ஆவி சொன்னது….
- melbournesivastori
- 6 days ago
- 6 min read

நான் சொல்லப் போவதற்கும் தலைப்பிற்கும் பெரிதாக எந்தவித சம்பந்தமும் இல்லை.. இருப்பினும் இது போன்ற தலைப்பு ஏன் என்று கடைசியாக சொல்கிறேன்.
நீங்கள் எந்த நாட்டவராக இருந்தாலும் உங்கள் நாட்டின் தலைப்பு செய்தியை பாருங்கள்.. கண்டிப்பாக நான் சொல்லப்போவது அதுவாக இருக்காது… உண்மை கற்பனையை விட பயங்கரம் என்பது எத்தனை பேருக்கு புரியும்… எத்தனை பேருக்கு அது நடந்திருக்கிறது….. உலகத்தில் மக்கள் அவசரக் கதியில் எங்கோ ஓடிக் கொண்டிருக்கின்றனர்…. ஒரு சிறிய சதவீதம் உண்மையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றனர், பெரும்பாலானோர் வாழ்க்கையின் தேவைக்காக ஓடிக் கொண்டிருக்கின்றனர், மற்றொரு சிறிய சதவீதத்தினர் அந்த பெரும்பாலானோரை தேவைக்காக ஓட விட்டுக் கொண்டிருக்கின்றனர்.. ஜென் Z னருக்கும் ஜென் ஆல்ஃபாவிற்கும் இதைப் பற்றி கவலை இல்லை… இதைப் படிக்கும் நிறைய பேர் பார்த்திருப்பீர்கள்.. யார் வந்தாலும், போனாலும் அவர்களுக்கு கவலையில்லை மொபைல் போனில் முழுகி இருப்பார்கள்.. அதில் என்னதான் அப்படி இருக்கிறது தெரியாது… தெரிந்து கொள்ளவும் நாம் விரும்புவதில்லை.
சரி விஷயத்துக்கு வருகிறேன்.. நான் சொல்லப்போவது உங்களை
பயமுறுத்த அல்ல… கொஞ்சம் யோசிக்க வைக்க, கொஞ்சம் நிதானிக்க வைக்க, கொஞ்சம் வாழ்க்கையை திரும்பிப் பார்க்க வைக்க….
இப்போது நம் சூரிய குடும்பத்தின் வான்வெளியில் ஆறு வால் நட்சத்திரங்கள் உள்ளன…
C/2025 K1 (ATLAS), C/2025 R2 (SWAN), and C/2025 A6 (Lemmon)
இவையெல்லாம் வான்வெளியில் அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகள்… தென்படும், வரும், கடந்து போகும். இவைகளை தவிர மேலும் மூன்று சிறிய வால் நட்சத்திரங்கள் இப்போது இருக்கின்றன..
தலைவலி, ஜலதோஷம், வயிற்று வலி போலத்தான் இவைகள்… ஆனால் யாராக இருந்தாலும் புற்றுநோய் இருக்குமா என்ற சந்தேகமே புரட்டிப் போடும்… நிலைகுலைய வைக்கும்.. மறுபடியும் சொல்கிறேன் புற்றுநோய் இருக்குமா என்ற சந்தேகம் மட்டுமே இந்த நிலைமையை உருவாக்கும்
பிக் இயர் அப்சர்வேட்டரி அமெரிக்காவில் Ohio வில் உள்ளது, ஆகஸ்ட் 15, 1977 ஆம் ஆண்டு அங்கு சூரிய குடும்பத்திற்கு அப்பால் இருந்து வரும் சிக்னல்களை அப்சர்வ் செய்து கொண்டிருக்கும்போது மிகப்பெரிய ஜாக்பாட் அடித்தது போன்ற சிக்னல் ஒன்று கிடைத்தது அதைப் பார்த்தவர் உடனடியாக குறிப்பிட்டது WOW!

என்று… ஏனெனில் அதுபோன்ற சக்தி வாய்ந்த சிக்னல் மிகப்பெரிய அணு உலைகளிலிருந்து கிடைக்கும் சக்தி இருந்தால் மட்டுமே இதுபோன்ற சிக்னலை கோடிக்கணக்கான கிலோமீட்டருக்கு அப்பாலும் அனுப்ப முடியும். அங்கு வேலை செய்பவர்கள் மட்டுமல்லாமல் இந்த செய்தி கிடைத்த எல்லோருமே கற்பனை குதிரைகளை தட்டி விட்டு தத்தம் அப்சர்வேட்டர்களில் அதே போன்ற சிக்னல் கிடைக்குமா என்று தவமாய் இருந்தார்கள்… நாட்கள் சென்றன, வாரங்கள் சென்றன, மாதங்கள் சென்றன, வருடங்கள் பலவும் கடந்து சென்றன….. மயான அமைதி மட்டுமே இருந்தது..
இதை ஓரளவிற்கு எல்லோரும் மறந்து விட்ட தருணத்தில் 2017 ஆம் ஆண்டு நம் சூரிய குடும்பத்திற்கு அப்பால் இருந்து…பால்வெளி மண்டலத்திலிருந்து ஒரு பெரிய எரிகல் வருவதை கண்டுபிடித்தனர்.. அதற்கு ʻOumuamua என்று பெயரிட்டனர். அதை அதிகமாக ஆய்வதற்கு இடம் கொடுக்காமல் நம் சூரிய குடும்பத்தை கடந்து சென்று மறைந்தது.. அதைப்பற்றி நிறைய கேள்விகள் இருந்தது.. சாதாரண எரிக்கல்கள் உடைய குணம் ஏதும் அதற்கு இல்லை.. இருப்பினும் அது சென்று மறைந்ததால் ஒரு இறுதியான முடிவுக்கு நம்மால் வர முடியவில்லை..
2019 ஆண்டில் ஒரு சிறிய வால் நட்சத்திரம் வந்தது அதற்கு Borisov
என்று பெயரிட்டனர்.. பெரிதாக அதற்கான முக்கியத்தும் இல்லை ஏனென்றால் எல்லாவித இயற்பியல் நியதிகளுக்கு உட்பட்டே இருந்தது.
இந்த வருடம் ஜூன் கடைசி வாரம் இருக்கும்… ஆப்பிரிக்காவின் நபிபியா நாட்டில் சிலர் தங்களின் சாதாரண டெலஸ்கோப்பின் மூலம் வான் வெளியை பார்த்துக் கொண்டிருக்கும் போது வித்தியாசமான ஒரு வால் நட்சத்திரத்தை பார்க்க நேர்ந்தது.. அவர்களால் உறுதியாக எந்த முடிவுக்கு வரமுடியவில்லை… ஆனால் ஜூலை முதல் தேதி 2025 அன்று தென் அமெரிக்கா நாட்டில் உள்ள சிலி நாட்டில் அமெரிக்க ஸ்பேஸ் ஏஜென்சியின் உதவியால் கட்டப்பட்ட ரூபின் அப்சர்வேட்டரியில் அமைந்துள்ள ATLAS (Asteroid Terrestrial-impact Last Alert System) டெலஸ்கோப் மூலம் அதே மிகப்பெரிய வினோத வால் நட்சத்திரத்தை கண்டனர்.. அதற்கு 3 I ATLAS என்று பெயரிட்டனர். மூன்றாவது Interstellar என்பதற்கு அதற்கு பொருள். 2017 1 I, 2019 2 I .
இந்த மூன்றும் பால்வெளி மண்டலத்தில் இருந்து நம் சூரிய குடும்பத்திற்குள் நுழைந்தாலும் மற்ற இரண்டும் வேறொரு கோணத்தில் கிரகங்களை கடந்து சென்றது… இப்போது உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும்..
நம் சூரிய குடும்பத்தில் ஒரு கிரகத்தைத் தவிர மற்ற எல்லா கிரகங்களும் ஒரு தட்டையான நீள் வட்ட தளத்திலேயே சுழன்று கொண்டிருக்கின்றன.. இந்தத் 3 ஐயோ எப்போதும் இல்லாத நம் கிரகங்கள் சுழலும் இந்த தட்டையான தளத்தில் சிறிய 5° வித்தியாசத்திலையே சூரிய குடும்பத்திற்குள் நுழைந்தது..
இந்த 3 ஐ இன் அளவு சுமார் 20 கிலோ மீட்டர் என்று கணக்கிடப்பட்டது… அதன் விட்டம் சுமார் ஐந்து கிலோ மீட்டர் என்று கணக்கிட்டார்கள்.. அது வந்து கொண்டிருக்கும் வேகம் தற்பொழுது ஒரு வினாடிக்கு 61 கிலோமீட்டர்… இப்போது சற்று கண்ணை மூடிக்கொண்டு நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து சுமார் 60 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள இடத்தை நினைத்துப் பாருங்கள், அதை ஒரு வினாடியில் கடந்தால் அந்த வேகம் உங்களுக்கு ஓரளவிற்கு புரியும்…இன்னும் கொஞ்சம் விவரமாக சொல்கிறேன்… நம் பூமியின் சுற்றளவு 40075 km இந்த 3 ஐ யின் வேகத்தில் சுமார் 5.47 முறை ஒரு மணி நேரத்திற்குள் பூமியை சுற்ற முடியும். இன்னும் கொஞ்சம் பிரமாண்டமாக சொல்ல வேண்டுமென்றால்.. மெல்பர்னிலிருந்து சென்னைக்கு சுமாராக பத்தாயிரம் கிலோமீட்டர்… இந்த தூரத்தை 2.73 நிமிடத்தில் 3 ஐ கடந்து விடும்.
இன்னும் உங்களுக்கு இந்த வேகத்தைப் பற்றி குழப்ப விரும்பவில்லை… ஓரளவிற்கு உங்களுக்கு புரிந்திருக்கும்.
இப்போது உங்களுக்கு தெரிய வேண்டியது அதன் எடை சுமாராக எவ்வளவு இருக்கும் என்று…கொஞ்சம் உங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள்…
33 பில்லியன் டன்கள் என்கிறார்கள். ஒரு டன் என்பது ஆயிரம் கிலோ.. ஒரு பில்லியன் என்பது 1000000000. அதன்படி த்ரீ ஐ யின் எடை 33000000000000 கிலோ.
கொஞ்சம் இதை படிப்பதை நிறுத்தி விட்டு கண்ணை மூடுங்கள்.. வேகமாக ஒரு சைக்கிளில் சென்று ஒரு மரத்தில் மோதினால் அதன் போர்ஸ் சைக்கிளின் எடையை நீங்கள் சென்ற வேகத்தால் பெருக்க வேண்டும்.. இப்போது ஒரு மோட்டார் சைக்கிளையோ அல்லது ஒரு காரையோ ஒரு மோதலில் நினைத்துப் பாருங்கள்.
67 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் அதாவது 6.7 கோடி வருடங்களுக்கு முன்னால் டைனோசர்களை நம் பூமியில் மோதி அழித்த அந்த எரிக்கல்லின் எடையை விட சுமார் இரண்டு மடங்கு இந்த 3 ஐ என்கிறார்கள். 6.7 கோடி வருடங்களுக்கு முன்னால் அந்த பாதிப்பிலிருந்து பூமி மீண்டு வர பல ஆயிரம் வருடங்கள் கடந்தது… பூமியை தீயும், கரும் புகையும் சூழ்ந்து அதை கலையவே பல பல வருடங்கள் பிடித்தது என்று கணக்கிட்டார்கள். இப்போதும் இவையெல்லாம் உங்களை பயமுறுத்த கூறவில்லை.. எப்போதாவது ஒருமுறை யாருக்காவது ஒருவருக்கு புற்றுநோய் வரத்தானே செய்கிறது… இந்தப் பால்வெளியில் சுமார் 100 கோடிக்கு மேல் சூரிய குடும்பங்கள் உள்ளன என்று கூறுகிறார்கள்.. அதில் பாதியில் நம்மைப் போன்ற பூமி இருப்பதாக வைத்துக் கொண்டாலே அது 50 கோடி பூமிகள்… அதில் ஒன்றுக்கு கூடவா நம் பூமிக்கு ஆறு புள்ளி ஏழு கோடி வருடங்களுக்கு முன்னால் நடந்தது நிகழாது?!
அது போன்று இப்போது நம் பூமிக்கு நடக்கும் என்று தயவு செய்து நினைக்காதீர்கள்… புற்றுநோய் வரப்போகிறதோ என்று நம்மால் முடிந்தவரை நல்ல உணவை சாப்பிடுவது போல… நல்ல எண்ணங்களை கொண்டு இப்போதல்ல எப்போதுமே நிகழக்கூடாது என்றுபிராத்திப்போம்.
பயப்பட்டாலும் நமக்கு வந்த நோயை டாக்டர் கூறினால் தானே அதற்கான ஏற்பாடுகளை அவரும் நாமும் செய்ய முடியும்… இப்போது மற்றொரு விஷயத்தை தெரிவிக்க வேண்டியது முக்கியமாகப்படுகிறது.. முன்பு கூறியதைப் போல 1977 ஆகஸ்ட் 15ஆம் தேதி நமக்கு கிடைத்த அந்த ரேடியோ சிக்னல் தனுசு ராசி ( Sagittarius) இருக்கும் பால் வெளி மண்டலத்தின் மையப் பகுதியில் இருந்து வந்தது… இந்த 3 ஐயோ அதே இடத்தில் இருந்து வந்து வந்திருக்கிறது… உண்மையை தெரிவித்து விட்டேன் மற்ற கற்பனையை நீங்களே செய்து கொள்ளுங்கள்.
இந்தத் 3 ஐ செவ்வாய் கிரகத்தை கடந்த அக்டோபர் இரண்டு மூன்று தேதிகளில் நெருக்கமாக கடந்தது…நெருக்கமாக என்றால் 0.2 அஸ்ட்ரானிக்கல் யூனிட் என்பார்கள்… நம் தூரத்தில் சொல்ல வேண்டும் என்றால் சுமார் ரெண்டு கோடியே 90 லட்சம் கிலோமீட்டர். செப்டம்பர் மாதம் முதற்கொண்டே இவ்வளவு நெருக்கமாக வரும்போது செவ்வாய் கிரகத்தில் இருக்கும் ரோவர் மூலமாகவும் செவ்வாய் கிரகத்தை சுற்றி சுற்றி வரும் Mars Reconnaissance மூலமாகவும் நல்ல புகைப்படங்களை எடுக்க ஆர்வமாக இருந்தார்கள்..
இப்போது கூறப்போகும் செய்தியை கேட்டு கோபமோ அதிர்ச்சியோ அடைய வேண்டாம்.. அனேகமாக நமக்கு கோபமோ அதிர்ச்சியோ வராது ஏனென்றால் நமக்கு இதுபோன்ற விஷயங்கள் பழகினது தான்.
உலகிலேயே வான்வெளியில் அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு கோலாச்சுவது அமெரிக்காவின் NASA… சரியாக எல்லோரும் எதிர்பார்க்கும் அதே நேரத்தில் நாசா முடக்கப்பட்டது… அமெரிக்க அரசாங்கத்தால் நிதி பற்றாக்குறை என்ற காரணத்தால் நிறுத்தப்பட்டது… கரோனா வைரஸ் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நேரத்தில் நிதி பற்றாக்குறை என்று காரணம் கூறி எல்லா மருத்துவமனைகளையும் மூடுவது போன்று தான் இதுவும்! செவ்வாய் கிரகத்தில் 3 ஐ யின் புகைப்படங்கள் அமெரிக்க கருவிகளால் பதியப்பட்டாலும்.. இப்போதைக்கு அது வெளி உலகத்திற்கு தெரியப்போவதில்லை…. ஐரோப்பாவின் ஸ்பேஸ் ஏஜென்சி, சீன வான்வெளி துறை எல்லோரும் மௌனம் காக்கிறார்கள்…ஏன் என்பது முருகனுக்கே வெளிச்சம்…. இல்லை ஒன்லி ஜீசஸ் நோஸ் என்று வைத்துக் கொள்ளலாம்…. எது எப்படியோ 3 ஐ யின் புகைப்படத்தை பார்க்க எல்லோரும் ஒரு திகிலோடு காத்துக் கொண்டிருக்கிறோம்.
3 ஐ சாதாரண வால் நட்சத்திரம் இல்லை என்று ஏன் கூறுகிறார்கள் என்று பார்ப்போம்…
வால் நட்சத்திரங்கள் பொதுவாக பணி பாறைகள்/கட்டிகள் அடர்ந்ததாக இருக்கும்.. சூரிய ஒளியில், வெப்பத்தில் பனித்துகள்கள் சூரியனை நோக்கி வரும்போது அதன் பின்பகுதி நீண்ட வால் போல் தெரியும்.. அதற்காகவே அதை வால் நட்சத்திரம் என்கிறோம்.
3 ஐயோ சிறிதே வால் உள்ளது அதிலிருந்து பனி துகள்கள் வெளிப்படும் என்று நினைத்தால் வெளிப்பட்டதோ தூய நிக்கல் துகள்கள்… இந்தத் தொழில்நுட்பம் சிறந்த நம் நிகழ்காலத்திலும் நாம் தூய நிக்கலை இரும்பிலிருந்து பிரிப்பது கடினம். நிக்கலின் எடையோ மிக அதிகம்.. அதனால்தான் 3 ஐ யின் எடை சுமார் 33 பில்லியன் டன்கள்.
மிகவும் வித்தியாசமாக 3 ஐ யின் முன்னால் பிரகாசமான ஒளிர் பச்சை நிறத்தில் வெளிச்சம் தெரிகிறது.. ஒரு பவர்ஃபுல் ஹெட்லைட் போல…. அது இயற்கையாக வருவதற்கு சாத்தியமே இல்லை.
இதற்கு வலு சேர்க்கும் விதமாக த்ரீ ஐ யின் பயணம் இயற்கை விதிகளுக்கு, கிரகங்களின் ஈர்ப்பு விசைக்கு ஏற்றது போல் இல்லாமல் ஒரு திட்டமிட்ட பயண பாதையில் யாரோ இயக்குவது போல் சென்று கொண்டிருக்கிறது.
செல்லும் பாதையில் செவ்வாய் கிரகத்துக்கு அருகில் செல்லும் படியும் பிறகு ஜூபிடர் கிரகத்திற்கு அருகில் செல்லும் படியும் செல்கிறது..
மிக மிக வித்தியாசமாக அக்டோபர் 29ஆம் தேதி அன்று பூமிக்கு அருகில் வரும்போது 3 ஐ சூரியனுக்கு அப்பால் இருக்கும்.. நாம் காண முடியாது… அதாவது த்ரீ ஐ க்கும் பூமிக்கும் நடுவில் சூரியன் இருக்கும்….பூமியிலிருந்து த்ரீ ஐயை நாம் டிசம்பர் மாதம் 19ஆம் தேதி அன்று அருகில் காணலாம் …. அருகில் என்றால் பூமியிலிருந்து சூரியனுக்கு எவ்வளவு தூரமோ அதைவிட 1.8 மடங்கு தூரம் அதிகம்.
சூரியனுக்கும் நமக்கும் உள்ள தூரம் எட்டு ஒளி நிமிடங்கள்… ஒளியின் வேகம் மூன்று லட்சம் கிலோ மீட்டர் ஒரு வினாடிக்கு… அந்த வேகத்தில் பூமியிலிருந்து நாம் கிளம்பி சென்றால் எட்டு நிமிடம் கழித்து சூரியனை அடையலாம்.
டிசம்பர் 19ஆம் தேதி நமக்கும் 3 ஐக்கும் உள்ள தூரம் 14.4 ஒளி நிமிடங்கள். தூரத்தை கிலோமீட்டரில் சொல்லி உங்களை குழப்ப விரும்பவில்லை. … ஏற்கனவே உங்களுக்கு இருக்கும் தலைசுற்றல் போதும்.
ஏன் இந்த கட்டுரைக்கு ஆவி சொன்னது என்று பெயரிட்டேன் என்றால், எல்லா வானியல் விஞ்ஞானிகளும் ஆட்டுமந்தைப் போல ஒன்றாக ஒரே திசையில் மந்திரித்து விட்டது போல சென்று கொண்டிருக்கும் போது.. ஆவி லோப்
என்னும் அஸ்ட்ரோபிசிஸ்ட் Howard பல்கலைக்கழகத்தில் வானியல் துறைக்கு பேராசிரியராக இருப்பவர், மந்தையிலிருந்து பிரிந்து சென்ற சுய புத்தி உள்ள ஆடு போல இது சாதாரண வால் நட்சத்திரம் இல்லை என்று மேலே நான் கூறிய எல்லா காரணங்களையும் கூறி உலக நாடுகளை மிகவும் விழிப்புடன் இருக்கச் சொன்னார்… அதுமட்டுமல்லாமல் ஐக்கிய நாடுகளின் சபைக்கு ஒரு வெள்ளை அறிக்கையும் சமர்ப்பித்துள்ளார்.
(Avi Loeb is the head of the Galileo Project, founding director of Harvard University’s — Black Hole Initiative, director of the Institute for Theory and Computation at the Harvard-Smithsonian Center for Astrophysics, and the former chair of the astronomy department at Harvard University (2011–2020). He is a former member of the President’s Council of Advisors on Science and Technology and a former chair of the Board on Physics and Astronomy of the National Academies. He is the bestselling author of “Extraterrestrial: The First Sign of Intelligent Life Beyond Earth” and a co-author of the textbook “Life in the Cosmos”, both published in 2021. The paperback edition of his new book, titled “Interstellar”, was published in August 2024.)
3 ஐ செவ்வாய் கிரகத்தை கடக்கும் போது அந்த கிரகத்தை உயிர்பிக்க ஏதோ தூவி விட்டது என்று ஒரு செய்தியும் பரவுகிறது….
நீங்கள் விடுமுறை எடுக்க வேண்டுமென்றால் இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் எடுத்துக்கொண்டு வாழ்க்கையை அனுபவியுங்கள் என்று விளையாட்டாக தான் ஆவி சொன்னார்… சில சமயம் அறிவுள்ள நல்ல மனிதர்கள் தங்களுடைய கருத்துக்களை எவ்வளவு சொன்னாலும் மக்கள் ஏற்காத போது ஒரு விரக்தியில் சொல்றத சொல்லிவிட்டேன் இனி உங்கள் பாடு…என்பதைப் போல.
3 ஐயை பற்றி இன்னும் நிறைய செய்திகள் உள்ளன, அவைகளை எல்லாம் பட்டியலிட்டு கூறினால் நீங்கள் படிப்பதை விட்டுவிட்டு, நடப்பது நடக்கட்டும் என்று சென்று விடுவீர்கள்..
இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கும் போது வினோதங்கள் நடந்திருக்கலாம், நடக்காமலும் போய் இருக்கலாம்.. நடக்காமல் போக முருகனை வேண்டுகிறேன்.