top of page

கடவுளின் தவறா? By சிவா.

  • melbournesivastori
  • 21 hours ago
  • 8 min read

     “ தான் விருப்பப்படாததை அது உண்மையாக இருந்தால் கூட நம்ப விரும்பாதவர்கள் ” … இது தான்மை (ஈகோ)

    இது போன்ற தான்மையின் அகங்காரம் தான் என்னை அகல பாதாளத்தில் தள்ளியது…. இல்லை இல்லை யோசித்துப் பார்த்தால் அந்த தான்மையை விட அதை நான் உடைக்க முற்பட்டது தான் என்னை எட்டு வருட நரகத்தில் தள்ளியது….

அந்த எட்டு வருட நரகத்திற்கு அப்புறம் வருகிறேன்…. இன்று எனக்கு மிகப்பெரிய நாள்… 

     பின்னோக்கி நினைத்துப் பார்க்கிறேன், நான் ஒரு சாதாரணமானவன்… எல்லாவித  கெட்ட குணங்களையும் கொஞ்சம் கொஞ்சம் வைத்திருந்தேன்… எல்லோருக்கும் அப்படித்தான் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.. அப்படி நினைப்பது தவறு தான்.. எனக்கு என்ன உரிமை இருக்கிறது அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்று நினைப்பதற்கு? இவைகளைப் பற்றி எல்லாம் பிறகு சொல்கிறேன்.

    நேரம் குறைவாகவே இருக்கிறது நான் தயாராக வேண்டும்.. ஆமாம் மிகப்பெரிய நாள் இன்று எனக்கு. உண்மையை சொன்னால் இன்னமும் என்னால் நம்ப முடியவில்லை, நானா எழுதினேன் இந்த புத்தகத்தை என்று… நான் எழுதுவேன் என்று எனக்குத் தெரியாது.. அது பிரசுரிக்கப்படும் என்று கனவிலும் நினைத்தது கிடையாது.. அப்படியே  பிரசுரிக்கப்பட்டாலும் அது ஆயிரம் புத்தகங்கள் விற்பனையில் எட்டினாலே என் பிறவி பயனை அடைந்து விட்டதாக நினைப்பேன்.. 

ஆயிரம் பல ஆயிரமாக கடந்து… பல ஆயிரங்கள் லட்சமாக தொட்டு… இன்று பல லட்சங்கள் சேர்ந்து 10 லட்சம் ஆகி ஒரு மில்லியன் பிரதியை தொட இன்னும் சில பிரதிகளே உள்ளன.. ‘ பிரசுர நிறுவனம் இன்று இது ஒரு மிகப்பெரிய மைல் கல்லை தொட போகிறது.. அதற்கு இன்னும் எவ்வளவு புத்தகங்கள் உள்ளன என்று தெரிவிக்க போவதில்லை… அந்த மைல் கல் வரும்போது, அந்தக் குறிப்பிட்ட மைல் கல்லின் புத்தகத்தை வாங்கும் நபருக்கு ராஜேந்திர சோழன் தடம்பதித்த நாடுகளுக்கு இரு வார, இருவருக்கான சுற்றுலா ஏற்பாடுகள் செய்து தரப்படும்’ என்று அறிவித்திருந்தனர். அந்தப் புத்தக நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் எதிர்பார்ப்புடனும், படபடப்புடனும் காத்திருந்தேன்… அலுவலகம் திறக்க இன்னும் பத்து நிமிடங்களே இருந்தது… வெளியே மிகப்பெரிய கூட்டம். எல்லோரும் என் புத்தகத்தை வாங்க, படிக்க மிக மிக ஆவலாக இருக்கிறார்கள் என்று சொல்வதும், நினைப்பதும் … இப்போது என்னால் கொஞ்சம் கொஞ்சமாக என்னிடமிருந்து அழிக்கப்பட்ட தான்மையை விருந்து வைத்து அழைப்பது போல் ஆகிவிடும். கூட்டம் சரி, மிகப்பெரிய கூட்டத்தின் காரணம் சுற்றுலா பரிசு செய்தித்தான் என்று நினைக்கிறேன்.  

     அந்த நேரமும் வந்தது….  வாசகர்களும்,  மக்களும் வரிசையாக நின்று என்னுடைய புத்தகத்தை கையெழுத்துடன் வாங்கி சென்றனர்… வாங்கிச் சென்ற ஒவ்வொருவருக்கும் ஏமாற்றமே.. என்னதான் புத்தகத்தைப் படிக்க ஆவல் இருந்தாலும் சுற்றுலா  செல்ல பரிசு கிடைக்கவில்லையே என்று…. ஒரு 50 நிமிடங்கள் சென்றிருக்கும்.. அந்தப் புத்தக நிறுவனத்தின் தலைமை அதிகாரி சிறிது பதட்டத்துடன் இருப்பது தெரிந்தது… எனக்கு புரிந்தது, பத்து லட்சத்தாவது பிரதி நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று. அவருடைய பதட்டம் எனக்கும் தொற்றிக் கொண்டது…. அது இந்த வாசகராக இருக்குமோ.. இல்லை…இந்த வாசகராக இருக்குமோ….

    நின்றிருந்த அடுத்த வாசகருக்கு என் புத்தகத்தில் கையெழுத்து இட்டு 

கொடுத்து அனுப்பி அடுத்த வாசகரை பார்க்கத் தலைநிமிர்ந்த போது… தலையில் பேரிடி இறங்கியது போல் உணர்ந்தேன். 

    கதவைத் திறந்து கொண்டு செவிலியர் ஒருவர் கையில் மாத்திரை தட்டுடன் வருவது தெரிந்தது…. எனக்கு அந்த மாத்திரைகள் தேவை இல்லாத ஒன்று… சுதந்திரம் உங்களுக்கெல்லாம் உள்ளது.. எனக்கோ அது பறிக்கப்பட்டு நேற்றுடன் எட்டு வருடங்கள் கடந்து விட்டது… என்னை மீறி என் கண்களில் கண்ணீர் துளிர்தது. சுருக்கமாக சொல்லப்போனால் அந்த செவிலியர் கொடுக்கும் மாத்திரைகளை நான் உட்கொள்ளாமல்  தவிர்க்க முடியாது, நான் அந்த மாத்திரைகளை உட்கொண்டு விழுங்கி முடிக்கும் வரை அந்த செவிலியர் அங்கேயே நிற்கும்படியான இந்த மருத்துவமனையின் உத்தரவு அப்படி. 

     யோசித்து பயனில்லை… இந்த யோசனையே எனக்கு மறுத்து போய் பல வருடங்கள் ஆகிறது. அந்த செவிலியர் எடுத்து வந்த மாத்திரைகளை வாங்கி உட்கொண்டு விழுங்கினேன். அடுத்து வரப் போகும் காலை சிற்றுண்டிக்காக சன்னல் வழியாக வெளி உலகை பார்த்தவாறு காத்திருக்க ஆரம்பித்தேன். இறுமாப்புடன் சுற்றித்திரிந்த எனக்கு இந்த நிலைமை வரும் என்று கனவிலும் நினைத்து பார்க்கவில்லை.. நான்கு சுவற்றுக்குள் எட்டு வருடங்கள் கடந்த சிறைச்சாலை எனக்கு…  லேசாக சிரிப்பு வந்தது… எனக்கு சுதந்திரம் இல்லை அதனால் இந்த மருத்துவமனை சிறைச்சாலையில் இருக்கிறேன்… ஆனால் உங்கள் எல்லோரையும் அடைத்து வைக்க சுவர்கள் இல்லை…. ஆனால் நீங்களோ நீங்களாகவே கண்ணுக்குத் தெரியாத நான்கு சுவருக்குள் அடைபட்டு கொள்கிறீர்கள்.. மகிழ்ச்சியில் துவங்கி மதம் வரை எண்ணில் அடங்கா சிறை சாலைகள் உங்களுக்கு…. நீங்கள் அறியா  உண்மை எனக்குத் தெரிந்ததால் இதை கூறுகிறேன்… 

     சற்றென்று கதவை திறந்து கொண்டு அதே செவிலியர் ஓடோடி வந்தார்…

  ‘ மிஸ்டர் சத்யன், தலைமை மருத்துவர் உங்களை உடனடியாக அழைத்து வரச் சொன்னார்’

   எட்டு வருடங்களாக என்னை என் பெயர் இட்டே  அழைத்ததில்லை… அதுவும் மிஸ்டர் போட்டு…. என்ன நடக்கிறது என்றே புரியவில்லை… இதுவரை இந்த அறையை விட்டு, குறிப்பிட்டு என்னும் அளவிற்கு தான் மருத்துவமனையின் மற்ற பகுதிகளுக்கு சென்று இருக்கிறேன்.. அதுவும் இரண்டு செவிலியர்களின் பாதுகாப்போடு தான். 

     அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் என்னை ஆவலுடன் வரவேற்றார். எனக்கு ஆச்சரியத்திற்கு பதிலாக அந்த வரவேற்பு அதிர்ச்சியையே தந்தது.

அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை… இதே தலைமை மருத்துவர் தான் இன்று எட்டு வருடங்களாக நான் சொல்ல வருவதை சொல்வதற்கு முன் வாயை அடைத்து பாடாய்படுத்திருக்கிறார்.. நான் சுதாரித்துக் கொண்டு, ஏதும் பேசாமல் அவரை உற்று நோக்கினேன். 

  ‘ மிஸ்டர் சத்யன், இன்று நீங்கள் இந்த மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்படுகிறீர்கள்…. மகிழ்ச்சி தானே?’

  எனக்கு ஏதும் புரியவில்லை… முதலில் அந்த செவிலியர் மிஸ்டர் சத்யன் என்று அழைத்தார்.. இப்பொழுது எட்டு வருடங்களாக என் கண்ணுக்கு அரக்கனாக தெரிந்த இந்த தலைமை மருத்துவர் மிஸ்டர் சத்யன் என்று அழைத்ததோடு மட்டுமல்லாமல் நான் டிஸ்சார்ஜ் செய்யப்பட போகிறேன் என்ற வெடிகுண்டையும் போட்டது…

  எனக்கு பேச்சு வரவில்லை… ஏதும் பேசாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.. 

  ‘மிஸ்டர் சத்யன் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்… எங்களுக்கும் தான் இந்த செய்தி ஆச்சரியமாக இருந்தது.. இதுவரை நடந்ததற்கு மன்னிப்பை கோருகின்றோம். உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன், எங்களுக்கு வந்த உத்தரவு அப்படி….

 எட்டு வருடம் இருக்கும் பிறகு முதன்முறையாக அவரிடம் பேசத் தொடங்கினேன், 

  ‘ சற்று விளக்கமாக சொல்லுங்கள்’

  ‘ உங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவரே எல்லா உண்மைகளையும் ஒத்துக் கொண்டார்… அதோடு மட்டுமல்லாமல் அதை நாட்டின் மிகப்பெரிய தொலைக்காட்சி ஊடகத்தின் மூலமாக நேற்று இரவு விளக்கமாக கூறிவிட்டார். அதன் பிறகு அவசரகதியில்  எல்லாமே நடந்தது… நான் நேற்றைய இரவு அதை தொலைக்காட்சியில் பார்க்க வில்லை.. இன்று காலை நேராக மருத்துவமனைக்கு வந்த பிறகு தான் தெரிந்தது… அதே சமயத்தில் அரசாங்க சுகாதாரத் துறையில் இருந்தும் அவசரக் கட்டளை வந்திருக்கிறது’

  எப்பொழுதும் போலத்தான் அன்று காலை எழுந்தேன். வேலையா வெட்டியா… தாத்தா சம்பாதித்து வைத்ததே இன்னும் பல தலைமுறைக்கு போதும் என்று நினைத்திருந்த வேளையில் என் அப்பாவின் ஊதாரிதனத்தால் நான் திருமணம் செய்து கொண்டு பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு அந்த சொத்துக்கள் வருமா என்றெல்லாம் நான் யோசித்ததே இல்லை… என் அப்பாவின் பாதிப்பு எனக்கு இல்லாமலா போகும்… அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வாழ்க்கையை அனுபவித்தேன். 

என்னுடைய கவாஸாகி நிஞ்சா ZX-14R பைக்கை எடுத்துக் கொண்டு ஊர் சுற்றத் துவங்கினேன்..  வீட்டிலிருந்து 20 கிலோ மீட்டரில் மலை மேல் செல்லக்கூடிய சாலை ஒன்று உண்டு.. அதில் பைக்கை ஓட்டுவதே ஒரு கிளர்ச்சி… நான் இயற்கையை ரசிக்க கூடிய கலைஞன் அல்ல… இந்தக் கிளர்ச்சி என்னுடைய தான்மையின் வெளிப்பாடு…. வளைந்து வளைந்து செல்லும் சாலையில் ஆங்காங்கே இருக்கும் 60 கிலோ மீட்டர் வேகத்தட்டுப்பாடு பலகைகளை அகங்கார சிரிப்புடன் எப்போதும் 100 கிலோ மீட்டருக்கு மேலான வேகத்திலேயே கடந்திருக்கிறேன்.. 

  அதுவரை அதிர்ஷ்ட தேவதை என்னுடனே இருப்பதாக முட்டாள்தனமாக என்றுமே யோசித்ததில்லை… என்னுடைய பைக் ஓட்டும் திறமை தான் எல்லாமே என்று நினைத்தேன். அந்த மலைப்பாதையில் இருக்கும் ஒரு வளைவு எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று… அன்றும் 105 km/hr மேலான வேகத்தில் அந்த வளைவை கடக்க முற்படும்போது, அந்த நொடியில் தான் கண்டேன்… அந்தப் பாதையில் இருந்த ஒரு சிறிய கருங்கல்லின் மேல் என் பைக் ஏற……

    பைக் இல்லாமலேயே இவ்வளவு வேகமாக என்னால் செல்ல முடியும் என்று நினைத்தும் பார்த்ததில்லை…

அதிவேகமாக ஜப்பானின் புல்லட் தொடர் வண்டியில் (ரயில் என்பது தண்டவாளம் என்பதை புரிந்து கொள்ளாமல் அது தொடர் வண்டி என்ற அர்த்தத்தில் வழக்காடப்படுகிறது) செல்வது போல் சென்றேன்.. சென்றேனா அல்லது இழுத்துச் செல்லப்பட்டேனா.. அதை யோசிப்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் நேரமில்லை….. எங்கும் அற்புதமான பொன்னிறமான ஒளி.. என்ன இது?..  மிக மிக வித்தியாசமான நிலப்பரப்பு.. பச்சை பசேல் என்ற … இல்லை இல்லை இது வேறு மாதிரியான ஒளிரும் பச்சையாக இருக்கிறது… இங்கு காணப்படும் நிறம் என் வாழ்நாளில் கண்டதே இல்லை.. பொதுவாக பொன்னிறமாக தெரிந்த ஒளி ….  மேல் வானத்தைப் பார்க்கும்போது பலப்பல வண்ணங்களில் தெரிய… இங்கு காணப்படும் எந்த ஒரு வண்ணமும் இதுவரை வாழ்நாளில் காணாத வண்ணமாக இருந்தது.. 

  அந்நேரத்தில் லேசான பனிமூட்டம் போல் தெரிய, அது மெல்ல மெல்ல என்னை நோக்கி வருவதை உணர்ந்தேன். எனக்கு பயமோ அல்லது நடுக்கமோ வரவில்லை… மாறாக அதை எதிர்நோக்கி காத்திருந்தேன்..  காத்திருந்தது வீண் போகவில்லை. ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியுடன் அந்தப் பனிமூட்டத்திலிருந்து வெளியே வந்த உருவத்தைப் பார்த்தேன்.. ஆமாம் அது முன்பே மறைந்த என் தாத்தாவின் உருவம்.. அவர் பனிமூட்டம் போன்ற ஒரு ஒளியின் நடுவில் இருந்தார்.

  என்னைப் பார்த்தவுடன் ஒரு லேசான புன்முறுவல் பூத்தார்… நான் ஏதோ கேட்க நினைத்தேன், வார்த்தைகள் வெளிவரவில்லை. 

அதற்குள் அவரே, ‘ உனக்கான நேரம் இது இல்லையே ஏன் வந்தாய்…. ‘ என்று கேட்டது போல் தெரிந்தது..

ஏன் இப்படி கேட்கிறீர்கள், எனக்கென்ன தெரியும் என்று கேட்க நினைத்தேன்.. எந்த வார்த்தைகளும் என் வாயிலிருந்து வரவில்லை. சற்றென்று அவர் மறைந்தார். ஏன் மறைந்தார் என்று யோசிப்பதற்குள் மிகப்பிரமாண்டமான ஒரு ஒளி தோன்றியது.. எனக்கு பிரமிப்பாக இருந்தது… இவ்வளவு பிரமாண்டமான பேரொளி இது. இருப்பினும் ஏன் கண்கள் கூசவில்லை என்று தெரியவில்லை. என் ஐம்புலன்கள் அல்ல… எனக்குத் தெரியாத எல்லா புலன்களும் ஒருமித்த நேரத்தில் அடங்கி ஒடுங்கின.. பயத்தால் அல்ல… ஒரு மயான அமைதியால்… மயான என்று கூறுவது தவறு… ஒரு தெய்வீக அமைதியால்… அப்போது தான் கவனித்தேன்.. ஐம்புலன்கள் என்று ஏதேதோ உளறினேனே கவனித்துப் பார்த்தால் எனக்கு உடலே இல்லை… கண்களும் இல்லை… இருந்தாலும் என்னால் எல்லா திசைகளிலும் பார்க்க முடிந்தது.  அந்த பேரொளியிலிருந்து ஒரு பிரம்மாண்டத் திரை போல் தெரிய… அதில் என் வீட்டு சமையலறையில் என்னுடைய அம்மா அழுது கொண்டிருப்பது தெரிந்தது… எனக்கு நெஞ்சம் எல்லாம் பதறியது… ஏன் அழுகிறார்கள் என்று நினைக்கும் போதே.. அப்போது அவர் மனதில் ஓடிய எண்ணங்கள் எல்லாம் எனக்கு புரிந்தது. அவர் அழுததுக்கான காரணம் என் அப்பாவின் ஊதாரி தனமும், என்னுடைய தான்தோன்றித்தனமும். என்னை கரும்புச்சாறு பிழியும் இயந்திரத்தில் விட்டுப் பிழிந்தது போல் இருந்தது… சற்றென்று காட்சி மாறியது, அது இரவு, அம்மா தூங்குவது போல் தெரிந்தாலும் லேசான அசைவுகள்.. உற்றுப் பார்க்கும்போது தெரிகிறது வெளியே சத்தம் வராமல் அழுது கொண்டிருக்கிறார் என்று.. எனக்கு இதயமே இல்லை… இருப்பினும் 500க்கு மேல் துடிப்பு இருப்பது போல…. வேகமாக ஓடியது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது..

அவர் ஏன் அழுகிறார் என்றும் எனக்கு புரிந்தது. அதுவும் என்னை பற்றி தான், நான் உருப்படாமல்  தான்தோன்றித்தனமாக ஊரை சுற்றிக் கொண்டிருப்பதும்.. ஊதாரித்தனமாக என் அப்பாவைப் போல் செலவு செய்வதும்… அதற்கு மேலும் அவர் நினைத்தது எனக்கு புரிந்தது.. எப்பொழுதுதான் எனக்கு புத்தி வருமோ, எப்பொழுதுதான் தாத்தா சொத்தை நம்பாமல் ஒரு வேலைக்கு செல்வேனோ, சென்று எனக்கென்று ஒரு குடும்பம் அமைத்துக் கொள்வேனோ என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தார். எனக்கு உடல் இல்லை என்றாலும் பதறியது… இனி ஒரு போதும்  நான் பழைய வாழ்க்கை வாழ கூடாது என்று நினைத்தேன்…  என்ன முட்டாள்தனமான நினைவு… நான் எங்கே இருக்கிறேன் என்றே புரியவில்லை … எனக்கு உடலே கிடையாது.. அப்படி இருக்க நான் எப்படி இனி அம்மா நினைப்பது போல் நன்றாக வாழ முடியும்? அப்போது தெரிந்தது ஒரு உருவம்… தெரிந்தது போல் தெரிந்தது…. தெரிந்ததா இல்லை அப்படி தெரிகிறதா என்று புரியவில்லை.. அந்த உருவத்தில் இருந்து எந்த ஒரு சப்தமும் வரவில்லை… நான் என்ன செய்தேன்… என்னால் என்ன செய்ய முடிந்தது… ஒன்றுமில்லை… நான் என் கட்டுப்பாட்டிலேயே இல்லை. அந்த உருவம் என்னை அதை நோக்கி உற்றுப் பார்க்க வைத்தது… அடுத்த வினாடி எனக்கு சப்த நாடியும் அடங்கி விட்டது…. அப்பா, என் அப்பனே ஞான பண்டிதா… நீயா அது? 

   நான் நினைப்பது அந்த உருவத்திற்கு… தவறு மன்னிக்கவும். எதிரே நின்ற முருகனுக்கு எப்படி தெரிந்ததோ தெரியாது….

   நீ என்னை முருகன் என்று நினைத்தால் நான் முருகன்.. நீ யாராக நினைப்பினும் அவரே நான், அதுவே நான்…

   எனக்கு புரியாமல் இருந்தது எல்லாம் புரிய ஆரம்பித்தது… இந்த மாபெரும் பேரொளி …  தனிப் பெரும் கருணையாக காட்சி தருவது கடவுளே என்று புரிந்தது…. எனக்கு கண்கள் இல்லை என்றாலும் கண்ணீர் தழும்பி வழிந்தது போல் இருந்தது…  ஆத்மாவே, பிரபஞ்சமே, தனிப்பெரும் கடலே உன்னை எனக்குத் தெரிந்த, நான் அறிந்த முருகனாகவே வழிபடுகிறேன்… என்னை ஏற்றுக் கொள்…எனக்கு விமோசனம் கொடு… மனம் உருகி நினைத்துக் கொண்டு நின்றிருந்தேன்.

  கடவுள் சொல்லாமல் சொன்னார், ‘நீ செய்ய வேண்டிய கடமைகள் இன்னும் உள்ளது.. சென்று திரும்பி வா’

    தான் தோன்றித்தனமாக நடப்பதில்லை என்று முடிவெடுத்தும் அசுர வேகத்தில் ஜிவ் என்று எங்கோ சென்று கொண்டிருந்தேன்.. 

   அடுத்த நொடி… ஒரு மருத்துவமனையில் யாரோ ஒருவரை அவசர அவசரமாக, அவசர சிகிச்சை பிரிவு அறைக்குள் அழைத்துச் செல்வதை கண்டேன்.. அது யாராக இருக்கும் என்று தெரியவில்லை..  அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் வேகமாக அந்த ஒருவரை அறுவை சிகிச்சை படுக்கைக்கு அவரை அழைத்து வந்த இருவரின் உதவியோடு மாற்ற…  இரு செவிலியர்கள் அங்கு மீண்டும் ஓடிக் கொண்டிருந்தனர். அவரின் உடலில் அங்கும் இங்கும் சில அவசர சிகிச்சை கருவிகளை பொருத்தி அதை அங்கிருந்து மானிட்டரில் கனெக்ட் செய்து பார்த்தனர்… மருத்துவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..

 ‘ உடல் இன்னும் வெப்பமாகத்தான் இருக்கிறது… முயற்சி செய்வோம்…’

என்று ஒரு மருத்துவர் மற்றொரு மருத்துவரை பார்த்து கூற.. அவரும் தலையசைக்க…

சில நிமிடங்கள் முயற்சி செய்தனர்… பலன் ஏதும் கிட்டாமல் இருந்ததால்.. ஒரு மருத்துவரை தவிர மற்றவர்கள் அறையை விட்டு வெளியே செல்ல…

அந்த மருத்துவரோ அங்கிருந்து திரை மறைவிற்கு செல்வதை பார்த்தேன்..

   சடார் என்று அந்த உடலுக்குள் நான் ஈர்க்கப்பட்டு அந்த உடல்…. நான்…. அதிர்ச்சி அடைந்து எழுந்தேன்…

   அந்த சத்தத்தை கேட்டு, திரை மறைவுக்குச் சென்ற அந்த மருத்துவர் அலறி அடித்துக் கொண்டு என்னை காண.. சற்று நேரம் பேய் அறைந்தது போல் இருந்தார்.

 ‘ என்ன டாக்டர்,  நான் எங்கே இருக்கிறேன்?’

 அவர் பதில் சொல்ல தடுமாறி, ‘ நீங்கள் சில நிமிடங்களுக்கு முன்பு இங்கு அழைத்து…. எடுத்து வரப்பட்டீர்கள்’ என்று கூறினார்.

 ‘எடுத்து என்றால்?….’

அவர் தடுமாற்றுத்துடன்… ‘எப்படி சொல்வது.. மன்னிக்கவும்.. நீங்கள் இறந்துவிட்டதாக நினைத்தோம்’

  எனக்கு ஓரளவு புரிந்து விட்டது….

‘ ஆமாம் இறந்து தான் இருந்திருப்பேன்… சில நிமிடங்களுக்கு முன்பு நான் கடவுளை கண்டேன்’

அவர் சட்டென்று கோபம் உற்றார்..

‘ என்ன முட்டாள்தனமாக பேசுகிறீர்கள்?.. மருத்துவத் துறையில் இதெல்லாம் சகஜம்தான்.. சில சமயம் இதயம் நின்றுவிடும்.. நாங்கள் முயற்சி செய்து மறுபடி இயக்க வைத்து விடுவோம்’

  ‘ இல்லை டாக்டர், நான் சொல்வதை கொஞ்சம் கேளுங்கள்..’ என்று அவரிடம் கெஞ்சாத குறையாக கேட்க.. அவரோ சரி சொல் என்பது போல என்னை பார்த்தார். 

  நான் நடந்ததை கூறினேன்..

 அவர் இது பைத்தியக்காரத்தனம் என்று சிரித்து விட்டு… சில சமயங்களில் மூளை கோளாறால் அப்படி தெரிவது உண்டு என்றார்.. அவரின் இந்த பேச்சில் அதீத தான்மை தெரிந்தது…

நான் சொல்லக்கூடாது என்று தான் இருந்தேன்.. என்னால் பொறுக்க முடியவில்லை… ஆம்புலன்ஸில் இருந்து அழைத்து வரப்பட்டது… அதை நான் பார்த்தது எல்லாவற்றையும் கூறி பிறகு…

 ‘ எல்லோரும் சென்று விட்ட பிறகு நீங்கள் திரை மறைவில் அபின் போன்ற ஏதோ ஒன்றை பயன்படுத்தியதை கண்டேன்’ என்றேன். 

  அந்த மருத்துவர் ஆடிப் போய்விட்டார்… பெரிய பதட்டத்துடன்.. ஒரு ஊசியில் மருந்தேற்றி எனக்கு செலுத்தினார்.

  நான் கண் விழித்து பார்த்தேன்..

இது வேறொரு மருத்துவமனையாக தெரிந்தது… அருகில் இருந்த மருத்துவரிடம் நான் எங்கே இருக்கிறேன் என்று கேட்டேன்..

அதற்கு அவர், ‘ விபத்தினால் உங்கள் மனநிலை கொஞ்சம் பாதிக்கப்பட்டு இருக்கிறது… இதெல்லாம் சகஜம் தான்.. இன்னும் சில நாட்களில் சரியாகிவிடுவீர்கள்’ என்று சொன்னதும் எனக்கு புரிந்து விட்டது, நான் இருப்பது மனநோய் சிகிச்சை மருத்துவமனையில் என்று. 

எனக்கு தூக்கி வாரி போட்டது…

அவரிடம் எனக்கு மன நோய் ஏதும் இல்லை என்றும், மிகத் தெளிவாக இருப்பதாகவும் கூறினேன். 

 அவர் மிகத் தன்மையாக… ‘ எங்களுக்கும் தெரியும், சில நாட்கள் தான்.. மருந்து மாத்திரை கொடுக்கிறோம்.. எல்லாம் சரியாகிவிடும்’ 

 ‘எனக்கு எந்த மாத்திரைகளும் தேவை இல்லை நான் நன்றாக இருக்கிறேன்’ என்று அவசர கதியில் சற்று கோபமாக கூறினேன். அவர் ஏதும் பேசாமல் அறையை விட்டு வெளியே சென்று  கதவுகளை வெளிப்புறமாக தாழிட்டார். சில நாட்களுக்குப் பிறகு தான் தெரிந்தது, நான் மன நோயால் பாதிக்கப்பட்டவன் என்றும்.. என்னிடம் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவமனையின் மருத்துவரும் அவருடன் மற்ற மருத்துவர்களும் சேர்ந்து அளித்த சான்றிதழ் படித்தான் எனக்கு இந்த நிலைமை என்று. 

  நாட்கள் கடக்க… வாரங்கள் கடக்க… மாதங்கள் கடக்க… வருடங்களும் கடக்க.. இதோ 8 வருடங்களுக்குப் பிறகு மனநோய் மருத்துவமனையின் தலைமை மருத்துவரிடம் நின்று கொண்டிருக்கிறேன்.. 

 ‘மகிழ்ச்சி தானே சத்தியன் உங்களுக்கு?’ 

நீண்ட உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டது போல ஒரு வெற்றுப் பார்வையுடன் அவரைப் பார்த்தேன்..

 அவர் புரிந்து கொண்டார்… அதே நேரத்தில்.. அவசர அவசரமாக யாரோ ஒருவர் ஓடி வந்து அந்தத் தலைமை மருத்துவரிடம் ஏதோ கூற..

‘மிஸ்டர் சத்யன் உங்களைக் காண டாக்டர் போஸ் வந்திருக்கிறார்’ என்றார். 

‘ எனக்கு டாக்டர் போஸ் என்று யாரையும் தெரியாது… யார் அந்த டாக்டர்?’ 

‘ சாரி நான் விளக்குவதற்கு பதிலாக நீங்களே அவரை சந்தியுங்கள்’… என்று என் பதிலுக்கு காத்திராமல் அவரை அழைத்து வரச் சொன்னார். 

 அவரும் வந்தார்…

 நீண்ட தடுமாற்றத்திற்குப் பிறகு என் நினைவுக்கு வந்தது… டாக்டர் போஸ் வேறு யாரும் இல்லை அந்த அபின் டாக்டர்… என்னுடைய எட்டு வருட நரகத்திற்கு காரணமானவர்…  நான் முருகனை சந்தித்தது மனதில் மின்னல் போல் வந்து சென்றது…

  நான் ஏதும் பேசாமல் அவரை நோக்கி, ‘ நீங்கள் ஏதும் பேசத் தேவையில்லை உங்களை மன்னிக்கிறேன்’ என்று கூறி அதற்கு மேலும் அங்கு நிற்க மறுத்து என் வீட்டிற்கு செல்ல ஏற்பாடு செய்யும்படி கூறினேன்.

   இது எல்லாம் மின்னல் வேகத்தில் மனதில் வந்து செல்ல… 

  அந்த வாசகருக்கு கையெழுத்து விட்ட பிரதியை கொடுத்து விட்ட பிறகு நிமிர்ந்து அடுத்த வாசகரை பார்த்தால், அங்கே போஸ் நின்றிருந்தார்.

  


 

 
 
bottom of page