரு வாரம் இருந்தது…

மற்ற இடங்களின் வெற்றிகளை பார்த்தோ, வெளி ஊடகங்களின் விமர்சனங்களை பார்த்தோ ஒரு வாரத்திற்கு பிறகு திரை நிறைந்த காட்சிகள் தொடர்ந்து கொண்டே இருந்தது.

முதல் இந்திய திரைப்படம் அதுவும் தமிழ் படம் எட்டு ஆஸ்கார் விருதுகளை பெற்றது.

இந்த மாபெரும் வெற்றி புகழின் போதையில் சிக்காமல் ராகவன், விகாஷ் இருவரும் ராஜேந்திர சோழனின் வெப் சீரிஸ் வேலைகளில் இறங்கினர்.

வீரமங்கை குயிலின் திரைப்படத்தில் எங்கும் லேக் இல்லை, “நான் அறிவு” காணொளியின் விமர்சனத்தில் தான் எங்கும் லேக் இருக்கிறது என்று அந்தக் காணொளியின் சப்ஸ்க்ரைபர்ஸ்களே புரிந்து கொண்டனர்.

இக்கதை பிடித்திருப்பின் உங்களைப் போன்று படிப்போருக்கு பகிரவும், நன்றி!

bottom of page