top of page

நியதி! By சிவா.

  • melbournesivastori
  • Oct 3, 2022
  • 7 min read

நர்மதா, என்னமா பிஸியா? பெரியப்பா பேச ட்ரை பண்ணினாராம் நீ பாக்கலையா?

இப்பதான் பேசிட்டு வந்தேன் எல்லோரிடமும்…..

போனை எடுத்து பாருமா….

ஓ சாரி பா இந்த பெரியப்பாவா இப்போதே பேசுகிறேன்…

காலை வணக்கம் பெரியப்பா, மன்னிக்கணும் உங்களுடைய போன் காலை மிஸ் பண்ணி விட்டேன்….

அதற்கென்ன பரவால்லம்மா… நேற்று பாராட்டு விழாக்கு வர முடியல ஆனா எல்லாவற்றையும் டிவில பார்த்தேன்.. ரொம்ப மகிழ்ச்சி மா!

எல்லாம் உங்களைப் போன்றவர்கள் ஆசிர்வாதம் பெரியப்பா. பரவாயில்லை நீங்கள் வந்திருந்தால் முழுமை அடைந்திருக்கும்… உங்கள் ஆசிர்வாதம் என்றுமே எனக்கு உண்டு என்று தெரியும், என் நன்றி உங்களுக்கு என்றுமே.

பரவாயில்லை, ஒன்று இந்த வார இறுதியில் நீங்கள் என் வீட்டுக்கு வருகிறீர்களா அல்லது நாங்கள் வருகிறோமோ பிறகு பார்க்கலாம்…

பக்கத்தில் யாராவது இருக்கிறார்களா?

இல்லைங்க பெரியப்பா.

என்னிடம் மட்டும் உண்மையைச் சொல், நேற்று எல்லா பேட்டிகளையும் பார்த்தேன்… உன்னை நன்றாக தெரியும்.. ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தை நீ மறைக்கிறாயோ இல்லை வெளியிட மறுக்கிறாயோ தெரியவில்லை.. என்ன அது?

அது…… அப்படி எல்லாம் இல்லையே.

சரி எனக்கு தோன்றியதை கேட்டு விட்டேன். சொல்ல ஏதும் இல்லை என்றால் விட்டுவிடு.

மன்னிக்கணும் பெரியப்பா, உங்களிடமும் குடும்பத்திடமும் எதுவும் மறைத்ததில்லை நான்… நேரில் கூறுகிறேன்… எனக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று நீங்களும் குடும்பமும் மட்டும் தான் நினைக்க மாட்டீர்கள்.

என்னம்மா ஏதோ பெரிய விஷயம் போலிருக்கிறது..

ஆமாம், நேரில் சொல்கிறேன்.

சரிம்மா.

நர்மதா பேசிட்டியாமா?

பேசிட்டேன் பா.

ரொம்ப சாதாரணமானவர்கள் நாம்.. ஆனால் அவர் ஒரு பொழுதும் அதை நினைக்காமல் பந்தா என்ற வார்த்தையை அர்த்தமில்லாமல் செய்துவிட்டார். அவரும் பிரபலமானவர், வீட்டிலும் பிரபலமானவர்கள்.. நட்பும் பெரிய இடங்கள்.. இருந்தும் நம்மீது காட்டிய; காட்டும் பாசம் அளவிட முடியாதது..

தெரியும்பா நீங்கள் சொல்லித்தானா தெரிய வேண்டும் எனக்கு?

வாழ்த்துக் கூறினாரா?

ஆமாம் பா.

நான் நர்மதா, பிறந்து வளர்ந்தது எல்லாம் வேறு நாட்டில்…. தாய் தந்தையர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான். என் ஒட்டுமொத்த ஆற்றலுக்கும் அறிவிற்க்கும் நான் பிறந்து வளர்ந்த நாட்டுக்கு மட்டுமே சொந்தம் என்றாலும்.. என் தாய் தந்தை வளர்ப்பிலும் அவர்கள் அர்ப்பணிப்பிலும் தான் இது சாத்தியமாகியது… நான் படித்தது அஸ்ட்ரோ பிசிக்ஸ், கனவு கண்டது அஸ்ட்ரோநாட்டாக… கனவும் பலித்தது.. செயல்பாட்டில் இறங்க முடியவில்லை ஏனென்றால் என் நாட்டில் நிறைய பேர் வரிசையில் இருந்தனர்.

இங்கு அப்பா அம்மாவை பற்றி சொல்ல வேண்டும், இருவரும் முன் ஜாக்கிரதியானவர்கள்.. குடும்பமே என்னாட்டின் குடியுரிமை பெற்றிருந்தாலும் இந்திய அரசாங்கம் சில வருடங்களுக்கு முன்பு அனுமதித்த OCI எனும் ஓவர் சீஸ் சிட்டிசன் ஆஃப் இந்தியா கடவு சீட்டின் மூலம் இந்தியாவிற்கும் சொந்தமாகலாம்.

இது எனக்கு மிகவும் உதவியாக மாறியது… எப்படி என்று விவரமாக சொல்கிறேன்.

நான் பிறந்து வளர்ந்து எல்லாம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில். ஆரம்பப் பள்ளியில் சாதாரண மாணவியாகத்தான் இருந்தேன்.. உயர்நிலைப் பள்ளியில்… நாங்கள் செகண்டரி காலேஜ் என்று சொல்வோம்.. விடுமுறை நாட்களில் தான் என்னுடைய கனவு மெல்ல மெல்ல உதித்தது.. நாங்கள் விடுமுறை நாட்களை கழிப்பதற்கு செல்வதெல்லாம் இயற்கை சூழ்நிலையுடன் அமைந்த கேபின்கள்… அங்கு சுற்றி இருக்கும் இடங்களை சுற்றிப் பார்த்த பிறகு இரவு உணவை முடித்துக் கொண்டு லுக் அவுட்டில் அமர்ந்து கோடை வான்வெளியை பார்த்துக் கொண்டு பேசும்போது தான் அஸ்ட்ரோ பிசிக்ஸ் படிக்க வேண்டும் என்றும் அஸ்ட்ரோநாட்டகா ஆக வேண்டும் எனும் கனவு பிறந்தது என்று நினைக்கிறேன்.

அந்த சிறுவயதில் அப்பா ஒரு கேள்வி கேட்டார், அதோ தெரிகிறதே அந்த நட்சத்திரம் இன்று இருக்கிறதோ இல்லையோ நமக்கு தெரியாது இது உனக்குப் புரிகிறதா? என்று. அன்று எனக்கு இந்த கேள்வி சுத்தமாக புரியவில்லை… புரியவில்லை என்று கேட்டதற்கு சரியான விளக்கமும் தந்தார் இருப்பினும் அந்த வயதில் எனக்கு இருந்த புரிதலில் அது புரியவில்லை. என் படிப்பிற்கு நடுவே அந்தக் கேள்வி என்னை தொலைத்துக் கொண்டே இருந்தது…. சில வருடங்களில் அதைப் பற்றி முழுமையாக புரிந்து கொண்டேன். இவைதான் என்னுடைய கனவுகளுக்கு கடைக்கால்! என் படிப்பின் ஊடே வான்வெளியைப் பற்றி நிறைய படிக்க துவங்கினேன்.. அது ஒரு புதைக்குழி என்று புரியாமல். ஆமாம் என்னை முழுமையாக அது இழுத்துக்கொண்டது. பெற்றோர்கள் வருந்தினாலும் எனக்கு அதில் சிறிதும் வருத்தமில்லை.. வருத்தத்திற்கு பதில் வெறி கொண்டேன். பள்ளி படிப்பை முடித்துவிட்டு பல்கலைக்கழக படிப்பை மெல்போர்ன் யூனியில் அறிவியல் துறை எடுத்து விருப்பப் பகுதியாக வான்வெளி இயற்பியலை எடுத்தேன்… வான்வெளி இயற்பியலில் பட்டப் படிப்பு மேற்படிப்பு முடித்தேன்.

தரப்பட்டியலில் முதலில் வந்ததால் பல்கலைக்கழகமே அரசாங்கத்திற்கு பரிந்துரைக்க மற்ற பல்கலைக்கழகத்தில் இருந்து என்னைப் போன்று தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த மற்ற ஐந்து பேருடன் நானும் சேர்ந்து அலைஸ் ஸ்ப்ரிங்சில் உள்ள வான்வெளி சிறப்பு ஆராய்ச்சி மையத்தில் பயிற்சியை துவங்கினோம். மூன்று வருடங்கள் தொடர்ந்து கடும் பயிற்சி.. ஆறு பேரும் சமமான தரத்தில் சிறப்பான பயிற்சி எடுத்துக் கொண்டோம். நான் சிறுவயதிலிருந்து எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது, ஏன் வந்தது என்று நினைக்கும் படியாக அந்த முடிவு எனக்கு பேரிடியாக இறங்கியது. என் கை கால்கள் நடுங்க ஆரம்பித்தது… சூரிய மண்டலத்தை கடந்து மற்றும் ஒரு சூரிய குடும்பத்திற்கு செல்ல வான்வெளி பயணத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரில் நான் இல்லை.

இந்தப் பேரதிர்ச்சி என் வாழ்க்கையின் முடிவல்ல அதுதான் தொடக்கம் என்று ஒரே மாதத்தில் புரிந்து கொண்டேன். நான் தேர்வாகாமல் இருந்தது ஆஸ்திரேலியாவில் சாதாரணமாக இருந்தாலும் என் பூர்வீக தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது, என் மீதும் என் இனத்தின் மீதும் இருந்த அதீத பற்றுதலால் சிலர் இந்தத் தேர்வின் மீதே சந்தேகத்தை கிளப்பினாலும்… அது உண்மை அல்ல.

என் தேர்வு இன்மை தமிழ்நாட்டில் பேசு பொருளாகி, விவாதங்களாகி, ட்விட்டரில் ட்ரெண்டாகி கோவிட் 19 வைரஸ் போல் இந்தியா முழுவதிலும் கல்லூரி மாணவர்கள் இடையே தீயாக பரவி எங்கும் பேசு பொருளாகி சுருங்கச் சொல்லப்போனால் அதுவே எனக்கு, என் கனவுகளுக்கு ஆரம்ப புள்ளியாக துவங்கியது.

தமிழ்நாட்டின் வள்ளுவன் வான்வெளி மையத்தின் இயக்குனர் கார்த்தி சரவணன் தமிழ்நாட்டு அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்ய தமிழ்நாடு அரசாங்கம் இந்திய அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்ய… பார்லிமெண்டில் விவாதம் செய்து ஏன் கூடாது பூர்வீக இந்தியர் தானே என்று விவாதத்தின் முடிவில் ஓவர்சீஸ் இந்தியன் சிட்டிசன் என்ற அடிப்படையில் ஆஸ்திரேலிய அரசாங்கத்தை கேட்க, ஆஸ்திரேலியா அரசாங்கமும் பெருந்தன்மையாக ஒத்துக் கொள்ள, தமிழ்நாட்டில் வேலூருக்கு அருகில் உள்ள ஏலகிரி மலையில் அமைந்துள்ள வள்ளுவன் வான்வெளி மையத்திலிருந்து என் ஒருத்தியை மட்டும் நம் சூரியக் குடும்பத்திற்கு அருகில் உள்ள ஒரு சூரிய குடும்பத்தின் கிரகத்திற்கு அனுப்ப முடிவு செய்து உறுதி செய்தனர். இப்படித்தான் முதல் ஆஸ்திரேலிய தமிழ் பெண் இந்தியாவின் மூலம் ஒரு நீண்ட பயணத்திற்கு தயாரானேன்.

அறிவியலில் நிறைய கேள்விகள் என் மனதை துளைத்து கொண்டே இருந்தது, பிரச்சனை என்னவென்றால் அதை யாரிடமும் பகிர முடியாது… எல்லா கேள்விகளும் இதுவரை அறிவியல் ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகளை கேள்விக்குறியாக்கும் கேள்விகளே!

உதாரணத்துக்கு ஒன்றை சொல்கிறேன், அறிவியலின் தந்தை ஆல்பர்ட் ஐன்ஸ்டைனால் சொல்லப்பட்ட பிரபஞ்ச வேக விதி… அதாவது, இந்த பிரபஞ்சத்தில் ஒளியை விட வேகமாக எதுவும் செல்ல முடியாது.. அப்படிச் செல்லும் பட்சத்தில் நேர சிதைவு உண்டாகி இறந்த காலத்திற்கோ அல்லது எதிர்காலத்திற்கோ செல்லும் கால எந்திரமாக மாறிவிடும். என் கருத்து கொஞ்சம் வித்தியாசமானது, நமக்குத் தெரிந்தவரை அல்லது ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு தெரிந்தவரை என்று புரிந்து கொண்டால் ஏற்றுக்கொள்ளலாம்… ஆனால் அதுதான் பிரபஞ்சத்தின் வேக விதி என்று வரையறுத்துக் கூற முடியாது… ஒளியின் வேகம் வினாடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர்கள்… அதைவிட வேகமாக சென்றாலும் அது 3 லட்சத்துக்கு மேல் இருக்குமே தவிர நேரம் எப்படி நெகட்டிவ்வாக செல்ல முடியும்? இதைப் பற்றி எவ்வளவு படித்தாலும் என்னால் என் கருத்தை மாற்றிக் கொள்ள முடியவில்லை…..

இயற்கைக்கு நியதி என்று ஒன்று உண்டா? இது போன்ற பல கேள்விகள் எனக்கு ஏற்றுக்கொள்ளும்படியான விடை தெரியாமல் நிரந்தர ஊசலாட்டத்தில் உள்ளது.

சிறப்பு அனுமதியில் ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் அதீத எதிர்பார்ப்பில் என் நீண்ட பயணத்தை தொடங்க இந்தியா வந்தடைந்தேன். சில வருடங்களுக்கு ஒரு முறை எப்போதுமே தமிழ்நாட்டுக்கு வந்திருந்தாலும், இந்த முறை வந்தது மிக வித்தியாசமாக இருந்தது.. தனிப்பட்ட ஊடக தொலைக்காட்சிகளும், தொலைக்காட்சி நிறுவனங்களும் நிறைந்திருக்க சரளமான தமிழில் பேட்டி கொடுக்க தடுமாற…. பயணம் முடிந்து வந்தவுடன் என் தாய் தமிழ் மொழியை தடுமாற்றம் இல்லாமல் சரளமாக தங்கு தடை இல்லாமல் எந்தவித தயக்கமும் இல்லாமல் பேச பழக வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டேன். வள்ளுவன் வான்வெளி மையத்தின் இயக்குனர் கார்த்தி சரவணன் சென்னை விமான நிலையத்திலிருந்து அழைத்துச் சென்றார்… முதல் முறையாக சந்திக்கிறேன். சென்னையை அடுத்து இருந்த பூவிருந்த மல்லியை கடந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் வான்வெளி மையத்தின் தலைமை அலுவலகம் அமைந்திருந்தது… அதுவரை பேசிக்கொண்டே வந்தோம். அற்புதமான அறிவாற்றலை பெற்றிருந்தார்… தமிழுக்கும் வான்வெளி ஆராய்ச்சிக்கும் அதிகம் சம்பந்தம் இருக்கிறது போல் தெரிகிறது… இந்திய வான்வெளி ஆராய்ச்சியில் பெரும் பங்கு தமிழர்கள் தான் என்பது வியப்பில்லை. வான்வெளி மையத்திலேயே ஒரு சிறப்பு தங்கும் விடுதியில் தங்க வைத்தார்கள்… அங்கிருந்த பாதுகாப்பு ஆஸ்திரேலியாவில் கொடுக்கப்பட்ட பாதுகாப்புக்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல் இருந்தது… நான் ஒருத்தி மட்டுமே பயணத்தில் செல்ல இருந்ததால் உச்சக்கட்ட பாதுகாப்பு எனக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அடுத்த 15 நாட்களும் அங்கு தான் தங்கி இருந்தேன். பதினாறாவது நாள் வேலூர் வழியாக வேலூரை அடுத்த ஏலகிரிக்கு அழைத்துச் சென்றார்கள். ஏலகிரி மலை முழுவதுமே அரசாங்க கட்டுப்பாட்டில் இருந்தது… சிறிய மலை தான், ராணுவ பாதுகாப்புடன் மேலே சென்றோம்.

நான் காண்பது கனவா என்கிற எண்ணம் வரும் அளவிற்கு மிக மிக பிரம்மாண்டமான ஏவு தளம் அமைக்கப்பட்டு இருந்தது. புறப்படுவதற்கு இரு நாட்களுக்கு முன்பு வரை அங்குதான் தங்கி இருக்க வேண்டும்.. உலகத் தமிழர்களிலேயே மிகப்பெரிய பணக்கார தொழிலதிபர் இந்திய அரசாங்கத்துடன் இணைந்து தயாரித்த ராக்கெட் என்பதால் கண்ட்ரோல் பேனலில் ஆங்கிலத்துடன் தமிழ் குறியீடும் இருந்தது… சோழர்களுக்குப் பிறகு இப்போதுதான் நாம் தலைநிமிர்ந்து நிற்கிறோம் என்ற எண்ணம் என்னை மீறி என் நினைவில் வந்து சென்றது.

தமிழர்களின் தலைசிறந்த ஆராய்ச்சியில் உருவான இந்த ராக்கெட் முதல் முறையாக வோர்ம் ஹோலில் பயணப்பட போகிறது.. இது ரகசியமாக நான் பயணம் முடிந்து திரும்பும் வரை வைக்கப்பட போவதாக முடிவு எடுத்திருந்தார்கள். இதுவரை சூரியக் குடும்பத்தை கடந்து எந்த ஒரு மனிதரும் பயணப்பட்டது இல்லை.. முதல் முதலில் நான் பயணிக்க போகிறேன், என் பயணம் எங்கு நோக்கி என்பதும், எவ்வளவு நாட்கள் என்பதும் மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. எனக்குத் தெரியும்…. என்று நான் அஸ்ட்ரோ நாட்டாக முடிவு செய்து இருந்தேனோ அன்றையிலிருந்தே மரணம் எனக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை… என் ஒட்டுமொத்த பயணமும் NDA எனும் நான் டிஸக்லோசர் அக்ரீமெண்டில் இருப்பதால் இதற்கு மேல் என்னால் எதுவும் தெரிவிக்க இயலாது.

பயண தேதியும் வந்தது…. பயணப்பட்டு இதோ பயணம் முடிந்து திரும்பிக் கொண்டிருக்கிறேன்… மூன்று மாதங்கள் எப்படி கடந்தது என்றே தெரியவில்லை.. என் விண்கலம் என்ட்ரி பாயிண்ட்டில் விடுபட்டு அதிவேகத்தில் திட்டமிட்டபடி சென்னைக்கும் அந்தமானுக்கும் இடைப்பட்ட கடலில் விழுந்தது.. உடனே மீட்கப்பட்டு சென்னை வந்து அடைந்ததும் மூன்று நாட்கள் வெளி உலக தொடர்பின்றி தனிமைப்படுத்திக் கொண்டு இதோ இன்னும் அரை மணி நேரத்தில் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மிகப் பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறேன். நிகழ்ச்சிக்கு ஆஸ்திரேலிய, இந்திய பிரதம மந்திரிகளும் இருநாட்டு வான்வெளி மைய ஆராய்ச்சி நிபுணர்களும் கலந்து கொள்ளப் போவதாக தெரிந்தது.

இதோ மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான மேடைக்கு அழைத்துச் சென்றார்கள். கடலென மக்கள் வெள்ளம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு பிறகு இப்போதுதான் என்று வரும் வழியில் கூறினார்கள். அது என்ன ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி என்று கேட்க தோன்றியது ஆனாலும் கேட்கவில்லை… என் பெற்றோருக்கு தெரிந்திருக்குமோ என்னவோ?. நான்கு மாதங்களுக்குப் பிறகு முதன்முதலாக என் பெற்றோரை அந்த மேடையில் பார்த்தேன்… ஓடி சென்று கட்டி அணைத்தேன்.. சில நிமிடங்கள் தான்.. அதிக நிகழ்ச்சி நிரல் இருந்ததால் இரு பிரதமர்களையும் வணங்கி விட்டு மக்கள் ஆரவாரத்திற்கு கை அசைத்து விட்டு அமர்ந்தேன்.

( இங்கு ஒன்றைக் கூற வேண்டும் பயண துவக்கம் கிட்டத்தட்ட ரகசியமாக இருந்தது… பொதுமக்கள் பார்வைக்கே நான் வரவில்லை… பயண பாதுகாப்பு என்று கூறினார்கள்…)

இரு பிரதமர்களும் வாழ்த்தி பேசினார்கள். அதற்குப் பிறகு வள்ளுவன் வான்வெளி மையத்தின் இயக்குனர் கார்த்தி சரவணன் முதன்முதலாக உலகிற்கு அறிவித்தார் என் பயணத்தை பற்றி… உலகின் முதன் முதல் வோர்ம் ஹோலை பயன்படுத்தி சுமார் 12 ஒளியாண்டுகள் அப்பால் உள்ள கிரகத்திற்குச் சென்று வந்ததை பற்றி.. அந்த நிமிடம் உலகம் முழுவதிலிருந்து வந்த நிருபர்கள் பேய் அறைந்தது போல் ஆனார்கள்… இதை யாரும் எதிர்பார்க்கவில்லை என்று அப்போது தெரிந்தது.. இன்னும் சொல்லப்போனால் பயணத்தின் ஐந்தாவது நாள் தான் எனக்கே இந்த திட்டம் முழுமையாக தெரிந்தது. இந்தப் பயண முறை அந்த நிமிடங்களில் உலகம் முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கும் என்று யூகிக்க முடிகிறது…. இந்தியா 1975 ல் அணுகுண்டை வெடித்த போது காக்கப்பட்ட ரகசியம் போலே இந்தப் பயணம் காக்கப்பட்டதாக எல்லோரும் கூறினார்கள், வள்ளுவன் வான்வெளி மையமும் இந்திய வான்வெளி மையமும் இணைந்து ரகசியமாக உருவாக்கிய இந்த பயண திட்டம். வள்ளுவன் வான்வெளி மையம் உலகத் தமிழ் பெரிய பணக்காரர்களால் அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் போல் உருவாக்கப்பட்டது.

கார்த்தி சரவணன் உலக நிருபர்களை பார்த்து கூறினார்.. ‘நர்மதாவிடம் ஐந்து கேள்வி மட்டும் கேட்கலாம்.. ஏற்கனவே முடிவு செய்த அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் ஜப்பான் நிருபர்கள் ஒரு கேள்வி கேட்க அனுமதிக்கப்படுவர்’ என்று.

முதலில் அமெரிக்க நிருபர்…

‘வோர்ம் ஹோல் பயணம் எப்படி இருந்தது? விளக்கிச் சொல்லவும்.’

நர்மதா, ‘ நீங்கள் எல்லோரும் எதிர்பார்ப்பது போல் ஸ்டார் கேட் தொலைக்காட்சி சீரியலில் வருவது போல் இல்லை, அதில் நுழைந்தது மட்டுமே தெரியும் வெளியே வரும்போது ஒரு பெரிய தள்ளல் போல் உணர்ந்தேன் அவ்வளவுதான் ‘

ரஷ்ய நிருபர்…

‘அதிலிருந்து வெளியே வந்தவுடன் மனநிலை எப்படி இருந்தது?’

நர்மதா, ‘ ஒரு ஆழ்ந்த தூக்கத்திலிருந்து எழுந்தது போல் இருந்தது’

ஆஸ்திரேலிய நிருபர்…

‘ ஆஸ்திரேலியாவில் நீங்கள் மூன்றாவதாக வந்தீர்கள்… இப்போது அவர்களை முந்தி பயணம் செய்து விட்டு வந்தீர்கள்… அவர்களை வெற்றி பெற்ற மனநிலை உங்களுக்கு உள்ளதா?’

நர்மதா, ‘ இல்லை, அவர்கள் என்னுடைய சக நாட்டவர்கள்.. என்னை விட திறமைசாலிகள்.. அட்த்த எண்ட் ஆஃப் தி டே…. என்று கூறுவோம் இறக்கும்போது தான் தெரியும் அவரவர்கள் வாழ்க்கை எப்படி இருந்தது என்று’

ஜெர்மனி நிருபர்…..

அந்த கிரகத்தைப் பற்றி விவரிக்கவும்..

நர்மதா, ‘ அதிநவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய கிரகம்’

ஜெர்மனியே நிருபர் தொடர்ந்து கேட்க முற்பட்டபோது, கார்த்தி சரவணன் தடுத்து நிறுத்தி ‘நீங்கள் கேட்கும் போதே எல்லாம் உள்ளடக்கிய கேள்வியாக இருக்க வேண்டும் ‘ என்றார்.

ஜப்பான நிருபர்….

‘ உங்களுக்கு அங்கு எல்லா ஒத்துழைப்பும் கிடைத்ததா?

நர்மதா, ‘ ஆமாம்!’

அதோடு பேட்டி முடிந்து இனி நீங்கள் பதில் அளிக்க தேவை இல்லை என்று என்னிடம் கூறினார்கள்.

நான்கு மாதங்களுக்குப் பிறகு அன்று இரவு என் பெற்றோர்களுடன் தங்கினேன்.

மறுநாள் காலை தான் பெரியப்பாவிடமிருந்து போன் வந்திருந்தது…..

அந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று மறுபடி பெரியப்பாவிடமிருந்து போன் வந்தது… ஞாயிறு காலை 10 மணிக்கு வீட்டிற்கு வர முடியுமா என்று.. என் பெற்றோருக்கு பெரு மகிழ்ச்சி… எனக்கும்தான்!…. சரி என்றேன்.

ஞாயிறு காலை 7:00 மணிக்கே பெரியப்பா அப்பாவிற்கு whatsapp-ல் தேவையான எல்லா விவரங்களையும் அனுப்பி இருந்தார்.

ஞாயிறு காலை ஒன்பது 45 க்கு அவருடைய வீட்டை சென்று அடைந்தோம்… செக்யூரிட்டி ஆபீஸில் இருந்து உடனடியாக உள்ளே அழைத்துச் சென்றார்கள். இன்ப அதிர்ச்சி……

பெரியப்பா பெரியம்மாவை மட்டும் எதிர்பார்த்து சென்ற நாங்கள் அங்கு இரு அண்ணன்களும் அண்ணிகளும் அக்காவும் குடும்பத்துடன் இருப்பார்கள் என்று நினைக்கவே இல்லை….

இதைக் கூறியதற்கு அண்ணன்கள் இருவரும் உரிமையாக கோபித்துக் கொண்டார்கள்…

பெரியப்பா வீடு விருந்தோம்பலுக்கு பெயர் பெற்றது….

இரண்டரை மணி நேரங்கள் கடந்து சென்றதே தெரியவில்லை…

நர்மதா வாம்மா மாடியில் நானே சிறிய தோட்டம் அமைத்திருக்கிறேன் காண்பிக்கிறேன்… என்று பெரியப்பா கூறியதும் புரிந்து கொண்டேன்..

எனக்கு பல்பிடேஷனே வந்துவிட்டது…

அவரின் கேள்விகளை குறித்து அல்ல அவைகளுக்கு நான் பதில் அளிக்க முடியுமா என்று… எல்லாம் NDA அக்ரீமென்டால்…. என் பதிலில் அதை மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்… அதனால் தான் இந்த படபடப்பு….

நர்மதா, இப்போது சொல் எதை மறைத்தாய்?

கேட்ட கேள்விகளுக்கு எதையும் மறைக்கவில்லை பெரியப்பா…

சரி நேரடியாக கேட்கிறேன், அங்கு விபரீதமாக ஏதாவது நடந்ததா?

‘இல்லை’

நம்மை விட தொழில்நுட்பத்தில் நவீன கிரகமா அது?

ஆமாம் பெரியப்பா.

உனக்கு எல்லா ஒத்துழைப்பும் கிடைத்ததா அங்கு?

ஆமாம், எல்லா ஒத்துழைப்பும் கிடைத்தது.

சரி நேரடியாக கேட்கிறேன் ஏன் இந்த பேய் அறைந்தது போன்ற முகம்?

நான் பதில் கூறுவதற்கு பதிலாக, உங்களை ஒன்று கேட்கிறேன் பெரியப்பா…. இயற்கை அன்னை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

என்ன நினைப்பது இயற்கை இன்றி நாம் இல்லை…

ஏதாவது நியதியில் இந்தப் பிரபஞ்சம் இயங்குகிறது என்று நினைக்கிறீர்களா?

ஆமாம் அதில் என்ன சந்தேகம்?

நான் என் மனதில் தோன்றியவற்றை கூறலாமா வேண்டாமா என்று தயங்கி நின்றேன்..

அவர் என்னை கூர்ந்து பார்த்தார்.. அவருக்கு புரிந்தது.. அவருடைய பதில் தவறு என்று….

ஆமாம், இயற்கைக்கு நியதி என்று ஏதுமில்லை….

பெரியப்பா, இப்போது நான் கூற போவதை இக்கணமே மறந்து விடுங்கள்…..

என்ன மிகப்பெரிய விஷயம் போல் இருக்கிறது?

கடவுளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

உனக்கே தெரியும் நான் எவ்வளவு கடவுள் பக்தி உடையவன் என்று….

பெரியப்பா, அந்த ஒட்டுமொத்த கிரகமே இயந்திர மனிதர்களால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது…

இரு வாரங்கள் என்னை அந்த இயந்திர மனிதர்கள் அந்த கிரகத்தின் மூலை முடுக்கெல்லாம் அழைத்துச் சென்றார்கள்….. ஒரு உயிரினத்தையும் அங்கு நான் காணவில்லை… நமது போன்றே எல்லா நகரங்களும் இருக்க எல்லாவற்றையும் உருவாக்கியதும் பராமரிப்பதும் இயந்திர மனிதர்களே…. எனக்கு ஒரே ஒரு கேள்வி, ” அந்த கிரகம் முழுவதும் யாருக்காக இயங்கி கொண்டிருக்கிறது? “

bottom of page