top of page

ஆத்மா By சிவா.

  • melbournesivastori
  • Nov 16, 2022
  • 7 min read

பிறப்பு இறப்பு அதன் பிறகு…. மறுபிறவி உண்டா?..,……. என்னப்பன் ஞானப்பண்டிதனுக்கு மட்டுமே அது வெளிச்சம் .. ஆன்மீகம் சொல்கிறது உண்டு என்று.. உண்டு என்றால் ஆத்மா என்று ஒன்று உண்டு என்று புரிகிறது..

இதில் அறிவியலே ஆட்டம் காண்கிறது, நிரூபிக்கப்படாததை அவர்கள் பேசுவதில்லை… நிரூபிக்கப்பட வேண்டியதை நிரூபிப்பதும் இல்லை.. இது போன்று பல பல இன்னும் வந்து கொண்டே இருக்கின்றன..

ஆன்மீகத்திற்கும் அறிவியலுக்கும் இடைப்பட்ட ஒன்று உண்டு… அது திரில்லர் மூவிகளை போன்று.. அதில் ஈடுபடும் வரை தப்பிப்பார்கள்… ஈடுபட ஆரம்பித்தால்……

ஏலியன்கள், டைமென்ஷனல் பீயிங்ஸ், லைட் பீயிங்ஸ், எனர்ஜி பீயிங்ஸ், டென்சிட்டி, NDE எனும் நியர் டெத் எக்ஸ்பீரியன்ஸ் மற்றும் ப்ரீகுவென்சி… இவைகள் எல்லாம் அந்த இடைப்பட்ட ஒன்றில் அடங்கும்… ஏலியன்களை பற்றி இதுவரை கூறாதது எதையும் இதற்கு மேலும் கூற தேவையில்லை…

நாம் இந்த பூமியில் வாழ்வது மூன்றாவது டைமென்ஷன் என்று கூறுகிறார்கள் இது நீள அகல உயரங்களைப் போன்று அல்ல இது வேறு.. மனித மனங்களின் பக்குவ நிலைகளை வைத்து அளவிடுவது. இந்த மூன்றாவது டைமென்ஷனில் வாழும் மனிதர்கள், தான் வாழ்ந்த வாழ்க்கையில் பக்குவ நிலையை அடைந்தால் நான்காவது டைமென்ஷனுக்கு செல்வார்கள் இல்லையெனில் அவர்களுக்கு மறுபிறவி உண்டு, அந்த மறுபிறவி இந்த பூமியில் தான் இருக்க வேண்டும் என்பது இல்லை எந்த சூரிய மண்டலத்தில் எந்த கிரகத்தில் வேண்டும் என்றாலும் இருக்கலாம்… பிறக்கலாம்.

இங்கு மனதைப் பற்றி கூற வேண்டும்.. எல்லோருக்கும் மூன்று வித மனங்கள் உண்டு…. மனம் இது பொதுவாக எல்லோருக்கும் வெளிப்படையாக தெரியும் ஒன்று.. உள் மனம் இது அவர்களாகவே தெரிவித்தால் மட்டுமே தெரியக்கூடியது.. அடுத்து மிக முக்கியமான ஒன்று ஆழ்மனம்….. இது எத்தனை பிறவி எடுத்தாலும் தொடர்வது… ஆத்மா (soul) என்றும் எடுத்துக் கொள்ளலாம். ஆத்மாவுடன் மரபணுவின் மூலக்கூறும் செல்ல வாய்ப்புள்ளதாகவே தோன்றுகிறது..

சில மிகத் தீவிர ஆராய்ச்சியாளர்கள் எல்லா கிரகங்களுக்கும் ஆத்மா உண்டு என்று கூறுகிறார்கள்… அதாவது நமது பூமி தாய்க்கும் ஆத்மா உண்டு… இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்று கடைசியில் கூறுகிறேன். எல்லோருக்கும் சில சமயங்களிலும், சிலருக்கு பெரும்பாலான சமயங்களிலும் நான் கூறப்போவது நடந்திருக்கும் நடந்து கொண்டிருக்கும் நடக்கப்போகும்….

ஒருவர் செய்வது தவறு என்று தெரியும் போதும் புரியும் போதும் அதை செய்ய வேண்டாம் என்று நீங்கள் கூற முற்படும்போது அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளாமல் போவது… இது மிக சாதாரணமான ஒன்று.. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அந்தத் தவறு அவர்களையும் மற்றவர்களையும் பெரிதும் பாதிக்காத போது… சில தவறுகளை நீங்கள் சுற்றி காட்டுவது மட்டுமல்லாமல் அதற்கான காரணங்களை விளக்கி கூறினாலும் அது ஏற்றுக்கொள்ளப்படாமல் போவது… அந்தத் தவறுகள் நிகழ்ந்து சிறிதோ பெரிதோ பாதிப்புகள் நிகழ்ந்தால் நீங்கள் வருத்தப்படுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்…. மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளாமல் போவதற்கு நிறைய காரணங்கள் உண்டு… அவருக்கு உங்கள் மேல் மதிப்பில்லாமல் இருக்கலாம், இல்லை நீங்கள் கூறுவதை கேட்பதே தோல்வி என்றும் நினைக்கலாம்.. இல்லை நீங்கள் கூறுவதை கேட்காமல் போவது உங்களைப் பழி தீர்ப்பதாக நினைக்கலாம்… இவை எல்லாவற்றையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக நம் முன்னோர்கள் விதி என்று கூறிவிட்டுச் சென்று விட்டார்கள்.

இந்த விதி தனி மனிதர்களை மட்டுமல்ல வீட்டையும் நாட்டையும் ஏன் உலகத்தையுமே ஆட்டிப் படைக்கிறது..

இதைக் கண்டால் பயம் அதை கண்டால் பயம் என்கிற தெனாலி கதா பாத்திரத்தை பார்த்து ரசித்தோம், சிரித்தோம். உண்மையை கூறப்போனால்…. உண்மையை ஜீரணிக்க முடிந்தால்…. நாம் எல்லோரும் தெனாலிகளே… உங்கள் உள் மனதை தொட்டுச் சொல்லுங்கள், பேச வேண்டிய இடத்தில் பேசாமல் இருந்தது.. தலையிட வேண்டிய இடத்தில் தலையிடாமல் இருந்தது… உண்மையை உரக்க கூற வேண்டிய இடத்தில் நமக்கு ஏன் வம்பு என்று மௌனம் காத்தது… இவைகளை எந்த வகையில் சேர்ப்பது? இந்த பயம்தான் நாம் பக்குவப்படாமல் இருக்க… அடுத்த நிலைக்குச் செல்லாமல் தடுக்கிறது

இது தெரியாத வரை புரியாத வரை அது தெரிந்தோருக்கு அதிக சக்தி இருப்பதாக நமக்குள் பிரம்மை ஏற்படும்.

இவைகளையெல்லாம் கடந்தவள் தான் துர்கா. சிறு வயது முதலே துணிச்சல் மிக்கவள்… எல்லா உயிர்களும் மனிதர்கள் உட்பட இன்புற்று வாழ நினைத்தவள். நீரோடைகளின் தண்ணீர் எங்கே செல்கிறது என்று சிறுவயதிலேயே கேட்டவள்.. அது குளம் குட்டைகளுக்குச் சென்று தேக்கி வைக்கப்படுகிறது என்று அறிந்தவுடன் சமாதானம் அடைந்தவள்… வளர்ந்தவுடன் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏன் என்று கொதித்தவள்… 95% ஆற்று நீர் ஏன் வீணாக கடலில் கலக்கிறது… சுயஆதிக்கத்தைப்பெற்று இவ்வளவு வருடங்களாகியும் ஏன் இதைப் பற்றி யாரும் சிந்திக்கவில்லை என்று கோபம் கொண்டவள். அந்த கோபம் அவளைப் புரட்சி பெண்ணாக மாற்றியது. பள்ளி இறுதி ஆண்டுகளிலேயே மேடைகளில் அதைப்பற்றி முழங்கியவள். தீதும் நன்றும் பிற செய்ய வாரா என்று தீவிரமாக நம்பியவள். தண்ணீர் தட்டுப்பாடு வரும்போது அரசாங்கத்திற்கு எதிராக தனி ஒருவராக போராடியவள்… இவ்வாறு எல்லோருடைய கவனத்தையும் மதிப்பையும் பெற்ற துர்கா, தண்ணீர் தட்டுப்பாடு நீக்க நிலத்தடி நீரை போர்வெல் மூலம் எடுக்கலாம் என்று ஆயிரக்கணக்கில் பூமித்தாயின் மீது துளைகள் இடும்போது கடுமையாக எதிர்த்தாள்…. அவள் பெற்ற நன்மதிப்பு குறைந்து மக்களின் கோபத்திற்கு ஆளானாள். இருந்தும் குறிக்கோளிலிருந்தும் தன் எண்ணத்தில் இருந்தும் விலகவில்லை.. அதிகமாக வரும் ஆற்று நீரை அணைகட்டாது நிலத்தடி நீரை உறிஞ்சுவது பேராபத்தாக முடியும் என்று அவளின் கூக்குரல் கடலில் கரைத்த பெருங்காயம் ஆனது…. இது போதாது என்று கடலென நாள் தவறாமல் அளவிற்கு அதிகமாக கிடைக்கும் சூரிய ஒளியை அறுவடை செய்யாமல் நிலத்திலிருந்து மீத்தேன் எடுப்பதை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை… பூமி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றிருந்தும் அவள் எழுதிய ஆக்கபூர்வமான கட்டுரைகளை பிரசுரிக்க யாரும் முன் வரவில்லை… வரவிருந்த ஆபத்துக்களை கூக்குரலிட்டும் கூப்பாடு போட்டும் செவிடர் காதில் ஊதிய சங்காக மாறியது… இது, உருப்படாத தறுதலைகள் தாயும் தந்தையும் எவ்வளவு செய்தும் தான்தோன்றித்தனமாக சுற்ற அவர்கள் உயிர் இருக்கும் வரை சுரண்டி எடுத்து உலகுக்கு பாரமாக இருப்பதை போன்றே கருதினாள்.

பூமித்தாய் மேற்பரப்பில் கொடுக்காத செல்வங்களே இல்லை… நோய் தீர்க்கக் கொடுக்காத மூலிகைகளே இல்லை… இந்த, இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கங்கோ அலையும் மனிதர்களை கண்டு அழுவதா சிரிப்பதா என்று நாள்தோறும் நினைத்துக் கொள்பவள்.

மாடுகள் மேயாது நிலத்தில் மாட்டு சாணம் இல்லாமல், ஆடுகள் மேயாத நிலத்தில் ஆட்டுக் புழுக்கை இல்லாமல் அவைகளை ஒட்டிய நுண்ணுயிர்கள் எங்கே, இவைகள் இல்லாமல் இயற்கை உரம் எங்கே? சிறிது சிறிதாக ரசாயன உரங்களையே நம்பி இருக்கும் நிலம் உயிரற்ற நிலமே என்று மனம் நொந்து கொதித்தவள். பொதுநலத்தாலே சொந்த நலத்தை இழந்தாலும்.. உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசும் உறவு கலவாமை தெரியாமல் வாழ்க்கையை ஓட்டினாள். எந்த மக்களுக்காக பாடுபடுகிறாளோ அவர்கள் அதைச் சிறிதும் மதித்ததாக தெரியவில்லை..

அவள் நாட்டின் நலத்திற்காக செய்ததை நாட்டுக்கு எதிர்ப்பாக கட்டமைப்பதைதான் மாயோன் கலியுகம் என்றானோ?

நல்லவர்களுக்கு இல்லை இக்காலம் என்பதற்கு தகுந்தார் போல் ஒரு நாள் காலை துர்காவிற்கு மூச்சுத் திணற மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை பிரிவு மருத்துவரை காண சென்றாள். மருத்துவர் தெரிந்தவர் என்றாலும் காத்திருக்கும் மக்களின் வரிசையை கடந்து செல்ல மனமில்லாமல் டோக்கன் எடுத்துக் கொண்டு அமர்ந்தாள்.. அவள் அங்கு கண்ட காட்சிகள் நாகரீகத்தின் அடையாளமாக தெரியவில்லை…

அப்பொழுது வாயிற் படி அருகில் அவசர அவசரமாக ஆம்புலன்ஸ் வந்து நிற்க ஸ்ட்ரச்சரில் ஒரு இளைஞரை அவசர சிகிச்சை அறைக்கு அழைத்துக் கொண்டு இல்லை தள்ளிக் கொண்டு சென்றார்கள்.. உடன் வந்த ஒரு பெண்மணி பீறிட்டு வந்த அழுகையை அடக்க முடியாமல் தடுமாறி துர்காவின் பக்கத்து இருக்கையில் அமர்ந்தார்..

துர்கா தன்னால் முடிந்த வரை அந்தப் பெண்மணியை சமாதானப்படுத்த முயற்சித்து ‘என்னம்மா என்ன நடந்தது?’என்று கேட்க..

‘நல்லா தான் இருந்தான், நேற்று இரவு இரவு வேலையும் செய்து விட்டு வீட்டுக்கு வந்தான்’ கொஞ்சம் நிறுத்திவிட்டு… ‘ காலை சிற்றுண்டி வேண்டுமா என்று கேட்டதற்கு வேண்டாம், காலையில் தான் கேஎப்சி சாப்பிட்டுவிட்டு வந்தேன் என்றான்… என் மகன் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவன்.. நன்றாக உழைக்கக் கூடியவன்.. கடந்த எட்டு வருடங்களாக தொடர்ந்து அதிக விடுப்பு எடுக்காமல் வேலை செய்தவன்’ என்று கூறி அழுகையுடன் பேச்சு நிறுத்தியவர்.. பேச்சு தொடரும் முன் துர்கா கேட்டாள்,

‘ எவ்வளவு வயசு, எங்கு வேலை செய்கிறார்?’

’33 வயது தான்… ஐடியில் வேலை செய்கிறான்… எட்டு வருடமும் இரவு வேலை தான்’

‘ பகலில் நன்றாக ஓய்வு எடுத்துக் கொள்வாரா?’

‘எங்கம்மா தூங்க முடிகிறது… தெருவில் எப்போதும் கூச்சல் சத்தம்.. அடிக்கடி மின்சார துண்டிப்பு வேறு.. அதனால் ஜன்னல் கதவுகளை மூடி விட்டு தூங்க முடியவில்லை ‘

‘ஒழுங்காக சாப்பிடுவாரா?’

‘ சாப்பாட்டில் ஒரு குறையும் இல்லை நன்றாக சத்தான உணவை சாப்பிடுவான் ‘

‘என்ன சத்தான உணவு?’

‘தினமும் பிட்ஸ்சா, கேஎஃப்சி தான் மிகவும் பிடிக்கும்.’

‘ உடற்பயிற்சி ஏதாவது செய்வாரா?’

‘எங்கம்மா ரொம்ப சோர்வாக இருப்பான் எப்போதும்.. அதற்கு எங்கே நேரம்?’

‘ சரி இன்று காலை என்ன நடந்தது?’

‘ படுக்கச் சென்றான்… திடீரென்று நெஞ்சு பாரமாக இருக்கிறது.… இரண்டு தோள்பட்டையின் மேலும் யாரோ அழுத்துவது போல் இருக்கிறது என்று சொன்னான்… அவரும் ஊருக்குச் சென்று இருக்கிறார்… பக்கத்து வீட்டு தம்பி தான் ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தான் ‘

துர்காவுக்கு துல்லியமாக புரிந்து விட்டது… இது மாரடைப்பு என்று.. தன்னை மீறி பிரார்த்தனை செய்தாள் அந்த இளைஞன் நன்றாக குணமடைய வேண்டும் என்று. ஒரு பத்து நிமிடம் கடந்திருக்கும், அவசர சிகிச்சை பிரிவு கதவைத் திறந்து மருத்துவரும் செவிலியர்களும் வெளியே வருவதைப் பார்க்கும் போதே தெரிந்து விட்டது என்ன நடந்திருக்கும் என்று.

மருத்துவர் அருகே வந்து அந்த பெண்மணியிடம் கூற… அவர் கதறின கதறல் அங்கிருந்த ஒட்டுமொத்த எல்லோரையும் சட்டென்று திரும்பி பார்க்க வைத்தது.

ஆம் அந்த இளைஞன் இறந்து விட்டான்… தனது அயராத உழைப்பில் தங்கையை திருமணம் செய்து கொடுத்தவன்… அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்ள இருந்தவன். சத்தான உணவு என்று அவன் உட்கொண்டதை நம்பியது அதையே தாயும் நம்பியது காலத்தின் கொடுமை!

இந்த அதிர்ச்சியோ என்னவோ துர்காவிற்கு மூச்சு திணறல் அதிகமாக, இறப்பு செய்தி சொல்ல மருத்துவரும் செவிலியர்களும் அவசர அவசரமாக துர்காவை அதே அறைக்குள் அழைத்துச் செல்ல கதவைத் திறக்க… இவர்கள் உள்ளே செல்லும் முன் அந்த வழியாக இறந்த அந்த இளைஞனின் சடலத்தை ஸ்ட்ரச்சரில் உடற்கூறு ஆய்வுக்காக வெளியே எடுத்து வர அதற்கு வழி விட்டு துர்காவை உள்ளே அழைத்துச் சென்றனர்… பொது நல விரும்பியான துர்கா அந்த மூச்சுத் திணறலிலும் உடல் வலியிலும் அந்த இளைஞனை நினைத்து தன்னை அறியாமல் கண்ணீர் விட்டாள்.

இனி நடப்பதை துர்காவே கூறட்டும்.

மூச்சுத் திணறல் அதிகமாக்கியது… என்னவென்று சொல்லத் தெரியவில்லை நெஞ்சத்தில் பாரம் அதிகமாகிக் கொண்டே சென்றது… முகத்தில் ஆக்ஸிஜன் வைத்தார்கள்.. கையில் ஏதேதோ சொருகினார்கள். அப்பாடா ஒரு வழியாக என் வலி நீங்கியது, என்னை மீறி உறங்க ஆரம்பித்தேன்… என்னை நானே பார்க்கிறேன், நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறேன்.. ஆனால் ஏனோ மருத்துவர்களும் செவிலியர்களும் தலையாட்டிக்கொண்டே அறையை விட்டு வெளியே சென்றனர். அவர்கள் செல்லும்போது தலைமை மருத்துவர் கூறிய வரி என்னை பதைபதைக்க வைத்தது..

‘ இட்ஸ் எ பேட்டே’

எதைச் சொல்கிறார் இவர்? ஓ அந்த இளைஞர் இறந்ததைப் பற்றி சொல்கிறாரோ?

ஆமாம் ‘இட்ஸ் எ பேட்டே’ என்று நானும் நினைத்துக் கொண்டு அவர்களுடனே அறையை விட்டு வெளியே வந்தேன்..

தூரத்தில் நான் கண்ட காட்சி என்னை ஒரு உலுக்கு உலுக்கியது…. நீங்கள் கண்டிருந்தால் உங்களுக்கும் அதே கதி தான் ஏற்பட்டிருக்கும்.

நான் சிகழ்ச்சிக்கு உள்ளே செல்லும்போது அமர்ந்திருந்த அதே இடத்தில் தான் அந்த பெண்மணி அமர்ந்து கொண்டு இன்னும் அழுது கொண்டே இருக்கிறார்.. பக்கத்தில் அவருடைய மகன் நின்று கொண்டு அவர் தலையை வருடிக் கொண்டிருக்கிறார்.. ஒரு வித்தியாசம் அவர் சோர்வடைந்து மங்கலாக தெரிந்தார். அந்தப் பெண்மணி அவருடைய மகனை சிறிதும் பார்த்ததாக தெரியவில்லை.. மகன் தலையை வருடி கொடுத்தும் எந்த ஒரு உணர்ச்சியும் காட்டாமல் அழுவதை தொடர்ந்து தொடர்ந்து கொண்டிருந்தார். ஒரு செவிலியர் அந்த பெண்மணியை நோக்கி வந்து அவரை தேற்றியது வியப்பையும் அதிர்ச்சியையும் தந்தது.

அந்தப் பெண்ணின் மகன் இருந்த அதே இடத்தில் நின்று கொண்டு செவிலியர் அந்தப் பெண்ணை தேற்றிக் கொண்டிருந்தது தான் காரணம்.. அதுமட்டுமல்ல அந்த மகன் சற்று விலகி மறுபுறம் நிற்க அப்போதுதான் புரிந்தது அவர் நிஜமில்லை என்று, ஒருவித ஆலோகிராம் போல் தெரிந்தார். ஏன் யாருக்குமே அவர் தெரியாதபோது எனக்கு மட்டும் தெரிகிறார்?? குழப்பத்துடன் நான் என் அறையை நோக்கி சென்றேன்.. அந்த சமயத்தில் இரு உதவியாளர்கள் அந்த அறையின் கதவை திறக்க நானும் உள்ளே சென்றேன்.. நிம்மதியாக இருந்தது நான் இன்னும் உறங்கிக் கொண்டே தான் இருந்தேன்… என்ன இது அப்போது நான் எப்படி வெளியே சென்று இருக்க முடியும்.. பயத்திற்கு பதிலாக ஆச்சரியமே மேலோங்கி நின்றது.

ஆம் நான் இறந்து விட்டிருக்கிறேன்!

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நான் என் ‘ஆத்மா’

இந்த நொடியில், மிக அற்புதமான ஒரு ஒளி தோன்றியது.. என்ன நிறம் என்று சரியாக கூற முடியவில்லை. அது ஒரு வெளிர் நீல நிறம் என்று நினைக்கும் போதே பொன்னிறமாக மாறியது.. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த ஒளியை நோக்கி நான் இழுக்கப்பட்டேன்… ஜிவ் என்று அந்த ஒளியின் ஊடே நான் வேகமாக செல்வதை உணர்ந்தேன்.

இதோ பூமியை என்னால் நன்றாக பார்க்க முடிகிறது… பூமியை விட்டு என் ஆத்மா வெளியே வந்து விட்டது என்று நினைக்கிறேன்.. அந்த சமயத்தில் எனக்கு இனம் புரியா மரண வலியை உணர்ந்தேன். இறந்த உடலில் இப்போது நான் இல்லை, வெறும் ஆத்மா மட்டுமே அப்படி இருக்க இந்த வலியை என்னால் ஏன் உணர முடிகிறது? குழம்பினேன். குழப்பத்திற்கு விடை கிடைத்தது, என் வலி இல்லை…. பூமி தாயின் வலி. குற்றுயிரும் கொலையுருமாக பல இடங்களில் வெட்டுப்பட்ட ஒரு உடலின் வலியை போன்றது அது. ஏன் இது போன்ற பூமியின் வலி எனக்குத் தெரிகிறது என்று நினைக்கும் முன்பே பூமியை விட்டு வெளி வந்த வேகத்திலேயே பூமியை நோக்கி மறுபடியும் இழுக்க பட்டேன்.

   அது ஒரு பறந்து விரிந்த ஆறு, அந்த ஆற்றின் கரையோரமாக இந்த அற்புத ஒளியினால் அழைத்துச் செல்லப்பட்டேன்… வழி நெடுக ஆற்று க்கரையோரம் இருந்த ஊர்களின் சாக்கடை கழிவு நீர் அந்த ஆற்றில் கலக்க விடப்பட்டிருந்தன… இது போல  பல ஆற்றின் கரையோரங்களில் இது போல் நடப்பது தெரிந்தது… உடலின் எல்லா இடங்களிலும் வெட்டுப்பட்டது போல் அந்த ஆறுகளின் மணல்  பல இடங்களில் வாரப்பட்டு இருந்தது தெரிந்தது…அந்த ஆற்றின் வலியை ஆழமாக உணர்ந்தேன். அதே ஆறுகளில் ஆழ்துளை இட்டு குடிநீருக்கு நீரும் எடுக்கப்பட்டிருந்தது.

திடீரென்று காட்சி மாறியது… கம்பீரமாக நின்ற மலைகள் கற்களுக்காக சூறையாடப்பட்டு தலை வெட்டுப்பட்ட முண்டம் போல் இருந்தது. அந்த மலைகள் இதய கோளாறினால் மாரடைப்பு வந்தது போன்ற வலியை பெற்றிருப்பதை உணர்ந்தேன்.

மறுபடி காட்சி மாறியது…. இந்த முறை நான் கண்ட காட்சி பூமி தாய்க்கு மட்டும் அல்ல எனக்கும் வலி எடுத்தது… ஒரு இடத்தில் குப்பை கூளங்கள் கொட்டி வைத்த தொட்டிகளை கரவை மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது… மற்றொரு ஊரில் மற்றொரு இடத்தில் அதே போன்ற குப்பை கூள தொட்டிகளை குதிரைகள் மேய்ந்து கொண்டிருந்தன… நிறைய இடங்களில் குட்டிகளை ஈன்ற நாய்கள் பசிக்காக ஏங்க, வயது வித்தியாசம் இன்றி எல்லோராலும் துரத்தி அடிக்கப்பட்டன..

மற்றொரு இடத்தில் கடற்கரை ஓரங்களில் உணவிற்காக பிடிக்கப்பட்ட மீன்கள் பெரிய கூடைகளில் சாகும் வரை துடிப்பதையும் பிறகு துடிப்பு நிற்பதையும் கண்டேன்.

இதோ தெரியும் இந்த காட்சி நம் நாட்டில் இல்லை…. ஏதோ ஒரு கூட்டம் நடந்து கொண்டிருந்தது… எல்லோரும் ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தனர், எப்படி ஏலியன்கள் மனிதர்களைக் கடத்தலாம்… அவர்களை வைத்து ஆராய்ச்சி செய்யலாம்? ஏலியன்களுக்கு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது…என்றெல்லாம் உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதைக் கண்டேன்.. காட்சி மாறியது.. அந்தக் கூட்டம் நடக்கும் இடத்தில் இருந்து வெகு தொலைவு இல்லை.. ஆற்றங்கரை ஓரத்தில் பலர் நின்று கொண்டு துப்பாக்கிகளினால் வாத்துக்கள் பறந்து செல்ல செல்ல சுட்டுக் கொண்டிருந்தனர்… அப்படி செய்ய அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட மாதமாம் அது….. அங்கிருந்து சற்று தொலைவில் காடுகளில் இளைஞர்கள் விளையாட்டுக்காக மான்களை வேட்டையாடுவதை கண்டேன்….. அடிபட்ட வாத்துகளின் வேட்டையாடப்பட்ட மான்களின் வலியை நாடி நரம்பு எல்லாம் உணர்ந்தேன்…

திடீரென்று ஏதோ நடப்பதை உணர்ந்தேன்… கண்ணிமைக்கும் நேரத்தில் என் உடல் அந்த மருத்துவமனையில் சிலிர்த்து எழுவதை கண்டு.. அந்த அறையினுள் நுழைந்த இரு உதவியாளர்களும் அலறிக் கொண்டு வெளியே செல்வதை கண்டேன்…. புரிந்தது, பூமித்தாயின் எல்லா வலிகளையும் என் ஆத்மாவிற்கு காண்பித்தது ஓரிரு நொடிகளுக்குள் என்று..

நான் துர்கா, மீண்டும் உயிர் பெற்றேன்… இனி நான் வாழப்போகும் வாழ்க்கையின் குறிக்கோளை முழுவதுமாக உணர்ந்தேன்.

bottom of page