top of page

கலியுகம் By சிவா

  • melbournesivastori
  • Dec 12, 2020
  • 2 min read

முகுந்தன் மிகவும் பக்தி உடையவர், ஒரு ஆன்மீகவாதி…. ஆஸ்திரேலியாவில் மெல்போர்னில் உள்ள மொனாஷ் ஹாஸ்பிடலில் டாக்டராக வேலை செய்கிறார். என்னதான் பக்தி இருந்தாலும் சித்த மருத்துவத்திலோ, ஆயுர்வேத மருத்துவத்திலோ நம்பிக்கை கொண்டவர் இல்லை… அலோபதியால் மட்டுமே எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும் என்று ஆணித்தரமாக நம்பினார். இந்தக் covid 19 காலத்தில் தினமும் சுமார் 15 மணி நேரம் வரை வேலை செய்தார்.. தினம் தினம் நிறைய நோயாளிகள் வருவதைக் கண்டு மனம் வெதும்பினார்; கலங்கினார். தடுப்பு மருந்து இல்லாததால் அவரால் முடிந்தவரை எல்லாவித ட்ரீட்மண்டையும் கொடுத்தார். அன்று இரவு ஹாஸ்பிடலில் இருந்து திரும்பியவுடன் குளித்துவிட்டு பசியின்மையால் அப்படியே உறங்க துவங்கினார். காலை மணி 7 ஆகியும் எழுந்து வராததால் அவர் மனைவி வந்து எழுப்பினார்…. முகுந்தனை தொட்டவுடன் துடித்துப் போய்விட்டார்…. தீ போன்று ஜுரம் அடித்தது. உடனடியாக அவரை எழுப்பி அவசர பரிசோதனைக்கு அழைத்துச் சென்றார். அவருக்கே தெரிந்தது… அனேகமாக இது Covid 19 ஆகத்தான் இருக்கம் என்று. டெஸ்ட் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து ஓய்வு எடுக்க ஆரம்பித்தார். டெஸ்ட் ரிசல்ட் நெகட்டிவ்வாக வரும் பட்சத்திலேயே அவரால் மறுபடியும் வேலைக்கு செல்ல முடியும். ஹெல்த் செக்டாரில் வேலை செய்வதால் மறுநாளே முடிவு வந்தது, அவரால் ஏற்கனவே ஊகிக்க முடிந்தது தான் ரிசல்ட் பாசிட்டிவ். அவர் மனைவி கலங்கினார், அவருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை… கடைசி அறையில் தனிமைப்படுத்திக் கொள்ள போவதாக கூறிவிட்டு முகுந்தன் கடைசி அறைக்கு சென்றார். கொஞ்சம் மூச்சு திணறல் ஏற்பட்டு சரியாக தூக்கம் வராமல் நெடுநேரம் விழித்துக்கொண்டிருந்தார். எப்போது தூங்கினாரோ அவருக்கே தெரியாது…… திடீரென்று யாரோ அவரை எழுப்பியது போன்ற உணர்வு… கண்திறந்து பார்த்தார், அருகில் ஒரு பெரியவர் நின்று கொண்டிருந்தார்… முகுந்தனுக்கு எங்கு இருக்கிறோம் என்றே தெரியவில்லை இருப்பினும் அவரை கவனித்தார், அந்தப் பெரியவர் மெதுவாக முகுந்தா எதற்கும் கவலைப்படாதே உனக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை… நீ செய்ய வேண்டியதெல்லாம் இந்தப் பொருளை மூன்று பாகம் இந்தப் பொருளை இரண்டு பாகம் இந்த பொருளை ஒரு பாகம் எடுத்துக்கொண்டு சரியாக பொடி செய்து தேனில் கலந்து வைத்துக்கொள். நீ காலை எழுந்தவுடன் மூன்று வேளை இந்த மருந்தை வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் எடுத்துக்கொள், மற்றபடி ஓரிரு நாட்களிலேயே நீ குணம் அடைந்து விடுவாய் என்று கூறி மறைந்தார். முகுந்தன் காலையில் எழுந்தார், அவரால் கண்ட கனவை மறக்க முடியவில்லை… என்னதான் நடக்கப்போகிறது பார்க்கலாம் என்று அதே விகிதாசாரத்தில் அந்த மருந்தை தயார்படுத்தி முதல் வேலை சாப்பிட்டார். இரு நாட்கள் சென்றது, விஷ ஜுரம் இருந்ததற்கான அறிகுறியே இல்லை… இதை அவராலேயே நம்ப முடியவில்லை. உடனடியாக மறு பரிசோதனைக்கு சென்றார், முடிவும் வந்தது….. ஆச்சரியம் டெஸ்ட் ரிசல்ட் நெகட்டிவ். நடந்ததை மனைவியிடம் கூறினார் அதற்கு மனைவி, ‘ஒரு டாக்டர் போல பேசுங்கள், வெளியே யாராவது கேட்டால் பைத்தியக்காரத்தனமாக நினைக்க போகிறார்கள், முன்பு எடுத்த டெஸ்ட் தப்பாக போக வாய்ப்பு இருக்கிறது, வெறும் ஜுரம் ஆக இருந்திருக்கக்கூடும்’ என்றார். முகுந்தனால் கட்டுப்படுத்த முடியவில்லை… அந்த விகிதாச்சாரத்தை வாட்ஸப்பில் போட்டார். 18 பேர் உள்ள வீட்டு குழுவில் 3 லைக்குகள் வந்தன, நண்பர்கள் குழுவில் பொதுவாக ஏன் முகுந்தன் இந்தப் பைத்தியக்கார வேலை உங்களுக்கு…. வாட்ஸ் அப்பில் இதுபோல ஆயிரக்கணக்கில் உள்ளது என்றனர். முகுந்தனுக்கு தோன்றியது… கிருஷ்ணன் சொன்ன கலியுகம் இதுதானோ?

தொடர்புக்கு @ melbournesivastories@gmail.com

bottom of page