top of page

காரணி பாகம்-5 By சிவா

  • melbournesivastori
  • Jul 18, 2021
  • 4 min read

பயணத்தை தொடங்க வேண்டும், ஒரு கண தயக்கம் முதலில் 1965 க்கு செல்ல வேண்டுமா இல்லை 2019 க்கு செல்ல வேண்டுமா…… தயக்கம் தான் இருந்தாலும் தாய் கணனியின் திட்டப்படி முதலில் 2019 க்கு தான் செல்ல வேண்டும். திட்டமிடல் மிக அற்புதமாக செய்யப்பட்டிருந்தது…. எங்கள் குழுவின் வேலையே திட்டத்தில் உள்ளதுபோல் நேரம் தவறாமல் சில நிமிட இடைவெளிகளில் குறிப்பிட்ட பத்து இடங்களில் தாக்குதல் நடத்த வேண்டும். அந்த நாட்டு மக்களுக்கு அன்றாட வாழ்க்கையில் இடையூறு விளைவிக்கப் போகும் எந்த ஒரு செயலையும் நாங்கள் செய்யப்போவதில்லை… இந்தத் தாக்குதலுக்கான ஒட்டுமொத்த காரணமே அவர்களின் மனித குலத்திற்கு எதிரான சதியையும் உலகத்தை ஆள நினைக்கும் சர்வாதிகாரப் போக்கையும் மட்டுப்படுத்துவதே.

இந்த இடத்தில் ஒன்றை விளக்கிச் சொல்ல வேண்டும் உங்களுக்கு.. தாக்குதல் என்றால் 20, 21ஆம் நூற்றாண்டுகளில் நடந்தது போன்றது அல்ல… குண்டுகள் வீசுவது குண்டுகளை வெடிக்க செய்வது தாக்குதல் நடந்த பிறகு போர்க்களமாக காட்சியளிப்பது அல்ல…. இருபத்தி இரண்டாம் நூற்றாண்டில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட ஹைட்ரஜன் குண்டுகளும் அல்ல… ஹைட்ரஜன் குண்டுகள் கட்டிடத்திற்கு எந்த சேதாரமும் இல்லாமல் உயிர் சேதம் மட்டுமே நிகழ்த்தும்… நாங்கள் நடத்தப்போகும் தாக்குதல் இதில் எந்த வகையைச் சேர்ந்ததும் அல்ல, எளிய தமிழில் சொல்ல வேண்டுமென்றால் ஆவி ஆக்குதல… வேப்பரைசிங் டெக்னிக் … அதாவது தாக்குதல் நடத்திய சில நிமிடங்களுக்குள் அந்த இடம் இருந்த இடமே தெரியாமல் வெற்றிடமாக காட்சி அளிக்கும். நாங்கள் குறிப்பிட்டு கொடுக்கக்கூடிய இடத்தினுடைய பரப்பளவு மட்டுமே இத்தகைய தாக்குதலுக்கு ஆளாகும். இதனால் இரண்டு வித பயன்கள் உண்டு ஒன்று அடிச்சுவடே தெரியாமல் அழிக்கப்பட்டதால் மறுபடி கட்டமைப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.. இரண்டாவது காரணம் மிக முக்கியமாக காரணம்… அந்தக் காலகட்டத்தில் இதுபோன்று சுவடே தெரியாமல் அழிக்கும்போது இத்தகைய தொழில்நுட்பத்தை அறியாத அக்காலத்திய அரசாங்கம் ஒருவித அச்ச நிலைக்குத் தள்ளப்படும்.. கிருமிகளை போன்று முகமே தெரியாத எங்களைக் கண்டு மிரண்டு நடந்தவற்றை புரிந்துகொள்ளவே பல ஆண்டுகள் ஆகும்… இந்தக் கால அவகாசம் போதும் மற்ற நாடுகளுக்கு சமநிலை அடைய. எங்கள் நோக்கம் மற்ற நாடுகளை சமநிலை அடை வைப்பது இல்லை… முக்கிய குறிக்கோளே பிற்கால சந்ததியினருக்கு உடல் கூற்றின் மரபணுவை சிதைக்காமல் காப்பாற்றுவதே.

பொர்ட்டலில் இருந்து வெளியே வந்து தரை இறங்கினோம்… தரை என்பது தவறு.. அந்த நாட்டின் பொருளாதார தலைநகரில் இருக்கும் பங்குச்சந்தை இடம்பெற்றிருக்கும் 62 மாடி கட்டிடத்தின் மொட்டை மாடியில் இறங்கினோம்.. நாங்கள் தேர்ந்தெடுத்த இந்த நாள் அந்த நாட்டின் மிக முக்கியமான தேசிய விடுமுறை நாள்…. இந்நாளில் நாங்கள் தாக்க போகும் பத்து இடத்திலும் மனித நடமாட்டமே இருக்காது… மேலும் இந்நாள் அந்நாட்டின் கலாச்சாரத்தோடு பிணைக்கப்பட்டு இருப்பதால் சுற்றுலா தளங்கள் கூட மூடப்பட்டிருக்கும். நாங்கள் தேர்ந்தெடுத்த இடங்கள் நான் இப்போது இருக்கும் இந்த கட்டிடம், தலை நகரில் இருக்கும் மரபணு மாற்று ஆராய்ச்சிக் கூடத்தின் தலைமையகம், நாட்டின் மிக முக்கியமான சுற்றுலாத்தலம், கிட்டத்தட்ட 40 சதவிகித மக்களுக்கு சென்றடையக் கூடிய மின்சார தயாரிப்பு நிலையம், நாட்டின் மிகப்பெரிய ராணுவ தொழிற்சாலை, நாட்டின் முக்கிய தகவல் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் தலைமையகம்…. இதுபோன்ற முக்கியமான இடங்கள்….இதிலிருந்தே புரிந்து கொண்டிருப்பீர்கள் இவை எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து விட்டால் அரசாங்கம் இந்தக் குழப்ப நிலையிலிருந்து மீண்டு வர அரை நூற்றாண்டுகளாவது ஆகும் எங்கள் கணக்குப்படி… இந்நாடு மற்ற நாடுகளில் போல் வெளிப்படையாக இல்லாமல் இருப்பது எங்களுக்கு மிகவும் எளிதாக இருக்கும்.. இங்கு தொடங்கும் பீதி பல வருடங்களுக்காவது மற்றைய நாடுகளுக்கு பரவுவது தவிர்க்கப்படும். எங்களுக்கு இடப்பட்ட மிக முக்கியமான கட்டளை எக்காரணத்தை முன்னிட்டும் நீர்நிலைகளை தவிர்க்க வேண்டும் என்று… மின்சாரம் இல்லாமலும் அந்தப் பகுதி மக்களால் வாழ்க்கையை தொடர முடியும்…. அரசாங்கத்திற்கு தான் பெரிய தடுமாற்றம் ஏற்படும். இந்த இடத்தின் மேலும் ஒன்றைக் கூற வேண்டும் உங்களுக்கு, நாங்கள் பயணம் செய்வது பறக்கும் தட்டு போன்ற ஊர்தி அல்ல… இது ஒரு போர்டல் டிவைஸ்… அதாவது ஒரு இடத்தின் வடக்கத்திய தெற்கத்திய ரேகைகள் கூடுமிடம் செலுத்தி விட்டால் போதும் அந்த இடத்திற்கு நிமிடத்திற்குள் சென்றடைவோம்… விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு புள்ளியில் இருந்து மற்றொரு புள்ளிக்கு நாங்கள் பயணம் செய்ய தேவையில்லை…. ஒரு புள்ளியில் மறைந்து மறு புள்ளியில் தோன்றுவோம்.

திட்டமிட்டபடி குறிப்பிட்ட நேரத்தை நெருங்கினோம்… சிறிதும் தாமதிக்காமல் அடுத்தடுத்து பத்து இடங்களிலும் தாக்குதல் நடத்தினோம்.

தாக்குதல் முடிந்த நிமிடத்திலேயே எங்கள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.. இந்த மகிழ்ச்சி எல்லையற்ற மகிழ்ச்சி.. இந்தப் பிரபஞ்சத்தில் இதுவரை நாங்களும் எங்கள் மக்களும் பெற்றிராத மகிழ்ச்சி…. என்ன கூறுவது என்றே தெரியவில்லை…. புரியவில்லையா உங்களுக்கு… சொல்கிறேன். தாய் கணனி கருதிய முதல் காரணம் முழு காரணமாகியது… கிட்டத்தட்ட 21ஆம் நூற்றாண்டு மனிதர்களின் உடல்வாகு எங்களுக்கு வந்துவிட்டது.. இருப்பினும் முழு வலிமையில் நாங்கள் இல்லை என்பதை புரிந்து கொண்டோம்…. ஆனால் இப்போது எங்கள் நம்பிக்கை பல நூறு மடங்கு, இல்லை இல்லை… பல ஆயிரம் மடங்கு பெருகியது, நம்பிக்கையின் உச்சத்தில் இருந்தோம்.

இப்பொழுது முழு நம்பிக்கையுடன் 1965 க்கு புறப்பட தயாரானோம்.

1965 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ளுடைய லாங் பீச்சை அடைந்தோம். எங்களின் நேரம் மற்றும் குறியீட்டின் படியே நடு இரவில் வந்தடைந்தோம். எதிரே இருப்பது ஒரு நடுத்தர வர்க்கத்தினருடைய சாதாரண வீடு.. நாளை பிறந்தநாள் கொண்டாட போகும் இந்த வீட்டில் உள்ள சிறுவன் தான் வருங்காலத்தில் அரை நூற்றாண்டை கடந்து உலகை ஆட்டிப்படைக்க போகிறான்… பிரச்சினை அவன் பொருள் சேர்க்கப் போவதில் அல்ல…. எப்படி சேர்க்க போகிறான் என்பதில்… கிட்டத்தட்ட உலகின் முக்கால் பங்கு ஜனத்தொகை ஒரு விதத்திலாவது இவனால் பாதிக்கப்பட்ட போகிறார்கள். வருங்காலத்தில் இவனால் மக்கள் பாரம்பரியமாக உண்ட உணவை பயத்துடன் பார்க்கப் போகிறார்கள்.

பொழுதும் புலர்ந்தது… அன்று பிறந்தநாள் கொண்டாடப் போகும் மகிழ்ச்சியில் அன்றைய தினசரியை பொறுக்க வெளியே ஓடி வந்தான்.. எங்கள் திட்டப்படி அவன் காலை தட்டிவிட அவன் தலை எதிரே இருந்த அஞ்சல் பெட்டியில் மோத சிறிய விபத்து ஆனாலும் அவன் மனோநிலை முற்றிலுமாக மாறப்போகிறது…. இனிய ஆக்ரோஷ மனநிலை அவனிடம் இருக்கப்போவதில்லை.. இனி அவனால் உலகிற்கு பாதகமில்லை.

அடுத்த பயணத்திற்கு தயாரானோம்… வருடம் 1973 அமெரிக்காவின் வர்ஜீனியா பீச். ஒரு சிறுவனின் வீட்டருகில் விடியற்க்காலை இறங்கினோம். அந்த சிறுவனின் 13வது பிறந்தநாள் அன்று… ஏன் இவனுக்கு மட்டும் தாய் கணினி பதின்மூன்றாவது பிறந்தநாளை தேர்ந்தெடுத்தது என்று புரியவில்லை… அதன் கணக்கு சரியாகத்தான் இருக்கும். எங்களுக்கு இடப்பட்ட கட்டளை பெரிதாக ஏதுமில்லை, இன்று அந்த சிறுவன் குடும்பத்தாருடன் படகு சவாரி செய்யப்போகிறான்… குறிப்பிட்ட நேரத்தில் அந்தப் படகை திசைதிருப்ப வேண்டும். அவ்வளவுதான். இதனால் அந்த சிறுவனுக்கோ அல்லது அந்த குடும்பத்தாருக்கோ உயிர் பாதிப்பில்லை என்பது மட்டும் தெரியும். எப்படி இந்த விபத்தினால் வரலாறு மாறப்போகிறது என்பது எங்களுக்கு தெரியாது… தாய் கணினியின் மாடலிங் அது.. அந்த நேரமும் வந்தது.. அவர்கள் பேச்சிலிருந்து தெரிந்தது படகு சவாரி முடித்ததும் அருகிலுள்ள உணவகத்திற்கு செல்லப் போகிறார்கள் என்று.. திட்டமிட்டபடியே படகை திசைதிருப்ப அது சிறு விபத்துக்குள்ளாகி எல்லோரும் தண்ணீரில் முழுக பிறகு தட்டுத்தடுமாறி கரை சேர்ந்தனர். எங்கள் மூவருக்கும் உடல் முழு வலிமை பெற்றது போன்ற ஒரு உணர்வு.. ஆமாம் உடல் வலிமையில் ஒரு வித்தியாசம் தெரிந்தது.. தாய் கணனியின் கணிப்பு மிக நேர்த்தியாக இருந்தது தெரியவந்தது… புறப்பட தயாராக இருக்கும்போதுதான் ஒரு வித ஆவலில்…தவறாக இருப்பினும்… முழு உடல் திறன் பெற்ற மகிழ்ச்சியில் மறுநாள் இந்த குடும்பத்தார் எப்படி இருக்கப் போகிறார்கள் என்று பார்க்கத் தோன்றியது.. மறுநாள்….. தாய் கணனியின் கணிப்பு எங்களுக்கு புரிந்தது…. என்ன அற்புதமான கணிப்பு… வேறொன்றுமில்லை அவர்கள் செல்லவிருந்த உணவகத்திற்கு எதிரே இருந்த லாட்டரி கடையில் விற்ற லாட்டரியில் தான் அன்றைய அமெரிக்காவின் மிகப்பெரிய பரிசு விழுந்திருந்தது! படகு விபத்து நடக்காமல் இருந்திருந்தால் அவர்கள் அந்த லாட்டரியை வென்று இருப்பார்கள் வருங்காலத்தையே மாற்றி இருப்பார்கள் என்று புரிந்து கொண்டோம்.

எங்கள் காலத்திற்கு செல்ல தயாரானோம். இந்த இடத்தில் மிக முக்கியமான ஒன்றை உங்களுக்கு கூற வேண்டும்.. அதாவது இந்தப் பயணத்தில் வரும்போது மிக மெல்லிய உடல் கூறு பெற்று இருந்த நாங்கள் இப்போது 21ம் நூற்றாண்டு காலகட்டத்தில் உள்ள மனிதர்களைப் போன்ற உடலைப் பெற்றது எங்கள் மூவருக்கும் மட்டும்தான் தெரியும். நாங்கள் எங்கள் காலத்திற்கு செல்லும்போது அவர்கள் முன்பு உடல் குன்றி இருந்ததோ அதை சரி செய்ய நாங்கள் இரு பயணங்கள் மேற்கொண்டதோ அவர்களுக்கு தெரியாது. அவர்கள் எல்லோரையும் போல இந்த மூன்றாயிரம் வருடங்களாக இயற்கையாகவே இத்தகைய உடல் கூற்றினை பெற்றிருப்பர். விஞ்ஞானத்தின் வினோதம் இது. இவ்வளவு வினோதங்களை நடத்திய எங்களுக்கும் இந்த காலக்கட்டத்திலும் ஆன்மாவின் அற்புதங்களை முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. நாங்கள் திரும்பிச் செல்லும்போது இந்த எங்கள் பயணத்தை எங்கள் காலத்தில் உள்ளோர் புரிந்துகொள்ள தாய் கணினி இருக்கும் கட்டிடத்திற்குள் உள்ள ஒரு பெட்டகத்தை திறந்து பார்க்கும்போது தெரிந்து கொள்வார்கள், முன்பே உங்களுக்கு கூறியிருக்கிறேன் அந்தத்தாய் கணினி இருக்கும் கட்டிடம் நேரம்; புவியீர்ப்பு; அண்டவெளிக்கு உட்படாதது …. அப்போது தான் புரியும் உயர்மட்ட குழுவிற்கு நாங்கள் ஏன் பயணம் செய்தோம் என்று.

நான் அடுத்த பயணத்திற்கு திட்டம் வகுக்க தயாரானேன்…. வேறென்ன குமரி கண்டத்திற்கு பயணம்… ஓரளவிற்கு பயணத்தையும் திட்டமிட்டு விட்டேன்…. இன்றைய கணக்குப்படி திருவள்ளுவர் என்ற பெரும் சித்தர் பிறப்பதற்கு 10600 வருடங்களுக்கு முன்பு செல்ல போகிறேன்.. எங்களின் கணக்குப்படி 10200 ஆம் ஆண்டு அதாவது நாங்கள் செல்ல போகிற 10600 ஆண்டுக்கு 400 வருடங்களுக்குப் பிறகு பூமியையே புரட்டிப்போட்ட பெருவெள்ளம் நிகழப்போகிறது…

bottom of page