top of page

ஜென்மம்! By சிவா.

  • melbournesivastori
  • Aug 11, 2022
  • 7 min read

காட்சி ஒன்று.

வேல் தொழிற்கூடங்களின் நிறுவனர் சிவலிங்கம் தனது அலுவலக அறையில் அமர்ந்து கொண்டு எதிரே இருந்த ஒரு புகைப்படத்தை பார்த்து வருத்தத்துடன் ஒரு பெருமூச்சு விட்டார்… பிறகு புகைப்படத்தை தொடர்ந்து வெறித்து பார்த்துக் கொண்டே இருந்தார். அந்த புகைப்படத்திலிருந்த முகம் எனக்கு எங்கேயோ பார்த்த முகமாக தெரிந்தது.. புகைப்படத்தை வெறித்துப் பார்த்த சிவலிங்கம் தனது மேஜையின் கீழ்புற ட்ராவரை திறந்தார்.. திறந்து அதிலிருந்த பிரெஞ்சு பிராண்டி பிராடினட் பாட்டிலை திறந்து ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி குடிக்க துவங்கினார்…. அவரைப் பார்க்கும்போது ஏற்கனவே நிறைய குடித்தது போன்று தான் தோன்றியது… கைகளில் அந்த கண்ணாடி குவலையை பிடிப்பதே தடுமாற்றமாக இருந்தது… எந்த சமயத்தில் விழுந்து விடுமோ எனும் அளவிற்கு குடித்திருந்தார். சிறிது குடித்தவுடன் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தார்… மறுபடி புகைப்படத்தை பார்த்தார்.. கிட்டத்தட்ட இது போலவே தொடர்ந்து நடக்க ஆரம்பித்தது…

முருகர் கோயில் தெருவில் இருந்த அதே சிவலிங்கத்தின் வீடு …. அதே போன்று ஒரு புகைப்படம் மாட்டி இருந்தது. அதற்கு சற்று தள்ளி தாழ்வார திண்ணையில் அமர்ந்து கொண்டு சிவலிங்கத்தின் மனைவி பார்வதி கோபமா, வெறுப்பா, அழுகையா இல்லை இவைகள் எல்லாம் கலந்த ஒரு உணர்ச்சியா என்று தெரியாமல் நாம் குழம்பும் அளவிற்கு சிவலிங்கத்தை மனதார கருவிக் கொண்டிருந்தார்.

அவரை தாண்டி மூன்றாவது படுக்கை அறைக்குள் சென்றால் சிவலிங்கம் பார்வதியின் மகள் காஞ்சனா குப்புற படுத்துக்கொண்டு அழுது கொண்டிருந்தாள்…

வீடு முழுவதுமே சோகத்தின் வெளிப்பாடாக இருந்தது…

இரவு 8 மணிக்கு மேலாகியும் சிவலிங்கம் வராததால் சிறிதே பயம் படற பார்வதி பக்கத்து வீட்டு பையன் மனோவை சிவலிங்கத்தை பார்த்து வர அனுப்பினார். மனோ கிளம்ப தயாராக இருந்த அதே நேரத்தில்.. தனது காரில் வராமல் ஆட்டோவில் வந்து இறங்கிய சிவலிங்கம் இறங்க தடுமாற மனோ தாங்கி பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான்.

உள்ளே வந்ததும் வராததுமாக சிவலிங்கத்தை நோக்கி பார்வதியின் அர்ச்சனை துவங்கியது…

‘ குடித்தால் நடந்ததெல்லாம் சரியாகிவிடுமா? எல்லாம் உங்களால்தான்.. படித்துப் படித்து சொன்னேன்.. கேட்டீங்களா? இப்போ அநியாயமா போய் சேர்ந்துவிட்டான்.. நான் எதைக் குடித்து இதை ஆற்றிக் கொள்வேன்?’

சிவலிங்கம் இதைக் கேட்கும் நிலைமையில் இல்லை… படுக்கையறைக்கு சென்று படுக்கையில் சாய்ந்தார்… இருந்தும் பார்வதி விடுவதாக இல்லை தொடர் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டே இருந்தது.. பார்வதியின் நெஞ்சில் நீர் வற்ற தூற்றிக்கொண்டே தூக்கத்தை தழுவினார்.

காலை ஆறு மணி இருக்கும்… வீட்டில் வேலை செய்யும் பெண்மணி மல்லிகாம்மா வந்து ‘ என்ன பார்வதி அக்கா இங்கேயே தூங்கி விட்டு இருக்கீங்க?’ என்று கூறி எழுப்பும்போது தான் தெரிந்தது கோபத்தில் அங்கேயே உறங்கி விட்டிருந்தது…… ஆமாம் மல்லிகா அசதியா இருந்தது அப்படியே தூங்கி விட்டேன்…. உள்ளே போய் பாரு அவர் எழுந்துவிட்டாரா என்று…. மல்லிகாம்மா உள்ளே சென்று பார்த்து இன்னும் எழுந்திருக்கலைக்கா அசந்து தூங்கிக் கொண்டிருக்கிறார் போல் தெரிகிறது…

சரி விடு இன்னும் சிறிது நேரத்தில் நானே சென்று பார்க்கிறேன் என்று கூறிய பார்வதி காலை கடன்களை முடித்துவிட்டு அரை மணி நேரம் கழித்து சிவலிங்கத்தை எழுப்பச் சென்றார்…

‘காஞ்சனா மல்லிகா எல்லாரும் வாங்களேன்…. அப்பா நம்மளை எல்லாம் விட்டு போயிட்டாரும்மா’ என்று பீறிட்டு வந்த அழுகையை அடக்க முடியாமல் பார்வதி அம்மாள் அழுதார்..

மல்லிகா உள்ளே செல்ல காஞ்சனா தூக்க கலகத்தில் ஓடி வந்து அப்பா என்று கத்தியதை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வர…..

ஏன் தான் துக்கத்திற்கு மேல் துக்கமாக இந்த வீட்டிற்கு வந்து சேருகிறதோ என்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள… நடைமுறைகள் நடந்தேற அன்று மாலை சிவலிங்கம் அடக்கம் செய்யப்பட்டார்.

தொடர் அர்ச்சனைகள் செய்து வந்த பார்வதி அம்மாள் இனி தான் திட்டுவதை கேட்பதற்கு சிவலிங்கம் இல்லாததை ஜீரணித்துக் கொள்ளவே சில நாட்கள் எடுத்தது… ஒரு புகைப்படத்திற்கு பதிலாக இரு புகைப்படமிருக்க அவைகளையே வெரித்துப் பார்ப்பது வாடிக்கையாகிவிட்டது… சாவிற்கு வந்த சுற்றுத்தார் காரியம் முடிந்து செல்ல, மல்லிகா அம்மாள் தான் பார்வதியின் இடத்திலிருந்து குடும்பத்தை கவனிக்க தொடங்கினார்…

சிவலிங்கம் இறந்து சரியாக ஒரு மாதம்… அதேபோன்று காலை வேலைக்கு வந்த மல்லிகாம்மா அலறின அலறலை கேட்டு காஞ்சனா மட்டும் இல்லாமல் சுற்றுப்புறத்தில் உள்ளோர் எல்லோரும் வர… ஆமாம் பார்வதி அம்மாளும் இறந்து விட்டார்.

நடைமுறைகள் நடந்தேற, நாட்களும் கடக்க…இந்தக் கொடூர துக்கம் இருப்பினும் காஞ்சனா இனி தான் சித்தப்பாவிற்கு செல்வதா இல்லை தாய் மாமா வீட்டுக்கு செல்வதா என்று குழம்பி மாமா வீட்டுக்கு செல்வதாக முடிவு எடுத்தாள்.

அதுவரை படிப்பில் சிகரம் தொட்ட காஞ்சனாவிற்கு இப்போதெல்லாம் சிகை வாரக் கூட மனம் இல்லாமல் அடுக்கடுக்காக தன் குடும்பத்துக்கு நிகழ்ந்த கொடூரங்களை ஜீரணிக்கவும் முடியாமல் தனக்கு எதிர்காலம் என்று ஒன்று உள்ளதா என்று நினைத்து விதியும் கடவுளும் ஒன்றோ என்று நொந்து நினைக்கத் தொடங்கினாள்…

எல்லோர் மனதிலும் நன்மதிப்பைப் பெற்ற சிவலிங்கத்தின் குடும்பத்திற்கு இது போன்ற கொடூரங்கள் நிகழ்ந்தது கர்ம வினை என்ற சொல்லையே கேலிக்குதாக்கியது!

காட்சி 2.

வேல் தொழிற்கூடங்களில் அலுவலகத்தில் சிவலிங்கம் அமர்ந்து அலுவலகப் பணியை கவனித்துக் கொண்டிருந்தார்… நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை கொடுக்கும் அதிபராக இருந்தும் நல்ல வருமானத்தை ஈட்டக்கூடிய தொழில் நடத்துவராக இருந்தும் முகம் முழுவதும் வருத்தத்தின் சாயலை கொண்டு இருந்தது… தொடர்ந்து சந்திக்க ஆட்கள் வருவதும் சமாளிக்க நிறைய பிரச்சனைகள் வருவதும் அவரது வருத்தத்தினை தள்ளிப் போட வைத்தன.. மாலை ஏழரை மணிக்கு மேல் ஆகிவிட்டது.. வீட்டிற்கு கிளம்ப தயாராகினார்.

அதற்கு முன் மொபைல் போனை எடுத்து, ‘ என்னப்பா வேலா ஏதாவது வேணுமா?’

‘இல்லப்பா எதுவும் வேணாம், உங்களுக்காக காத்திருந்தேன் அம்மா டின்னரும் கொடுத்து விட்டார்கள்’

‘சரிப்பா இப்ப கிளம்பிட்டேன், காஞ்சனா பக்கத்துல இருக்கிறாளா?’

‘இங்க இல்லப்பா அவ ரூமுக்கு போய்ட்டா’

சிவலிங்கம் வீட்டிற்கு கிளம்பி சென்றார்… வீட்டை அடைந்தார்.

நேராக அவரறைக்குச் செல்லாமல் மற்றொரு அறை நோக்கி சென்றார்..

‘என்னப்பா வேலா என்ன சாப்பிட்டாய்?’

அங்கு ஒரு இளைஞன் இரு கால்களும் இல்லாமல் படுக்கையில் இருந்தான்… புரிகிறது இவன்தான் வேலன்.. இவன் பெயரில் தான் சிவலிங்கம் தொழிற்கூடங்களை நடத்துகிறார்.. ( காட்சி ஒன்றில் புகைப்படத்தில் இருந்த அதே இளைஞன் )

சிவலிங்கத்தின் குரல் கேட்டு கடுகடுவென வந்தார் பார்வதி அம்மாள்.

‘ என்னப்பா வேலா உங்க அப்பாவுக்கு நேரத்துக்கு வர தெரியாதா?’

வேலன் லேசாக புன்முறுவல் பூத்தான்… இது தினசரி வாடிக்கையாக போய்விட்டது.. அம்மாவின் அப்பாவை நோக்கிய அர்ச்சனைகள் தொடர்கதை…. இந்த ஜென்மத்தில் முடியும் என்று தெரியவில்லை.

இப்பொழுதெல்லாம் சிவலிங்கமே நேராக சமையலறைக்கு சென்று உணவு பரிமாறிக் கொண்டு உண்டு முடிப்பது வழக்கம் ஆகிவிட்டது.

இரவு உணவு முடித்ததும், நேராக காஞ்சனாவின் அறைக்குச் சென்றார்.

‘ என்னம்மா காஞ்சனா படித்துக்கொண்டு இருக்கிறாயா?’

‘ ஆமாம்பா’

‘ உள்ளே வரலாமா?’

‘ வாங்கப்பா ‘

‘ என்ன மன்னிச்சிடுமா… நானும் அம்மாவும் சமாளிப்போம்… இப்பொழுதும் காலம் கடந்து விடவில்லை… நீ விரும்பினால் செல்லலாம்’

‘ இல்லப்பா அதெல்லாம் ஒன்றும் இல்லை… ஆசைப்பட்டேன் அவ்வளவுதான்.. பெரிதாக விருப்பம் ஏதுமில்லை’ காஞ்சனா இதை சொன்னாளே தவிர அவளுக்கும் தெரியும் சிவலிங்கத்துக்கும் தெரியும் ஆஸ்திரேலியா சென்று மெல்போர்ன் யுனிவர்சிட்டியில் மேற்படிப்புகள் தொடர்ந்து படிக்க விரும்பினது….. காலத்தின் கோலம் அவளாலும் செல்ல முடியவில்லை சிவலிங்கத்தாலும் மனமுவந்து அனுப்ப முடியவில்லை..

‘ சரிமா நாளைக்கு பேசலாம்..’

‘சரிப்பா ஞாயிற்றுக்கிழமை என்றாலும் எங்கேயாவது செல்வீர்களே?’

‘இல்லைமா வீட்டில் தான் இருக்க போகிறேன் உங்கள் இதுவரிடமும் நாளை பேசுகிறேன்’

‘ குட் நைட் பா ‘

‘குட் நைட் மா, தூங்கு! ‘

மறுநாள் காலை உறங்கி எழுந்தார் சிவலிங்கம்… ஞாயிற்றுக்கிழமை… பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளிலும் எங்கேயாவது செல்வார்.. இன்று ஒரு முடிவுடனே இருந்தார் எங்கும் செல்லாமல் இருக்க…

சிவலிங்கம் இப்போதெல்லாம் அந்த கோர நிகழ்ச்சியில் இருந்து மாடியில் தனி அறையில் தனியாக தங்க ஆரம்பித்தார்… வீட்டில் வேலை செய்யும் பெண்மணி எடுத்து வந்த தேநீரை பருகி விட்டு தன் கைபேசியில் ஏதேனும் முக்கிய குறுஞ்செய்திகள் வந்துள்ளனவா என்று பார்த்தார். முக்கிய செய்திகளுக்கு பதிலும் அளித்தார்.

மாடியை விட்டு கீழே இறங்கி வந்து நேராக தன்மகன் வேலன் அறைக்கு சென்றார். மகன் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்க சப்தமில்லாமல் பக்கத்திலேயே அமர்ந்து அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.. உலகத்தின் ஒட்டுமொத்த வருத்தமும் அவர் முகத்தில் தெரிந்தது… தன்னைத் தானே கேள்வி கேட்டுக்கொண்டார்… தனக்குத் தெரிந்து மனசாட்சியின் படி யாருக்கும் எந்த கெடுதலும் செய்ததில்லை… மாறாக உதவி என்று வந்தவர்களுக்கு தன்னால் முடிந்த அத்தனை எவ்வளோ உதவிகளையும் செய்திருந்தும் ஏன் இந்த கொடூரம் தன் குடும்பத்திற்கு? கொடூரத்தின் விளைவாக மனைவி பார்வதி கடவுள் மேல் நம்பிக்கை இழந்து இருந்தாலும் இவர் இவையெல்லாம் முன் ஜென்மத்தின் கர்மவினையோ என்று நினைத்து முருகனைக் கும்பிடுவதை நிறுத்தாமல் இருந்தார். பக்தியின் அளவு குறைந்து இருந்தாலும் எப்போதும் மனதில் ‘ முருகா எங்கள் எல்லோருக்கும் நிம்மதி கொடு ‘ என்று நினைக்காமல் இருந்ததில்லை…

சற்றேன்று வேலன் கண்விழித்து பார்க்க, ‘இப்பதான் பா வந்தேன்’ என்று கூறிவிட்டு கை தாங்கலாக அப்படியே வேலனை தூக்கி சக்கர நாற்காலியில் அமர்த்தி கழிவறை நோக்கி செலுத்தினார்… இது அன்றாட வாழ்க்கை.. வேலனை கவனிக்க தனியாக ஒரு ஆண் செவிலியரை நியமித்திருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் சிவலிங்கம் தான் இதை செய்வார்.

எல்லாம் முடித்து உணவு மேஜைக்கு வேலனை அழைத்து வரும்போது காஞ்சனாவும் வந்தாள். ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் காலை உணவும் இரவு உணவும் குடும்பமாக நால்வரும் உட்கொள்வார்கள். அன்றும் இன்று போல் மதிய உணவிற்கு சிவலிங்கம் பெரும்பாலும் இருப்பதில்லை.

என்றும் போல இன்றும் இறுக்கமான சூழ்நிலையே… அதைக் கலைத்து சிவலிங்கமே பேச தொடங்கினார்..

‘வேலா, சில வருடங்கள் மேற்படிப்புக்காக காஞ்சனாவை ஆஸ்திரேலியா அனுப்பலாம் என்று இருக்கிறேன்… நீ என்ன நினைக்கிறாய்?’

வேலன் வாய் திறக்கும் முன்பே காஞ்சனா இடைமறித்து, ‘ அப்பா அந்த எண்ணத்தை நான் எப்போதோ கைவிட்டு விட்டேன், மறுபடியும் அந்த பேச்சை ஏன் எடுக்கிறீர்கள்?’ என்று கூறி முற்றுப்புள்ளி வைக்க நினைத்தாள்.

சிவலிங்கம் பேச முயலும் முன்பே பார்வதி இடைமறித்து..’ இல்ல காஞ்சனா நீ முன்பு விருப்பப்பட்ட படியே படி… எங்களுக்கு அதில் எந்தவித கஷ்டமோ மன வருத்தமோ இல்லை ‘ என்று கூற வேலனும் சிவலிங்கமும் ஒரே சமயத்தில் ஆம் என்று தலையாட்டினார்கள்.

எல்லா வித ஏற்பாடுகளும் செய்ய துவங்கி ஒரு மாதம் கடந்திருக்கும், வீட்டிலிருந்து வேலன் விடை கொடுக்க… விமான ஊர்தி நிலையத்திலிருந்து சிவலிங்கமும் பார்வதியும் கண்களில் கண்ணீருடன் விடை கொடுக்க காஞ்சனா எதிர்காலத்தை நோக்கி பறக்க துவங்கினாள்.

காட்சி 3

இந்த இரு காட்சிகளையும் எனக்கு ஏன் காட்ட வேண்டும் என்று புரியவில்லை..

அதைப் புரிந்து கொண்டார் போல் எதிரே இருந்த…. என்னவென்று சொல்வது.. ஒளி உருவமா? தேவதையா? இல்லை கடவுளே இவர்தானோ? குழம்பி நின்றேன்… இப்போதுதான் குழப்பம் அதிகரித்தது.. நான் யார்? ஏன் இங்கு இருக்கிறேன்… இது என்ன இடம் …. ஏதும் புரியவில்லை… என்னைப் பார்த்து அந்த உருவம் இதமான புன்முறுவல் பூப்பது புரிந்து கொள்ள முடிந்தது.

எனக்கு கேட்க வாய் வரவில்லை.. அப்போதுதான் கவனித்தேன்.. எனக்கு உருவமும் இல்லை…. என் மூளைக்கு எட்டாத பல விஷயங்கள் அந்த கணத்தில் நடப்பது புரிந்தது.. சுற்றிப் பார்த்தேன்.. அற்புத ஒளி… ஒளியா இது? மிதமான இசை…. இசையா இது? மலை இல்லை, மரங்கள் இல்லை, செடிகள் இல்லை இருந்தும் உன்னதமான இயற்கை சூழ்நிலையில் இருப்பதை உணர்ந்தேன்.

‘புரிய வைக்கிறேன் பிறகு உன்னிடம் கேள்வி கேட்கிறேன்…’ அந்த உருவமோ அருவமோ என்று என்னிடம் சொல்வதை உணர்ந்தேன்…

காட்சி 4

சிவலிங்கம் பார்வதியின் வீடு, பெரிய ஹாலில் காட்சிப்படுத்தும் பீரோவில் நிறைய வெற்றிக் கோப்பைகள் இருப்பதை பார்க்க முடிந்தது…. உற்று கவனிக்கும் போது எல்லாவற்றிலும் முதல் பரிசு வேலன் என்று பொறிக்கப்பட்டிருந்தது… சற்று தள்ளி பார்த்தால்.. தமிழ்நாடு அரசின் மற்றும் இந்திய அரசின் அதி வேக ஓட்டப்பந்தயத்திற்கான பாராட்டு சான்றிதழ்கள் இருப்பதை காண முடிந்தது…

ஆமாம் எல்லாம் வேலனுடையது… இப்போது பிளஸ் டூ விடுமுறையில் பட்டப்படிப்பின் துவக்கத்தை எதிர்நோக்கி உள்ளான்.

தானே கடினப்பட்டு உழைத்து சம்பாதித்து வேலன் என்று தன் மகனின் பெயரிலேயே தொழிற்கூடங்களை உருவாக்கிய சிவலிங்கம், தன் மகனும் அவனுடைய காலியிலேயே நிற்க வேண்டும் என்று ஒரு வரைமுறை வைத்திருந்தார்.. அதாவது சனி ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் வேலன் தனக்கு உதவியாக அலுவலகத்திற்கு வந்தால் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு குறிப்பிட்ட ஊதியத்தை தருவது என்று.. இதை பார்வதி அம்மாள் கடுமையாக எதிர்த்தும் வேலன் விரும்பியதால் தொடர்ந்தது…

வேலன் வைத்திருந்த புதிய மோட்டார் சைக்கிளும் அவன் சம்பாதித்த பணத்திலேயே வாங்கியது… அதில் வேலனுக்கும் சிவலிங்கத்திற்கும் பெருமையே!

அன்று சனிக்கிழமை காலை, சிவலிங்கமும் வேலனும் காலை சிற்றுண்டி முடித்துவிட்டு அலுவலகம் கிளம்ப தயாராகினர்…

‘ ஏங்க, மத்த பசங்க மாதிரி அவனை அவன் ஃப்ரெண்ட்ஸ்களோட விளையாட இல்ல எங்கேயாவது செல்ல விடுங்க…. பணம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக் கொள்ளலாம் அவனின் இந்த இளமைப் பருவம் எப்போதும் வராது ‘ என்று கூறிக் கொண்டே பார்வதி அவர்களை நோக்கி வர, சிவலிங்கம் இடைமறித்து, ‘இன்று மட்டும் வரட்டும் நாளை முதல் ஒரு வாரத்திற்கு அவன் வரத் தேவையில்லை…. அவன் நண்பர்களுடன் ஒரு வாரம் கழிக்க எல்லா பணத்தையும் தருகிறேன்’ என்று கூற..

வேலனும், ‘பரவாயில்லை அம்மா இன்று மட்டும் போய் வருகிறேன்… எனக்கும் தெரியும் ISO கிரெடிடேஷனுக்கு அப்பாவிற்கு எவ்வளவு வேலை இருக்கிறது என்று எனக்குத் தெரியும் ‘

இருவரும் பார்வதியின் பதிலை எதிர்பார்க்காமல் அலுவலகம் கிளம்பிச் சென்றனர்..

சிவலிங்கத்தின் ஆட்கள் ஏற்கனவே சரி பார்த்து இருந்தாலும் அவர் ஒரு முறை எல்லாவற்றையும் பார்த்தால் மட்டுமே நிம்மதி கிடைக்கும்…. முன்னேற்பாடுகள் எல்லாவற்றையும் ஒன்று ஒன்றாக பார்க்கத் துவங்கினார்… அதில் ஒரு பகுதியை படிக்க துவங்கும் போது ஏதோ நினைவிற்கு வந்தால் போல் ‘ வேலா, ஆறுமுகத்திடம் சொல்லி நேற்று டெலிவரி செய்யப்பட்ட எல்லா மெட்டீரியல்களும் சரியான இடங்களில் வைக்கப்பட்டுள்ளதா என்று பார்க்க சொல்லவும் ‘

வேலனும் சரி என்று தலையாட்டிவிட்டு ஆறுமுகத்தை தேடி சென்றான்..

சுமார் பத்து நிமிடங்கள் கூட கடந்து இருக்காது…

‘அப்பா’ என்ற மிகப்பெரிய அலறல் சத்தம் கேட்டு படித்துபார்ப்பதை அப்படியே விட்டு சிவலிங்கமும் மற்றும் அலுவலகத்தில் இருந்த மற்றவர்களும் அலறல் சத்தம் வந்த தொழில் கூடத்தின் பகுதியை நோக்கி ஓட…

அவர்கள் கண்ட காட்சி இதயமே வெடித்து விடும் போல் இருந்தது..

சிவலிங்கத்தின் இதயம் வெடிக்காமல் இருந்ததே அதிசயம் தான்….

மெட்டீரியல்கள் அடுக்கி வைக்கப்படும் இரும்பு அலமாரி வேலனின் இடுப்புக்கு கீழே இரு கால்களின் மீதும் விழுந்து கால்கள் நசுங்கி ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்க வேலன் அதீத வலியால் கத்தி விட்டு மூர்ச்சை ஆகி விட்டிருந்தான்.

தொடர்ந்து காட்சி மூன்று….

அந்த ஒளி உருவம்; அருவம்; தேவதை இல்லை கடவுளோ என்னைப் பார்த்து இப்பொழுது புரிகிறதா என்று கேட்பது புரிந்தது…

எனக்கு குழப்பம் மேலும் அதிகரித்தது.. ‘ நீதான் வேலன் என்று எனக்கு கூறப்பட்ட போது ‘

புரியாமல் உற்றுநோக்கினேன்….

கடவுள் என்றே வைத்துக் கொண்டு தொடருவோம்…

‘ காட்சி நான்கு….. நடந்தது..

காட்சி ஒன்று அல்லது காட்சி இரண்டோ துவங்கப்போவது உன்னிடம் தான் உள்ளது…’ என்று கடவுள் என்னைப் பார்த்து கூற…

ஒரு வினாடியும் தாமதிக்காமல் காட்சி இரண்டு போல் தொடர விரும்புகிறேன் என்று நான் கடவுளிடம் கூற….

மிக உயரிய அதிர்ச்சியை கடவுள் எனக்கு கொடுத்தார்.

‘கால்களை இழந்து வலியில் தொடர விரும்பாமல் அப்படியே இறந்துவிட நினைக்காமல்… நீ இறந்து விட்ட பிறகு குடும்பமே சின்னா பின்னமாக ஆகப் போகிறதை சகிக்க, தாங்க இயலாமல் ஒரு வினாடிக்குள் நீ எடுத்த முடிவால்…’

கடவுள் அந்த கணம்… வினாடிக்கும் குறைவான நேரமே நிறுத்திய பேச்சால்… என்ன நடக்குமோ எதைச் சொல்லப் போகிறாரோ என்று நான் நினைக்க…

அவரேத் தொடர்ந்து, ‘இந்த ஜென்மம் தான் கடைசி…. உனக்கு மட்டுமல்ல உன் குடும்பத்தாருக்கும் …இனி ஜென்மங்கள் கிடையாது… இந்த வாழ்க்கை முடிந்தவுடன் நீங்கள் எல்லோரும் எங்களுடன் சேர்வீர்கள் ‘

எனக்கு நடப்பது ஏதும் புரியவில்லை…

அப்படி என்றால் என்று நான் கேட்கத் துவங்க… கடவுளே, ‘ இப்போது நான் கூறியது எதுவும் உன் நினைவில் இருக்கப் போவதில்லை’ என்று கூற..

ஏனென்று அவரை நான் பார்க்க…

“இதுதான் பிரபஞ்ச விதி!” என்ற பதிலை கூறினார்.

காட்சி 4 தொடர்கிறது….

சிவலிங்கமும் மற்றவர்களும் நெஞ்சம் பதற வேலனை மீட்டு மருத்துவமனை அவசர பிரிவுக்கு அழைத்துச் சென்றனர்….

“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்”.

வேலன் தன் பிறவி பெருங்கடலை நீந்த ஆரம்பித்தான்.

bottom of page