காரணி பாகம்-1 By சிவா.
- melbournesivastori
- Jul 4, 2021
- 4 min read
பொதுவாக மொத்த மக்கள்தொகையில் சிலராவது யோசிப்பது உண்டு நாம் ஏன் பிறந்தோம் நம் பிறப்பின் நோக்கம் என்ன என்று. இந்த யோசனைகள் சிலருக்கு வந்து சென்றாலும் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக எந்த ஒரு முடிவும் இறுதியாக எட்டப்படவில்லை… இத்தகைய யோசனைகள் எனக்கும் வந்து சென்று கொண்டிருக்கிறது…. இதற்கும் இனி நடக்கப் போகும் நிகழ்ச்சிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாளை எனக்கு மிக முக்கியமான நாள், மத்திய கட்டுப்பாட்டிலிருந்து வேண்டுகோள் வந்தது எனக்கு, அதை ஏற்றுக் கொண்டதனால் நாளை எனக்கு முக்கிய நாள்.
என்ன வேண்டுகோள், எதற்காக எனக்கு அனுப்பினார்கள், எங்கிருந்து வந்தது இவற்றையெல்லாம் விவரித்துக் கூறினால் மட்டுமே உங்களுக்கு புரியும். போர் மிகக்கொடூரமான ஒன்று. மனித இனம் தோன்றியது முதலே போர் என்ற காட்டுமிராண்டித்தனமும் தோன்றிவிட்டது. முதலில் தன் கூட்டத்தை காப்பாற்ற பிறகு நாட்டை காப்பாற்ற பிறகு நாடுகளை; நாட்டு செல்வங்களை கைப்பற்ற துவங்கி மதங்களால் மோதல்கள் உருவாகி சகிப்புத்தன்மை குறைந்து இன அழிப்பில் முடிவுற்றது. மனோதத்துவ ரீதியாக பார்க்கும்போது போர்க்குணம் என்பது ஒரு அடிமைத்தனம் என்றால் 99.999999% பேர்கள் அதை ஒத்துக் கொள்ள மாட்டார்கள். எதற்கோ அடிமையாக இருந்தால் மட்டுமே இந்த போர் என்ற அரக்க குணம் வரும்.. எங்களின் anglo-saxon இனம்தான் உலகிலேயே தலைசிறந்த இனம் என்கிற எண்ணத்திற்கு அடிமையாக ஆகியதால் தான் ஹிட்லரின் இந்த அரக்க குணம்…இந்த விவாதத்தை தொடராமல் நான் ஏன் போரைப் பற்றிக்கூற வந்தேன் என்று மட்டும் கூறி விடுகிறேன். விதவிதமான போரை மனித இனம் இதுவரை கண்டுள்ளது… ஆனால் எங்களுக்கு நேர்ந்தது நாங்களாகவே உருவாக்கிக் கொண்டது.
அறிவின் சிகரத்தை தொட்ட நாங்கள் வேட்டை கூட்டமாக இருந்த மனிதர்களின் உடற்கட்டில் பத்து சதவீதம் கூட இப்போது எங்களுக்கு இல்லை… எங்களால் மனதின் வலிமையால் நிறைய வேலைகளை செய்துக் கொள்ள முடிந்தாலும் இந்த இயலாமையின் காரணமாக எங்களுக்கு தேவையான சில தினசரி உதவிகளை செய்ய சுய புத்தி உடைய ரோபாட்டுக்களை உருவாக்கியது தான் நாங்கள் செய்த மிகப்பெரிய தவறு. முந்தைய காலத்தில் இருந்தது போல் அரசாங்கம் என்ற அமைப்பு எங்களிடம் இல்லை. எல்லாமே மத்திய கட்டுப்பாட்டு நிலையம் தான். அது என்ன என்று யோசிக்கிறீர்களா? மிக பிரம்மாண்டமான கணினி. முந்தைய காலங்களில் இருந்த NDA ஒப்பந்தம் போல் இந்தக் கணனியிடமும் நாங்கள் NDA ஒப்பந்தம் ஒன்று போட்டிருந்தோம். முந்தைய காலத்து Non Disclosure Agreement, எங்களுடையது Non Destructive Agreement. இதன் மூலமாக தாய் கணினி எந்த காலத்திலும் எங்களுக்கு எதிரான முடிவுகளை எடுக்காது, மனிதர்கள் கொடுத்த வாக்கிலிருந்து மாறலாம் ஆனால் இந்த தாய் கணினி அவ்வாறு இல்லை. எல்லாவற்றையும் தாய் கணினியுடன் இணைக்காமல் சிலவற்றை எங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொண்டோம்…. அதில் ஒன்றுதான் இந்த சுய புத்தி உள்ள எந்திர மனிதர்கள். பல நூற்றாண்டுகள் எல்லாம் நல்ல விதமாக தான் போய்க் கொண்டிருந்தது…. ஆனால் சில வருடங்களுக்கு முன்பு துவங்கியது எங்களை எதிர்க்கும் குணம்… கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை கட்டுக்கடங்காமல் போக ஒரு குழு என்னை சந்திக்க வந்தது.
அதற்குக் காரணமும் இருந்தது, நான் ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளன்.. சமீப காலங்களாக சுயபுத்தி எந்திர மனிதர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று நான் எழுதிய சில ஆராய்ச்சிக் கட்டுரைகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதன் காரணமாகத்தான் என்னை அணுகினார்கள். இந்த சுயபுத்தி எந்திர மனிதர்கள் அந்த காலத்தில் இருந்தது போன்ற வெறும் எந்திரம் மட்டுமே அல்ல.. கிளோன் செய்யப்பட்ட மனிதர்களும் அல்ல… உலோக எலும்புக்கூடு கொண்ட சதையுள்ள ஆண்ட்ராய்டு ஹியூமனோய்ட் என்று எடுத்துக் கொள்ளுங்கள்… இவைகள் உயிர்ப்புடன் இருக்க மின்சாரமும் சிலவகை ரசாயனங்களும் தேவை. சுமார் 50 மணி நேரத்திற்கு பிறகு ஐந்து மணி நேரமாவது இவைகள் ஜார்ஜிங் டாக்கில் இருக்க வேண்டும். என்னை அணுகி வந்த குழுவிடம் நீண்ட விவாதத்திற்குப் பிறகு ரசாயனக் கலவைகளில் மாற்றம் செய்தால் அவைகளை செயலிழக்க செய்ய முடியும் என்று யோசனை கூறினேன்… மிக விளக்கமாக இதை எப்படி செய்தோம் என்று கூறுவது நான் இனி கூற போவதை தடம் புரள செய்துவிடும் …அந்த யோசனை செயல்படுத்தப்பட்டு மிக வெற்றிகரமாக சுயபுத்தி எந்திரங்கள் செயல் இழக்கப்பட்டன. நாங்கள் அதில் வெற்றி பெற்றாலும் எங்களுக்கு மாபெரும் சோதனையாக அது முடிந்தது… அதாவது உடல் வலிமையற்ற எங்களுக்கு தினசரி வேலைகளை செய்வதே பெரும்பாடாக போய்விட்டது.
அதைப்பற்றி தான் நான் நாளை பேச வேண்டும். அந்த நாளும் வந்தது.
அந்த அரங்கத்தில் மிகச்சிறந்த அறிவுஜீவிகள் அமர்ந்திருக்க நான் என்ன விரிவுரை ஆற்றினேன் என்பதை சுருக்க உரையாக இங்கு கூறுகிறேன்.
சுமார் மூன்றாயிரம் வருடத்திற்கு முன்பாக 2010களில் இருந்த மனிதர்களின் உடல் வலிமை சிறிது சிறிதாக குறைந்து இப்போது 5020 களில் உடல் வலிமை அற்று நாம் இருக்கிறோம்…. இதை நாம் சுயபுத்தி ஆண்ட்ராய்டு களால் நிவர்த்தி செய்ய முடிந்தாலும் அது நமக்கே பேரழிவாக முடிந்துவிடும் என்பது சென்ற சில வருடங்களில் புரிந்து கொண்டிருப்பீர்கள்…. நம் உடல் வலிமையற்று இருப்பதற்கான மூல காரணத்தை கண்டுபிடித்து அதை சரி செய்தாலே இதற்கு நாம் முழுமையாக முடிவுகட்ட முடியும்.. இப்போது எல்லோரும் நிமிர்ந்து அமர்ந்து உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கினர்… மனித இனம் மிகப்பெரிய மாற்றத்தை 2020 களில் ஏன் சந்தித்து என்று உற்று நோக்கினால் அந்த சமயத்தில் வந்த கோரோனா வைரஸும் அதன் தொடர் பாதிப்புகளும் என்ற முடிவுக்கு நாம் வந்து வெகுகாலம் ஆகிவிட்டது… என்னுடைய வேண்டுகோளும் முடிவும் என்னவென்றால் நாம் ஏன் 2010 களில் சென்று அந்த வைரஸ் உருவாகாமல் தடுத்து இந்த நம் நிலைமை இருந்து காப்பாற்றிக்கொள்ள முடியாது என்பதுதான். இப்போது எங்களுக்கு அதன் பிறகு பல பல கேள்விகளும் அதற்கான விளக்கங்களும் தந்து ஒருவழியாக எல்லோரும் ஒத்துக் கொண்டனர்.
தாய் கணினி என்னையே அந்தக் காலத்திற்கு செல்ல வேண்டுகோள் அனுப்பியது… நானும் தேர்வு செய்யப்பட்ட இன்னும் இரண்டு நபர்களும் புறப்பட தயாரானோம்.
டைம் டிராவல் டைம் மெஷின் என்று அந்த காலத்தில் கருதிய விதம் ஓரளவுக்கு சரி ஆனால் நாங்கள் இப்போது பயணப்படும் போது ஸ்பேஸ் போர்டலை உபயோகப்படுத்துகிறோம். அதாவது நேரத்தையும் அண்ட வெளியையும் வளைத்து இந்த பயணத்தை மேற்கொள்கிறோம்…. இன்னும் விரிவாக இதைப்பற்றி கூற தேவையில்லை என்று நினைக்கிறேன்.
பயண நாள் குறிக்கப்பட்டு பயணப்பட்டு இதோ வந்து இறங்கி விட்டோம்… எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது….. செல்ல நினைத்தது கோரோனா வைரஸை உருவாக்கிய இடம் செல்ல நினைத்த காலம் 2015….. ஆனால் நாங்கள் இறங்கியதோ அந்த இடமும்; நாடும்; அந்தக்காலமும் அல்ல… இருபத்தியோராம் நூற்றாண்டுக்கான அடையாளமே இல்லை.. எங்கு நோக்கினும் 21ஆம் நூற்றாண்டுக்கான கான்கிரீட் கட்டடங்கள் இல்லை…. அந்தக் காலத்திய ஜிபிஎஸ் போன்ற எங்களுடைய நவீன கருவியை பார்க்கும்போதுதான் மிகப் பெரிய தவறு நடந்து விட்டது தெரிந்தது… நாங்கள் இறங்கிய காலம் மூவாயிரம் வருடத்துக்கு முன்பு செல்வதற்கு பதிலாக15000 வருடத்திற்கு முன்பு வந்து விட்டோம் என்பதும் இறங்கிய இடம் இருபத்தியோராம் நூற்றாண்டில் பஞ்சாப் மாநிலம் என்று அழைக்கப்பட்ட இடம் என்பதும் தெரியவந்தது…. இப்போது ஒன்றை உங்களுக்கு கூற வேண்டும் எங்களிடம் நாங்கள் இருப்பதற்கான அடையாளமே தெரியாமல் எங்களை நாங்களே மறைத்துக் கொள்ள முடியும்… 21 நூற்றாண்டில் அமெரிக்கா முயற்சி செய்த தொழில்நுட்பம் தான் அது…
நான் என் குழுவிடம் விளக்கிக் கூறினேன்… நாம் வேண்டும் என்று எந்த இடத்தில் வந்து இறங்க வில்லை தவறுதலாக இறங்கி விட்டோம்… வந்தது வந்துவிட்டோம் இந்த இடங்களையும் காலத்தையும் சில நாட்கள் பார்த்துவிட்டு பிறகு நாம் வந்த நோக்கத்தை நோக்கி செல்லலாம் என்றேன்…. அவர்களும் ஒத்துக் கொண்டார்கள். சிறிது நேரத்திலேயே கவனித்தோம் ஒரு கூட்டம் ஒரு வெட்டவெளியான இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது…. நாங்களும் அவர்களை பின் தொடர்ந்தோம்… அப்போதுதான் ஆச்சரியமும் அதிர்ச்சியும் எங்களுக்கு கிடைத்தது… வேறொன்றுமில்லை அவர்கள் பேசிக்கொண்டது தமிழ், அவரின் நாகரீக உடைகளும் நடவடிக்கைகளும் எங்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது. அவர்கள் சென்றது பிற்காலத்தில் சந்தை என்று கூறப்படும் இடம் என்று புரிந்து கொண்டோம். அவரவர்கள் எடுத்து வந்த பொருட்களை சந்தைப் படுத்தினார்கள்… பிறகு எல்லாம் சாதாரண சந்தை வியாபாரம் தான்… அவர்கள் உபயோகப்படுத்தியது தங்கக் காசுகள். மிகுந்த ஆச்சரியமும் உற்சாகமும் அடைந்து இவர்கள் எவ்வளவு நிலப்பரப்பில் பரவி இருக்கிறார்கள் என காண விழைந்தோம்… வடமேற்கில் பிந்திய காலத்தில் ஆப்கானிஸ்தான் என்று கூறப்படும் இடத்தையும் கிழக்கில் பிற்காலத்தில் தாய்லாந்து எனப்படும் இடத்தை தொட்டும்….. தெற்கில் செல்லும்போதுதான் ஆச்சரியத்தின் உச்சத்தை அடைந்தோம்….. இலங்கை எனும் நாடே இல்லாமல் பிற்கால இந்தியாவின் தென்கோடியில் மூழ்கியும் முழுகாமலும் சில நகரங்கள் தென்பட்டது….. இருபதாம் நூற்றாண்டுகளில் தமிழ் அறிஞர்கள் கூறியது போன்று குமரி கண்டத்தின் மீதம் தான் அவை என்று புரிந்து கொண்டோம். கல்தோன்றா மண்தோன்றா காலத்தின் முந்தைய தமிழ் என்பது உண்மைதான் போலும்… நாகரிகம் மிக்கவர்களாக இருந்ததால்தான் நாகர்கள் என்று அழைக்கப்பட்டார்களோ என்னவோ..
எங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் வரை என் பயணம் தொடரும்…….