top of page

பிரபஞ்சம் By சிவா

  • melbournesivastori
  • Dec 15, 2020
  • 14 min read

அமிர்தி காட்டுக்குள் சென்ற ஆறு இளைஞர்களில் ஒருவரை காணவில்லை, இது வேலூர் முரசு, தினகரன், தினத்தந்தி, தினமணி ஆகிய நாளிதழ்களில் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில் வந்த செய்தி. காவல்துறை எல்லாவித முயற்சிகளையும் எடுத்தும் இன்று வரை கண்டு முடியவில்லை…. இந்தச் செய்தி 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி நாளிதழ்களில் வந்தது சுதந்திரதின செய்திகளில் இது கரைந்து மறைந்தது. நான் குமரன், வெகு நாட்களுக்கு பிறகு சந்தித்த என் நண்பர்களுடன் அமிர்தி காட்டுக்குள் செல்ல தீர்மானித்தேன்… இது டிசம்பர் மாதம், வேலூரில் அற்புதமான வானிலை. 3 பைக்குகளில் 6 பேராக புறப்பட்டுச்சென்றோம். அமிர்தி காடு சிறுவயது முதலே எங்களுக்கு மிகவும் பிடிக்கும். அமிர்தியை அடைந்தோம்… சிறிது நேரம் கிரிக்கெட் விளையாடினோம்.. பிறகு நீர்வீழ்ச்சியை நோக்கி நடந்து செல்ல ஆரம்பித்தோம்.

ஏதோ ஒரு ஈர்ப்பு, நண்பர்கள் நீர்வீழ்ச்சியில் இருக்க நான் மட்டும் மேலே ஏறிச்சென்றேன். ஒரு வித மயான அமைதி, பல மரங்களின் நடுவே நடந்து கொண்டே சென்றேன். சிறிது தூரத்தில் அடர்த்தியான மரங்களுக்கு நடுவே யாரோ சென்றதாக பார்த்தேனோ இல்லை பார்த்ததாக நினைத்துக்கொண்டேனோ தெரியவில்லை.. அந்த இடத்தை நோக்கி சென்றேன் மரங்களுக்கு நடுவே சிறு பாதை இருப்பது போல் தோன்றியது, அருகே சென்று பார்க்க சிறு ஒற்றையடிப் பாதை இருப்பது தெரிந்தது அதை நோக்கி நடந்து கொண்டிருந்தேன் எவ்வளவு தூரம் நடந்திருப்பேன் என்று தெரியவில்லை ஒரு பத்து நிமிடம் கடந்திருக்கும் ஜவ்வாது மலைத்தொடர்ச்சியின் பாறைகள் அங்கே தென்பட்டன, இரு பாறைகளுக்கு நடுவே ஒரு ஆள் நுழையும் அளவிற்கு வழி இருப்பதையும் கண்டேன்.

ஆர்வத்தை அடக்க முடியவில்லை சென்றேன் அதற்குள் சிறிது வெளிச்சம் இருந்தது, எனக்கு ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு உண்டு எங்கு டார்ச் லைட்டுகள் கண்டாலும் வாங்கிக்கொள்வேன் எப்போதுமே என்னிடம் ஒரு டார்ச்லைட் இருக்கும், அது இப்போது பயன்பட்டது. டார்ச் அடித்துக் கொண்டே சில நிமிடங்கள் நடந்தேன். அப்போது அற்புதமான நிகழ்வா; ஆச்சரியமான நிகழ்வா அல்லது அதிர்ச்சியான நிகழ்வா தெரியவில்லை அது நடந்தது…. சிறுவயது முதலே பலமுறை என் கனவுகளில் தோன்றி மறைந்த அந்த நிகழ்ச்சி… மனிதனைப் போன்ற தோற்றமுடைய ஒரு உருவம் அங்கே இருந்தது, அதுவோ; அவனோ பேசவில்லை என்னிடம் ஆனாலும் அது நினைப்பது எனக்கு தெரிந்தது புரிந்தது. உன் கேள்விகளுக்கான எல்லா அர்த்தங்களையும் விடைகளையும் தருகிறேன் என்னுடன் வா என்று அழைத்தது. செல்லலாமா இல்லை மறுபடியும் நண்பர்களிடம் சென்று அவர்களையும் அழைத்து வரலாமா என்று ஒரு சில கணங்கள் யோசித்தேன். நீ நினைப்பது எந்த வித பயனும் அளிக்காது அவர்கள் உன் மனோநிலையில் இல்லை உன் புரிதலிலும் இல்லை என்றது. ஒரு சில நொடிகள் தான், முடிவெடுத்துவிட்டேன் அதனுடன் செல்ல.

இதன் பின் நடந்த நிகழ்ச்சிகள் உங்கள் கற்பனைக்கு எட்டாதது; கருத்துக்கும் ஒவ்வாதது. சில மணி நேரம் கடந்து இருக்கும் என்று நினைக்கிறேன், வீட்டிற்கு செல்ல நேரம் வந்துவிட்டது நண்பர்கள் தேடுவார்கள்.. அவர்களை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அந்த சிறிய குகையில் இருந்து வெளியே வந்தேன். மதியம் ஆகிவிட்டிருக்கும் என்று நினைத்தேன் ஆனால் மாலை ஆகிவிட்டது போல் தெரிகிறது.. நீர்வீழ்ச்சியை நோக்கி நடந்தேன், அடைந்தேன். இப்போது வெளிச்சம் அதிகமாகியது.. ஒன்றும் புரியவில்லை.. பறவைகளின் சப்தங்கள் காலை வேலையை ஞாபகப்படுத்தியது. மொபைல் போனை எடுத்துப் பார்த்தேன் அவர்களுக்கு பேச, முழுவதுமாக சார்ஜ் செய்து எடுத்துவந்த போன் சுத்தமாக சார்ஜ் இல்லை….. நீர்வீழ்ச்சியில் நண்பர்கள் யாரும் இல்லை, மிகவும் குழப்பம் அடைந்தேன் காட்டின் முகத்துவாரத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். 15 நிமிட நடைக்கு பிறகு காட்டு முகதுவாரத்திற்கு வந்தேன். என் வாழ்நாளில் அடையாத அதிர்ச்சி அடைந்தேன், அந்த சிறு மிருகக்காட்சி சாலையில் கூண்டுகளிருந்த எல்லா மிருகங்களும் என்றோ இறந்தது போல் காட்சியளித்தன, எலும்புக்கூடுகள் மட்டும் மீதம் இருந்தது. வனத்துறையின் அலுவலகத்திற்கு முன்பு சிலந்தி கூடு கட்டியிருந்தது. பசி வயிற்றைக் கிள்ளியது அங்கிருந்த பழ மரங்களில் இருந்து பழங்களை பறித்து எடுத்து உண்டு கொண்டே ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். மிகுந்த அதிர்ச்சி; குழப்பம் என்னை முழுவதுமாக ஆட்கொண்டது. அந்த அதிர்ச்சியிலும் ஒரு பேரானந்தம் என் அருகே ஒரு மான் கூட்டம் என்னை கடந்து சென்றது. என் வாழ்நாளில் காட்டுக்கு உள்ளே தான் நான் மான் கூட்டத்தை பார்த்திருக்கிறேன்… மக்கள் நடமாடும் வழியில் என்றுமே பார்த்ததில்லை.

மிகவும் களைப்பாக இருந்தது, ஒரு அரை மணி நேரம் நடந்து இருப்பேன். வழியில் ஒரு குடிசை தென்பட்டது அருகில் சென்று குரல் கொடுத்தேன்… பதில் இல்லை கதவு திறந்தே இருந்தது. மெல்ல உள்ளே சென்று பார்த்தேன் பேயறைந்தது போல் இருந்தது, அதிர்ச்சியில்; பயத்தில் நடுக்கம் ஏற்பட்டது… அமிர்தி மிருகக்காட்சி சாலையில் பார்த்த அதே நிலைமைதான் அங்கு இருந்த ஒரு ஆண், பெண், மற்றும் ஒரு குழந்தைக்கும் ஏற்பட்டிருந்தது. 90% எலும்புக்கூடும் 10% சதையும் மீதமிருந்தது. எனக்கு அதிர்ச்சியில் இருந்து மீள பல நிமிடங்கள் பிடித்தது.. ஒன்றுமே புரியவில்லை குழப்பம் அதிர்ச்சி பயம் என்ன மனோ நிலையில் நான் இருக்கிறேன் என்றே தெரியவில்லை அந்த மனோநிலை வாழ்க்கையில் முதல் முதலாக ஏற்பட்டது. கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தேன். பசியினால் இறந்திருக்க வாய்ப்பில்லை ஏனென்றால் பக்கத்திலிருந்த பாத்திரங்களில் உணவுப் பொருள்கள் அப்படியே இருந்தன. பீதியில் கால்கள் நடுங்க இனி அங்கு தாமதிப்பது நல்லதல்ல என்று வெளியே வந்து ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். நினைவில் குழப்பம் கால்களில் நடுக்கம் ஒட்டுமொத்தத்தில் மரண பயம்…. இதற்கு அடுத்து அருகில் தென்படும் எந்த வீட்டிலாவது மொபைல் போனை சார்ஜ் செய்து கொள்ள வேண்டும் என்று விறுவிறுப்பாக நடக்க தொடங்கினேன். தூரத்தில் சில வீடுகள் தென்பட ஆரம்பித்தது, அங்கு எதை எதிர்பார்ப்பது என்று தெரியவில்லை என் முழு கவனமும் மொபைல் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்ற எண்ணமே இருந்தது. வீடுகளும் வந்தது… என் பயமும் அதிகரித்தது எந்த வீட்டில் நுழைந்தாலும் அந்த குடிசையில் பார்த்த அதே நிலைமைதான். நடுக்கத்தால் என்னால் நிற்க கூட முடியவில்லை வெளியே வந்து அப்படியே சாய்ந்து அமர்ந்து கொண்டேன். மெல்ல மெல்ல உச்சிவெயில் அதுவும் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது, நான் குகைக்குள் சென்றது ஒரு பதினோரு மணி காலை இருக்கும்… இவ்வளவு நடந்த பிறகும் உச்சிவெயில் தான் இருக்கிறது. என்னை சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. மனதுக்குள் பல குழப்பங்கள் வந்து சென்றன எந்த பாவத்தை செய்தேனோ இந்த மரண பீதி என்னை ஆட் கொள்வதற்கு? என்னதான் நடந்தாலும் இயற்கையின் விதி வாழ உந்தித்தள்ளும். எழுந்து நடக்க ஆரம்பித்தேன், இன்னும் ஒரு கால் மணி நேரம் சென்றிருப்பேன் தூரத்தில் நிலத்தின் பம்புசெட்டு தெரிந்தது… அங்கு மின்சாரம் இருப்பினும் ஜார்ஜ் செய்ய கனெக்ஷன் என்னிடம் இல்லை. அங்கு செல்லாமல் ஏதோ ஒரு வீடு நோக்கி செல்லலாம் என்று மேலும் நடந்தேன்… மற்றும் ஒரு அரை மணி நேரம் நடந்து இருப்பேன்… தூரத்தில் சில வீடுகளும் ஏதோ ஒரு கடையும் இருப்பது தெரிந்தது. அந்த இடமும் வந்தது வீடுகளும் வந்தன.. எந்த வீட்டு உள்ளே சென்று பார்க்கவும் தைரியம் இல்லை. அங்கிருந்த பங்க் கடை ஒன்று சிதிலமடைந்து இருந்தது, பாட்டில்கள் கீழே விழுந்து உடைந்து இருந்தது அதிலிருந்த முறுக்கு போன்ற எந்த பண்டங்களும் இல்லை. அருகே இரண்டு நாய்களின் எலும்புக்கூடு மனிதர்களின் அதே நிலைமையில் இருந்தது. அப்போதுதான் தற்செயலாக பார்த்தேன், ஒரு நாளிதழ் மங்கிய நிலையில் அங்கிருந்தது. எடுத்து தட்டி பார்த்தேன், இதுவரை நான் கண்ட பயம் ஒரு பயமே அல்ல… அந்த நாளிதழில் ஆகஸ்ட் 26 2022 என்று அச்சிடப்பட்டிருந்தது. நான் குகைக்குள் சென்று வந்தது சில மணி நேரங்கள் தான். இப்போது எல்லாம் என் மனக்கண் முன்னே ஓடி மறைந்தன… ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் தியரி ஆப் ரிலேட்டிவிட்டி என் கண் முன்னே நின்றது. நாளிதழை கையை எடுத்துக் கொண்டே அருகில் இருந்த வீட்டிற்குள் சென்றேன். மொபைல் போன் சார்ஜர் இருந்தது, துளி மகிழ்ச்சி… பிளக்கில் ஜார்ஜரை நுழைத்து போடும்போது தான் தெரிந்தது மின்சாரமே இல்லை என்று. வாழ்வின் முடிவுக்கே வந்து விட்டது போன்று தோன்றியது.. என் வீடு 17 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ளது… இதுவரை நடந்தது, இதுவரை எல்லா வீட்டிலும் இருந்தது, எல்லாவற்றையும் கணித்து பார்க்கும்போது… எனக்கு துளியும் நம்பிக்கை இல்லை…. அழுவதா அடுத்து நடக்க வேண்டியதை பார்ப்பதா ஏதும் புரியவில்லை. நாளிதழையை படிக்க ஆரம்பித்தேன், ஒரு மனிதனுக்கு இவ்வளவுதான் அதிர்ச்சி என்றில்லாமல் ஒட்டுமொத்த அதிர்ச்சியும் இன்று எனக்கு கிடைத்துவிட்டது….. “இந்தியாவில் நடத்தி வந்த மூன்று நாளிதழ்களில் நமதும் ஒன்று ஆனால் இனி இதை தொடர்ந்து நடத்த முடியாது என்று வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். தொழில் தர்மத்தை விட வாழ்க்கையின் அர்த்தம் முக்கியம் என்று படுகிறது ஆதலால் இனி இந்த நாளிதழ் வெளிவராது. நமக்கு கிடைத்த கடைசியை தகவலின்படி தோராயமாக ஒரு 25 சதவீத மக்களே உயிருடன் உள்ளதாக தெரிகிறது. இனி நம்மிடம் ஏதுமில்லை எஞ்சியுள்ள எல்லோரும் சேர்ந்து கூட்டுப்பிரார்த்தனை செய்வோம்”. என்று போட்டிருந்தது. இப்போது என் மனது அதிர்ச்சியில் கணத்து கனிந்து இரும்பாய் போய்விட்டது. ஆயிரம் கேள்விகள் ஒரே நிமிடத்தில் வந்து சென்றன… என்னதான் நடந்தது ஏன் 75% மக்கள் இறந்தார்கள்? மீதமிருக்கும் 25% பேர் எங்கே இருக்கிறார்கள்? முக்கியமாக இன்றைய தேதி என்ன? இவைகளுக்கு விடை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது, அதே நம்பிக்கை என் நண்பர்களும் அவர்கள் குடும்பமும் என் குடும்பமும் இன்னமும் அந்த 25 சதவீதத்தில் இருப்பார்கள் என்று சுயநலம் கலந்த நம்பிக்கை இருந்தது. இப்போதிலிருந்தே துவங்கினால் தான் மாலைக்குள் வீடு சென்று அடைய முடியும். ஆனால் பசி வயிற்றைப்பிசைந்தது… எதை சாப்பிட, எங்கிருந்து சாப்பிட… ஏதும் இல்லை இருப்பினுன் நடக்க தொடங்கினேன். இன்னும் அரை மணி நேரம் கழிந்திருக்கும் கனிகணியான் கிராமம் காண துவங்கியது.

ஆச்சரியம் மாந்தோப்பில் மாமரங்கள் முழுவதும் பழுத்த பழங்கள் இருந்தன. அப்போது தான் கண்டேன் ஒரு குரங்கு பட்டாளமே மாம்பழத்தை சுவைத்துக்கொண்டிருந்தது. அருகே சென்றேன் பொதுவாக மிரட்டும் திம்மா குரங்குகள் என்று வேலூரில் அழைக்கப்படும் மிகப்பெரிய ஆண் குரங்குகள்… அமைதியைக்காத்தன. ஆச்சரியத்திலும் நன்மை இருக்கத்தான் செய்கிறது. சென்றேன் பறித்தேன் சுவைத்தேன். காலாபாட் எனப்படும் அந்த வட்டாரத்தில் மட்டும் கிடைக்கும் சுவையான மாம்பழங்கள் அவை. ஓரளவிற்கு பசி அடங்கியது அருகே இருந்த கிணற்றில் இறங்கி சிறுது தண்ணீர் பருகினேன். பசி அடங்கியது கவலை தொற்றிக்கொண்டது. வேகமாக நடக்க ஆரம்பித்தேன் ஊரை நோக்கி, வரும் வழியில் எந்த வீட்டிற்கும் செல்லவில்லை திறந்து பார்க்கவில்லை.. ஏனெனில் உயிருடன் இருந்தார்கள் என்றால் என்னெதிரே தெரிந்து இருப்பார்கள். கணியம்பாடி, அடுக்கம்பாரை, பாகாயம் கடந்தேன், சிஎம்சி பாகாயம் கிளை ஹாஸ்பிட்டல் உள்ளே சென்று பார்க்க தைரியம் இல்லை..

நடந்தேன் கடந்தேன் தொரப்பாடி வந்து அடைந்தேன். சில வருடங்களுக்கு முன்புவரை என் வீடு அங்கே இருந்தது..ஒரு நண்பனின் வீடு தவிர மற்றவர்கள் யாரும் எனக்குத் தெரிந்தவர்கள் இல்லை அங்கே அப்போது. இருட்டத் தொடங்கியது, பொதுவாக எனக்கு பயமில்லை, இன்று இவ்வளவு விஷயங்களைப் பார்த்த பிறகு பயம் என்பதே போய்விட்டது.. இருந்தாலும் இருள் சூழ்ந்து வர மயான அமைதி… பறவைகள் அடங்கும் சத்தம்… ஒருவித இனம் புரியாத பயத்தை கிளப்பியது. நண்பனின் வீட்டுக்குச் சென்றேன், பயத்துடன் ஒவ்வொரு அறையாக சென்று பார்த்தேன். இவ்வளவு தூரத்திலும் ஒரு சிறிய அதிர்ஷ்டம் எந்த பிணமும் அங்கே இல்லை, சென்னைக்கு சென்று விட்டான் போலும். அங்கேயும் 2022 கேலண்டர் மட்டுமே இருந்தது, அங்கிருந்த தினசரி காலண்டரில் செப்டம்பர் 15ஆம் தேதி வரை கிழிக்கப்பட்டு இருந்தது. இங்கும் என்னால் எந்த தேதியில் இருக்கிறோம் எந்த வருடத்தில் இருக்கிறோம் என்று கணிக்க முடியவில்லை. போர்வெல்லில் தண்ணீர் அடித்து, குடித்து, அங்கிருந்த பாய் போர்வைகளை தூசிதட்டி உறங்க ஆரம்பித்தேன். அசதியில் வெகு விரைவாக தூங்கிவிட்டேன். குமரா என்று யாரோ கூப்பிடுவது போல கேட்டது, திரும்பிப் பார்த்தேன். பாறைக்குள் நான் சந்தித்த அந்த உருவம் அங்கே நின்று கொண்டிருந்தது. உன் கவலைகள் எல்லாம் எனக்குப் புரிகிறது, உனக்கு விடையும் விளக்கமும் அளிக்கிறேன் என்று சொல்வதாக பட்டது. எப்படி என்று கேட்டேன், அதற்கு அது இங்கிருந்து என்னால் எதுவும் செய்ய முடியாது உன்னாலும் எதுவும் செய்ய முடியாது. நீ மறுபடி நாம் சந்தித்த இடத்திற்கு வரவேண்டும் என்று கூறியது. அதற்கு நான் ஏற்கனவே பசியால் மிகவும் சோர்ந்து இருக்கிறேன், நடந்ததால் கால் வலியும் உள்ளது என்றேன். இந்த வீட்டில் உள்ள பைக் இருக்கும் இடத்தை திறந்து பார். உன்னால் முடியும் அதை துவக்குவதற்கு.. தேவையான பெட்ரோல் அந்த அறையிலேயே உள்ளது. இதனை மனதால் தெரிவித்தது. சேவலின் கொக்கரிப்பு கேட்டு எழுந்தேன், ஓ காலை விடிந்து விட்டது, கண்டது கனவு என்று தெரிந்ததும் ஏமாற்றம் அடைந்தேன். வெளியே வந்து பார்த்தால் நிறைய கோழிகள் அங்கங்கே முட்டையிட்டு வைத்திருந்தன. சமையல் அறை சென்று பார்த்தேன் நல்லகாலம் கேஸ் சிலிண்டர் இருந்தது வேலையும் செய்தது, நான்கு முட்டைகளை பொரித்து சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தேன். கராஜ் தேடிப் போனேன், கண்டேன், திறந்தேன் பைக்கை பார்த்தேன். ஓரளவிற்கு எனக்கு மோட்டார் மெக்கானிசம் தெரியும் என்பதால், ஸ்பார்க் பிளக்கை துடைத்துப் போட்டு பெட்ரோலை நிரப்பி ஸ்டார்ட் செய்து பார்த்தேன், முதலில் துவங்க மருத்த பைக் பல நிமிடங்களுக்குப் பிறகே துவங்கியது. நான் என் கட்டுக்குள்ளேயே இல்லை, இனி தேடி ஏமாற்றமடைய என் மனதில் தெம்பும் இல்லை. பைக்கை ரெடி செய்து விட்டேன் இரண்டு மூன்று பாட்ல்களில் போரில் வாட்டரை பிடித்துக்கொண்டேன். முட்டைகளை வேக வைத்து எடுத்துக் கொண்டேன். அமிர்திக்கு பயணத்தை தொடங்கும் முன் உங்களுக்கு அந்த குகைக்குள் நடந்தது என்ன என்று சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது………

அந்த உருவம் என்று சொல்லி விளக்குவதை விட அதற்குப் பெயர் கொடுத்துவிடலாம், ஆத்மா என்று வைத்துக்கொள்ளலாம். என்னை அழைத்துக் கொள்ள தயாராக இருந்த ஆத்மா கையை காட்டியவுடன் என் டார்ச் லைட் அணைந்தது, இருப்பினும் என்னால் எல்லாவற்றையும் பார்க்க முடிந்தது. ஆத்மா அந்த குகையின் சுவரில் ஏதோ செய்ய எதிரே பெரிய வெளிச்சம் தோன்றியது, portal… star gate என்பார்களே அது போன்று.

அதன் உள்ளே செல் என்றது ஆத்மா… எனக்கு தயக்கம், நீ நியமிக்கப்பட்டவன் தைரியமாக செயல் ஒன்றும் ஆகாது என்றது. உள்ளே சென்றேன் ஆத்மாவும் உடன் வந்தது. இனி நான் சொல்லப் போவதை என்னைத்தவிர என் வீட்டார் கூட நம்பமாட்டார்கள்… சில நிமிடங்கள் காற்றில் கரைந்தது போன்ற உணர்வு பிறகு நானும் ஆத்மாவும் ஓரிடத்தில் தோன்றினோம். அந்த இடம் நியூசிலாந்தை ஞாபகப்படுத்தியது. பரந்த அழகான புல்வெளி ஒரு விதத்தில் சொன்னால் சொர்க்கம் இது போன்று இருக்குமோ என்று நினைக்கத் தோன்றியது.

ஒரு அற்புதமான வினோதமான கட்டிடத்திற்குள் சென்றோம். அங்கு ஆத்மா போன்றே இன்னும் இருவர் இருந்தனர். என்னைப் பற்றி கேட்டார்கள் கூறினேன். உடனே ஆத்மா போன்று இருந்த மற்றொருவர் ஏதோ தட்ட எதிரே ஹாலோகிராம் தோன்றியது… சில நிமிடங்களில் நான் பிறந்தது முதல் அந்த குகைக்குள் நுழையும் வரை நடந்து எல்லாம் ஒரு திரைப்படம் போல் தோன்றி மறைந்தது. என்னால் என் ஆச்சரியத்தின் அளவை கட்டுப்படுத்தவே முடியவில்லை அவர்களைப்பார்த்தேன் எப்படி இதெல்லாம் கிடைத்தது உங்களுக்கு என்று. எல்லாம் எங்களுக்குத் தெரியும் என்று புன்முறுவலோடு பதில் கூறாமல் விட்டு விட்டார்கள். நடப்பது கனவா என்று என்னை நானே ஒரு முறை கிள்ளி பார்த்துக் கொண்டேன். மனிதர்கள் தற்போது தொழில்நுட்பத்தை சரியாக பகிர்ந்து அளிக்கவில்லை என்றும், மனிததன்மையே முழுவதுமாக இழக்க ஆரம்பித்து விட்டார்கள் என்றும் கூறினார்கள். அது பேராபத்தை கொண்டு வந்துவிட்டது என்றும் நீ வெளியே செல்லும்போது புரிந்து கொள்வாய் என்றும் கூறினார்கள். இதை ஏன் என்னிடம் கூறுகிறீர்கள் என்று கேட்டதற்கு, அதற்கு நேரமும் மனோதிடமும் உனக்கு வரும் அப்போது கூறுகிறோம் என்று கூறிவிட்டார்கள். சரி நீ குகைக்கு வெளியே செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது அழைத்துக் கொண்டு செல்கிறோம் என்று ஆத்மா கூறியது. பெரிய அதேபோன்ற ஒளி வட்டத்திற்குள் நுழைந்தோம் பிறகு குகைக்குள் இருந்தோம்.

பைக்கை ஸ்டார்ட் செய்து அமர்ந்தேன், ஒரு வினோத உணர்வு கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்தவித தொழில் நுட்பமும் தற்போது உபயோகத்தில் இல்லை, இப்போது நான் அமர்ந்திருக்கும் பைக்கை தவிர. அமிர்தியை நோக்கி பயணத்தை தொடங்கினேன். இந்தியாவின் இரண்டாவது பெரிய சிறைச்சாலையாகிய மத்திய சிறைச்சாலையை கடந்தேன், தொழில்நுட்பக் கல்லூரியை கடக்கும்போது ஏதோ ஒரு எண்ணம் உள்ளே சென்று பார்க்கலாமா என்று, பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே சென்று பார்த்தேன் எல்லா கதவுகளும் திறந்து இருந்தன… மரங்களில் குடியிருந்த குரங்குகள் எல்லாம் வகுப்பறையில் கூடி குடியிருந்தன. பறவைகள் அதிகமாக காணப்பட்டன. ஆங்காங்கே மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. என்ன நடந்தது என்றே புரியவில்லை, இனி குழம்பி எந்த பிரயோஜனமும் இல்லை… குகையில் விளக்கம் கிடைக்கும் என்று பெரிய நம்பிக்கையுடன் மறுபடியும் கிளம்பினேன். சுமார் ஒரு மணி நேரத்திற்குள் அமிர்தியை அடைந்தேன். பைக்கை நிறுத்திவிட்டு குகையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். யாராவது இருப்பார்களா என்று அவ்வப்போது திரும்பிப் பார்ப்பது எனக்கே முட்டாள்தனமாக தோன்றியது. குகையை அடைந்தேன். உள்ளே சென்றேன். சில நிமிடங்கள் காத்திருந்தேன் ஆத்மா இருப்பதற்கான அறிகுறியே இல்லை. கண்ட கனவை நம்பி வந்தது தவறு என்று நினைக்கத்தோன்றியது. தவறாக இருந்தாலும் எனக்கு வேறு வழியே இல்லை முயற்சி செய்வதுதான் ஒரே வழி. குகைக்குள்ளே அமர்ந்தேன், தூக்கமா கலக்கத்தின் மயக்கமா என்றே புரியாத ஒருவித மன நிலையில் அமர்ந்து கொண்டு இருந்தேன். ஒரு அரை மணி நேரம் கழிந்திருக்கும் அதே பெரிய வெளிச்சம் வெளிச்சத்தோடு ஆத்மா வருவது தெரிந்தது. அழைத்தது, உடன் சென்றேன். அதே காற்றில் கரைந்த உணர்வு சில நிமிடங்களில் ஆத்மாவின் இருப்பிடத்தை அடைந்தோம். ஆத்மா கையில் இருந்த கைகடிகாரம் போன்றிருந்த எதையோ தட்ட ஒரு வினோத ஊர்தி அங்கே தோன்றியது. ஏறி அமர்ந்தோம் சில நிமிடங்களில் செல்ல வேண்டிய இடம் வந்துவிட்டதாக ஆத்மா தெரிவித்தது. நிறைய யோசனைகள் வந்து சென்றன, இதைப் புரிந்து கொண்ட ஆத்மா இந்தமுறை எல்லாவற்றிற்கும் விளக்கம் தருகிறேன் என்றது. நோபல் பரிசு கிடைக்கப் போவது போன்ற ஒரு உணர்வு.. நாங்கள் பூமியின் காவலர்கள், நீ அனுபவித்தது நாங்கள் பூமியை பாதுகாக்க தவறியதன் விளைவு. செய்த தவற்றை உன் மூலமாக சரி செய்யப் போகிறோம். நீ நினைப்பது புரிகிறது ஆமாம் நாங்கள் இருப்பது வேறு கிரகம், உங்கள் முறைப்படி சொன்னால் 39.3 ஒளி வருடங்கள் தூரத்தில் இருக்கிறோம். எங்கள் கிரகத்தின் பெயர் வேறு ஆனால் நீங்கள் எங்களுக்கு கொடுத்த பெயர் zeta reticuli… ZR3 என்பீர்கள். ஆமாம் செய்த தவற்றை எப்படி நிவர்த்திக்க போகிறோம் என்று இமாலய கேள்வி உன்னுள் உள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் தகுந்த ஏற்பாட்டுடன் சிலர் வரப்போகிறார்கள் பொறுத்திரு என்றது. மனம் ஒரு இறுக்கமான உணர்வில் இருந்தது… நான் ஒரு சராசரி மனிதன் நான் எப்படி இந்த பெரிய தவறை சரி செய்ய போகிறேன்? நிமிடங்கள் சில கடந்தன… ஆத்மாவை போன்றோர் மூன்று பேர் வந்தனர். இருவர் என்னை பார்த்தார்கள் புன்முறுவல் பூத்தார்களா இல்லையா என்றே புரிந்துகொள்ள முடியாத முகபாவம். மூன்றாவது நபர் என்னை பார்க்கக்கூட இல்லை. நினைத்துக்கொண்டேன் இவர்களெல்லாம் அவர்தான் அதிகாரி என்று. இந்த கிரகத்திலும் அந்த ஏற்றத்தாழ்வு உண்டா? எனக்கு தேள் கொட்டியது போன்று இருந்தது, அந்த உருவம் எந்த ஏற்றத்தாழ்வும் இல்லை நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்றது என்னைப் பார்த்து… எனக்கு நானே சொல்லிக்கொண்டேன் என் மனதில் ஓடுவது எல்லாமே அவர்களுக்கு தெரிகிறது.. ஆமாம் என்று ஒரே நேரத்தில் நான்கு பேரும் தலையசைத்தனர். அந்த மூத்தவர் மனதின் மூலமாக என்னிடம் கூற ஆரம்பித்தார்… உங்கள் பூமியை ஒரு கொடிய நோய் தாக்கியது, எங்களால் முடிந்தவரை சரி செய்ய நினைத்தோம் தோற்று விட்டோம். நீ இப்போது இருப்பது 2024 ஜனவரி மாதம் 14ஆம் தேதி, இந்த குழப்பம் உன்னில் இருந்ததால் கூறுகிறேன். அதிர்ச்சியுற்றேன் நான்கு வருடங்கள் கடந்து விட்டன, ஆனால்.. நான் செலவிட்டது 24 மணி நேரங்கள் தான். சுமார் நான்கு வருடங்களுக்குள் உன்னுடைய பூமியின் மொத்த மனித இனமும் அழிந்து விட்டது, அதில் தப்பித்தது நீ ஒருவன் மட்டும்தான். இது தற்செயலாக நிகழ்ந்ததா இல்லை உருவாக்கப்பட்டதா என்று கூட எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. சரி விஷயத்திற்கு வருவோம். எனக்கு அவர்கள் கூறியதை புரிந்துகொள்ள; ஜீரணிக்க கூட முடியவில்லை, பேரதிர்ச்சியாக இருந்தது உலக மக்கள் தொகை முழுவதும் அழிந்து விட்டு நான் ஒருவன் மட்டும் இருக்கிறேனா என்று. என்னத்தான் இவர்களுடைய திட்டம்? என் ஒருவனால் என்ன செய்ய முடியும்? கேள்விகள் ஆயிரம் வந்து சென்றன. மூத்தவர் என்னைப் பார்த்தார், பார்வை இரு சொல்கிறோம் என்பது போல இருந்தது. திடீரென்று எப்படித்தான் அந்த அறை பெரிய டிவி ஆக மாறியதோ தெரியவில்லை. அதில் இரண்டு புகைப்படங்கள் தெரிந்தன. கூற ஆரம்பித்தார்.. ஒருவர் பெயர் Thomas Chea மற்றொரு பெண்மணி பெயர் Rosy Shevlin என்று. ஆமாம் இவர்களை ஏன் எனக்கு காண்பிக்கிறார்கள் என்று கேட்க தோன்றியது. அந்தப் பெரிய டிவியில் ஒரு செய்தித்தாள் தெரிந்தது, அதில் இவர்களுடைய இருவரின் புகைப்படமும் போட்டு அவர்கள் அக்டோபர் 2 2022 அன்று உலக நீதிமன்றத்தால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக கூறியிருந்தது. ஏன் என்ற பார்வையுடன் அவரைப் பார்த்தேன். அவர்கள் இருவரின் கண்டுபிடிப்புதான் அந்த கொடிய நோய் கிருமி என்றார். உலக மக்களின் மொத்த அழிப்புக்கும் இந்த இருவர் தான் காரணம்… இருப்பினும் எங்கள் கிரகம் அதற்கும் மேலே சென்று துப்பறிந்து கண்டுபிடித்தது என்னவென்றால், சிரி என்ற கிரகத்திலிருந்து எங்களுக்கு எதிராக சிலர் அவர்களுக்கு உதவி அந்த கிருமியை கண்டுபிடித்து பரப்பி விட்டது. என் சிறிய மூளை எவ்வளவு பெரிய விஷயத்தை ஜீரணிக்க மிகவும் கடின பட்டது. அவர் மேலும் கூறின விஷயத்தை கேட்டு அவநம்பிக்கையுடன் அவரை பார்த்தேன். மூத்தவர் விளக்க ஆரம்பித்தார், தாமஸம் ரோஸியும் பேரழிவு கிருமி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர், அவர்களின் துவக்கம் என்னமோ நல்ல விஷயம் தான் ஆனால் போகப்போக தற்கால மனிதர்களை போல் எல்லாவகை ஆசைகளுக்கும் அடிமையானார்கள். இந்த சமயத்தில் தான் சிறி கிரகத்திலிருந்து இருவர் அவர்களின் இந்த அந்த ஆசையை பயன்படுத்திக்கொண்டனர். எதற்காக அவர்கள் அப்படி செய்தார்கள் என்று புரியவில்லை அதைப்பற்றி எங்கள் கிரகம் பால்வெளி பாதுகாப்பு (milky way security council )சபையில் புகார் கொடுத்துள்ளோம் அது எந்த நேரத்திலும் எடுத்துக் கொள்ளப்படலாம். சரி விஷயத்துக்கு வருவோம் என்று என்னை பார்த்தார். உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் ஒரே நேரத்தில் உலகத்திலுள்ள எல்லா தொழில்நுட்பங்களையும் என்னை கற்றுக் கொள்ளுமாறு நிர்ப்பந்திப்பது போல் தெரிந்தது… மூத்தவர் புரிந்துகொண்டார், நீ எதையும் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை நாங்கள் கூறுவதை மட்டும் செய்தால் போதும் என்றார். இனி நான் கூறுவதை மிகவும் கவனமாக கேள் என்றார்…. நாங்கள் உன்னை 2019 ஜனவரி மாதத்திற்கு அனுப்பப் போகிறோம். ‘என்னது புத்தகங்களில் படித்தது போல முன் காலத்திற்கு அனுப்புகிறார்களா ஒன்றும் புரியவில்லை… ‘ஆமாம் என்று தலையசைத்தார்.. எங்களிடம் எல்லா தொழில்நுட்பமும் உள்ளது என்றார். எனக்கு திடீரென்று ஒரு யோசனை தோன்றியது இத்தகைய தொழில்நுட்பத்தை அவர்கள் வைத்திருந்தால் ஏன் நீங்களே சென்று தவறை சரி செய்யக் கூடாது? அவர் புரிந்து கொண்டார்…. புரிகிறது நீ என்ன நினைக்கிறாய் என்று…. பால்வெளி பாதுகாப்பு சபையின் விதிகளின்படி எந்த ஒரு மனிதரின் நடவடிக்கைகளிலும் நாங்கள் நேரடியாக தலையிட முடியாது… மேலும் பூமி பிரி வில்( free will ) முறைப்படித் தான் இயங்கும், இயங்க அனுமதிக்கப்படும். இதிலிருந்து நீ புரிந்து கொள்வாய் ஏன் பாதுகாவலர்களாகிய நாங்கள் நிறைய நாட்டின் பிரச்சினைகளில் தலையிட முடியவில்லை என்று.. ஏதோ புரிந்தது; புரிகிற மாதிரி தெரிந்தது.. சரி விஷயத்துக்கு வருகிறேன் என்றார் மூத்தவர்… இதோ இந்தக் கருவியை வைத்துக்கொள் என்று சிறிய டார்ச்லைட் போன்ற கருவியை என்னிடம் கொடுத்தார். ஏற்கனவே டார்ச்லைட்களில் மோகம் கொண்ட நான் அதை வாங்கிக்கொண்டேன். சிறிய கார் ரிமோட் போன்றிருந்தது.. நீ அலுவலகத்திற்கு சென்ற பிறகு உன்னை அமெரிக்காவிற்கு அனுப்புவார்கள் இரு மாதங்களுக்கு.. தாமஸம் ரோஸியும் தங்கும் இடத்திற்கு அருகாமையில் உன்னை தங்கவைக்க நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்… நீ சமயம் பார்த்து ஒரே நாளில் இருவருக்கும் இந்தக் கருவியைக் கொண்டு அவர்கள் முகத்தில் வெளிச்சம் பாய்ச்ச வேண்டும்… எனக்கு ஓரளவு புரிந்துவிட்டது இது MIB யில் வரும் நினைவு போக்கி போன்ற கருவி. எல்லாம் சரி ஆனால் 2019 ஜனவரி முதல் நான் அமிர்தி சென்ற டிசம்பர் வரை வாழ்க்கையை மேலும் ஒரு முறை நான் வாழவேண்டுமா? நான் வாழ்ந்த அந்த வாழ்க்கை அப்படியே நடக்குமா? இதன் தொடர்ச்சியாக பல கேள்விகள் என்னுள் தோன்றி மறைந்தது… மூத்தவர் புரிந்துகொண்டார்… இவைகள் முடிந்து நீ குகையை விட்டு வெளியே செல்லும்போது உனக்கு எந்த ஞாபகமும் இருக்காது, நாங்கள் கொடுத்திருக்கும் இந்த வேலை குறிக்கோள் மட்டுமே உன் நினைவில் இருக்கும். இந்தக் கொடிய பேரழிவு கிருமி, மனித இனம் அழிந்தது, அந்த இருவருக்கும் ஏன் நீ இந்த வெளிச்சத்தை பாய்ச்ச வேண்டும்…. எதற்கும் உன்னிடம் விடை இருக்காது. ஏன் என்று யோசித்தவாறே அவரைப் பார்த்தேன்….. எல்லாம் உன்னுடைய நலத்திற்காக என்று மட்டும் புரியவைத்தார். பால்வெளி பாதுகாப்பு சபை: zeta சபை கொடுத்த புகாரை விசாரிக்க ஆரம்பித்தனர். அறிவு, சிரி கிரகத்தின் முதன்மை வழக்கறிஞர் போன்றவர்…. வாதிட ஆரம்பித்தார்.. எங்கள் மேல் உள்ள குற்றச்சாட்டு நன்றாக புரிகிறது… ஆனால் மனித இனத்தின் தறிகெட்ட தான் தோன்றித்தனமான பயணத்தை தடுக்க பால்வெளி பாதுகாப்பு சபை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? சட்டத்தை பார்க்காமல் நல்லதா கெட்டதா என்ற இரண்டை மட்டுமே சீர்தூக்கி பார்த்தது எங்கள் கிரகம்… Zetaடா வாசி இடைமறித்து மனித குலத்தையே அழித்தது மிக பயங்கரமான தீவிரவாத செயல் என்றார். அறிவு, இடைமறித்து இதற்கு பதில் கூற ஆரம்பித்தார்…. நீங்கள் யாரும் மறந்திருக்க மாட்டீர்கள் இந்த நவீன பால்வெளி பாதுகாப்பு சபையின் விளக்க வாக்கியமே பூமியில் தமிழ்நாட்டில் பிறந்த மகான் வள்ளலார் என்பவருடைய வாக்கியமே… “எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!” எல்லோரும் தலையசைத்தனர்.. இதற்கும் நான் வாதிட விரும்புவதற்கு என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா? உண்டு, பூமியின் மனிதர்கள் மனிதத் தன்மையை இழந்து வருகிறார்கள் முற்றிலுமாக இழக்கப் போகிறார்கள் என்று நம் எல்லோருக்கும் தெரியும். பாதுகாப்பு சபையின் விதிகளின்படி நாம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தோம்…. எங்களால் இதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை… Zeta வாசி கேட்டார் எதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று.. அறிவு தொடர்ந்து பேசினார்… எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்றால் அவைகள் வாழ வழிவகுக்கவில்லை என்றாலும் மற்ற உயிரினங்கள் இறக்க மனிதர்கள் காரணமாக இருந்திருக்கக் கூடாது…. இப்போது புரியும் என்று நினைக்கிறேன் என்றார் அறிவு. மனிதர்களின் குறுகிய மனப்பான்மை, பேராசை, அதிகார வெறி என்று சொல்லிக்கொண்டே போகலாம்.. இவைகள் அதிகமாக அதிகமாக மனிதன் மனிதத் தன்மையை இழந்து கொண்டே வந்தான். எவ்வளவோ சொல்லலாம்… எங்கும் வீடுகளை கட்டிக்கொண்டான், காடுகளை எல்லாம் அழித்தான்… அதன் விளைவாக மற்ற உயிரினங்களின் சதவீதம் 40-க்கும் குறைவாக ஆகிவிட்டது. விலங்குகளின் பறவைகளின் மற்ற உயிரினங்களின் இயலாமை எங்களுக்கு பேர் அதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் தந்தது… எங்கள் கிரகத்தின் ஒட்டுமொத்த முடிவாக மனிதர்களுக்கு சிறிய படிப்பினை கொடுக்க வேண்டும் என்றுதான் நினைத்தோம், ஆனால் அழிவைத் தடுக்க முடியாமல் போய்விட்டது.. இந்த தவறை ஒத்துக் கொள்கிறோம். என்ன சிறிய படிப்பினை க்கு நீங்கள் முயற்சி செய்தீர்கள்? என்று zetaவாசி கேட்டார். இனவிருத்தியை வெகுவாக கட்டுப்படுத்த நினைத்தோம் ஆனால் அந்தக் கிருமி தன்னிலை மாற்றிக்கொண்டு முழுவதுமாக அழித்து விட்டது… இதற்காக வருந்துகிறோம் என்றார். பால்வெளி பாதுகாப்பு சபையின் தலைவர் பேசத் துவங்கினார்… மனிதர்கள் இல்லாத பூமி இயற்கையின் சமநிலையை மாற்றிவிடும், சூரிய மண்டலமே உணர்வில்லா மண்டலமாக மாறிவிடும். ஆகையால் zetaவிற்கு முழு அதிகாரத்தையும் தருகிறோம், இந்த சூழலை மாற்றி அமைக்க. சிரி கிரகத்திற்கு இனி மனிதர்களால் எந்த சூழ்நிலையிலும் மற்ற உயிரினங்களுக்கு இப்போது நேர்ந்த கதி ஏற்படாதவாறு பாதுகாக்க முழு அதிகாரத்தையும் தருகிறோம். என்று உரையை முடித்தார்.

Zetaவில்… எனக்கு குழப்பம் தெளிந்ததோ தெளியவில்லையோ நான் செய்ய வேண்டியது என்ன என்று முழுவதுமாக புரிந்து விட்டது… பெருமகிழ்ச்சி என் குடும்பத்தாரையும் நண்பர்களையும் எல்லோரையும் மறுபடி பார்க்க போகிறோம் என்று. ஆத்மா அழைத்தார் சென்றேன்.. சில நிமிடங்களில் குகைக்குள் இருந்தேன் குழப்பமாக இருந்தது எனக்கு ஆத்மாவை தெரிகிறது, நான் என்ன செய்ய வேண்டும் என்று தெரிகிறது எப்போது இந்த குகைக்குள் வந்தேன் என்று மட்டும் புரியவில்லை…. இவையெல்லாம் என் மூளைக்கு அப்பாற்பட்ட விஷயமாக பட்டது. குகையை விட்டு வெளியே வந்தேன். எங்கே இருக்கிறேன் என்றே புரியவில்லை மெதுவாக நடக்க ஆரம்பித்தேன்… ஒரு பத்து பதினைந்து நிமிடங்கள் கழித்து அமிர்தி நீர்வீழ்ச்சியை கண்டேன். இப்பொழுது புரிந்தது நான் இருப்பது அமிர்தி காட்டுக்குள். காட்டை விட்டு வெளியே வந்து பஸ் ஏறி வீட்டை வந்தடைந்தேன். எங்கே போய் தொலைந்தாய் உன் ஆபீஸில் இருந்து இரண்டு முறை போன் செய்து விட்டார்கள்… அம்மா கூறியதை காதில் வாங்காமல் அந்த கருவியை பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டேன். அலுவலகத்திற்கு போன் செய்து பார்த்தேன், என்னுடைய மேனேஜர் தான் போன் செய்து பார்த்திருக்கிறார், லீவும் எடுக்கவில்லை எந்தவித இன்ஃபர்மேஷன் கொடுக்கவில்லை… எங்கே போயிருந்தாய் என்று கேட்டார்? என்ன சொல்ல, நடந்ததைக் கூறினால்.. பாகாயம் மருத்துவமனைக்கு வலுக்கட்டாயமாக அனுப்பி விடுவார்கள்! தலைவலி நாளை வருகிறேன் என்று கூறிவிட்டு, சிறிது நேரம் படுத்தேன். நினைவுகள் வாட்டின… இந்தக் கருவியைக் கொண்டு என்ன செய்ய வேண்டும் யாரை செய்ய வேண்டும் என்று தெரியும்… ஆனால் எதற்காக நான் இதை செய்யவேண்டும் என்று புரியவில்லை. வேற்றுகிரக மனிதரைச் சந்தித்தேன் ஆனால் எப்படி சந்திக்க நேர்ந்தது என்று தெரியவில்லை… லிண்டா மற்றும் ரிச்சர்ட் அவர்களின் UFO சேனல்களை பார்ப்பேன்… எனக்கே அந்த தொடர்பு நேரும் என்று சிறிதும் நினைத்து பார்க்கவில்லை..

மறுநாள் காலை அலுவலகத்திற்கு சென்றேன், உடனடியாக மேனேஜர் என்னை பார்க்க வேண்டும் என்றார்.. சென்று பார்த்தேன். ‘குமரன் நீங்க அடுத்த வாரம் அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டும், HR எல்லாவித ஏற்பாடுகளையும் பார்த்துக்கொள்வார்கள் நாளை நீங்கள் உங்களுடைய பாஸ்போர்ட் எடுத்து வந்து கொடுக்கவும்’ என்றார். அமெரிக்க பயண ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தேன், இருப்பினும் மனதுக்குள் பெரிய கலக்கம், குழப்பம் எல்லாம் இருந்துகொண்டே இருந்தது.. நான் நல்லதைத் தான் செய்யப் போகிறேனோ இல்லை வேற்றுகிரகவாசி எதற்கோ ஆபத்தான சூழ்நிலைக்கு என்னை தள்ளுகிறதோ என்ற குழப்பம்… அமெரிக்கா செல்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் முடித்தாகிவிட்டது. அந்த நாளும் வந்தது, பயணம் தொடங்கியது அமெரிக்கா வந்து அடைந்தேன். தலைமை அலுவலகத்திற்கு சொந்தமான விருந்தினர் விடுதியில் எனக்கு ரூம் அளித்திருந்தார்கள். தங்கி ஓய்வெடுத்துக் கொண்டேன். மறுபடி குழப்பம் ஆரம்பித்துவிட்டது, ஊரை சுற்றி பார்க்கும் மன நிலையில் நான் இல்லை… எப்படி அவர்கள் இருவரையும் தேடப் போகிறேன் என்றே புரியவில்லை. எல்லாம் சரியாக திட்டமிடப்பட்டுள்ளது என்று ஆத்மா சொன்னது நினைவிற்கு வந்தது.. இப்போது என்னைப் பற்றிக் கூற வேண்டும் உங்களுக்கு.. நான் குமரன் படித்தது E&C ஆனால் வேலை செய்வதோ மெடிக்கல் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் ரிப்பேர் அண்ட் சர்வீஸ். வேலூரில் உள்ள வி for டெக் நிறுவனம், அமெரிக்க நிறுவனத்தை தலைமையிடமாகக் கொண்டது. இங்கு முழுக்க முழுக்க சிஎம்சி கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்களை சரிபார்ப்பது மற்றும் சமநிலையில் வைத்துக் கொள்வது எங்களுடைய வேலை. உறங்கி எழுந்தேன், தயாராகி விட்டு அலுவலகத்திற்கு கிளம்பினேன். வெள்ளைக்கார நண்பர் Andrew என்னை வந்து அழைத்துச் சென்றார். அவருடைய மேனேஜர் வந்து என்னை அழைத்துச் சென்று அறிமுகம் செய்துகொண்டு என்னுடைய வேலை என்ன என்பதை விவரித்தார். அங்கு அருகாமையில் இருக்கும் அமெரிக்க பேரழிவு தொற்று நோய்க் கிருமி ஆராய்ச்சி நிலையத்தில் ஒரு வார காலம் முக்கியமான சில உபகரணங்களை சரிபார்த்து சான்றிதழ்களை வழங்க வேண்டும். அதை இங்கு உள்ளோரே செய்வார்களே என்று கேள்வி கேட்கத் தோன்றியது ஆனால் கேட்கவில்லை. எனக்காக செய்த ஏற்பாடுகளில் இதுவும் ஒன்றாக இருக்கக்கூடும். நானும் ஆண்ட்ரூவும் அங்கே கிளம்பி சென்றோம். மிகப் பிரம்மாண்டமான கட்டிடம் என்று சொல்வதை விட பாதுகாப்புகள் நிறைந்த ஒரு மர்மமான கட்டிடம் என்று சொல்லலாம். அங்குள்ள அதிகாரியை தொடர்பு கொள்ளவே மூன்று மிகப் பாதுகாப்பான பரிசோதிப்பிர்க்கு உட்பட்டே அனுமதித்தார்கள். ஒருவழியாக அந்த அதிகாரியை சந்தித்தோம். என்ன செய்ய வேண்டும் என்ற நடை முறைகளை விளக்கி கூறினார். பிறகு அங்கிருந்து எங்கள் இருவரையும் அழைத்து ஒரு ரகசிய அறைக்கு சென்றார். அங்கு நான் பார்த்த காட்சி மரண பயத்தை உண்டாக்கியது. அங்கு நான் ஆத்மா கிரகத்தில் போட்டோவில் பார்த்த தாமஸம் ரோஸியும் நின்றிருந்தார்கள். ஒருவித நடுக்கம் ஏற்பட்டது, ஏனென்று புரியவில்லை… அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்றும் தெரியாது…. ஆனால் நான் செய்ய வேண்டிய காரியம் மட்டும் நினைவில் இருந்து கொண்டே இருந்தது. வந்த அதிகாரி என்னையும் மற்றும் என்னுடன் வந்த அண்ட்ருவையும் அறிமுகம் செய்து வைத்தார். பரஸ்பர அறிமுகம் முடிந்த பிறகு தாமஸ் நான் செய்ய வேண்டியதை விவரிக்க ஆரம்பித்தார். அந்த ஆராய்ச்சிக் கூடத்தில் உள்ள ஒரு நுட்பமான கருவியைக் காட்டி இது மிகவும் முக்கியமான கருவி இந்த ஆராய்ச்சிக் கூடத்திற்கு.. சில நாட்களாக சரியாக இயங்கவில்லை, இதை இங்குள்ளவர்களே சரி செய்து விடுவார்கள், உங்களை ஏன் இந்தியாவில் இருந்து அழைத்து வந்தார்கள் என்று புரியவில்லை… சரி விடுவோம் அது என்னுடைய வேலையும் அல்ல. சிலசமயம் கணனி கோளாறும் சில சமயம் கருவி கோளாறும் ஏற்படுகிறது என்றார் தாமஸ். இதை சரி செய்வது எளிதாக பட்டது எனக்கு ஏனென்றால் வேலூர் சிஎம்சியில் பல கருவிகளை நான் பழுது பார்த்துள்ளேன். என் யோசனைகள் வெகுவாக மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தன, இன்னும் நான்கு நாட்கள் உள்ளது அதற்குள் நான் வந்த வேலையை முடிக்க வேண்டும். நான் செய்யப்போவது உடன் வந்த ஆண்ட்ருக்கு கூட தெரியக்கூடாது. 3 நாட்கள் கடந்தன, ஓரளவிற்கு அந்தக் கருவியின் பழுதுபார்ப்பு முடித்துவிட்டேன்… இன்னும் சிறிது வேலையே இருந்தது. மாலை ஆகிவிட்டதால் வேறுவழியில்லை அன்று ரூமிற்குசெல்ல வேண்டியதாக போயிற்று. இரவு முழுதும் எப்படி செய்யப் போகிறேன் என்று யோசித்துக்கொண்டே இருந்தேன்… அதற்கு மிக முக்கியமான காரணம் என்னவென்றால், அவர்கள் இருவரும் ஒருசேர எப்போதுமே இருந்ததில்லை… கொஞ்சம் தள்ளி நின்றே ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தனர். அரைத்தூக்கத்தில் இரவும் கழிந்தது, காலையும் வந்தது… ஆண்ட்ரூவுடன் ஆராய்ச்சிக் கூடத்திற்கு வந்தேன். எல்லா பாதுகாப்பு சோதனைகளை முடித்து விட்டு அந்த மிகமுக்கியமான அறைக்கு வந்து சேர்ந்தேன். தாமஸ் மட்டும் நின்று கொண்டிருந்தார். கணனியில் முடிந்தவரை நேரத்தை செலவு செய்து கொண்டிருந்தேன்.. அரை மணி நேரம் ஓடியது, ரோஸி எங்கே என்று தெரியவில்லை, என்னால் தாங்க முடியவில்லை தாமஸிடம் கேட்டேன். அதற்கு அவர் ரோஸி போன் செய்தார் தலைவலி என்று வருவாரோ இல்லையோ தெரியாது.. எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.. இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது…. இன்னும் அரை மணி நேரம் ஓடி இருக்கும், அறைக்கதவு திறந்தது பார்த்தால் ரோஸி வந்துகொண்டிருந்தார். என்னை மீறி பெருமூச்சுவிட்டேன். நான் நலம் விசாரிக்க ரோஸியின் அருகில் செல்வதற்கும் தாமஸ் அங்கே வருவதற்கும் சரியாக இருந்தது. நாங்கள் மூன்று பேரும் ஒருவருக்கொருவர் அருகாமையில் இருந்தோம். இந்த நிமிடத்தில் தான் அதிசயம் நடந்தது, திடீரென்று அங்கு அறையில் இருந்த விளக்குகள் அணைந்தன…. தாமஸ் சொன்னார், நான் வேலையில் சேர்ந்து இத்தனை வருடங்களில் என்றும் இதுபோன்று நடந்ததில்லை என்று… எனக்கு அந்த வினாடியே புரிந்து விட்டது இது ஆத்மா குழுவின் வேலை என்று… உடனடியாக செயலில் இறங்கினேன். கொஞ்சம் பொறுங்கள் என்னிடம் டார்ச்லைட் இருக்கிறது என்று அந்த கருவியை எடுத்து,, அவர்களின் இருவரின் முகத்திலும் பீச்சினேன்…. இருவரும் ஒன்றாக இருந்ததால் மிகவும் எளிதாக போயிற்று. மன்னிக்கவும் தவறுதலாக உங்கள் முகத்தில் பாய்ச்சி விட்டேன்… அதற்கு அவர்கள் பரவாயில்லை என்றார்கள். இனி எந்த நிமிடமும் தாமதிக்க கூடாது மின்சாரம் வந்தவுடன் உடனடியாக வேலையை முடித்து விட்டு கிளம்ப வேண்டும் என்று முடிவு செய்தேன், மின்சாரமும் வந்தது விளக்குகள் எரிந்தன, ஏற்கனவே முடிவு செய்து இருந்ததுபோல் கணினியை சரி செய்து விட்டேன் ஓட்டியும் பார்த்தேன், அதை தாமஸிடமும் ரோஸியிடம் காண்பித்தேன்… ஏதோ குழப்பமான முறையில் தலை ஆட்டினார்கள். ஆண்ட்ட்ருவிடம் ட்ரையல் ரன் எடுக்க சொன்னேன். எடுத்தார் நன்றாக வந்தது. நான் வந்த வேலை முடிந்ததோ இல்லையோ தெரியாது, ஆனால் நாங்கள் கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று மட்டும் புரிந்தது. நேராக கிளம்பி சென்று அந்த மூத்த அதிகாரியிடம் கூறினோம். நன்றி சொல்லிவிட்டு எங்களை வழியனுப்பினார்…. ஏதாவது குறை இருப்பின் அலுவலகத்திற்கு தெரிவிக்கப்போவதாக கூறினார். இப்போது, இதோ விமானத்தில் பறந்து கொண்டிருக்கிறேன் இந்தியாவிற்கு.. இன்டர்நெட்டில் செய்திகளை பார்த்தேன்.. அமேசான் காடுகளில் மூன்றில் ஒரு பங்கு அழிக்கப்பட்டு பெரிய நிறுவனங்களின் கட்டுமான பணி தொடங்கி விட்டதாக பார்த்தேன்.. ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய காட்டுத்தீ பரவுவதையும் படித்தேன்…. அதனால் கோடிக்கணக்கான விலங்குகளும் பறவைகளும் இறந்துவிட்டன என்ற செய்தியை படித்து கண்களில் நீர் மல்கியது.. சரி நம்ம ஊர் செய்திகளைப் படிக்கலாம் என்று பார்த்தால் அதைவிட மோசமாக இருந்தது… யானைகள் பல இறந்த செய்திகள் தான் அது. வீட்டை வந்து அடைந்து மறுநாள் அலுவலகத்திற்கு சென்றேன், ஆண்ட்ருவின் இமெயில் இருந்தது. திறந்து பார்த்தேன் அதில் ஒரு செய்தித்தாள் புகைப்படம் இருந்தது. அதில் தாமஸும் ரோஸியும் எல்லா நினைவுகளையும் இழுந்து விட்டதாகவும், அது பேரழிவு கிருமியினால் இருக்கக்கூடும் என்று மொத்த ஆராய்ச்சி கூட்டத்தையே தற்காலிகமாக மூடி வைத்த செய்தி அது. நான் சென்ற வேலை வெற்றிகரமாக முடிந்துவிட்டது என்று நினைத்து பெருமூச்சு விட்டேன். இன்னமும் புரியவில்லை ஆத்மா குழுவினர் ஏன் இந்த செயலை செய்யக் கூறினார்கள் என்று. சுபமா அல்லது சாபமா?

bottom of page