வாழ்க்கை வாழ்வதற்கே By சிவா
- melbournesivastori
- Dec 12, 2020
- 2 min read
என் கல்லூரி காலங்களில், அதன் பிறகு வேலை செய்யும் காலங்களில், காலையில் பொதுவாக அன்று வந்த தினசரி நாளிதழை படிக்கும் பழக்கம் எல்லோரிடமும் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் காலையில் எழுந்தவுடன் தேடுவது மொபைல் போனை, அதில் வந்திருக்கும்; வந்திருக்கும் என்று நினைக்கும் வாட்ஸ்அப் மெசேஜ்களைத்தேட. நான் விதிவிலக்கா என்ன, சில நாட்களுக்கு முன்பு அதேபோல் எடுத்தேன், தேடினேன்… பார்த்தேன். குட்மார்னிங் சொல்லுபவர் ஒரு குழு, காலை வணக்கம் சொல்வார் ஒரு குழு, அரசியல் மீம்ஸ் களைப்போடுவோர் ஒரு குழு, தத்துவங்களைத் சிதற விடும் ஒரு குழு.. இவற்றின் மத்தியில் புதிதாக ஒன்று வந்திருந்தது.. துரை என்னுடன் பள்ளி நாட்களில் படித்தவன், பள்ளியிறுதி ஆண்டில் படித்தவர்களுக்கான ஒரு குழுவை ஆரம்பிக்கப் போவதாகவும் அதில் எண்ணை இணைக்க சம்மதம் கேட்டு பகிர்ந்திருந்தான். சம்மதம் தெரிவித்தேன், மளமளவென்று பல செய்திகள் வந்தன. அவரவர்கள் எந்த நிலையில் உள்ளனர் குடும்பம் எப்படி உள்ளது என்று எல்லாவற்றையும் பகிர்ந்த பிறகு….. நாம் ஏன் எல்லோரும் ஒருமுறை சந்திக்க கூடாது என்றனர்… நல்ல யோசனை செய்யலாம் என்றேன். பெரிய கூட்டமாக சந்திப்பதற்கு முன்பு நாம் ஏன் சிறிய குழுவாக சந்திக்க கூடாது என்று ஒரு நாளை தேர்ந்தெடுத்தோம். மணி, சுந்தர், கார்த்தி, மூர்த்தி இவர்களுடன் துரையும், நானும். அந்த நாளும் வந்தது, ஒரு ரெஸ்டாரண்டில் மேல் மொட்டை மாடியில் ஆறுபேரும் சந்தித்தோம்… என்னென்ன சாப்பிட போகிறோம் என்று ஆர்டர் கொடுத்து விட்டோம்…. மூர்த்தி ஆரம்பித்தான், ‘நான் ரிடையர் ஆகலாம் என்று உள்ளேன் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ‘ என்று. சுந்தர், சரியான முடிவு வாழ்க்கை வாழ்வதற்கே.. ஆமாம் மச்சி… நானும் ரிடையர் ஆகப் போகிறேன்… நிறைய இடங்களை சுற்றிப்பார்க்க வேண்டும்… வாழ்க்கையை நன்றாக அனுபவிக்க வேண்டும். மூர்த்தி, எனக்கென்னவோ எல்லா கோவில்களையும் பார்த்துவிடவேண்டும் என்று தோன்றுகிறது…. இவன் பக்திமான். மணி, எனக்கு ஒரு பெரிய காலி மனையும், கொஞ்சம் நிலமும் உள்ளது. நிலத்தை விற்று அந்த காலி மனையில் ஒரு கல்யாண மண்டபம் கட்டலாம் என்று இருக்கிறேன், இறப்பதற்குள் நானும் சாதித்தேன் என்ற ஒரு சந்தோஷம் எனக்கு வேண்டும். கார்த்தி, எனக்குள்ள தொழிலை விரிவுபடுத்த போகிறேன்… தொழில் உள்ள நெளிவு சுளிவுகளை என் மகனுக்கு நன்றாக கடித்து கற்றுத்தரப்போகிறேன்.. துரை, நான் ஏற்கனவே ரிட்டையர் ஆகி விட்டேன்… பிறக்கப்போகும் பேரக் குழந்தைகளை நல்லபடியாக படிக்க வைத்து வளர்த்துவிட வேண்டும். எல்லோரும் பேசிவிட்டோம் குமரா நீ என்ன செய்யப் போகிறாய்? என்னை பார்த்து கேட்டனர். நான் சிறிது யோசித்தேன், ‘எனக்கு எந்தப்பிளானும் கிடையாது…. ஆனால் ரிட்டயர் ஆகவேண்டும் என்று மட்டும் முடிவெடுத்துவிட்டேன்’ என்றேன். இதைக் கேட்ட மற்ற ஐந்து பேரும் என்னை ஒரு முட்டாளை பார்ப்பதுபோல் பார்த்தனர்.. புரிந்தது. ஐந்து பேரும் ஒரே நேரத்தில் கேட்டனர், ‘ ஒரு திட்டமும் இல்லாமல் ஏன் ரிட்டையர் ஆக போகிறாய்? ‘ நான் மெதுவாக ஆனால் திடமாக கூறினேன், ” என்னிடம் எவ்வளவு பணம் உள்ளது என்று எனக்குத் தெரியும் ஆனால் எவ்வளவு நாட்கள் வாழ்க்கை உள்ளது என்று தெரியாது, ஆகையால்தான்” என்றேன்.
தொடர்புக்கு @ melbournesivastories@gmail.com



