top of page

UFOs (பறக்கும் தட்டுகள்) By சிவா

  • melbournesivastori
  • Dec 12, 2020
  • 2 min read

சிறுவயது முதலே எனக்கு UFOக்களின்(unidentified flying objects ) மீது மிகவும் ஆர்வம் உண்டு, அவர்களைப் பற்றி கிடைக்கும் செய்திகளை எல்லாம் படிப்பேன். ஒருவித அப்சஷன் எனக்கு அவைகள் மீது. சில சமயம் நண்பர்களுடன் கூட்டம் கூடும்போது என்னை மீறி இந்த பேச்சு வந்துவிடும், அவர்களுக்கு பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ என்று தெரியாது… நானாக பேச ஆரம்பித்து விடுவேன். அதில் ஒரு சிலருக்கு லேசான ஆர்வம் வர ஆரம்பித்தது.. விவேக் ஆரம்பித்தான், ‘ufoகள் சரி ஏலியன்களின் சந்திப்பு நடந்துள்ளதா இதுவரை?’ என்று. எதைச் சொல்ல, எதை விட? எனது 25 வருட தேடுதலின் தொகுப்பு அவைகள். நான் கூற ஆரம்பித்தேன், ‘ஆமாம் நிறைய நடந்துள்ளதாக கூறுகிறார்கள், மூன்றாவது உலகப் போரை அதாவது அணு ஆயுதப் போர் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் நடக்க இருந்ததை தடுத்தது அவர்கள்தான் என்று கூறுகிறார்கள்… இதைப் பற்றி படித்தேன் நடந்திருக்கக் கூடும் என்றுதான் தோன்றுகிறது’ என்றேன். விவேக்குடன், பிரபாகர், விக்ரம், நவீன் இவர்களுக்கும் ஆர்வம் தோன்ற ஆரம்பித்தது. மேலும் கூற ஆரம்பித்தேன், மிகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது; பயமாகவும் இருந்தது அதைப் படிக்கும்போது எனக்கு….. அது டிசம்பர் மாதம் 1948 என்று நினைக்கிறேன். அமெரிக்கன் நியூக்ளியர் ஃபேஸிலிடியில் அன்று இரவு வேலை செய்தவர் கதிகலங்கி போனார்கள்… திடீரென்று எல்லா அணு ஆயுதங்களும் வேலை செய்யத் தொடங்கின… அர்மடு (armed) அண்ட் கெட்டிங் ரெடி என்று சொல்வார்கள்.. அதுபோல கவுண்டவுனை அதுவாகவே துவங்க தொடங்கியது.. அங்குள்ள எல்லா அதிகாரிகளும் பதட்டமடைய துவங்கினர், அதே நேரத்தில் வெளியில் பாதுகாப்புக்கு இருந்த வீரர்கள் அவசரமாக உள்ளே ஓடி வருவது தெரிந்தது… என்ன என்று உள்ளிருந்து அதிகாரிகள் கேட்க அதற்கு அவர்கள் ‘ என்னவென்று சொல்ல முடியாத 6 ஒளி உருண்டைகள் நம்மீது வட்டம் அடிக்கின்றன’ என்றனர். உள்ளிருந்த அதிகாரிகளும் வேகமாக வெளியே ஓடி சென்று அவைகளை பார்த்தனர்… ஆமாம் இந்த ஒளி உருண்டைகள் என்னவென்று கூற முடியவில்லை, எல்லோருக்கும் தெரியும் 1947இல் பறக்கும் தட்டு அமெரிக்காவின் ரோஸ்வெல் என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியது… அதிலிருந்து ஏலியன்களை மீட்டதாகவும் வந்த செய்திகள். இவர்களுக்கு புரியவில்லை இது பறக்கும்தட்டு போல இல்லை… வெறும் உருண்டை வடிவில் இருந்தது. உடனடியாக விமானப்படை மேலதிகாரிகளுக்கு தகவல் செல்ல உள்ளே சென்றனர். இந்த சமயத்தில் தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது, எல்லா அணு ஆயுதங்களும் தானாக தயார் நிலையில் இருந்து நிறுத்திக்கொண்டன… அதிகாரிகளுக்கு பெருமுச்சு… இருப்பினும் என்ன நடந்தது என்று தெரியவில்லை வெளியே சென்று பார்த்தனர். அந்த ஆறு ஒளி உருண்டைகளும் மின்னல் வேகத்தில் வானில் சென்று மறைந்தன’ என்றேன். விவேக், ‘இன்டஸ்ட்ரிங்காக இருக்கிறது மேலும் சொல்’ என்றான். எங்கள் குரூப்பில் விதண்டா வாதத்திற்கு பேர் போனவன் பாபு, அவன் இடைமறித்து கேட்டான், ‘ இவ்வளவு பவர்ஃபுல் ஆனவர்கள் என்கிறாய் இந்த வேற்று கிரகத்து மனிதர்களை…. எல்லா நாட்டிலும் எவ்வளவோ சண்டைகள் நிகழுகிறது ஏன் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை’ ஒரு நிமிடம் அமைதி காத்தேன், பாபு என்னை மடக்கி விட்டதாக ஒரு இறுமாப்புடன் எல்லோரையும் பார்த்தான்…. நான் பாபுவை நோக்கி கேட்டேன், ‘ பாபு நீ மனிதன், பறவைகளை விட, புழு பூச்சிகளை விட மிகவும் சக்தி வாய்ந்தவன்… இதை நீ ஒத்துக் கொள்கிறாயா? ‘ இதில் என்ன சந்தேகம் என்று ஒரு ஏளனமாக சிரித்து விட்டு என்னை பார்த்தான். பாபு, ‘நீ அவசரமாக நடந்து சென்று கொண்டிருக்கிறாய் அப்போது வெகு தூரத்தில் இரண்டு சிறிய பறவைகள் சண்டை போட்டுக் கொண்டிருப்பது தெரிய வருகிறது.. உடனே நீ ஓடி சென்று அவைகளின் சண்டையை தடுப்பாயா இல்லை உன் வேலையைப் பார்த்துக் கொண்டு செல்வாயா? ‘ பாபுவிற்கு புரிந்தது என்று நினைக்கிறேன் தலைகுனிந்து அமைதியாக இருந்தான்.

தொடர்புக்கு @ melbournesivastories@gmail.com

bottom of page