கற்பித்த அறிவியல் கைமண்ணளவு!
- melbournesivastori
- Oct 16, 2021
- 8 min read

ராபர்ட் தாமஸ் பிகிலோ அமெரிக்க கோடீஸ்வர தொழிலதிபர். பணத்திற்கு குறைவில்லை இருந்தும் மற்ற பணக்காரர்கள் போல் இவர் இல்லை….
பட்ஜெட் சூட்ஸ் அமெரிக்கா எனும் ஹோட்டல் சங்கிலியின் சொந்தக்காரர் மற்றும் பிகிலோ ஏரோஸ்பேஸ் நிறுவனர் மற்றும் சொந்தக்காரர் இவைகளைத் தவிர்த்து அறிவியல் முன்னேற்றத்திற்கு ஒரு அறக்கட்டளை போன்றும் நடத்துகிறார்.. இவைகள் எல்லாம் இருந்தும் மனம் எதையோ தேட யூ எஃப் ஓ ஆராய்ச்சிக்கு தன்னால் முடிந்த பண உதவியும் ஊக்குவிப்பும் தருகிறார். என்னடா இவர் பணத்தை வைத்துக்கொண்டு அனுபவிப்போம் என்று இல்லாமல் இதையெல்லாம் போட்டு குழப்பிக் கொள்கிறாரே என்று நினைத்தால்…. அவர் இதோடு நிற்கவில்லை… ஆழ்மனத்தின் பிரபஞ்ச தொடர்பு பற்றி ஆராய பெரும் நேரத்தையும் பொருளையும் செலவிடுகிறார்.
மற்றுமொரு கோடீஸ்வரர் பிராண்டன் பியூகள், இவரின் முக்கிய தொழில் ரியல் எஸ்டேட்.. அது ஆடம் ஆன்ட்டியம் ரியல் எஸ்டேட் எனும் பெயர் கொண்டது. மிகப் பெரும் புள்ளி…

இவருடைய அறிவியல் ஆலோசகர்கள் திரு ராபர்ட் பிகிலோவை 2016 ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்துகின்றனர்.
ஸ்கின் வாக்கர் ரான்ச் ( பண்ணை) எனும் இடம் அமெரிக்காவில் இல்லையில்லை உலகத்திலேயே மிகவும் அறிவியலுக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள் நடக்கும் இடம்.
சுமார் 512 ஏக்கர் பரப்பளவு உடையது. அது, இது தான் என்று இல்லை எல்லாவித வினோதங்களும் நடைபெறுவதாக பேச்சுக்கள் அடிபட்டன. எந்தவித வினோத நிகழ்வுகளும் ரசிக்கும்படியாக இல்லை மாறாக திகிலூட்டும் படியாக இருந்தது… இந்த கதைகளை / உண்மை செய்திகளை இன்று நேற்றல்ல பல நூற்றாண்டுகளாக பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வருவதாக பேச்சு வழி செய்திகள் உலாவின …. 100 வருடத்திற்கான பதிவான சான்றுகளும் உள்ளன. அங்கு வசித்த பழங்குடிகளே இந்தப் பெயரை வைத்திருந்தனர்… மேலும் ஏலியன்களின் நடமாட்டம் இருப்பதாகவும் பிக் புட் எனும் அதிஉயர மனிதர்கள் நடமாட்டம் இருப்பதாகவும் இது போதாதென்று ஷேப் ஷிப்ட்ர்ஸ் எனும் தோன்றி மறையும் அல்லது வேறு உருவம் எடுக்கும் அருவங்களை பற்றியும் மிகத் தீவிரமான செய்திகள் பரவியிருந்தது. இவையெல்லாம் காலம்காலமாக இருந்த செய்தி… தெரியாத செய்தி பின்னால் தெரிய வந்தது என்னவென்றால் அந்த பண்ணையின் சொந்தக்காரர் திரு ராபர்ட் பிகிலோ என்பது… 1990 களில் வாங்கியிருக்கிறார் ஏப்ரல் 2016 ஆம் ஆண்டு திரு பிரண்டன் அவர்களுக்கு விற்கத்தான் அந்த சந்திப்பு… முதலில் அவ்வளவாக பிடிப்பில்லாமல் இருந்த ப்ரண்டனுக்கு ராபர்ட் தெரிவித்த செய்திகள்.. விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்ட செய்திகளை அவ்வளவாக நம்பாத அவைகளை சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் ப்ரண்டனுக்கு அந்த பண்ணையை வாங்கினால்தான் என்ன என்று தோன்றியது…

ராபர்ட் பிகிலோ வெளியில் தெரிவிக்கக் கூடாது என்று ஒளிவு மறைவு இல்லாமல் கூறியது, 2008ல் இருந்து 2013 வரை ஐந்து வருட காலங்கள் உலகின் சக்திவாய்ந்த பென்டகனின் விஞ்ஞான ஆராய்ச்சிக்கு அந்தப்பண்ணை உட்படுத்தப்பட்டது என்றும் அதில் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்கள் அமெரிக்க நாட்டு இரகசியக் காப்பில் அடங்கிய தகவல்கள் என்று கூறினார்.

ஒருவழியாக பிரண்டன் முடிவெடுத்து
அந்தப் பண்ணையை பார்க்க மிகத் திறமை வாய்ந்த ராணுவ பயிற்சி எடுத்துள்ள பாதுகாவலர்கள் சூழ எலிகாப்டரில் பயணம் செய்து அந்த இடத்தை அடைந்தார். இறங்குவதற்கு முன் கண்ட காட்சிகள் சில உருவங்கள் நிலப்பரப்பில் தெரிய…. சில உருவங்கள் பாறைகளில் வரையப்பட்டிருக்க…..இறங்குவதற்கு சற்று முன் கண்ட காட்சி ஒருவித பய உணர்வு ஊட்டும் படியாக இருந்தது… அது வேலிகளில் விலங்குகளின் பாகங்கள் தொங்கவிடப்பட்டிருந்தது.. விசாரித்ததில் சுற்றியிருக்கும் பழங்குடிகள் அந்தப் பண்ணையில் இருந்து எந்தவித பாதிப்பும் வெளிய வர விடாமல் தடுக்கவே அப்படி செய்திருந்தனர் என்று. மேலும் அந்த பழங்குடிகளிடம் அந்தப் பண்ணையை பார்க்கவே கூடாது என்ற அறிவுரையும் பன்னெடுங்காலமாக இருப்பது தெரிந்து… விசாரித்ததில் அந்த பண்ணையைப் பார்த்தாலே எல்லா வித கெட்ட நிகழ்ச்சிகளும் அப்போதிலிருந்தே தொடங்கும் மற்றும் பார்த்தவர்கள் எங்கு சென்றாலும் தொடரும் என்றும் நம்பப்பட்டது…. இது திகிலுக்கு தீப்பந்தம் பிடித்தது.
பிராண்டன் அந்தப் பண்ணையை சுற்றி பார்த்தபின் முடிவு செய்து வாங்கியும் விட்டார். பண்ணைக்கு வரும் சாலை மட்டுமே இவர்களுக்கு சொந்தம்… சுற்றியுள்ள எல்லா நிலங்களும் பழங்குடிகளுக்கு சொந்தம். சுமார் ஆறு மாத காலங்கள் எந்த ஒரு நிகழ்ச்சியும் பெரிதாக நடைபெறவில்லை.. ஆறு மாதங்கள் கழித்து ஒரு நாள் ஒரு முக்கியமான நபர் அந்தப் பண்ணையை பார்க்க விரும்பியதால் சில நண்பர்களுடன் அங்கே சென்றார். சாதாரணமாக தொடங்கிய அந்த பார்வையிடல் மதிய நேரத்தை சிறிது கடந்தவுடன் யாரும் எதிர்பார்க்காத நிலையில் திடீரென்று சுமார் 100 மீட்டர் தொலைவில் 50 மீட்டர் உயரத்தில் 40 மீட்டர் விட்டமுள்ள சில்வர் கலரில் ஒரு பறக்கும் தட்டு தோன்றியது…… மிகவும் அதிர்ச்சியில் எல்லோரும் அதைப் பார்க்க ஒரு நண்பர் மட்டும் உடனடியாக மொபைல் போனில் அந்தக் காட்சியை படம் பிடிக்க எடுத்தால் சார்ஜ் முழுவதுமாக இறங்கி விட்டிருந்தது தெரிந்தது .. பறக்கும் தட்டு மறைவதற்குள் எப்படியாவது படம் பிடித்து விட வேண்டும் என்ற அவசரத்தில் மற்றவர்கள் அவரவர்கள் போனை பார்க்க எல்லோருடைய மொபைல் போன்களும் ஜார்ஜ் இறங்கி விட்டிருக்கிறது…. ஆச்சரியமா, அதிர்ச்சியா, பீதியா என்ற எந்த மனநிலைக்கும் ஒத்துவரும் அந்த நிகழ்வு சுமார் 20 நொடிகளே நிலைத்து கண்ணிமைக்கும் நேரத்தில் கண்ணெதிரே மறைந்தது.. மிகவும் குழம்பிய மனநிலையில் எல்லோரும் அன்றைய பார்வையிடலை முடித்துக்கொண்டு நகரத்துக்கு திரும்பினர்…. இந்த நிகழ்வின் செய்தியை அவர்களின் ஒருவர்கூட யாரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை…. மனநிலைக் கோளாறு என்று நினைத்து விடுவார்களோ என்று. அதன் பிறகு அவ்வப்போது பிரண்டன் தன்னுடைய அறிவியல் ஆலோசகர்களுடன் பண்ணைக்கு சென்று ஆராய்ச்சி செய்து வந்தார். இது அது என்று இல்லாமல் பலவித மர்மங்கள் ஒரு முடிவுக்கு வர முடியாமல் தொடர்ந்தது.
இப்படியாக 2 வருடங்கள் கடந்தது… அந்த சமயத்தில் பிரபலமான ஹிஸ்டரி சேனல் பல வழிகளில் பிரண்டனை தொடர்புகொண்டு அந்தப் பண்ணையின் மர்மங்களை படம்பிடிக்க அனுமதி கேட்டனர்… தொடர்ந்து அந்த அழைப்புகளை தவிர்த்து வந்த பிரண்டன் ஒருவழியாக மூன்று விதிகளுடன் சம்மதித்தார். முதலாவது எல்லா நிகழ்வுகளும் ஒலி ஒளியாக பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் முற்றிலும் உண்மை தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்றும், இரண்டாவதாக படப்பிடிப்புக்கு ஹாலிவுட் குழு எதுவும் வரக்கூடாது என்றும் தன்னுடைய குழுவே எல்லாவித படப்பிடிப்புகளை நடத்தும் என்றும், மூன்றாவதாக எந்தக் காரணத்தை முன்னிட்டும் தான் தான் அந்தப் பண்ணையின் சொந்தக்காரர் என்று தெரியக்கூடாது என்றும் நிர்ப்பந்தித்தார். முதல் இரண்டு விதிகளுக்கு சம்மதித்த ஹிஸ்டரி சேனல் மூன்றாவதற்கு சம்மதிக்கவில்லை.. யார் அந்த நிலத்திற்கு அந்தப் பண்ணைக்கு சொந்தக்காரர் என்று அறிவிக்க வில்லை என்றால் அந்த சீரியல் முழுவதற்குமே நம்பகத்தன்மை போய்விடும் என்றும் அதற்காக அவர் தன்னை வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்திக் கொண்டே ஆக வேண்டும் என்றும் கூறினர். மிகத் தீவிர ஆலோசனைக்குப் பிறகு பிரண்டன் அதற்கு ஒத்துக்கொண்டார்.
ஹிஸ்டரி சேனலின் ஜோ குழு 4மாத இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நடத்தியது. இதில் முக்கியமாக பங்கேற்றவர்கள் பிரண்டனின் குழு. அவர்களின் பெயர்கள் நான் இங்கு பகிர போவதற்கு தேவை இல்லாத ஒன்று… இருப்பினும் அதில் மிக முக்கியமானவர் டிரவிஸ் டைலர் இவர் ஒரு விஞ்ஞானி அஸ்றோபிசிக்ஸ் அண்ட் ராக்கெட் சயின்ஸ் இரண்டிலும் முனைவர் பட்டம் பெற்றவர்… பென்டகன் நாசா இரண்டு நிறுவனங்களிலும் பலகாலம் வேலை செய்தவர். ஐ செக்யூரிட்டி கிளியரன்ஸ் உடையவர்.

டிராவிஸ் ஒரு விஞ்ஞானி என்பதால் இந்த அபூர்வ புதிரான விஷயங்களில் சிறிதும் நம்பிக்கை இல்லாதவர்…. நம்பிக்கை இல்லாமல்தான் இந்த ஆராய்ச்சிகளைத் துவங்கினார். அந்தப் பண்ணையை கவனித்துக் கொள்ளும் தாமஸ் என்பவர் டிராவிஸிடம் முதன்முதலில் பேசும்போது அந்தப் பண்ணையை ஒரு உயிராகவே கருதி பேசியது மிகுந்த வியப்பில் ஆழ்த்தியது… போக போகத்தான் தெரிந்தது அதன் பொருள். டிராவிஸ் இந்த பண்ணையை பற்றி படித்தது கேள்விப்பட்டது பார்த்தது எல்லாம் நகைப்புக்கு இடமாக தெரிந்தது… அவைகளை சிறிதும் நம்பவில்லை. அந்தப் பண்ணையை அடைந்து முகாமிட்டு எல்லோரும் ஒன்றாக அமர்ந்து திட்டமிடத் தொடங்கி அரை மணி நேரத்திற்குள்ளாகவே எலக்ட்ரோ மேக்னடிக் மாயாஜாலங்கள் டிராவிஸை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எலக்ட்ரோ மேக்னடிக் கண்டறியும் கருவியின் முட்கள் தாறுமாறாக காண்பித்தது. நம்பிக்கை இல்லாத டிராவிஸிற்கு பண்ணை வரவேற்பு கொடுத்ததாகவே தாமஸ் நம்பினார். சில நாட்களிலேயே காமா ரேஸ் பாதிப்பினால் இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க வேண்டியதாக போய்விட்டது இத்தனைக்கும் எந்தவித ரேடியேஷனும் அந்தப்பகுதியில் எந்தவித கருவியிலும் கண்டுபிடிக்க முடியவில்லை … இது அந்தப் பண்ணையின் மீது மிகுந்த ஆர்வத்தையும் புதிரை விடுவிக்க உத்வேகத்தையும் தந்தது. அவர் கடைசியாக இரு பகுதிகள் படப்பிடிப்பு முடிந்தவுடன் கூறியது மற்றவர்கள் வாழ்நாளில் பார்க்கும் அல்லது அனுபவ படும் UFO & UAP களின் அனுபவம் தனக்கு சில வாரங்களிலேயே கிடைத்துவிட்டதாக கூறியதுதான்.
பண்ணை முழுவதிலும் கேமராக்கள் மற்றும் எல்லாவித அளவிடல் கருவிகளும் பொருத்தப்பட்டன… எந்த விதமான நிகழ்வையும் பதிவு செய்யாமல் விட்டு விடக் கூடாது என்ற கருத்து மொத்த குழுவிடம் இருந்தது. ஒரு முறை காமிராக்கள் எல்லாம் கண்காணித்துக் கொண்டிருக்கும் போதே சாதாரணமாக மேய்ந்து கொண்டிருந்த ஒரு பசு திடீரென்று சுருண்டு விழுந்ததும் அதே சமயத்தில் ஒரு UAP தோன்றி மறைந்ததும் வியப்பில் அதிர்ச்சியில் ஆழ்த்த.. மொத்தக் குழுவும் அந்த பசுவின் அருகில் சென்று பார்க்க பசு இறந்து கிடந்தது.. இது விஞ்ஞானிகளுக்கு பெரும் சவாலாகவே பட அந்தப் பசுவை உடற்கூறு ஆய்வுக்கு இரு வேறு இடங்களுக்கு அனுப்பியும் இறந்ததற்கான காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை.. மொத்த முடிவுகளுமே மிகவும் நல்ல உடல்நிலையில் இருந்ததாகவே கூறின. இது நடந்த சில வாரங்கள் கழித்து காலை பண்ணையை சுற்றி பார்க்கும் போது மற்றுமொரு மாடு ஒரு சிறு ரத்தத் துளியும் இல்லாமல் பல உறுப்புக்கள் காணாமல் போயிருந்தது.. வேறு இடத்தில் ஒரு நாய் கார்ட்போர்டு போன்று தட்டையாக ஒரு ரோடுரோலரில் நசுங்கியது போன்று இருந்தது…அங்கு நடந்த நிகழ்வுகள் புதிருக்கு புதிராக சவாலுக்கு சவால் விடும் அளவிற்கு இருந்தது.
‘ஹிட்ச் ஐகர் நிகழ்வு’ மற்றும் ஒரு புதிர்.. பண்ணையில் இருக்கும் போது ஏற்படும் வினோத நிகழ்ச்சி சிலருக்கு அவர்கள் வீட்டுக்குச் சென்றாலும் தொடர்வது விவரிக்க இயலாமல் இருந்தது… அதைப் பற்றி பேசவோ விவரிக்கவோ எல்லோரும் பயந்தனர்… பேசினாலே தமக்கும் நிகழ்ந்து விடுமோ என்ற பயம் தான் அதற்கு காரணம்.
டிராவிஸ் விவரித்த மற்றும் ஒரு வினோத நிகழ்வு…. ஒரு முறை மிகப் புதிதான ஒரு காரில் பண்ணைக்குள் நுழைந்தவுடனேயே திடீரென்று ஒட்டுமொத்த கருவிகளும் செயலிழந்து போனதும் ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு தானாகவே எல்லாக் கருவிகளும் உயிர் பெற்றதும் எல்லா விளக்குகளும் அணைந்து எரிந்து அணைந்ததும் காரில் இருந்தவர்களுக்கு பேயறைந்தது போல் இருந்தது ( கிளோஸ் என்கவுன்டர்ஸ் ஆஃ த திர்ட் கயின்ட் திரைப்படத்தில் வருவது போன்றே )
மற்றுமொருமுறை ஒரு ஞாயிற்றுக்கிழமை டிராவிஸ் மற்றும் சிலர் செக்யூரிட்டி கேமரா மானிடர்களில் பண்ணையில் வினோதமாக ஒரு நிகழ்வை காண அதை பண்ணைக்குள் இருந்தவர்களுக்கு இவர்கள் வாக்கி டாக்கியில் கூற மேலும் ஒரு அதிர்ச்சி…. அங்கிருந்தவர்களுக்கு அது நடப்பது தெரியவில்லை.

ஒரு முறை எல்லோரும் தங்கியிருந்த அறைக்கு வெளியே நின்று பேசிக் கொண்டிருக்க தலைமை பாதுகாவலர் மொபைல் போன் அலற எடுத்துப் பார்க்கும்போது தானாகவே அந்த போன் இயங்க ஆரம்பித்து FF பட்டனை அழுத்தியது போல் மெசேஜ் மற்றும் வீடியோக்கள் மாறி மாறி ஓட திடீரென்று நின்றுவிட்டு 911( நம்ம ஊர் 100) க்கு தானாக போன் செய்தது… எல்லோரையும் அதிர்ச்சியின் எல்லைக்கு செல்ல வைத்தது. இது எதனால் நிகழ்ந்தது என்று அங்கு இருந்த நிபுணர்களே யூகிக்க முடியவில்லை..
பலமுறை பலர் அனுபவப்பட்டது காதருகே யாரோ பேசியது போன்றது.. ஆனால் அருகில் இருந்தவர்களுக்கு அது கேட்கவில்லை… சிலமுறை பலருக்கு எங்கிருந்தோ மனதிற்குள் யாரோ தொடர்பு கொள்வது புரிந்தது…
எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு முறை எல்லோருடைய கருவிகளும் தாறுமாறாக காண்பிக்க வானத்தில் ஸ்டார் கேட்டில் வருவது போன்று ஒரு பெரிய வெளிச்சம் தோன்றி சில நொடிகளில் மறைய.. எல்லோரும் அது ஒரு போர்ட்டல் திறந்து மூடியது என்ற முடிவுக்கு வந்தனர்.
இத்தகைய வினோத நிகழ்வுகளை எவ்வளவோ கூறிக்கொண்டே போகலாம்….. உங்களுக்கு விருப்பம் இருக்கும் பட்சத்தில் நிறைய புத்தகங்கள், காணொளிகள், பேட்டிகள் இந்த பண்ணையை பற்றி வந்துள்ளது அதை படித்துப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இங்கு மிக முக்கியமான ஒன்றை நாம் கவனிக்க வேண்டும்…. டெலிபதி நம் சித்தர்களாலும் முனிவர்களாலும் அதிகமாக பயன்படுத்தப்பட்டதை இலக்கியங்கள் மூலம் படித்திருக்கிறோம்… ஆனால் அதை உணர்வுபூர்வமாக உணர உபயோகிக்க முடியாமல் இருப்பது நமது தவறே… இதை நான் சொல்வதற்கு காரணம் உண்டு. பறவைகளை விலங்குகளை கண்காணிப்போர் ஒன்றை கவனிக்க தவறி இருப்பார்கள்… அவைகள் அதிகம் பேசுவதில்லை ஆனாலும் ஒருவித ஒருமித்த நடவடிக்கைகள் ஒரே சமயத்தில் மேற்கொள்ளும், இதை சற்று நேரம் சிந்தித்துப் பாருங்கள்… ஒன்றுடன் ஒன்று பேசிக்கொள்வதில்லை ஆனாலும் எண்ண பரிமாற்றங்கள் நன்றாகவே நடைபெறுவது தெரியவரும். அது வேறொன்றுமில்லை டெலிபதியே… நமக்கும் அந்த சக்தி இருக்கிறது அதை பயன்படுத்தாமலேயே ஆயிரக்கணக்கான வருடங்களாக இயற்கையிலிருந்து வெகுதூரம் வந்துவிட்டோம்… ஆனால் பறவைகளும் விலங்குகளும் நமது பெயரளவில் உள்ள நாகரிக வளர்ச்சியில் ஈடுபடாமல் இயற்கையோடு ஒன்றி இருப்பதாலேயே இன்னும் அவைகளால் அந்த சக்தியை பயன்படுத்த முடிகிறது. அந்த சக்தியின் சிறிதளவை செல்ல பிராணிகளை வளர்ப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும்… அதாவது நீங்கள் வளர்க்கும் மாடோ, நாயோ, பூனையோ, பறவையோ பலமுறை உங்களுக்கு என்ன உணர்த்த வருகிறது என்று உங்களால் புரிந்து கொள்ள முடியும். அது டெலிபதியின் மாதிரியே! இப்போது உங்களுக்குப் புரியும் நாம் கற்ற, தெரிந்த, புரிந்த அறிவியலுக்கு அப்பாற்பட்ட எவ்வளவு வினோத நிகழ்வுகள் நம்மைச் சுற்றி நடைபெறுகிறது என்று… என்னதான் முயன்றாலும் நமக்கு இருக்கும் அறிவியலின் அறிவை வைத்து இவற்றுக்கு விளக்கம் காண முடியாது.
அமெரிக்க அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட மற்றுமொரு வினோத நிகழ்வு இதை உறுதிப்படுத்தும்…..
அவ்வப்போது விண்வெளியில் தென்படும் UAP ( Unidentified Aerial Phenomena ) களை பற்றி ஆராய அமெரிக்க அரசாங்கம் பிளாக் பட்ஜெட் எனும் கணக்கில் வராத, கணக்கில் காட்ட முடியாத, பட்ஜெட்டில் காண்பிக்காத பெரும் தொகையை ஒதுக்கியது ஒதுக்கி கொண்டும் இருக்கிறது… அதன் முக்கிய குறிக்கோளே இவைகள் என்ன எப்படி இயக்கப்படுகின்றது என்பதை கண்டுபிடிக்க தான். இதில் இவைகள் என்ன என்பது இன்றுவரை கேள்விக்குறியே… எப்படி இயங்குகிறது என்பதனை ஐந்தாகப் பிரித்து ஆராய்கின்றனர்…
அதில் முதலாவது கணநேரத்தில் எடுக்கும் வேகம் ஒரு புள்ளியில் இருந்து மறு புள்ளிக்கு கண்ணிமைக்கும் நேரத்தில் செல்லுதல் மேலும் அதே வேகத்தில் பல கோணங்களில் திசை மாறுதல் இதை விரிவாகப் பார்ப்போம்…
மனிதர்கள் அதிகபட்சமாக 9 ஜி போர்ஸ் ( 1 G போர்ஸ் என்பது 35 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் போது உணரப்படும் சக்தி… நீங்கள் காரில் செல்வதாக வைத்துக் கொண்டால் 9 G அதிகப்பட்சமாக 315 கிலோ மீட்டர் வேகம் ) தாங்க முடியும் அது அதிகரிக்கும் பட்சத்தில் இல்லை இதே 9 ஜி யில் சிறிது நேரம் இருக்கும் பட்சத்தில் உடல்நிலையில் பல கோளாறுகள் ஏற்படும் உடனடியாக மயக்கமும் ஏற்படும்… இதை ஒப்பிட்டுப் பார்க்கலாம் F 16 ஏரோபிளேன்கள் 17 ஜி வரை தாங்கும்… அதற்கு மேல் போகும் பட்சத்தில் உடனடியாக சிதறும் வாய்ப்புண்டு. இந்த இடத்தில் UAP யை ஒப்பிட்டால் அவைகள் 600 G யை எளிதாக கடக்கின்றன..
இரண்டாவது, ஹைபர்சானிக் வெலாசிட்டி.. விளக்கமாக கூற வேண்டுமென்றால் இதை விமானங்களில் அடையமுடியாது ஆனால் ஏவுகணைகள் ராக்கெட் போன்றவற்றால் அடைய முடியும். இப்போது உலகத்தில் உள்ள விமானங்களில் மிக அதிகபட்ச வேகம் SR 71 பிளாக் பேர்டினால் சுமார் 3200 கிலோமீட்டர் வரை செல்ல முடியும். ஆனால் அது உடனடியாக ஒரு குறிப்பிட்ட கோணத்தில் திரும்ப முடியாது மாறாக பெரிய வளைவு எடுத்துத்தான் திரும்ப முடியும்… இதைப் புரிந்துகொள்ள முடியும் என்று நினைக்கிறேன். இந்த இடத்தில் UAP சுமார் 14,000 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் சென்றாலும் எந்த ஒரு கோணத்திலும் மேலும் கீழுமகவும் கணநேரத்தில் திரும்ப மற்றும் செல்ல முடிகிறது. இது ரேடார்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மூன்றாவது, கண்காணிப்புக்கு கிட்டாமல் பறப்பது… அதுபோன்று இப்போது உலகத்தில் இருப்பது B2 பாமர் ஸ்டெல்த் விமானங்கள் மட்டுமே.. அதுவே கோடான கோடிகள் செலவு செய்து உருவாக்கப்பட்ட தொழில்நுட்பமாக இருந்தாலும் ரேடாரில் கிட்டுகிறது. ஆனால் UAP யோ ரேடாரில் ஒரு நொடியில் தெரிந்தும் மறு நொடியில் மறைகிறது…
நான்காவது, டிரான்ஸ் மீடியம் ட்ராவல்.
அதாவது விமானங்கள் பறக்க ரெக்கைகள் இருக்கவேண்டும் சில ஏற்ற இறக்கங்களுக்கு தொழில்நுட்பங்களும் வேண்டும் ப்ரொபேலர்கள் வேண்டும் வால் வேண்டும் ஜெட் என்ஜின் வேண்டும் … இவ்வாறு இருக்கும் போது தான் விமானத்தால் வளைய மேலெழும்ப கீழே இறங்க முடியும். இந்த சமயத்தில் ராக்கெட்டை நினைத்துப்பாருங்கள் அவைகளுக்கு ரெக்கைகள் இல்லை.. அதனால் ஒரு திசையை நோக்கி மட்டுமே பயணம் செய்ய முடியும். இந்த சமயத்தில் UAP யை ஒப்பிட்டுப் பார்க்கலாம்…. அவைகளுக்கு இறக்கைகள் இல்லை ப்ரோப்பலர் இல்லை ஒரு வினோத நிகழ்வில் காணப்பட்டதில் ( அதைப் பற்றி பின்னால் கூறுகிறேன்) வெளிப்படையான ஜன்னல்கள் கூட இல்லை…. இருப்பினும் அது எல்லா கோணத்திலும் திரும்பவும் மேலும் கீழும் பறக்கவும் முடிகிறது. அதுமட்டுமில்லாமல் மனித தொழில்நுட்பத்தால் தண்ணீரில், தண்ணீருக்குள், வான்வெளியில் செலுத்த பறக்க சில சக்திகளை இழக்காமல் சில மாற்றங்களை செய்யாமல் இதுவரை எந்த ஊர்தியும் உருவாக்க முடியவில்லை… ஆனால் இவை அனைத்தையும் UAP செய்தது.
ஐந்தாவது, எதிர் புவியீர்ப்பு விசை.
அதாவது புவியீர்ப்பு விசையை கடந்துதான் எல்லா பயணமும் ஏற்பட முடியும். சில உதாரணங்களை கூறுகிறேன்… பெரிய பலூன்களில் பயணம்… அதிலுள்ள காற்றின் அடர்த்தி வெளியில் உள்ள காற்றின் அடர்த்தியை விட குறைவாக இருப்பதால் தான் அதனால் மேலே செல்ல முடிகிறது. ராக்கெடில் மிகப்பிரம்மாண்டமான அதன் இன்ஜின் எரிபொருளை எரித்து கீழ்நோக்கி செலுத்துவதால் ராக்கெட் மேல் நோக்கிச் செல்கிறது. விமானங்களிளோ என்ஜினின் வேகம் மற்றும் சில தொழில்நுட்பங்கள் அதை மேலே செலுத்துகிறது… இவை வேறு ஏதும் இல்லாமலேயே UAP இவைகளையெல்லாம் கடந்து எதிர் புவியீர்ப்பு விசையை எளிதாக கடந்து பறக்கிறது.
ஓரளவிற்கு புரிய ஒப்பிடல் போதும் என்று நினைக்கிறேன்…
நம்பர் 14, 2004 மிக முக்கியமான நிகழ்வு மேலுள்ள எல்லாவற்றையும் ஒருங்கே நிகழ்த்தியது.. இது இந்த அறிவியல் பகுதியில் அதிக ஈடுபாடு உள்ளவர்களுக்கு மிகப் பிரபலமான டிக் டேக் நிகழ்வுதான் அது. 2004 கலிபோர்னியா கடற்கரை பகுதியில் போர் ஒத்திகைக்காக இருந்த நிமிட்ஸ் கடற்படை கப்பலில் இருந்த வீரர்களால் சந்திக்க நேர்ந்து 17 வருடங்கள் கழித்து வெளிவந்த செய்தி அது. அரசல்புரசலாக 2016 & 17 வருடங்களில் வெளிவந்த செய்தி தான் அது… அமெரிக்க அரசாங்கமே இந்த வருட ஜூலை மாதம் அந்த நிகழ்வை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது அது இந்த வட்டத்தில் உள்ளளோருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இளைஞர்கள் வட்டத்தில் மிகவும் விரும்பி வாய் துர்நாற்றத்தைப் போக்க எடுத்துக்கொள்ளும் டிக் டேக் வடிவத்தில் இருந்த ஒரு UAP அந்தக் கப்பலில் இருந்த எல்லோருக்கும் கண்ணாமூச்சி விளையாட்டை காட்டியது.. ஒருசமயம் எதிரே தெரிந்த அதை நோக்கி சென்ற இரு விமானப்படை விமானங்களையும் எதிர்பார்த்து காத்திருந்தது போல் காத்திருந்து சட்டென்று மறைந்தது…

மற்றுமொருமுறை கடல் தண்ணீருக்கு சற்று மேலே காற்றில் மிதந்தவாறு இருக்க அதை நோக்கி விமானப்படை விமானம் செல்ல அதற்கு ஈடு கொடுக்கும் வகையிலேயே சிறிது நேரம் விளையாட்டு கட்டிவிட்டு மின்னல் வேகத்தில் ( மனித அறிவிற்கு எட்டாத சுமார் 18 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் ) சென்று மறைந்தது.
கண்ணுக்குத் தெரிந்த வரை ரெக்கை யோ, வாலோ, என்ஜின்களோ, ஜன்னல்களோ ஏதுமில்லாமல் அது இருந்து இத்தனையும் செய்து பறந்தது நமக்குத் தெரிந்த, புரிந்த அறிவியலையே கேலிக்கூத்தாக்கி விட்டது. இதுவரை நாம் நினைத்து வந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் ஒளியின் வேகமே இறுதி என்னும் விதியும் ஹப்புல் டெலஸ்கோப் சென்ற மாதம் கண்ட காட்சி காற்றில் பறந்து விட்டது.
கற்பித்த அறிவியல் கைமண்ணளவு
கல்லாத அறிவியல் உலகளவு!



