top of page

செல்வாக்கு By சிவா

  • melbournesivastori
  • Jun 19, 2021
  • 3 min read

ரூப் சந்தருக்கு சிறுவயதிலிருந்தே பெருமை… அப்பாவை காண நிறைய பேர் அடிக்கடி வந்து செல்கின்றனர் என்றும் … தனக்கும் எங்கு சென்றாலும் மரியாதை கொடுக்கின்றனர் என்றும்.

தர்மலிங்கத்தின் செல்வாக்கு அப்படி, எங்கு சென்றாலும் விஐபி ட்ரீட்மென்ட் தான்.

தர்மலிங்கத்தின் மனைவி மங்கையர்க்கரசி எப்போதுமே அதிகார தோரணையுடனே இருப்பார்…. வீட்டில் வேலை செய்பவர்களிடம் மட்டுமில்லாமல் கணவனைக்காண வருபவர்கள் இடமும் வேலை வாங்குவார். அவர் கொடுத்த & சொன்ன வேலைகளை இதுவரை யாரும் தட்டியதே இல்லை. தர்மலிங்கத்திற்கு பணம் வரவு குறைவில்லாமல் இருப்பதாலோ என்னவோ மகனுக்கு ரூப் சந்தர் என்று பெயரிட்டுள்ளார்… ரூப் என்பதற்கு அர்த்தம் தெரியாமல் ரூபாவை நினைத்தோ என்னவோ!

அரசியல்வாதிகளுக்கு அரசாங்கம் இருந்தால் மட்டுமே அதிகாரம் ஆனால் தர்மலிங்கத்தைப் பொருத்தவரை என்றுமே அதிகாரம் மற்றும் செல்வாக்கு.

மகனின் தொந்தரவு தாங்காமல் ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் குட்டியை வாங்கி தந்தார். ரூப் அதற்கு ஜாலியாக ‘ஜாலி’ என்று பெயர் வைத்து செல்லமாக வளர்க்க ஆரம்பித்தான். அவன் வளர்த்தது பகுதி நேரம் தான்… மற்ற நேரங்களில் தர்மலிங்கத்தை பார்க்க வருவோர் வளர்த்தனர்.

ஒருமுறை தருமலிங்கம் தனது மனைவி மகனுடன் தங்கை மகள் திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு வெளியூர் செல்ல வேண்டி இருந்தது. ஜாலிக்காக மிக பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்து விட்டுச் சென்றார்.

அந்தப் பகுதியில் டிரைவிங் ஸ்கூல் நடத்தும் இருவர் அந்த மூன்று நாட்களுக்கும் அங்கேயே படுக்க வேண்டும் என்கிற ஏற்பாடு. மறந்துவிட்டேன் உங்களுக்குச் சொல்ல டிரைவிங் ஸ்கூல் நடத்துபவர்கள் ஏன் அங்கு வந்து படுக்க வேண்டும் என்று உங்களுக்கு தோன்றுவது புரிகிறது… தர்மலிங்கம் RTO, அதனால் தான் இவ்வளவு செல்வாக்கு இவ்வளவு பணப்புழக்கம். தர்மலிங்கத்தின் தங்கை மகள் திருமணம் நடக்கும் ஊருக்கு சென்றவுடனேயே ஒரு டிரைவிங் ஸ்கூல் நடத்துபவர் போன் செய்தார்… ஜாலி சோகமாக இருப்பதாகவும் என்ன செய்வது என்று புரியவில்லை என்றும்…. இதைக்கேட்ட மங்கையர்க்கரசியும் குரூப் சந்தரும் பதறிப்போய் தர்மலிங்கத்தை பார்த்து முறைக்க… அந்தப் பதற்றம் அவரையும் தொற்றிக்கொள்ள உடனேயே தனக்குத் தெரிந்த விலங்கியல் மருத்துவர் வெங்கடேசனை அழைத்து தன்னுடைய பதற்றத்தை தெரிவிக்க…. வெங்கடேசனோ தர்மலிங்கத்திடம் கவலைப்பட வேண்டாம் என்னுடைய கம்பவுண்டர் ஜெகனை அனுப்புகிறேன்… ஜெகன் நீங்கள் வரும் வரை ஜாலி உடனிருந்து கவனித்துக் கொள்வான் என்றும் உறுதி அளித்தார்.

திருமணம் முடித்து ஊர் வந்து சேர்ந்தார். ஜெகனிடம் ஜாலி நன்றாக இருந்ததால், தர்மலிங்கம் எப்போது ஊருக்குச் சென்றாலும் ஜெகனை பார்த்துக்கொள்ள வெங்கடேசனை அணுகுவார். ஒரு நான்கு வருடம் எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது…. அன்று ஒரு சனிக்கிழமை எல்லோரும் குடும்பத்துடன் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்க ஜாலி கதவை திறந்து கொண்டு வெளியே சென்றதை யாரும் கவனிக்கவில்லை….. விதி என்பது நமக்கு மட்டும் இல்லை அந்த நாய்க்கும் தான். கிரிக்கெட் சத்தத்தையும் மீறி ஜாலியின் ஆக்ரோஷ குரல் கேட்டு மூவரும் வெளியே சென்று பார்த்து அதிர்ச்சியுற்றனர். ஜாலி ஒரு நாகப் பாம்பிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தது… தர்மலிங்கம் ‘ஜாலி கமான்’ என்று கத்தியதை கேட்டு ஜாலி திரும்பியது தான்….. அந்த ஒரு சில நொடிகளில் அந்த நாகப்பாம்பு சீற்றத்துடன் ஜாலியை கொத்த… ஜாலி துடிக்க ஆரம்பித்தது.. தர்மலிங்கம் பாம்பை துரத்த அது புதருக்குள் ஓடி சென்று மறைந்தது. அதற்குள் மங்கையர்க்கரசி வெங்கடேசனுக்கு போன் செய்ய.. இருப்பினும் எந்தவித பலனும் இல்லாமல் போய்விட்டது..

ஜாலி இறந்துவிட்டான். ரூப்சந்தர் கதறி அழுதது மங்கையர்க்கரசியையும் தர்ம லிங்கத்தையும் மனசு உடைந்து போக வைத்தது.

விஷயத்தைக் கேள்விப்பட்டு தர்மலிங்கத்திடம் சலுகைகள் பெற்றோர் பெற்றுக்கொண்டிருபோர் காத்திருப்போர் எல்லோரும் வந்து சேர்ந்தனர்…. எங்கும் சோகம். மாலை ஆகிவிட்டதால் மறுநாள் காலை அடக்கம் செய்யலாம் என்று முடிவெடுத்து எல்லோரும் கலைந்து சென்றனர். மறுநாள் காலை, யாரும் எதிர்பாரா வண்ணம் எங்கு பார்த்தாலும் ஜாலி இறந்த செய்தியை தாங்கி நிற்கும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள்… ஜாலி யின் இறுதி ஊர்வலம் நடந்தேறியது.. நூற்றுக்கணக்கானோர் பங்குபெற்றனர். அன்றிரவே துணுக்கு செய்தியாக இரு தொலைக்காட்சிகளும் காண்பித்தன. மறுநாள் நகரத்தின் 4 பத்திரிகைகளும் இந்த செய்தியை வெளியிட்டது.

இவை நடந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டது.. ஜாலியின் சோகத்தால் வேறு நாயை வளர்க்க வில்லை. ரூப்பிற்கு மட்டும் அந்த சோகம் தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தது, தர்மலிங்கம் தன் காரியத்தில் கண்ணாய் இருந்து சேர்க்கவேண்டியதை சேர்த்துக் கொண்டே இருந்தார்.

அன்றொருநாள் அலுவலகத்திற்கு கிளம்ப இருந்த தர்மலிங்கம் மயங்கி கீழே விழ, மங்கையர்க்கரசி ஆம்புலன்சுக்கு போன் செய்ய… இதோ 5 நாட்கள் கடந்து விட்டது மருத்துவமனையில் சேர்த்து, நான்கு நாட்கள் சுமாராகத்தான் இருந்தார்… பார்வையாளர்கள் வந்தது வந்தபடியே இருந்தனர்… ஆனால் இன்று காலை உடல் நிலை மோசமாக ICU விற்கு எடுத்துச் செல்லப்பட்டார்.. தர்மலிங்கத்தின் மனைவி மகனை தவிர மேலும் ஒரு பத்து பேர் குடும்பத்தில் ஒருவரை பறிகொடுத்தது போல் மொத்த சோகத்தையும் முகத்தில் தேக்கி அமைதியாக நின்றனர். இதே மோசமான உடல்நிலையில் மேலும் இரு நாட்கள் ICU வில் இருக்க.. அந்த 10 பேரும் இல்லாமல் போக மனைவியும் மகனும் மட்டுமே இருந்தனர். மங்கையர்க்கரசி தெரிந்தவர்களுக்கு எல்லாம் போன் செய்து உதவிக்கு அழைக்கலாம் என்று போன் செய்ய… தன்னுடைய செல்லா இல்லை அவர்களுடைய செல்லா பழுதாகி உள்ளது என்ற சந்தேகத்துக்கு இடம் அளிப்பது போல் யாரும் அவருடைய அழைப்பை ஏற்காமல் ரிங் போய்க்கொண்டே இருந்தது. செய்வதறியாமல் மங்கையற்கரசி நின்றுகொண்டிருக்க, ஒரு நர்ஸ் ஓடிவந்து தர்மலிங்கம் இறந்துவிட்டார் என்ற செய்தியை கூற பதறிப்போனார். ரூப்பின் கல்லூரி நண்பர்கள் மூன்று பேர் மட்டுமே உதவிக்கு வந்தனர். ஒரு வழியாக உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.

மறுநாள் இறுதி ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யக்கூட ஒரு உறவினர் வர காத்திருக்க வேண்டியதாகி விட்டது.

மறுநாள் இறுதி ஊர்வலத்தில் 25 முதல் 30 வரை உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர், பேருக்குக் கூட ஒரு நண்பரும் இல்லை.

அதிகாரத்தாலும் பணபலத்தாலும் பெறப்படும் செல்வாக்கு ஒரு செல்லாக்காசு என்று அப்போதுதான் புரிந்தது ரூப்சந்தருக்கு. மரணம் எல்லோருக்கும் நிச்சயம் என்றாலும் யாரும் அதைப் பற்றி நினைப்பதே இல்லை…. அதேபோன்ற புரிதல்தான் இதுவும்.

bottom of page