பகுத்தறிவு By சிவா
- melbournesivastori
- Dec 12, 2020
- 2 min read
யாரைக் கேட்டாலும் சொல்வார்கள் ஆறாம் அறிவு என்னவென்றால்… நீங்களும் தான் சொல்வீர்கள் பகுத்தறிவு என்று… சரிதானே? மனச்சாட்சியுடன் இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள், உங்களை சுற்றி நடக்கும் விஷயங்களும், உலகத்தில் இன்று மனிதர்களால் நடத்தப்படும் விஷயங்களும் பகுத்தறிவுக்கு ஒத்த விஷயங்களா? என் கருத்து என்னவென்றால், ஆறாம் அறிவு மனிதர்களுக்கு கடவுளால் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு தேர்வு என்று…. பிரி வில் என்று வைத்துக்கொள்ளுங்கள்…. இதன் தொடர் கேள்வி வரும்…. தேர்வின் முடிவு என்னவாகும், எத்தகைய பாதிப்பு ஏற்படுத்தும் என்று… இதை நாம் வரையறுக்க போதிய அனுபவமும் இல்லை, நம் வாழ்நாளும் போதாது.. வள்ளலார் போன்ற நம் முன்னோர்கள் சொன்னதை தான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். சென்ற வாரம் மேற்கு ஆஸ்திரேலியாவில் நடந்த நிகழ்ச்சி… மண்ணின் பூர்வக்குடி மைந்தர்களான அபாரிஜின் மக்களின் 46 ஆயிரம் வருடங்களுக்கு முன்பான பாறை ஓவியங்கள் அங்கு இருந்தன… இதை ரியோ டின்டோ நிறுவனம் வெடிவைத்து தகர்த்து விட்டது….. பிறகு தவறுதலாக நடந்து விட்டது என்றனர்… இது பகுத்தறிவில் எந்தவிதத்தில் பொருந்தும்? டெலிபதியை எடுத்துக்கொள்வோம், ஒருவர் மற்றொருவருக்கு இங்கு அங்கு என்று இல்லாமல் எங்கே இருப்பினும் மனதின் மூலமாக செய்தியை தெரிவிப்பது…. இதைப்படித்து இருக்கிறோம், வெகுசிலர் சிறு நிகழ்ச்சிகள் மூலம் அனுபவத்திலும் உணர்ந்திருப்பார்கள். நன்றாக யோசித்துப் பார்த்தால் நம் முன்னோர்களால் அறியப்பட்ட இந்த நுண்ணறிவு எங்கோ எதற்காகவோ சிதைந்திருக்கிறது. என்ன முடிவுக்கு வரவேண்டியுள்ளது என்றால் கொடுத்த ஆறாம் அறிவை மனிதன் சரியாக பயன்படுத்த தவறிவிட்டான் என்பதையே காட்டுகிறது. சில உதாரணங்களை நம்மால் யோசிக்க முடியும், முன்பெல்லாம் எத்தனை தொலைபேசி எண்களை மனதில் வைத்து இருந்தோம்.. ஆனால் இப்போது…… சற்று நினைத்துப்பாருங்கள், உங்கள் மொபைல் போன் தொலைந்தால் எத்தனை தொலைபேசி எண்களை நீங்கள் நினைவில் வைத்துக் கொண்டிருப்பீர்கள்? இது ஒரு வித நம் திறமையின் இழப்பு என்று தான் கூற வேண்டும் தொழில்நுட்பங்களை அதிகம் சார்ந்து இருப்பதால். இந்த 21ம் நூற்றாண்டில் மனிதன் வேகமாக எதையோ நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறான், அவன் வாழ்நாளில் ஒவ்வொரு நொடியும் வளர்ந்த தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. எதை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறான் என்று தெரியாமலேயே ஓடிக்கொண்டிருப்பது தன் சுய தற்சார்பு ஆற்றலை இழக்கிறான் என்றே. தோன்றுகிறது. என் வீட்டு தோட்டத்தில் சமீப காலங்களாக இரண்டு வாத்துக்கள் உணவைத் தேடி வர ஆரம்பித்தது, நானும் அளித்தேன்… பின் தொடர்கதையாக போய்விட்டது தினமும் மூன்று அல்லது நான்கு வேலைகள் வருகின்றன உணவு அளிக்கின்றேன். இன்றும் வந்தன, உணவு அளித்தேன் பிறகு என் அறைக்கு வந்து சயின்டிபிக் அமெரிக்கனின் புதிய பதிவை படிக்க ஆரம்பித்தேன்… உணவை உண்ட பிறகு இரு வாத்துகளும் மெதுவாக நடந்து வந்து என் அறையின் அருகில் நின்றது. படிப்பதை விட்டு அதை கவனிக்க ஆரம்பித்தேன், இரண்டும் ஒன்றுக்கொன்று பேசிக்கொள்ளவில்லை…. இருப்பினும் ஏதோ ஒரு தகவல் பரிமாற்றம் அவைகளுக்குள் நடப்பது போலவே இருந்தது…. உற்றுநோக்க ஆரம்பித்தேன், அப்போது திடீரென்று ஒரே சமயத்தில் சொல்லப்போனால் பிராக்ஷன் ஆப் எ செகண்டில்… ஒரு சேர பறக்க ஆரம்பித்ததன . அப்போது புரிந்தது, மனிதர்களால் மறக்கப்பட்ட டெலிபதியின் ஆற்றல் இன்னும் மற்ற உயிரினங்களில் காணப்படுகிறது என்று! இயற்கைசார் வாழ்க்கை வாழாமல் மனிதர்கள் வாழ்வது ஒரு விதத்தில் பார்த்தால் தொழில்நுட்ப வளர்ச்சியினால் நமக்கு கொடுக்கப்படும் தண்டனையாகவே பார்க்கவேண்டியுள்ளது.
தொடர்புக்கு @ melbournesivastories@gmail.com



