இருந்தும் இறந்தவன் By சிவா.
- melbournesivastori
- Jul 25, 2021
- 3 min read
வெட்டிப்பேச்சு மற்றும் வீணா போனோர் சங்கம் இதை தலைப்பாக வைத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்… இது என்னுடைய மாமாவின் கூட்டம்….என்னைவிட 15 வயது மூத்தவர்.. பெயர் தேவராஜன் , எனது தாத்தா தன் பிள்ளைகளுக்கு அருமையான தமிழ் பெயர்களை வைத்திருந்தார்… என்னுடைய அம்மா மங்கையர்க்கரசியின் தம்பி இவர். என் தாத்தா பெயர் வைக்கும் போது என்னென்ன கற்பனையில் இருந்தாரோ? ஆனால் என் மாமா பேச்சில் மட்டுமே தேவர்களுக்கு ராஜாவாக திகழ்ந்தார்… என்னுடைய மாமி கலைவாணி திருமணத்திற்கு முன்பு என்னென்ன சாதிக்க நினைத்தாரோ தெரியவில்லை… என் மாமாவை மனம் முடித்த பிறகு மௌனத்தை மட்டுமே சாதித்தார்.
நான் கார்த்தி, படித்தது இயந்திரவியலில் பட்டப்படிப்பும் மேற்படிப்பும்… நன்றாக படித்தேன் இப்போது நல்ல வேலையிலும் இருக்கிறேன்.. பொதுவாக என் வயது இளைஞர்களுக்கு இது லட்சியத்தை அடைந்து விட்டது போல தோன்றும்… எனக்கோ உருப்படியாக ஏதும் செய்யவில்லை என்றே தோன்றியது… இது என் மனதை அல்லும் பகலுமாக குழம்பி கடைசியாக நண்பர்களுடன் சேர்ந்து ஒரு நற்பணி மன்றம் போல் துவங்கி எங்களால் முடிந்த உதவிகளை தேவையுள்ளவர்களுக்கு செய்யத் துவங்கினோம்… எங்கள் பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை மாலை வேளைகளில் ஒரு மணி நேரம் அவர்களுடைய படிப்புகளில் வரும் சந்தேகங்களுக்கு புரியும்படியாக விளக்கம் அளித்தோம். சில வருடங்கள் சென்றது… ஏனோ மனது திருப்தி அடையவில்லை…
வாரப் பத்திரிகைகள் படிக்கும் பழக்கம் எனக்கு உண்டு… அதில் வரும் கதைகளின் தரத்தை கண்டு நொந்து நானே சில கதைகள் எழுத முயற்சித்து அவைகளை என் சுற்றமும் நட்பும் பாராட்ட…. நன்றாக வரவே.. எல்லா வாரப் பத்திரிகைகளுக்கும் அனுப்பி வாரக் கணக்காக, அங்கீகாரத்துக்கு அல்ல… நல்ல கதைகளை அளிக்க காத்திருந்து காத்திருந்து காலங்கள் தான் போனது….. என் கதைகள் படிக்கப்பட்டதோ இல்லை நேராக ஸ்பேம் மெயிலுக்கு சென்றதோ தெரியவில்லை….
இதில் கொடுமை என்னவென்றால், எந்த ஒரு சமூக சேவையும் செய்யாமல்..பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த ஒரு நற்பணியும் செய்யாமல்… பெருந்தலைவர் காமராஜ் செய்ததுதான் அரசியல் என்பதும் புரியாமல் இப்போது என் மாமா கவுன்சிலர் ஆகியது மட்டுமல்லாமல் கட்சி அவருக்கு வட்ட செயலாளர் பதவியும் கொடுத்தது… கொடுமையிலும் கொடுமையாக அவர் என்னை பார்த்து அடிக்கடி கேட்பது, ‘கார்த்தி எப்போது என் கட்சியில் சேர்கிறாய்?’ என்பதுதான். எனக்கும் அரசியலுக்கும் மைக்ரோவேவ்க்கும் எவர்சில்வர் பாத்திரங்களுக்கும் உள்ள தொடர்புதான்.
என் கதைகள் வாரப்பத்திரிகைகளில் வராதா என்று பொறுத்து வெறுத்து இருக்கும்போதுதான் ஒன்றுவிட்ட அண்ணன் சரவணன் ஒரு நண்பனின் திருமணத்திற்காக வந்து என்னுடன் இரண்டு நாட்கள் தங்கி இருக்கும்போது நிறைய பேசினோம். அவர் தொழில்நுட்பத்துறையில் நல்ல வேலையில் இருக்கிறார்…. அன்று காலை அவர் கேட்டது அவர் சென்ற சில நாட்களுக்குப் பிறகும் என் மனதில் ரீங்காரமிட்டது….. இவ்வளவு நல்லது செய்ய நினைக்கிறாயே… நீ ஏன் அந்தக் கருத்துக்களை ஒரு யூடியூப் சேனல் தொடங்கி அதன் வழியாக பரப்பக் கூடாது என்பதுதான். நேரம் கிடைக்கும்போதெல்லாம் யோசித்தேன், கடைசியாக ‘மனிதம்’ என்ற பெயரில் ஒரு யூடியூப் சேனல் தொடங்கினேன். எனக்குத் தெரிந்தவர்கள் செய்யும் பல நல்ல சமூக சேவைகளை பதிவேற்றம் செய்தேன். மாதங்கள் சில உருண்டோட எனக்கு தெரிந்தவர்கள் மட்டுமே என் சேனலை பார்க்க….. இது வேலையற்ற வேலையாக தெரிந்தது எனக்கு.. இதற்கு செலவிடும் நேரத்தை எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்யலாம் என்று தோன்றியது. அந்த சமயத்தில்தான் ஒரு நாள் மாலை என் தங்கை ஒரு புறாவை மாடியில் இருந்து எடுத்து வந்தாள்… என்ன நடந்தது என்று நான் கேட்க என்னவோ தெரியவில்லை இந்த புறாவினால் பறக்க முடியவில்லை… ஏற்கனவே காலியாக இருந்த ஒரு கூண்டில் அதனை வைத்து பராமரிக்க தொடங்கினாள் ( பறவைகள் வளர்ப்பது அவளுக்கு பிடிக்கும்) அந்தப் புறாவிற்கு தினமும் வைட்டமின் மினரல் வாட்டர் கொடுத்து கவனித்து வந்ததை முதல் நாளில் இருந்து அவ்வப்போது காணொளியாக எடுத்துவந்தேன்… ஒரு மூன்று வாரம் கடந்திருக்கும், அன்று ஞாயிறு காலை மாடிக்குச் சென்று அதற்கு பறக்க முடிகிறதா என்று பார்த்தாள்…. என்ன ஒரு ஆச்சரியம், ராக்கெட் போல் கிளம்பி மேலே சென்று எங்கள் வீட்டின் மேல் சில வட்டங்கள் அடித்து பறந்து மறைந்தது. இந்த காணொளிகளை தொகுத்து ‘எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!’ என்ற தலைப்பில் என் சேனலில் போட…. எப்படித்தான் பரவியதோ என்று அதிசயத்தக்க வகையில் மளமளவென்று சந்தாதாரர்கள் சேர இரு வாரங்களிலேயே 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் கிடைத்தார்கள். எனக்குள் புது உத்வேகம் பிறந்தது…. பிறகென்ன ஆங்காங்கே அவரவர் செய்யும் சிறுசிறு மனிதாபிமான செயல்களையும் ஒளிபரப்ப ஆரம்பித்தேன்.. இதற்குள் தங்கை திருமணமாகி செல்ல அவள் வைத்திருந்த பறவைகளை நான் கவனிக்க வேண்டியதாகிவிட்டது. இதற்கிடையில் என் சேனல் வளர்ந்து வளர்ந்து ஒரே ஆண்டில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் இருந்தனர். இத்தனைக்கும் கேளிக்கைகளோ அரசியலோ ஒரு பகுதியில் கூட போட்டதில்லை… நல்லவற்றைப் பாராட்ட இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற திருப்தி எனக்கு மென்மேலும் செய்ய வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுத்தது.
அப்போதுதான் தேர்தல் அறிவிக்கப்பட்டது.. எங்கும் அதே பேச்சு… அந்த சமயத்திலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு நடைபாதை வியாபாரி பற்றி என் சேனலில் போட்டது…. தீப்பற்றிக் கொண்டது போல பற்றிக்கொண்டது… இரட்டிப்பு மகிழ்ச்சி எனக்கு, மூன்று நாட்களுக்கு முன் பிறந்த குழந்தையுடன் என் தங்கை வீட்டிற்கு வரப் போகிறாள் மற்றும் என் சேனலுக்கு ஆறு லட்சத்தை கடந்த சந்தாதாரர்கள்.
மணி மாலை 3, என் தங்கை குழந்தையுடன் அழைத்து வரப்பட, வீட்டிற்குள் அக்கம் பக்கம் சேர்ந்து கூட்டம் வழிய…. என்னுடைய மாமா கட்சி ஆட்களுடன் உள்ளே நுழைந்து எல்லோருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி சொல்ல போகிறேன்.. என்னை இந்த தொகுதிக்கு வேட்பாளராக நிறுத்தியுள்ளார்கள் என்று கூற, இதில் மகிழ்ச்சி அடைய என்ன என்று நான் நினைக்க….
ஒரு நிமிடம் அம்மாவுடன் உள்ளே சென்று வெளியே வந்து அம்மா கொடுத்த சிறு தங்கச்சங்கிலியையே கட்சி ஆட்களின் முன் குழந்தைக்காக தங்கையிடம் கொடுக்க உடன் வந்திருந்த ஒருவர் புகைப்படம் எடுக்க என்னை பார்த்து கேட்டார், கார்த்தி, ‘உன் யூடியூப் சேனல் நன்றாக போகிறதாமே?’ நான் ஆமாம் என்றேன்… அவரேத் தொடர்ந்து ‘ என்னை ஒரு பேட்டி எடுத்து உன் சேனலில் போட்டுடு… நான் நாளை காலை தயாராகி வருகிறேன்… ஓகே தானே?’ என்று கேட்க.. ஒட்டு மொத்த குடும்பமும் மற்றவர்களும் என்னையே பார்க்க…..
நான் இருந்தும் இறந்தவனானேன்.