புரிதல் By சிவா
- melbournesivastori
- Dec 12, 2020
- 2 min read
நண்பர் ஒருவர் மதிய விருந்திற்கு அழைத்து இருந்தார், நானும் சென்றேன். ஒரு பத்து பேர் இருப்போம்…. விருந்து மிகவும் நன்றாக இருந்தது… உண்டோம் ஆனால் களைக்காமல் அவரவர் பேச்சைத் தொடங்கினோம். அதில் ஒருவர் சங்கர் புதிய நண்பர், வந்தவுடன் எனக்கு அறிமுகம் செய்தார் நண்பர்…. சங்கர் கேட்டார் என்னைப்பார்த்து, ஒரு சினிமாவின் பெயரைச் சொல்லி அதை பார்த்தீர்களா என்று, இல்லை அவருடைய நடிப்பு அவ்வளவாக எனக்கு பிடிக்காது, பார்க்கவில்லை என்றேன். உடனே அவர் என்னை பார்த்துக்கேட்டார், ‘ஓ நீங்கள் இவருடைய ரசிகரா?’ என்று. உடனே நான் ‘நடிப்பை நடிப்பாக பார்ப்பேன் எல்லோருடைய படங்களும் பிடிக்கும் நன்றாக நடித்திருந்தால்’ என்றேன். அவருக்கு புரிந்ததோ இல்லையோ ஆனால் கோபமாக என்னை பார்த்து கேட்டார் அது எப்படிங்க இவரைப் பிடிக்கவில்லை என்றால் நீங்க அவருடைய ரசிகர் ஆகத்தான் இருக்க முடியும் என்றார். இது எனக்கு வந்த சோதனையா ரோதனையா என்று புரியவில்லை…. ‘நான் யாருக்கும் ரசிகர் இல்லைங்க’ என்றேன். ‘இதற்கு சான்சே இல்லைங்க நீங்க மறைக்கிறீங்க’ என்றார். சரி நான் அவருடைய ரசிகராகவே வைத்துக்கொள்ளுங்கள் இந்த விவாதத்தை விடுவோம் இதோடு என்றேன். சங்கருக்கு மனத்திருப்தி இல்லை அவர் விடவில்லை… அவர் எதையோ கேட்கும் முன்பே நானே அவரிடம் கேட்டேன் உங்களுக்கு யாருடைய கதைகள் பிடிக்கும் என்று. பேச்சு முற்றுப்பெறவில்லை என்ற சந்தோஷம் அவருக்கு…. கதைகள் என்று கேட்டால் ஒருவர் பெயரைச் சொல்லி அவருடைய கதைகள் ரொம்ப பிடிக்கும் ஆனால் அவரை பிடிக்காது என்றார். வினோதமாக இருந்தது ஏன் என்று கேட்டேன். கதைகளை பிரமாதமாக எழுதுவார், ஆனால் அவரின் சொந்த வாழ்க்கை எனக்கு பிடிக்கவில்லை என்றார். ஏன் என்னவென்று விரிவாகச் சொல்லுங்கள் என்று கேட்டேன். அதற்கு சங்கர் ‘அவருடைய கதைகளைப் படிக்க ஆரம்பித்தால் வைக்கவே முடியாது அவ்வளவு விறுவிறுப்பாக நன்றாகவே எழுதுவார்…. இருந்தும் என்ன பிரயோஜனம், சொந்த வாழ்க்கையில் நல்லவர் இல்லை அவர்’ என்றார். எனக்கு ஒரே ஆச்சர்யம் அதிர்ச்சி, என்ன சொல்கிறார் இவர்….. நான் கேட்டேன் அவரை நேரடியாக தெரியுமா உங்களுக்கு என்று. அதற்கு சங்கர், இல்லை இல்லை அவரை பர்சனலாக தெரியாது.. எல்லாம் செய்தித்தாள்களில் படித்ததுதான் என்றார். என்ன தெரிந்து கொண்டீர்கள் அவரைப்பற்றி என்று கேட்டேன், அதற்கு அவர்.. ‘அவருடைய மனைவியை விவாகரத்து செய்துள்ளார் எனக்கு அது பிடிக்கவில்லை’ என்றார். என்ன காரணம் என்று தெரியுமா உங்களுக்கு என்று கேட்டேன். ‘எனக்கு அதெல்லாம் தெரியாதுங்க…. கதை எழுதுறவன் அதுக்கேத்த மாதிரி நடக்கணும் அவர்களைத்தான் நான் மதிப்பேன்’ என்றார். எனக்கு இவரை நினைத்து அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை…. எனக்கு, படைத்த பாத்திரங்களை அதற்கு ஏற்றவாறு எழுதுபவனே நல்ல எழுத்தாளன்… இவர் சொல்வதைப் பார்த்தால் கொலையை பற்றி எழுதினால் கொலைகாரனாக இருக்கவேண்டும் என்று அர்த்தமாகிறது… இந்த முடிவற்ற பேச்சுகளைத் தொடர விரும்பவில்லை நான் கிளம்புகிறேன் என்று என் நண்பரிடம் சொன்னேன், அதற்கு அவர் சங்கரும் நீங்கள் செல்லும் வழியில் தான் ஏதோ ஒரு கிளினிக் செல்ல வேண்டும் விட்டு விடுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு என்ன என்று சங்கரையும் அழைத்துச் சென்றேன். சங்கர் அந்த கிளினிக்குள் சென்று சிறிது நேரம் கழித்து வெளியே வந்தார், என்ன எல்லாம் ஓகே வா என்று கேட்டேன். அதற்கு சங்கர், என்னுடைய நுரையீரல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது அதிகமாக சிகரெட் பிடிப்பதால் இனி சிகரெட் பிடிப்பதை நிறுத்த வில்லை என்றால் மிகவும் பேராபத்தாக முடியும் என்று டாக்டர் கூறியதாக கூறினார். சரி குறைத்துக் கொள்ளுங்கள் என்றேன்.. பேசிக்கொண்டே எதிரே இருந்த டீக்கடையில் டீ அருந்த ஆரம்பித்தோம்…. அப்போது கிளினிக்கில் இருந்து வெளியே வந்த டாக்டர் சிகரெட்டைப் பற்ற வைத்தார். அதிர்ச்சியுடன் சங்கரை பார்த்து கேட்டேன், அந்த டாக்டரா உங்களைப் பார்த்தது என்று… ஆமாம் என்று தலையசைத்தார். நான் புன்முறுவலோடு சங்கரை பார்த்து சொன்னேன் ‘அட விடுங்க நீங்க சிகரெட் பிடிங்க உங்களைப் பார்த்த டாக்டர் சிகரெட் பிடிக்கிறார்’ என்று. சங்கருக்கு என் மேல் கோபம் வந்துவிட்டது ‘அவர் எப்படி இருந்தால் என்னங்க எனக்கு அவர் சொல்வதில் உண்மை இருக்கிறது அதை நான் பாலோ செய்ய வேண்டும், என் நலனுக்காக தானே அது’ என்றார். நான் புன்முறுவலோடு சங்கரிடம் சொன்னேன்… ‘அதையே தான் நானும் சொன்னேன், உங்கள் மன நலன் கருதி கதைகளை மட்டும் படியுங்கள், அதை எழுதிய எழுத்தாளரைப் பற்றி ஆராய்ச்சி வேண்டாமென்று… ‘ என்றேன்.
தொடர்புக்கு @ melbournesivastories@gmail.com



