வயல்வெளியில் வரைபடங்கள் – Crop Circles.
- melbournesivastori
- Sep 24, 2021
- 6 min read
வயல்வெளிகளில் வரைபடங்கள் கருத்துப் பரிமாற்றமா இல்லை கற்பித்தலா?

சென்ற பதிவில் அண்டார்டிகாவின் ரகசியங்களை பற்றிய தெரிவிப்பதாக எழுதி இருந்தேன், அது பிரம்ம ரகசியம் போன்றது… ஆகையால் அதற்கு முன் சில பதிவுகளில் வேறு சில விஷயங்களை தெரிந்து கொண்டால் மட்டுமே அண்டார்டிகாவின் மனித அறிவுக்கு சவால் விடும் அளவிற்கு உள்ள பிரம்மாண்டத்தை புரிந்து கொள்ள முடியும்.
வருங்காலத்தை அறிந்து கொள்ள முடியுமா? லுக்கிங் கிளாஸ் என்பது உண்மையா? அது எப்படி நடக்காத ஒன்றை தெரிந்து கொள்ள முடியும்…
என் மனதை குழப்பியது குழப்பிக் கொண்டும் இருக்கிறது… ஒரே ஒரு முடிவுக்கு தான் என்னால் வர முடிந்தது, நாம் நினைப்பது புரிந்து கொள்ள முயற்சி செய்வது எல்லாமே நமக்குள்ள அறிவியல் அறிவைப் பொருத்தது. மனித இனத்தின் கர்வமே இது என்று எனக்கு தோன்றுகிறது…. அதாவது நாம் கற்றுக்கொண்டது மட்டும்தான் அறிவியலின் முடிவு எனும் கருத்து… இந்த கர்வதிற்கு சம்மட்டி அடி இன்று நேற்றல்ல எப்போதும் விழுந்து கொண்டிருக்கிறது….. நம் அறிவுக்கு எட்டாத பல விஷயங்கள் நம்மை சுற்றி நடக்கும் போது பிரபஞ்ச அறிவியலில் கடுகு அளவே நமக்கு தெரிந்து இருப்பது தெரியவருகிறது.
டெஸ்லா காரின் செல்ப் டிரைவிங் பற்றி உங்களுக்கு ஏற்கனவே குமர கண்டத்தை தேடி யில் கூறியிருக்கிறேன்… அதன் செல்ப் டிரைவிங் காரில் உள்ள பல சென்சார்கள் மூலமும் உடன் நுணுக்கமான அல்காரிதம் மூலமும் கணித்து ஓடுகிறது.. காலங்காலமாக காரை கீ மூலமாக திறந்து கீ மூலமாக ஸ்டார்ட் செய்து வந்தது போக, கீயை உடன் வைத்திருந்தாலே போதும் காரை திறந்து கொண்டு உள்ளே சென்று புஷ் பட்டன் மூலம் ஸ்டார்ட் செய்யலாம் என்று வந்து… இப்போது டெஸ்லாவிலோ ATM கார்டை விட மெலிதான கார்டு இருந்தாலே போதும் இதையெல்லாம் செய்துவிட….. டெஸ்லா கம்பெனியின் நிறுவனர் இலான் மஸ்க் இப்போது ஈடுபட்டுள்ளது மிகப்பிரம்மாண்டமான ஒன்று… அதாவது தாட் ப்ரோஸ்சசை அப்படியே எக்சிகியூட் செய்வது… எளிமையாகக் கூற வேண்டும் என்றால் நினைப்பதின் மூலமாகவே எதையும் இயக்க நினைப்பது…. இப்போது உங்களுக்கு நினைவுக்கு வரும் டெலிபதி பற்றி கூறுகிறேனோ என்று…. டெலிபதி பற்றி நாம் அறிந்தது புரிந்து கொண்டது நம் எண்ண அலைகளை கூறாமலேயே அருகில் உள்ளோருக்கோ அல்லது வேறெங்கோ உள்ளோருக்கோ கடத்துவது… இலான் மஸ்க்ன் முயற்சி அதைவிட பிரம்மாண்டமானது… நம் எண்ண அலைகளை கொண்டே எதிரில் உள்ள கணினிகளையும், எந்திரங்களையும் இயக்க முயற்சிப்பது…. இது ஏலியன் ஊர்திகளில் இருந்ததை தெரிந்து அதேபோல் செய்ய முயற்சிப்பது. இந்த இடத்தில் ஒன்று கூற வேண்டும்… இலான் மஸ்க் பயப்படுவது ஒரே ஒரு விஷயத்துக்காக மட்டுமே அதாவது AI எனப்படும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் காக மட்டுமே… மேலே குறிப்பிட்ட இந்த முயற்சி ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் அல்ல…
லுக்கிங் கிளாஸ் பற்றியும் விபத்துக்குள்ளான ஏலியன் ஊர்தி பற்றியும் கர்னல் கார்சோ உலகிற்கு உடைத்து தெரிவித்த இதுவரையும்; இன்றுவரையும் உலகத்திற்கு இருந்த; இருக்கும் ஏலியன்களின் தொடர்பு பற்றியும் வரும் அத்தியாயங்களில் விரிவாகக் கூறுகிறேன்… இங்கு நாம் பார்க்க இருப்பது ‘கிராப் சர்க்கிள்’ எனப்படும் வெட்ட வயல்வெளிகளில் திடீரென தோன்றும் வரைபடங்களை பற்றியது… இதைப்பற்றி ஏராளமானோர் ஆராய்ச்சி செய்தனர் செய்து கொண்டும் இருக்கின்றனர்… பேட்டி (Patty) எனும் பெண்மணி கிட்டத்தட்ட தன் வாழ்நாள் முழுவதும் இதில் அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.. அவர் ஓரளவுக்கு முடிவுக்கு வந்தது லைட் பீய்யிங்குகளால் (Light Beings) இது உருவாக்கப்படுகிறது என்பது… இதைப்பற்றி விரிவாக சொல்வதற்கு முன்னால் இதுவரை என் குடும்பத்தாருக்கும் இரு நண்பர்களை தவிர மற்றவர்களுக்கும் தெரிவிக்காத பகிராத ஒன்றை பகிரப்போகிறேன்….
ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தி ஆறு பின்பகுதியோ எண்பத்தி ஏழின் பின்பகுதியோ சரியாக நினைவில்லை,
மாலை சுமார் 5 மணி அளவில் என் அண்ணனின் நண்பர் ராணுவத்தில் பணிபுரிகிறவர் வீட்டுக்கு வந்திருந்தார்.. அவர் பேசுகையில் ராணுவ எல்லையில் பயன்படுத்தப்படும் வினோத சிக்னல் வெடிபொருட்களை பற்றி குறிப்பிட்டு அன்று இருட்டத் துவங்கியதும் தன்னுடன் வைத்துள்ள ஒன்றிரண்டை வெடித்துப் பார்க்கலாம் என்றும் கூறினார்… அந்த சமயத்தில் என் நண்பனும் வர, சுமார் மணி ஆறு முப்பது இருக்கும்… நான்கு பேரும் தோட்டத்திற்குச் சென்று அண்ணனின் நண்பர் ஒரு கடப்பாரையை தரையில் செருகி அந்த வெடியை சேர்த்துக் கட்டினார்… அப்போதுதான் கவனித்தோம்.. இது நடந்தது வேலூரில்… நான்கு பேரும் என்ன ஏது என்று புரியாமல் பார்த்தது, விசித்திரமாக கால்பந்து அளவில் ஆரஞ்சு கலரில் மெதுவாக வானத்தில் நகர்ந்த அந்த 3 ஒளி உருண்டைகளை பார்த்துத்தான்….. சுமாராக சொல்லவேண்டுமென்றால் நாங்கள் இருந்த இடத்திற்கும் அந்த ஒளி உருண்டைகளுக்கும் இடைவெளி ஒரு மூன்று கிலோமீட்டர்கள் இருக்கும்.. மெய்மறந்து பார்த்துக் கொண்டிருக்கும்போதே மெதுவாக மூன்றும் நகர்ந்து ஊசூர் மலை அடிவாரத்தில் மறைந்தது… மற்ற மூவரும் அன்றைய பேச்சிலேயே ஒரு சில மணி நேரங்களில் அதைவிட்டு வேறு விஷயங்களை பேச… நான் மட்டும் மறுநாள் செய்தித்தாள்களில் அதைப் பற்றி தேட எந்த செய்தியும் வராமல் ஏதுமில்லாமல்…. மறக்க முயற்சிசெய்து முடியாமல் அன்று முதல் அதைப்பற்றிய உண்மைகளை தேடத் துவங்கினேன்… பலப்பல வருடங்கள் அவசர வாழ்க்கையில் தேடல் மட்டுப்பட்டு இருந்தாலும் இந்த நூற்றாண்டில் தொழில்நுட்பங்களின் உதவியால் முன்னேற்றங்களால் என்னுடைய தேடல் எளிதானது…. Pattyயின் கட்டுரையைப் படிக்கும்போது பேய் அறைந்தால் போல் ஏற்பட்ட உணர்வினால் இன்று இதை உங்களுடன் பகிர நேர்ந்தது. அவர் ஒரு முறை இங்கிலாந்தில் ஒரு குழு இதுபோன்ற ஒளி உருண்டைகளை பார்த்ததாக கேள்விப்பட்டு அவர்களைப் பேட்டி எடுக்கச் சென்று பேட்டியும் எடுத்தார்… எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை போலவே அவர்களுக்கும் ஏற்பட்டிருந்தது.. இதில் பிரெஞ்சு பெல்ஜியம் இங்கிலாந்து குடும்பங்களும் அடங்கும்.. அன்று இரவு ஒரு உணவு விடுதியில் எல்லோரும் உணவு அருந்திவிட்டு அருகில் உள்ள வயல் வெளியில் ஒளி உருண்டைகள் வருகின்றனவா என்று கண்காணிக்க எதிர்பார்த்து காத்திருந்தனர்…. நடு இரவிற்கு முன்பே 3 ஒளி உருண்டைகள் தோன்ற ஒன்று பொன் நிறத்தில் இருக்க மற்ற இரண்டும் ஆரஞ்சு நிறத்தில் இருந்தன.. பொன் நிறத்தில் இருந்த ஒளி உருண்டைக்கு சிறிது இடைவெளிவிட்டே மற்ற இரண்டு ஆரஞ்சு ஒளி உருண்டைகளும் மெதுவாக நகர்வதை கண்டனர்… மெய்சிலிர்த்து புல்லரித்து அந்த நிகழ்வை கண்டுகளித்தனர்.. அவர் கூறிய ஒன்று இன்றுவரை மர்மத்திற்குள் மர்மமாக உள்ளது… அவர் கண்ட மூன்று ஒளி உருண்டைகளிலும் ஒரு வி போன்ற வெட்டு இருந்தது… அது என்னவென்று இன்று வரை அவராலும் விளக்க முடியவில்லை யாராலும் விளக்க முடியவில்லை… அன்றிரவு எல்லோரும் விடுதிகளுக்கு திரும்பி உறங்கி மறுநாள் எழுந்த பிறகுதான் அந்த செய்தி கிடைத்தது… அவர்கள் முன்னிரவு சென்ற இடத்தில் ஒரு பெரிய கிராப் சர்க்கிள் ஏற்பட்டிருந்தது.. உடனடியாக எல்லோரும் கிளம்பிச் சென்று அந்த இடத்தை அடைந்தனர்.
அது போன்ற இடங்களில் ஒருவித எலக்ட்ரோ மேக்னடிக் பீல்ட் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருப்பதையும் கடந்து ஒருவித உன்னத நிலையை உணர்வதாக அவர் பலமுறை கூறியுள்ளார். இந்த வயல்வெளி வரைபடங்கள் எப்படி ஏற்பட்டிருக்கும் உருவாகியிருக்கும் அல்லது உருவாக்கப்பட்டிருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே அருகிலிருந்த ஒரு குடும்பத்தின் 5 வயது சிறுமி இது அந்த ஒளி உருண்டைகள் செய்தது என்று கூறியதும் எல்லோரும் திடுக்கிட்டனர்.. ஏதோ அந்த சிறுமி உளறுகிறாள் என்று என்று நினைத்தாலும் மனதின் ஓரத்தில் அது இருந்துகொண்டே இருந்தது…. இதுபோன்ற கருத்தை மேலும் சில ஆராய்ச்சியாளர்களும் கூறியுள்ளனர்… கருதுகின்றனர்….பல இரவுகள் ஒரு குழு காத்திருந்து ஆராய்ச்சி செய்ததில் ஒரு இரவில் 2 சிறிய வெள்ளை ஒளி உருண்டைகள் அதிவேகமாக இதுபோன்ற சர்க்கிள்களை உருவாக்கிவிட்டு சென்றது வீடியோவில் பதிவானது… இது இப்படி இருக்க… வேறு ஒரு குழு பல இரவுகள் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்தும் ஏதும் பதிவாகாமல் இருந்தும் கண்காணித்த இடங்களில் இது போன்ற கிராப் சர்க்கில்கள் உருவாகியிருப்பதை கண்டு ஆச்சரியமும் அதிர்ச்சியுடன் குழப்பமுமடைந்தனர்…. இதற்கு ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் கூறும் விளக்கம் என்னவென்றால்… இவைகள் பூமிக்கு மேல் இருந்து உருவாக்கப்படுவதில்லை மாறாக பூமிக்கு அடியிலிருந்து உருவாக்கப்படுகிறது என்பது. ஒரு முறை இங்கிலாந்தில் இருவர் ஹெலிகாப்டரில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு 45 நிமிடங்களில் சென்று திரும்பினர்… ஆச்சரியம் என்னவென்றால் அவர்கள் போகும் போது சாதாரணமாக இருந்த ஒரு வயல் வெளியில் திரும்பும்போது 45 நிமிடங்கள் கழித்து ஒரு பெரிய கிராப் சர்க்கிள் உருவாகியிருந்தது…


இவ்வாறு மெச்சத்தக்க அற்புதமான வரைபடங்கள் ஆங்காங்கே உருவாக சில அட்டென்ஷன் சீக்கர்ஸ் நாங்கள் தான் இதை உருவாக்குகிறோம் என்று சவால்விட்டு சில வரைபடங்களை செய்து காண்பிக்க தானாக உருவாகும் கிராப் சர்கில்களின் நேர்த்தியில் சிறிதளவும் இல்லாதது கண்டு அவர்களை புறம் தள்ளினர்.

அவர்கள் உருவாக்கியதில் பார்லி மற்றும் கோதுமை பயிர்கள் மடிக்கப்பட்டன.. ஆனால் மற்றவைகளை ஆராய்ச்சி செய்ததில் ஒருவித அதீத வெப்பம் பயிர்களின் கணுக்களில் பாய்ச்சப்பட்டு மடக்கப்பட்டது தெரியவந்தது.
இவைகளை அறிந்த பிறகு எனக்கு தோன்றுவது உங்களுக்கும் தோன்றும் எனக்கு நேர்ந்த அனுபவத்தின் போதும் இதுபோன்ற வயல்வெளி வரைபடம் வேலூரில் தோன்றியதா என்று…. யாருக்கு தெரியும்… குழம்பி குழம்பி ஒன்றை புரிந்து கொண்டேன்.. ஏன் இது போன்ற கிராப் சர்க்கிள்கள் வளர்ந்த நாடுகளில் மட்டுமே தோன்றுகிறது என்று… சற்று யோசித்துப் பார்த்தால் உங்களுக்கும் புரியவரும்…. தமிழ்நாட்டில் வயல்வெளி பகுதிகள் இருக்கும் கிராமங்களில் வசிப்போர் விமானங்களைப் பார்ப்பதே அரிது சில தலைமுறையினர் விமானங்களை பார்க்காமலேயே வாழ்க்கையையும் வாழ்ந்து முடித்துள்ளனர்… இப்போது யோசித்துப் பார்த்தால் தெரியும் ஒளி உருண்டைகள் நம் வயல்வெளிகளில் இத்தகைய வரைபடங்களை உருவாக்கினால் நம்மால் காண முடியாது… ஏன் என்று கூறுவதற்கு முன்னால் வளர்ந்த மேலை நாடுகளின் வேளாண்மையை பார்ப்போம்.
மேலைநாடுகளின் வயல்வெளிகள் மிக அதிக பரப்பளவு கொண்டவை… அங்குள்ள பயிர்களுக்கு பூச்சி மருந்து அடிக்க கூட விமானங்களை பயன்படுத்துகின்றனர்… அதுமட்டுமல்லாமல் கேளிக்கைகளுக்கும் அதிக அளவில் சிறிய விமானங்களை பயன்படுத்துகின்றனர்… இவ்வாறு அத்தகை விமானங்களில் பயணிக்கும் போது தான் இத்தகைய வயல்வெளி வரைபடங்கள் நமக்குத் தென்படும். ஒரு சிறிய அளவில் அருகிலுள்ள குன்றுகளில் அல்லது மேடான பகுதிகளில் இருந்து பார்த்தாலும் ஓரளவுக்கு தெரியும்… இப்போது நம் வயல்வெளிகளை பாருங்கள் சம நிலங்களில் இருக்கும்போது இவைகள் தெரியவதற்கு வாய்ப்பில்லாமல் போக இது உருவாவதற்கான முகாந்திரமே இல்லாமலும் இருக்கலாம்.
இவர்கள் ஏன் உருவாக்கப்படுகின்றன என்று யோசிப்போம்.. ஏன் என்று உறுதியாக யாராலும் கூறமுடியவில்லை… இருப்பினும் சில நெருக்கமான முடிவுகளுக்கு வரலாம்… நமக்கு புரியாத தெரியாத விஷயங்கள் உலகத்தில் ஏராளமாக உள்ளது…. உலகத்திலேயே இப்படி என்றால் பிரபஞ்சத்தை யோசித்துப் பாருங்கள்… நம் பூமியில் நம் மனித இனம் பரிமாணங்கள் எனப்படும் டைமென்ஷன்களில் மூன்றிலிருந்து நான்காவதற்கு மாறிக் கொண்டிருக்கிறோம் என்று சொல்கிறார்கள்… எப்படி தெரிந்ததோ பிரபஞ்சத்தில் 11 டைமென்ஷன்கள் உள்ளன என்று மிகவும் மதிக்கத்தக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர்… இவைகளும் ஒரு வரையறைக்கு உட்பட்டதே… இதற்குள் இதற்கு மேலும் செல்ல வேண்டாம். சரி விஷயத்திற்கு வருவோம்.. ஏலியன்கள் ஏலியன் தொடர்புகள் ஒருபுறம் இருக்க இது போன்றவைகள் வேறு பரிமாணத்தில் இருக்கும் ஆத்மாக்களால் உருவாக்கப்படுகின்றன என்று நம்பப்படுகிறது…. ஏன் உருவாக்கப்படுகின்றன என்று யோசித்துப் பார்த்தால் நமக்கு ஏதோ செய்திகள் கூற வருகிறது தெரியவருகிறது.. நம்மை பண்படுத்த முயற்சிகள் நடைபெறுகின்றன என்றும் தோன்றுகிறது…. இங்கு சில முக்கிய நிகழ்வுகளை பகிர வேண்டும். 1977ல் அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட்ட வாயேஜர் விண்கலம் ஒரு போனோ கிராப் தகடை தாங்கி சென்றது அது தாமிரத்தால் செய்யப்பட்டு தங்க முலாம் பூசப்பட்டது…. அதில் நம் பூமியின் இருப்பிடம் இந்தப் பால் வெளியில் எங்கு இருக்கிறது என்பதும், சில முக்கிய மொழிகளில் செய்திகளும், ஆண் பெண் உருவங்களும் நமது மரபணுவின் குறிப்புகளும் இடம்பெற்றிருந்தன. இந்த விண்கலம் சென்ற வருடத்தில் 22 பில்லியன் கிலோமீட்டர்கள் கடந்து இன்றும் சென்று கொண்டிருக்கிறது.

இதற்கு மேலும் இதைப் பற்றிய செய்திகள் நமக்கு தேவையில்லை….ஆனால் 1992இல் இங்கிலாந்தில் ஒரு பெரிய வயல்வெளியில் நாம் அனுப்பிய மரபணுவின் விளக்கம் ஒரு பக்கத்திலும் அதற்கு அடுத்து அதில் சில மாற்றங்கள் செய்த வரையப்படும் மறுபக்கத்திலும் கிராப் சர்கில்களாக தோன்றியது பெரிய ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் உருவாக்கியது… அந்த மாற்றம் செய்த வரைபடம் இந்த வயல்வெளி வரைபடங்களை உருவாக்கும் Beings இன் (ஆத்மாக்களின்) மரபணுவோ என்று யோசிக்கத் தோன்றுகிறது…

மற்றுமோர் இடத்தில் கிரே ஏலியன் போன்று ஒரு உருவமும் அதன் பக்கத்தில் நாம் அனுப்பிய தங்கத் தகடு போன்ற ஒன்றும் உருவாகியிருந்தது… இந்த செய்தியை எவ்வளவோ பேர் டி கோட் செய்ய முயற்சித்தனர். சிலர் சிலவற்றை கூறினாலும் ஏற்றுக்கொள்ள முடியாத படி அவைகள் இருந்தன. செப்டம்பர் 4ஆம் தேதி 2004ஆம் ஆண்டு ராபர்ட் என்பவர் ராஸ் வெள்ளில் கண்டெடுத்த ஒரு சின்னம் பொறிக்கப்பட்ட கிரானைட் கல்.. அது கல்லாக இருந்தாலும் காந்த சக்தி இருந்தது அதற்கு… ஆச்சரியம் என்னவென்றால் அதைப்போன்றே ஒரு கிராப் சர்க்கிள் பலப் பல வருடங்களுக்கு முன்பே இங்கிலாந்து வயல்வெளியில் தோன்றியதுதான். மேலுள்ள படத்தில் இவைகளை காணலாம்.

பல வருட முயற்சிகளுக்குப் பிறகு மேலுள்ள படம் பையின் (Pi value) மிகச்சரியான வேல்யூ என்று கண்டுபிடித்தனர்.. இதுபோன்று ஒவ்வொரு வரைபடமும் ஏதோ ஒன்று நமக்கு சொல்கிறது அதைப் புரிந்துகொள்ள முடியாமல் நம் அறிவின் தற்போதைய அளவு இருக்கிறது… என்றாவது ஒருநாள் இவைகளுக்கெல்லாம் விளக்கங்கள் நமக்கு கிடைக்குமோ அல்லது மிக வெளிப்படையான விளக்கங்களை அவைகள் தருமோ காலம்தான் பதில் சொல்லும்.
இத்தகைய வயல்வெளி வரைபடங்களைப் போலவே பெரு நாட்டில் நாஸ்கா லைன்ஸ் (Nazca Lines) எனப்படும் மிகப் பிரம்மாண்டமான விலங்குகள் பறவைகள் பூச்சிகளின் வரைபடங்கள் வறண்ட பாலைவனம் போன்ற மிக உயரமான மலைகளில் இருப்பது சென்ற நூற்றாண்டில்தான் விமானத்தில் பறக்கும் போது தற்செயலாக கண்டுபிடித்தனர்..

அவைகளைப் பற்றி மிக அருமையாக வான் டானிக்கன் எனும் மிகவும் மதிக்கத்தக்க சுவிட்சர்லாந்தின் ஆராய்ச்சியாளரின் கருத்துக்களையும் அத்தகைய வரைபடங்களையும் பற்றியும் வேறு ஒரு அத்தியாயத்தில் எழுதுகிறேன்.
இவைகளே அறிவுப்பூர்வமாக யாராவது புரிந்து கொண்டாலும் அவர்கள் விளக்க முற்படுவதை யாராவது கேட்பார்களா? இல்லை என்றே தோன்றுகிறது… நாம் இருக்கும் இக்கால கட்டம் அறிவு சொல்வதைவிட அதிகாரம் சொல்வதையே கேட்கிறது.. அதிகாரம் வரலாற்றை திருத்தினாலும்; நிறுத்தினாலும் கேட்க ஆளில்லை..
கிரஹாம் ஹான்காக் அவர்கள் ஆசியாவிற்கும் தென் அமெரிக்காவிற்கும் சில நூறு ஆயிரங்களுக்கு முன்பே தொடர்பு இருந்திருக்கிறது என்று மரபணுவின் மூலம் நிரூபிக்க முற்பட்டாலும், வட அமெரிக்காவில் சில நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகம் இருந்திருக்கிறது என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முற்பட்டாலும் அதிகாரத்தில் இருக்கும் ஆர்க்கியாலஜி குழு அவரை ஏளனப்படுத்தியத, இன்றும் படுத்துகிறது …
இதற்கு காரணமும் உண்டு…..
வேட்டையாடி உண்ணும் பழக்கம் உள்ளவர்களுக்கு (hunter gatherers) நாகரிகத்தைப் பற்றி எடுத்துச் சொன்னால் புரியாதோ அதே நிலைமையில் தான் தற்காலத்தில் நாமும் உள்ளோம்.. அவர்களின் அன்றைய பிரச்சினை அன்றைய மற்றும் மறுநாள் உணவு, இன்றைய நம்முடைய பிரச்சனை இன்றைய மற்றும் மறுநாள் வாழ்க்கை.. இத்தகைய அவசரகதியில் நாம் வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருந்தாலோ அல்லது ஓட வைக்கப்பட்டாலோ ஒரு போதும் நம்மால் பெரிய மாற்றங்களுக்கு தயாராக முடியாது… இவைகளை என்றோ நம் சித்தர்கள் கூறிச் சென்றிருக்கிறார்கள்.
திறந்த மனதுடன் இருந்தால் மட்டுமே வயல்வெளி வரைபடங்களின் கருத்துப் பரிமாற்றமோ இல்லை கற்பித்தலோ எதுவாக இருந்தாலும் நம்மால் புரிந்து கொள்ள முடியும். நம் வாழ்நாளிலேயே இதற்கான விடைகள் கிடைக்கும் என்று நம்புவோம்!
அடுத்த அத்தியாயத்தில் மீண்டும் 1947க்கு செல்லலாம், அக்காலகட்டத்தில் இருந்துதான் இன்றைய அதீத தொழில்நுட்ப வளர்ச்சி துவங்கியது.