top of page

காரணி பாகம்-2 By சிவா

  • melbournesivastori
  • Jul 7, 2021
  • 3 min read

மூவாயிரம் வருடத்துக்கு முன்பு என் முன்னோர்கள் எந்த மொழி பேசினார்கள் என்று எனக்கு தெரியாது, ஆனாலும் ஒருவித உள்ளுணர்வு எனக்கு உறுத்தியது நான் தமிழ் இனத்தை சேர்ந்தவன் என்று….. என் மரபணுவில் ஆழ்ந்து பதிந்து இருக்கக்கூடிய மாயா ஜாலங்களில் இதுவும் ஒன்றோ?!

என்னுடன் வந்த இருவரையும் கேட்டேன்…. நாம் வந்த இந்த காலம் மிகவும் ஆச்சரியம் ஊட்டுகிறது …. இந்தக் கடலுக்கு அடியில் மூழ்கி இருக்கும் நகரை பார்க்க எனக்கு மிகவும் ஆவலாக உள்ளது…. உங்கள் இருவரின் சம்மதம் இருந்தால் இன்னும் ஒரு ஆயிரம் வருடங்களுக்கு பின்பு சென்று பார்க்க எனக்கு மிகவும் விருப்பமாக உள்ளது என்றவுடன் அவர்களும் சம்மதித்தனர். ஒரு கணமும் தாமதிக்காமல் ஆயிரம் வருடங்களுக்கு முன்பான தேதியை இதே இடத்தைக் குறிப்பிட்டு நாங்கள் வந்த ஊர்தியில் பதிவிட்டு துவக்கினேன்.

எங்கள் ஊர்தி இறங்குவதற்கு முன்னால் நாங்கள் கண்ட காட்சி மிக பிரம்மாண்டமாக இருந்தது.. மிக நவீன தொழில்நுட்ப காலத்தில் இருந்து வந்த எனக்கு இவர்களுடைய கட்டமைப்பு மிகவும் பிரமிப்பை தந்தது…இன்னும் ஆயிரம் வருடங்கள் கழித்து இவையெல்லாம் கடலுக்கு இரையாகப் போகப்போகிறதை நினைத்தாலே மனதுக்குள் ஒரு வருத்தம் வந்து சென்றது. கடற்கரையின் ஒரு மேடான பகுதியில் இறங்கினோம்.. மக்கள் நடமாட்டம் அவ்வளவாக இல்லை. ஊர்தியை விட்டு வெளியே வந்தோம்… எவ்வளவு நேர்த்தியான கட்டமைப்பு என்று பிரமிப்பின் எல்லைக்கே சென்றேன்… தொலைநோக்கியில் கூர்ந்து பார்க்கும்போது இது அது என்று இல்லாமல் எல்லாமே பிரமிப்பாக இருந்தது… குறிப்பாக அந்தக் கடற்கரையில் நங்கூரமிட்டு காத்திருக்கும் மர கப்பல்கள்.

எங்கள் காலத்திற்கு நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ராஜராஜ சோழன் எனும் மாமன்னன் பல யானைகளை ஏற்றிச் செல்லும் அளவிற்கு கப்பலை கட்டி கடல் கடந்து சென்றான் என்று முந்தைய வரலாற்றில் நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்…. ஆனால் இங்கு இந்த குமரிக்கண்டத்தில் நாங்கள் காண்பதோ நவீன உலகத்தில் இருந்து வந்தோம் என்று நினைப்பதே தவறு என்பது போல் மிக மிகப் பிரம்மாண்டமான மர கப்பல்கள் மிக அழகாக வடிவமைக்கப்பட்ட துறைமுகத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. உன்னிப்பாக கவனிக்கத் துவங்கினேன்… மக்கள் நேர்த்தியாக உடை அணிந்து இருந்தனர். நோயற்ற வாழ்க்கை முறையில் வாழ்பவர்கள் போல சுகாதாரமாக இருப்பது தெரிகிறது….

இவர்களை கவனித்துக் கொண்டிருக்கும் போதே மேலும் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.. அங்கு நங்கூரமிட்டு காத்திருந்த கப்பலில் இருந்து வெளியே வந்த இருவர் வேறு மாதிரியான உடைகளை அணிந்திருந்தனர்…. அவர்கள் இருவரின் தோற்றமும் வேறு இனத்தவராக இருக்கக்கூடும் என்று தெரிகிறது..

சிறு குற்ற உணர்ச்சி என்னுள் வந்து சென்றது…. நாங்கள் வந்தக் காரியத்தை மறந்துவிடவில்லை இருப்பினும் தவறி கிடைத்த இந்த வாய்ப்பை வீணாக்கவும் விரும்பவில்லை… சில கப்பல்கள் புறப்பட்டுச் செல்லும் திசை பார்க்கும் போது ஒரு யோசனை தோன்றியது… எங்களிடம் இருக்கும் ஊர்தியில் சில நிமிடங்களிலேயே கண்டங்களை கடந்துவிட முடியும், ஏன் அந்த திசையில் சென்று பார்க்கக் கூடாது என்று தோன்றியது.. மற்ற இருவரை சம்மதிக்க வைப்பது மிக எளிது… அவர்களுக்குத் தாய் கணினி இட்ட கட்டளையே எனக்கு உதவி புரிய தான்.

பிறகென்ன ஊர்தியில் அமர்ந்து அந்த திசையை நோக்கி புறப்பட்டோம்…. சில நிமிடங்களில் பிந்தைய காலங்களில் ஆப்பிரிக்கா எனும் கண்டத்தின் வடபகுதிக்கு வந்து சேர்ந்தோம். நாங்கள் கண்ட காட்சி ஆச்சரியத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது… ஆமாம் பிரமிடுகள் பிரம்மாண்டமாக நின்று கொண்டிருந்தது. எனக்குத் தெரிந்தவரை எங்கள் காலத்திலிருந்து சுமார் 10 லிருந்து 11 ஆயிரத்துக்கு உட்பட்ட காலத்தில்தான் பிரமிடு கட்டப்பட்டது என்று அறிந்திருந்தோம்… ஆனால் இங்கோ 16000 ஆண்டுகளுக்கு முன்பே கட்டிய நிலையில் பிரமிடுகளை கண்டோம். குமரிக்கண்டத்தில் கண்ட மனிதர்களை போல் உடை அணியாமல் இவர்கள் வேறுபட்டு இருந்தார்கள். மற்றுமொரு ஆச்சரியம் எனக்கு ஏற்பட்டது…. கப்பலில் இருந்து வெளியே வந்த இருவரும் இந்த இனத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்று புரிந்தது…. எங்கள் பயணத்தின் மர்மங்கள் கூடிக்கொண்டே போனது… வந்தது வந்துவிட்டோம்…. இன்னும் சிறிது தூரம் பயணிப்போம் என்று மறுபடி கிளம்பி அதே திசையில் சென்றோம்… சில நிமிட பயணத்திலேயே மிக மிக பிரம்மாண்டமான வட்டவடிவிலான மிகப்பெரிய தீவு பிந்திய காலத்து இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு சரியாக மத்தியில் கடலிலிருந்து…..

குமரிக்கண்டத்தின் கட்டமைப்பு எல்லாம் செவ்வக வடிவிலான கட்டமைப்பு…. ஆனால் இந்தத் தீவில் உள்ளது வட்ட வடிவிலான கட்டமைப்பு… அந்த நொடிகளில் தான் புரிந்தது.. கட்டுக் கதையோ என்று நாங்கள் நினைத்த அட்லாண்டிஸ் தான் இது….. நாங்கள் வந்த ஊர்தியை பாதுகாப்பான இடத்தில் நிறுத்திவிட்டு, தொலைநோக்கியில் கவனிக்கத் துவங்கினோம். மற்றுமொரு ஆச்சரியம்…. ஆமாம் குமரி கண்டத்தில் கப்பலில் இருந்து வெளிய வந்த இருவர் அணிந்த உடையை போன்றே இங்கே எல்லோரும் அணிந்திருந்தனர்… அப்படி என்றால்……….. குமரி கண்டத்திற்கும் அட்லாண்டிஸ்க்கும் அந்தக் காலகட்டத்திலேயே தொடர்பு இருந்திருக்கிறது. இப்போது எனக்கு மிகப்பெரிய குழப்பம், அட்லாண்டிஸ் பற்றி நிறைய கேள்விப்பட்ட எங்களுக்கு ஏன் குமரிக்கண்டத்தை பற்றி பிந்தைய சந்ததியினர் அவ்வளவாக குறிப்பிடாமல் போனார்கள் என்று புரியவில்லை….. அந்த சமயத்தில்தான் மின்னலென அந்த நினைப்பு வந்து சென்றது… 15 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சில கோடிகள் இருந்த நாகர்கள் எனப்படும் தமிழர்கள் எந்தக் காரணத்தினாலோ மக்கள் தொகை குறைந்து சுமார் 2150 களில் வெறும் 40 லட்சத்திலிருந்து 50 லட்சத்துக்கும் குறைவானவர்களே இருந்ததாக ஞாபகம். 21ம் நூற்றாண்டில் ஏதோ பேரிழப்பு தமிழர்களுக்கு நடந்திருப்பது தெரிகிறது…. என்ன நடந்திருக்கும் என்று நினைக்கவும் தேடவோ எங்களுக்கு போதிய நேரமில்லை.

எல்லாம் ஏற்கனவே கட்டமைக்கப்பட்டு இருந்ததால் இந்த கலாச்சார நாகரிகம் இன்னும் பல ஆயிரக்கணக்கான வருடங்கள் முன்பே துவங்கி இருக்க வேண்டும். இங்கு இன்னும் அதிக நேரத்தை செலவிடாமல் குமரிக்கண்டத்தை பற்றி மேலும் சில விவரங்களை காண மீண்டும் குமரிக்கண்டத்தை வந்தடைந்தோம்.

இந்த கண்டத்தின் கிழக்குப் பகுதி பிந்தைய ஆஸ்திரேலியாவை இணைத்தும் மேற்குப்பகுதி பிந்தைய ஆப்பிரிக்காவை தொடும் அளவிற்கும் இருந்தது. வடக்கு முழுவதும் பிந்தைய காலத்தின் இந்தியா ஆப்கானிஸ்தானை உள்ளடக்கியதாக இருந்தது. அந்த காலத்திய தமிழர்களின் வாழ்க்கை முறையை கவனிக்கும்போது கோவில்களை எங்கும் காணவில்லை… கடவுள் வழிபாடு பின்னால் தோன்றியதோ என்னவோ?! குமரிக்கண்ட தமிழ் அரசருக்கு எல்லாவிதமான பிரம்மாண்ட அதிகாரங்கள் இருந்தது…. துணை கண்டத்தை விட பெரிய பரப்பளவில் இருந்த இந்த குமரி கண்டத்தில் எல்லா மக்களும் மிகவும் சந்தோஷமாகவும் கட்டுக்கோப்புடன் இருப்பதைக் கண்டேன். எல்லாம் நல்லபடியாக நடந்து பிறகு ஒருமுறை இந்த காலத்திற்கு இதே இடத்திற்கு வந்து நிறைய கவனிக்க வேண்டும் என்று தோன்றியது…. ஒரே ஒரு முறை குமரிக்கண்டத்தின் அரசரைப் பார்த்து விட்டு நாங்கள் வந்த வேலையை கவனிக்க செல்ல முடிவெடுத்தோம்.

அற்புதமாக இருந்த பிரம்மாண்ட அரண்மனையில் அரசரைப் பார்க்க காத்திருந்தோம்….. அவரின் அறைக்கே சென்று எங்களால் பார்க்க முடியும் ஏனென்றால் எங்களை அவரால் பார்க்க முடியாது…. இருப்பினும் அரசவையை அவர் அமர்ந்து நடத்தும் விதத்தை பார்க்க மிக ஆவலாக இருந்ததால் காத்திருந்தோம்…..

நேரத்தை வலைக்கும் எங்களுக்கே அந்த சில நிமிடங்கள் மிகவும் தாமதமாக கழிவது போல் தோன்றியது….

அந்த நிமிடமும் வந்தது…… எல்லோரும் பரபரப்பாக இருந்ததை பார்த்தால்…. ஆம் அதோ அரசர் வருகிறார்….. அருகாமையில் வந்தவுடன் பார்த்து மூச்சே நின்று விடும் போல் இருந்தது…. அவர் தானா இவர்…. என்ன பாக்கியம் செய்தேன் இவரைக்காண…….

என் விருப்பம் நிறைவேறி விட்டது… வந்த வேலையை காண இதோ 2015 ஆண்டை நோக்கி கிளம்பி விட்டோம்…

     10 ஆயிரம் வருடங்களுக்கு பிறகு தோன்றப் போகும் திருவள்ளுவருக்கும் பிறகு எப்படி இந்த குமரி கண்டத்தின் மாமன்னன் வருங்கால சந்ததிகளுக்கு தெய்வமாக போகிறார் என்ற நினைவலைகளை அசை போட்டுக்கொண்டே பயணத்தை தொடர்ந்தேன்.

bottom of page