top of page

பிறப்பிடம் By சிவா

  • melbournesivastori
  • Dec 12, 2020
  • 2 min read

இன்டர்நெட் செக்கின் செய்துவிட்டதால் வரிசை குறைவாகவே இருந்தது, எல்லாம் முடித்து விட்டேன் போர்டிங் பாஸ் வாங்கி விட்டேன்…. சுங்கம் குடியேற்றத்திற்கு வழி என்று போட்டிருந்தது மனதுக்குள் சிரித்துக் கொண்டேன், சுற்றுலா செல்வதற்கு கூட சுங்கம் குடியேற்ற வழி வழியாகத்தான் செல்ல வேண்டும்…. நான் சிரிப்பதன் காரணம் நான் உண்மையிலேயே ஆஸ்திரேலியாவுக்கு குடியேறுகிறேன். அந்த வழி செல்லாமல் நண்பன் பிரசாத்தை நோக்கி சென்றேன், பிரசாத்தும் நானும் சிறுவயது முதல் பட்டப்படிப்பு வரை ஒன்றாகவே படித்தோம். படிப்பில் போட்டியும் நட்பின் இலக்கணமாகவும் திகழ்ந்தோம். ‘என்ன முகுந்த் கடைசியாக நினைத்தபடி போகிறாய்… வருடத்திற்கு ஒரு முறையோ இரு வருடத்திற்கு ஒருமுறையோ வர தயங்காதே… நீ நன்றாக வருவாய் அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.. புதிய நாடு புதிய கலாச்சாரம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இரு’ என்றான் பிரசாத். நான் வீட்டிற்கு ஒரே பிள்ளை, அவனிடம் என் பெற்றோரை நன்றாக கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன், பிரசாத்தின் வீடு எங்கள் வீட்டின் அருகில் உள்ளது. சிங்கப்பூர் ட்ரான்சிட்டில் ஐந்து மணிநேரம் கழித்தேன், இப்போது மெல்போனை நோக்கி பயணம்… மகிழ்ச்சி ஒரு புறம் பயம் ஒரு புறம்.. எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டுமே நல்லபடியாக செட்டிலாக வேண்டுமே என்ற கவலை. மெல்போனில் வந்து இறங்கினேன், சுங்கமும் முடித்து வெளியே வந்தேன். என்னுடன் படித்த நண்பன் அசோக் என்னை வரவேற்க அங்கு நின்றிருந்தான். பரஸ்பர விசாரிப்புகள்.. அவன் தங்கியிருந்த வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். அடுத்த இரண்டு நாட்கள் சனி ஞாயிறு அவனுடன் அருகாமையில் இருந்த இடங்களை சுற்றிப் பார்த்தேன். திங்கட்கிழமை அவன் வேலைக்கு சென்று விட்டான்… நான் வேலை தேட ஆரம்பித்தேன்.. வேலை கிடைப்பது மிக எளிதாக இருந்தது, அந்த வாரத்திலேயே கிடைத்துவிட்டது. நாட்கள் ஓட, வருடங்கள் ஓட, நானும் அடிக்கடி இந்தியா சென்று வந்து…. வீடும் வாங்கிவிட்டேன் திருமணமும் நடந்துவிட்டது. பிரசாரத்திற்கு எனக்கு முன்பே திருமணம் நடந்துவிட்டது ஒரு குழந்தையும் உண்டு…. நான்கு வருடங்கள் ஓடி விட்டது எனக்கு இரண்டு பிள்ளைகள், பிரசாத்திற்கு ஒரு பெண் ஒரு பிள்ளை. வாழ்க்கையே ஒரு போராட்டம் தான்… போராட்டத்தின் விகிதாச்சாரம் ஏறக்குறைய இருக்குமே தவிர எல்லோருக்கும் போராட்டம்தான்….. பிள்ளைகளை வளர்க்கும் வரை ஓய்வு குறைவாகவே இருந்தது.. ஆனால் வருடங்கள் வேகமாக உருண்டோடின. மகன்கள் நளனும், நித்திரனும் நன்றாக வளர்ந்தார்கள், இருவரும் Melbourne Uni யில் பட்டப்படிப்பு முடித்தனர். நான் வந்த வழியை யோசித்துப் பார்த்தேன்.. நீண்ட வழி ஆனால் கடின வழி என்று சொல்லக்கூடாது… வாழ்க்கை என்னைக் கருணையுடனே நடத்தியதாக கருதுகிறேன். மகன்கள் மேல் படிப்பும் முடித்து வேலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர்… ஒருவனுக்கு மெல்போனிலேயே வேலை மற்றவனுக்கு சிட்னியில் வேலை. முதுமை தட்ட ஆரம்பித்தது என்று சொல்வதைவிட முதுமையை உணர ஆரம்பித்தேன் என்று சொல்வது பொருந்தும்… என்னுடைய காலத்தில் பெற்றோருக்கு கொடுத்த வேலையை என் மகன்கள் எனக்கு கொடுக்கவில்லை.. அவரவர்களுக்கு பிடித்த பெண்களை திருமணமும் செய்துகொண்டார்கள், என் நண்பர்கள் என்னிடம் கூறினார்கள், ‘பரவாயில்லை முகுந்த் இப்போது நீ பிரீ மேன்’ என்று. உண்மையைச் சொல்லப்போனால்… முன்பை விட ஓய்வு குறைவாகவே கிடைத்தது… ஆமாம் நானும் மனைவியும் அடிக்கடி சென்று பேரப்பிள்ளைகளை கவனித்துக்கொள்வது தினசரி வேலையாக போய்விட்டது. ‘என்ன முகுந்த், மழையின் சாரல் அடிப்பது கூட தெரியாமல் என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்…. பேரக் குழந்தைகளின் ஞாபகமா? ‘ என்று பிரசாத் கேட்டவுடன் நினைவலைகளில் இருந்து மீண்டு சுய நிலைக்கு வந்தேன். ஒரு மகன் பிள்ளைகளுடன் அமெரிக்காவிற்கு குடியேற்றம்… மற்றவன் அவனுடைய குழந்தைகளுடன் கனடாவிற்கு குடியேறிவிட்டான்….. இதோ இப்போது நானும் மனைவியும் என்னுடைய புதுப்பித்த பழைய வீட்டில் 45 வருடங்களுக்கு பிறகு பிறந்த ஊரில்!

தொடர்புக்கு @ melbournesivastories@gmail.com

bottom of page