top of page

சகிப்புத்தன்மை By சிவா

  • melbournesivastori
  • Dec 12, 2020
  • 2 min read

பொதுவாக தனக்கு பிடிக்கவில்லை என்றாலும் கண்டும் காணாமல் இருப்பது என்பதைத்தான் சகிப்புத்தன்மை என்போம். இன்னொரு வகையையும் நாம் சகிப்புத்தன்மை என்றுதான் கூற வேண்டும் எதை என்றால், தனக்கு பிடிக்கவில்லை என்றாலோ; பிடிக்காதது நடந்தாலோ விலகிச் சென்று விடுவது. வாட்ஸப் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், மியூட் அண்ட் எக்ஸிட்! கடந்த மூன்று வருடங்களாக ஐந்து பேர் நம்ம ஊரில் இருந்து என்னுடன் வேலை செய்ய புதிதாக சேர்ந்தனர். நான் தமிழ்நாட்டில் வாழ்ந்ததை விட வெளிநாட்டில் வாழ்ந்தது அதிக காலம்… நான் இதை ஏன் சொல்ல வருகிறேன் என்று பிறகு சொல்கிறேன்… புதிதாக சேர்ந்த ஐந்து பேரும் தென் மாநிலத்தவர் அல்ல… இனி நான் சொல்லப் போகும் விஷயத்திற்கும் தற்போது தமிழ்நாட்டில் நடக்கும் விஷயத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை… நான் கூறப்போவது எல்லாம் எனக்கு நடந்த சம்பவங்களை…. 5 பேரில் 4 பேர் என்னிடம் கேட்டது, ‘ஏன் உனக்கு ஹிந்தி தெரியவில்லை’ என்று.. ஐந்தாவது நபர் பெங்காலி அவர் என்னிடம் எதுவும் கேட்கவில்லை. சடாரென்று எனக்கு கோபம் வந்தது என்னவோ உண்மைதான்… ஆனால் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு, நிதானமாக சொன்னேன்… ‘எனக்கு வாய்ப்பில்லை’ என்று.. அவர்கள் விடவில்லை… ‘வாய்ப்பு இருந்தால் கற்றுக்கொண்டு இருப்பீர்களா?’ என்று கேட்டார்கள். நான் ‘எனக்குத் தெரியாது…. தேவையும் இல்லை’ என்றேன். அவர்கள் கிட்டத்தட்ட சண்டைக்கு வருவது போல்… தேசிய மொழியே உங்களுக்கு தெரியவில்லை என்றார்கள்… நான் பொறுமையாக கூறினேன்… ஹிந்தி நமது தேசிய மொழி அல்ல என்று… அவர்கள் என்னை பைத்தியக்காரனைப் போல் பார்த்தார்கள். மேலும் நான் கூறினேன், நான் தமிழகத்தில் இருந்ததைவிட இங்கு அதிக காலங்கள் இருக்கிறேன்… உலக மொழி ஆங்கிலம் எனக்கு தெரியும் அது போதும் என்று.. மதிய உணவு நேரம் முடிந்துவிட்டது எல்லோரும் சென்று விட்டோம். நான் கூறிய தேசிய மொழி பற்றிய நகலை எடுத்து அவர்கள் நான்கு பேருக்கும் அனுப்பினேன். அதில் ஒருவர் மட்டும் சிறிது சமாதானம் அடைந்தார். அடுத்து சில மாதங்கள் அந்த மூன்று பேருமே என்னை எதிரியைப் போல் பார்த்தார்கள். எனக்கு அவர்கள் புரிதலில் தான் தவறு உள்ளது என்று தெரியும்… நான் பெரிதுபடுத்தவில்லை. நான் பல வருடங்களாக அந்த கார்ப்பரேட் ஆபீஸில் வேலை செய்கிறேன்… கொஞ்சம் கொஞ்சமாக என்னை புரிந்து கொள்ள ஆரம்பித்தார்கள். என்னுடைய டைரக்டர் எனக்கு மிகவும் பிடித்தமானவர், நன்றாக பழகக்கூடியவர். அவருடைய கேபினும் என்னுடைய இருக்கையும் நேரெதிரில்… அவர் ஒரு நாள் என்னிடம் கேட்டார், ஏன் நாம் எல்லோரும் ஒரு இந்தியன் ரெஸ்டாரன்ட் போகக்கூடாது என்று… நானும் உடனே அதற்கென்ன வரும் வெள்ளிக்கிழமை செல்லலாம் உங்களுக்கு நேரம் இருக்கும் என்றால் என்றேன். அவரும் சம்மதிக்க, நான் மற்றும் அந்த 5 பேரும் தயாரானோம். அந்த நாளும் வந்தது. இந்த மதிய உணவை ஏற்பாடு செய்யும் பொறுப்பு என்னிடம் விடப்பட்டதால், சென்னையில் இருந்து வந்து ஆரம்பித்த ஒருவர் ரெஸ்டாரண்டுக்கு சென்றோம். ஏற்கனவே போனின் மூலம் pre-order செய்துவிட்டேன். எல்லோரும் அமர்ந்தோம்… மெல்லிய தமிழ் பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்தது. என்னுடைய டைரக்டர் கேட்டார், ‘துரதிருஷ்டவசமாக நான் இந்தப் பாடல்களை ரசிக்க முடியவில்லை நீங்கள் எல்லோரும் ரசிப்பீர்கள் என்று நினைக்கிறேன்..’ என்றார். தொல்லை தொடங்கப் போகிறது என்று தெரிந்து கொண்டேன். அதற்கு மூன்று பேர் ஒரே குரலில் சொன்னார்கள்… ‘இது எந்த மொழி என்றே எங்களுக்கு தெரியாது’ என்று. உடனே நான் இது என்னுடைய தாய்மொழி தமிழ் என்றேன்.. மேலும் அவர் இந்தியாவில் எல்லோருக்கும் தெரிந்த மொழியை ஏதாவது உள்ளதா என்று கேட்டார். அவர்கள் மூவரும் உடனே ஹிந்தி என்று சொன்னார்கள். எனக்கு எந்தவிதமான வருத்தமும் இல்லை… இருப்பினும் மெதுவான குரலில் சொன்னேன், எங்களுக்கு ஹிந்தி தெரியாது என்று. அந்த மூவரும் அவர்களுக்குத் தெரிந்த மனக்குறையை சொல்ல, டைரக்டர் என்னை பார்க்க, நான் கூற ஆரம்பித்தேன். இந்தியா பல மொழிகள் பேசும் பல மாநிலங்களை சேர்ந்த ஒரு நாடு.. பொதுவாக ஒரு மொழி என்று எந்த மொழியையும் கூறமுடியாது என்றேன். அதற்கு அவர்கள், தென்னிந்தியர்கள் தான் ஹிந்தி மொழியை கற்க மறுக்கிறார்கள்.. என்றனர். நான் தொடர்ந்து கூற ஆரம்பித்தேன் டைரக்டரை பார்த்து… ஈரோப்பை எடுத்துக்கொள்ளுங்கள், அது ஒரே நாடாக அமையும் பட்சத்தில் ஏதாவது ஒரு நாடு அவர்கள் மொழியை மற்றவர்கள் மீது திணித்தால் ஏற்றுக்கொள்வார்களா என்று கேட்டேன், அதற்கு அவர்.. ‘இட் வில் டெஸ்ட் தேர் நர்வ்’ என்றார். அதேதான் இந்தியாவிற்கும் பொருந்தும் என்றேன். ஓ, நவ் ஐ அன்டர்ஸ்டேன்ட்… எனி வே இங்கிலீஷ் இஸ் ஆல் ஓவர் யுவர் கண்ட்ரி என்றார். மற்ற ஐந்து பேருக்கும் இது புரிந்தது அவர்கள் முகத்திலிருந்து தெரிந்தது!

தொடர்புக்கு @ melbournesivastories@gmail.com

bottom of page