காரணி பாகம்-3 By சிவா
- melbournesivastori
- Jul 11, 2021
- 4 min read
குமரி கண்டத்தின் எண்ண ஓட்டங்கள் தடைபட்டது… ஆமாம் பொர்ட்டலில் இருந்து வெளியே வந்தோம்.. ஊர்தியை எங்கு இறக்கலாம் என்று தேடி ஒரு தகுதியான இடத்தில் இறக்கினோம், காலம் மார்ச் மாதத்தில் ஒரு நாள், வருடம் 2015… 19,20,21 வருடங்களில் எல்லோரும் நினைத்ததைப் போல் கோரோனா வைரஸ் தொடக்கம் அங்கு இல்லை…. தொடங்கின காலமும் அது இல்லை.
மிகத்துல்லியமாக எங்கிருந்து, எப்படி, எப்போது துவங்கியது என்று எங்களுக்கு தெரியும். நாங்கள் வந்த வேலையும் அதுதானே?
இந்த நேரத்தில் உங்களுக்கு விளக்க வேண்டிய ஒன்று இருக்கிறது… எங்களுக்கு இருக்கும் மிக முக்கியமான கட்டளை என்னவென்றால் வந்த வேலையை தவிர எந்த நிகழ்வுகளிலும் எந்த காலகட்டத்திலும் நாங்கள் நிகழ்காலத்தின் வரலாற்றை மாற்ற முயற்சிக்க கூடாது. எந்த ஒரு சிறு மாற்றமும் காலத்தால் சங்கிலித் தொடர் போல் பல மாற்றங்களை உண்டுபண்ணி விடும்.. அதை முன்கூட்டியே கணிப்பது என்பது எங்கள் தாய் கணினியிலேயே முடியாத காரியம்…. இதைப் பற்றி விளக்கமாக பிறகு கூறுகிறேன்.
நாங்கள் ஊர்தியை நிறுத்திய இடம் அந்த கிராமத்தின் ஒதுக்குபுறம், அது ஒரு சிறு கிராமம் 50-க்கும் குறைவானவர்களே அங்கு வசித்தனர்.
இன்று நடக்கப்போகும் நிகழ்ச்சிதான் வருங்காலத்தின் பெரும் தொற்றின் தொடக்கமாக இருக்கப்போகிறது…. என்ன நடந்தது என்று கூறுவதற்கு பதிலாக நடக்கப்போகும் நிகழ்வுகளின் தொடர்ச்சிக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். அதோ கிராமத்தின் கடைசி வீட்டில் இருப்பவர் கீரி போன்ற ஒரு விலங்கை… இறந்து கிடந்தததோ இல்லை அவர் கொன்றுவிட்டு எடுத்து வருகிறாரோ தெரியவில்லை…. அதை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்று சமைத்து உண்ண போகிறார்… அதுதான் அவருடைய, அவர் மனைவி இரண்டு மகன்கள் உடைய கடைசி உணவு என்று அப்போது அவர்களுக்கு தெரியாது. ஆம் சுமார் மூன்று மணி நேரத்திற்குள் அவர்கள் நான்கு பேருக்கும் லேசான காய்ச்சல் துவங்கி இரவு முழுவதும் தொடர்ந்து, மறுநாள் மூச்சு இரைச்சலாக உருவாகி மூச்சு தினறலாக உருவெடுத்து, நான்கு பேருக்கும் ஒரே சமயத்தில் வந்ததால் வெளியே செல்லாமல் இரண்டு நாட்களில் எல்லோரும் இறந்து விட்டனர்..
துர்நாற்றம் பரவி அருகிலிருந்த மற்ற கிராமத்து ஆட்கள் அரசாங்கத்திடம் தெரிவித்து அரசாங்கம் வந்து அந்த நான்கு பேரின் உடல்களையும் எடுத்து சென்றது நமக்கு முக்கியமில்லை…. எங்கே எடுத்துக்கொண்டு போக போகிறார்கள் என்பதுதான் மிக முக்கியமான ஒன்று. அந்த நாட்டின் அரசாங்கத்திற்கு இந்த நான்கு பேருடைய உடல்களும் ஏதோ ஒரு முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஏற்கனவே தெரிந்துள்ளது போன்று தோன்றுகிறது….. ஆமாம் கண்காணிப்பு கேமராவில் அங்கு நடந்தது ஏற்கனவே பார்த்து விட்டதாலேயே இந்த முக்கியத்துவம். தரை மார்க்கமாக எடுத்துச் செல்வார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது அந்த ஊர்தி விமான நிலையத்தில் நின்றது, உடல்கள் எடுத்துச்செல்லப்படும் இடம் வெகு தூரத்தில் உள்ளது என்று புரிந்து கொண்டோம். ஆமாம் சுமார் 700 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த இடத்தில் விமானம் இறங்கியதும் உடல்கள் எடுத்துச்செல்லப்பட்டது கிருமிகளுக்கான பரிசோதனை கூடம்.
அந்த நகரத்தில் நாங்கள் கண்ட காட்சிகள் எங்களுக்கு என்னவென்றே தெரியாத ‘பயம்’ என்கிற ஒரு உணர்வை முழுவதாக உணர்ந்தோம்.. பரிசோதனைக் கூடம் அந்த நகரத்தின் மிகவும் ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்திருந்தது… அந்த பரிசோதனை கூடத்திற்கும் நகரத்திற்கும் இடையில், மிகப்பெரிய சந்தை கூடத்தில் நாங்கள் கண்ட காட்சிகள் தான் எங்களுக்கு பயத்தை உண்டாக்கியது. எங்கு நோக்கினும் தோலுரிக்கப்பட்ட விலங்குகள, பறவைகள் தொங்கவிடப்பட்டிருந்தன… கீழிருந்த தொட்டிகளில் பலவகையான நீர் பிராணிகள்…. நாங்கள் மாமிசம் உண்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் இவ்வாறு கொல்லப்பட்டு கூறு போட்டு விற்பார்கள் என்று நினைத்தும் பார்க்கவில்லை… அங்கிருந்து மக்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க பயம் இருந்தாலும் தொடர துவங்கினோம்…. சிலர் வாங்கிச் சென்று உடனடியாக சமைக்கத் தொடங்கினர்…. மற்றும் சிலர் வாங்கி வந்த இறைச்சியை குளிர்பதன பெட்டிகளில் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து அடுக்கினர்…
இந்த நடவடிக்கைகள் தான் எங்களுக்கு சரியாக புரியவில்லை….. கொலையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம் திட்டமிட்ட கொலையைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறோம் .. முந்தைய காலங்களில் அதாவது இப்போது நடந்து கொண்டிருக்கும் காலங்களில் அதற்கான தண்டனை உண்டு என்றும் கேள்விப்பட்டிருக்கிறோம்….. ஆனால் நாங்கள் கண்ட காட்சிகள் இதற்கு நேர்மாறாக இருந்தது அங்கு இறந்து கிடந்த விலங்குகளும் பறவைகளும் கொலை செய்யப்பட்டவைகளாக….குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் திட்டமிட்டு கொலை செய்யபட்டவைகளாக இருந்தும் ஏன் எந்தவித நடவடிக்கைகளும் இல்லாமல் மக்கள் சர்வசாதாரணமாக இருக்கிறார்கள்……. குழம்பியது தான் மிச்சம், வள்ளலார் எனப்பட்ட ராமலிங்க அடிகளார் கூறிய ‘எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!’ ‘எல்லா உயிர்களும் சமம்’ என்கிற கூற்றுப்படி இல்லை இங்கு நடப்பது….. எங்களுக்கு புரிந்துவிட்டது…. இங்கு மனிதர்கள் உயிர்களாக மதிப்பது ‘மனித உயிர்களை’ மட்டும்தான். இந்த கலாச்சாரத்தை எங்களால் மாற்ற முடிந்தாலும் நாங்கள் மாற்றக்கூடாது என்பது கட்டளை. நாங்கள் இங்கு வந்து மாற்ற நினைத்த நிகழ்ச்சியை போன்று ஒன்றை மாற்ற நினைத்தால் தொடர் சங்கிலி போன்ற நிகழ்வுகள் நடக்கப்போவது மிகக் குறைந்ததே… ஆனால் ஒரு தலைவனையோ அல்லது ஒரு கூட்டத்தையோ அழித்தால் தொடர் சங்கிலியாக நிகழப் போகும் நிகழ்வுகள் எத்தகைய மாற்றத்தை பின்வரும் காலங்களில் ஏற்படுத்தும் என்பது கணிக்க இயலாத ஒன்று. உதாரணமாக ஒரு மோசமான நாட்டின் தலைவனை அழித்துவிட்டால் அவன் செய்த, செய்து கொண்டிருக்கும், செய்யப்போகும் மோசமான செயல்கள் தவிர்க்கப்பட்டு விடும் என்று நினைக்க முடியாது…. மாறாக அந்தத் தலைவனின் மிக நெருங்கிய வட்டத்திலுள்ள வேறு ஒருவர் அதே சிந்தனையுடனும் கொள்கையுடன் தொடரக்கூடும்…
சரி அந்த பரிசோதனைக் கூடத்திற்கு வருவோம்… மிகவும் ரகசியமான, பிரம்மாண்டமான எல்லா வசதிகளையும் கொண்ட அந்த நாட்டின் இதயம் போன்ற கிருமிகள் பரிசோதனை கூடம் அது. அந்த நாடு அந்த பரிசோதனைக் கூடத்தை துவங்கிய காரணமே மனிதகுலத்தை ஆட்டிப்படைக்க தான்.. அந்த நான்கு உடல்களும் பரிசோதனை கூடத்தில் பாதுகாப்பு பெட்டகம் போன்றிருந்த ஒரு அறையில் கிடத்தப்பட்டிருந்தது. எங்களிடம் இருக்கும் சிறு உபகரணம் போதும் அந்த பரிசோதனைக் கூடமே இருந்த இடமே இல்லாமல் அழிக்க. பின் ஏன் செய்யவில்லை என்று எண்ணத் தோன்றும்….
இந்தப் பரிசோதனை கூடம் அழிந்தால் சில; பல வருடங்களில் இந்த நாடால் மீண்டும் உருவாக்கிட முடியும்… ஆனால் இரண்டு தலைசிறந்த விஞ்ஞானிகள் அழிக்கப்பட்டால் ஒழிய எங்களால் இந்தக் கொடூர பெரும் தொற்றை தவிர்க்க இயலாது… அதனால் அந்த இரு விஞ்ஞானிகளும் இந்தப் பரிசோதனை கூடத்திற்குள் இருந்தால் மட்டுமே நாங்கள் இந்தப் பரிசோதனை கூடத்தை அழிக்க முற்படுவோம்.
அந்த இரு விஞ்ஞானிகளில் ஒருவர் பெண் விஞ்ஞானி, கிருமிகளின் உடற்கூற்றை மாற்றியமைத்து குறிப்பிட்ட மரபணுவை மட்டுமே தாக்குமாறு செய்யக்கூடியதில் இந்த காலகட்டத்தின் மிகச்சிறந்த விஞ்ஞானி. மற்றொருவர் வேறு நாட்டில் பிறந்து இருந்தாலும் இந்த நாட்டினுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவர். இவரின் தனித்துவம் ஒரு விலங்கிலிருந்தோ இல்லை பறவையில் இருந்தோ இயற்கையாக உருவாகி மறையும் கிருமிகளை பாதுகாப்பாக எடுத்து அழியாமல் காப்பாற்றி எப்படி மனிதர்களுக்கு பரவுமாறு செய்வது என்பதில் தான். எவ்வளவு நாடுகள் மறைமுகமாக செய்யும் இத்தகைய ஆராய்ச்சிகள் இந்தப் பரிசோதனை கூடத்தில் இந்தக் காலகட்டத்தில் உள்ள ஆராய்ச்சியின் நிலையில் பத்து சதவீதம் கூட இல்லை.
இந்த இரு விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சி மிகக் கொடிய விஷ கிருமிகளை உருவாக்கப் போகிறது. இந்த இருவரும் ஒருசேர பரிசோதனைக் கூடத்திற்கு வரும்போது நாங்கள் இவர்களை பரிசோதனைக்கூடதோடு சேர்ந்து அழிக்க வேண்டும். நாங்கள் மூவரும் எப்போதும் சேர்ந்து இருக்க வேண்டிய கட்டாயத்தால் தனித்தனியாக பரிசோதனை கூடத்தையும் இவர்களையும் அழிக்க இயலாது, மேலும் தனித்தனியாக இவர்களை அழித்தால் மூன்று தனித்தனி நேர கோட்டு சங்கிலிகளை உருவாக்கிட கூடும். இன்னும் இரு நாட்களில் அது நடக்கக் கூடும். அதன் நடுவே வேறு ஏதாகிலும் எங்காகிலும் உடனடியாக இத்தகைய பரிசோதனைகளை மேற்கொள்ள வசதிகள் உள்ள பரிசோதனைக் கூடங்கள் உள்ளதா என்று அந்த காலகட்டத்திய பதிவுகளில் தேடிப்பார்த்தோம்… அவ்வாறு ஏதும் இல்லை என்றும் முடிவுக்கு வந்தோம்.
அந்த நாளும் வந்தது, அந்த ஆண் விஞ்ஞானி பரிசோதனை கூடத்திற்கு வந்திருந்தார்…. காத்திருந்தோம்… சுமார் இரண்டு மணி நேரம் ஆகியும் திட்டமிட்டபடி அந்த பெண் விஞ்ஞானி வரவில்லை.. காத்திருப்பு காலத்தை நகர் திட கடினமாக இருந்தது…. அந்த நேரத்தில்தான் அந்த ஆன் விஞ்ஞானிக்கு எங்கோ செல்ல அழைப்பு வர நாங்கள் பதட்டத்துடன் உடனடியாக அவர் வெளியே செல்லாதவாறு சில மணி நேரம் மயக்கமுர செய்தோம். அரை மணி நேர இடைவெளியில் அந்தப்பெண் விஞ்ஞானியும் வந்தார். சிறிதும் தாமதிக்காமல் உடனடியாக நாங்கள் வந்த வேலையை ஒரு சிறு கருவி கொண்டு நிறைவேற்றினோம்.
அந்த பரிசோதனைக் கூடமும் அதைச்சுற்றி சுமார் 100 மீட்டர் சுற்றளவும் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது……. மகிழ்ச்சியின் எல்லையில் நாங்கள் கொண்டாட நினைத்த போது தான் கவனித்தோம்…
எங்கள் உடலில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என்று.. வருத்தத்தின் எல்லைக்கே சென்றோம்.. இந்த பயணம் மாபெரும் தோல்வியில் முடிந்ததற்காக.
இந்த எங்களுடைய முயற்சியில் கொரோனா வைரஸ் உருவாகாமல் தடுக்கப்பட்டு இருந்தால்; முறியடிக்கப்பட்டு இருந்தால் நாங்கள் நினைத்தது போல் பிற்காலத்தில் எங்கள் உடல் வலிமை இழந்து காணப்பட்டு இருக்காது……. திட்டமிட்டபடி எங்கள் காலத்திற்கு வருத்தத்துடன் திரும்ப தயாரானோம்.
நம் மரபணுவில் ஊறியிருந்த விடாமுயற்சி அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று யோசிக்க ஆரம்பித்தது.
நாங்கள் வலிமை பெறும் வரை இந்தப் பயணங்கள் தொடரும்……….



