top of page

பயணம் By சிவா

  • melbournesivastori
  • Dec 12, 2020
  • 2 min read

காட்பாடி ரயில்வே ஸ்டேஷனில் நின்றுகொண்டிருந்தேன், பெங்களூர் நோக்கி பயணம். அங்கு மூன்று நாட்கள் பழைய நண்பர்களைப்பார்க்கவும் உறவினர்களை பார்க்கவும் தங்க வேண்டி உள்ளது. இப்போது காத்துக்கொண்டிருந்தது பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் வருகைக்காக. தூரத்தில் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் வருவது தெரிந்தது, எடுத்துவந்த சூட்கேஸை எடுத்துக் கொண்டு தயாரானேன், பிருந்தாவனம் வந்தது உள்ளே ஏறி சென்றேன்…. இரண்டு நிமிடங்கள் தான் வண்டி புறப்பட தொடங்கியது… நான் என் இருக்கை தேடி கண்டுபிடித்தால் அங்கு ஒரு பெண் அமர்ந்திருந்தார். ‘ஹலோ அந்த விண்டோ சீட் என்னுடையது’ என்று அந்த பெண்ணைப் பார்த்து கூறினேன். அதற்கு அந்த பெண் ‘ ஐ அம் கம்மிங் பிரம் சென்னை, கேன் யூ சிட் இன் மை பிளேஸ் ப்ளீஸ்’ என்றார். ஒரு முப்பது வயது இருக்கும் அந்தப் பெண்ணிற்கு. அந்தப் பெண் என்னிடம் அனுமதி கேட்கிறாரா அல்லது உத்தரவு பிறப்பிக்கிறாரா என்றே புரியவில்லை… சரி என்று தலை அசைத்து அவள் காட்டிய எதிர் வரிசை இருக்கையில் அமர்ந்து கொண்டேன். வண்டி முழு வேகம் எடுத்து செல்ல ஆரம்பித்தது… எல்லோரும் இருக்கையில் அமர்ந்து சாதாரண சூழ்நிலைக்கு வந்தபோது…. என் நண்பன் வைத்தி எழுதும் கேப்பிட்டல் காலத்தை படிக்க ஆரம்பித்தேன். சிறு அறிமுகம் வைத்தி என்னுடைய நண்பன், வாரம்தோறும் ‘தலைநகரிலிருந்து’ என்று கேப்பிடல் காலம் எழுதுவார், அது இன்று அந்த வாரப்பத்திரிகையில் வந்ததைத்தான் படிக்க ஆரம்பித்தேன். என் முன் வரிசையில் ஜன்னலுக்கு அருகில் அந்தப்பெண், கிட்டத்தட்ட அதே வயது இருக்கும் மற்றொரு பெண் அவருடைய பக்கத்தில்.. என் நேர் எதிரில் ஒரு வயதான பெண்மணி. அந்தப் பெண்ணின் சத்தமான பேச்சு என்னால் நிலைநிறுத்தி படிக்க முடியவில்லை… ‘ எங்க மெல்பனில்’ என்று அந்தப் பெண் சத்தமாக பேசத் துவங்கியதும் அவரை நேரடியாக பார்க்கவில்லை என்றாலும் பேச்சை கவனிக்க ஆரம்பித்தேன்… அவர் தொடர்ந்தார், ‘ எல்லாம் சிஸ்டம் படி நடக்கும்… இங்கு உள்ளது போல் நச்சரிப்பு கள் கிடையாது.. யூ நோ கமலா ஐ லவ் லிவிங் தேர் இன் மெல்பன்’ ஒன்று புரிந்தது பக்கத்திலுள்ள பெண்மணி பெயர் கமலா, இந்தப் பெண் மெல்பனில் இருக்கிறாள். ‘ஆமா விமல் ஸ்கூல் எஜுகேஷன் எல்லாம் எப்படி உள்ளது அங்கு’ கமலா கேட்டார், அந்தப் பெண் பெயர் விமல் என்று கூறினார் கமலா, விமலாவாக இருக்கும் என்று நான் நினைத்துக் கொண்டேன். ‘ கிரேட் எஜுகேஷன் கமலா, யு நோ கிண்டர், பிறப் என்று சிஸ்டமேட்டிக் ஆக தொடங்குகிறார்கள்’ என்று கூறிக்கொண்டே தொடர்ந்தார் ‘ நாங்கள் தங்கி இருப்பது மென்டோன், அது சிட்டி ஆப் கிங்ஸ்டன் என்று சொல்வார்கள் அந்த கவுன்சிலை சார்ந்தது’ என்றார். ‘ஆமாம் படித்தேன் அங்கு கூட ஒரு பெண்’ என்று கமலா கூற வந்ததை வழிமறித்து, விமலா ‘எஸ் நீ என்ன கேட்கப் போகிறாய் என்று தெரிகிறது… என் ஹஸ்பண்டுக்கு வெள்ளைக்காரர்கள் சிஸ்டம் படி நடப்பது மிகவும் பிடிக்கும், நாங்கள் ஓட்டு அளித்ததும் அவர்களுக்குத்தான்’. கமலா அமைதியாகி விட்டார். ‘ it’s பீன் 4 ஈயர்ஸ் நாங்கள் இந்தியாவை விட்டு சென்று’ என்று விமலா தொடர்ந்தார்… ‘அங்குள்ள பொலிடிசியன்களை பார்க்கணுமே நம்ம ஆளுங்க நூறு வருஷம் ஆனாலும் அது மாரி மாற முடியாது’ கமலா உற்று கேட்டுக்கொண்டிருக்க… ‘ இப்பவெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் ஆங்காங்கே நம்ம ஆட்களும் வருகிறார்கள் அரசியலுக்கு….. இவர்கள் வந்து இங்குள்ள ஊழலை எடுத்து வந்து அங்கு சேர்க்கத்தான் போகிறார்கள், எனக்கும் என் ஹஸ்பண்டுக்கும் வெள்ளைக்காரர் அரசியல்தான் பிடிக்கும்’ என்று ஒரே போடாக போட்டார்… இதற்கு மேல் அவர்கள் பேச்சை கேட்காமல் நான் படிக்கத் தொடங்கினேன். வண்டி நிற்க துவங்கியது, அப்போதுதான் கவனித்தேன் ஜோலார்பேட்டை வந்துவிட்டது. வண்டி கிளம்ப துவங்கியதும் சில நிமிடங்களில், யாரோ என் தோள்மீது கை வைத்தார்கள். ‘ஹலோ இளங்கோ எப்படி இருக்கிறீர்கள்? எவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டன… ‘ வந்திருந்தவர் என்னை பார்த்து கேட்டார்.. சில நொடிகளுக்குப் பிறகு புரிந்து கொண்டேன், அவர் கல்லூரியில் என்னுடன் படித்த வெங்கட் என்று. ‘வாங்க வாங்க’ என்று என் பக்கத்தில் இருந்த காலி இருக்கையில் அமரச் சொன்னேன். வெங்கட் அமர்ந்தார், ‘ கங்கிராஜுலேசன் இளங்கோ, உன்னுடைய பெண், நந்தினி முதல் தமிழ் பெண் MP ஆஸ்திரேலிய பார்லிமென்டில் என்று படித்து மிகவும் சந்தோஷப்பட்டோம் நான் மட்டுமில்லாது; நம் நண்பர்கள் மட்டுமில்லாது ஒட்டு மொத்த தமிழகமே சந்தோஷப்பட்டது’ என்றார். மிகவும் நன்றி வெங்கட்’, என்று ஒரு வித வெட்கத்துடன் கூறினேன். ‘ஆமாம் நீங்கள் சென்று ஒரு முப்பது வருடங்கள் ஆகிவிட்டன என்று நினைக்கிறேன்? ‘ என்றார். ஆமாம் என்று தலை அசைத்தேன்.. எந்தத் தொகுதியில் ஜெயித்தார் என்று கேட்டார், அதற்கு நான் ‘சிட்டி ஆஃப் கிங்ஸ்டன்’ என்று கூறி எதிரில் உள்ள விமலாவின் முகத்தை கவனிக்கத் தவறவில்லை!

தொடர்புக்கு @ melbournesivastories@gmail.com

bottom of page