தெரிந்ததும் தெரியாததும், புரிந்ததும் புரியாததும்!
- melbournesivastori
- Sep 18, 2021
- 6 min read

வெறும் சயன்ஸ் பிக்க்ஷன் கதைகளாக எழுதுவதற்கு பதிலாக ஒரு சில பதிவுகள் புரிந்ததும் புரியாததும்; தெரிந்ததும் தெரியாததும் எனும் தலைப்பில் தெரிந்த; புரிந்த வெகுஜன தொலைக்காட்சிகளில் வராத வெகுஜன பத்திரிகைகளில் வராத புதிதான புதிரான திடுக்கிட வைக்கும், திகிலூட்டும் உலகத்தில் நடந்த, நடக்கும் நிகழ்ச்சிகளைக் கூறினால் பின்வரும் சயன்ஸ் பிக்க்ஷன் கதைகளைப் படிப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்று நினைக்கிறேன்…
சில பெயர்களையும் வார்த்தைகளையும் ஆங்கிலத்திலேயே கொடுக்கிறேன்… சரியான தமிழாக்கத்தில் கொடுத்தால் புரிந்துகொள்ள கடினமாக இருக்கும்..
இயற்கையிலிருந்து நாம் வெகுதூரம் வந்து விட்டதுபோல தமிழிலிருந்தும் வந்துவிட்டோம்…. இனிவரும் காலங்களில் எளிய செந்தமிழில் கொடுக்க முயற்சிக்கிறேன்.
பொதுவாக ஒரு முறையாவது எல்லோரும் UFO (unidentified flying objects) சைடிங்ஸ் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.. பலப் பல வருடங்களுக்கு முன்பு பறக்கும் தட்டுகள் என்று கூறப்பட்டவையே அவை. இதில் ஆர்வமுள்ளவர்களுக்கு தெரியும் 1947இல் ஜூலை 8 -ஆம் தேதி அமெரிக்காவின் ரோஸ்வெல் இடத்தில் நடந்த பிரபலமான UFO விபத்து. அன்றைய மறுநாள் அந்தப் பகுதி பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக அது வந்தது.. அதுவே கடைசி செய்தியாகவும் முடிந்தது. ராணுவ கட்டுப்பாட்டிற்கு விபத்து நடந்த இடமும் அங்கு வசிக்கும் மக்களும் அன்றைய தினமே வந்தனர். சுமார் எழுபத்தி நான்கு ஆண்டுகளுக்கு பிறகும் ரகசியம் காக்கப்பட்டது… அது UFO இல்லை வெதர் பலூன் எனப்படும் காலநிலை கண்காணிக்க பயன்படும் பலூன் என்று விளக்கம் கொடுக்கப்பட்டது… அப்போது எல்லோர் மனதிலும் எழுந்த கேள்வி மிகத் திறமை வாய்ந்த ராணுவ அதிகாரிகளுக்கு பலூனுக்கும் வித்தியாசமான வின்களத்திற்கும் வித்தியாசம் தெரியாமலா போயிருக்கும்…. இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் கசியவிட்ட ரகசியத்தில் இருந்து தெரிந்தது உலக மக்களினுடைய மத நம்பிக்கை தகர்ந்து விடும் என்பதனால் அது மூடி மறைக்கப்பட்டது என்று கூறப்பட்டது.. ஆனால் கசிந்த ரகசியமோ அதுமட்டுமல்லாமல் அதிகாரத்தையும், பணபலத்தையும் ஒரு சிறிய செல்வாக்குமிக்க கும்பல் தக்கவைத்துக்கொள்ளவே அந்த ரகசியம் காக்கப்பட்டது என்று கூறப்படுகிறது…
இங்கு பூமியில் வீட்டிற்குள் சண்டை; தெருவில் சண்டை; ஊரில் சண்டை; நகரத்தில் சண்டை; மாநகரத்தில் சண்டை; நாட்டுக்கு நாடு சண்டை….. மற்ற கிரகத்தில் நம்மைவிட அறிவில் சிறந்து, அறிவியலில் சிறந்து விளங்கும் கிரக வாசிகள் இருக்கிறார்கள் அவர்கள் பூமிக்கு வருகிறார்கள் என்று தெரிந்திருந்தால் ஒருவேளை நமக்குள் சண்டை வருவதற்கு பதிலாக பயத்தினால் ஒற்றுமை வந்திருக்குமோ என்னவோ? முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் அவர்களும் அதையே தான் சொன்னார்.
என்னுடைய முந்தைய சயன்ஸ் பிக்க்ஷன் கதைகளுக்கும் இனி நான் எழுதப் போகும் சயின்ஸ்பிக்க்ஷன் கதைகளுக்கும் இந்த விளக்கங்களை உங்களுக்கு தோன்றிய; தோன்றும்; தோன்றப் போகும் கேள்விகளுக்கு என்னால் முடிந்தவரை எளிதாக தர முயற்சிக்கிறேன். முன்பு UFO என்று கூறியவைகளை இப்பொழுது UAP (unidentified aerial phenomenon) என்று கூறுகிறார்கள்.. இனி நான் கூறப்போவது உங்களால் ஜீரணிக்க முடியாத புரிந்துகொள்ளமுடியாத ஒரு நிகழ்வு.
கனடா நாட்டின் முன்னாள் ராணுவ அமைச்சர் காலம் சென்ற திரு பால் ஹெல்லியர் ( சென்ற மாதம் தான் இறந்தார்) கூறியவைகள் இத்தகைய வினோதங்களை ஊன்றிப் பார்ப்பவர்களை புரட்டிப் போட்டது. இவ்வளவு பெரிய பதவியில் இருந்த எந்த அமைச்சரும் இவ்வளவு வெளிப்படையாக, பட்டவர்த்தனமாக இந்த ரகசியத்தை இதுவரை போட்டு உடைத்தது இல்லை. இந்தத் துறையில் அதிகமாக மதிக்கப்பட்ட டாக்டர் ஸ்டீவன் கிரியர் மற்றும் பவுலா ஆரிஸ் அவரிடம் பகிர்ந்து கொண்ட தகவல்களும் மேலும் திடுக்கிட வைத்தது. மிகவும் பிரபலமான டிராவிஸ் மற்றும் ஜிம் இவர்களின் ஏலியன் அப்டக்க்ஷன் சம்பவங்களை நேரில் கேட்டு கண்டறிந்தவர்.
1961 ஆம் ஆண்டு சுமார் 50 ufoக்கள் ஐரோப்பாவில் தோன்றி பறந்து ஆர்ட்டிக் நோக்கி சென்று மறைந்தது பற்றி ராபர்ட் டீன் எழுதிய புத்தகத்திற்கு பிறகு விசாரணை துவங்கி பல திடுக்கிடும் தகவல்கள் உறுதி செய்யப்பட்டன, அதன்படி பூமி குறைந்தது நான்கு வகையான வேற்று கிரகவாசிகளின் வருகைகளை சந்தித்திருந்தது.
குழம்ப வேண்டாம் படிப்படியாக சொல்கிறேன்….. எல்லோரும் நினைப்பதைப் போன்று 1947 யில் நடந்த பறக்கும் தட்டு விபத்துதான் முதலாவது என்று நினைப்பது தவறு என்றும் 1941 மற்றும் 1945 வருடங்களிலும் அதேபோன்று விபத்துக்கள் நடந்துள்ளது என்று பின்னால் தெரிய வந்தது.. ஆனால் அவ்விரு விபத்துகளிலும் கிட்டத்தட்ட எல்லாம் அழிந்து மீட்டெடுக்க கூடிய சிதையாமல் இருந்த பாகங்கள் சிறிதளவே… மேலும் எந்த ஒரு ஏலியனும் இந்த இரு விபத்துகளில் உயிர் தப்பிக்கவில்லை.. ஆனால் 1947 யில் நடந்த விபத்தில் 6 ஏலியன்களில் ஒன்றைத் தவிர மற்ற ஐந்தும் இறந்து விட்டிருந்தன. அந்த உயிருடன் மீட்கப்பட்ட ஏலியனுக்கு EBEN-1 (extraterrestrial biological entity -1)என்று பெயர் வைத்ததில் இருந்து உலகத்தின் மிக முக்கியமான ரகசியம் துவங்கியது…
‘ I didn’t know how much I didn’t know because how much there is there I need to know ‘ என்று எங்கோ படித்த புத்தகத்திலிருந்து Paul Hellyer குறிப்பிட்டது மிகவும் பொருத்தமாக இருந்தது. அவர் கடைசி காலங்களில் அழுத்தம் திருத்தமாக கூறியது என்னவென்றால் ‘மனித கற்பனைக்கு எட்டாதது உண்மையில் நடக்காது என்று எதுவுமில்லை’ என்று…. இந்த அவரின் கூற்று தனக்குள் எவ்வளவு பிரம்மாண்டமான ரகசியங்களை கொண்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளவே பொதுவாக யாராலும் முடியாது.
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ‘கிளோஸ் என்கவுன்டர்ஸ் ஆப் தி தேர்ட் கைன்ட்’ திரைப்படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது என்று பின் வரும் சம்பவத்தைக் கூறினார். அந்தத் திரைப்படம் அறிவியலில் ஆர்வம் உள்ள எல்லோருக்கும் பிடித்திருக்கும், புரிந்து இருக்குமா என்பது அவரவர்களின் தேடலின் புரிதலை பொறுத்தது… உயிருடன் இருந்த அந்த ஜீவனின் ( EBEN) கருத்துப் பரிமாற்றங்களை தொடர்ந்து அமெரிக்க ராணுவ ரகசிய பிரிவு பல முன்னேற்பாடுகளுடன் திட்டமிடலை தொடர்ந்தது.. அதன் ஒரு பகுதியாகத்தான் ஏலியன் கிரகத்துடன் மனித பரிமாற்றம் நடைபெற முக்கிய திட்டம் தீட்டப்பட்டது… அதை தழுவியது தான் அந்த திரைப்படம்.
அதை ‘ஆபரேஷன் கிறிஸ்டல் நைட்’ என்று கூறினார்கள். இது நடந்தது ஜூலை 1965… 10 ஆண்களும் இரண்டு பெண்களும் வேற்று கிரகத்திற்கு அனுப்பப்பட்டனர். அந்தப் பன்னிரண்டு பேரை தேர்ந்தெடுத்தது மிகப்பெரிய சவாலான நடைமுறை.. திறமை வாய்ந்த அறிவாளிகளை முக்கியமாக ஒட்டு உறவு இல்லாத அனாதைகளை தேடினார்கள்.. இதற்கு சிறிதளவு இங்கிலாந்தின் MI-6 ம் உதவியது… 56ஆயிரக்கணக்கானவர்களை பிரித்து சலித்து 158 பேராக குறைத்து மிகவும் கடினமான வழிமுறைகளை பின்பற்றி கடைசியாக 16 பேரை இந்த வேற்றுகிரக பயணத்திற்கு தேர்ந்தெடுத்து தயார் செய்தனர்… அந்த கிரகம் ஈபன் வாழ்ந்த செர்ப்போ எனப்படும் செட்டா ரெட்டிக்குலை எனும் இரட்டை சூரிய குடும்பத்தில் உள்ளது. அது பூமியிலிருந்து சுமார் 39.4 ஒளி வருடங்களுக்கு அப்பால் உள்ளது. ஒரு ஒளி வருடம் 300000 X 60 X 60 X 24 X 365 கிலோமீட்டர்கள். நினைத்துப் பார்த்தால் தலைசுற்றும்… எளிதாக சொல்ல வேண்டுமென்றால்.. ஒரு ஊர்தி ஒளியின் வேகத்தில்( ஒரு செகண்டுக்கு 300000 கிலோமீட்டர்கள் ) சென்றால் சுமார் முப்பத்தி ஒன்பது புள்ளி நான்கு வருடங்களில் அந்த கிரகத்தை சென்று அடையலாம். நம் விமானங்களின் சராசரி வேகம் ஒரு மணி நேரத்துக்கு சுமார் 1000 கிலோ மீட்டர்கள் தான்.
இந்த நேரத்தில் உங்களுக்கு பூமியின் பௌதீக விதிகளுக்கு அடங்காத பிரபஞ்ச வினோதங்கள் சிலவற்றை கூற வேண்டும்….. பறக்கும் தட்டுகளின் வேகம் பறக்கும் விதம் சடாரென்று 90° கோணத்தில் திரும்பும் திறமை மனித மூளைக்கு எட்டாதது.. நினைத்துப் பாருங்கள் சுமார் மணிக்கு 20 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ஒரு ஊர்தி சடாரென்று மேலும் கீழுமாக வலது இடது ஆக திரும்புவது ஜி போர்ஸ் மிகவும் அதிகமாக இருக்கும் மனிதர்களின் மூளைக்கு எட்டாதது, தாங்காது அது. இதில் மிக முக்கியமான ஒன்றை கவனிக்க வேண்டும்… ஒரு வின்கலம் ஒளியின் வேகத்தில் செல்வதாகவே வைத்துக்கொண்டாலும் செர்ப்போ வுக்கு சென்றுவர சுமார் எழுபத்தி ஒன்பது வருடங்கள் ஆகும்… அப்படி என்றால் எப்படி இவர்கள் வந்து செல்கிறார்கள்… இப்போது நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது போர்டல் டிராவல்… பிரபஞ்சத்தில் பல இடங்களில் புழுக்கள் போன்று வளைந்து நெளிந்து செல்லக்கூடிய துளைகள் உள்ளதாகவும் அதன் துவாரத்தை அடைந்தாலே போதும் துவாரத்தின் மறுபுறம் சிறிதளவு நேரத்திலேயே சென்றடையலாம் என்றும் கருதுகிறார்கள்… இந்த கிரகத்துக்கு சென்றடையக்கூடிய வேர்ம் ஹோலில் சுமார் முப்பத்தி ஒன்பது ஒளி வருடங்களை சில நாட்களிலேயே கடந்துவிடலாம் என்று ஈபன் தெரிவித்ததாக தெரிகிறது. டைம் டிராவல் பற்றியும் dimensional ட்ராவல் பற்றியும் இந்த சம்பவத்திற்கு தேவை இல்லாதது அதை பிறகு கூறுகிறேன்.
இந்தப் பயணத்திற்கு ஏற்பாடு செய்த மிகச்சிறிய ரகசிய குழுவில் இருந்த ஒருவரது ரகசியத்தை உடைத்து உண்மையை வெளிக்கொண்டுவரும் முயற்சியாக 2005ல் அனுப்பிய இருபத்தியோரு ஈமெயில்கள் எல்லாவற்றையும் புரட்டிப்போட்டது. பூமிக்கு பல்லாயிரக்கணக்கான வருடங்களாக (இல்லை இல்லை பல லட்சம் வருடங்களாக – அண்டார்டிகாவை பற்றி எழுதும்போது இதை குறித்து விரிவாக சொல்கிறேன்) வேற்று கிரகத்து மனிதர்கள்/ ebens களின் வருகைகள் இருந்து வந்தது தெரியவருகிறது.
1947 ல் கண்டெடுக்கப்பட்ட அந்த கிரகத்துக்கு தகவல் பரிமாற்றம் செய்யக்கூடிய கருவியை இயக்கவே தடுமாறி கடைசியாக 1952ல் கண்டுபிடித்து ஆறு தகவல்களை அனுப்பியும் பதில் வராமல் இருக்க அந்த ஆண்டு கோடையில் ஈபனும் இறந்துவிட்டது. அந்த வருட கடைசியில் டிசம்பர் மாதத்தில் செர்ப்போவிலிருந்து பதிலும் வந்தது. சிறிது சிறிதாக புரிதலை உருவாக்கிக்கொண்டு பத்து வருட காலத்தில் ஒரு உடன்படிக்கைக்கு வந்தார்கள்… அதாவது 1962 ஆம் ஆண்டு அமெரிக்க அரசாங்கத்தை சந்திக்க நேரடியாக வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி அதிகாரத்தில் இருந்தார்.. பல மாதங்களாக பலவகையான சூழ்நிலைகளையும் யோசித்து ஒரு முடிவுக்கு வந்து கென்னடி மனித பரிமாற்றத்திற்கு ஒத்துக்கொண்டார். அந்த உடன்படிக்கையின்படி அமெரிக்கா 12 தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்களை அனுப்புவதாகவும் பதிலுக்கு ஒரு ஈபனை பூமியில் விட்டுச்செல்லவும் சம்மதித்தனர். அந்தப் பன்னிரண்டு மனிதர்களுக்கு பதிலாக 16 பேரை தேர்ந்தெடுத்ததைப் பற்றி முன்பே கூறியிருக்கிறேன். அவர்களுக்கு மிகக் கடினமான எல்லா வகையான பயிற்சியும் ஆறுமாதங்களுக்கு அளிக்கப்பட்டது… பயிற்சி தூவங்குவதற்கு முன்பாக 5 நாட்கள் பாதாள சிறிய இருட்டு அறையில் உணவு தண்ணீர் மட்டும் கொடுத்து அவர்களின் மனோதிடத்தை சோதிக்க தங்க வைத்தார்கள். அதே சமயத்தில் நாட்டில் உள்ள அவர்களின் எல்லா தடயங்களையும் அழித்து காணாமல் போனவர்களாக பதிவு செய்தனர். எல்லா பயிற்சியும் சிஐஏ வின் வர்ஜீனியாவில் உள்ள ஃபார்ம் என்று பொதுவாக குறிக்கும் ரகசிய இடத்தில் கொடுக்கப்பட்டது. பயிற்சியின் முடிவில் விண்வெளி வீரர்களுக்கான பயிற்சியும் வேறு ஒரு இடத்தில் கொடுக்கப்பட்டது. அதில் நான்கு பேருக்கு ஏலியன் craftஐ பறக்க பயிற்சி கொடுக்கப்பட்டது, மற்ற எட்டு பேர்களில் டாக்டர், பயாலஜிஸ்ட், என்ஜினீயர்கள் மற்றுமொரு பாதுகாவலர். அந்தப் பன்னிரண்டு பேர்களுக்கும் தனித்தனியாக ஏதாவது விபரீதம் நடந்தால் தற்கொலை செய்து கொள்ள மாத்திரைகளும் வழங்கப்பட்டது… உடன் அக்காலத்திய உயர்தர துப்பாக்கிகளும் வழங்கப்பட்டது. எல்லாம் திட்டமிட்டபடி 1964ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி சர்போவிலிருந்து ஏலியன்களும் வந்தனர்… அவர்களை அமெரிக்காவின் 16 உயரதிகாரிகள் வரவேற்றனர். இந்த சந்திப்பு நடைபெற்ற இடத்திற்கு அருகில் ஒரு பேருந்தில் அந்த 12 பேரும் காக்க வைக்கப்பட்டனர்.. அந்த சமயத்தில்தான் அமெரிக்கர்கள் எதிர்பாராதது நடந்தது… ஈபன்கள் இந்த பரிமாற்றம் இப்போது வேண்டாம் என்றும் 1965ல் வைத்துக்கொள்ளலாம் என்றும் கூறிவிட்டனர். ஏற்கனவே கைதிகள் போன்று இருந்த அந்த 12 பேரும் மீண்டும் கைவிடப்பட்ட ஒரு சிறைச்சாலையில் வெளி உலக தொடர்பு மறுக்கப்பட்டு கடும் காவலில் வைக்கப்பட்டனர். அந்த நாளும் வந்தது 1965ஆம் ஆண்டு திட்டமிட்டபடி நவாடா பாலைவனத்தில் திட்டமிட்ட இடத்தில் நடந்தது. கிட்டத்தட்ட ஸ்டீவன் ஸ்பீல்பர்க் திரைப்படத்தில் நடந்தது போலவே நடந்ததாக அந்த பெயர் குறிப்பிட விரும்பாத நபர் தெரிவித்திருந்தார்… மிகவும் பாதுகாப்பான சூழ்நிலையில் குறைந்த உயர் ராணுவ அதிகாரிகளையே அந்த ரகசிய பரிவர்த்தனைக்கு அனுமதித்து இருந்தனர். அந்தப் பன்னிரண்டு பேரும் அந்த வின்களத்திற்குள் உடன் எடுத்துச் செல்லவிருந்த 45 டன் பொருள்களுடன் சென்றனர்.
அந்த 45 டன் எடை பொருட்களுக்குள் 12 பேருக்கும் பத்து வருடத்திற்கு தேவையான உணவுப் பொருட்களும் இரண்டு ஜீப்புகள் 10 மோட்டார்சைக்கிள்கள் மற்றும் மருத்துவப் பொருட்களும் அடங்கும். அதில் 2 பேர் பூமிக்கு திரும்ப மறுத்து விட்டனர் இரண்டு பேர் இறந்து விட்டனர், மற்றவர்கள் திட்டமிட்டபடி பத்து வருடம் கழித்து வருவதற்கு பதிலாக 13 வருடம் கழித்து 1978ஆம் ஆண்டு பூமிக்கு திரும்பினர். ஏதோ ஒரு காரணத்திற்காக காலக் கண்காணிப்பை இழந்து மூன்று வருடங்கள் அதிகமாக தங்க நேர்ந்தது.
திரும்பி வந்த எட்டு வீரர்களும் சுமார் ஒரு வருட காலத்திற்கு வெளி தொடர்பில்லாமல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த ஒட்டுமொத்த பயணமும் 3000 பக்கங்களாக பதிவு செய்யப்பட்டது. பிறகு கடுமையான உடன்படிக்கையுடன் பொதுமக்களுடன் வாழ அனுமதிக்கப்பட்டனர். அதில் கடைசி வீரர் 2002 ஆண்டு இறந்தார். இவைகள் நடந்தேற ஒப்புதல் தந்த கென்னடி இவைகளை எல்லாம் காணாமல் இறந்துவிட்டார். மக்களிடமிருந்து எதையும் மறைக்க கூடாது என்று நினைத்த கென்னடி இவர்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று நினைத்து அதை செயல்படுத்தவும் இருந்ததால் கொல்லப்பட்டார் என்றும் பெரிதும் மதிக்கத்தக்கவர்களுடைய கருத்தாக இருந்தது.
அந்த கிரக மக்கள் தொகை சுமார் 6 அரை இலட்சம் என்றும், அதிக வெப்பம் என்றும் அந்த கிரகத்தில் அவர்களுடைய நாகரிக வளர்ச்சி சுமார் பத்தாயிரம் வருடங்கள் என்றும் தாங்கள் வசித்த முந்தைய கிரகத்தில் ஏற்பட்ட எரிமலைகள் வெடிப்பு மற்றும் இயற்கைப் பேரழிவு காரணமாக இந்தச் செர்ப்போ கிரகத்தில் குடியேறினார்கள் என்றும் தெரியவந்தது. பால் கடைசியாக கூறியவைகள்… ‘எனக்குத் தெரிந்த 95-98% ரகசியங்களை கூறி விடுவேன் ஆனால் இரண்டு மூன்று விஷயங்களை என்னால் கூற இயலாது.. அவைகளை இன்று வரை என்னால் உள்வாங்கிக் கொள்ளவும் முடியவில்லை…’
செர்ப்போ ஏலியன்கள் மனிதகுலத்திற்கு 2 அற்புத தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய பொருள்களை கொடுத்ததாகவும் அவைகளை இன்றுவரை அந்த சிறிய அதிகார பண போதை உள்ள கும்பலே வைத்துள்ளதாகவும் தெரிகிறது…
அதில் ஒன்று பிரபஞ்ச மொழியாக்கம் அதன்மூலம் உலகிலுள்ள எந்த மொழியிலும் செர்ப்போ மொழிக்கு மொழியாக்கம் இரு வழிகளிலும் செய்யலாம்.
அதில் மற்றொன்று மஞ்சள் புத்தகம் எனப்படும் ஒரு கருவி அதன் வழியாக ஹலோ கிராபிக் மூலம் சுமார் நான்காயிரம் வருடத்திற்கு மேலான பூமியில் நடந்த எல்லா நிகழ்வுகளையும் பார்க்க முடியும்.. இந்த அற்புதமான தொழில்நுட்பம் எந்த எந்த இனத்தின் அற்புத, பழமையான, பெருமைமிக்க வரலாற்றை வெளிக்கொணர தடைகளை ஏற்படுத்தியதோ என்று நினைக்கத் தோன்றுகிறது!
அடுத்து அண்டார்டிகாவின் ரகசியங்களை முடிந்தவரை எளிமையான தமிழில் தர முயற்சிக்கிறேன்.



