top of page

காரணி பாகம்-4 By சிவா

  • melbournesivastori
  • Jul 17, 2021
  • 4 min read

 தோல்வியில் துவண்டு எங்களுடைய காலத்திற்கு வந்து சேர்ந்தோம். நாளை எல்லோர் முன்னிலையிலும் நடந்தவைகளை விவரிக்க வேண்டும். மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு பதிலாக 13000 ஆண்டுகளுக்கு முன்பு சென்றது ஏன் என்ற கேள்வி வரும்.. நடந்தவற்றை நடந்தவாறே கூறிவிட்டு செல்லலாம்… ஆனால் மனதில் ஓரமாக மறுபடி குமரி கண்டத்திற்கு செல்ல நிறைய காரணங்கள் இருந்தது….. அதைப் பற்றி நேரம் வரும்போது சொல்கிறேன். நாளை நான் விவரிக்க போவது என்ன நடந்தது அது ஏன் தோல்வியில் முடிந்தது என்பதைப்பற்றி, ஆனால் எனக்குள் தோன்றி மறையும் எண்ணங்கள் அடுத்த திட்டத்தை பற்றி…. அதற்காக தாய் கணனியிடமிருந்து  சில 21ஆம் 22ஆம் நூற்றாண்டுகளில் என்ன என்ன முக்கியமான நிகழ்வுகள் நாங்கள் பயணப்பட்டு வந்த பிறகு நடந்திருக்கிறது என்பதைப்பற்றி தகவல்களை சேகரிக்க வேண்டும்.

குறிப்பாக பல ஆயிரக்கணக்கான வருடங்களாக இருந்த மனிதர்களின் உடல் கட்டு எந்த நூற்றாண்டிலிருந்து வலிமை இழக்க ஆரம்பித்தது.. அதற்கு என்னவெல்லாம் காரணமாக இருக்க முடியும் என்பதனைப் பற்றி.

3 முக்கிய காரணங்களை தாய் கணனி எனக்கு அளித்தது…. இதில் எதையுமே நான் எதிர்பார்க்கவில்லை. இதில் முதலாவதை நாங்கள் தடுத்து நிறுத்த முடியும் மற்ற இரண்டு காரணங்களையும் எவ்வாறு நிறுத்தப் போகிறேன் அல்லது நிறுத்தப் போகிறோம் என்று எனக்கு புரியவில்லை…. சரி அறிக்கையை விளக்கமாக நாளை சமர்ப்பிக்கலாம் என்று ஓய்வு எடுக்க ஆரம்பித்தேன்… எங்கே ஓய்வெடுப்பது…. இப்படியும் நடந்து இருப்பார்களா என்று அதிர்ச்சி அடைய வைக்கும் இரண்டு காரணங்கள்.. மற்றும் ஒன்றை காலத்தால் ஏற்பட்ட மாற்றம் என்று ஒத்துக் கொள்ளலாம் ஆனாலும் அதுவே ஒரு காரணமாக அமைந்து விடப் போகிறது என்று அவர்களுக்கு தெரியாது….

ஓய்வெடுக்கும் போது, நாளை சமர்ப்பிக்கப் போகும் அறிக்கை பற்றி எவ்வளவுதான் மனதை ஒரு நிலைப்படுத்தி யோசிக்க ஆரம்பித்தாலும் மனது முழுவதும் குமரி கண்டத்திலே இருந்தது…. ஏன் என்று எனக்கே புரியவில்லை… இதற்கு முடிவு கட்ட தாய் கணனியின் உதவியை நாட முடிவெடுத்தேன்… நாடினேன்.. விளக்கமும், வெற்றியும், ஏன் என்று என் மனதினை ஆட்டிப்படைக்கும் கேள்விக்கு விடையும் கிடைத்தது. பொதுவாக எந்தவித மனநிலையிலும் நாங்கள் உணர்ச்சிகளை அதிகமாக காண்பிக்க மாட்டோம்… எல்லாவற்றையும் மீறி இந்த முடிவு… இந்த விடை எனக்கு அளவற்ற மகிழ்ச்சியை தந்தது. அது என்ன என்பதை இப்போது கூறுவது சரியாக இருக்காது. நாளை நடக்கப்போகும் மிக முக்கியமான கூட்டத்திற்கு நான் தயாராக வேண்டும்… இப்போது என் நீண்ட நாளைய கேள்விக்கு விடையும் கிடைத்தது என் மனதை ஒருமுகப்படுத்த எளிதாக்கியது.

மறுநாளும் வந்தது… ஒருவித தயக்கத்தோடு கூட்டத்திற்கு சென்றேன். தயக்கம் நான் கூறப்போகும் விஷயத்தில் அல்ல பிறகு எடுக்கப்போகும் நடவடிக்கைகளில்… எல்லோரும் அமர்ந்திருக்க, நான் பேசத் துவங்கினேன்… நான் பேசியதை எல்லாம் கூறுவதற்கு பதிலாக சுருக்கமாக கூறி விடுகிறேன்… நான் ஏற்கனவே குறிப்பிட்டது தான்… என்ன நடந்தது எப்படி எல்லாம் நடந்தது என்று கூறினேன். இனி என்ன செய்யப் போகிறோம், என்ன முடிவு எடுத்துள்ளீர்கள் என்று கேட்டதற்கு, தாய் கணினி எனக்களித்த நேற்றைய கணிப்புகளை தொகுத்து வழங்கினேன். நம் உடல் குன்றியதற்கு கோரோனா வைரஸ் தான் காரணம் என்று நினைத்துக்கொண்டிருந்த நாம் அது இல்லை என்று தெரிந்துகொண்டதுடன் வேறு எவ்வாறான காரணங்கள் இருக்க முடியும் என்று தாய் கணினியை நான் தொடர்பு கொண்டு பெற்ற மூன்று முக்கிய காரணங்களை குறிப்பிட ஆரம்பித்தேன். எல்லோரும் கூர்ந்து கவனிக்க, தாய் கணினி மிக முக்கியமான காரணமாக கூறிய மனித குலத்திற்கு எதிரான மிக முக்கியமான சதியை கூறினேன்.

2015ஆம் ஆண்டு கோரோனா வைரஸ்களின் பிறப்பிடத்தை அழித்துவிட்டோம் என்று நினைத்துக் கொண்டிருந்தோம் அது உண்மையும் கூட… ஆனால் அதே நாடு 2020 இல் துவங்கி செய்த மாபெரும் சதியை மிக முக்கியமான காரணமாக தாய் கணினி கருதுகிறது. அதைக் கூறுவதற்கு முன் இதை நான் கூற வேண்டும்….. அந்தக் காலகட்டத்தில் கிட்டத்தட்ட உலக மனிதர்கள் எல்லோரும் ஒரு எந்திரம் போல் வாழ்க்கையை நிலைநிறுத்திக்கொள்ள சந்ததிகளை காப்பாற்ற நடந்து கொண்டது சில பெரிய நிறுவனங்களுக்கு வாய்ப்பாக பட… சில முக்கிய சேவைகளை இணையத்தின் மூலம் அவர்கள் துவங்கினார்கள்… இது அவசரகதியில் ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.. 90% நன்மை பயக்கக் கூடிய தாக இருந்தாலும் மீதம் 10% பல இன்னல்களுக்கு அடிகோலியது. மேலும் இணையத்தின் மூலம் தேடுதலினால் மக்கள் மலிவான பொருட்களை எளிதாகவும் விரைவாகவும் பெற்றுக்கொண்டனர். இதனால் தரமான பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் பொருளாதார இழப்புகளை சந்திக்க நேர்ந்து தயாரிப்பில் இருந்தே வெளியேறினர். இந்த சந்தர்ப்பத்தை மிக நேர்த்தியாக பயன்படுத்தி அந்த நாடு மாபெரும் சதியில் இறங்கியது. அந்த நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களின் விலையை எந்த நாடும் எதிர்கொண்டு போட்டி போட முடியவில்லை. விளைவு உலகம் முழுவதும் அந்த நாட்டின் பொருட்கள் தான். இதில் என்ன சதி என்று எல்லோரும் என்னை உற்று நோக்க…. புரிந்து கொண்ட நான் மேலும் கூறினேன்… அந்த நாட்டிலிருந்து இணையத்தில் அனுப்பப்படும் பொருட்களுடன் மரபணு மாற்றப்பட்ட விதைகளும் சிறிய பொட்டலங்களில் இலவசமாக அனுப்பினர். முதலில் பயன்படுத்தாமல் விட்ட சிலரும் அந்த விதைகளை வெகு சில மாதங்களில் பரிசோதிக்க ஆரம்பித்தனர். சிறிதளவே பராமரித்தாலும் முழு அளவிற்கு அந்த விதைகள் முளைக்க எல்லோரும் விவசாயத்தில் வெற்றி கொண்டதாகவே கருதிக் கொண்டனர். ஒரு வருடத்திற்குள்ளாக இத்தகைய மரபணு மாற்றப்பட்ட செடி, கொடி மற்றும் மரங்கள், அந்தந்த இடத்தில் உள்ள பாரம்பரிய செடி கொடி மரங்களை நோய் ஊறச் செய்தன… மரபணு மாற்றப்பட்ட இந்த வகை தாவரங்கள் அதிக மகசூலை தந்ததால் மக்கள் நோயுற்ற பாரம்பரிய தாவரங்களை அழிக்க ஆரம்பித்தனர். இங்குதான் நம் உடற்கூறு நலியுற ஆரம்பித்தது என்று தாய் கணினி கருதுகிறது… இந்த பாதிப்பில் இருந்து அந்த நாடு ஒரு சில வருடங்களே தப்பித்து உலகத்தில் கோலோச்சியது.. ஆனால் அதற்கு தன்வினை தன்னைச் சுட்டது… அவர்களின் விதையே அங்கும் பரவ அவர்களால் தடுக்க இயலாமல் போய் எல்லோருக்கும் நேர்ந்த கதி அவர்களுக்கும் நேர்ந்தது. இதன்படி நாம் அவர்களின் மரபணு மாற்றும் ஆராய்ச்சியை துவக்கத்திலேயே அழிக்கவேண்டும்.

இரண்டாவது காரணமாக தாய் கணினி கருதுவது… இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் மேற்கத்திய நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்கள் மருத்துவ விஞ்ஞானிகளின் துணையோடு வளரும் நாடுகளில் வளமாக கிடைக்கும், உற்பத்தியாகும் பாரம்பரிய தானியங்களை உடலுக்குக் கேடு என்று நம்பவைத்தனர். விஞ்ஞானம் தான் கடவுளுக்கு நிகர் என்று நம்பிய அந்த காலத்து மக்கள் அதை அப்படியே நம்பி

பாரம்பரிய விவசாயத்தை கைவிட்டனர். விளைவு பத்து பதினைந்து வருடங்களுக்கு உள்ளாகவே பல வகை நோய்களுக்கு வளரும் நாடுகளின் மக்கள் அவதியுற்றனர். ஒரு சிலர் இங்கு அங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் சிறிதளவும் இதை தடுக்க முடியவில்லை.. இதுவும் காரணியாக போய்விட்டது மனிதர்களின் உடல் நலிவிற்கு.

மூன்றாவது காரணமாக தாய் கணினி கருதுவது இருபதாம் நூற்றாண்டின் எழுபதுகளில் தொடங்கி 90களில் பரவத் துவங்கி 21ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்த காணொளி விளையாட்டுகள்…. சிறு குழந்தைகள் முதல் 40 வயது வரை எல்லோரும் இதனால் பாதிக்கப்பட்டனர். மற்றவர்களை தொலைக்காட்சி தன் முன்னே கட்டிப்போட்டு உடலுக்கு தேவையான குறைந்தபட்ச உடற்பயிற்சியில் இருந்தும் மனிதர்களை விலக்கி வைத்ததும் ஒரு காரணமாக கருதுகிறது.

இந்தப் பயணத்தில் நாம் அந்த நாட்டின் மரபணு மாற்றும் ஆராய்ச்சி மட்டுமல்லாமல் குறைந்தது ஐம்பது வருடங்களாவது இதுபோன்ற சதி வேலைகளில் ஈடுபடாமல் இருக்க பொருளாதார கட்டமைப்பையே அழிக்க வேண்டும். அந்த நாட்டின் மனிதர்களுக்கு குறைந்த தொல்லைகளை மட்டுமே இது ஏற்படுத்தும். இதற்கு ஒட்டுமொத்த அரங்கமே அங்கீகாரம் வழங்கியது. அங்கீகாரம் பெற்ற மகிழ்ச்சியில் அடுத்த திட்டத்தை விளக்கத் துவங்கினேன்… இதே பயணத்தில் அந்தப் பன்னாட்டு நிறுவனங்களின் பாரம்பரிய விதைகளை அழிக்கும் மருத்துவ விஞ்ஞானிகளின் அந்தக் கூட்டமைப்பை செயலிழக்க செய்ய வேண்டும்.. இந்த திட்டத்தை செயல்படுத்த சிலரை களை எடுத்தாலே வெற்றி பெற முடியும்.. இதற்கும் நீங்களும் தாய் கணினியும் அனுமதி தரவேண்டும் என்று கேட்டேன்.

தனிமனித களையெடுப்பு என்பதால் நாளை முடிவெடுத்து சொல்வதாக எல்லோரும் கூறினர். மூன்றாவது காரணமான காணொளியில் விளையாட்டு தனிமனித சுதந்திரம் என்றும் அதில் தலையிட நமக்கு உரிமை இல்லை என்றும் கூறிவிட்டனர்.

இப்போது நேற்று இரவு தாய் கணினி எனக்கு கொடுத்த தகவல் என்னவென்று கூற வேண்டும் உங்களுக்கு….. ஏன் குமரிகண்டம் பற்றியே என் நினைவுகள் சுழன்று கொண்டிருக்கின்றன என்று நினைத்து தாய் கணனியிடம் வினவ… என் ஒரு துளி ரத்தத்தை அது நீட்டிய ஒரு கரத்தில் விடச் சொல்ல நானும் செய்ய… சில நிமிடங்களில் எனக்கு கூறிவிட்டது.

என் மகிழ்ச்சிக்கு காரணமான அந்த செய்தி ‘ஆமாம், நான் அந்தக் காலகட்டத்தின் தமிழன் மரபணுவை உடையவன் என்று என் மரபணுவின் மூலம் தாய் கணினி தெரிவித்தது. இதனால்தான் அந்த காலக்கட்டத்தில் பாரம்பரிய விதைகளை அதிகமாக இழந்த அந்த காலத்திய தமிழ்நாட்டிற்கு இந்த பாதிப்பில் இருந்து தவிர்க்க வைப்பது என் கடமையாகாவே கருதுகிறேனோ என்னவோ!?

மறுநாள் அரங்கம் கூடியது… இன்று என் பேச்சு இல்லை மாறாக அனுமதி வேண்டி நின்றேன். நீண்ட நேரம் என்னை தாமதிக்க வைக்காமல் குழு என்னிடம் அவர்களின் அனுமதியை கொடுத்தனர். அதை மேலோட்டமாக பார்க்கும்போது அந்த நாட்டின் பொருளாதாரத்தை 50… 60 வருடங்களுக்கு தலையெடுக்க முடியாமல் அழிப்பதற்கான எல்லா திட்டங்களையும் அதில் விளக்கி இருந்தனர். முடிவில் மற்ற திட்டங்களை தாய் கணனியிடம் சென்று பெற்றுக் கொள்ளுமாறு கட்டளையிட்டனர். இதோ அந்த தாய் கணினி இருக்கும் கட்டிடத்தில் இருக்கிறேன். இந்த இடத்தில் கட்டிடத்தைப் பற்றி உங்களுக்கு ஒன்று கூற வேண்டும். இந்த கட்டத்திற்குள் புவியிர்ப்பும் மற்றும் நேரமுமில்லை…. இருபதாம் நூற்றாண்டில் நம்பப்பட்ட ஒருவித உன்னத நிலை…. இதைப் பற்றி கூற இப்போது சமயமும் தேவையும் இல்லை…. ஒரு நிமிடத்திற்கு உள்ளாக தாய் கணினியின் கட்டளைகள் எனக்கு தெரிய ஆரம்பித்தது.. ஏற்கனவே குழு என்னிடம் சமர்ப்பித்த திட்டங்கள்தான் அவை…. இரண்டாவது காரணத்திற்கான திட்டத்தை எதிர்பார்த்து காத்திருந்தேன்…. ஏனெனில் தனிமனித நீக்குதல்… களை எடுத்தல் என்று வைத்துக்கொள்ளுங்கள்… எங்கள் காலத்தில் நடைபெற்றது இல்லை.. ஆகையால் என்ன கட்டளை வரப்போகிறதோ என்று காத்திருந்த வேளையில் தெரிந்தது…… மிகவும் ஆச்சரியம் அடைந்தேன், இதன்படி அது சாத்தியமா என்று சந்தேகிக்கும் படியான கட்டளை அது. ஆனால் தாய் கணினி எல்லாவித சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து எந்த முடிவையும் எடுக்கும். நீங்கள் நினைத்தது போன்று பத்து இருபது சாத்தியக்கூறுகள் அல்ல… லட்சக்கணக்கான சாத்தியக்கூறுகள்…. ஆகையினால் இந்த கட்டளையை இரண்டாவது காரணத்தை முறியடிக்க சரியானதாக தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்.

1980களில் மிக பிரம்மாண்டமாக உருவெடுக்க போகும் 2 பன்னாட்டு நிறுவனங்களின் நிறுவன தலைவர்களை சிறுவயதிலேயே குறிப்பாக சொல்லப்போனால் 15 ஆவது பிறந்த நாள் அன்று சிறு விபத்துக்குள்ளாக வேண்டும்…. இதுதான் எனக்கு இடப்பட்ட கட்டளையே…. வியப்புடன் அடுத்த பயணத்திற்கு தயாரானேன். இந்தப் பயணம் வெற்றிகரமாக முடிந்தால் மட்டுமே, என்னுடைய கனவான குமரி கண்ட பயணம் சாத்தியப்படும்.

bottom of page