இறந்தேன்/னா?
- melbournesivastori
- Apr 26
- 10 min read

‘முகுந்த், கடவுளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று என் சக பேராசிரியர் பீட்டர் மாரிசன் கேட்டார்.
‘ என்ன பீட்டர் திடீரென்று?’
‘ திடீரென்று இல்லை முகுந்த், கடந்த ஓரிரு மாதங்களாகவே எனக்கு இந்த எண்ணங்கள் தோன்றி பாடாய் படுத்துகிறது’
‘ நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்தானே… வாரந்தோறும் தவறாமல் சர்ச்சுக்கு செல்வீர்கள் தானே… பிறகு ஏன் இந்த சந்தேகம்…இல்லை இல்லை சந்தேகம் இல்லை… இந்த எண்ணம்?’
‘ ஆமாம் வாரம்தோறும் தவறாமல் சர்ச்சுக்கு செல்வேன், ஜீசஸ் மீது அளவு கடந்த நம்பிக்கை உண்டு… அதுவல்ல பிரச்சனை.. எனக்கு வந்தது நம்பிக்கை குறைவல்ல.. கடவுளைப் பற்றிய சிந்தனை.. அவ்வளவுதான்’
‘ நீங்களே ஒரு நீரோ சயின்ஸ் பேராசிரியர்.. உங்களுக்கு விளக்கம் கொடுக்க வேறொருவர் வேண்டுமா?’
‘ அது இல்லை முகுந்த், நீங்களும் அறிவியல் பேராசிரியர்.. எனக்குத் தெரிந்து பகுத்தறிந்து பேசுபவர்.. (தயவுசெய்து பகுத்தறிவு என்றால் தற்குறிகளைப் போல பகுத்து அறியாமல் அதைக் கடவுள் மறுப்பு என்று கூறுகிற ஆட்டுமந்தை கூட்டம் போல் நினைத்து விடாதீர்கள்..) அதனால் தான் என்னுடைய சமீப கால நினைவுகளை உங்களுடன் கலந்து பேச நினைத்தேன்’
‘ நன்றி பீட்டர், ஏன் இன்று வெள்ளிக்கிழமை தானே.. இன்று மாலையோ அல்லது நாளை மாலையோ என் வீட்டிற்கு வாருங்கள்.. நிதானமாக இதைப்பற்றி பேசலாம்’
‘ தேங்க்ஸ் முகுந்த், உங்கள் வீட்டிற்கு இருமுறை வந்திருக்கிறேன்… நான் புதிதாக சென்றுள்ள வீட்டுக்கு நீங்கள் வந்ததே இல்லை… நாளை மதிய உணவிற்கு வந்து விடுங்கள் எந்த முக்கிய வேலையும் இல்லாமல் இருந்தால்’
‘ இல்லை எனக்கு ஏதும் வேலை இல்லை, இருப்பினும் ஒரு வார்த்தை என் மனைவியிடம் கேட்டு சொல்கிறேன்’ என்று கூறி என் மனைவிக்கு போன் செய்தேன். என் மகனுக்கும், மகளுக்கும் டென்னிஸ் வகுப்புகள் இருப்பதை நினைவுபடுத்தி என்னை மட்டும் சென்று வரச் சொன்னாள்.
‘ஓகே பீட்டர், நாளை வருகிறேன் எந்த நேரத்திற்கு வர வேண்டும்? புதிய வீட்டின் முகவரியை எனக்கு அனுப்புங்கள்’
‘வந்துவிட்டதா பாருங்கள்’ என்று அவர் கூற டெக்ஸ்ட் மெசேஜ் எனக்கு வந்துவிட்டது என்று உறுதி செய்தேன்.
பிறகு இருவரும் கலைந்து அவரவர் விரிவுரை கொடுக்க வேண்டிய வகுப்புகளுக்கு சென்றோம்.
சனிக்கிழமை காலை 11:00 மணி இருக்கும்… மனைவியும் பிள்ளைகளும் டென்னிஸ் கிளாசுக்கு சென்று விட்டிருந்தனர்… பீட்டர் மாரிசனின் புதிய வீட்டு விலாசத்தை கூகுள் எர்த்தில் தேடினேன்… மலை பாங்கான இடத்தில் ஒரு அழகான வீடு… ஆன்மீகத்தையும், தத்துவங்களையும் பேச சரியான இடம் தான் என்று நினைத்துக் கொண்டேன்.
சரியாக பிற்பகல் 12.30 மணிக்கு பீட்டர் மாரிசன் வீட்டுக்கு சென்று சேர்ந்தேன். காரைப் பார்க் செய்வதற்குள் வெளியே வந்து வரவேற்றார். உள்ளே சென்றோம்..
ஹலோ முகுந்த் ஹவ் ஆர் யூ.. என்று சில சம்பிரதாய விசாரிப்புக்களுடன் பீட்டரின் மனைவி வெண்டி வரவேற்றார்..
பீட்டரின் இரு மகள்களும் தனித்தனி வீடு வாங்கி சென்று விட்டதை தெரிந்து கொண்டேன்.
முதல் முறையாக இந்த வீட்டுக்கு வந்ததால் வீட்டை சுற்றி காண்பித்தார்.. மிக அழகாக, கச்சிதமாக கட்டப்பட்ட வீடு.. பின் தோட்டத்தில் ஒருபுறம் மலைச்சாரலைப் பார்த்தது போல் மறுபுறம் தாழ்வு நிலத்தை பார்த்தது போல் கட்டப்பட்டிருந்தது. சொர்க்கத்தை எங்கும் தேடாமல் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சியை தேடினாலே போதும் என்று தோன்றியது.
பீட்டரும் நானும் பின் தோட்டத்தை பார்த்தவாறு இருந்த சன் ரூமில் அமர்ந்து கொண்டோம். ஏற்கனவே அந்த மேஜையில் கிளியர் ஆப்பிள் ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், சில பியர், விஸ்கி, பிராந்தி பாட்டில் இவைகள் வைக்கப்பட்டிருந்தன.
சாரி பீட்டர், இன்று நான் மனைவியுடன் வராததால் ஆல்கஹால் எடுத்துக் கொள்ள முடியாது… கிளியர் ஆப்பிள் ஜூஸ் போதும் என்று ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றிக் கொண்டேன்… இட்ஸ் ஓகே என்று பீட்டரும் ஆரஞ்சு ஜூஸ் ஊற்றிக்கொண்டார்.
‘ முதல் முறையாக இந்த வீட்டுக்கு வருகிறீர்கள்… வரும் வழி நன்றாக இருந்ததா?’
‘ வளைந்து நெளிந்த மலைப்பாங்கான பாதை… மிகவும் அழகாக இருந்தது’
‘ Cathy வீடு வாங்கிச் சென்று மூன்று வருடம் ஆகிறது அது உங்களுக்கு தெரியும்… சென்ற வருடம் தான் ஜென்னி இங்கிருந்து 15 மினிட்ஸ் ஜேர்னி, வீடு வாங்கிக் கொண்டு சென்றாள்.’
‘ நல்லது, இதைத் தவிர பெற்றோருக்கு வேறு என்ன வேண்டும்?’
‘ மிகச் சரி முகுந்த், நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம்… உங்கள் பிள்ளைகள் இப்பொழுதுதான் உயர்நிலைப் பள்ளியில் உள்ளனர்… இந்த நிலைக்கு நீங்கள் வர சில காலம் பிடித்தாலும் .. அது ஒரு நல்ல எதிர்பார்ப்பு தான்’
ஆமாம். என்று நான் தலையாட்டி விட்டு ‘ பீட்டர் நேத்து ஏதோ கடவுளைப் பற்றி சொன்னீர்களே?’ என்று பேச்சை ஆரம்பித்தேன்.
‘ஆமாம்.. கடவுளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டேன்’
‘ ஏன் இந்த நினைவு திடீரென்று?’
‘ திடீரென்று இல்லை.. சில மாதங்களாக தோன்றுகிறது.. நான் வாரந்தோறும் தவறாமல் சர்ச்சுக்கு செல்பவன் தான்.. ஜீசஸ் இன் மேல் அளவு கடந்த பற்றுதல் உடையவன் தான்…. இதுவரை தோன்றாத வித்தியாசமான எண்ணம் இப்போதெல்லாம் தோன்றுகிறது… அதாவது ஜீசஸ் கடவுளின் மகன் என்றால் கடவுள் யாராக இருக்க முடியும், எப்படி இருப்பார் என்ற எண்ணங்கள் தான்…’
‘ இதுபோல ஆன்மீக எண்ணங்கள் வருவது சகஜம் தானே?’
‘ ஆமாம் சகஜமான ஒன்றுதான்.. எண்ணங்கள் வந்து சென்று விட்டால் சரி…. அதே எண்ணங்கள் மனதில் தேங்கி விட்டால்?’
‘புரிகிறது பீட்டர்’
‘ கிறிஸ்டியானிட்டி மட்டுமில்லை… எல்லா மதங்கள் பற்றியும் தெரிந்து கொண்டேன்.. அவைகளின் சாராம்சம் சரி.. அதாவது அன்பே கடவுள். மற்றபடி நிறைய முரண்பாடுகள் அவைகளில் எனக்குத் தெரிகிறது… எல்லா உயிர்களையும் கடவுள் தான் படைத்தார் என்றால், ஒரு உயிரை உணவாகக் கொண்டு மற்ற உயிர் வாழ்வது எதனால் என்று எனக்குப் புரியவில்லை… அதை பூச்சிகளோ, பறவைகளோ, விலங்குகளோ செய்தால் ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளலாம்… ஏனென்றால் அவைகளுக்கு நம்மை விட அறிவு குறைவு என்று நாம் நம்புவது. ஆறு அறிவு நமக்கு உண்டு என்று சொல்லிக் கொண்டு நாம் செய்வதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை…’
‘ செடி கொடிகளுக்கும் உயிர் உண்டு தானே… அப்படி இருக்க உயிர்கள் உயிர் வாழ எதை தான் உண்ண வேண்டும்?’
‘ அதுதான் எனக்கும் புரியவில்லை… படைப்பு புரிகிறது படைப்பின் நியதி புரியவில்லை’
‘நம்மை படைத்த இறைவன், உடன் ஓராயிரம் விலங்குகளையும், பறவைகளையும், புழு பூச்சிகளையும் ஒரு நியதி இல்லாமலா படைத்திருப்பான்? ஆனால் மனிதனோ அவைகளுக்கு இறந்தபின் காண வேண்டிய சொர்க்கத்தை வாழும்போதே தொழிற்சாலை மயமாக்கலில் நரகத்தை அனுபவிக்க விட்டான். வளர்ந்த, வளரும் நாடுகளில் பன்றிகள், மாடுகள், ஆடுகள், கோழிகள், வான் கோழிகள் மற்றும் பல பல….இவைகளை வாழ்நாள் முழுவதும் ஒரு பத்து அடி கூட தாண்டாமல் இருக்க செய்து கொன்று குளிர்சாதனங்களில் பதப்படுத்தி உண்பதை நினைத்தாலே என் கண்கள் குளமாகும்…இதில் பெண் பன்றிகளின் நிலைமை இந்தியா போன்ற சில நாடுகளை தவிர்த்து மற்ற நாடுகளில் கொடூரம்….. அவைகள் வாழ்நாள் முழுவதும் கர்ப்பமுறுவது, குட்டிகளை ஈன்றெடுப்பது, மீண்டும் கர்ப்பமுறுவது, மீண்டும் குட்டிகளை ஈன்றெடுப்பது… இதுதான் அவைகள் இறக்கும் வரை முடிவில்லா பயணம்..’
‘ பீட்டர் உங்களுக்கு ஞானம் பிறந்து விட்டது… பழம்பெரும் தத்துவங்களை மேற்கோளாக எடுத்துக் கொண்டால் நீங்கள் அடுத்த நிலைக்குச் சென்று விட்டீர்கள் என்று புரிகிறது..’
‘ முகுந்த், நீங்கள் சொல்வது போல் நான் அடுத்த நிலைக்கு சென்று இருந்தால், நீங்கள் சொல்வது போல் ஞானம் கிடைத்திருந்தால் எனக்கு அந்த நியதி புரிந்திருக்குமே?’
‘ அதெல்லாம் பிரபஞ்சத்தின் புரியாத புதிர்கள், ஆழமாக யோசிக்க யோசிக்க புரிந்தது போல் தெரிந்து புரியாதது பிரபஞ்சம் அளவிற்கு உள்ளது புரிகிறது…’
‘ மூளையைப் படைத்து, யோசிக்கும் திறமையை கொடுத்து விடை கிடைக்காமல் செய்வது.. கடவுள் நமக்கு செய்யும் கொடுமையே!’
‘ நீங்களே சொல்லி விட்டீர்கள், யோசிக்கும் திறமை கொடுத்து விடை கிடைக்காமல் செய்துவிட்டார் என்று… அப்படி இருக்க கடவுள் நியதியின் பதில் கிடைக்கவில்லையே தவிர கடவுள் நமக்கு செய்வது கொடுமை என்று எப்படி நினைக்க முடியும்?’
‘ அதுதான் எனக்கு மிகப்பெரிய குழப்பம் முகுந்த்’
‘உங்களுக்கு வரும் குழப்பங்கள் எனக்கும் வந்தது… உங்களிலிருந்து ஓர் அளவுக்கு நான் வேறுபடுகிறேன்… எப்படி என்றால், உங்கள் மகள்கள் வளர்ந்து தனியே சென்று விட்டார்கள்.. நேரம் அதிகம் இருக்கிறது உங்களுக்கு யோசிக்க… எனக்கோ யோசிக்க ஆரம்பிக்கும் போதே மகனுக்கு அது வேண்டும்… மகளுக்கு இது வேண்டும்… வீட்டிற்கு எது எது வேண்டுமோ… இவைகளை பூர்த்தி செய்ய தொடர் யோசனைகள் அறுபடுகிறது… அதனால் நான் தீவிர யோசனையிலிருந்து தப்பித்தேனோ இல்லை தப்பிக்க முயற்சி செய்கிறேனோ என்று புரியவில்லை’
‘ மிகவும் பட்டவர் தனமாக பேசுகிறீர்கள்… நீங்கள் தீவிர யோசனையில் இருந்து தப்பிக்க முயற்சி செய்யவில்லை…அதற்கான வேலை வரவில்லை என்றுதான் நினைக்கிறேன்…. கான்ஷியஸ்னஸும் கடவுளும் ஒன்றோ என்று தோன்றுகிறது’
‘ என் மொழியில் குழப்பம் உண்டோ என்று குழம்புகின்றேன்… பீலிங்க்குக்கும் உணர்வு என்று இருக்கிறது.. ஆங்கிலத்தில் பீலிங், இன்டியூஷன், டிப் மைண்ட், கான்சியஸ்னஸ் என்று பல பல வார்த்தைகளுக்கு சரியாக என்னுடைய மொழியில் கூற முடியவில்லை.. ஆனால் உணர முடிகிறது… என்னைப் பொறுத்தவரை உணர்வு, உள்ளுணர்வு, ஆழ்மனது… இவைகளை அடுத்து கான்ஷியஸ்நஸ்ஸை நுண்ணுணர்வு என்று எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்’
‘ நானும் வேலூர் சிஎம்சி யில் 10 வருடங்கள் பேராசிரியராக வேலை செய்ததால் நீங்கள் கூறுகிற தமிழ் சொற்கள் புரிகிறது முகுந்த், கான்ஷியஸ்னஸை நுண்ணுணர்வு என்றே வைத்துக் கொள்ளலாம்.’
‘ என் நுண் உணர்விற்கு நான் சொந்தம் கொண்டாட முடியுமா? அது முகுந்தன் ஆகிய எனக்கு சொந்தமா?’
‘ அதுதான் மிகப்பெரிய கேள்வி… பீட்டர் என்பது என்னுடைய உடலுக்கு பெயர்… என் மூளை, என் மனது இவைகளுக்கும் சேர்த்துக் கொள்ளலாம்…. அப்படி என்றால் என்னுடைய கான்சியஸ்னஸ் என்பது என்ன, அது யார்?’
‘ அந்த கான்ஷியஸ்னஸ்… நுண்ணுணர்வு ஆன்மாவிற்கு சொந்தம் என்று நினைக்கிறேன்…ஆன்மா அழிவில்லாதது… பல பிறவிகள் எடுக்கக் கூடியது என்று சொல்கிறார்கள்… அதனால் கான்சியஸ்னஸ் இந்த பூமியில் நாம் எடுத்த பிறவியின் பெயர்கள் பீட்டருக்கோ முகுந்துக்கோ சொந்தமானது அல்ல என்று மட்டும் புரிகிறது…’
‘ முகுந்த், நேரடியாக சொல்லவும்… மதங்கள் சொல்கிறது, தத்துவ ஞானிகள் சொல்கிறார்கள் என்று கூறாமல் மறுபிறவி உண்டு என்று நீங்கள் நினைக்கிறீர்களா?’
‘ நல்லது பீட்டர், மனது, உள் மனது, ஆழ் மனது இவைகள் புரிகிறது… என் மனதிற்கு ஆன்மா என்று ஒன்று இல்லை என்றே எண்ண தோன்றுகிறது…. அதனால் மறுபிறவியை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை’
‘ எனக்கு அதில் மிகப்பெரிய குழப்பம் உண்டு… நான் ஆன்மா உண்டு, மறுபிறவி உண்டு என்று நம்புகிறேன்’
‘ நன்றி பீட்டர், மிக மிக ஆழமான கருத்துக்களை, சிந்தனைகளை பரிமாறிக் கொண்டோம்.. இத்தகைய பேச்சுக்கள் ஒரு நாள் முழுவதும் பேசினாலும் போதாது… எனக்கு இன்று மாலை வேறொரு இடத்துக்கு செல்ல வேண்டும்… நாம் வேறு ஒரு நாள் இதைப் பற்றி தொடர்ந்து பேசுவோம்’
பேச்சுக்களுக்கு நடுவில், பீட்டரின் மனைவி வெண்டி பரிமாறிய மதிய உணவை உண்டு முடித்தோம்…
பீட்டரிடமும், வெண்டி இடமும் விடைபெற்று என் வீட்டிற்கு காரை ஓட்ட துவங்கினேன்…
என்ன ஆச்சரியம்… என்னால் மேலும் கீழும், வலப்புறமும் இடப்புறமும், முன்பும் பின்பும் பார்க்க முடிகிறது….. மிக வித்தியாசமான அனுபவமாக உள்ளது..
என்ன இது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் படுக்கையில் யாரோ படுத்திருக்க… மூன்று மருத்துவர்களும், இரண்டு செவிலியர்களும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்….
மிக மிக வித்தியாசமான அனுபவம் எனக்கு… என்னால் பறவை கண்ணாகவும் பார்க்க முடிகிறது… பக்கத்தில் இருந்தும் பார்க்க முடிகிறது…. அந்த மூன்று மருத்துவர்கள் இரண்டு செவிலியர்கள் இவர்களின் எண்ண ஓட்டத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது….
‘ விபத்தினால் பெரிய இருதய அதிர்ச்சி என்று நினைக்கிறேன்’ என்று ஒரு மருத்துவர் கூற…
‘ இருதயத்தில் எந்த கோளாறும் இருப்பதாக தெரியவில்லையே?’
இன்று மற்றொரு மருத்துவர் வினவ…
மூன்றாவது மருத்துவர்… பயிற்சி மருத்துவர் என்று தெரிகிறது… அவரால் எண்ணத்தை ஒருமுகப்படுத்த முடியவில்லை.. தன்னுடைய இளம் மனைவி புதிதாக வெளியிடப்பட்ட திரைப்படத்தை காண சீக்கிரம் வரச் சொன்னதை நினைத்துக் கொண்டிருந்தார்…
முதல் மருத்துவர் தீவிரமாக அந்த உடலை உயிர்பிக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.. இரண்டாவது முறையாக சார்ஜ் செய்யப்பட்ட அந்த கருவியை அந்த உடலின் மார்பின் மீது வைத்து மின்சார அதிர்ச்சி உரசெய்தார்.
இரண்டு செவிலியர்களும் அந்தக் கருவியை ரீசார்ஜ் செய்ய உதவி கொண்டிருந்தனர்.
அப்போதுதான் கவனித்தேன்… அந்த முகம் என்னைப் போன்று இருந்தது…
இவர் யார் என்று தெரியுமா என்று இரண்டாவது மருத்துவர் ஒரு செவிலியரை பார்த்து கேட்க… அவர் அந்த உடலுக்கு சொந்தமானவர் வாலட்டிலிருந்த ஐடி கார்டை பார்த்து எழுதிய படிவத்தை காண்பித்தார்.
அந்தப் படிவத்தை என்னாலும் படிக்க முடிந்தது…. அதிர்ச்சியோ ஆச்சரியமோ அடைய வேண்டிய நான் ஏதும் அடையவில்லை…. அந்தப் படிவத்தில் இருந்தது என்னுடைய பெயர், என்னுடைய முகவரி, என்னுடைய தொழில். அப்போதுதான் அந்த முகத்தை உற்றுப் பார்த்தேன்… ஆமாம் என்னை போன்றே இருந்தது….
அது என் உடல் என்றால், இதையெல்லாம் உணர்கின்ற நான் யார்? என்ன இது… எதுவுமே புரியவில்லை.. குழப்பமும் வரவில்லை… ஒருவித ஞான நிலை.
இவை நடந்து கொண்டு இருக்கின்ற நேரத்தில் அந்த அறையின் சுவற்றை அடுத்து உள்ள மற்றொரு அறையை என்னால் ஊடுருவி பார்க்க முடிகிறது.. என்ன அது… அங்கும் ஒரு உடல் தீவிர சிகிச்சை பிரிவியில் படுத்திருக்க… அங்கேயும் சில மருத்துவர்களும் சில செவிலியர்களும் இருக்க.. எனக்கு இருக்கும் இந்த நிலை போலவே அங்கேயும் அந்த உடல் மீது ஒரு உயிர்…. இல்லை… அது உயிர் இல்லை… வேறு என்ன… சரி அதை அதை விடுவோம்…இப்பொழுது நான் இருக்கும் நிலை போன்று என்று வைத்துக் கொள்ளவும்.
என்னை மீறிய ஒரு உந்துதலில் அங்கு நடப்பதை கவனிக்கத் தொடங்கினேன். ஒரு மருத்துவர் மற்றொரு மருத்துவரிடம் கூறினார்,
‘இவர் பிறவி குருடு…. கண்களே இல்லை.. பலவித உடல் கோளாறுகள்… கோமாவில் வேறு சென்று இருக்கிறார்… முதலில் ரத்த அழுத்தத்தை சீராக்குவோம்’
‘எஸ் டாக்டர்’, செவிலியர்கள் அந்த உடலுக்கு செல்லும் ஒரு குழாயில் ரத்த அழுத்தத்தை குறைக்கும் மருந்து ஏற்ற…
‘இட்ஸ் எ வெயிட்டிங் கேம்’ என்று மருத்துவர் அங்கிருந்த மானிட்டரை பார்க்க ஆரம்பித்தார்.
அந்த உடலுக்கு மேலிருந்த என்னைப் போன்ற ஒன்று அந்த உடலை பார்த்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் என்னையும் பார்த்தது… எனக்கு எந்தவித உணர்ச்சியும் தோன்றவில்லை…
சற்றென்று நான்!? இருந்த அறைக்கு அருகில் என்!? மனைவியின் குரலும் மகன் மகளின் குரலும் கேட்க.. அவர்களைப் பார்த்தேன். மனைவி பேயறைந்தது போல் இருக்க… மகனுக்கும் மகளுக்கும் அழுகை வரலாமா என்று யோசித்துக் கொண்டிருக்க….
ஜிவ் என்று என்னை ஏதோ இழுத்தது… பயமா என்று தெரியவில்லை ஏதோ ஒரு மனநிலை… அதிவேகமாக.. ஒளியின் வேகமாக கூட இருக்க முடியும்… ஒரு துளையின் உள்ளே… இல்லை குகையின் உள்ளேயா… தெரியவில்லை வேகமாக இழுத்துச் செல்லப்பட்டேன். எவ்வளவு நேரம் ஆகி இருக்குமோ என்று தெரியவில்லை, திடீரென்று பொன்னிறமா.. இல்லை இல்லை… எந்த நிறம் என்றே சொல்ல முடியவில்லை, பெரும் ஜோதி.. தெரிந்தது. அந்தப் பெரும் ஜோதி இங்கு அங்கு என்று இல்லாமல் எங்கும் வியாபித்திருந்தது. என்னாலும் ஒரே நேரத்தில் எங்கும் பார்க்க முடிந்தது.. இது என்ன இடம், ஏன் நான் இங்கு இழுத்து வரப்பட்டேன் என்றெல்லாம் எனக்கு ஏதும் புரியவில்லை..
திடீரென்று என் கண்முன்னே!? (எனக்கு கண் இருக்கிறதா? கண் என்றால் முன்னோக்கி மட்டும் தானே பார்க்க முடியும்… ஆனால் என்னால் மேலும் கீழும், இடது புறமும் வலது புறமும், முன்புறமும் பின்புறமும் ஒரே நேரத்தில் பார்க்க முடிகிறதே?!
இதனால் குழப்பமும் வரவில்லை.. என்ன நிலை இது?...) நான் பிறந்தது முதல் பீட்டரின் வீட்டின் முன்னால் சென்று காரில் ஏறும் வரை எல்லாம் என் கண் முன்னே வந்து சென்றது… நான் சந்தித்தவர்கள், சந்தித்த பறவைகள், சந்தித்த விலங்குகள், சந்தித்த புழு பூச்சிகள் இவைகள் மட்டும் தோன்றி மறையாமல் அவர்களுக்கு, அவைகளுக்கு என்னால் ஏற்பட்ட நல்ல, கெட்ட பாதிப்புகளையும் என்னால் உணர முடிந்தது.. மகிழ்ச்சி, துக்கம், வருத்தம், வஞ்சம், தான்மை, பொறாமை போன்ற எல்லா குண நலன்களும் கலந்த கலவை போல் ஒரு உணர்வை நான் உணர்ந்தேன்.
அந்த சமயத்தில் திடீரென்று அந்த பெருஞ்சோதியிலிருந்து… அந்தப் பேரொளியிலிருந்து… தனிப் பெரும் கருணையை உணர்ந்தேன்.. அந்தப் பேரொளி சொல்லாமலேயே நான் தவறுதலாக வரவழைக்கப்பட்டு விட்டேன் என்று உணர்ந்தேன். அப்படி உணர்ந்த மறுகணமே வந்த ஒளியின் வேகத்தை போலவே மறுபடி வந்த வழியிலேயே ஈர்க்கப்பட்டேன்…. மறுபடியும் அந்த மருத்துவமனை, மறுபடியும் அதே மருத்துவர்கள் அதே செவிலியர்கள்… அந்த முதல் மருத்துவர் எத்தனை தடவை அந்தக் கருவியினால் அந்த (என்) உடலை உயிர்ப்பிக்க முயற்சித்தரோ தெரியாது… ஆனால் நான் பார்த்த அப்பொழுது, அந்த கணத்தில்…அவர் முயற்சிக்கும் போது சற்றென்று நான் அந்த உடலுக்குள் புகுந்தது மின்னல் வேகத்தில் நடந்தது….
அந்த மருத்துவர்களும் செவிலியரும் ஒரே நேரத்தில் மகிழ்ச்சியில் ஒருவருக்கொருவர் பாராட்டி கொண்டனர்.
‘ ஹலோ முகுந்தன், எப்படி இருக்கிறீர்கள்?’
‘நன்றாக இருக்கிறேன் டாக்டர், எனக்கு என்ன நடந்தது? நான் எப்படி இங்கு வந்தேன்?’ நான் கேள்விகளை அடுக்கிக் கொண்டு போக முற்படும்போது…
முதலாம் மருத்துவர் குறுக்கிட்டு,
‘ அமைதியாக கேளுங்கள் முகுந்தன்… நீங்கள் வந்திருந்த கார் விபத்துக்குள்ளாகி இருந்தது…உங்களுக்கு பெரிய அடி ஏதுமில்லாமல் ஆனால் மூர்ச்சையாகி.. நினைவிழந்த நிலையில் இங்கு அழைத்து வரப்பட்டீர்கள்..’ அந்த மருத்துவர் கூறிக் கொண்ட செல்ல. எனக்கு எல்லாம் நினைவுக்கு வந்தது…
பீட்டர் வீட்டில் இருந்து புறப்பட்டு வந்தேன், என் வீட்டிற்கு பாதி வழி இருக்கும்… அந்த நேரத்தில் தான் தாறு மாறாக வந்த மற்றொரு கார் நான் என்ன செய்வது என்று யோசிப்பதற்குள் என் கார் மீது மோதியது.. பிறகு தெரிந்து கொண்டேன், அந்தக் காரை போதைப் பொருள் உட்கொண்ட ஒரு இருபது வயது இளைஞன் ஓட்டி வந்தான் என்று… அவனுக்கு என்ன ஆனது என்று விசாரிக்க முற்படும்போது… அந்த மருத்துவர்கள் அவசர அழைப்பில் பக்கத்துறைக்கு சென்றார்கள்.
அந்த கணத்தில், அந்த அறையில் நடந்த அந்த வினோத நிகழ்வு எனக்கு சற்றென்று நினைவுக்கு வந்தது.. அந்த நிகழ்வு கனவா நினைவா என்று எனக்கு புரியவில்லை… அது கனவு இல்லை நினைவு தான் என்றால் அது யார் நானா? இதை உறுதிப்படுத்த அந்த மருத்துவர்கள் இடையே நடந்த உரையாடலை அவர்களிடம் உறுதிப்படுத்தினால் மட்டுமே முடியும்.. இதை யோசித்துக் கொண்டிருக்கும் போதே, பக்கத்து அறையில் இருந்து மகிழ்ச்சி குரல்கள் கேட்டன..
அடுத்த அறையில் என்ன நடக்கிறது என்று அங்கு இருந்த செவிலியரை கேட்டேன்.. எனக்கும் புரியவில்லை இதோ வருகிறேன் என்று கூறிவிட்டு அடுத்த அறைக்கு சென்றார்.
ஒரு சில நிமிடங்களில் அந்த செவிலியர் வந்தார், ‘ முகுந்தன் பக்கத்திலிருந்து நோயாளி கோமாவில் இருந்தார், ஆனால் இப்போது கோமாவில் இருந்து திரும்பி விட்டார் அதற்காகத்தான் அந்த மகிழ்ச்சி குரல்கள்’
எனக்கு தூக்கி வாரி போட்டது… பக்கத்து அறையில் நிகழ்ந்த நிகழ்வும் எனக்கு சற்றென்று ஞாபகத்துக்கு வந்தது… அந்த நோயாளியை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் பெருகியது..
அதே நேரத்தில், அடுத்த அறையில் இருந்து முதல் மருத்துவரும் பயிற்சி மருத்துவரும் திரும்பினர்…
‘மிஸ்டர் முகுந்தன் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.. அடுத்தடுத்து இரண்டு பேர் மீண்டிருக்கிறீர்கள்…’
ஏற்கனவே என்னிடம் செவிலியர் கூறிய அதே விஷயத்தை அந்த முதல் மருத்துவரும் கூறினார்.
‘டாக்டர் என்னுடைய உடல்நிலை எப்படி இருக்கிறது? நான் எப்பொழுது வீட்டுக்கு செல்லலாம்?’
‘ உங்களுக்கு என்ன நடந்தது என்று எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை… உடலுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை.. … ஆனால்……’என்று கூறி அந்த மருத்துவர் சற்று தயங்கினார்..
‘ஆனால் என்ன டாக்டர்?’
‘எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை… கார் விபத்து அதிர்ச்சியில் மூர்ச்சை ஆகி விட்டீர்கள்… அது புரிந்து கொள்ள முடிகிறது.. ஆனால் …..’ இன்னும் சற்று நேரம் தயங்கி, பிறகு…
‘ உங்களுடைய இதயம் ஏன் பல நிமிடங்கள் நின்றது என்று புரியவில்லை’
‘என்ன சொல்கிறீர்கள் டாக்டர், என் இதயம் நின்று விட்டது என்றால் நான் இறந்தேனா?’
‘ அப்படி சொல்ல முடியாது… சில சமயம் அப்படி ஆகும்… அப்படியாகும் போது ஒரு சில முயற்சிகளிலேயே இதயத்தை இயங்க வைத்து விடுவோம்…. உங்களுக்கு எட்டாவது முறை முயற்சிக்கும் போது தான் இயக்க முடிந்தது. எனக்குத் தெரிந்த மருத்துவத்தில் இது புதிது’
எனக்கு ஓரளவு புரிந்தது… நான் இறந்து பிழைத்து இருக்கிறேன் என்று. நான் சாதாரணமாக இறந்து பிழைத்து இருந்தால் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து இருப்பேன்… ஆனால் அதற்கிடையில் நடந்த நிகழ்வுகள் என்னை யோசிக்க வைத்து நிதானப்படுத்தி விட்டது.
‘ என்னை பிழைக்க வைத்ததில் மிக்க நன்றி டாக்டர்… என் உடலுக்கு ஏதும் பாதிப்பில்லை என்றால் எப்போது என்னை வீட்டுக்கு அனுப்புவீர்கள்?’
‘ ஒரு மூன்று நாட்கள் இங்கேயே இருங்கள்… முழுவதுமாக உங்களை பரிசோதித்து எங்களுக்கு நம்பிக்கை வந்த பிறகு அனுப்புகிறோம்’
ஒரு மூன்று நான்கு மணி நேரம் கழித்து என்னை சாதாரண வார்டுக்கு மாற்றம் செய்தார்கள். அங்கு ஓரிரு மணி நேரம் என் மனைவியுடனும், மகன், மகளிடமும் பிறகு வந்த பீட்டர் மற்றும் வெண்டியுடனும் பேசிவிட்டு… பார்வையாளர்கள் நேரம் முடிந்தவுடன் அவர்களெல்லாம் சென்ற பிறகு சற்று ஓய்வெடுக்க ஆரம்பித்தேன்.
சுமார் ஒரு மணி நேரம் ஓய்வெடுத்து இருப்பேன்… பக்கத்து படுக்கைக்கு ஒரு புதிய நோயாளியை அழைத்து வந்தனர்…உற்றுப் பார்த்த பிறகு தெரிந்தது அந்த நிகழ்வில் நான் பார்த்த அந்த கண்ணில்லா பெண்மணி தான் அந்த நோயாளி என்று.
ஒருவித மனோநிலையை அடைந்தேன் நான்.. நடப்பதெல்லாம் கனவா நினைவா என்று புரியவில்லை… ஆச்சரியமும், அதிர்ச்சியும், படபடப்பும் கலந்த மனோநிலை அது.
‘ஹலோ முகுந்தன் இவர்தான் உங்கள் பக்கத்து அறையில் இருந்தவர்’ என்று நான் ஏற்கனவே உணர்ந்த செய்தியை கூறினார்.
‘ஜூலியா, இவர் பெயர் முகுந்தன் உங்கள் பக்கத்து படுக்கையில் இருக்கிறார்… இவரும் அவசர சிகிச்சை பிரிவில் உங்களுக்கு பக்கத்து அறையில் இருந்தார்’ என்று அந்த முதல் மருத்துவர் ஜூலியாவை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
ஜூலியா என்னை பார்க்காமலே ‘ஹலோ’ என்று கூறினார்.
நானும் பதிலுக்கு ஹலோ என்று கூறிவிட்டு அவரை ஓய்வெடுக்க சொன்னேன்.
பிறகு களைப்பில் நானும் தூங்கி விட… நடு இரவில் ‘ஹலோ முகுந்தன்’ என்ற ஜூலியாவின் குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன்…
‘ என்ன ஜூலியா, ஏதாவது தேவையா? செவிலியரை அழைக்கட்டுமா?’ என்று நான் கேட்க…
‘இப்போது எத்தனை மணி என்றே எனக்கு தெரியவில்லை… உங்களை எழுப்பி விட்டேனா என்றும் புரியவில்லை..’
அப்போதுதான் நான் மணியை பார்த்தேன்… சரியாக இரவு ஒரு மணி.. ‘பரவாயில்லை விழித்துக் கொண்டுதான் இருந்தேன்’
‘நான் ஒன்று கேட்டால் என்னை பைத்தியம் என்று தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்களா?’
‘ சேச்சே எந்த ஜட்ஜ்மெண்ட்டும் யாரிடமும் வரக்கூடாது என்று நினைப்பவன் நான்…என்ன வேண்டுமோ கேளுங்கள்’
‘ முகுந்தன், நான் பிறவியிலேயே குருடு என்று உங்களுக்கு தெரியுமா?’
பக்கத்து அறையில் நான் அருவமாக இருக்கும்போது மருத்துவர்கள் பேசியதிலிருந்து தெரிந்து கொண்ட விஷயம் தான்.. இருப்பினும், ‘ சாரி. அப்படியா ஏன் அப்படி நடந்தது?’ என்று தடுமாறி கேட்டேன்.
‘பிறவியிலேயே குருடுக்கு என்ன நியதி இருக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை… நான் கேட்க வந்தது அது அல்ல.. நான் கேட்க போகும் கேள்விக்கு மறைக்காமல் பதில் சொல்லுங்கள்’
நான் தலை ஆட்டினேன்… பிறகு தான் புரிந்தது அவருக்கு தெரியாது… ‘ சரி உண்மையாக பதில் கூறுகிறேன்… கேளுங்கள்’ என்றேன்.
‘ எனக்கு சிகிச்சை அளிக்கும் போது என் அறையில் உங்களைப் பார்த்தேன்… ஏன் எப்படி என்று என்னை கேட்காதீர்கள் நீங்களும் என்னைப் பார்த்தீர்கள் என்று எனக்கு தெரியும்’
நான் நடுக்கத்தில்… உலர ஆரம்பித்தேன்… ‘ அப்படி என்றால்.. அந்த நிகழ்வு நம் இருவருக்கும் நடந்ததா?’
‘ ஆமாம் முகுந்தன், பிறவியிலேயே குருடான எனக்கு, நிறங்கள் தெரியாது மனிதர்கள் எப்படி இருப்பார்கள் என்றும் முழுவதாக தெரியாது…ஓரளவிற்கு என் உடலை ஒப்பிட்டு இப்படித்தான் இருப்பார்கள் என்று நினைத்துக் கொள்வேன்… ஆனால் இன்று காலை எனக்கு சிகிச்சை அளிக்கும் போது நான் கண்ட காட்சிகள் எனக்கு கண்ணிருந்து காண்பது போலவே இருந்தது.. உங்களை என்னைப் போன்றே பார்த்தேன்… பிறகு உங்கள் அறைக்குச் சென்று உங்கள் உடலையும் பார்த்தேன். நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். அதுமட்டுமல்லாமல் நான் கோமாவில் இருந்ததாக கூறப்படும் அந்த நேரத்தில் மருத்துவர்கள் பேசிக் கொண்டதை கேட்கவும் பார்க்கவும் முடிந்தது…. அதுமட்டுமல்ல … என்னைக் காப்பாற்ற முடியாது என்று அவர்கள் மனதிற்குள் லேசாக சலித்துக் கொண்டதும் எனக்கு புரிந்தது.’
‘ ஜூலியா நம் இருவருக்கும் நடந்தது ஒரு அற்புதமான நிகழ்வு.. என் வாழ்நாளில் இதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.. ஆனால் எப்பொழுதுமே நம்பியது கிடையாது… நான் ஒரு அறிவியல் பேராசிரியன்.. சரியான விளக்கம் இல்லாமல் எதையும் நான் ஏற்றுக் கொண்டதில்லை.. உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் நம் இருவரின் அந்த நிகழ்வை நான் ஒரு புத்தகமாக எழுதலாம் என்று இருக்கிறேன்… உங்களுக்கு சம்மதமா?’
‘ ஏதோ என் வாழ்க்கைக்கு அர்த்தம் இருப்பதாக புரிகிறது… எனக்கு முழு சம்மதம்’
இதற்குமேல் எனக்கும் ஜூலியாவிற்கும் நடந்த உரையாடல்கள் உங்களுக்கு தேவையில்லாத ஒன்று… ஆனால் அந்த நிகழ்வு மிகப்பெரிய மாற்றத்தை என்னுள் ஏற்படுத்தியது.. அதை விளக்கமாக எல்லோருக்கும் விளக்க வேண்டியது நான் வாழும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைத்ததாகும்.
எல்லோருக்கும் ஆன்மா உண்டு, இந்த நம் பெயர் தாங்கி இருக்கும் உடல் இறந்த பிறகும் வாழப் போகிறது… நான் கண்ட அந்த பெரும் ஜோதி… பேரொளி…கடவுளா, நுண்ணுணர்வா என்று பிரபஞ்சத்தில் புரியாத பிரபஞ்சம் அளவான கேள்விகளுக்கு விடை தேட துவங்கினேன்….
நான் இறந்தேன்…. பிழைத்தேன்…. உண்மையில் இறந்தேனா?