top of page

கானல் நீர் By சிவா

  • melbournesivastori
  • Dec 12, 2020
  • 2 min read

சுதாகர்பாபு பேசிக்கொண்டிருந்தான்…. சரவணன் ஒரு பக்தியோடு அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான், சரவணனும் சுதாகர்பாபுவும் நெருங்கிய நண்பர்கள் பள்ளி நாட்களில். சுதாகர்பாபுவிற்கு சரவணன் ஒரு விசிறி போல் இருந்தான்… சுதாகர்பாபுவின் பேச்சுத்திறமை அப்படி.. விஷயமே இல்லாமல் இருந்தாலும் மணிக்கணக்காக வசீகர தன்மையோடு பேசுபவன். பிளஸ்-1 இறுதி வகுப்பிலேயே சுதாகர்பாபு ஒரு அரசியல் தலைவரின் தொண்டனாக போய் சேர்ந்தான்.. சுதாகர்பாபுவிற்கு தொண்டன் என்று நினைப்பு ஆனால் அந்த அரசியல் தலைவருக்கோ சுதாகர்பாபு ஒரு அடியாள் என்று நினைப்பு… சுதாகர்பாபு சென்ற இடமெல்லாம் செல்லும் சரவணனுக்கு ஒரு பெரிய முடிவாக தெரியவில்லை அவனும் அடியாளுக்கு அடியாளாக சேர்ந்துகொண்டான். சுதாகர்பாபுவிற்கு தினமும் ஒரு போராட்டம் அவனுடைய வீட்டில்… மத்தியதர வகுப்பிலிருந்து வந்தவன் அவன்… பெற்றோரின் வசை பாடல் தாங்க முடியாமல் வீட்டை விட்டு வந்து விட்டான். சரவணனுக்கு அந்த பிரச்சினையே இல்லை… தந்தையை சிறு வயதிலேயே இழந்தவன் தாயுடன் மட்டும் இருந்தான் அவனை கேள்வி கேட்கும் இடத்தில் இல்லை அவனுடைய தாயார். அந்த அரசியல் தலைவர் பேசவிருக்கும் கூட்டங்களில் அவர் வருவதற்கு முன் சுதாகர்பாபு பேச்சு கூட்டம் சேராத போது மேடையில் தொடங்கியது.. கொஞ்சநஞ்சம் இருந்த கூட்டம் அவன் பேச்சை ரசித்து.. அதனால் அவர்கள் கூறக் கேட்டு கொஞ்சம் கொஞ்சமாக அவனின் பேச்சு மக்களுக்கு போய் சேர்ந்தது….. சில வருடங்களில் அந்த அரசியல் பேச்சு அவன் அடியாளாக இருக்கும் அரசியல் தலைவரை விட அவர்கள் சார்ந்த கட்சி தொண்டர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. அரசியலில் எதுவும் நிகழும் என்பது போல. அமாவாசை போலிருந்த சுதாகர்பாபு அரசியல் தலைவன் ஆனான். சரவணனுக்கு பெரிதாக ஆசை ஏதுமில்லை… அவன் சுதாகர் பாபுவின் கைத்தடி ஆகவே இருக்க ஆசைப்பட்டான்… சிறிது காலத்திற்குள்ளாகவே சுதாகர்பாபு ‘பாய்ச்சல் பாபு’ என்று அனைவராலும் அழைக்கப்பட்டான். கட்சியும் சிறிதுசிறிதாக அவனுக்கு பொறுப்புகள் வழங்க ஆரம்பித்தது….. மாநில அளவில் இல்லாமல் இருந்தாலும் மாவட்ட அளவில் அவன் கவனிக்கப்பட்டான். சுதாகர்பாபுவிற்கு தான் என்ற அகங்காரம்… தன்னை விட்டால் மாவட்டத்தில் யாருமில்லை என்ற நினைப்பு பல குறுக்கு வழிகளை ஆராய்ந்து கட்சியின் மேலிடத்தில் தனக்கென்று ஒரு நிலையான இடத்தைப் பிடித்துக் கொண்டான். பாய்ச்சல் பாபுவின் பேட்டிகள் மாவட்ட தினசரிகளில் வர ஆரம்பித்தது. மக்கள் கவனிக்கவில்லை என்றாலும் மக்களால் கவனிக்கப்படும் நபர் என்று பரப்புரை செய்யப்பட்டது… பிறகென்ன எம்எல்ஏ சீட்டு கிடைத்தது… வெற்றியும் பெற்றான்…. தவறு பெற்றார். பாய்ச்சல் பாபுவின் சமயோசித புத்தி பல வருடங்களில் பல வெற்றிகளை பெற்றுத்தந்தது…. மூன்றாவது முறையாக எம்எல்ஏ ஆன பாய்ச்சல் பாபு கட்சித் தலைமையில் இருந்து வீட்டுக்கு வந்த தினம்.. சரவணன் தாயார் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக செய்தி வந்தது… சரவணன் மிகவும் பவ்யமாக பாய்ச்சல் பாபுவிடம் அனுமதி கேட்க.. பாய்ச்சல் பாபுவும் அனுமதி தர… மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தாயாரை பார்த்துவிட்டு இரவு மட்டும் தங்கிவிட்டு…. கட்சித் தொண்டு அழைக்க….. மறுநாள் காலை பாய்ச்சல் பாபுவின் வீட்டிற்கு சென்றபோது… பாய்ச்சல் பாபு ஓய்விற்காக ஐந்து நாட்கள் கொடைக்கானல் செல்ல புறப்பட தயாரானார்…. உடனடியாக தலைவன் செல்ல ஏற்பாடுகளை கவனிக்க சரவணன் ஓடியாடி வேலை செய்தான்…. ராகு காலம் முடிந்து புறப்பட நல்ல நேரம் வந்தது, அந்த சமயத்தில்தான் சரவணன் தாயார் இறந்த செய்தி பாய்ச்சல் பாபுவிடம் பேசிக் கொண்டிருக்கும்போது சரவணனுக்கு தெரிவிக்கப்பட்டது. கலங்கிய சரவணனுக்கு அந்த கலக்கத்தை போக்க பாய்ச்சல் பாபு பாக்கெட்டிலிருந்து ஐந்தாயிரம் ரூபாய் எடுத்து பெருந்தன்மையாக சரவணனிடம் கொடுத்து இறுதிச்சடங்கை கவனிக்கச் சொல்லி விட்டு கார் கதவை மூடி கிளம்பிச் சென்றது தான் பேரிடியாக சரவணனுக்கு விழுந்தது. அப்பாவி சரவணனுக்கு இது தான் உலகமா என்ற நினைப்பு வந்து அதை ஜீரணிக்க கூட நேரமில்லாமல் தாயாரின் இறுதிச்சடங்கை கவனிக்க ஓடினான். பிறகு கடினமான நான்கு வருடங்கள் ஓடியது… ஒரு கடையின் முன்பு மூட்டை தூக்கிய கலைப்பில் படுத்திருந்த சரவணனை விடியற்காலை 3 மணிக்கு சிலர் அதட்டலுடன் தட்டி எழுப்பினர்…. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து சரவணன் குழப்பத்துடன் எழுந்து ஒதுங்கி நின்ற போது. வந்தவர்கள் ஒரு பெரிய போஸ்டரை சுவற்றில் ஒட்டினர். ‘கடந்த 22 வருடங்களாக தொகுதி மக்களின் மேம்பாட்டுக்காக அல்லும் பகலும் உழைத்த அண்ணல் ‘பாய்ச்சல் பாபு’ மாரடைப்பால் திடீரென்று இறந்தார்’ என்று ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிப்பதாக அந்த போஸ்டரில் செய்தி இருந்தது. போஸ்டரை ஒட்டி விட்டு அவர்கள் சென்றபிறகு.. தூசியை தட்டி விட்டு சரவணன் மறுபடி தூங்க ஆரம்பித்தான்.

தொடர்புக்கு @ melbournesivastories@gmail.com

bottom of page