மாயை!
- melbournesivastori
- Jul 17, 2022
- 9 min read

என்னைப் பற்றி சுருக்கமாக சொல்லி விடுகிறேன். விவரித்துச் சொல்லும் அளவிற்கு பெரிதாக ஏதும் இல்லை..
நான் குமரவேல், சிறுவயதிலேயே தந்தையை இழந்தவன் அன்று முதலே அம்மாவுடன் மாமாவின் ஆதரவில் வளர்ந்தவன்.. மாமி நல்லவர், இல்லாவிட்டால் நான் வளர்ந்து பெரியவனாகி பட்டப் படிப்பு முடியும் வரை அங்கு தங்கி இருந்திருப்பது சாத்தியமாகி இருக்காது.
பட்டப் படிப்புதான்… நன்றாகத்தான் படித்தேன்; நல்ல மதிப்பெண்களுடன் முடித்தேன் .. இருப்பினும் இரண்டு வருடங்களாக வேலை கிடைக்காததால் என் அம்மாவை தனியாக அழைத்துச் சென்று காப்பாற்ற முடியாமல் இன்றும் திணறிக் கொண்டிருக்கிறேன்… எனக்கு விவசாயம் பிடிக்கும்… சொந்த நிலம் இல்லாமல் விருப்பம் இருந்து பயன் என்ன? பட்டப்படிப்பு முடிந்தவுடன் நல்ல வேலை கிடைக்கும் வரை நேரத்தை வீணாக்காமல்.. நண்பனுக்கு தெரிந்த அரசியல்வாதி மூலமாக இதோ இன்று வரை வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தின் முன்பு காலணிகளை பாதுகாக்கும் காவலனாக இருக்கிறேன். படித்தது வெறும் பட்டப்படிப்பு தான்… நான் செய்யும் தொழிலை வைத்து என்னை எடை போடாதீர்கள்.. என்ன இவன் பெரிய மேதாவி போல் பேசுகிறானே என்று எண்ணி விட வேண்டாம்.. டோக்கன் கொடுத்து காலணிகளை பாதுகாக்கும் நேரம் சிறிதே… அங்கு அமர்ந்து கொண்டு மற்றவர்களை, அவர்களின் பேச்சுக்களை கேட்கும்போது உலக அறிவு எல்லா கோணங்களிலும் வளரும் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியாது…
உங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது.. இது போன்ற வேலையில் பொதுவாக படிக்காத சிறுவர்களே இருப்பது வழக்கம்… காலத்தின் சாபக்கேடு இதை நான் ஏற்றுக் கொண்டு செய்து வருகிறேன். உலக அறிவு வளரும் என்று கூறியதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்… முனைவர் பட்டத்திற்கு மேலாக தெரிந்துகொள்ளலாம்.
எப்படி என்று யோசிக்கிறீர்களா?
கோவிலுக்கு செல்பவர்கள் எனக்கு ஏன் இரண்டு ரூபாய் கொடுத்து காலணிகளை பாதுகாக்க வைக்கவேண்டும் என்று யாராவது ஒருவரை சற்றுத்தள்ளி எல்லா காலணிகளையும் விட்டு பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு செல்வார்கள் .. 200, 2000 என்று சர்வ சாதாரணமாக தினசரி வாழ்க்கையில் நிறைய இடத்தில் கேட்காமலே கொடுப்பவர்கள் இவர்கள்தான். ஒரு சிலர் அதிகமுறை கோவிலுக்குச் சென்று விட்டதால் வெளியே நின்று இந்த பணியை செவ்வனே செய்வார்கள். மற்றும் சிலர் தான் வரும் ஆட்டோவிலும் அல்லது காரிலோ விட்டுவிட்டு செல்வார்கள். சில இளைஞர்கள் எதற்காக வருகிறார்கள் என்றே தெரியாது.. நிறைய முறை பார்த்திருக்கிறேன்.. நன்றாக பேசுவார்கள், என்னிடம் இல்லை அவர்களுக்குள். இது போன்ற ஒரு சிலர் பேச்சைத்தான் முன்பு கூறியுள்ளேன். அவர்கள் என்னதான் அப்படி பேசிக் கொள்வார்கள் என்பதை கூறுகிறேன். அதற்கு முன், நான் இந்த வேலையை துவங்கியது முதல் சற்று தள்ளி ஒரு மரத்தடியில் எல்லாவற்றையும் இழந்தது போல் நிலையான பார்வையுடன் ஒரு முதியவர் அமர்ந்திருப்பார்…. நான் வருவதற்கு முன்பே அங்கு இருப்பவர் கோயில் மூடிவிட்டு நானும் கடையை கட்டி விட்டுச் செல்லும் போதும் அங்கே இருப்பார். சிலமுறை அவரிடம் பேச முயற்சி செய்து கொண்டு.. லேசான புன்முறுவல் தவிர வேறு ஏதும் அவரிடம் கண்டதில்லை நான். சரி விஷயத்திற்கு வருகிறேன்…..
இதோ எதிரில், என் நண்பனுக்கு தெரிந்த அந்த அரசியல்வாதி கோவிலில் இருந்து ஒருவித இறுமாப்புடன் வெளியே வர சில அல்பங்களும் சில அல்லக்கைகளும் அவரை சூழ்ந்து வர.. அவர்கள் பேசிய பேச்சு காதில் விழ…
தலைவா, ( யாரைத்தான் தலைவா, தலைவர் என்று கூப்பிடுவது தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறது இன்றைய சமுதாயம்) ஸ்ட்ரைட்டா ஜலகண்டேஸ்வரர் மூலஸ்தானத்தில் போய் பார்த்தது சூப்பர்! 500 ரூபாய் தட்டில் போட்டதும் கொஞ்சம் 500 ரூபாய்களை உண்டில போட்டதும் எல்லாரும் அசந்துட்டாங்க!
என்ன ஜென்மங்களோ, ரூபாய் நோட்டுகளை உண்டியில் போட்டுவிட்டால் கடவுளின் கிருபை நேரடியாக தமக்கு கிடைப்பது போன்ற எண்ணம்! வரிசையில் நிற்காமல் அதிகாரத்தாலோ, நட்பினாலோ நேரடியாக மூலஸ்தானத்திற்கு சென்று வழிபடுவது கடவுளை நேரடியாக சந்திப்பது போன்ற பிரமையை ஏற்று தனக்குத்தானே மமதையில் மிதப்பது… இவர்களுக்கு ஆறாவது அறிவு வேலை செய்கிறதா என்ற கேள்விக்குரியே மிஞ்சுகிறது.. என்று நினைத்துக்கொண்டே பெரியவரை பார்த்தேன்.. அதே சலனமில்லா பார்வை!
அந்த அரசியல்வாதிக்கு நானும் ஒரு கும்பிடு போட்டேன், எனக்கு இந்த வேலை கொடுத்தவர் ஆயிற்றே.
அவர்கள் சென்ற சில நிமிடங்களுக்கு பிறகு ஒரு பெரிய குடும்பம் வந்து வழக்கம்போல் சற்று தள்ளி எல்லோரும் அவரவர்கள் காலணிகளை விட்டுவிட்டு அந்தக் காலணிகளுக்கு காவலாக இரு இளைஞர்கள் மட்டும் தங்க மற்றவர்கள் கோயிலுக்குள் சென்றனர். இது பொதுவாக நடக்கும் வாடிக்கை என்பதால் அவ்வளவாக நான் பொருட்படுத்தவில்லை…. ஆனால் வந்து இரு இளைஞர்களுடைய பேச்சு என்னை ஈர்த்தது… சாதாரணமாக இளைஞர்கள் என்ன பேசுவார்கள், சினிமாவைப் பற்றி பேசுவார்கள்…. இல்லை வீணாப்போன அரசியல் பற்றி பேசுவார்கள் என்றுதான் நினைத்தேன்…..
என்ன மனோ, ஏதாவது சுவாரசியமாக சொல்லேன்… என்று ஒருவன் கேட்க, எதிரே இருந்தவன், சுவாரசியமா நான் எங்க பாக்க போறேன்.. இருந்தாலும் ஒன்று சொல்கிறேன்.. நேற்று இரவு திரு பாவா செல்லதுரை அவர்களின் கூகுள் பே சாமியாரைப் பற்றி பார்த்தேன்.. உனக்குத்தான் தெரியுமே பிரசாத் திரு பவா அவர்களின் எல்லா வீடியோக்களையும் நான் பார்ப்பேன் என்று… அந்தக் காணொளியில் இருந்த ஒரு சுவாரசியமான விஷயம்… கேரளாவின் பிரபல நடிகர் திரு மம்முட்டி அவர்களின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை பற்றி கூறினார்.. ஒரு இரவில் மம்முட்டி தனியாக காரை வேகமாக ஓட்டிக்கொண்டு செல்லும்போது திடீரென்று காருக்கு முன்னால் தள்ளி விடப்பட்ட ஒரு கர்ப்பிணி பெண் விழுந்ததை கூறும்பொழுது.. மம்முட்டி அவசரகதியில் பிரேக்கின் மீது ஏறியே நின்று காரை நிறுத்தினார் என்று விவரித்தது திரு பவா அவர்களின் முத்திரை… பிறகு மம்முட்டி அந்த கர்ப்பிணிப் பெண்ணையும் அவருடைய தந்தையையும் அருகில் உள்ள மஞ்சடி அரசாங்க மருத்துவமனையில் சேர்த்து குழந்தை பிரசவிக்கும் வரை இரண்டு மணி நேரங்கள் அங்கு தங்கியிருந்ததை பற்றி கூறி அந்த இரு மணி நேரங்களிலும் மருத்துவமனையில் இருந்த யாரும் திரு மம்மூட்டி அவர்களிடம் புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் அவரை தெரிந்ததாக காட்டிக் கொள்ளவும் இல்லை என்பதை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டின் சாபக்கேடை கோடிட்டு காட்டினார். மேலும் அந்த கர்ப்பிணி பெண்ணின் தந்தை தன்னிடம் ஏதும் இல்லை என்றும் இரண்டு ரூபாய் நோட்டு மட்டுமே உள்ளதாக கொடுத்து வைத்துக் கொள்ளுமாறு கேட்டது மம்முட்டியின் நெஞ்சை தொட, அந்த இரண்டு ரூபாய் நோட்டு இன்றும் அவர் வீட்டில் அலங்காரப் பொருளாக இருப்பது அவர் பெற்ற அரசாங்க விருதுகளை விட மனிதத்திற்கு கிடைத்த வெகுமதியாக எடுத்துக் கொண்டது தெரிகிறது… என்று மனோ கூற..
‘அதோ அந்த நாலு ஜோடி செருப்பும் எங்களது’ என்று வாடிக்கையாளரின் குரல் கேட்க, கலைந்தேன். அந்த வாடிக்கையாளருக்கு அவரவர்கள் காலணிகளை எடுத்துக் கொடுத்துவிட்டு, மீண்டும் ஸ்டூலில் அமர்ந்து கொண்டு மற்றும் ஒரு சுவாரசியமான பேச்சுகளை கேட்க காத்திருந்தேன்.
கோயில் மூட இன்னும் ஓரிரு மணி நேரங்களில் இருந்தபோது ஒரு இளைஞர் பட்டாளமே வந்து மூவர் மட்டுமே தங்க மற்றவர்கள் உள்ளே செல்ல…. என் காதை கூர்மையாக்கினேன்…
‘ மச்சான் இவங்களுக்கு புத்தியே வராதுடா, நம்ம தெருல பார்த்தியா இன்னைக்கு.. நின்னுகிட்டு இருக்கிற ஜீப்ப கூட பாக்காம கான்கிரீட் போட்டானுங்க… மூணு நாளைக்கு முன்னால தான் மோட்டர் பைக் நிக்கிறத பாக்காம கான்கிரீட் போட்டு ஊரு, நாடு, உலகமெல்லாம் நார அடிச்சானுங்க… ஒன்னு மட்டும் புரியுது எவன் நம்மள கேட்க போறான்னு யாரோ பெரிய ஆளு தைரியம் கொடுக்கலைன்னா இதுபோல நடக்கவே நடக்காது’ என்று அந்த மூவரில் ஒரு இளைஞன் கோபமாக பேசுவதைக் கண்டு… இது அரசியல் நமக்கு வேண்டாம் என்று ஒட்டு கேட்பதை நிறுத்தி விட்டேன். மாலை வந்தது அன்றைய பொழுது இனிதே முடிந்தது என்று கடையை கட்டி விட்டேன்.
சில நாட்கள் சுவாரசியம் இல்லாமல் கழிய, மற்றொரு நாள் காலை நடந்ததை கூறுகிறேன்…
வழக்கமாக பெரிய குடும்பமாக வராமல் ஒரு இளைஞர் பட்டாளம் அங்கு வந்தது…. இரண்டு இளைஞர்கள் தனியாக அங்கு இருந்தாலும், எல்லோரும் வந்து என்னிடம் காலனிகளை பாதுகாக்க விட்டார்கள்… ஆச்சரியமாக இருந்தது.. கோவிலுக்குள் செல்லாமல் அங்கே வெளியே இருந்து விட்ட இரண்டு இளைஞர்களிடம் மொத்த நபர்களுடைய காலணிகளையும் பாதுகாக்க கொடுக்காமல் என்னிடம் கொடுத்தது.. அங்கு நின்றிருந்த இரண்டு இளைஞர்களில் ஒருவன் ‘ ஏன்டா நான் உள்ளே வரப்போவதில்லை… நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று கூற, கூட்டத்தில் இருந்த ஒருவன், ‘ மச்சான் இவன பார்த்தா நல்லவனாவும் பாவமாகவும் இருக்குது ‘ என்று என்னை பார்த்து கூற, அவனும் தலையசைத்து சம்மதித்தான். நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியவனை பார்த்து எனக்கு கோபம் வர வெளியே தெரியாமல் இருக்க அடக்கிக் கொண்டு என் வேலையை கவனிக்க ஆரம்பித்தேன்.
‘ஏண்டா சங்கர், நேத்து எங்க ஆளையே காணோம்’ என்று ஒருவன் மற்றவனை பார்த்து கேட்க… ‘ஒன்னும் இல்ல பாச்சா சும்மா youtube வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்தேன் ‘ என்று அவர்கள் பேசிக் கொள்ளும் வரை கண்டுகொள்ளாமல் தான் இருந்தேன்.
என்ன வீடியோ என்று பாச்சா கேட்க, நான் என்ன பாக்க போறேன் தமிழ் வரலாற்றை தான்… என்று சங்கர் கூற.. தமிழ் வரலாறு என்ற வார்த்தைகள் என்னை ஈர்க்க காதுகளை கூர்மையாக்கி கொண்டேன்…
எவ்வளவு முறை பார்த்தாலும் படித்தாலும் பிரமிப்பில் கொஞ்சமும் குறையாமல் இருந்து கொண்டே இருப்பது ராஜேந்திர சோழனின் வரலாறு.
பரவாயில்லை சங்கர் நீயாவது சோழன் என்கிறாய்…
ஏன் அதற்கு என்ன?
இல்ல இப்போது எல்லோரும் சோலா என்பதைத்தான் பெருமையாக நினைக்கிறார்கள்..
சரியாகத்தான் கேட்டாய் அதை நினைத்தாலே எனக்கு கோபம் கோபமாக வருகிறது… சுற்றி இருக்கும் வேற்றுமொழியாளர்கள் தெரிந்தோ தெரியாமலோ தமிழை தமிழ் வரலாற்றை சூறை ஆடும் போது நாமாவது ஜாக்கிரதையாக இருந்து அதை திருத்த வேண்டும் நாமும் அவர்களுடன் சேர்ந்து சோலா என்று கூற ஆரம்பித்தால் குட்டிச்சுவர் தான்.
இதுபோன்று நிறைய இந்த நான்கைந்து வருடங்களில் பார்க்கிறேன்… தோசா, வடா, பூஜா இவைகளில் இருந்து தொடங்குகிறது.
வேற்று மொழி நண்பர்கள் இருந்தால் இருக்கட்டும் அவர்களிடமும் தோசை வடை பூஜை என்று கூறினால் புரிந்து கொள்ளப் போகிறார்கள்.. அவர்களுக்காக நீ மாறினால் கொஞ்சம் கொஞ்சமாக உன் கலாச்சாரம் மாறும் வரலாறும் மாறும் அதை மாற்ற யுகங்கள் தேவைப்படும்.. பிறகு அதற்கான தேவையை விட அத்தியாவசிய தேவைகள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் மாறின வரலாறு மாறினதாகவே ஆகிவிடும்.
ஆமாம் சரிதான், ராஜேந்திர சோழனை பற்றி பார்த்தேன் என்று கூறினாயே, அதைப் பற்றி கொஞ்சம் சொல்..
என்னுடைய கருத்தை சொல்கிறேன், மாபெரும் சக்கரவர்த்தி என்று ராஜராஜ சோழனை சொல்வார்கள் என்னைப் பொறுத்தவரை மாபெரும் சக்கரவர்த்தி ராஜேந்திர சோழனே! என்ன கொடுமை என்றால் நம்மை சுற்றி இருக்கும் மற்ற மாநிலத்தவரே நம்மை பற்றிய பொறாமையின் வெளிப்பாடாக வன்மத்தைக் கக்கும் போது கோபத்துடன் வெறுப்பும் வருகிறது, இந்த மாபெரும் சக்கரவர்த்திகளை ராஜராஜசோழனையும் ராஜேந்திர சோழனையும் திருடர்கள் என்று சில கிறுக்க எழுத்தாளர்கள் எழுத ஒன்று மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது… அவர்கள் எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொள்ள அருகதை அற்றவர்கள் என்று தான்… பொறாமையின் வெளிப்பாடில் வன்மத்தை காழ்ப்புணர்ச்சியை கொட்டி வரலாற்றை திருத்தப் பார்க்கிறார்கள்… இது இப்படி இருக்க அடுத்த மாநிலத்தின் திரைப்படத்துறையில் உள்ள சிலரோ அதே பொறாமையில் காழ்புணர்ச்சியில் வன்மத்தில் நாய்களுக்கு நம் அன்புமிக்க தலைவர்களின் பெயர்களை மாபெரும் அரசர்களின் பெயர்களை வைத்து நம்மை கேவலப்படுத்தி விட்டதாக நினைத்துக் கொள்கிறார்கள்… அதை கேவலமாக நினைத்தும் நம்மில் சிலருக்கு கோபம் வருகிறது…. தீவிரமாக யோசித்துப் பார்த்தால், நம் தமிழ் பண்பாட்டில், கலாச்சாரத்தில் நம்முடன் இருக்கும் எல்லா உயிரினங்களும் குழந்தைகள் போலவே… அவைகளுக்கு நாம் எக்காலத்திலும் நமக்கு பிடிக்காதவர்கள் பெயரையோ அல்லது எதிரிகளின் பெயரையோ சூட்ட மாட்டோம். சிவனின்/ முருகனின் குமரி கண்டத்தில் தொடங்கிய நம் பழம்பெரும் வரலாறும், பண்பாடும் அவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது… நம்மில் பலருக்கே இது தெரியாதே..
இந்தப் பேச்சுக்களை ஒட்டு கேட்க கேட்க இந்த இளைஞர்களின் மீது எனக்கு ஒருவித மரியாதையே ஏற்பட்டு விட்டது… சரியாகத்தான் சொல்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டு மீண்டும் அவர்களின் பேச்சை கேட்டேன்.
பாச்சா, எனக்கு என்ன வெறுப்பு கோபம் என்றால்… இவர்களில் பெரும்பாலோர் வாழ்வது தமிழ்நாட்டில், சம்பாதிப்பது தமிழ்நாட்டில், காட்டும் வன்மமும் தமிழர்கள் மீதே!
‘உப்பிட்டோரை உள்ளளவும் நினை’ இது மண்ணுக்கும் பொருந்தும் என்று பண்பாடு உள்ளோர்க்கு மட்டும் தானே தெரியும்…
அதிகம் நல்லவனாக இருக்க
நினைக்காதே.. .உன்னை நடிகன்
என்று சொல்லிவிடுவார்கள்.
அதிகம் அன்போடு நடந்து கொள்ளாதே,
அடிமையாக்கி விடுவார்கள்.
அதிகம் பொறுமையுடன் நடக்காதே. ..
பைத்தியம் ஆகும் வரை விட மாட்டார்கள்.
வெளிப்படையாக இருந்துவிடாதே.
பலர் உன்னை வெறுக்க நேரிடும்.
எல்லோரையும் நம்பி விடாதே
ஏமாற்ற பலர் இருக்கிறார்கள்.
கோபப்படாமலே
இருந்துவிடாதே
கோமாளியாக்கிவிடுவார்கள் . இவையெல்லாம் நமக்கு பொருந்தும் பாச்சா.
சங்கர், நீ கூறியது எல்லாம், உன் ஆதங்கம் எல்லாம் 100% சரியே… உனக்கு தெரியாது என் தாய் மொழியும் வேற்று மொழி தான் ஆனால் வீட்டில் நாங்கள் தமிழிலேயே பேசுவதால் உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. நான் இந்த உப்பிட்ட தமிழ் மண்ணை உளமாற நேசிக்கிறேன்.. இந்தத் தாய் மண்ணை என்றும் பழியேன்.
பாச்சா, எனக்கு தெரியும் உன்னைப் போன்றோர் தான் பெரும்பாலானவர்கள்… ஒரு சிலரே நான் கூறின வன்மம் உடையவர்கள்… அவர்கள் அவரவர் குடிகலுக்கே இழுக்கு!
இந்த இளைஞருடைய பேச்சு, தமிழ் மொழி திரிபு எல்லாம் என் சிந்தனையை தூண்டியது… இன்று இரவு ராஜேந்திர சோழனை தேடப் போகிறேன் என்று நினைத்துக் கொண்டு அன்று இரவு தேடி தேடி படித்தும்; பார்த்தும் பார்த்தேன்.
இன்னும் ஒரு வாரம் சுவாரசியம் இல்லாமல் கடந்தது… ஆனால் இன்று செவ்வாய்க்கிழமை பொதுவாக முருக பக்தர்கள் மட்டுமே வந்து வழிபடும் நாள்… ஏதோ தோன்றியது இன்று நல்ல நாள் என்று…காத்திருந்தேன், சில குழுக்கள் சில கும்பல்கள் வந்து உள்ளே சென்றனர்… இதோ மூன்று கார்களில் சில குடும்பங்கள் வந்து இறங்க…இறங்கி எல்லோரும் என்னை நோக்கி வர ஒரு பெண் மட்டும் மாங்காய் பத்தைகள் விற்கும் ஒரு பெண்மணியை நோக்கி செல்ல…
கல்பனா இரு நான் வாங்கித் தருகிறேன் என்று இன்னொரு பெண் சொல்ல… கல்பனா என்ற அந்தப் பெண்ணை நோக்கி நடக்க ஆரம்பித்தாள், பிறகு திரும்பி நீங்கள் எல்லோரும் உள்ளே செல்லுங்கள் நானும் கல்பனாவும் சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் கழித்து வருகிறோம் என்று கூற… சரி லட்சுமி என்று கூட்டத்தில் இருந்த ஒருவர் கூறினார்.
கல்பனா என்ற அந்தப் பெண் இங்கு வளர்ந்தவளாக தெரியவில்லை… நாகரிகமாக தெரிந்தாலும் புடவையே உடுத்திருந்தாள். மாங்காய் பத்தைகளை வாங்கிக் கொண்டு அந்த இரண்டு பெண்களும் என்னை நோக்கி வர… காலணிகளை விடத்தான் வருகிறார்கள் என்று நான் நினைக்கும் பட்சத்தில் எனக்கும் அந்த பெரியவருக்கும் நடுவில் ஒரு மரத்தடியில் நின்று கொண்டு வாங்கி வந்த மாங்காய் துண்டுகளை சாப்பிட ஆரம்பித்தார்கள். அப்படியே சாப்பிட்டுக் கொண்டு அவர்கள் பேச ஆரம்பித்ததும், அதில் நான் ஈர்க்கப்பட்டு கேட்க ஆரம்பித்தேன்.
என்ன கல்பு வெயில் பரவாயில்லையா? எல்லோரும் வேலூர் வெயில் என்று சலித்துக் கொள்வார்கள்….
நான் இங்கே வளர்ந்தவள் இல்லை என்றாலும் நம்ம ஊரு ரத்தம் தானே? நிறைகளை பார்த்தால் குறைகள் சிறிதளவு… நான் ரசிக்கிறேன்.
சரி, நம்மூரைப் பற்றி உங்கள் ஊரில் என்ன நினைக்கிறார்கள்? பெரிய ஜனநாயக நாடு என்ற மதிப்பு தெரிகிறதா?
இதற்கு பதில் சொல்வதற்கு பதில் உன்னையே கேள்வி கேட்கிறேன், ஜனநாயகத்தைப் பற்றி உன்னுடைய கருத்து என்ன?
என்ன சொல்வது? மக்களாட்சிக்கு அச்சாணியே ஜனநாயகம் தானே… எனக்கு பெருமை ஜனநாயக நாட்டில் இருப்பதால்.
கல்பனா புன்முறுவலுடன் லட்சுமியை பார்த்து, ஜனநாயகம் நல்லதா கெட்டதா என்று கேட்க..
அதில் என்ன சந்தேகம், மிகவும் நல்லது.
எப்படி சொல்கிறாய்?
சொல்லத் தெரியவில்லை…. ஆட்சியாளர்களை நாமே தேர்வு செய்வது பெருமைக்குரிய விஷயம் தானே?
பெருமைக்குரிய விஷயமா என்று பிறகு பார்க்கலாம்… ஜனநாயகம் என்பது நல்லதோ கெட்டதோ அல்ல… அதிகப்படியான நபர்கள் எடுக்கும் முடிவு அவ்வளவுதான்…
என்ன இப்படி சொல்கிறாய்? நீ சொல்வதில் ஏதோ விஷயம் இருக்கிறது… நம் குடும்பத்தில் நீ அறிவாளி விளக்கமாக சொல் கேட்டு கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு பெரிய கூட்டத்தில் தவறான முடிவை பெரும்பாலோனார் எடுப்பதும் ஜனநாயகம் தானே…. என்று கூறி சிறிது நேரம் விட்டு நம் பக்கத்து நாட்டை பற்றி பேசுவோம்… பெரும்பாலான இன மக்களால் தேர்தலில் அந்த குடும்பம் தேர்ந்தெடுக்கப்பட்டது… அவர்கள் ஆட்சியிலும் அமர்ந்தார்கள்… ஜனநாயகம் தானே? பிறகு அவர்கள் கயவர்கள் என்று தெரிந்து…. நமக்கு பல பல வருடங்களுக்கு முன்பே அவர்கள் கயவர்கள் அயோக்கியர்கள் கொலைகாரர்கள் என்று தெரியும்… சரி விஷயத்துக்கு வருகிறேன்.. மக்களுக்கு புரிந்தது விரட்டி அடித்தனர்… இதுவும் ஜனநாயகம்தான் … ஆனால் ஒட்டுமொத்த நாட்டிலும் எல்லோரும் தோற்கடிக்கப்பட்டு ஒரே ஒருவர் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் பட்சத்தில், அவரையே பிரதமராக….. பிறகு ஒரு வாரம் கழித்து அதிபராக செய்தது ஜனநாயகமா? ஏன் எங்கோ செல்கிறோம்.. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமலேயே அமைச்சர்களாக இருப்பது நடைமுறையில் நாம் பார்ப்பது தானே? இது ஜனநாயகமா நீயே சொல்.
லட்சுமியினால் பேச முடியவில்லை… தலையை மட்டும் அசைத்தாள்.
சரி இதையே வேறு விதமாக சொல்கிறேன்.. மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது ஜனநாயகம்.. சரி, தேர்ந்தெடுக்கப்படாமல் பணத்தால் வாங்குவது? பணத்தாலோ அதிகாரத்தலோ வென்று பார்லிமென்டில் பெரும்பான்மையாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் தானே ஆட்சி புரிய முடியும்? அவர்களுக்கு மக்கள் நலனோ, அறிவியல் அறிவோ, வரலாற்று அறிவோ நாட்டின் உண்மை பாதுகாப்பு பற்றி புரிதலோ இல்லை என்று வைத்துக் கொண்டால் அங்கு ஜனநாயகம் தோற்க்கத்தானே செய்யும்?
கல்பு என்ன சொல்ல வருகிறாய்? ஜனநாயகம் நல்லதா கெட்டதா?
முன்பே சொன்னேன் அது நல்லதும் இல்லை கெட்டதும் இல்லை ஜஸ்ட் அப்சலூட் மெஜாரிட்டி.
என்னவோ புரியவில்லை…..சரி இது வேண்டாம்…. வேறு எதையாவது பற்றி இன்ட்ரஸ்டிங்கா சொல்லு..
இன்று உலகத்தில் உள்ள 95 சதவீத மக்கள் படும் துன்பங்களுக்கு மற்ற ஐந்து சதவிகிதத்தினரே காரணம்… அது மட்டுமல்ல அந்த ஐந்து சதவீதத்திலும் ஒரு குறிப்பிட்ட கூட்டம் உலகத்தையே ஆட்டி படைக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?
இல்லை என்று லட்சுமி தலை அசைக்க…
ஒரு சில விளக்கங்களை மட்டும் தருகிறேன்… நிக்கோலா டெஸ்லா அன்றே கண்டுபிடித்தார் ‘இலவச சக்தியை’ ஃப்ரீ எனர்ஜி அதுவும் வயர்லெஸ்…. உலக மக்களுக்கு அதை இலவசமாக தான் தருவேன் என்று அடம் பிடித்தது தான் அவரின் உயிரையே பலி வாங்கியது… 1945 & 47 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் விபத்துக்குள்ளாகிய பறக்கும் தட்டுகளின் மூலம் கிடைக்கப்பெற்ற தொழில்நுட்பங்கள் வெளியே வந்திருந்தால் இந்த 75 வருடங்களில் உலக மக்களுக்கு இப்போது இருக்கும் எந்த தொல்லைகளும் இருந்திருக்காது என்று புரிந்து கொள்ள முடிகிறதா? இவைகளையெல்லாம் தடுத்தது அந்த ஓரிரு சதவிகித அதிகார வர்க்கமே… இவைகளை ஓரளவுக்கு எல்லோராலும் புரிந்து கொள்ள முடிகிறது, இருந்தும் ஏதும் செய்ய முடியவில்லை.. இப்போது சொல் நீ குறிப்பிடும் ஜனநாயகம் எங்கே சென்றது அதன் பயன் என்ன?
அரசாங்கம் செய்ய வேண்டிய எவ்வளவோ விஷயங்களை தனிமனிதர்கள் தங்களுடைய தனிப்பட்ட தேடுதல்களினால் எவ்வளவோ விஷயங்களை கண்டுபிடிக்கிறார்கள்… அப்பேர்ப்பட்ட சிலரினால் மேற்கொள்ளப்பட்ட அகழ் ஆராய்ச்சிகளின் மூலமாக நமக்குத் தெரிந்த மனித குல வரலாறு தலைகீழாக புரட்டிப் போடப் போகிறது என்று தெரிந்து அவைகளைத் தடுப்பதும் அதுபோன்ற ஓரிரு சதவிகிதத்தினரே… இந்த காலகட்டத்தில் மண்ணில் மட்டும் அகழ் ஆராய்ச்சிகளை செய்தால் போதாது மனிதர்களுக்கும் செய்ய வேண்டும்… அரசியல்வாதி மனதிலும் ஆட்டிப்படைக்கும் அதிகார வர்க்க மனதிலும் அகழ் ஆராய்ச்சி செய்ய வேண்டும் அப்போது தான் தெரியும் எதனால் இவர்கள் வரலாற்றை மாற்றுகிறார்கள் இல்லை தடுக்கிறார்கள் என்று.
என்ன கல்பனா இது நம்ம ஊரு அரசியல் மாதிரி தெரிகிறது… எனக்கு தலையை சுத்துகிறது வேறு ஏதேனும் விறுவிறுப்பானதை சொல்லு…
விறுவிறுப்பு என்பதே ஒவ்வொருவருடைய விருப்பத்தையும் அவர்களின் தேடுதலையும் புரிதலையும் பொறுத்தது… நான் பெரிய விளக்கங்களை தராமல் ஒரு விஷயத்தை சொல்கிறேன்.. நீயே ஒரு முடிவுக்கு வா…
ஒரு ஒளி வருடம் 300000 X 60 X 60 X 24 X 365 கிலோமீட்டர்கள். நினைத்துப் பார்த்தால் தலைசுற்றும்… நம் பூமி இருப்பது மில்க்கி வே கேலக்ஸி எனப்படும் பால் வெளி கூட்டம்… அதில் ஒரு ஓரத்தில் நாம் இருக்கிறோம்.. இந்த மில்கி வே கேலக்ஸியின் விட்டம் மட்டும் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஒளி வருடங்கள் வரை என்று கணித்திருக்கிறார்கள்… இது போன்று கோடிக்கணக்கான கேலக்ஸிகள் நம் பிரபஞ்சத்தில் இருக்கிறது… இதை நினைக்கும் போது உன் தலை சுற்றவில்லை என்றால் இந்தப் பிரபஞ்சம் போல் பல பிரபஞ்சங்கள் உள்ளன என்று நினைத்துப் பார்.
பிரமாண்டமாக இருக்கிறது ஏன் இதைச் சொல்கிறாய்? என்று லட்சுமி கேட்க…
புரியும்படியாக சொல்கிறேன், நம் மெரினா கடற்கரையில் உள்ள ஒவ்வொரு மணலையும் நம்மால் எண்ண முடியுமா? அவ்வளவு மணலும் ஒவ்வொரு கிரகங்களாக நினைத்துப் பார்…. இவையெல்லாம் நம் மில்கி வே கேலக்ஸியில் மட்டும் என்று நினைத்துப் பார். இப்பொழுது நம் பூமியின் நிலை; இடம் இந்த மில்கி வே கேலக்ஸியில் எங்கு என்று நினைத்து பார்க்கும்போது நமது இடம் எவ்வளவு சிறியது என்று புரிந்து கொள்ள முடியும்… இப்போது நினைத்துப் பார், இந்த உலகத்தில் இருக்கும் தலையாய பிரச்சினைகளை.. அதற்காக நாம் செலவழிக்கும் நேரங்களை… பைத்தியக்காரத்தனமாக தோன்றி இவ்வளவு கேவலமான பிறவிகளா நாம் என்று நம்மை நாமே நொந்து கொள்ளத் தோன்றும்….
கல்பனா, என்னுடைய ஆவலை தூண்டி விட்டாய்… இனி உன்னிடம் கேட்க வேண்டியது நிறைய இருக்கிறது… இப்போது நமக்காக கோவிலுக்குள் காத்திருப்பார்கள் நாம் செல்ல வேண்டும்… என்று அந்தப் பெண் லட்சுமி கூற…அவர்கள் என்னிடம் காலணிகளை விட்டுவிட்டு உள்ளே செல்ல… எனக்கு அந்தப் பெண் கல்பனாவிடம் கேட்க ஆயிரக்கணக்கான கேள்விகள் மனதில் தோன்றத் தொடங்கியது… மனதில் ஒரு ஏக்கத்துடன் தற்செயலாக அந்த பெரியவரை பார்க்க, எப்போதும் சலனம் இல்லா அவர் என்னை நோக்கி சிறு புன்முறுவலுடன் பார்ப்பது தெரிந்தது… எனக்கு ஆச்சரியமாக போய்விட்டது… இப்போது எல்லாம் புரிந்ததா என்று அவர் என்னை பார்த்து கேட்பது போல் தோன்றியது….. என்னை மீறி இப்போதுதான் புரிய ஆரம்பிக்கிறது என்று சொல்லத் தோன்றியது.. அதையும் அவர் புரிந்து கொண்டது போல் தலை அசைத்தார்.
அவர் மீது இருந்த பார்வையை என்னால் நீக்க முடியவில்லை.. அவரைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சிவனாக தோன்றினார்; முருகனாக மாறினார்; இயேசுவாகவும் தெரிந்தார்; புத்தரைப் போன்றும் தோன்றினார்… எனக்கு குழப்பமாக இருந்தது நான் காண்பது கனவா என்று… என்னை நானே கிள்ளி பார்த்துக் கொண்டேன்.. இல்லை நிஜம்தான் என்று உறுதி செய்து கொண்டே அவரைப் பார்த்தேன், அவரை அங்கு காணவில்லை… கண்ணெதிரே இருந்தவர் மறைவதற்கு வாய்ப்பே இல்லை… குழப்பம் அடைந்து, அதிர்ச்சி அடைந்து, மனது தெளிய தொடங்கி புரிய ஆரம்பித்தது.



