பார்வை By சிவா
- melbournesivastori
- Dec 12, 2020
- 4 min read
வார இறுதி நாட்களில் வெளியே சென்று தங்க ஏற்கனவே பதிவு செய்த இடத்தை நோக்கி கிளம்ப தயாரானேன். நான் நினைத்தும் பார்க்கவில்லை இன்று செல்ல போகும் இடத்தில் என்னுடைய நீண்ட நாட்களுடைய கேள்விகளுக்கு விடை கிடைக்கப் போவது என்று…. விடையா அல்லது விளக்கமா? நான் தங்க பதிவு செய்திருந்த இடம் வீட்டிலிருந்து வெகு தொலைவில் இல்லை ஒரு மணி நேர பயணத்தில் சென்று அடைந்து விடலாம். எக்ஸ் மேன் திரைப்படங்களில் நடித்த யூ ஜேக்மேன் விடுமுறை வீடும் அங்கு தான் உள்ளது. அங்கும் சூப்பர் மார்க்கெட் உள்ளது இருப்பினும் வீட்டு அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் இரண்டு நாட்களுக்கு தேவையான எல்லா பொருட்களையும் வாங்கி வைத்துக் கொண்டேன். வீட்டு அருகில் உள்ள 7/11பெட்ரோல் ஸ்டேஷனில் பெட்ரோல் நிரப்பிக்கொண்டேன். பயணத்தைத் தொடங்கினேன்….. போகும் வழியெல்லாம் இயற்கை தன் அழகை சிதற விட்டிருக்கும்…. இயற்கையை ரசிப்போருக்கு ஒவ்வொரு அங்குலமும் விருந்துதான். தனிமைப் பயணம்.. சராசரி மனிதர்களில் இருந்து நான் வேறுபட்டவன் என்று எப்போதும் என்னை கருதியது இல்லை… ஆனால் ஏனோ எப்போதும் தனிமையை விரும்பினேன் இயற்கையை ரசித்தேன். என்னுடைய பொழுதுபோக்கு என்னுடைய விருப்பங்கள் என்னை மற்ற நண்பர்களிடமிருந்து பிரித்துவிட்டது. வேறொன்றுமில்லை நண்பர்களின் get-together யில் என்னால் ஆர்வமுடன் எப்போதும் பங்கேற்க முடியவில்லை… காரணம் என்னுடைய விருப்பம் வேறு அவர்களுடைய விருப்பம் வேறு… பொதுவாக நம் நண்பர்கள் அரசியலை பற்றியோ அல்லது சினிமாவை பற்றியோ தான் பேசுகிறார்கள்… நான் என்னை பெரிய மேதாவி என்று கூறிக் கொள்ளவில்லை தெரிந்தோ தெரியாமலோ சிறுவயது முதலே என்னுடைய விருப்பம் என்னுடைய பொழுதுபோக்கு என்னுடைய கேள்விகள் எல்லாமே வான்வெளியை நோக்கியே இருந்தது. அதனால்தான் பொதுவாக எல்லா கூட்டங்களிலும் கலாட்டாக்களில் பங்கேற்காமல் புன்முறுவலுடன் பொழுதை கழித்து திரும்பி இருக்கிறேன்.
பொது வாழ்வு என்று எனக்கு ஏதும் இல்லை.. தாய் தமிழ் நாட்டின் அரசியலிலும் நாட்டம் இருந்ததில்லை…. இருப்பினும் திரு எஸ் பி பி யின் மரணம் மனதை என்னவோ செய்தது… இத்தனைக்கும் இசையைப் பொறுத்தவரை நான் ஞான சூனியம்… இறந்த அவரின் ஆத்மா எங்கே சென்றிருக்கும்? எனக்குள் ஏற்கனவே இருக்கும் மில்லியன் கேள்விகளில் இந்த கேள்வியை சேர்ந்துகொண்டது. நான் தங்கப் போகும் இடம் வந்துவிட்டது. அங்கு சாவியை வைத்திருக்கும் பெட்டியின் நம்பர்களை என் மொபைல் போனில் உள்ள டெக்ஸ்ட் மெசேஜ் நம்பர்களைப் பார்த்து தட்டித் திறந்து சாவி எடுத்துக் கொண்டேன். கதவைத் திறந்து உள்ளே நுழைந்து பார்த்தேன்.. இரண்டு படுக்கை அறை கொண்ட தனி விடுமுறை வீடு அது. பின்புறம் திறந்து பார்த்தேன். மிக ரம்மியமான மலைச்சாரல்…. சுற்றிலும் எந்த வீடுகளும் இல்லை. தனிமையை விரும்பும் எனக்கு தனி வீடு! வெளியே சென்று தோட்டத்தில் இருந்த பார்பிக்யூவை பற்ற வைத்தேன்… மெல்லிய குளிருக்கு அதன் முன் நிற்பது நன்றாக இருந்தது… மார்க்கெட்டிலிருந்து வாங்கிவந்த ஏற்கனவே மேரி நெட் செய்த சிக்கன் டிரம் லட்ஸ் பரப்பி வறுக்க ஆரம்பித்து VSOP யை கொஞ்சம் ஊற்றிக் கொண்டு பருக ஆரம்பித்தேன். மேகங்களே இல்லாததால் அந்த முன்னிரைவிலேயே நட்சத்திரங்கள் தெரிய ஆரம்பித்தது.. சாபக்கேடா இல்லை வரப்பிரசாதமா…. பல கேள்விகள் மனதில் தோன்ற ஆரம்பித்தது. இது மலைப்பிரதேசம் என்பதால் மொபைல் ரிசப்ஷன் இருக்காது… பொதுவாக விடுமுறையை கழிக்க விரும்பும் மக்கள் விரும்புவதும் இதுதான். போன் தொந்தரவு இல்லை மக்கள் நடமாட்டம் இல்லை தனிமையை விரும்பும் எவருக்கும் இது வரப்பிரசாதமே! இரவு மணி ஒன்பதரை ஆகிவிட்டது, கோடை காலமாக இருப்பினும் பனி என் மேல் இறங்க ஆரம்பித்தது… கேம்ப் பயரை அணைத்துவிட்டு வீட்டிற்குள் வந்து அமர்ந்தேன். சிறிது நேரம் Carl Sagan புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன்… சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த அற்புதமான வான் ஆராய்ச்சியாளன்.. விஞ்ஞானத்தை way of திங்கிங் என்று சொன்னவரும் அவர்தான்… ஒரு புரட்சி விஞ்ஞானி. இவரைப் போன்று நம்மூரில் ஏன் நிறையப்பேர் இருப்பதில்லை என்று நினைத்துப் பார்த்தேன்…. நிறைய பேர் இருப்பார்கள் அவர்களை, அவர்களின் கருத்துக்களை மக்களுக்கு எடுத்துச் செல்ல எந்த ஊடகமும் தயாராக இல்லை அதுதான் சரியான காரணமாக இருக்க முடியும். நம் தாய்த்திரு நாட்டின் சாபக்கேடு அதுதான்… அரசியல், கிரிக்கெட், சினிமா இந்த மூன்றும் பொதுமக்களின் 90 சதவிகித நேரத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. இதைப்பற்றி நினைப்பதில் எந்தவித பயனும் இல்லை… நான் தூக்கத்தை தழுவினேனோ அல்லது தூக்கம் தான் என்னை தழுவியதோ தெரியவில்லை தூங்கிவிட்டேன்.
மணி எத்தனை என்று தெரியவில்லை, ஏதோ உள்ளுணர்வு யாரோ என்னையே பார்ப்பது போன்று… திடுக்கிட்டு எழுந்தேன். கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை என்று சொல்வார்களே எனக்கு எதுவுமே ஓடவில்லை என் நினைவுகளைத் தவிர. கிடுக்கிப்பிடி இங்கு அங்கு என்று இல்லாமல் என் உடல் முழுதும் பிடித்தது போல் இருந்தது. ஒரு உருவம் என் அருகில் நின்று இருந்தது…. எனக்கு பேச தோன்றியது ஆனால் வரவில்லை… ‘நான் உன்னை ஒன்றும் செய்யப்போவதில்லை உன்னிடம் பேசவே வந்தேன்’ அது கூறியது… இல்லை கூறியதாக நான் நினைத்துக் கொண்டேனோ?! ‘நான் தான் கூறினேன்’ இப்போது புரிந்தது… அந்த உருவம் என்னிடம் எதைப் பேச நினைக்கிறதோ அது எனக்கு மனதாலே புரிந்துகொள்ள முடிந்தது.. நான் நினைப்பதையும் அந்த உருவத்தால் புரிந்துகொள்ள முடிந்தது… டெலிபதி இருக்கிறதோ இல்லையோ என்று பல நாட்களாக என்னிலிருந்த கேள்விக்கு இன்று விடை கிடைத்து விட்டது… ஆமாம் இந்தப் பேச்சுக்கள் அனைத்தும் டெலிபதி மூலமாகவே நடந்தது. ‘நான் இப்போது உன்னை விடுவிக்க போகிறேன் பயப்படாதே நான் உன்னை ஒன்றும் செய்யப்போவதில்லை, என்னிடம் நீ மனம்திறந்து பேசலாம்… என்னால் முடிந்தவரை உனக்கு விளக்கங்களைத் தருகிறேன்’ என்றது. மெதுவாக எழுந்து உட்கார்ந்தேன்… கொஞ்சம் தைரியம் வந்தது… டால் கிரே என்று சொல்வார்களே அந்த ஏலியன் போலவும் டால் வைட் என்று சொல்வார்களே அந்த ஏலியன் போலவும் இல்லாமல் இரண்டுக்கும் இடைப்பட்டது போலிருந்தது. திட்டவட்டமாகத் தெரிந்தது ரெப்டிலியன் வகையை சேர்ந்தது இல்லை இது. ‘நான் எங்கிருந்து வந்தேன் என்று பிறகு கூறுகிறேன்… வேறு ஏதாகிலும் நீ கேட்க நினைத்தால் கேள்’ என்றது. என்னுள் பல எண்ணங்கள் தோன்றி மறைந்தன பல கேள்விகள் தோன்றி மறைந்தன… ‘எதற்காக என்னை பார்க்க வந்தாய்? ‘ என்று மனதிற்குள் கேட்டேன்… இனி எங்களுக்குள் நடந்த பேச்சுக்களை நடந்தது நடந்தவாறே கூறுகிறேன்…. சிறுவயது முதலே உன்னில் பல கேள்விகள் இருந்தது.. உன்னுடைய இந்த விடாப்பிடியான எண்ணங்கள் எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது.. இது ஒரு காஸ்மோஸ் கனெக்ஷன்… விளக்கங்களைத் தேடாதே மேலே கேள். உன்னுடைய இந்த எண்ணங்களே என்னை இன்று உன்னை சந்திக்க வைத்தது… உங்களால் என்னுடைய எல்லா கேள்விகளுக்கும் பதில் தர முடியுமா? எனக்குத் தெரிந்தவரை என்னால் முடிந்தவரை எல்லா விடைகளையும் விளக்கங்களைத் தர முயற்சிக்கிறேன். உங்களுக்கு மனிதர்களை விட அதிக சக்தி உள்ளதா? சக்தி என்று நீ எதை நினைக்கிறாய் என்று புரியவில்லை.. பல நாடுகளில் பல பிரச்சனைகள் உள்ளது உங்களால் அவைகளை நிவர்த்திக்க சக்தி உள்ளதா? நாங்கள் ஏன் உங்களுடைய பிரச்சினைகளை நிவர்த்திக்க வேண்டும்? நீங்கள் எங்களை விட சக்தி வாய்ந்தவர்கள் என்று நினைக்கிறேன் ஏனென்றால் வேறு கிரகத்திலிருந்து வந்து இருக்கிறீர்கள்.. ஏன் மக்களுக்கு நல்லது செய்யக் கூடாது? ஓ, நீ நினைப்பது மக்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் சக்தி…. எங்களால் முடியும், ஆனால் தீர்த்து வைக்க மாட்டோம்… உங்களுக்கென்று தனி பிரி வில் உள்ளது.. நீங்களே உருவாக்கிக்கொண்ட பிரச்சனைகளுக்கு நாங்கள் ஏன் தலையிடவேண்டும்? எனக்கு சட்டென்று உறைத்தது, இந்தக் கேள்வியை நான் ஏன் கேட்டேன்? இவர்களைக் கடவுளைப்போன்று நினைத்து விட்டேன் அதனால் தான்….. நான் கேட்கிறேன் மனிதர்களாகிய உங்களுக்கு நல்லபடியாக நடக்க வாய்ப்புகள் இருந்தும் நீங்கள் நடப்பது இல்லை ஏன்? உங்கள் எதிரில் இரண்டு எறும்பு கூட்டங்களுக்குள் சண்டை நிகழ்கிறது…. நீங்கள் சென்று அதை விலக்கி விடுவீர்களா? எந்தக் கூட்டம் செய்வது சரி என்று உங்களுக்கு எப்படி தெரியும்? இந்தக் கேள்விகள் என்னை சம்பட்டி எடுத்து அடித்தார் போல் இருந்தது… ஆமாம் இவர்கள் சொல்வது சரிதான்.
சரி நீங்கள் எங்கள் விஷயத்தில் எந்த விஷயத்திலும் தலையிடவே மாட்டீர்களா? தலையிடுமவோம் தலையிட்டும் இருக்கிறோம் எங்களுக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில். நான் புரியாமல் அந்த உருவத்தைப் பார்த்தேன். உனக்கு நான் விளக்கத்தை கூறினால் புரியாது இன்னும் பல ஆயிரம் வருடங்கள் ஆகும் உங்களுக்கு இவற்றையெல்லாம் புரிந்து கொள்ள. சிறு விளக்கத்தை தருகிறேன்… நம் பிரபஞ்சம் பல அளவுகோல்களை கொண்டது.. உங்களுக்குத் தெரிந்த டைமென்ஷன்கள் நான்கு மட்டுமே… உங்களில் சில விஞ்ஞானிகள் 6…7 இல்லை பத்து பதினொன்று என்று கூறுகிறார்கள். அவர்களாலும் அதைப் புரிந்து கொள்ள பல நூற்றாண்டுகள் ஆகும். இந்த டைமென்ஷனில் நீங்கள் செய்யும் பெரிய தவறு எங்களுடைய டைமென்ஷனில் வெளிப்பாடு இருக்கும்… அதனால்தான் தலையிடுவோம்.
எனக்கு புரிந்ததா புரியவில்லையா என்றே தெரியவில்லை… தலையை மட்டும் ஆட்டினேன். என்னுள் காலம் காலமாக நெரடிக்கொண்டிருக்கும் கேள்வியை கேட்டேன் கடவுள் யார்? என்று. இதற்கு பதில் சொல்லாமல் அந்த உருவம் என்னை பார்த்தது…. பிறகு கேட்டது.. தமிழ்நாட்டில் இருந்து ஒரு விண்வெளி வீரரும், அமெரிக்காவிலிருந்து ஒரு விண்வெளி வீரரும் சைனாவில் இருந்து ஒரு விண்வெளி வீரரும் தனித்தனியாக விண்கலங்களில் வேறு வேறு கிரகத்தை சென்று அடைகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்…. உன்னைப் போன்றே அந்த கிரகத்தில் உள்ளவர்கள் இவர்களைப் பார்த்து கடவுள் யார் என்று கேட்டால் என்ன பதிலை கூறுவார்கள்? தமிழ்நாட்டில் இருந்து சென்றவர் முருகர் என்றும் சைனாவிலிருந்து சென்றவர் புத்தர் என்றும் அமெரிக்காவிலிருந்து சென்றவர் ஏசு என்றும் கூறுவார்கள்…. இப்போது நீ கூறு…. யார் கடவுள் என்று? எனக்கு சடாரென்று எல்லாம் விளங்கிவிட்டது… அண்டத்தையும் அகிலத்தையும் புரிந்துகொள்ள ஒவ்வொருவரின் சொந்த தேடுதல் மட்டுமே பயன்தரும் என்று. சுளீரென்று கோடை வெயில் என் மேல் பட எழுந்து மணி பார்த்தேன் காலை 10 மணிக்கு மேலாகி விட்டிருந்தது…. இந்த விடுமுறை வீடு என் போதிமரமா?
தொடர்புக்கு @ melbournesivastories@gmail.com



