ஏ ஐ நின்று கொல்லும்!
- melbournesivastori
- Jun 2
- 14 min read

முகுந்தனுக்கு உறக்கமே வரவில்லை.. கை கடிகாரத்தில் நேரத்தை பார்த்தான்… விடியற்காலை சரியாக 3:00 மணி.. முழிப்பு வந்து விட்டது ஆனால் இப்பொழுது எழுந்து விட்டால், பல்கலைக்கழகத்தில் சரியாக விரிவுரை ஆற்ற முடியாது.. ஆமாம் முகுந்தன் ஒரு தலை சிறந்த பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவை போதிக்க கூடிய இளம் விரிவுரையாளன். இந்த நாட்டுக்கு குடி பெயர்ந்ததும் அந்தப் பல்கலைக்கழகத்திலேயே செயற்கை நுண்ணறிவு மேற்படிப்பு படிக்க வந்து, படித்து அதில் தங்க விருது பெற்று அந்த பல்கலைக்கழகத்தில் மட்டுமல்லாமல் நாட்டிலேயே முதன்மை வகித்தவன். அதனால் அந்தப் பல்கலைக்கழகத்திலேயே விரிவுரையாளராக வேலை அழைப்பு கிடைக்க ஏற்றுக்கொண்டான்.
தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்காகவோ அல்லது குடி பெயர்ந்தோ சென்றவர்களின் சாபக்கேடு என்னவென்றால் சென்ற நாட்டின் கலாச்சரமும் தெரியாது, அரசியலும் தெரியாது, வாழ்க்கை முறையும் தெரியாது…. வேலை நேரத்தை தவிர அவர்களின் பொழுதுபோக்கே… இல்லை இல்லை பொழுதை போக்குவதே தமிழ்நாட்டைப் பற்றி சிந்தனையில் தான்.. அவர்களின் பெரும்பாலோர் சிந்தனையே சீர்கெட்ட அரசியலில் சீரழித்தவர்களில் ஒரு சார்பு எடுப்பது… சூதாட்டத்தில் குளித்து முத்து எடுத்தவர்கள் நடத்தும் கிரிக்கெட்டை பார்ப்பது…. ஆடுபவர்களின் ஆட்டம் அந்த ஆட்டத்தின் முடிவை எட்டும் என்று நம்பி அதைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பது… வல்லவனுக்கு வல்லவன் என்பது போல சூதினையே சூது கவ்வும் திரைப்பட துறையின் வீணான படங்களை மட்டுமே சிக்கல் இல்லாமல் வெளியிட வைக்கும் அரசியல் புற்றுநோய் பற்றி தெரியாமல் அந்த திரைப்படங்களை பற்றியே பேசுவது….. இதில் விதிவிலக்கான சில சதவிகித தமிழ்நாட்டுப் பட்டுள்ளோரும் தமிழ் உணர்வு உள்ளோரும் இல்லாமல் இல்லை..
அதில் ஒருவன் தான் முகுந்தன். அவனுக்கு ஏற்பட்டது ஒரு விதமான சாபக்கேடு… இப்போது இருக்கும் நாட்டின் வரலாறும் தெரியும், கலாச்சாரமும் தெரியும், பண்பாடும் தெரியும், அரசியலும் தெரியும்… தெரிந்துதான் இந்த நாட்டுக்கு குடிபெயர்ந்தான். மற்றவர்களுக்கு வேறுவிதமான சாபக்கேடு என்றால் முகுந்தனுக்கோ இந்த நாட்டைப் போல நம் தமிழ்நாடு இல்லையே என்ற எண்ணம் நாள் முழுவதும் ஆட்டிப்படைப்பது ஒரு சாபக்கேடு…
தூரத்தில் நின்று பார்க்கும்போது தான் எந்த ஒரு பிரச்சனையின் ஆழத்தையும் அளவிட முடியும். அதன்படி முகுந்தனுக்கு தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் ஏற்பட்டிருக்கும் புற்றுநோய் போன்ற பிரச்சனைகளுக்கு குணமளிக்கும் மருந்து தெரிந்தும் அதை மறந்தும் ஏற்றுக் கொள்ளாத, ஏற்றுக்கொள்ள விரும்பாத மக்களிடத்தில் எப்படி கடத்துவது என்பது தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்.
உலகத்தில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது.. இந்த 21ம் நூற்றாண்டில் நாகரீக மக்களாக நாம் இருக்கிறோம் என்று நம்புவது கடினமாக இருக்கிறது… அதில் பெரும்பாலான பிரச்சனைகளை புரிந்து கொள்ள முடிகிறது… மீதம் இருக்கும் சில அத்தியாவசிய பிரச்சனை.. அதுவும் நமக்கு தானா வந்து விடிய வேண்டும்.. சோம்பலில், இயலாமையில், மதி கெட்டு, சுயமரியாதை இழந்து, விழுந்து கிடக்கும் சமுதாயத்தை எழுப்புவதே கடினம்.. அதில் சமுதாயத்தை எழுப்பி அவர்களுக்கு அவர்கள் யார் என்று புரிய வைத்து, நிமிர வைத்து.. தொன்மை மிக்க .. கடந்து வந்த கலாச்சாரத்தை… வீரத்தை… எண்ணில் அடங்காத ஞானிகளின் ஞானத்தை… தத்துவ மேதைகளின் தத்துவத்தை புரியவைத்து… வீறு கொண்டு எழ வைத்து புதிய சமுதாயத்தை கட்டமைப்பது என்பது இமயமலையை வெட்டி கட்டிக் கொண்டு வந்து உலகிலேயே மிகப்பெரிய கோட்டையை கட்டுவதற்கு சமம் என்று தெரிந்திருந்தும்… முயற்சி திருவினையாக்கும் எனும் முதியோர் சொற்படி முயன்று தான் பார்ப்போமே என்று துவங்கிய கட்சியை இங்கு, அங்கு என்று இல்லாமல் எல்லா திசைகளில் இருந்து வரும் இன்னல்களுக்கு நடுவே ஓய்வின்றி உத்வேகத்துடன் நடத்திக் கொண்டு இருந்தார் ஜெயசீலன்.
ஆறாவது அறிவு உள்ளது என்று பெருமை கொள்ளும் நமக்கும், பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை… கண்ணெதிரே நடக்கும் அநியாயங்களையும், அட்டூழியங்களையும் பறவைகளாலும், விலங்குகளாலும் புரிந்து கொள்ள முடியாது… அதை நாம் புரிந்து கொள்ளலாம். நம்மால் புரிந்து கொள்ள முடியாதது ஆறு அறிவு படைத்ததாக கூறிக் கொள்ளும் 21ம் நூற்றாண்டில் வாழும் நம் மக்களுடைய செயல்கள் தான்….
கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே …. விசாரிக்க அனுமதி கிடைத்தால்….. அனுமதி கிடைத்தும்…. விசாரணைக்கு உட்படுத்தப்படுவோர் பயமின்றி பணத்துக்கோ, அதிகாரத்துக்கோ அடிபணியாமல் ஒத்துழைத்தாலே மெய்யாகும்.
தலைவன் என்பவன் அவன் எங்கு தலைமை தாங்குகிறானோ அந்த இடத்தின் கலாச்சாரத்தை பற்றியும், வரலாற்றைப் பற்றியும், இயற்கை வளத்தை பற்றியும், மொழியின் தொன்மை பற்றியும், அந்த மொழிக்கான, அந்த இடத்திற்கான வளர்ச்சிக்கு காலம் காலமாக பாடுபட்டவர்களை பற்றியும் அறிந்தவனாக இருக்க வேண்டும்… இந்த 21வது நூற்றாண்டில் எல்லாம் தலைகீழாக இருக்கிறது.. கட்சியை ஆரம்பித்து விட்டோம் எப்படி எடுத்துச் செல்ல போகிறோம் என்ற தீவிர யோசனையில் இருந்தார் ஜெயசீலன்.
‘ஹலோ மிஸ்டர் சிவப்பிரகாசம், கொஞ்ச நேரம் இருக்குமா உங்களிடம்?’ ஆங்கிலத்தில் ஒரு குரல்.
யாரது.. வெள்ளைக்காரர்கள் போல் அப்பாவின் பெயரைச் சொல்லி அழைக்கிறார்களே என்று திரும்பிப் பார்த்தான் முகுந்தன். சற்று தூரத்தில் தன்னிடம் பயிலும் ஒரு இந்திய மாணவன்.. தமிழாக இருக்கவும் வாய்ப்புண்டு..
‘ நீங்க.. மாஸ்டர்ஸ் கிளாஸ்ல படிப்பவர் தானே?’
‘ஆமாம், ஒரு ஐந்து, பத்து நிமிடங்கள் எனக்காக ஒதுக்க முடியுமா?’
‘நீங்க இந்தியரா?’
‘ ஆமாம்… உங்கள் பெயரைப் பார்த்தால் நீங்கள் தமிழ் என்று நினைக்கிறேன்..’
‘ஆமாம், நீங்கள்?’
‘ நானும் தமிழ் தான், இனி தமிழிலேயே பேசலாம்…’
‘ என்னுடைய பெயர் சொல்லி அழைக்காமல் வெள்ளைக்காரர்கள் போல் சர் நேம் கொண்டு அழைத்தீர்களே ஏன்?’
‘பழக்கமாகிவிட்டது…ஊரில் சார் சார் என்று கூப்பிட்டு அந்தப் பழக்கத்தை மாற்றவே பேச்சுலர் டிகிரி லைப் முடிந்துவிட்டது ..’
‘ சரி, எதற்காக என்னை சந்திக்க வந்தீர்கள்?’
‘ஆறு மாதமாக நீங்கள் விரிவுரை செய்கிறீர்கள்… ஏ ஐ யை இவ்வளவு அழகாக சொல்லிக் கொடுக்க முடியும் என்று நான் நினைத்தும் பார்த்ததில்லை… நீங்கள் சொல்லிக் கொடுப்பது நன்றாக புரிகிறது..’
‘நன்றி, உங்கள் பெயர்?’
‘ ஆகாஷ்’
‘ என்ன வடநாட்டு பெயராக இருக்கிறது…’
‘ அதை ஏன் கேக்குறீங்க… தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு ஒரு மன நோய்.. தமிழ் பெயர் வைப்பது கேவலம் என்று நினைத்த காலம் அது.. இல்லை இல்லை இப்பொழுதும் அப்படித்தான் நினைக்கிறார்கள்.. மாற்றம் வரும் என்று நினைக்கிறேன்.. மாற்றம் வந்து தான் தீர வேண்டும்.. இல்லையென்றால் காலப்போக்கில் நாம் அழிந்து விடுவோம்’
முகுந்தனுக்கு சற்றென்று இவர் என்ன நம்மை போலவே பேசுகிறார் என்று தோன்றியது… இருவருக்கும் வயது வித்தியாசம் அவ்வளவு இல்லை…ஐந்து வருடமே!
‘ ஏன் அப்படி கூறுகிறீர்கள்?’
‘ மிஸ்டர் முகுந்தன், முகமூடி அணிய தேவையில்லை என்று நினைக்கிறேன்.. நம் தமிழ்நாட்டின் நிலவரம் அப்படி..’
முகுந்தனுக்கு சூழ்நிலை எளிதாகியது… இனி மாணவன் விரிவுரையாளர் என்றோ… இவரிடம் மனம் விட்டு பேசலாமா என்ற தயக்கமோ தேவையில்லை என்று நினைத்தான். இருந்தாலும் இந்த நாட்டுக்கு குடி பெயர்வதற்கு முன்னால் கிடைத்த அனுபவங்கள்… தெரிந்த செய்திகள் சற்றே கவனத்துடன் இருக்க வைத்தது… தமிழ்நாட்டை புற்றுநோய் போல ஊடுருவி, சுரண்டி கொள்ளையடித்தவர்களின் சந்ததிகள் உலகம் முழுவதும் பெயர் பெற்ற பல்கலைக்கழகங்களில் பரவி படிக்கிறார்கள், ( பட்டம் பெற/வாங்க மட்டும் ) இருக்கிறார்கள் என்று தெரியும்..
உன் நண்பனை சொல் உன்னை சொல்கிறேன் என்பார்கள்… அது அந்த காலம், மிகச் சிறிய வட்டம் அதனால் அந்த நண்பனை தெரிந்து இருந்தால் மட்டுமே அவனை புரியும். அந்த சூத்திரத்தை முகுந்தன் இந்த நிகழ் காலத்துக்கு ஏற்றவாறு மாற்றி இருந்தான், உனக்கு பிடித்த தலைவரைச் சொல் உன்னை சொல்கிறேன் என்று.. அல்லது உனக்கு பிடித்த கட்சியை சொல் உன்னை சொல்கிறேன் என்று.. இந்த தனக்குத்தானே உருவாக்கிக் கொண்ட நியதிபடி,
‘ ஆகாஷ் உங்களுக்கு இப்போது இருக்கும் தலைவர்களில் யாரை பிடிக்கும்?’
அவன் சற்றும் தயங்காமல், ‘ஜெயசீலன்’ என்றான்.
முகுந்தனுக்கு பெரிய பாரம் இறங்கியது போல் இருந்தது… முகுந்தனும் ஜெயசீலனை பற்றி மிக உயர்ந்த மரியாதை கொண்டிருந்தான். ஆகாஷை மேலும் கேட்க…
‘ எதனால்?’
‘ அவரின் முதல் கொள்கை… எல்லா உயிருக்குமான இயற்கை சார்ந்த உயிர் மேலாண்மை கொள்கை’
முகுந்தனுக்கு இருந்த சிறிய அவநம்பிக்கையும் பறந்தது…தனக்குப் பிடித்த அதே கொள்கை இவனுக்கும் பிடித்திருக்கிறது என்று.
‘ தூசி படிந்த… இல்லை சேற்றால் மறைக்கப்பட்ட நம் இனத்தின் வரலாற்றை காட்டாற்று வெள்ளம் போல் அவர் வந்து அந்த சேற்றை அகற்றி நிகழ் காலத்திய இளம் சமுதாயத்திற்கு ஒரு நம்பிக்கை ஒளியாக தெரிவது’
முகுந்தனுக்கு நம்மைப் போன்ற ஒருவனை சந்தித்தோம் என்ற நிம்மதி எண்ணம் தோன்றியது.
ஆகாஷ் தொடர்ந்து, ‘உலகப் புகழ்பெற்ற அங்கோர் வாட் கோயிலை கட்டியது தமிழ் மன்னன் என்று தெரியாது… ராஜராஜ சோழன் என்ற பெரும் மன்னன் இருந்தான் என்று மட்டும் தான் தெரியும்.. அதுவும் பொன்னின் செல்வன் என்ற நாவலால்…. ராஜராஜ சோழன் எத்தகைய பேரரசை நிறுவினார் என்பதும்.. அவருடைய மகன் ராஜேந்திர சோழன் அந்தப் பேரரசை மகா பேரரசாக எப்படி விரிவாக்கம் செய்தார் என்பதும் நாம் படிப்பதில்லை… படித்து தெரிந்து கொள்ள விருப்பமும் பட்டதில்லை.. ஏனென்று யோசிக்கும் போது தான் நம்மை கொரோனா கிருமிகளை விட கொடிய கிருமிகள் சூழ்ந்திருப்பது தெரிய வந்தது… அதை விடுங்க…. சென்னைக்கே தண்ணீர் தரும் செம்பரம்பாக்கம் ஏரி சோழர்களால் கட்டமைக்கப்பட்டு கட்டப்பட்டது என்பது எத்தனை பேருக்கு தெரியும்?... ஆராய்ந்து படிக்க போனாலும் சான்றுகள் அழிந்து போய் இருந்தாலும் அழிந்து போயிருக்கலாம்…அதை யார் கட்டமைத்துக் கட்டினார்கள் என்று இப்பொழுது உள்ள இளைஞர்களை கேட்டால், ஊரெங்கும் சிலையாக இருக்கும் ஏதாவது ஒரு அரசியல் கட்சித் தலைவரை சொல்வார்கள்… நம் இனத்தின் வரலாற்றில் சிலை வைக்கக் கூடிய அளவிற்கு போற்றுதற்குரியவர்களை ஒருவருக்கு ஒரு சிலை விகிதம் வைத்தாலே தமிழ்நாட்டில் போதுமான சாலைகள் இருக்காது…. நாம் நெஞ்சை நிமிர்த்து பெருமை கொள்ளக்கூடிய ராஜராஜ சோழனுக்கு சிலை,ராஜேந்திர சோழனுக்கு சிலை எல்லோரும் அறியக் கூடிய இடத்தில் இருக்கிறதா? … முண்டாசுகவி பாரதியின் சிலையாவது இருக்கிறதா? வேலு நாச்சியார் ஜான்சி ராணிக்கு 100 வருடங்களுக்கு முன்பே இருந்தார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? சுருக்கமாக சொன்னால், ஜெயசீலன் காலத்தின் கட்டாயம்.. அவரின் வருகை, தமிழ் அன்னை பொறுக்க முடியாமல் பொங்கி எழுந்தாள் என்றே புரிந்து கொள்ள முடிகிறது’ என்று சற்று கோபம் கலந்த உணர்ச்சியுடன் ஆகாஷ் கூறி பெருமூச்சு விட்டான்.
மேலும் தொடர்ந்து, ‘ மிஸ்டர் முகுந்தன், நம்மால் முடிந்த ஏதாவது செய்ய வேண்டும்’ என்றான்.
‘ ஆமாம் ஆகாஷ் எனக்கும் அந்த எண்ணம் இருக்கிறது… எப்படி உதவ முடியும் என்று தான் யோசிக்கிறேன்’
‘ யோசிப்போம், உங்களின் நேரத்தை அதிகமாக எடுத்துக் கொண்டேன்… உங்களுக்கு நேரம் இருக்கும் போது மீண்டும் சந்திப்போம்’
இருவருக்கும் பல வருடங்கள் பழகிய மனநிலை போல் இருந்தது..
‘ நாளை மறுநாள் சனிக்கிழமை உங்களுக்கு வேறு முக்கிய வேலை இல்லை என்றால் சந்திக்கலாமே?’
‘ சரிங்க ஆகாஷ் எனக்கு முக்கியமான வேலை ஏதும் இல்லை எங்கு சந்திக்கலாம்?’
‘ இந்த இங்க போட்டு பேசாதீங்க… நான் உங்களுக்கு மாணவனே… ஆகாஷ் என்றே கூப்பிடுங்கள். உங்கள் வீட்டிலோ அல்லது நான் தங்கி இருக்கும் அறையிலோ சந்திக்கலாம்’
‘ என் வீட்டிலேயே சந்திக்கலாம் ஆகாஷ், விலாசத்தை பிறகு குறுஞ்செய்தியாக அனுப்புகிறேன்.. உங்கள் கைப்பேசி எண்ணை தாருங்கள்’
கைபேசி எண்ணை மாற்றிக் கொண்ட பிறகு சரி என்று கூறிவிட்டு இருவரும் பிரிந்தனர்.
எந்த ஒரு வினைக்கும் சமமான எதிர் வினை இருக்கும் என்ற விதிப்படி ஜெயசீலனின் கருத்துக்கள் பல பல வருடங்கள் காலம் தாழ்ந்தாலும் வீறு கொண்டு இப்போது இளைஞர்கள் மத்தியில் காட்டு தீ போல் பரவ ஆரம்பித்து நெஞ்சார பதிய ஆரம்பித்தது..
பொறுக்குமா இதுவரை நம்மை பிரித்து, மேய்ந்து, கொழுத்த கொள்ளை கும்பல்கள்… இங்கு, அங்கு என்று இல்லாமல் எங்கும் பரவி இருந்த கொரோனா ஊழல் தொலைக்காட்சி ஊடகங்களிலும், காணொளி ஊடகங்களிலும், செய்தித்தாள் ஊடகங்களிலும் பரவி ஜெயசீலனை எங்கு நோக்கினும் பொய் பரப்பி நோகடிக்க முயற்சி செய்தனர்… எல்லோரையும் அடக்க, அழிக்க முடிந்த இதுவரை அதிகாரத்தை சுவைத்த, சுவைத்துக் கொண்டிருக்கிற புற்றுநோய் போன்ற கிருமிகளால் உடல் மட்டுமல்ல துரோகிகளாலும் மனமும் கல்லாகிப் போன ஜெயசீலனை அசைக்க முடியவில்லை… காலம் அவ்வப்போது நல்ல தலைவர்களை கொடுத்து தான் பார்க்கிறது… நல்ல மனம் இருந்தவர்கள் இரும்பு குணம் இல்லாமல் அழிக்கப்பட்டு, அழிந்து போனார்கள்…
ஜெயசீலன் மனதில் எவ்வளவோ நல்ல திட்டங்கள் இருந்தும் அதை கிராமங்கள் தோறும் எல்லா மக்களிடத்தும் பரப்ப மன வலிமையும், உடல் வலிமையும் இருந்தும் பொய் செய்திகளுக்கும் பொய் விமர்சனங்களுக்கும் பதிலளிக்கவே காலம் செலவிடப்படுவது அவருக்கு வருத்தமளித்தது… இதையெல்லாம் வென்று நம் மக்களை தட்டி எழுப்பி நிமிர செய்வது எப்படி என்று யோசித்துக் கொண்டிருந்தார்.
அப்போது கைபேசி அழைக்க எடுத்து பேசினார்…
‘ வணக்கம், எப்படி இருக்கீங்க?’ மறுமுனையில் மூத்த பத்திரிக்கையாளர் இரணியன்.
‘ வணக்கம், நன்றாக இருக்கிறேன் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? இன்னும் ஓரிரு மணி நேரம் கழித்து உங்களை வந்து சந்திக்கலாம் என்று இருக்கிறேன்… உங்களுக்கு நேரம் இருக்குமா? தொந்தரவு இல்லையென்றால் வருகிறேன்.’
‘ இன்னும் நான்கு மணி நேரம் இருக்கிறது நான் அடுத்த கூட்டத்திற்கு செல்ல… நீங்கள் இப்பொழுது வந்தாலும் பரவாயில்லை…’
‘ சரி இன்னும் அரை மணி நேரத்தில் வருகிறேன்..’
அரை மணி நேரமும் கழிந்தது….
‘ வாங்க இரணியன், எப்படி இருக்கீங்க? குடும்பத்தார் எப்படி இருக்கிறார்கள்?’
‘ எல்லோரும் நலம்… பொய் செய்திகளுக்கு எல்லாம் நீங்கள் அஞ்ச மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும், இருப்பினும் அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள் அந்த முதுமொழி உங்கள் விஷயத்தில் நடக்க கூடாது என்று விரும்புகிறேன்’
‘ கவலை வேண்டாம் இதுவரை இரும்பு மனம் படைத்த மனிதனாகவே இருக்கிறேன்’
‘இதுவரை என்று நீங்கள் சொல்வது உங்களுக்கும் மனம் தளர்வது தெரிகிறது…’
‘இல்லை இல்லை நன்றாக தான் இருக்கிறேன், சொல்லுங்கள் எந்த விஷயமாக சந்திக்க வந்தீர்கள்?’ இருவரும் பேசிக்கொண்டே வரவேற்பறைக்கு சென்றனர்.
‘ உங்களுக்கு,உங்களின் கொள்கைகளுக்கு தீவிர ஆதரவாளன் என் அண்ணன் மகன்…’
ஜெயசீலன் சற்றென்று குறுக்கிட்டு,
‘ எனக்கு அல்ல அதை நான் விரும்புவதும் இல்லை..என் கொள்கைகளுக்கு தீவிர ஆதரவாளன் என்று நீங்கள் சொல்லும் போதே அவரைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறேன்… நம் இருவருக்கும் தெரியும் கொள்கைகள் தான் நம் மக்களை இணைக்க வேண்டுமே தவிர எந்த ஒரு தனி மனிதரும் அல்ல..’
‘ மிகச் சரி, என் அண்ணன் மகன் ஆகாஷ்….. ….’ என்று ஆகாஷை பற்றி எல்லாம் கூறிவிட்டு ‘ உங்களுக்கு அவன் எந்த விதத்திலாவது உதவ முடியுமா என்று கேட்கிறான்’
‘ கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது… வளம் மிக்க வளர்ந்த நாட்டில் படிக்கச் சென்றும் மற்ற மாணவர்களைப் போல மனம் போன போக்கில் ஆடாமல் நம் மக்களை பற்றி அவர் சிந்திப்பது என் நம்பிக்கையை வளர்க்கிறது… இருப்பினும் படிக்கச் சென்ற அவர் படிக்கட்டும், படித்து முடிக்கட்டும் பிறகு நம் கொள்கைகளுக்கு உதவட்டும்’
‘ அதேதான் நான் அவனிடம் கூறினேன்.. அவனோ அங்கு விரிவுரையாளராக இருக்கும் ஒரு நண்பர் மூலமாக உங்களுக்கு ஏதாவது உதவ நினைக்கிறான்’
‘ அவர் நண்பர் எப்படி நமக்கு, நம் கட்சியின் கொள்கைகளுக்கு உதவ முடியும்?’
‘அது தெரியவில்லை… நாம் பேசித்தான் பார்ப்போமே! நீங்கள் கூட்டம் முடிந்து வீட்டிற்கு எப்போது திரும்பி வருவீர்கள்?’
‘ மதியம் 4 மணிக்கு திரும்பி விடுவேன்… மாலை எங்கும் செல்லப் போவதில்லை ஒரு நீண்ட அறிக்கை மட்டும் தயாரிக்கப் போகிறேன்’
‘ உங்களுக்கு தொந்தரவு இல்லை என்றால் மாலை ஆறு மணிக்கு மறுபடி வருகிறேன்… அவனிடத்திலும், அவன் நண்பரிடத்திலும் பேச உங்களுக்கு நேரம் இருக்குமா?’
ஜெயசீலன் சற்றே யோசித்தார்…வீட்டில் இருக்கும் நேரங்களில் அந்த மாலை நேரத்தில் தான் வளர்க்கும் செல்ல பறவைகள் மற்றும் விலங்குகளிடம் செலவழிப்பார்..
‘ வாருங்கள் இரணியன் 6 மணிக்கு பேசலாம்’
இரணியன் விடைபெற்றுச் சென்று பிறகு ஆகாஷ் காலை எழுந்தவுடன் கைபேசியில் தகவலை கூறினார்.
ஆகாஷுக்கு அந்த தகவல் ஜிவ் என்று இருந்தது… இன்னும் இரண்டு மணி நேரத்தில் முகுந்தனை சந்திக்க போகிறோம்… அவரிடத்தில் கூறினால் அவரும் சந்தோஷப்படுவார் என்று நினைவு ஓடிக் கொண்டிருந்தது…
அந்த நேரமும் வந்தது….
‘ வாங்க ஆகாஷ், நானே வந்து அழைத்து வரலாம் என்று இருந்தேன்…எப்படி வந்தீர்கள்?’
‘ பரவாயில்லை, நண்பன் கார் எடுத்து வந்தேன்.’
முகுந்தனிடம் தன் சித்தப்பா இரணியன் கூறியதை கூறினான்…
‘ஆகாஷ், எனக்கு பதட்டம் தொடங்குகிறது…. நேற்று முழுவதும் நாம் பேசியது பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன்… ஒரு நல்ல யோசனை இருக்கிறது…’
இருவரும் பேசிக்கொண்டே சென்று வரவேற்பு அறையில் அமர்ந்தனர்..
‘என்ன குடிக்கிறீர்கள் ஆகாஷ்?’
‘ கிளியர் ஆப்பிள் ஜூஸ் இருந்தால் குடிக்கிறேன் இல்லையென்றால் தண்ணீர் போதும்’
என்ன இது இவனுக்கும் கிளியர் ஆப்பிள் ஜூஸ் பிடிக்கிறதே என்று ஒரு வினாடி மனதில் வந்து சென்று..
‘இருக்கிறது, எடுத்து வருகிறேன்’
‘என்ன யோசனை மிஸ்டர் முகுந்தன்?’
‘மிஸ்டர் வேண்டாம் முகுந்தன் என்றே கூப்பிடுங்கள்’
‘சாரி பழக்க தோஷம்… சரிங்க என்ன யோசனை?’
முகுந்தன் விவரிக்க, ஆகாஷுக்கு வியப்பாக இருந்தது…
‘ நீங்கள் பயன்படுத்த முடியுமா?’
‘ எனக்கு எல்லாவித அனுமதியும் உண்டு… மேலும் ஆராய்ச்சிக்கு எனக்கு தனி அனுமதி உண்டு’
பேசிக் கொண்டிருக்கும் போதே மதியம் ஒன்றரை மணி… சென்னையில் ஆறு மணி ஆகப்போகிறது.. ஒரு வித பதட்டத்துடன் இருவரும் கைபேசியின் அழைப்புக்கு காத்திருந்தனர்.
கைபேசியில் அழைப்பும் வந்தது..
‘ ஆகாஷ், நீங்கள் இருவரும் ஒலிபெருக்கியில் இருக்கிறீர்கள்.. நீங்க பேசப்போவதை தலைவரும் கேட்க போகிறார்’
ஜெயசீலன் இடைமறித்து…
‘ நான் தலைவன் அல்ல.. உங்களைப் போன்ற ஒருவன்.. உங்களுக்கு இருக்கும் அதே பற்றுதான் எனக்கும்’
‘ மன்னிக்கவும் தலைவரே.. மீண்டும் மன்னிக்கவும் உங்களை எப்படி அழைப்பது என்றே தெரியவில்லை’
‘இரணியனை அழைப்பது போன்றே என்னையும் சித்தப்பா என்று அழைக்கலாம்’
ஆகாஷுக்கு மகிழ்ச்சி என்ன சொல்வது என்றே புரியவில்லை.. முகுந்தன் குறுக்கிட்டு..
‘ என் பெயர் முகுந்தன், நான் இந்தப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருக்கிறேன்… உங்கள் இருவரையும் அண்ணா என்று கூப்பிடட்டுமா?’
இருவரும் மகிழ்ச்சியில் தாராளமாக என்று கூற.. பேச்சு தொடர்ந்தது.
ஒரு மணி நேரத்துக்கு மேலாக நேரம் சென்றதே தெரியவில்லை…
‘ மிக்க நன்றி உங்கள் இருவருக்கும்.. எதிர்காலத்தைப் பற்றிய எனக்கு நம்பிக்கை மட்டும் அல்ல, மிகுந்த உத்வேகமும் கிடைத்துவிட்டது இந்த பேச்சின் மூலம்’ என்று ஜெயசீலன் கூற..
முகுந்தனுக்கு தங்க விருதை பெறும் போது கிடைத்த பெரு மகிழ்ச்சி இப்போதும் கிடைத்தது. ஆகாஷ் மெய்சிலிர்த்து இருந்தாலும் பெரிய பாரம் தன் மனதுக்குள் இறங்குவதை உணர்ந்தான்.. மிகப்பெரிய பொறுப்பு… என்னதான் முகுந்தன் செய்யப் போகிறார் என்றாலும் தன்னால் முடிந்த உதவியை எப்படி எல்லாம் செய்ய முடியும் என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
ஜெயசீலன் அன்றைய கூட்டத்தில்,
‘ நம் கட்சியின் கொள்கைகளை, நம் வரையறை திட்டங்களை இன்னும் ஒரு மாதத்தில்
இருந்து சிறு காணொளி குறும்படங்களாக திருக்குறளை தழுவி ஒவ்வொன்றாக வெளியிடப் போகிறோம், அது குழந்தைகள் முதல் எல்லா வயதினருக்கும் தெளிவாக புரியும் படியாக இருக்கும்’ என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு இரணியனைத் தவிர அங்கு யாருக்கும் புரியவில்லை. ஆனால் ஆதவாளர்கள் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று, ஜெயசீலனின் ஒவ்வொரு அசைவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை.
முகுந்தன் அப்போதிலிருந்தே அதற்கான வேலை செய்ய தொடங்கினான்.. அவன் வீட்டிலிருந்தே பல்கலைக்கழக சிறப்பு உயரிய கணனி அறையை தொடர்பு கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளவும் எவ்வித கட்டுப்பாடும் இல்லாத அனுமதி பெற்றிருந்தான்.
ஞாயிற்றுக்கிழமை கூட ஓய்வெடுக்க முடியாமல் ஆளும் வர்க்கத்தினால் அலைக்கழிக்கப்பட ஜெயசீலனின் மனது மேலும் உறுதிப்பட்டது. திங்கட்கிழமை விடிந்தது… இன்றாவது வீணாகாமல் பயன்பாட்டுக்குரியதாக அமைய வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.
தங்கள் குடும்ப நலனுக்காகவே அரசியல் நடத்தும் பெரும்பாலான அரசியல் சூழ்ச்சி கும்பல்கள் வேறு விதமாக நினைத்தது…
சனிக்கிழமை அன்று ஜெயசீலன் தயாரித்து வெளியிட்ட அறிக்கையை வெட்டி ஒட்டி திரித்து அதன் கருத்தையே மாற்றி காணொளி மற்றும் செய்தித்தாள் ஊடங்களின் மூலம் பரப்ப… அன்று மாலை இவற்றுக்கு எல்லாம் துணைபோன, விலை போன தொலைக்காட்சி ஊடகங்கள் இதைப்பற்றி வெட்டியான விவாதங்களை நடத்த தீர்மானித்தன.
ஜெயசீலனுக்கு இதெல்லாம் சாதாரணம் என்றாலும் சற்று தளர்ச்சி ஏற்பட்டது.. அவர் தயாரித்த அறிக்கை முழுவதுமாக அவர் கட்சியின் இணைய பகுதியில் இருந்தாலும், சில நல்ல பொறுப்பான காணொளி ஊடகங்கள் அதை முழுவதுமாக வெளியிட்டாலும்.. அவை சேர்ந்தது என்னவோ 10 சதவிகித மக்களுக்கும் குறைவே. மற்ற 90 சதவிகித மக்கள் வீணாய் போன தொலைக்காட்சி தொடர்களை பார்ப்பது போல் இந்தத் திரித்துக் கூறப்பட்ட காணொளிகளையும் ரசித்துப் பார்த்தனர்.
அந்த நேரத்தில்.. ஜெயசீலன் அவர்களின் கைபேசியில் இரணியன் அழைக்க எடுத்து பேசினார்.
‘ சொல்லுங்க இரணியன் எப்படி இருக்கிறீர்கள்?’
‘ நன்றாக இருக்கிறேன், சற்று முன் ஆகாஷும் முகுந்தனும் என்னை அழைத்துப் பேசினார்கள்.. இன்று திருத்தி கூறப்பட்ட பொய்யான காணொளிகளை பற்றி இன்னும் இரண்டு மணி நேரம் ஏதும் பேச வேண்டாம், அதற்குள் அவர்கள் உங்களுக்கும், எனக்கும் ஒரு செய்தி அனுப்புவதாக கூறினார்கள். உங்களின் கைபேசி எண்ணை அவர்களுக்கு தரலாமா?’
‘உங்கள் அண்ணன் மகனும், நம்பிக்கையான ஆசிரியர் தம்பியும் தானே… தாராளமாக கொடுங்கள் அவர்கள் மீது எனக்கு நம்பிக்கை உண்டு மற்றவர்களுக்கு பகிர மாட்டார்கள் என்று’
‘நல்லது, பிறகு உங்களை அழைக்கிறேன்.’
இரணியனுக்கு இது கொஞ்சம் படபடப்பாக இருந்தாலும், ஜெயசீலனுக்கு இது ஒரு அன்றாட செயல்.
சுமார் ஒன்றரை மணி நேரம் கழிந்திருக்கும்… முகுந்தனிடமிருந்து ஜெயசீலனுக்கும், இரணியனுக்கும் வாட்ஸ் அப்பில் பத்துக்கும் மேற்பட்ட குறுஞ்செய்திகளும் குரல் பதிவுகளும் வந்தது.
அவைகளைப் படிக்க, கேட்க என்றுமே உணர்ச்சி வசப்படாத ஜெயசீலனும் இரணியனும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்திற்கு உட்பட்டனர்.
இருவரும் ஒருவருக்கொருவர் அழைத்துப் பேச கைபேசி எடுக்க, இரு முனைகளும் தொடர்பு கொள்ள முடியாமல் இருக்க… புரிந்து ஜெயசீலன் அமைதியாக இருக்க.. அடுத்த நொடியே இரணியனிடம் இருந்து வந்த கைபேசி அழைப்பை எடுத்துப் பேசினார்.
‘ எப்படிங்க இரணியன் இவையெல்லாம் அந்த தம்பிக்கு முடிந்தது?’
‘ எனக்கும் புரியவில்லை, ஆனால் ஆகாஷ் சொல்லி இருக்கிறான் முகுந்தன் அந்த நாட்டிலேயே சேர்க்கை நுண்ணறிவுக்கு புகழ் பெற்றவன் என்றும் நாட்டின் முதன்மைக்கு சான்றாக தங்க விருது பெற்றவன் என்றும். நான் அங்கு வருகிறேன் அவர்களையே அழைத்து பேசலாமே…’
‘அதுவும் சரிதான், வாங்க.’
அதற்குள் ஜெயசீலன் ஒரு முடிவுடன் தன் கட்சியின் இணைய பக்கத்தின் லாகின் டீடைல்களை அதை நிர்வகிக்கும் கட்சியின் நிர்வாகியிடம் வாங்கி வைத்துக் கொண்டார். கட்சி நிர்வாகிக்கு அது குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் தெரியும்.. ஆனால் இவை யாவற்றையும் தனக்கும் இரணியனுக்கும் தவிர யாருக்கும் தெரியாமல் வைத்து இருப்பது மிக அவசியம் என்பதில் உறுதியாக இருந்தார்.
பொதுவாக இது போன்ற சமயத்தில் கட்சி நிர்வாகிகளிடமிருந்து தொடர்ந்து கைப்பேசி அழைப்புகள் வரும்… அன்றும் வந்தது.. எல்லோரிடமும் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளலாம்.. பொறுமையை கடைப்பிடியுங்கள் என்று மட்டும் கூறி வைத்து விட்டார்.
அதன் பிறகு தன் கொள்கைகளுக்கும், தன் கட்சிக்கும் ஆதரவு அளிக்கும் நம்பிக்கைக்கு பாத்திரமான ஐந்து காணொளி ஊடக நிறுவனர்களையும், கட்சி நிர்வாகிகள் நடத்தும் ஐந்து காணொளி ஊடகங்களையும் சரியாக மாலை நான்கு மணிக்கு கட்சி அலுவலகத்திற்கு வரும்படி செய்தி அனுப்பினார்.
சிறிது நேரத்தில் இரணியனும் வந்தார்.. இருவரும் சேர்ந்து ஆகாஷ் உடனும் முகுந்தனுடனும் தீவிர ஆலோசனை நடத்தினர். முடிவில் ஜெயசீலன் இதுவரை இல்லாத ஒருவித நிம்மதி மனநிலையில் இருந்தார்.
மாலை 4 மணி, அழைத்த எல்லோரும் வந்திருந்தனர். அவர்களிடம் தன் திட்டத்தை ஜெயசீலன் தெரிவிக்க.. எல்லோரும் வாயடைத்து போனார்கள். எப்படி இந்த செய்திகள் எல்லாம் இவரிடம் கிடைத்தது என்று அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் 6 மணிக்கு வெளியிடப் போகும் காணொளிகளை தயாரிக்கச் சென்றனர்.
வீணாய் போன தொலைக்காட்சி விவாதங்கள் பொதுவாக இரவு 8 மணிக்கு துவங்கும்… எல்லா தொலைக்காட்சி ஊடகங்கள் நடத்தும் எந்த ஒரு விவாத நிகழ்ச்சியும் இன்றைய, அன்றாட மக்களின் பிரச்சனைகளை திசை திருப்பவே நடத்தப்பட்டன. இது மக்களுக்கு புரிந்தும் ஒருவித மாய மனோ நிலையில் சிக்கி கொண்டது போல கட்டுண்டு கண்டு ரசித்தனர்.
மாலை ஆறு மணி….
ஜெயசீலன் கட்சியின் சார்புடைய காணொளி ஊடகங்களும், அவரை ஆதரிக்கும் காணொளி ஊடகங்களும் மற்றும் அவரின் கட்சியின் இணையத்திலும் திட்டமிட்டபடி ஒரு காணொளியை வெளியிட்டனர்.
மாலை ஆறரை மணி….
தமிழ்நாட்டில் ஒருவிதப் பதற்றம் தொற்றிக் கொண்டது.. பெரும்பாலானவர்கள் அந்தக் காணொளியை அதிர்ச்சியுடன் கண்டனர்.
நம் மக்களுக்கு ஒரு விதமான மனநிலை உண்டு… தங்களுக்கு நன்றாக தெரிந்தாலும், நன்றாக புரிந்தாலும் ஊடகத்தில் வந்தால் மட்டுமே நம்புவது … அதுபோலத்தான் அந்தக் காணொளியில் வந்த செய்திகள் எல்லோருக்கும் ஒரு அளவுக்கு தெரிந்ததுதான் என்றாலும் இப்படிப்பட்டவர்த்தனமாக நிரூபிக்கப்பட்டது எல்லோருக்கும் அதிர்ச்சி அளித்தது. அதற்கு காரணம் அன்று காலை பிரித்து, திரித்து வெட்டி, ஒட்டி காணொளி வெளியிட்ட எல்லா ஊடகங்களும் அதை வெளியிடுவதற்கு முன்னால் அவைகளுக்கு அதிகார வர்க்கத்திலிருந்து வந்த பகிர்வுகளும்.. அதை எப்படி வெளியிட வேண்டும் என்ற குரல் பதிவுகளும் பட்டவர்த்தனமாக அதே குரல் பதிவுகளாகவும், பகிர்வுகளின் ஸ்க்ரீன் ஷாட்டுகளாகவும் அவர்களின் முகத்திரையை கிழிக்கும் வண்ணம் அந்தக் காணொளி இருந்ததுதான்.
இதன் சங்கிலி தொடர் நிகழ்வாக ஜெயசீலன் எதிர்பார்த்தபடி அன்றைய திட்டமிடப்பட்ட எல்லா விவாத நிகழ்ச்சிகளும் கேன்சல் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அதிகார வர்க்கத்தின் இத்தகைய கீழ்த்தரமான நிழல் வேலைகளை செய்யும் குழு அன்று ரகசியமாக கூடியது…. ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்!’ எனும் முதுமொழிக்கேற்ப மிகச் சரியாக அன்று அது அங்கு நடந்தது.
எந்த பொய் செய்திகளை பரப்பி மக்கள் மனதில் சந்தேக தீயை பற்ற வைத்தார்களோ அதன் மாதிரி அந்தக் குழு கூட்டத்தில் நடந்தது.
கூட்டத்தில் ஒருவர் மீது ஒருவர் கொண்ட சந்தேகம் கொரோனா வைரஸை விட வேகமாக பரவியது.. தலைமை நிர்வாகி சந்தேகத்தின் முத்தாய்பாக எல்லோருடைய கைபேசியையும் வாங்கி அறைக்கு வெளியே வைத்துவிட்டு ‘நம்மில் ஒருவர் தான் அந்தக் கட்சிக்கு தகவல்களை கொடுத்திருக்க முடியும்… எப்படி யோசித்துப் பார்த்தாலும் இங்கிருந்து தவிர வேறு எந்த வழியிலும் அவர்களுக்கு இந்த செய்தி கிடைத்திருக்காது… தலைவர் புலனாய்வு துறையின் உதவியையும் நாடி இருக்கிறார்’.. என்று கூறி எல்லோரையும் உற்று நோக்கினார். கட்டுப்பாடற்ற காட்டுகூட்டம் ஆயிற்றே அது.. சுய நினைவு இழந்து ஒருவருக்கொருவர் சந்தேகத்தில் கூச்சலிட ஆரம்பித்து வார்த்தைகள் தடித்து கைகளப்பில் முடிந்தது… ஜன்னல்கள் நொறுங்கின… மூடிய கதவை எளிதாக திறக்க முடிந்தும் உடைத்தார்கள்…
இது நடந்த சுமார் ஒரு மணி நேரத்தில் அங்கு நடந்த எல்லா ஒலியின் பதிவுகளையும் பகிர்வாக ஜெயசீலனுக்கு வாட்ஸ் அப்பில் முகுந்தனிடமிருந்து வந்தது. அதைத் திறந்து கேட்ட ஜெயசீலன் உறைந்து போய்விட்டார்… தன் நிலைக்கு வர ஒரு நிமிடம் பிடித்தது. இங்கு நடந்த இது எப்படி எங்கோ இருக்கும் முகுந்தனுக்கு கிடைத்தது…. தனிமனித சுதந்திரம் என்று எல்லோரும் பேசுவது கிடக்கட்டும்… ரகசியம் என்பது எங்கும் காக்கப்படாதா? எதற்கும் சளைக்காத ஜெயசீலன் எதிரிகளை சின்னாபின்னமாக்கும் இவ்வளவு அருமையான பதிவு கிடைத்தும் லேசான நடுக்கத்துடன் இருந்தார்.
தயக்கத்தை தள்ளி வைத்துவிட்டு, உடனடியாக முகுந்தனை தொடர்பு கொண்டார்.
‘ சொல்லுங்க அண்ணா, நான் பகிர்ந்ததை கேட்டீர்களா?’
‘ கேட்டேன், அதைப் பற்றி பேச தான் உன்னை அழைத்தேன் தம்பி’
‘ பிடித்ததா அண்ணா?’
‘ அதிர்ச்சியில் ஒரு நிமிடம் என் இதயம் நின்று மறுபடியும் ஓட துவங்கியது போல் இருந்தது’
‘ ஏன் அப்படி?’
‘ ரகசியம் என்பது எங்கும் இல்லையா? உங்களுக்கு கிடைத்த இது போன்றவை இமயம் போன்ற பணபலம் உள்ள அவர்களுக்கு எளிதாக இருக்காதா?’
‘ அண்ணா, உலகப் புகழ்பெற்ற அறிவியலின் தந்தை எனப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இறந்து என்பது வருடங்களாக போகிறது… இவ்வளவு வளர்ச்சி பெற்ற இந்த நாகரிக உலகத்திலும் அவரைப் போன்ற ஒருவரை இந்த உலகம் கண்டதில்லை …. நீங்கள் கவலைப்பட வேண்டாம்.. எனக்கு தோன்றியிருக்கும் இந்த அரிய யோசனை, அற்புத வாய்ப்பு மற்றவர்களுக்கு தோன்றுவதும் கிடைப்பதும் மிக மிக அரிது. பெரிய வல்லரசுகளின் மிக உயரிய சிறப்பு புலனாய்வு துறைகளுக்கு வேண்டுமானாலும் இருக்கலாம்… ஆனால் அதை அவர்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு மட்டுமே பயன்படுத்துவார்கள் என்று நினைக்கிறேன்… என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.. நீங்கள் உங்களை நம்புவது போல என்னை நம்பலாம்…தமிழின்பால் தமிழர்களின் பால் தமிழ்நாட்டின் பால் பெரும் கனவும், பேரன்பும், நமக்கு இழைக்கப்பட்ட அநீதியின் பாலும், துரோகத்தின் பாலும் பெரும் கோபமும் கொண்டவன் நான்.. நீங்கள் இந்த பணியை விட்டாலும், நான் தொடர்ந்து செய்தேன்.. இது தமிழ் அன்னைக்கு எனக்கு நானே செய்து கொடுத்த சத்தியம்’
முகுந்தன் பதிலைக் கேட்டு ஜெயசீலன் மெய்சிலித்து போனார்.
‘ தம்பி, இச்செய்திகள் வேகம் எடுத்து வெடித்த பிறகு…. என்னால் சமாளிக்க முடியும்.. அது உங்களை நோக்கி வந்தால்….. அந்த தர்ம சங்கடத்திற்கு உங்களை ஆளாக்க நான் விரும்பவில்லை..’
ஜெயசீலன் தொடர்ந்து பேச முற்பட்டதை இடைமறித்து…
‘ அண்ணா நீங்கள் சொல்வது, நினைப்பது புரிகிறது… கவலையே வேண்டாம். உங்கள் கைப்பேசியிலோ அல்லது அண்ணன் இரணியன் கைபேசியிலோ உள்ள என் கைபேசி எண், என்னை தொடர்பு படுத்தாது… நான் விவரித்துக் கூறினாலும் அதைப்பற்றி உங்களால் புரிந்து கொள்ள முடியாது… என்னை நம்புங்கள். நான் பகிர்ந்ததை வெளியிடுங்கள்… இனி யாரும் உங்களையும், உங்கள் கட்சியையும் கனவிலும் எதிர்க்கத் துணிய மாட்டார்கள்’
‘ சரி, உங்களை ஒன்று கேட்டால் தப்பாக நினைக்க மாட்டீர்களே தம்பி?’
‘ என்ன அண்ணா இப்படி கேட்கிறீர்கள்? எந்த சந்தேகத்தையும் என்னிடம் தயங்காமல் கேட்கலாம்.’
‘ என்னை எப்படி நம்புகிறீர்கள் தம்பி? நானும் மற்ற அரசியல்வாதிகளை போல் இருக்க மாட்டேன் என்று?’
‘ நான் உங்களையும், அண்ணன் இரணியனையும் ஆராயவில்லை ஆனால் என் நிழல் உங்கள் இருவரையும் முழுமையாக ஆராய்ந்து 100% நம்பலாம் என்று நம்பிக்கை கொடுத்தது, அதன் பிறகே இதில் நான் இறங்கினேன்… உங்களை எப்போதாவது நேரடியாக சந்திக்கும்போது விளக்கமாக கூறுகிறேன் கவலை வேண்டாம்’
இந்த உரையாடலுக்குப் பிறகு ஜெயசீலன் மனதில் ஒரு நிம்மதியும் தீர்க்கமும் தோன்றியது.
திட்டமிட்டபடி முன்பு போலவே அந்த நிழல் குழுவின் ஒலி பதிவுகளை வெளியிட… எதிர்பார்த்ததற்கு மேலாகவே இதுவரை ஜெயசீலனை, அவர் கட்சியை எதிர்த்த எல்லோரும் உறைநிலைக்கு சென்றனர்.
இவைகளையும் மீறி சில சில்லறை தற்குறிகள் நடத்தும் காணொளி ஊடகங்களில் இங்கொன்றும், அங்கொன்றுமாக தவறான செய்திகள் வந்தாலும் பார்ப்பதற்கு பார்வையாளர்கள் இல்லாமல் போனது.
ஜெயசீலன் ஏற்கனவே அறிவித்தபடி, திட்டமிட்டபடி தன் கட்சியின் கொள்கைகளை தமிழ் வரலாற்றோடு, கலாச்சாரத்தோடு தொடர்பு படுத்தி, திருக்குறளை தழுவி, செயற்கை நுண்ணறிவின் உதவியால் சிறுகதை காணொளிகளாக வெளியிட்டது வயது வித்தியாசம் இன்றி தமிழ் அறிந்த எல்லோரையும் ஈர்த்தது. கட்சிக்கு ஆதரவு காட்டாறு போல் வந்தாலும் கடல் போல் தேங்கியது.
மற்ற மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட, வாங்கப்பட்ட பால் மற்றும் காய்கறிகளின் வரத்து முழுவதுமாக நின்று போனது…
பகலில் விவசாயத்திற்கான இலவச மின்சாரம் பெரும் வரவேற்பு பெற்றது..
தமிழ், தமிழர்களின் வரலாறு 60 சதவிகிதமும் இந்திய பெருநிலத்தின் வரலாறு 30 சதவீதமும் முக்கிய உலக வரலாறு மீதமுள்ள 10 சதவிகிதமும் ஒருங்கிணைந்த முற்றிலும் வித்தியாசமான வரலாறு பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன…
அறிவியல் நிகழ் காலத்திற்கு ஏற்றவாறு எல்லா நேரத்திலும் புதுப்பிக்கப்பட்டது….
தமிழ் பாடத்திட்டம் முற்றிலும் புது கோணத்தில் வடிவமைக்கப்பட்டது..
ஆங்கில மதிப்பெண்களில் 50 சதவிகிதம் பாடத்திட்டத்திற்கும் மீதமுள்ள 50 சதவிகிதம் பேச்சுத் திறனுக்கும் ஊக்குவிக்கப்பட்டது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மிகப்பெரிய பால் பண்ணையை உள்ளடக்கிய விவசாய பண்ணைகள் அமைக்கப்பட்டது…
வேலையில்லா திண்டாட்டம் என்பதே இல்லாமல் போய்விட்டது..
தமிழ்நாட்டின் எல்லா சாலை ஓரங்களிலும் சூரிய தகடுகள் அமைக்கப்பட்டு விவசாய பயன்பாட்டுக்கு நேரடியாக இலவச மின்சாரம் அளிக்கப்பட்டு, விவசாயம் பெருமளவு ஊக்கப்படுத்தப்பட்டது.
அன்று மாதத்திற்கு ஒருமுறை நடக்கும் அமைச்சரவை கூட்டம்..
அமைச்சரவை கூட்டத்திற்கு முன்பே முதன்மை அமைச்சர் தகவல் தொழில்நுட்ப அமைச்சரையும், கல்வி மற்றும் விவசாய அமைச்சரையும், செய்தி தொடர்பு அமைச்சரையும் தனியாக சந்திக்க அழைத்திருந்தார்.
தனி அறையில் அந்த மூன்று அமைச்சர்களும் சென்று அமர்ந்த ஓரிரு நிமிடங்களில் ‘மன்னிக்கவும், உங்களை காக்க வைத்து விட்டேன்’ என்று கூறிக் கொண்டே முதன்மை அமைச்சர் வந்து அமர்ந்தார்.
மூவரும் ஒரு சேர, ‘ நாங்களும் இப்பொழுதுதான் வந்து அமர்ந்தோம்’ என்றனர்.
‘அப்படி என்றால் சரி, இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன்.. அதைப்பற்றி உங்கள் மூவரிடத்தும் பேச வேண்டும் அதனால் தான் தனியாக அழைத்தேன்.’
என்னவாக இருக்கும் என்று மூவரும் அவர் முகத்தையே பார்க்க…
‘ ஒட்டுமொத்த மக்கள் பிரதிநிதிகளும் நம் கட்சியினரே இருப்பதால் மகிழ்ச்சியாக இருந்தாலும், எல்லா செயல்திட்டங்களையும், சட்டங்களையும் எளிதாக இயற்ற முடியும் என்று இருந்தாலும்.. பல வருடங்கள் கழித்து அது சர்வாதிகாரத்திற்கு வழி வகுத்து விடும்… மனித இயல்பு அப்படி… அதனால்..’ என்று சற்று நிறுத்திவிட்டு அந்த மூவரையும் பார்த்தார்.. மேலும் தொடர்ந்து…
‘ நம்மை தவிர்த்து இருக்கும் பதினாறு கட்சிகளும் தேர்தலில் தோற்று இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி பிரதிநிதித்துவம் தர விரும்புகிறேன்.. உங்களின் வெளிப்படையான கருத்துக்களை தெரிவியுங்கள்’ என்று கூறி நிறுத்தினார் முதன்மை அமைச்சர் ஜெயசீலன்.
நல்ல யோசனை என்று மூவரும் பதில் அளித்தனர்.
‘ பிரதிநிதிகளை நாம் தேர்ந்தெடுக்க போகிறோமா அல்லது அந்தந்த கட்சியை கேட்க போகிறோமா?’ என்று செய்தித் துறை அமைச்சர் இரணியன் கேட்க..
‘ நாம் தேர்ந்தெடுத்தால் அது சர்வாதிகாரமாக இருக்கும்… இந்த யோசனையே அவர்களும் பங்களிக்க வேண்டும் என்பதுதான்…அவர் அவர்களாகவே தீர்மானிக்கட்டும்’ என்றார் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் முகுந்தன்.
‘ தொடர் மழையின்மை காரணமாக பால் பண்ணையில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக இருந்த குடும்பத்தில் இருந்து வந்த என் வெள்ளைக்கார நண்பன், மிக மிகத் திறமைசாலி இப்போது அந்தப் பெரிய பால் பண்ணையை விற்றுவிட்டு இருக்கிறார், அவரை என் துறையில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று விரும்புகிறேன்… உங்களின் முடிவு எதுவாக இருந்தாலும் நான் ஏற்றுக் கொள்கிறேன்’ என்றார் கல்வி மற்றும் விவசாய துறை அமைச்சர் ஆகாஷ்.
‘ உங்களின் முடிவு சரியானதாக தான் இருக்கும், இருப்பினும் அவரின் தகுதிகளை நிர்ணயிக்க நிழலை அணுகலாம்’ என்றார் ஜெயசீலன். அதை முகுந்தனும் மற்றவர்களும் ஏற்றுக்கொண்டனர்.
பிறகு அமைச்சரவை கூடி முடிந்தது…
மிக உயரிய சிறந்த அரசாங்கத்திற்கான விருது உலக அளவில் தமிழ்நாட்டிற்கு கிடைத்தது மகிழ்ச்சி அளித்தாலும் ஜப்பானுக்குச் சென்று அந்த விருதை வாங்க ஜெயசீலனுக்கு மனமில்லை… முகுந்தனை அனுப்ப முயற்சித்தார்… அவரோ உங்களுடன் வேண்டுமானாலும் வருகிறேன் விருதை வாங்க அல்ல.. உங்களுக்கு துணையாக, என்று உறுதியாக கூறி மறுத்துவிட்டார்.
மூன்றாண்டுகளில் தமிழ்நாடு இவ்வளவு பெரிய, சிறந்த மாற்றத்தை கண்டிருந்தாலும், இன்னும் சிறப்பாக என்னவெல்லாம் செய்ய முடியும் என்று யோசித்துக் கொண்டே இருந்த ஜெயசீலன்.. மூன்றரை வருடங்களாக கேட்காது கேட்க நினைத்து இருந்ததை பக்கத்திலிருந்த முகுந்தனை நோக்கி கேட்டார்.. விமானத்தில் உணவு முடிந்து அரை மணி நேரத்திற்கு மேலாக ஆகிவிட்டதால் எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்டு அமைதியாக இருந்தது..
முகுந்தனும் புன்முறுவலுடன் ‘நீங்கள் கேட்கவில்லை என்றாலும் உங்களுக்கு எல்லாவற்றையும் விவரமாக சொல்லவே இந்த ஜப்பான் பயணத்திற்கு வந்தேன்.
நான் வடிவமைத்த செயலி ‘நிழல்’ ஒரு அற்புதமான மிக மிக வலிமையான கிட்டத்தட்ட சுய செயற்கை நுண்ணறிவு.. இப்போது உலகத்தில் புழக்கத்தில் இருக்கும் ஓபன் ஏ ஐ, ஜெமிநை, டீப் சீக் இவைகளை போல் அல்லாமல் நிழலை வடிவமைத்தேன்.. அதற்கு உணர்வு தர முயற்சித்தேன்.. ஓரளவிற்கு வெற்றியும் கண்டேன்.. அதைப் பற்றி விவரமாக பிறகு உங்களிடம் கூறுகிறேன்.. இப்போது நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கிறேன்…
மின்னணு சாதனங்கள் எல்லாமே ஒரு விதத்தில் எந்த ஒரு ரகசியத்தையும் காப்பாற்ற முடியாத கருவிகள் தான். அதில் பதிந்த, பதியப்பட்ட, பகிரப்பட்ட எல்லாவற்றையும், எப்போதும் மிக உயரிய செயற்கை நுண்ணறிவு மூலம் எடுத்துக் கொள்ள முடியும்.. நிழலுக்கு நான் கொடுத்த கட்டளையின்படி உங்களைப் பற்றியோ உங்கள் கட்சியின் பற்றி செய்தியோ வெளிவரும் அடுத்த நொடியே அதைத் தாங்கி வந்த புள்ளியை ( source இந்த இடத்தில் பெரும்பாலும் அது ஒருவருடைய கைப்பேசி) தேடிச்சென்று அதில் உள்ள செய்திகளை எடுத்து கொடுத்து விடும்.. இது ஓரளவுக்கு வலிமையான செயற்கை நுண்ணறிவுகள் செய்யக்கூடியவை… 99.9999999% எல்லோருக்கும் தெரியாதவை நவீன மின்னணு சாதனங்கள் குறிப்பாக தொலைக்காட்சி அந்தக் குறிப்பிட்ட இடத்தில் கேட்கும் ஒலி யாவற்றையும் சேகரித்து அந்த தொலைக்காட்சியை உருவாக்கிய நிறுவனத்திற்கு அனுப்பி விடும்.. உங்களை பொய் செய்திகளால் முடக்க நினைத்த நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும் இருக்கும் எல்லா தொலைக்காட்சிகளையும் நிழலுக்குத் தெரியும்.. அந்த அதிகார வர்க்கத்தின் கூட்டத்தில் நடந்தவைகளை அப்படித்தான் நிழல் எனக்கு எடுத்து தந்தது.
ஜெயசீலனும் முதுகலை பட்டம் பெற்றவர் தான்… இருப்பினும் நிழலின் வலிமையை புரிந்து கொள்ள முயற்சி செய்து முழுவதும் புரிந்து கொள்ள முடியாமல் பெருமூச்சு விட்டார்.
அதிகார பலத்தை, பண பலத்தை நிழல் தனி ஒன்றாக நின்று, கொன்று விட்டது!