top of page

ஸ்டார் சைல்ட் By சிவா

  • melbournesivastori
  • Dec 12, 2020
  • 4 min read

முகுந்தனுக்கு ஏன் அந்த டெஸ்ட் எடுக்கணும் இப்ப.. ஏன் இவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகணும் என்ற எண்ணம் வந்து கொண்டே இருந்தது… இருப்பினும் பயணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார். முகுந்தன் எட்டாத தூரத்தை வெகுவிரைவில் எட்டிய மாமனிதர். சிறுவயது முதலே எதிலும் தோல்வி இல்லை எங்கும் தடைகள் இல்லை… பங்கேற்ற தேர்வுகளில் எல்லாம் வெற்றி, செல்லுமிடமெல்லாம் வெற்றி…. வேலூரில் முகுந்தன் சாதாரண குடும்பத்தில் ஒரே மகனாக 45 வருடங்களுக்கு முன் பிறந்தார்… குழந்தைப் பருவமோ பள்ளிப் பருவமோ பெரிதாக வித்தியாசம் ஏதும் தெரியவில்லை…. மிகவும் அறிவாளி குழந்தை என்பதைத்தவிர. உயர்நிலைப்பள்ளியில் தொடக்கம் முதலே பெரும் வித்தியாசம் தெரிய ஆரம்பித்தது…

நடக்கும் எல்லா தேர்வுகளிலும் முதல் மதிப்பெண், பங்கேற்கும் எல்லா போட்டிகளிலும் வெற்றி… எங்கும் எதிலும் தடையில்லை. உயர்நிலைப் பள்ளியின் இறுதி வருடங்கள் வரவர எல்லோராலும் கவனிக்கப்பட்டான் . பள்ளி இறுதித் தேர்விலும் எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது போல பள்ளியில் முதல் மதிப்பெண்… மாநிலத்தில் இரண்டாவது மதிப்பெண். முகுந்தனின் தாய் தந்தையிடம் பேட்டி எடுக்கும்போது சில சுவாரசியமான தகவல்கள் வெளியாகின. பள்ளியில் கொடுக்கும் வீட்டு வேலை செய்வதோடு சரி என்றுமே வீட்டில் படித்ததில்லை… ஒவ்வொரு சப்ஜெக்டிலும் சரியான திடமான புரிதல்… கடவுள் நம்பிக்கை உண்டு ஆனால் குறிப்பிட்ட கடவுள் நம்பிக்கை இல்லை… கோவில்களுக்குச் செல்லும் பழக்கம் இல்லை… சிறுவயது முதலே பிரபஞ்சத்தின் மீதும் மரபணுவின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தது… ஏதேனும் குறிப்பிடத்தகுந்த சம்பவங்கள் நடந்திருக்கிறதா என்று கேட்ட கேள்விக்கு, ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் தேதி பக்கத்தில் உள்ள அரியூரில் நடக்கும் மாடு விடும் திருவிழாவில் சில வருடங்களாக நண்பர்களுடன் சென்று பார்க்கும் பழக்கம் இருந்ததால் இந்த வருட ஜனவரி மாதத்தில் நடந்த அந்த மாடு விடும் திருவிழாவிற்கு சென்றபோது நடந்ததை கூறினார்கள்…

அரியூரில் நடப்பது, தென்மாவட்டங்களில் போன்ற ஜல்லிக்கட்டு இல்லை இது காளை விரட்டு விழா.. இதில் குறிப்பிட்ட தூரத்தை எவ்வளவு வேகமாக ஒரு காளை கடக்கிறது என்பதை பொருத்து பரிசுகள் வழங்கப்படும். இதில் சில வித்தியாசமான; விசித்திரமான மாடுகள் ஓடாமல் நின்று தன்னுடைய அசாத்திய கோபத்தையும் வலிமையையும் காண்பிக்கும். அது போன்ற ஒரு மாடு தான் மூஞ்சூர்பட்டு கேசவன் என்பவருடைய மாடு…. அந்த மாடு வரும்போதே மக்கள் எல்லோரும் தெறித்து பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விடுவார்கள். அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது… அந்த மாட்டை புகைப்படம் எடுக்கும் போது தவறுதலாக கேமரா கீழே விழ தன்னையும் மீறி முகுந்தன் ஓடிச்சென்று கேமராவை எடுக்க சுற்றி இருந்த எல்லோரும் பதர என்ன ஆகுமோ எப்படி ஆகுமோ என்று உடன் வந்திருந்த நண்பர்களும் பதர அந்த அதிசயம் நிகழ்ந்தது…. முகுந்தன் அருகில் வந்த அந்த மாடு முகுந்தன் முகத்தைப் பார்த்துவிட்டு தள்ளிச் சென்று நடந்து போய்விட்டது. இந்த நிகழ்ச்சி பல மாதங்களாக இன்றுவரை பேசப்படுகிறது என்றனர். முகுந்தனிடம் அதைப் பற்றி கேட்டதற்கு, ‘நான் ஏன் மாட்டை பார்த்து பயப்பட வேண்டும் எனக்கு பயம் ஏதும் இல்லை அதற்கும் என்மீது பயம் இல்லை அதுதான் நடந்தது’ என்றான். என்ன மேல் படிப்பு படிக்க விருப்பம் என்று கேட்டதற்கு, மரபணு பற்றிய ஆராய்ச்சி செய்ய விருப்பம் என்று கூறினான்… பிறகு வேலூர் கிருத்துவ மருத்துவக்கல்லூரியில் மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைத்தும் எல்லோராலும் வற்புறுத்தப்பட்டும் அதில் சேராமல்… பயோ கெமிஸ்ட்ரி எடுத்தான். இளநிலை பட்டப்படிப்பில் தான் எழுதிய ஆர்டிகல் அமெரிகன் சயன்டிஸ்டில் வருவது மிகவும் அரிதான ஒன்று… இளநிலை பட்டப் படிப்பின் கடைசி ஆண்டில் முகுந்தன் எழுதியது அவ்வாறு வந்தது… அங்கிருந்த அனுபவம் மிக்க விரிவுரையாளர்களுக்கு அது வியப்பாக இருந்தது… பிறகு முதுநிலை பட்டப்படிப்பு மொனாஷ் யூனிவர்சிட்டி ஆஸ்திரேலியா மெல்பனில் முழு ஸ்காலர்ஷிப்புடன் கிடைத்தது…

அதன்பிறகு அபார வளர்ச்சி, மெல்பனில் தங்கி முதுகலை பட்டப்படிப்பு… அதைப் படிக்கும்போது எழுதிய கட்டுரைகளின் விளக்கங்கள் மற்றவர்களிடம் அபார ஈர்ப்பை பெற்றது. தன்னுடைய நீண்ட நாள் விருப்பமான மரபணு பற்றி ஆராய்ச்சி செய்யத் தொடங்கினான். ஓய்வு நேரங்களில் கிலேட்டன் கல்லூரி வளாகத்தில் மரத்தடியில் அமர்ந்திருந்தபோது சில பறவைகள் அருகில் வந்து தன் மீது அமர்ந்தது விசித்திரமாக இருந்தது.. ஏதோ பூர்வ ஜென்மத்து வழக்கம்போல் அவைகள் நினைப்பதும் ஓரளவுக்கு புரிந்தது. சிறிது குழப்பமாக இருந்தாலும் ஆராய்ச்சியின் சுமை அதிகமாக இருந்ததால் இவைகளை பற்றி அதிகமாக நினைக்க நேரம் இல்லாமல் இருந்தது.

மாதங்கள் கடந்தது ஜெனட்டிக் சயின்ஸில் ஆராய்ச்சி டாக்டர் பட்டம் வாங்கியது பெரிதல்ல… அதற்கான ஜீனோ பகுதி பெரிய அதிர்வலைகளை உருவாக்கியது. வேறொன்றுமில்லை கஸ்டம் மேட் பேபிஸ்… நமக்குத் தேவையான குணாதிசயங்களை உள்ள குழந்தைகளை பெற்றுக்கொள்ள வசதி… மிகப்பெரிய எதிர்ப்பலைகளை உருவாக்கியது…. முகுந்தன் கொடுத்த விளக்க அறிக்கையினால் அந்த எதிர்ப்பலைகள் அடங்கியது. ‘ என்னுடைய இந்த ஆராய்ச்சியின் முடிவு மனித குலத்திற்கும், இயற்கையின் தன்னிலைக்கும், நாம் கொண்டுள்ள கடவுளின் சித்தாந்தத்திற்கும் எதிரானது என்று நீங்கள் கருதினால் நடைமுறைப்படுத்தாமல் அரசாங்கம் தடை விதிக்கும்… நானும் இதை செயல்படுத்த விரும்பவில்லை’ ஆஸ்திரேலியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட முகுந்தனின் இந்த அறிக்கை… கடல் கடந்து உலகம் முழுவதும் பேசப்பட்டது. என்னதான் இந்த ஆராய்ச்சிக்கு நெகட்டிவ் இமேஜ் இருந்தாலும்… விஞ்ஞான உலகில் மிகப் பிரம்மாண்டமான வரவேற்பும் இருந்தது. முடிவு இன்றுவரை முகுந்தன்அமெரிக்காவின் USNSA யின் CEO. இப்போது முகுந்தன் மரபணுவில் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருவர். ஒரு சில நாட்களாக முகுந்தனுக்கு கனவா அமானுஷ்ய நினைவா என்று ஒன்றும் புரியாத சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தன…. வாழ்க்கையில் தான் இதுவரை கடந்து வந்த பாதையை நினைத்துப் பார்த்தார்.. பெரிய ஆச்சரியம் இதுவரை தனக்கு எந்த இடையூறும் வந்ததே இல்லை… சில சமயங்களில் சந்தேகப்பட்ட இடையூறுகளும் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது. சந்தோஷமான ஆச்சரியத்தில் ஒருவித சந்தேகம் கலந்து கொண்டது… ஏன் தனக்கு தோல்வியே ஏற்பட்டதில்லை நாம் என்ன அவ்வளவு ஒரு ஸ்பெஷலான மனிதனா என்ற கேள்வி தினமும் துளைத்தது. மனதிற்குள் நிறைந்த இந்த நீண்ட விவாதங்களுக்குப்பிறகு அந்த முடிவை எடுத்தார்…. அதன்படி டெஸ்டும் செய்து கொண்டார், டெஸ்ட் ரிசல்ட்டும் வந்தது…. உலகளாவிய குழப்பம் முகுந்தனின் சிறிய மூளைக்குள் புகுந்து வாட்டியது. இதோ மனதில் குழப்பத்தை நீக்க தாயகம் நோக்கி செல்கிறார். பொதுவாக விமான பயணத்தில் தூங்கிக் கொண்டே செல்லும் முகுந்தன் இந்த முறை தூக்கம் வராமல் மனக்குழப்பத்தின் இடையே பயணம் செய்தார். சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் விமானம் வந்து இறங்கியது.. பொதுவாக மக்களின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்கும் முகுந்தன் இன்று அந்த நிலையில் இல்லாமல் ஏதோ யோசனையிலேயே வெளியே வந்தார். குடும்பத்தாருடன் பயணம் செய்யும்போதும் ஏதும் பேசவில்லை.. இது அவரை அழைத்துச் செல்ல வந்தவர்களுக்கு பெரும் வியப்பாக இருந்தது. வீடு வந்து சேர்ந்து உண்டு முடித்து உறங்கி எழுந்து எல்லோரிடமும் சாதாரண விசாரிப்புகள்…. இரு நாட்கள் கழிந்தது. மூன்றாம் நாள் மதிய உணவிற்கு பிறகு தாயுடன் தனியாக இருக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது….. மெதுவாக எல்லா வித சாதாரண விசாரிப்புகளுக்கு பிறகு கேட்டார், அம்மா நான் என்ன விசேஷ மகனா உங்களுக்கு? எந்த கடவுளிடம் வேண்டி என்னைப் பெற்றீர்கள்? அப்படியெல்லாம் ஏதும் இல்லை முகுந்தா, கடவுள் பக்தி எனக்கும் உன் அப்பாவுக்கும் எப்போதும் உண்டு.. மற்றபடி ஏதும் விசேஷம் இல்லை. ஏதாகிலும் விசேஷ வேண்டுதலுக்கு பிறகு நான் பிறந்தேனா? என்றார் முகுந்தன் தொடர்ந்து… எந்த வேண்டுதலும் இல்லை, சாதாரணமாகத்தான் பிறந்தாய் நீ.. என்றார் முகுந்தன் தாயார். அம்மா, நன்றாக யோசித்துப் பார்க்கவும், எந்தவித ஆச்சரியமும் இல்லை வித்தியாசமான அனுபவமும் இல்லையா என் பிறப்பில்.. என்று தொடர்ந்தார் முகுந்தன். ஏதும் குறிப்பிடும்படியாக இல்லை ஆனால் ஒன்று நிகழ்ந்தது….. என்று முகுந்தனின் தாயார் கூறிய பிறகு… முகுந்தனால் தன்னிலையில் இருக்க முடியவில்லை…. சொல்லுங்கள் என்று அவசரமாக வினவினார். நீ பிறப்பதற்கு சுமார் ஒன்பதரை மாதங்களுக்கு முன்பு, ஒரு இரவு பயங்கரமான கனவு போன்ற ஒரு நிகழ்வு எனக்கு நிகழ்ந்தது.. இதை உன் தந்தையிடம் மட்டுமே பகிர்ந்துள்ளேன் இதுவரை… என்று கூறி சிறிது நிறுத்திய தாயாரை.. பொறுமையில்லாமல் சொல்லுங்கள் சொல்லுங்கள் என்ன நடந்தது என்று கேட்டார் முகுந்தன்.

அது ஒரு பயங்கர கனவு, பேய் போன்ற ஒரு நான்கு உருவங்கள் என்னைத் தூக்கிச் சென்று ஒரு ஒரு விசித்திரமான மருத்துவமனையில் என்னை ஏதோ செய்தது போன்ற நினைவு அது.. என்றார். உன்னுடைய அப்பா தான் எனக்கு சமாதானம் கூறினார், இது போன்ற கனவுகள் வருவது சாதாரணம் என்றார். அது சில நாட்கள் நினைவில் இருந்தது பிறகு இன்று நீ கேட்கும் போது தான் நினைவுக்கு வருகிறது என்றார். முகுந்தனுக்கு தன் வாழ்க்கை இப்போது புரிய ஆரம்பித்தது… டெஸ்ட் ரிசல்ட் ஏன் அப்படி வந்தது என்ற விளக்கமும் கிடைத்துவிட்டது…. ஆமாம் முகுந்தன் தனக்குத்தானே செய்துகொண்ட மரபணு சோதனையில் மனிதர்களுக்கு இல்லாத வித்தியாசமான மரபணு கட்டமைப்பு இருந்தது தான் முகுந்தனுடைய இந்த குழப்பம்

தொடர்புக்கு @ melbournesivastories@gmail.com

bottom of page