top of page

செல்லரிக்கும் உன்னத மரம்!

  • melbournesivastori
  • 3 days ago
  • 11 min read

முதல் முறையாக சென்னை வருகிறேன். கண்ட கனவுகள் பல… காண இருப்பதில் அவைகள் கைகூடுமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

     என்னுடன் பயணித்த பயணிகளுடன் சென்றேன்.. இந்திய குடியுரிமை பெற்றவர்களுக்கு பயணியர் வருகை விண்ணப்பம் ஏதும் பூர்த்தி செய்யத் தேவையில்லை… நான் பூர்த்தி செய்ய வேண்டும்.. எளிதான கேள்விகள் தான்.. அதையும் என் பாஸ்போர்டுடன் எடுத்துக்கொண்டு வெளிநாட்டவருகான சுங்க பரிசோதனை வரிசையில் நின்றேன். 

      சொல்ல மறந்து விட்டேன்… நான் ஜிம்மி கமினோ, ஜப்பானியன். பிறந்தது இவ்வாக்கியில் ஆனால் வளர்ந்தது டோக்கியோவில். உயர்நிலைப் பள்ளியில் வித்தியாசமாக இருக்கட்டும் என்று விருப்பப்படமாக தமிழை எடுத்தேன்.. புதைக்குழி என்று சொல்ல வந்தேன் ஆனால் அது தவறு… இது கருப்பு துளை போல் என்னை ஈர்த்து தமிழின்பால் வெறிகொள்ள செய்து தீவிர ஆராய்ச்சி செய்ய வைத்தது. 

    திருவள்ளுவரின் காலத்தை போகிற போக்கில் சுமாராக 2100 ( கிமு 100) என்று நிர்ணயித்தார்கள்.. அந்த மகான்; அந்த சித்தன்; அந்தப் பெரும் கல்வியாளன் எதைப் பற்றி எழுதாமல் விட்டான்? இவர்களெல்லாம் சொல்வது போலவே சுமார் இரண்டாயிரத்து 150 வருடங்களுக்கு முன்பு இருந்ததாகவே வைத்துக் கொள்ளலாம்… அவ்வளவு அற்புதமான திருக்குறள்களை இயற்ற,  எழுத எவ்வளவு அறிவு இருந்திருக்க வேண்டும், அந்த அறிவினைப் பெற அக்காலத்திய கல்வி கட்டமைப்பு எப்படி இருந்திருக்க வேண்டும்... அந்தக் கல்வி கட்டமைப்பை அமைக்க  எவ்வளவு அற்புதமான சமுதாய கட்டமைப்பு இருந்திருக்கவேண்டும்? இவைகளெல்லாம் உரு பெற சில ஆயிர வருடங்களாவது எடுத்திருக்கும். இப்போது நினைத்துப் பாருங்கள் பண்டைய தமிழ் நாகரிகம் எவ்வளவு ஆயிரக்கணக்கான வருடங்கள் கடந்து, சுமந்து வந்தது என்று. 

 வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடியவர்கள்,

 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்று சொன்னவர்கள்,

 எம்மதமும் சம்மதம் என்று மதத்தை தாண்டி மனிதத்தை போற்றியவர்கள்!

 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று சொன்னவர்கள்!

 இருந்த இடத்திலிருந்து தூரதேசம் காண்பேன் ( இது அமெரிக்காவும் ரஷ்யாவும் பலப்பல ஆண்டுகள் கடுமையான ஆராய்ச்சிக்குப் பிறகு கண்டுபிடித்த ரிமோட் வீவிங் தான் ) என்றார் திருமூலர்.

 முதலில் தோன்றியது ஒரு செல் உயிரினம் என்று மேலைநாடுகளின் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுவதற்கு முன்பே அன்றே சொன்னார்  தொல்காப்பியர்.

 பகுத்தறிவு எல்லா உயிரினங்களுக்கும் உள்ளது என்ற புரட்சிக் கருத்தை சொன்னவன் தலைசிறந்த தமிழ் மண்ணின் மைந்தன் அதே தொல்காப்பியர்!

 முருகன் தோற்றுவித்த மொழியை; இனத்தை; வரலாற்றை; நாகரீகத்தை அளவிட, கணக்கிட மானிடர்க்கு ஏது அறிவு?  அன்பே சிவம் என்று போற்றிய  நாகரீகம் கலாச்சாரத்தின் அடையாளம்!

     இவைகளையெல்லாம் நான் ஆராய்ந்து அறிய, அறிய போன ஜென்மத்தில் நான் தமிழனாக பிறந்திருக்க இருந்திருக்க வேண்டும் என்று உறுதியாக நம்பினேன்… இல்லையென்றால் இவ்வளவு பற்றுதலோடு வெறி கொண்டு தமிழை நேசிக்க வேண்டிய உந்துதல் எனக்கு வந்திருக்காது என்று பலமாக நம்பினேன். 

    எனக்கு தமிழை தெரிந்த அளவிற்கு தமிழ்நாட்டைத் தெரியாது.. கணக்கில் அடங்கா அற்புதங்களைக் கொண்ட தமிழ்,  தமிழ் கலாச்சாரம் இப்பொழுது எப்படி இருக்கிறது என்பதை காணவே புறப்பட்டு வந்தேன். அந்தப் பழம்பெரும் கலாச்சாரத்தின் தொன்மையில் இருந்து விடுபட விரும்பாமல் தற்காலத்திய தமிழ்நாட்டைப் பற்றி எந்த ஒரு செய்தியையும் பார்க்காமல், படிக்காமல், கேட்காமல் ஆச்சரியத்துடன் அனுபவிக்க கிளம்பி வந்து விட்டேன். தமிழ்நாட்டில் எந்த ஒரு உதவி தேவை என்றாலும் திரு முகுந்தன் அவர்களை அணுகவும் என்று அவருடைய அறிமுகத்தை கைபேசி வாயிலாக டோக்கியோவில் என் தமிழ் நண்பன் ராகவன் அறிமுகம் செய்திருந்தார்… திரு முகுந்தன் அவர்களுக்கு நான் வரப்போகிறேன் என்ற செய்தியை மட்டும் தெரிவித்து இருந்தேன், ஆனால் எப்போது என்று தெரிவிக்கவில்லை…யாருக்கும்  அதிக தொந்தரவு கொடுக்க நான் விரும்புவதில்லை… தேவைப்படும்போது தொடர்பு கொள்ளலாம் என்று இருந்து விட்டேன். 

     எவ்வளவு மேன்மையான கலாச்சாரம் நமது…. உலகிற்கு எவ்வளவோ  தத்துவங்களை போதித்த தத்துவ ஞானிகளை உருவாக்கிய நமது வாழ்வியல்…. அரசாங்கம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தாமல் அறிவுறுத்திய கரிகால் சோழனின் ஆட்சி முதல் ராஜேந்திர சோழனின் ஆட்சி வரை நமக்கு அளித்த அரசியல்..  தெளிந்த நீரோடை போல் ஓடிக்கொண்டிருந்த இந்த அரசியல் நீரோடையை கானல் நீர் போன்று காட்சிப்படுத்திய இப்போதைய அரசியல் தமிழ்நாட்டிற்கு வந்த புற்றுநோய் .. கடல் போன்று விரிந்து பறந்து இருக்கும் நம் வரலாற்றை ஆழ்ந்து ஆராய முற்படுவதற்கு பதிலாக இந்தப் பாழாய் போன தற்கால அரசியலும், அரசியல்வாதிகளும் நம்மை பாழ்படுத்த ஒரு ராஜேந்திர சோழன் உருவாக மாட்டானோ என்று நினைப்பில் இருக்கும்போது……

   ‘முகுந்தா, கொஞ்சம் வந்து இந்த கேஸ் பாட்டிலை  இணைத்து தா’ என்று அம்மாவின் குரல் கேட்டு ஒரு பெருமூச்சு விட்டு.. சமையலறை நோக்கி சென்றான் முகுந்தன்.

     முகுந்தன் எல்லோரையும் போன்று தமிழ் பற்று உண்டு என்ற முகமூடி அணிந்து கொள்பவன் அல்ல… உண்மையிலேயே தீவிர பற்றுதல் கொண்டவன். அவன் சிந்தனையே வேறுபட்டிருக்கும்..

   இக்காலத்து இளைஞர்கள் கணினியை பயன்படுத்த தெரிந்த அளவிற்கு அவர்களுடைய சொந்த மூளையை பயன்படுத்த தெரியவில்லையே என்ற அவனுடைய வருத்தம் யாருக்கும் புரியப்போவதில்லை….

  முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி..  இந்த இயந்திர  மயமாக்கப்பட்ட பணத்தாட்சி நடைபெறும் உலகில் பலருக்கு அது புரியாது.. உயிர் நேயம் உள்ளோருக்கு  மட்டும் தான் அது புரியும்.. பொட்டல் வெளி பயணத்தில்…கொடூர வெயிலில் தான் வைத்திருக்கும் ஒரே ஒரு தண்ணீர் பாட்டிலை சாலை ஓரத்தில் தண்ணீர் இன்றி தவிக்கும் ஒரு நாய்க்கு கொடுப்போருக்கு மட்டும் தான் அந்த மனநிலை புரியும்….

   பகுத்தறிவை கடவுள் மறுப்பு என்று பகுத்தறியாமல் அறிந்து கொண்டிருக்கும் இக்காலத்திய தற்குறிகளுக்கு அவனை புரியாது…

     ஆன்மீகத்தை கடவுளை அணுகும் முறை என்று தெரியாமல், இந்து மதத்திற்கு மட்டும் சொந்தம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் எல்லா மதத்தினருக்கும் அவனை புரியாது…

     ஜனநாயகம் என்பது நல்லதோ கெட்டதோ அல்ல, அது பெரும்பான்மையானவர்களின் முடிவு என்பதும் புரியாமல் ஜனநாயகம் நாகரீகத்தின் உச்சம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் 99.999999 சதவிகித மக்களுக்கு அவனை புரியாது….

   ஜனநாயகம் மேன்மையானது என்று நினைப்பவர்கள் அதனால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி செய்யும் பெரும்பாலான நாடுகளின் ஆட்சியாளர்களை நினைத்துப் பார்த்தாலே ஓரளவிற்கு புரியும் என்று அவன் என்றுமே யாருக்கும் விளக்கம் முற்பட்டதில்லை….

   தேசப்பற்று என்பது கண் மூடித்தனமாக ஆட்சியாளர்களை ஆதரிப்பது என்பது மிகவும் ஆபத்தான ஒன்று… அதுவல்ல தேசப்பற்று.. எந்த ஒரு முடிவை எந்த ஒரு ஆட்சியாளர்கள் எடுத்தாலும் அது தேச நலனுக்கு, மக்களின் நலனுக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்று நினைப்பதே தேசப்பற்று என்று நினைத்தான்… இந்த ஒரு சிந்தனை மற்றவர்களுக்கு புரியாது..

    முருகன் தோற்றுவித்த தமிழில் தோன்றிய அகத்தியன் முதல் நம் சம காலத்து அப்துல் கலாம் வரை எல்லோரையும் அவரவர் பெயர்களிலேயே அழைக்கும் நாம் ஒரு சிலரை மட்டும் பட்டப்பெயரிலேயே அழைப்பது முற்போக்கு எனும் பிற்போக்கு என நினைத்தான்…

          அம்மாவிற்கு கேஸ் பாட்டில் இணைத்து கொடுத்துவிட்டு வேறு ஏதாவது உதவி தேவையா என்று கேட்டான்….

   ‘வேணாம்பா நீ ஏதோ வேலையாக இருக்கிறாய்…’

    ‘இல்லம்மா, பரவால்ல சொல்லுங்க’

     ‘ முடிந்தால் நீ இன்று என்ன சாப்பிட பிடிக்குமோ தோட்டத்துக்கு சென்று அந்த காய்கறிகளை பறித்துக் கொண்டு வா.’

       ‘அதுக்கு என்னம்மா இதோ பறித்துக் கொண்டு வந்து அரிந்தும் கொடுக்கிறேன்.’

     முகுந்துனுடைய வீடு இரண்டு கிரவுண்டு வீடு… பின்புற தோட்டம் சுமார் ஒரு கிரவுண்டுக்கு மேல் இருக்கும். முகுந்தனுக்கு முடிந்தவரை எல்லாவற்றையும் தானே விளைவித்து உண்ண வேண்டும் என்ற கொள்கை…

    எல்லோருக்கும் ஒருவித இயற்கை உணவு தற்சார்பு வேண்டும் என்று நினைப்பவன்…  ஆனால் அதை யாரிடமும் அறிவுறுத்தி சொல்ல விரும்பாதவன். எந்த ஒரு நாட்டிற்கும் வளர்ச்சி மிக இன்றியமையாதது ஆனால் அதற்காக இயற்கையை சார்ந்து வாழும் முறையை கைவிடுவது அவனால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எவ்வளவுதான் வளர்ச்சி அடைந்த நாகரிக உலகில் அதி நாகரிக நகரத்தில் வாழ்ந்தாலும் பதப்படுத்தப்பட்ட பெரிய தொழில் முறையில் உருவாக்கப்பட்ட உணவுகளை அன்றாடம் உண்பது அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை… இடமே இல்லை என்றாலும் இருக்கும் இடத்தில் சிறுசிறு தொட்டிகளில் சில கீரை வகைகள், கொத்தமல்லி, புதினா போன்ற செடிகளை வளர்க்க பெரும்பாலும் யாரும் ஏன் முன் வரவில்லை என்ற ஏக்கம் அவனில் இருந்தது. 

     எங்கும்  இயந்திர மயமாக்கல், எல்லாம் தொழிற்சாலை மயமாக்கல்…. 

இது ஒரு சாபகேடாக துவங்கி சொர்க்கத்தையும் தொழிற்சாலை மயமாக்க நினைத்து முடிவில் நரகத்தையே தொழிற்சாலை மயமாக்கி விட்டார்கள் என்று ஆணித்தரமாக நம்பினான்.  பெரிய மால்கள், பெரிய திரையரங்குகள், பெரிய விளையாட்டு அரங்குகள், பெரிய உணவு விடுதிகள்..  ஆப்பிள் போன்கள், ஆண்ட்ராய்டு போன்கள், ஆப்பிள் மேப்புகள், கூகுள் மேப்புகள் இவையெல்லாம் இருக்கும் இடத்தில் சொர்க்கத்தை காண்கிறோம் என்று நினைப்பவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள் என்று வருந்தினான். 

   இயற்கை சூழ்நிலையிலேயே வாழ்ந்து ஒரு மாற்றத்திற்காக கேளிக்கையை நாடுவதை விடுத்து, கேளிக்கையே வாழ்க்கையாக வாழ்ந்து ஒரு மாற்றத்திற்காக இயற்கை சூழ்நிலையை நாடி நவீன உலகத்தில் ஃபார்ம் ஹவுஸ் என்று சொல்லப்படும் தோட்ட வீட்டிற்கு செல்வது எனும் மனோநிலை இவனுக்கு புரியாது….

   பயணக் களைப்பில்  அன்று இரவு ஓய்வெடுத்துக் கொண்டு மறுநாள் சிங்கார சென்னையை சுற்றிப் பார்க்க, பொது பேருந்தில் பயணம் செய்ய துவங்கினேன் நான் (ஜிம்மி கமினோ)…. நடுத்தர வயதினரும், அந்த வயதினை கடந்தவர்களும் ஏதோ அவசர கதியில் ஓடிக்கொண்டிருக்க… பள்ளி மாணவர்கள் மிதிவண்டிகளை நிறுத்திவிட்டு அதன் மேல் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருக்க…. கும்பல் கும்பலாக இளைஞர்கள் தேனீர் கடைகளில் தேனீர் அருந்திக் கொண்டே எதையோ சுவாரசியமாக விவாதித்துக் கொண்டிருக்க…. ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் சில இளைஞர்கள் எதற்காகவோ இந்த காலை 10 மணி அளவிலும் தூங்கிக் கொண்டிருக்க… அலுவலகத்திற்கு செல்பவர்கள் இந்தப் பத்து மணி அளவில் பேருந்தை பிடித்து எப்போது தான் அலுவலகத்திற்கு சென்று வேலையை துவங்கப் போகிறார்களோ என்று இருக்க…       

 எனக்கு இதெல்லாம் பெரிய ஆச்சரியத்தை தந்தது… டோக்கியோவில் இந்த காலை 10 மணி அளவில் இந்த அனுபவத்திற்கு நேர் எதிர்மறையான அனுபவம் தான் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.

    சிங்கார சென்னையை சுற்றிப் பார்த்தபின் சிங்காரத்தின் பொருளையே தவறாக புரிந்து கொண்டோமோ என்று தடுமாறத் துவங்கினேன். எந்த நேரத்திலும் எங்கும் இளைஞர்கள் எதையோ விவாதித்துக் கொண்டிருக்க இவ்வளவு இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்களா இல்லை வேலைக்குச் செல்லாமல் இருக்கிறார்களா என்று புரியாமல் உண்மை நாகரிகத்தை நகரத்தில் தேட முடியாது…. நான் நினைத்துக் கொண்டிருக்கிற கலாச்சாரம் கிராமங்களில் இன்றும் இருக்கும் என்று நம்பி சென்னையில் இருந்தது போதும் என்று முகுந்தனை கைப்பேசியில் அழைத்தேன்.

  ‘ஹலோ முகுந்தன்,  ஜிம்மி கமினோ பேசுகிறேன், நான் நேற்று ஓய்வெடுத்து விட்டு இன்று சென்னையை சுற்றி பார்த்து விட்டேன்… நாளை உங்களை சந்திக்க வரலாமா? உங்கள்  வீட்டருகில் ஏதாவது ஒரு ஓட்டலில் எனக்கு அறை ஏற்பாடு செய்ய முடியுமா?’

   ‘ வருக! ஜிம்மி கமினோ. எங்கள் வீட்டிலேயே தங்கி கொள்ளலாம் வசதியாக தான் இருக்கும்… நானே உங்களை அழைக்க நினைத்தேன்… எங்கு தங்கி இருப்பீர்கள் என்று எனக்குத் தெரியாது, நீங்களும் தெரிவிக்கவில்லை…’

  ‘ மன்னிக்கவும், உங்களுக்கு வீணான சிரமம் கொடுக்க எனக்கு விருப்பமில்லை.. என்னால் முடியவில்லை என்றால் உங்களை கேட்டிருப்பேன்’ 

  ‘ அதற்கென்ன பரவாயில்லை… இரவே கிளம்பி வருகிறீர்களா இல்லை நாளை காலை கிளம்பி வருகிறீர்களா? எனக்குத் தெரிந்த நண்பரை அனுப்புகிறேன்’

   ‘ வேண்டாம் வேண்டாம், இன்று இரவு சென்னையிலேயே ஓய்வெடுத்துக் கொண்டு நாளை காலை சுமாராக ஒன்பது மணி அளவில் கிளம்பி வருகிறேன். நீங்கள் யாரையும் அனுப்ப வேண்டாம்.. நான்  பொது பேருந்துலேயே வருகிறேன், பொதுமக்களுடன் பயணம் செய்வது நல்ல அனுபவம் கிடைக்கும் என்று நம்புகிறேன் ‘

  ‘ இல்லை ஜிம்மி, ஏன் அந்த சிரமம்.’

 ‘ சிரமம் இல்லை முகுந்தன், எல்லாம் ஒரு அனுபவம் தான்’ 

   ‘ சரி, நாளை காலை நீங்கள் தங்கி இருக்கும் ஹோட்டலில் கேட்டால் அவர்கள் பேருந்து நிலையத்துக்கு ஆட்டோவில் அல்லது கால் டாக்ஸியில் அனுப்பி வைப்பார்கள்’

  ‘ சரி அப்படியே செய்கிறேன் நாளை உங்களை சந்திக்கலாம். எந்த பேருந்தில் வருகிறேன் என்று உங்களுக்கு தெரிவிக்கிறேன். இதோ உங்களிடம் பேசிக் கொண்டிருக்கும் இந்த நம்பர் தான் என்னுடைய கைபேசி எண்’

    மறுநாள் காலை 9 மணி பேருந்தில் இருந்து முகுந்தனுக்கு தகவல் தெரிவித்தேன்..

     பேருந்து நகர எல்லையை கடப்பதற்கு முன், என் இருக்கைக்கு  முன் இருக்கையில் இருந்த இளைஞன் ‘ தலைவா ‘ என்று  வெளியில் யாரையோ பார்த்து கத்த… அவர் யாராக இருக்கும் என்று அந்த திசையை நோக்கி பார்த்தேன்..  அங்கு யாரும் இல்லை ஒரு பத்து அடி  உயர பதாகையில் ஒருவர் படம் புதிதாக போட்டிருந்த மாலையுடன் இருந்தது. 

  ‘ யார் அவர்’ என்று அந்த இளைஞனைப் பார்த்து கேட்டேன். 

  ‘ ஊருக்கு புதுசா சார், உண்டாய்ல வேலை செய்து இருந்தா தெரிஞ்சிருக்கும் சார்.. அவருதான் எனக்கு, எங்களுக்கு எல்லாமே… அட்த்த வருஷம் அவருதான்… அவரு எதுவுமே செய்ய தேவையில்லை, ஒரு அஞ்சு வருஷம் உட்கார்ந்துட்டு போனாவே எங்களுக்கு போதும்‘

   யார் அவர் என்று தான் கேட்டேன்… எனக்கு ஒன்றுமே புரியவில்லை அந்த இளைஞனுடைய பதில்… மேலும் கேட்க விரும்பாமல் ஓஹோ என்று தலையாட்டிவிட்டு அமைதியாக இருந்து விட்டேன்.

   என் பக்கத்தில் அமர்ந்திருந்த இளைஞன் தர்ம சங்கடத்துடன் என்னை பார்த்து விட்டு  திரும்பிக்கொண்டார்.  பேருந்து நகரத்தை கடந்து பெருஞ்சாலையை அடைந்தது. ஒரு ஐந்து கிலோ மீட்டர் கூட சென்றிருக்காது ஏனோ நிற்க, என்னவென்று பார்த்தேன்..

மூன்று சுமோ சண்டை செய்பவர்கள் போல் பேருந்தில் ஏறாமல் அங்கேயே இருக்க நான்காவது ஒருவர் வெள்ளை சட்டையும் வெள்ளை வேட்டியும் அணிந்து கையில் ஒரு பணப்பையோ என்னவோ எடுத்துக்கொண்டு பேருந்தில் ஏறினார். ஏறினவர் முதல் இருக்கையிலே அமர்ந்து கொண்டார்.. அப்போதுதான்  கவனித்தேன் வெள்ளை சட்டையில் யாரோ ஒருவருடைய முகம் எம்ராய்டரி செய்யப்பட்டிருந்தது. இதை நான் கவனித்ததையும் பக்கத்திலிருந்த இளைஞன் கவனித்து  தலை தாழ்த்தி கொண்டார். ஓடுகிற பேருந்தை நடுவழியில் நிற்க வைப்பது தவறென்று பட்டது… இதுவும் ஒரு அனுபவம் தான் என்று ஏற்றுக் கொண்டேன். பேருந்து மேலும் ஒரு 15 நிமிடங்கள் கூட சென்றிருக்காது,  மறுபடியும் நிற்க அந்த வெள்ளை சட்டை இறங்கிவிட்டார். நடத்தினரோ வெறுப்பில்லாமல் மகிழ்ச்சியுடன் அவரை வழி அனுப்பினார்.

    ஜப்பானில் இவற்றையெல்லாம் நினைத்தும் பார்க்க முடியாது… 

    சன்னலின் வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.. பக்கத்திலிருந்த இளைஞன் சட்டை பையில் இருந்த கைபேசியை எடுக்க அந்த அசைவில் திரும்பினேன்..

  கைப்பேசியை துவங்கும் முன் இரு காதுகளிலும் கருவிகளை பொருத்திக்கொண்டு பிறகு கைபேசியில் காணொளியை காணத் துவங்கினார்..  அதை நான் காண்பது நாகரிகமாக இருக்காது என்று மீண்டும் சன்னலின் வழியே வேடிக்கை பார்க்க துவங்கினேன். 

  ஒரு நான்கு ஐந்து நிமிடங்கள் கடந்து இருக்கும்.. நான் திரும்பும் போது கவனித்தேன்.. அந்த காணொளியில் ஒருவர் உணர்ச்சி பூர்வமாக பேசிக் கொண்டிருக்க அதை அந்த இளைஞரும் உணர்ச்சி பூர்வமாக மற்றவர்களுக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் கேட்டுக் கொண்டிருக்க… ஐந்து விரல்களும் ஒன்றைப் போல் ஒன்று இல்லை என்று நினைத்துக் கொண்டேன்.  

   முகுந்தன் ஊருக்கு சென்று அடைந்தேன். அங்கு காத்திருந்த முகுந்தன் ராகவன் காட்டிய புகைப்படத்தில் இருந்தது போலவே இருந்தார்… என்னை கண்டுபிடிப்பது மிக மிக எளிது… நான் ஒருவன் மட்டுமே ஜப்பானியன்.

   ‘ஹலோ ஜிம்மி… உங்களை ஜிம்மி என்று கூப்பிடலாமா அல்லது மேற்கத்திய உலகத்தில் அழைப்பது போல மிஸ்டர் கமினோ என்று அழைக்கலாமா?’

   ‘ நண்பனுடைய நண்பன் என்னுடைய நண்பனே…. நீங்கள் ராகுவனுடைய நண்பன் அதனால் என்னுடைய நண்பரே. தயவு செய்து ஜிம்மி என்றே அழையுங்கள்.. மேற்கத்திய முறை இங்கு நமக்குத் தேவையில்லை’

   ‘ நன்றி ஜிம்மி, என்னுடைய பைக் எடுத்து வரலாம் என்று நினைத்தேன்.. லக்கேஜ் அதிகமாக இருக்கும் என்று ஆட்டோவில் வந்தேன்’ 

    ‘ஆட்டோ எனக்கு பழகி விட்டது,  நன்றாகத் தான் இருக்கிறது.’

  ‘ சென்னை எப்படி இருந்தது?’

  ‘ விரிவாக பிறகு சொல்கிறேன்… சொல்வதற்கு பதில் விவாதிப்பதற்கு நிறைய இருக்கிறது…’

 முகுந்தன் ஒரு வியப்பாக என்னை பார்த்தார். 

   நல்ல நாகரீகம் அடைந்த துணை நகரம்…. சுத்தமாக இருந்தது… ஒரு 20 நிமிட பயணத்திற்கு பிறகு முகுந்தன் வீட்டை சென்று அடைந்தோம்.

  ‘ வா தம்பி… மன்னிக்கவும், எனக்கு தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது.. ‘ என்று முகுந்தனின்  தாயார் என்னை வரவேற்றார். 

   ‘ அதற்கென்ன மா, எனக்கு ஓரளவுக்கு தமிழ் தெரியும்… நீங்கள் தமிழிலேயே என்னிடம் பேசலாம்

  ‘ ரொம்ப சந்தோஷம் தம்பி… நீங்க கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் இன்னும் அரை மணி நேரத்தில் நாம் மதிய உணவே உண்ணலாம்’ 

  ‘ஓய்வு எதுவும் தேவையில்லை எனக்கு.. நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.. நானும் நண்பரும் தோட்டத்திற்கு சென்று பேசிக் கொண்டிருக்கிறோம்’

  சரி என்று அவர் தலையாட்ட…

நானும் முகுந்தனும் பயணப் பைகளை வைத்து விட்டு பின்புற தோட்டத்திற்குச் சென்றோம்.

  தோட்டம் மிக அழகாக பராமரிக்கப்பட்டிருந்தது. இந்த தட்பவெட்ப நிலையில் வளரக்கூடிய எல்லா காய்கறிகளும், கீரைகளும் அங்கு விளைந்திருந்தது. முருங்கையின் அற்புத மருத்துவ குணங்களை கேள்விப்பட்டிருக்கிறேன்… இங்கு அந்த மரத்தில் எவ்வளவு காய்கள் பார்க்கவே பிரமிப்பாக இருந்தது. 

 ‘ என்ன முகுந்தன், இவ்வளவு முருங்கைக்காய்கள்… என்ன செய்வீர்கள்?’ 

  ‘ நாம் இயற்கை முறையில் விளைவிக்கும் காய்கறிகளை சுற்றத்தினற்கும், நண்பர்களுக்கும் அளிப்பதே பெரும் சுகம்… அவர்களும் அவர்கள் வீட்டில் விளையும் என்னிடம் இல்லாத மற்ற வகைகளை எங்களுடன் பகிர்வது பழைய பண்டமாற்று முறையை ஞாபகப்படுத்தும்’ 

  ‘ ஆமாம் பண்டைய முறை ஒருவித பொற்காலம் என்றே கூற வேண்டும்’

 ‘ ஆமாம் ஜிம்மி, சென்னை எப்படி இருந்தது?’ 

  ‘ பரவாயில்லை… நான்தான் ராஜ ராஜ சோழனின் காலத்திலேயே இருந்து விட்டேன் என்று புரிந்து விட்டது ‘

    முகுந்தன் புரிந்து கொண்டு சிரித்தார்… 

   ‘ நாங்கள் தான் இங்கு வாழ்ந்து கொண்டு, நொந்து கொள்கிறோம்….  நீங்களாவது இங்கு தங்கியிருக்கும் நாட்களை இனிமையாக கழித்து செல்லுங்கள்’

   ‘ உண்மை என்று ஒன்று உள்ளது அது கசப்பாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டியது காலம் நமக்கு கற்றுத்தரும் பாடம், அந்த கசப்பை மருந்தாக ஏற்று மீண்டு வருவது தான் ஆறாவது அறிவின் பயன்’

  ‘சரியாக சொன்னீர்கள்…. ஆனால் இங்கு அதை நடைமுறைப் படுத்த முடியவில்லை’

  ‘ஏன் அப்படி? உங்களால் முடிந்தால் சற்று விளக்கமாக சொல்லுங்கள்’

  ‘முகுந்த், அந்த தம்பியை கூப்பிட்டுக்கொண்டு வாப்பா’ என்று முகுந்தனின் அம்மாவின் குரல் கேட்டு இருவரும் மதிய உணவு உட்கொள்ள உள்ளே சென்றோம்.

    இயற்கை முறையில் வீட்டிலேயே விளைவிக்கப்பட்ட காய்கறிகளை கொண்டு செய்த சமையல் பிரமாதம்.. டோக்கியோவில் இந்திய உணவகங்களில் கூட இது போன்ற ருசியில் கிடைப்பதில்லை..   மதிய உணவு உட்கொண்ட பிறகு என்னை சிறிது ஓய்வெடுத்துக் கொள்ள சொன்னார். நானும் ஒரு அரை மணி நேரம் ஓய்வெடுக்க சென்றேன். இரண்டு நாள் களைப்பு சன்னலின் 

  வழியே வந்த புங்கைமர, வேப்பமர ஜில்லென்ற காற்று அரை மணி நேரத்துக்கு மேலாக தூங்க வைத்துவிட்டது. அலறி அடித்துக் கொண்டு எழுந்து முகம் கழுவிக்கொண்டு வெளியே வந்தேன்… 

    இங்கு வரும் பயணத்தின் போது என் பக்கத்தில் இருந்த இளைஞன் பார்த்துக் கொண்டிருந்த அதே காணொளியை முகுந்தனும் பார்த்துக் கொண்டிருந்தார். நான் வருவதைப் பார்த்து அதை நிறுத்தினார். 

   ‘ தொடர்ந்து பாருங்கள் முகுந்தன்.. நானும் தெரிந்து கொள்கிறேன் என்னவென்று..’

   ‘மன்னிக்கவும் ஜிம்மி, ஒரு முறை பார்த்தால் புரியாது… உங்கள் மின்னஞ்சலில்  இவரின் கொள்கை வரையறைகளை அனுப்புகிறேன் நிதானமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள். சிறிதளவாவது நன்றாக ஓய்வெடுத்தீர்களா?’

  ‘ அரை மணி நேரம் ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்து ஒரு மணி நேரமே எடுத்து விட்டேன். புங்கை மர, வேப்பமர காற்றை இன்று தான் வாழ்நாளில் சுவாசித்தேன். நீங்கள் கூறியது போலவே மின்னஞ்சலில் எனக்கு அனுப்புங்கள்’

  ‘ ஜிம்மி, நான் கடந்த இரண்டு வருடங்களாக பொது தொலைக்காட்சி ஊடகங்களை பார்ப்பதில்லை எல்லோரும் விலை போய் சோடை போய் விட்டார்கள்… எனக்கு தேவையான காணொளிகளை மட்டும் Youtube மூலமாக பார்க்கிறேன்’

 ‘ ஓ நீங்களும் அப்படித்தானா… நானும் அப்படித்தான்.. சில சமயம் முக்கிய தலைப்புச் செய்திகளை பார்ப்பேன்.. அவ்வளவுதான். வேறு ஏதாவது காணொளியை போடுங்கள் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.’

   முகுந்தன் வேறு ஒரு காணொளியை ஆரம்பிக்க.. அதில் சில அரசியல்வாதிகளின் பல வழக்குகள் பல பல  ஆண்டுகளாக நடந்து கொண்டிருப்பது தெரிந்தது.

   ‘ஏன் இந்த வழக்கு இவ்வளவு நாட்களாக நடக்கிறது?’

   ‘எல்லாம் காலத்தின் கொடுமை.. இந்த ஏழை நாட்டில் தேவையான வளர்ச்சிகளுக்கு பண பற்றாக்குறை…. ஆனால் இது போன்ற அரசியல் வழக்குகளில் பல பல வருடங்கள் பெரும் பண விரயம்’

 ‘ ஏன் வழக்குகளை விரைவாக நடத்த முடியவில்லை?’

   ‘ அரசியல் வழக்குகள் ஒரு மாய வலையில் பின்னப்பட்டிருக்கிறது… ஆட்சிகள் மாறும் அவர்களின் மீதான காட்சிகளும் மாறும்….  ஜிம்மி, லை டிடெக்டர்  மெஷின் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’

  ‘ மிகத் தேர்ந்தவர்களால் மட்டுமே அதை முறியடிக்க முடியும் என்று நினைக்கிறேன்’ 

   ‘ அதாவது, சாதாரணமாக அந்த இயந்திரத்தினால் பொய் பேசுவதை கண்டுபிடிக்க முடியும் என்று கூறுகிறீர்கள்!?’

  ‘ ஆமாம்’ 

   ‘ குற்றம் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை பொது அரங்கில் அமர செய்து இந்த பொய்யறியும் இயந்திரத்தின் மூலமாக விசாரணை நடத்தினால் முடிவு ஒரு அளவுக்கு அப்போதே தெரிந்து விடும் தானே?’ 

  ‘நிச்சயமாக, ஏன் அதை செய்ய எங்கும் மறுக்கிறார்கள்?’ 

  ‘ இது போன்ற வலிமையான சட்டங்களை இயற்றுபவர்கள்தான் பெரும்பாலும் குற்றம் சாட்டப்படுகிறார்கள்… இது ஒரு மிகப்பெரிய மாயவலை… மக்களுக்கு இவை எல்லாம் புரிந்துவிடக் கூடாது என்று எந்த ஒரு அளவிற்கும் செல்வார்கள்’

  ‘ இதற்கு முடிவு தான் என்ன?’

  ‘ துணிந்த நேர்மை தான் எல்லாவற்றிற்கும் முடிவு’ 

  ‘ புரியவில்லை சற்று விளக்கமாக கூறுங்கள்’

    ‘ நீங்கள் எல்லோரும் உண்மைக்கும் நேர்மைக்கும் புகழ்பெற்றவர்கள்… உங்களால் இவற்றையெல்லாம் புரிந்து கொள்ள முடியாது…. வேற்றுலகங்களில் உயிரினங்கள் உள்ளனவா என்று நாசா உட்பட உலகில் உள்ள பல பெரிய நிறுவனங்கள் கண்டுபிடிக்க முற்படுவது போல் இருந்தாலும், இதில் பல வருடங்களாக யோசிப்பவர்களுக்கும், ஆராய்ச்சி செய்பவர்களுக்கும் நிதர்சனமாக தெரியும்… உண்டு என்றும் அவர்களுடன் தொடர்பு இன்றும் இருக்கிறது என்றும்…  எங்கள் அரசியல்வாதிகளின் வழக்குகள் நீள்வது போல அவர்கள் கண்டுபிடிக்க முற்படுவதாக செய்யப்படும் முயற்சிகளும் நீளும்’

   ‘பசு மரத்து ஆணி போல பதிய வைத்து விட்டீர்கள்…. துணிந்த நேர்மை அதைப் பற்றி கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்’

  ‘ ஏலியன்கள் விஷயத்திற்கே வருகிறேன்…  அவைகளை பற்றிய தகவல்களை அறிய நிறுவப்பட்ட அமெரிக்க பென்டகானின் ஒரு பகுதியின் தலைவராக இருந்தவர் லூ அலிசாண்டோ… அவர் சென்ற வருடம் அவர் தந்தை காலமாவதற்கு சில வாரங்கள் முன் சந்திக்கும்போது கேட்ட ஒரு பெரிய கேள்வி, 

  ‘உங்கள் அனுபவத்தில் உலகின் பெரிய சிக்கல் எது என்று நினைக்கின்றீர்கள்?’ 

  அவரது தந்தையோ சற்றும் தயங்காமல் ‘ ஊழல்’ என்று சொன்னதைக் கேட்டு லூ அதிர்ச்சி அடைந்தார்… எதை எதையோ சொல்வார் என்று நினைத்தால் இதைச் சொல்கிறாரே என்று.. மிகத் தீவிரமாக யோசித்துப் பார்த்தால் எல்லாவற்றிற்கும் மூல காரணம் ஊழலில் இருக்கும்..  இத்தகைய ஊழலை எதிர்க்க நேர்மை வேண்டும்… கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.. நேர்மை பொதுவாக நல்ல மனிதர்கள் எல்லோரிடமும் உள்ளது.. அதை ஊழல்வாதிகளின் எதிராக செயல்படுத்த மிகவும் துணிவு வேண்டும்… அதற்காகத்தான் சொன்னேன் துணிவான நேர்மை வேண்டும் என்று’

   ‘ முகுந்தன், மிக அழகாக விளக்கிச் சொல்கிறீர்கள்… உங்களைப் போன்றோர் தான் பள்ளிகளில், பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும்’ 

   ‘நல்ல ஆசிரியர்கள் இல்லாமல் இல்லை… இந்த மாய உலகில் நேர்மை இருந்தும் குடும்பம் இருப்பதால் துணிவு இல்லாமல் அடிபணிகிறார்கள்’

  ‘ மிகவும் வருத்தமாக உள்ளது…  இவற்றை விடுத்து தமிழைப் பற்றி பேசுவோம்..’ 

  ‘ நீங்கள் அறியாத தமிழா.. எனக்கு புகைப்பட கலை மிகவும் பிடிக்கும்… நான் எடுத்த புகைப்படங்களை ‘குமரிகண்ட தமிழ்!’ என்று சேமித்து வைத்திருக்கிறேன்.. இந்தப் பெரிய திரையில் அதைக் காணலாம்’

‘ இப்பொழுது தான் நினைவுக்கு வருகிறது… குமரிக்கண்டத்தை பற்றி உங்களிடம் நிறைய பேச வேண்டும்’ 

  ‘ அதற்கென்ன பேசலாம்… அதைப் பற்றி பேசினால் நேரம் போவதும் தெரியாது, நாட்கள் போவதும் தெரியாது…’

    மிக மிக அற்புதமாக,  அழகாக புகைப்படங்களை எடுத்து இருந்தார்…  அவருடைய புகைப்பட சேமிப்பில் நிறைய பாகங்களை வைத்திருந்தார்.. அதில் இயற்கையின் அழகுக்கு இயற்கையில் அவர் எடுத்த பறவைகளின், விலங்குகளின் புகைப்படங்கள்… ஆனால் நாங்கள் பார்த்தது தமிழ்நாட்டில் பல இடங்களில் தமிழுக்கு பெருமை சேர்க்கும் பழம்பெரும் கோவில்கள், கல்வெட்டுகள், கற்குறிப்பேடுகள் மற்றும் தமிழ் கலாச்சாரத்தை சேர்ந்த மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு போன்ற புகைப்படங்கள். பார்க்க கண் கோடி வேண்டும்.. எவ்வளவு ரசித்திருந்தால் இவ்வளவு அழகா புகைப்படங்கள் எடுத்திருக்க முடியும் என்று வியந்தேன். 

   மிகவும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போது தான் அந்தப் புகைப்படம் என் கண்ணில் பட்டது…

  ஒரு பெரிய பாறையில் பண்டைய தமிழில் பொறிக்கப்பட்டிருந்த சில செய்திகள், சில சித்திரங்கள்… செய்திகளை தற்கால தமிழில் மாற்றம் செய்து படிக்க நேரம் வேண்டும்… என் கண்ணில் பட்டு நிலை நிறுத்தியது அந்த பாறையில் பொறிக்கப்பட்டிருந்த சித்திரங்களே… அவசர அவசரமாக நான் முகுந்தனை நோக்கி,

  ‘ முகுந்தன், இந்தப் புகைப்படத்தை அப்படியே நிறுத்துங்கள்… அந்த சித்திரங்கள் உள்ள இடத்தை கொஞ்சம் பெரிதாக்க முடியுமா?’

 அவரும் அதை பெரிதாக்கினார்…

  நான் கண்ட அந்தக் காட்சி என்னால் என் கண்களையே நம்ப முடியவில்லை.. 

  கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்த குடி என்று காரணம் இல்லாமல் கூறவில்லை என்பதற்கு முக்கிய அத்தாட்சி அந்த சித்திரம்….

   அந்த சித்திரத்தில், ஒரு பெரிய பறக்கும் தட்டு தரையில் நிற்பது போலவும்… சில வேற்றுலக மனிதர்கள் ஒரு விவசாயிக்கு அங்கிருந்த நிலத்தை காண்பித்து விவசாயத்துக்கு தேவையான எதையோ ஒன்றை விளக்குவது போலவும் இருந்தது. முகுந்தனுக்கும் இதுவரை இதை உன்னிப்பாக கவனிக்கவில்லையே என்ற குற்ற உணர்ச்சி பட்டவர்தனமாக தெரிந்தது…

  ‘இது ஒரு வரலாற்றை புரட்டிப் போடக்கூடிய புகைப்படம்…  முகுந்தன் இந்த இடம் எங்கிருக்கிறது?’

   ‘ வெகு தூரம் இல்லை இன்னும் இரண்டு மணி நேரத்தில் சென்று விடலாம்.. ஏன் அங்கு செல்ல வேண்டுமா?’

   ‘ஆமாம் இன்னும் நிறைய புகைப்படங்களை அங்கு எடுத்து உலகிற்கு உடனடியாக சொல்ல வேண்டும்’ 

  ‘இப்பொழுதே புறப்பட்டு செல்லலாம்.. ஆனால் உலகிற்கு இங்கிருந்து நீங்கள் சொல்ல வேண்டாம்… இது போன்ற சில நிகழ்வுகள் வெளி உலகத்துக்கு தெரிவிக்க முற்படும்போது அது எங்களுக்கு பெரிய சோதனையாகவும், வேதனையாகவும் முடிந்தது.. தேவையான அளவுக்கு நாம் புகைப்படங்களும், காணொளிகளும் எடுத்து அதை நீங்கள் ஜப்பானிலிருந்து வெளியிடுங்கள் அப்போதுதான் இதன் மதிப்பும் தெரியும்.. அவற்றை அழிக்க அதிகாரத்தில் உள்ள யாரும் முன் வராமலும் இருப்பார்கள்’

  ‘உங்களுடைய மனக்குறை எனக்குப் புரிகிறது,அப்படியே செய்யலாம்’

   உலகளாவிய புத்துணர்ச்சியுடன் நாங்கள் கிளம்பினோம்.. மனம் படபடவென்று இருந்தது.. அந்தச் சித்திரத்தை நேரடியாக காண எங்களுக்கு முன்னால் என் மனம் ஓடியது…..

    அந்த இடத்தை சென்று அடைந்தோம்.. மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு.. ‘ அந்த இடத்திற்கு செல்ல ஒற்றையடி பாதை மட்டும் தான் உள்ளது…இன்னும் சுமார் ஒரு கிலோ மீட்டர் நடக்க வேண்டும், பரவாயில்லை தானே?’ என்று முகுந்தன் கேட்டார்.

  ‘ என்ன முகுந்தன், அதைக் காண ஆயிரம் கிலோமீட்டர் நடக்கவும் நான் தயாராக இருக்கிறேன்’ என்றேன். 

   ஐந்து நிமிடம் நடந்திருப்போம், முகுந்தன் காணக்கூடாத காட்சியை கண்டது போல் அதிர்ச்சியுடன் என்னை பார்க்க… நானும் என்னவென்று கண்களாலே கேட்க..

  அவர்  அவரையும் மீறி கண்கள் குளமாக ஒரு திசையை நோக்கி சுட்டி காட்டினார்…

    அந்த திசையில் பார்த்த எனக்கும் நெஞ்சே வெடித்து விடும் போல் இருந்தது…. 

   அந்த இடத்தில் அந்தப் பாறை இல்லாமல் இருந்தது அந்தப் பாறையை ஒட்டி இருந்த சிறு குன்றும் பாதி வெட்டப்பட்டிருந்தது.. மற்ற பாதியை வெடிவைத்து தகர்க்க முற்பட்டிருந்தார்கள்.. எங்களுக்கு எதிர்ப்புறம் முடிவிற்கு வந்த ஒரு சாலையின் அருகில் ஒரு லாரி நிற்க, முன்பே வெட்டப்பட்ட கற்களை அதில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.

   முருகரால், குமரிக்கண்டத்தில் தோற்றுவிக்கப்பட்ட உன்னத தமிழ் மரம் இன்றைய அரசியல் செல்களால் அரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது……

   

 
 
bottom of page