top of page

அந்த நாட்கள் By சிவா

  • melbournesivastori
  • Aug 6, 2021
  • 3 min read

ஒரே அமர்க்களமாக இருந்தது என் நண்பனுடைய வீடு.. இன்று அவனுடைய 40வது பிறந்தநாள். எங்கள் கூட்டம் தனியாக ஒரு பகுதியில், நண்பர்களின் மனைவிகள் கூட்டம் தனியாக ஒரு பகுதியில், பிள்ளைகள் கூட்டம் தனியாக ஒரு பகுதியில்… இங்கு கொண்டாடப்படும் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் சற்று வித்தியாசமானவை…. அதாவது தொடங்கும்முன் சகலமும் உள்ள விருந்து… குடிப்பவர் குடிப்பார்கள் குடிக்காதவர்கள் குடித்தவர்களின் உளறலை ரசிப்பார்கள்…. அரசியல் சினிமா இவை இரண்டும் தான் ஆண்களின் மத்தியில் பிரதானம்… நண்பர்களில் பலவகை… இதனால் அவர்கள் கோட்பாடுகளும் பலவகை…. சில சமயம் அரசியல் கட்சி தலைவர்களுக்காகவோ இல்லை திரைப்படத்துறை கதாநாயகர்களுக்காகோ சிறு சிறு சர்ச்சை சச்சரவுகளும் நடைபெறும்.. இப்போது எல்லோரும் வந்துவிட்டனர் ஒரு நண்பனும் அவன் மனைவியும் தவிர…. இன்று எந்த இடி வரப்போகிறதோ மகிழ்ச்சிக்கடலில் திளைத்துத்திருக்கும் நண்பர்களின் மனைவிகள் இன்று எதனால் எல்லாவற்றையும் இழந்ததுபோல் இருக்கப் போகிறார்களோ என்று நினைத்தேன்….. வேறொன்றுமில்லை மிக சுவாரசியமான ஒரு விஷயம் ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்தேறியது…

ஐந்து வருடங்களுக்கு முன்பு இதே நண்பனுடைய 35 வது பிறந்த நாள் விழா… அன்றும் இதே போல் எல்லோரும் கூடி இருந்தோம்… அன்றும் இதே போல் அந்த நண்பனும் அவன் மனைவியும் காலதாமதமாக வந்தனர்… அது வரை எந்தப் பிரச்சினையும் இல்லை…. ஆனால் நண்பனுடைய மனைவி ஏன் கால தாமதம் என்று கூறியதுதான் பிரச்சினையின் ஆரம்பம். ஒரு பிரம்மாண்டமான அங்காடியின் பேரைச்சொல்லி அங்கு தாமதமாகிவிட்டது ஏனென்றால் கடையை விட்டு வெளியே வரும் போது தான் கவனித்தேன்.. இந்த டின்னர் செட் 20 டாலருக்கு போட்டிருந்தார்கள்… அதன் சாதாரண விலை இருநூறு டாலருக்கு மேல்… அந்தப் பிராண்ட் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று… அவ்வளவுதான் மற்ற நண்பர்களின் மனைவிகள் பெருமூச்சுவிட உடனடியாக எல்லோரும் ஒரே சமயத்தில் அந்த கேள்வியை கேட்க அதற்கு அந்த நண்பனின் மனைவி, ‘இன்றோடு இந்த சேல் முடிந்துவிட்டது நாளை முதல் அதன் ஒரிஜினல் விலையான இருநூற்று சொச்சம் தான்’ என்று கூறியதுதான் தாமதம்.. மற்ற எல்லா நண்பர்களுடைய மனைவிகளின் முகத்திலும் சோக கலை தாண்டவமாடியது… அந்த நண்பனுடைய மனைவி 20 டாலருக்கு தான் வாங்கினாரோ இல்லை இது ஒரு விதமான சாடிசமோ தெரியாது….. மற்ற நண்பர்களும் அவர்களுடைய மனைவிகளும் நன்றாக சம்பாதிக்க கூடியவர்கள் தான்… இருந்தும் 180 டாலர்களை இழந்துவிட்டோமே என்ற தேவையற்ற சேமிப்பு அன்று மட்டுமல்ல சுமார் ஒரு மாதத்திற்கு அவர்களை ஆட்டிப் படைத்தது இத்தனைக்கும் எல்லோர் வீட்டிலும் அதிகப்படியான டின்னர் செட்டுகள் இருக்கும்.

அதோ நண்பனும் அவன் மனைவியும் வருவது தெரிகிறது… நல்ல வேலை பரிசுப் பொருளை தவிர வேறு ஏதும் கையில் இல்லை.. என்னுடன் அரட்டை அடித்துக்கொண்டு இருந்த எல்லா நண்பர்களும் அதைத்தான் கவனித்தனர்… பெருமூச்சி எங்களிடமிருந்து வரத் தேவையில்லை ஆனாலும் வந்தது. நொறுக்குத்தீனிகளை தின்றுகொண்டே சுவாரசியமான பேச்சு தொடர்ந்தது….

போரடிக்கும் போது சில சினிமாப் பேட்டிகளை பார்ப்பேன்… அது போல 2-3 பேட்டிகளை பார்க்கும்போது கூடவே இருந்த வெள்ளைக்கார நண்பன் என்ன ஒரு 10% வேற லாங்குவேஜ் பேசுறாங்க நீங்க பேசுகிற லாங்குவேஜ் மாதிரி இருக்கிறது என்று கேட்டான் ….. அப்போதுதான் எனக்கு உறைத்தது இப்போதெல்லாம் இவர்கள் 80 சதவீதத்திற்கு மேல் ஆங்கிலத்திலும் அவ்வப்போது உப்பு போல அதில் தமிழை தூவுவதையும் கவனித்தேன்… தமிழை அழிக்க இனி யாரும் கிளம்பி வரத் தேவையில்லை!

‘இவர் பேசும் அழகு தமிழை பாருங்கள்’ இந்தத் தலைப்பில் வந்த ஒரு காணொளி என்னை ஈர்க்கவே.. அதைப் பார்க்கத் துவங்கினேன்… வடநாட்டு நடிகை 15 நிமிட காணொளியில் இரண்டு வார்த்தைகள் தமிழில் பேசுவதை அந்த காணொளியின் தலைப்பாக கொடுத்துள்ளனர்… ஆனால் என்னுடன் வேலை செய்யும் வடநாட்டு நண்பனோ எனக்கு அவன் மொழி தெரியாததே ஒரு கொலை குற்றம் போல் என்னை பார்க்கிறான்… ஒன்று புரிகிறது நாம் அவர்களின் இரண்டு வார்த்தை தமிழை கொண்டாடுவதும் தவறு அவர்கள் நாம் அவர்கள் மொழியை சரளமாக பேச வேண்டுமென்று எதிர்பார்ப்பதும் தவறு…. புரிந்து கொள்ள வேண்டாம் என்று நினைப்பவர்களிடம் நாம் எப்படி புரியவைப்பது.

அந்த சமயத்தில்தான் எனக்கு முதன்முதலாக வேலை செய்யத் துவங்கிய மூன்று மாதங்களில் நடந்த அந்த நிகழ்ச்சி ஞாபகத்திற்கு வந்தது… அதை இந்த சமயத்தில் பகிர்வது அந்த விசேஷ நண்பனுக்கு உறுத்தும், இருப்பினும் என்னால் பகிராமல் இருக்க முடியவில்லை…

எல்லோரிடமும் கூறத் தொடங்கினேன்…

மத்திய சிறைச்சாலை என்றாலே தென் மாநிலங்களில் உள்ள எல்லோருக்கும் நினைவுக்கு வருவது வேலூரில் உள்ள மத்திய சிறைச்சாலை தான். இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய சிறைச்சாலை. அங்கு தான் வளர்ந்தோம்… நிறைய நண்பர்கள் அதில் 6 பேர் பக்கத்து வீடுகளில் எதிர் வீடுகளில் வசித்தோம். அதில் ஒரு நண்பன் பெயர் ரத்தினவேல் எங்களுக்கெல்லாம் சீனியர். ரத்தினவேல் ஒரு சுவாரசியமான நண்பன்… தான் நினைப்பவைகளை அந்த காலத்து சித்தர்கள் கூறிய பொன்மொழிகள் போல் கூறுவான்.. கதை வடிவில் பொய்களை சுவாரசியமாக கூறுவான்… நாங்களும் அரட்டை அடித்துக்கொண்டே கேட்டுக் கொண்டிருப்போம்… எல்லோரும் வேலைக்கு செல்லத் துவங்கி தேவையற்ற பேச்சுக்கள் வார இறுதியில் மட்டுமே நடந்தேறியது…

நானும் நான்கு நண்பர்களும் என் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க… ரத்தினவேல் வீட்டருகில் எங்களுடைய அம்மாக்கள் எதைப் பற்றியோ சுவாரசியமாக பேசிக்கொண்டிருக்க, நாங்கள் ரத்தினவேலுகாக அரட்டைக் கச்சேரியில் காத்திருந்தோம். ஐந்து நிமிடத்தில் ரத்தினவேலும் வர எங்களைப் பார்த்து புன்முறுவலுடன் அம்மாக்களை கடந்து அவன் வீட்டிற்கு சென்றான். ரத்னவேலுனுடைய அம்மா சிறிது நேரத்தில் வருவதாக கூறிவிட்டு அவனுடன் உள்ளே சென்றார்.. ஒரு சில நிமிடங்கள் தான் ஆகியிருக்கும் மகிழ்ச்சியுடன் அவர் வெளியே வர, மற்றவர்கள் என்ன என்று கேட்க, அதற்கு அவர் ஒரு சென்டு மல்லிகைப்பூவை காட்டி என் மகன் 20 ரூபாய்க்கு வாங்கி வந்துள்ளான் என்று கூற… மற்ற அம்மாக்கள் வாய் பிளந்தனர்… பொதுவாக ஒரு செண்டு மல்லிகை பூ 120 ரூபாய் வரை இருக்கும்… அதுதான் காரணம் எல்லா அம்மாக்களும் வாய்பிளக்க. அன்று வெள்ளி என்பதால் எல்லோருக்கும் சிறிது பிரித்துக் கொடுத்துவிட்டு.. நாளை பார்க்கலாம் என்று ஒருவருக்கொருவர் கூறிக்கொண்டு கலைந்து சென்றனர். ஒரு அரை மணி நேரம் கழித்து ரத்தினவேல் எங்கள் அரட்டைக் கச்சேரியில் கலந்து கொண்டான்… முகத்தில் பெருமை தாண்டவமாடியது… மிகக் குறைந்த விலையில் மல்லிகை வாங்கி வந்ததாக இருக்கும். வீட்டிற்குள் சென்ற எல்லா அம்மாக்களும் ஒவ்வொருவராக நாங்கள் பேசிக்கொண்டிருந்த இடத்தை கடந்து ரத்தினவேல் வீட்டிற்குச் சென்று திரும்ப, நான் என் அம்மாவை நோக்கி கேட்டேன்… என்ன விஷயம் எல்லோரும் சென்று விட்டு வருகிறீர்கள் என்று… “வேறொன்றுமில்லை இவ்வளவு மலிவாக மல்லிகை வேறு எங்கும் கிடைக்காது அதனால்… ரத்தினவேலை நோக்கி கூறினார்… நீ நாளை வரும் போது ஆறு சென்டு வாங்கி வரவும்” என்றார். அதுவரை பெருமையுடன் நடந்துகொண்டிருந்த ரத்தினவேல் முகம் சோர்ந்து காணப்பட்டான்… என்ன காரணம் என்று கேட்டோம்… ஒன்றும் இல்லை என்று சமாளித்து பார்த்து வேறு வழியில்லாமல் எங்களிடம் கூறினான்… ‘ அந்த மல்லி செண்டை நூறு ரூபாய் கொடுத்து தான் வாங்கினேன்… அம்மா மகிழ்ச்சி அடைவார்கள் என்று இருபது ரூபாய்க்கு வாங்கியதாக கூறினேன்… அதுவே வினையாக போய்விட்டது.. நாளை ஆறு செண்டுகள் வாங்க வேண்டும் ‘ என்று கூறி ஒரு சோக பெருமூச்சுவிட்டான்!

நடந்த இந்த நிகழ்ச்சியை எல்லோரிடமும் கூற, எல்லோரும் சிரிக்க…. அந்த டின்னர் செட் நண்பன் மட்டும் அமைதியாக இருக்க… எங்களுக்கு புரியாததும் புரிந்தது!

bottom of page