top of page

அறிவேற்றம் By சிவா

  • melbournesivastori
  • Dec 6, 2020
  • 6 min read

1986ம் ஆண்டு தீபாவளிக்கு இரு வாரங்களுக்கு முன்பு வேலூரின் ஒரு மாலை வேலை….. தற்செயலாக வானத்தைப் பார்த்தோர் மிகுந்த ஆச்சரியமடைந்தனர்… தென் மேற்கு வானத்தில் மூன்று ஆரஞ்சு உருண்டை வடிவிலான ஒளி வட்டங்கள் மேலும் தெற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து சென்றது….. அரியூருக்கும் ஊசூருக்கும் இடையில் மறைந்தது. இதைப் பார்த்தோர் மறுநாளும் மற்றும் சில தினங்களும் தினசரி பத்திரிகைகளில் இந்த செய்தி வராதா என்று பார்த்து ஏமாற்றம் அடைந்தனர். சிவப்பிரகாசம் ஒரு வித்தியாசமான சயன்ஸ் டீச்சர்… பொதுவாக அவருடைய கருத்துக்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா கனடா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற மேலைநாடுகளில் ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடியும்… ஆனால் 85 களில்…. இதை புரிந்து கொள்ள சக டீச்சர்களாளையே முடியவில்லை… முயற்சி செய்தால் கல்லூரிகளில் விரிவுரையாளராகவும் ஆகலாம்… மேலும் டாக்டர் பட்டம் வாங்க எல்லா தகுதியும் அவரிடம் இருந்தது. அதிகமாக பேச மாட்டார்…. டீச்சர்களுடைய ஓய்வரையிலும் தனியாக அமர்ந்து கொண்டு எதையாவது படித்துக் கொண்டிருப்பார். மோகன், நந்து, துரை, இளங்கோ, அருள் இவர்கள் ஐந்து பேரும் ஒரு நெருக்கமான நண்பர் கூட்டத்தை சேர்ந்தவர்கள்… எப்போதும் ஒன்றாக இருப்பார்கள். இதில் மோகன் உடைய வீட்டு அருகில்தான் சிவப்பிரகாசம் இருந்தார். ஓரளவுக்கு அறிமுகம் ஆனவர் என்பதால் மோகனின் தந்தை மகனை சிவப்பிரகாசமிடம் டியூஷனுக்கு அனுப்பினார்…. மற்ற நெருங்கிய நான்கு நண்பர்களும் அதிகநாட்கள் காத்திராமல் மோகனுடன் டியூஷனில் சேர்ந்துகொண்டனர். ஒரு குறிப்பிட்ட காலம் என்று இல்லாமல் அடிக்கடி அவர்கள் டியூஷனுக்கு சென்றனர். சிவப்பிரகாசம் டியூஷனுக்கு மட்டும் இல்லாமல் மற்ற எல்லா விவகாரங்களிலும் அந்த ஐந்து பேருக்கும் ஆலோசனைகளை வழங்கினார். ஒரு சில விடுமுறை நாட்களில் அருகிலிருந்த சிறிய சுற்றுலா இடங்களுக்கு சென்று வந்தனர். அதுபோன்று ஒரு முறை ஐந்து பேருடைய பிளஸ்-2 வகுப்புகள் தொடங்கியவுடன் 1990 ஜூன் கடைசி வார இறுதியில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஊசூர் மலை கோவிலுக்கு சென்றனர்.. அன்றைய தினம் அவர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது…. அவர்கள் அங்கு சென்றபோது கோவிலுக்குள் யாரும் இல்லை கோவிலை சுற்றியும் யாருமில்லை… வார இறுதி முடிந்து வார தொடக்கத்திலிருந்து அவர்களின் நடவடிக்கைகளில் பெரும் வித்தியாசம் தெரிந்தது. ஒரு முதிர்ந்த அனுபவஸ்தர்கள் போன்ற நடவடிக்கைகள் அவர்களிடம் தெரிந்தது… சிவப்பிரகாசத்திற்கு ஒரு மகிழ்ச்சி கலந்த அமைதி ஏற்பட்டது. அந்த 5 பேரும் நன்றாக படித்தனர் பிளஸ் 2வில் நன்றாக மதிப்பெண்களைப் பெற்று கல்லூரிகளில் சேர ஆளுக்கொரு திசையாக சென்றுவிட்டனர். சிவப்பிரகாசம் பள்ளியில் தொடர்ந்தார்… அந்த ஐந்து பேருடைய நெருக்கம் மற்ற மாணவர்களிடம் இருந்து அவருக்கு கிடைக்கவில்லை…… பிறகு ஓய்வு பெற்று சொந்த கிராமத்திற்கு சென்று விட்டதாக தகவல்….. அதன்பிறகு யாரிடமும் தொடர்பு இல்லை. 2019ல் மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில்கேட்ஸ் வேலூர் பற்றி கூறியதும் கல்வியாளர்களிடம் ஒருவித எதிர்பார்ப்பை உருவாக்கியது. தொடர்ந்தார் போல் மைக்ரோசாப்டின் நிர்வாக இயக்குநராக மோகனை நியமித்தது தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது இந்திய ஊடகத்தில் அவ்வளவாக பரபரப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் தமிழக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மோகனின் நியமனம் வேலூருக்கு மகுடம் என்றும் தமிழகத்துக்குப் பெருமை என்றும் மற்றும் பல புகழ்ச்சிகள் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சி ஊடகங்களிலும் வந்தது வந்த வண்ணமே இருந்தன. கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி, மத்திய சிறைச்சாலை இவைகளுக்கு மட்டுமே பெயர்பெற்ற தொரப்பாடி… மோகனால் உலகம் முழுவதும் பெயர் பெற்றது. தொரப்பாடியில் இருந்த மோகனின் தந்தையின் பேட்டி…. மோகனின் சிறுவயது நண்பர்களுடைய பேட்டி என்று பலவகை பேட்டிகள் பத்திரிகைகளில் இடம் பிடித்த வண்ணம் இருந்தது. பொதுவாக மோகனின் பல பேட்டிகளின் சாராம்சம் இதுவாகத்தான் இருந்தது….. கடின உழைப்பு இருந்தால் யாராலும் வெற்றி பெற முடியும், மற்றும் குடும்பத்தாரின் நண்பர்களின் துணை இருக்க வேண்டும்… முக்கியமாக நல்ல ஆசிரியர்களின் துணை அதற்குத் தேவை அவ்வளவுதான். மோகனின் இந்த அற்புதமான வெற்றியை மக்கள் மறக்கும் தருவாயில் இருக்கும்போது, பேஸ்புக்கின் ஒருங்கிணைப்பாளராக துரை நியமிக்கப்பட்டது பரபரப்பை மீண்டும் துவக்கி விட்டது… தமிழகத்தில் குறிப்பாக வேலூரில் விழாக்கோல உணர்ச்சிகள் எங்கும் தென்பட்டது….. பள்ளிக்கால நண்பர்கள் இருவரும் இரு பெரிய பதவிகளில் அமெரிக்காவில் இருப்பது பெரும் ஆச்சரியத்தை உருவாக்கியது. அதைவிட பெரிய ஆச்சரியம் துரையும் மோகனும் கல்லூரிப் படிப்பிற்கு பிறகு சந்திக்கவே இல்லை என்பதுதான்.

ஆமாம் அவர் என்னிடம் பேசவே இல்லை ஆனாலும் எனக்கு புரிந்தது. எப்படி என்று நான் கேட்டேன். நீ போக போக புரிந்து கொள்வாய் பயப்படாதே நாங்கள் உன்னை ஒன்றும் செய்யப்போவதில்லை… சரி நான் எங்கே இருக்கிறேன் என்று கேட்டேன்… அவர் அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல் ஒரு நிமிடம் என்னை உற்றுப் பார்த்தார்… நீ பாட்டுகள் கேட்பாய் இல்லையா? அந்த டிரான்சிஸ்டர் எப்படி வேலை செய்யும் என்று உனக்குத் தெரியுமா என்றார். நான் பதில் சொல்லாமல் இல்லை என்று தலையை ஆட்டினேன். ஆக டிரான்சிஸ்டர் எப்படி வேலை செய்யும் என்று புரிந்து கொள்ள உனக்கு நாட்கள்; மாதங்கள் தேவைப்படும். நாங்கள் உன்னை அதிக நாட்கள் இங்கு வைத்திருக்கப் போவதில்லை உன்னுடைய சில சந்தேகங்களுக்கு நாங்கள் பதில் அளிக்கிறோம் கவலை வேண்டாம். சரி அது போகட்டும் நான் எங்கு இருக்கிறேன் நீங்கள் யார் என்றேன். அதற்கு அவர் உனக்கு சொன்னால் புரியாது ஒன்று மட்டும் கூறுகிறோம், உன்னுடைய பூமியில் இருந்து வெகு வெகு வெகு வெகு தொலைவில் இப்போது இருக்கிறோம். நாங்கள் உங்களை பல ஆயிரக்கணக்கான வருடங்களாக கவனித்து வருகிறோம்; கவனித்துக் கொள்கிறோம். என்னை பயம் சூழ்ந்து கொண்டது. என்னை ஏன் பிடித்து வந்தீர்கள் மறுபடி நான் செல்வேனா.. இவை மட்டுமில்லாமல் பல கேள்விகள் நான் என்ன கேட்கிறேன் என்றே தெரியாமல் பிதற்றினேன். உங்கள் நேரத்தில் சொல்ல வேண்டுமென்றால் ஓரிரு மாதங்கள் இங்கு நீ தங்க வேண்டியிருக்கும், பிறகு உன்னை அழைத்து வந்த இடத்திலேயே விட்டு விடுகிறோம். உன்னை ஏன் என்ற கேள்விக்கு பதில் தற்செயலாகத்தான் உன்னை அழைத்து வந்தோம்… குறிப்பிட்டு எந்த காரணமும் இல்லை. உன் மனம் உடல் முழுவதும் நாங்கள் சோதனை செய்யப் போகிறோம். உங்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால் பரிணாம வளர்ச்சியை பற்றி இது. பயமாக இருந்தாலும் ஒரு வகையில் ஓரிரு மாதங்களுக்குள் சென்று விடுவோம் என்ற சிறு நிம்மதி. இதற்கிடையில் அப்பா அம்மா எங்கு தேடுவார்கள்… யாரிடமும் சொல்லவில்லையே நான் எங்கு போகிறேன் என்று… இரு மாதங்கள் என்ன நினைத்துக்கொள்வார்கள்… பலப்பல எண்ணங்கள் மின்னல் போன்று வந்து மறைய தொடங்கியது. அவர்கள் என்னுடைய கவலையை புரிந்து கொண்டார் போல் தெரியவில்லை அவர்கள் ஏதோ ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினர். இனி நடந்ததை சொல்லத் தொடங்கினால் அதற்கு முடிவில்லை ஒவ்வொரு அணுவாக பரிசோதனை செய்தார்கள். சில சமயம் வலியிருந்தது சில சமயங்களில் ஏதும் வலியே தெரியவில்லை… நாட்கள் பல பல சென்றன.. ஒரு மாதத்திற்கு மேல் கடந்து இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு தீர்க்கமான முடிவுடன் இருந்தேன் அன்று அவரை அந்த லீடரை சந்திக்கும்போது கண்டிப்பாக வெளியே சென்று பார்க்க வேண்டும் என்று கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அவர் வந்தார், நான் கேட்க போவதைப் புரிந்து கொண்டார் போல் கவலைப்படாதே இன்னும் ஓரிரு நாட்களில் நான் அழைத்துச் செல்கிறேன் என்றார். இவ்வளவு நாட்கள் பரிசோதனை செய்தீர்களே எப்படி இருக்கிறேன் நான் என்று கேட்டேன். இது உன்னைப் பற்றியது அல்ல மனிதர்களின் ஒட்டுமொத்த பரிணாம வளர்ச்சியைப் பற்றியது என்றார். எது எப்படியோ இதனால் எனக்கு ஏதேனும் பயன் உண்டா என்று கேட்டேன். அதற்கு அவர் நேரடியாக பதில் கூறாமல், மனிதகுலத்திற்கு பெரிய நன்மை செய்யக்கூடிய அளவிற்கு அறிவு புரிதலை எடுத்துச் செல்லப் போகிறாய்… ஆனால் அதை நீ எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளப் போகிறாய் என்பது உன்னிடம் தான் உள்ளது என்றார். சரியாக சொல்லப்போனால் அற்புதமான உடல்; மன ஆரோக்கியத்தை தருகிறோம் பிரம்மாண்டமான அறிவு புரிதலை தருகிறோம்… மற்றவை உன்னிடம் தான் உள்ளது. ஏதோ எனக்கு புரிந்தது போலவும் புரியாதது போலவும் தெரிந்தது… எப்படியும் இன்னும் சில வாரங்களில் ஊருக்குச் செல்லப் போகிறோம் என்ற மனதிருப்தி ஆழமாகப் பதிந்தது. ஒன்றை கவனித்தேன் இதுநாள்வரை காலைக்கடனோ மாலை கடனோ பசியோ ஏதுமில்லை எனக்கு… இது மிகவும் விசித்திரமான அனுபவமாக இருந்தது எனக்கு. நான் மயக்கமாக இருக்கும் போது ஏதோ செய்கிறார்களோ என்னவோ? வெளியே செல்லப்போகும் நேரத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தேன்…. அந்த நாளும் வந்தது, அவர் வந்தார்.. என்னை அழைத்துக்கொண்டு முதல்முறையாக அந்தப் பிரம்மாண்டமான பரிசோதனை கூடத்தில் இருந்து வெளியே வந்தேன். ஏதோ ஒரு அற்புத உணர்ச்சி சொர்க்கத்தில் இருக்கிறோமோ என்ற நினைப்பு ஓரிரு வினாடிகள் என் மனதில் வந்து சென்றது. நான் இதுவரை பார்த்திராத… ஏன் ஹாலிவுட் மூவிகளில் கூட பார்த்திராத அற்புதமான ஒரு கட்டிடத்தின் வழியாக நடந்து சென்றேன். எந்த கிரகம் இது என்று அவரிடம் கேட்டேன், அதற்கு அவர் மற்ற கிரகத்தவர்களைப்போல் உங்களுடன் நாங்கள் உங்களுடைய வருடங்கள் படி சுமார் 25 ஆயிரம் வருடங்களாக தொடர்பில் இல்லை அதற்கு முன் நாங்கள் உங்களுக்கு உருவாக்கித் தந்த கட்டமைப்பின் எல்லாவிதமான தொழில்நுட்பங்களையும் இழுந்து வருகிறீர்கள்… அதற்கு நீங்கள் மட்டும் காரணம் இல்லை…

நாங்கள் உங்களுக்காக உருவாக்கித் தந்த நாடும், தலைநகரமும் 70 சதவிகிதம் இன்று கடலுக்கு அடியில் உள்ளது… மீதமிருக்கும் 30 சதவிகிதத்தில் இருபத்தைந்து சதவிகிதம் தான் இப்போது தமிழ்நாட்டில் உள்ளது. இவர் என்ன சொல்கிறார் என்று அவரை உற்று நோக்கினேன்… புரிகிறது எங்கே என்று கேட்கிறாய்… உங்களில் சிலர் உங்கள் வரலாற்றில் தேடுதலிலும் புரிதலிலும் ஈடுபட்டுள்ள அவர்கள் கூறும் குமரிக்கண்டம் தான் அது. உன்னை அழைத்து வரும்போது அதைப் பற்றி அவ்வளவாக உனக்கு தெரிந்திருக்காது ஆனால் நீ செல்லும் போது இவற்றைப் பற்றிய நிறைய படிப்பாய். குழப்பமாக இருந்தது அழைத்து வரும்போது செல்லும்போது என்ன பெரிய மாற்றம் இருக்கமுடியும் என்று நினைத்தேன். இப்போது நீ நினைப்பதைப் பற்றி விளக்கம் நான் கூறுவதை விட நீ தெரிந்து கொள்வது நல்லது என்று அதைப்பற்றி அதிகம் கூறாமல் விட்டு விட்டார். பேசிக்கொண்டே வெளியே வந்தோம். வார்த்தைகளால் விவரிக்க இயலாத அற்புதமான நகரமா கிராமமா என்று கூற முடியாத அளவிற்கு இருந்தது அந்த இடம். சுமார் 22, 23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும்.. மிதமான சுகமான தென்றல் என்று கூறவேண்டும். நல்ல வெப்ப நிலை என்று அவரிடம் கூறினேன். அதற்கு அவர் கிரகம் முழுவதும் இதே தட்பவெப்பநிலை நாள்தோறும் மாதந்தோறும் வருடந்தோறும் நாங்கள் உருவாக்கி வைத்துள்ளோம் என்றார்… அதிர்ச்சியுற்று அவரைப் பார்த்தேன் கிரகம் முழுவதுமாக……

என்னால், உருவாக்கப்பட்ட இந்த தட்பவெட்ப நிலையை ஜீரணிக்க முடியவில்லை. அதற்கு அவரும் இப்போது உன்னால் புரிந்து கொள்ள முடியாது என்று விட்டு விட்டார். அங்கிருந்த கட்டிடங்கள் ஒருவித வழவழப்பான தன்மையை கொண்டிருந்தது, கூர்மையான முடிவை எங்குமே பார்க்க முடியவில்லை… அவர் என்னைப் பார்த்து கூறினார், இங்குள்ள யாவுமே எங்களுடன் ஆர்கானிக் இன்டராக்க்ஷன் படி கட்டமைக்கப்பட்டுள்ளது.. நாங்கள் மனதில் நினைத்துக் கொண்டு அவற்றை தொடும்போது என்ன நடைபெற வேண்டும் என்று நினைக்கிறோமோ அது நடக்கும். எறும்பு தலையில் இமயமலையை வைத்தது போன்று இருந்தது ஒவ்வொரு விளக்கமும். அவரும் எனக்கு எதைக் கூறினாலும் இப்போது புரியாது என்று நினைத்துவிட்டாரோ என்னவோ அதிகமாக விளக்கம் கூறாமல் நடந்து கொண்டே இருந்தார். மேலும் மற்ற மூன்று வாரங்களில் நடந்த நிகழ்ச்சிகளை கூறி உங்கள் தலையில் மேல் இமயமலையை வைக்க நான் விரும்பவில்லை. இதோ இன்று பூமிக்குத் திரும்ப தயாராகிவிட்டேன், நம் வரலாற்று சிறப்புமிக்க பேரினத்தைக்காப்பாற்ற என்னென்ன செய்யவேண்டும் என்று விளக்கமாக கூறியும் பயிற்சியும் தந்தனர். பூமிக்கு திரும்பி அரை மணி நேரம் கூட ஆகியிருக்காது பசி வயிற்றைக் கிள்ளியது. அருகில் இருந்த ஒரு கடைக்குச் சென்று நூறு ரூபாய் கொடுத்து ஒரு பிஸ்கட் பாக்கெட்டை கேட்டேன்… கடைக்காரர் அந்த ரூபாய் நோட்டை பலமுறைபார்த்துவிட்டு பிஸ்கெட் பாக்கெட்டை கொடுத்தார். சில பிஸ்கட்டுகளை சாப்பிட்டுவிட்டு அவரிடமே தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு கேட்டேன் என் அப்பாவைப் பற்றி. அவருக்குத் தெரியாமல் ஒரு பெரியவரை கைகாட்ட அவரிடம் சென்று கேட்டேன். எத்தனையோ அதிர்ச்சிகளை தாங்கிக் கொண்ட நான் அவர் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி நிலைக்கு வந்துவிட்டேன். என் அப்பா வேலையிலிருந்து ஓய்வு பெற்று அங்கு இருந்த வீட்டை விற்று ஏ வி நாதன் என்பவருடன் வசிப்பதாக அவர் கூறியது. இப்போது எந்த வருடம் என்று அவரிடம் கேட்டதற்கு என்னை ஒரு பைத்தியக்காரனைப் போல் பார்த்துவிட்டு 20 20 என்றார்… சில நொடிகள் என்னால் ஏதும் செய்ய முடியவில்லை நான் சென்று திரும்பிய ஓரிரு மாதங்களில் இங்கு பூமியில் 40 வருடங்கள் கடந்துள்ளது. அவர்கள் பயிற்சி அளிக்கும் போது கூறியது நினைவுக்கு வந்தது.. பூமியின் நேரம் வேறு.. பிரபஞ்சத்தில் பயணம் செய்யும்போது அளவிடும் நேரம் வேறு என்று. அதாவது பூமியின் பத்து வருடம். பிரபஞ்சத்தின் சுமாராக ஒரு மாதம். இனி நடக்க வேண்டியது பார்க்க ஏ வி நாதனுடைய விலாசத்தை வாங்கிக்கொண்டு செல்ல தயாரானேன்.

சங்கரன் பாளையம் வீட்டின்முன் நின்று அழைப்பு பொத்தானை அழுத்தினேன். வெளியே வந்தவர் ஒரு 55 லிருந்து 60 வயதுக்கு உட்பட்டவர் எங்கோ பார்த்தது போன்ற நினைவிருந்தது. அவரோ அதிர்ச்சியுடன், விஜி தானே நீ என்று கேட்டுக் கொண்டே என்னை நோக்கி வந்தார். ஆமாம் நீ,… நீங்கள்… என் நண்பன் வைத்தியா? என்று கேட்டேன். அதிர்ச்சிகள் எல்லைகளை தொட்டதா இல்லை மகிழ்ச்சிதான் எல்லைகளை தொட்டதா என்று தெரியவில்லை….. வைத்தியநாதன் என்னை உள்ளே அழைத்து கொண்டு சென்றான். அவன் கேட்கும் முன்னரே நானே கூறிவிட்டேன் எல்லாவற்றையும் விளக்கமாக பிறகு கூறுகிறேன் என் அப்பா அம்மா எங்கே என்று, அவன் ஏதும் கூறாமல் ஒரு ரூமுக்கு அழைத்துச் சென்றான், அங்கு ஈசி சேரில் 85 வயதுக்கு மேல் மதிக்கத்தக்க ஒருவர் படுத்து இருந்தார்.. உடனே புரிந்து கொண்டேன் அவர்தான் என்னுடைய அப்பா சச்சிதானந்தம் என்று. பிறகு மிகுந்த வருத்தத்துடன் தெரிந்துகொண்டது என்னுடைய அம்மா பத்து வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார் என்று… இமாலய குழப்பங்களும் இமாலய அதிர்ச்சிகளும் கலவையாக நடக்கும் இந்த பொழுதில் இமாலய வருத்தமும் சேர்ந்து கொண்டது. அதன் பிறகு நண்பன் வயதின் வற்புறுத்தலின் காரணமாக என்னுடைய அப்பா அவனுடனே வாழத்துவங்கியது. வைத்தி சிறுவயது முதலே விஞ்ஞானத்தில் மிகவும் ஆர்வமாக இருந்தவன், அதனால் அவனுக்கு என் நிலைமையை விளக்க முடிந்தது… இருப்பினும் அவன் முகத்தில் தெரிந்த அதிர்ச்சி; குழப்பம் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. வருடம் 2024, ஏ வி நாதனின் மீடியா கம்பெனி குமரி கார்ப்பரேஷன் இந்தியாவில் கொடிகட்டி பறந்தது. குமரி பிலிம்ஸ் தமிழில் வியக்கத்தக்க சயின்ஸ் பிக்ஷன் மூவிகளை பெரும் வெற்றியுடன் எடுத்தது. குமரிப் பதிப்பகம் தமிழில் அமெரிக்கன் சயின்டிஸ்ட்டுக்கு நிகராக மிக நேர்த்தியான விஞ்ஞானக் கட்டுரைகளை பிரசுரித்தது. தென்னிந்திய இளைஞர்களை மட்டுமல்லாமல் வட இந்திய இளைஞர்களையும் ஒட்டுமொத்தமாக தமிழின் பக்கம் ஈர்க்க வைத்தது. நான் என்னுடைய இளமை தோற்றத்தின் காரணமாக எந்தவித நம்நாட்டின் அடையாளமும் இல்லாமல் என் தந்தையுடன் ஏ வி நாதனின் பண்ணை வீட்டில் வேலூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கட்டுபிடி கிராமத்தில் வசித்து வந்தேன்.

தொடர்புக்கு @ melbournesivastories@gmail.com

bottom of page