top of page

ஆத்ம சாந்தி By சிவா.

  • melbournesivastori
  • Apr 18, 2021
  • 3 min read

ஏன் எனக்கு மட்டும் இது நிகழ வேண்டும் என்று தெரியவில்லை… என்னுடன் சிலருக்கும் இது தெரியும்.. இருந்தும் எனக்கு மட்டும் ஏன் இது நிகழ வேண்டும்? குழம்பி குழம்பி குழம்பி வருடங்கள் ஓடியது தான் மிச்சம்.

இந்த குழப்பத்திற்கு விடை இன்று என் பெண்ணிற்கு வந்த அரசாங்க செய்தியிலிருந்து தெரிந்தது… இதற்காக தானோ என்னவோ என்னை இவ்வளவு நாள் காக்க வைத்திருந்தது.

ஜனவரி 26-ஆம் தேதி ஆஸ்திரேலியா தினத்தன்று சிலருக்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் பட்டம் அளித்து கௌரவிக்கும். அதன் ஒரு பகுதிதான் என் மகள் உமாவிற்கு ஆஸ்திரேலியாவின் வளரும் விஞ்ஞானி என்ற பட்டத்தை அளிக்கப்போவதாக அரசாங்க செய்தி மின்னஞ்சலில் வந்தது. இங்கு ஆஸ்திரேலியாவில் இது போன்ற பட்டங்கள் அரசியல் தலையீட்டால் அல்லது தெரிந்த பிரபலமானவர்கள் சிலரது தலையீட்டால் கிடைப்பது இல்லை…. நாட்டில் உள்ளோர் ஓட்டளித்து அதை தீவிரமாக ஆராய்ந்து இதுபோன்ற கௌரவங்கள் அளிக்கப்படுகின்றன.

நான் சுந்தரேசன், பெயர் பிடிக்காமல் இல்லை ஆனால் ஏனோ என் நண்பர்கள் சுந்தர் என்று கூப்பிடும் போது சந்தோஷமாக இருந்தது. எனக்கு மனைவி 6 வயதில் ஒரு பெண் 4 வயதில் ஒரு ஆண் பிள்ளை… மகனின் பெயர் அறிவு. நடுத்தர வர்க்க குடும்பம் என்று சொல்வார்களே அதுகூட இல்லை நாங்கள்… நான் மீனவன்… நான் படித்ததோ பட்டப்படிப்பு…. தினமும் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருவது எனக்கு ஒன்றும் கடினமான வேலையாக இல்லை…… என் நண்பர்கள் மெச்சும் படியான திறமையும் எனக்கு இருந்தது. ஆனாலும் தினம் தினம் படகில் படுத்தபடி… நட்சத்திரங்களைப் பார்த்தபடி.. சோகப் பெருமூச்சுகள் அடிக்கடி விட்டபடி…. யோசிப்பது எல்லாம்…. ஏன் கடவுள் நம்மை இவ்வாறு படைக்க வேண்டும்… எனக்கு நன்றாக மீன்கள் பிடிக்க முடியும்.. நிறைய மீன்கள் உள்ள இடமும் தெரியும் அவைகளை முழுவதுமாக பிடிக்க கூடிய லாவகமும் தெரியும். இருந்தும் என்ன பயன்? எனக்கென்று தனியாக படகு இல்லை வலை இல்லை ஏதும் இல்லை….. சங்கத் தலைவரிடம் வாடகை எடுத்துக் கொண்டுதான் செல்ல வேண்டும்.

என் மகள் உமா ஆஸ்திரேலியாவில் வந்து இறங்கிய அந்த தினம் என்னால் மறக்க முடியாத தினம். இரண்டாயிரத்து ஐந்தாவது வருடம்… ஜான், சூ இருவரும் என் மகளின் கைபிடித்து சுங்கம் கடந்து வெளியே வந்தது இந்த நிமிடம் வரை பசுமரத்தாணி போல் என் மனதில் உள்ளது.

அன்றைய தினத்திலிருந்து ஒவ்வொரு தினமும் ஏன் ஒவ்வொரு மணி நேரமும் என் மகளின் வாழ்க்கையை சுற்றியே நான் இருந்தேன். என்னால் நினைத்தும் பார்க்க முடியாத வாழ்க்கையை ஜானும் சூவும் என் மகளுக்கு அளித்துள்ளனர்.

தொடக்கப் பள்ளிக்கு அந்த பள்ளியின் சீருடையில் உமா சென்ற அழகே தனி… கடவுளே உனக்கு நன்றி கூறுவதா இல்லை நொந்து கொள்வதா என்றே புரியவில்லை. நான் வசித்த மீனவ குப்பத்தில் இது எந்த காலத்திலும் நடந்திருக்காது.. அந்த ஒரு விஷயத்தில் கடவுளுக்கு மிகவும் நன்றி கூறுகிறேன். ஒவ்வொரு முறையும் பள்ளி பெற்றோருடனான கூட்டத்தில் ஜானும் சூவும் உமாவுடன் கலந்துகொண்டது பெரு மகிழ்ச்சியைத் தந்தது, அதைவிட சந்திப்பை முடித்து விட்டு வெளியே வரும்போது அவர்கள் மகிழ்ச்சியை பார்க்கும் போது நன்றாக செய்கிறாள் என்று தெரியவந்தது.

வருடங்கள் ஓடியது… ஆரம்பப் பள்ளியில் இருந்து உயர்நிலை பள்ளிக்கு உமா சென்றாள். ஒவ்வொரு வகுப்பிலும் தலைசிறந்து விளங்கினாள். என்னால் இதில் 5% கூட இந்த வாழ்க்கையை உமாவிற்கு கொடுத்து இருக்க முடியாது.

பத்தாவது படிக்கும்போது அவள் எழுதிய ‘ஆர்கானிக் பார்மிங் வித் மாடர்ன் டெக்னாலஜி’ லோக்கல் கம்யூனிட்டி பேப்பரில் வெளிவந்தது எல்லோருடைய புருவத்தையும் உயர்த்தியது. இந்த சிறுவயதில் விவசாயத்தை பற்றி இவ்வளவு தெரிந்து இருக்கிறதா என்று. ஜானும் அவருடைய தந்தையும் விவசாயத்தில் அதிக ஆர்வம் கொண்டவர்கள் என்றும், அவருடைய தந்தை இறக்கும் வரை ஜான் அவருடைய பண்ணை நிலத்தில் அதிக நேரத்தை செலவிடுவார் என்றும் பிறகுதான் தெரிந்தது…. அவரின் உணவு சமயத்தில் டைரக்ட் பேச்சுக்கள் உமாவின் மனதில் ஆழமாக பதிந்ததே அந்த கட்டுரைக்கு அடித்தளமாக அமைந்தது.

ஆர்கானிக் விவசாயத்தில் தொடங்கி நேச்சுரல் சயின்ஸில் அதிக ஆர்வம் கொள்ள ஆரம்பித்தாள். படித்த பள்ளியினால் தேர்ந்தெடுக்கப்பட்டு; அனுப்பப்பட்டு மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 மாணவர்களில் ஒருவராக நேஷனல் யூத் சயன்ஸ் போரம் எனப்படும் நாடு முழுவதும் விஞ்ஞானத்தில் அதிகம் நாட்டம் கொண்ட இளம் பள்ளி மாணவர்களை கொண்டு நடத்தப்படும் இருவாரங்களுக்குகான கூட்டமைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டாள்.

ஜானுக்கும் சூக்கும் அவளை இருவாரங்களுக்கு வேறு மாநிலத்திற்கு அனுப்ப விருப்பம் இல்லை என்றாலும் அவளுடைய ஆர்வத்தின் காரணமாகவும் முன்னேற்றத்திற்காகவும் அனுப்ப சம்மதித்தனர். எனக்கு இது அவ்வளவாக புரியவில்லை என்றாலும் ஏதோ பெரிய அளவில் என் மகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாள் என்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை தந்தது.

வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா தலைநகர் பெர்த்தில் அந்த பயிற்சி முகாம்.

பயிற்சியை முடித்து வந்து நாட்கள் உருண்டோட பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று மெல்பர்ன் யுனிவர்சிட்டியில் இடம் கிடைத்து பட்டப் படிப்பையும் மேற்பட்ட படிப்பையும் முடித்து CSIRO எனப்படும் ஆஸ்திரேலிய விஞ்ஞான கூடத்தில் நல்ல வேலையில் அமர்ந்து நல்ல படியாக அவள் இருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்தது.

அதற்கு எல்லாம் மகுடம் வைத்தது போல் தான் வந்தது ஆஸ்திரேலியா அரசாங்கத்தின் அந்த பட்டம் அளிக்கப் போகும் செய்தி, ‘ஆஸ்திரேலியாவின் வளரும் இளம் விஞ்ஞானி!’

அந்த நாளும் வந்தது ஜனவரி 26 2021 ஆஸ்திரேலிய தலைநகர் கான்பராவில் பிரதம மந்திரியின் பட்டங்கள் அளிக்கும் விழாவில் கலந்துகொள்ள எல்லோரும் வந்து அமர்ந்திருந்தனர். என் பெண் உமா ஜானுடன் சூவுடனும் அங்கு அமர்ந்திருந்த காட்சி எனக்கு பெரும் மகிழ்ச்சியும் அளவுகடந்த அமைதியையும் தந்தது.

திடீரென்று ஒரு அற்புதமான ஒளி அது வெண்மை நிறமும் இல்லை வேறு நிறமா என்று புரிந்துகொள்ள முடியாதபடி மிக அற்புதமாக இருந்தது…. அங்கு குழுமியிருந்தவர்களை கவனித்தேன் யாரும் அதை கவனித்ததாக தெரியவில்லை எனக்கு தெரிந்தது…. என்னை ஏதோ ஒரு விதத்தில் அது அழைத்தது… என் மகள் உமாவை கடைசி முறையாக பார்த்தேன் என்னால் தவிர்க்க முடியவில்லை அந்த ஒளியை…அதை நோக்கிச் சென்றேன்.

25 டிசம்பர் 2004. சுந்தரேசனின் தங்கை சிவசங்கரி சென்னையில் இருந்து வந்து சிறுமி உமாவை மட்டும் சென்னைக்கு விடுமுறை நாட்களுக்காக அழைத்துச் சென்றாள். மறு நாள் 26 டிசம்பர் 2004 சுனாமி எனப்படும் பேரலை சுந்தரேசனையும் அவன் மனைவியையும் மகனையும் மற்றும் அந்த ஊரில் உள்ள நூற்றுக்கணக்கான வரையும் விழுங்கியதும்.. 2005 இல் ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த ஜானுவும் சூவும் சுந்தரேசன் மகள் உமாவை தத்து எடுத்துக்கொண்டு ஆஸ்திரேலியா திரும்பிச் சென்றதும் செய்தி.

26 ஜனவரி 2021 சுந்தரேசனுடைய ஆத்மா சாந்தி அடைந்தது நிகழ்வு.

bottom of page