கானல் நீரின் தாக்கம்/தாகம்!

ஊழல் புற்றுநோய் என்றால் புரிதல் இன்மை இருதய நோய் போன்றது..
ஊழலினால் நாம் இழந்தது கொஞ்சம் நஞ்சம் அல்ல.. ஒட்டுமொத்த பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் இழந்தோம். இதற்கெல்லாம் ஊற்றுக்கண் எங்கிருந்து துவங்குகிறது என்று யோசிக்க ஆரம்பித்தேன்.. அது அரசியலில் துவங்க கண்டேன், காலம் காலமாக அள்ளித் தெறித்த கவர்ச்சிகர இலவச வாக்குறுதிகளில் துவங்கி ஆட்டு மந்தைகள், மாட்டு மந்தைகள் புல்வெளியை நோக்கி செல்வது போல புரிதல் இல்லாமல் என் சக மனிதர்கள் சென்றது… சென்றது மட்டுமில்லாமல் அவர்களை வெல்ல வைத்தது தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்று புரிந்தது. சக மனிதர்கள் எனும் சொல் எங்கோ இல்லை என் வீட்டிலிருந்து துவங்குகிறது… என் நண்பர்களில் இருந்து துவங்குகிறது.. அவர்களுக்கெல்லாம் புரிய வைக்க முற்பட்டு என் வாழ்க்கை வீணானது தான் மிச்சம். ஏனோ என் கண்ணோட்டம் இவர்களில் இருந்து வேறுபடுகிறது…. அவர்களெல்லாம் நினைப்பது போல் நான் மறை கழண்டவனோ என்னவோ?! அது நிர்வாண உலகில் உடை உடுத்தியவன் பைத்தியக்காரன் என்பது போலவோ என்னவோ! அது போகட்டும் நான் எது எதெல்லாம் நடக்கக்கூடாது என்று நினைத்தேனோ அவையெல்லாம் நடந்து விட்டது.. அதில் மகிழ்ச்சியுர ஏதுமில்லை பதிலாக என்னால் எல்லோருக்கும் புரிய வைக்க முடியவில்லை என்றாலும் என்னை சுற்றி உள்ளவர்களுக்காவது புரிய வைக்க முடியவில்லையே என்ற இயலாமையில் வருத்தம் தான் மிஞ்சியது.
உலக நிகழ்ச்சிகளை பார்க்கும்போது உலகம் எங்கோ சென்று கொண்டிருக்கிறது… ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளை விட தான் முன்னேற வேண்டும் என்று போட்டி போட்டுக் கொண்டு முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருந்தது… அந்நாட்டு மக்களும் அதற்கு உறுதுணையாக இருந்தனர்..
என்ன சாபக்கேடோ தெரியவில்லை அந்த உத்வேகமும், புத்துணர்ச்சியும் இந்தியாவில்… குறிப்பாக தமிழ்நாட்டில் இல்லை. தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒருவித மாயவலையில் கட்டுண்டது போல எந்தவித இலக்கும் இல்லாமல் அடுத்த சில மணி நேரத்தில் இறந்து விடுவோம் என்பது போல எதிர்காலத்தில் அக்கறையில்லாமல் திக்கு தெரியாமல் இருந்தனர்… அந்த வகையான தற்குறித்தனத்தை அரசியல்வாதிகள் நன்றாக பயன்படுத்திக் கொண்டனர்.. பொதுமக்களோ, இருக்கும் நல்ல அரசியல் கட்சியை பார்க்கத் தவறி மற்ற எல்லா கட்சிகளுக்கும் மாற்றி மாற்றி வாக்களித்து ஏமாந்து இவர்கள் எல்லோரும் ஒரே ரகம் தான் என்ற மனநிலையில் இருந்தனர்… நல்லவற்றின் கவர்ச்சி எங்கோ காணாமல் போனது. இவற்றையெல்லாம் பார்த்து கோபம், எரிச்சல், பிறகு மனசோர்வு வந்தது.. இந்நிகழ்வுகளை வைத்து
எனக்கு புரிந்தவற்றை, புரிந்து தெரிந்தவற்றை, தெளிந்தவற்றை எழுத எழுத ஒரு மிக பெரிய நாவல் அளவிற்கு வந்தது…
பல மாதங்களுக்குப் பிறகு.. ஓரளவுக்கு எழுதி முடித்த பிறகு, எழுதியவற்றை சித்தன் சரிபார்க்க முற்படும் போதுதான் அந்த அதிசயம் நடந்தது..
தமிழ் தேசம் உலகில் கொடி கட்டி பறந்தது… உலக நாடுகள் ஒவ்வொன்றும் உதாரணமாக காட்டுவது தமிழ் தேசத்தை தான், தமிழ் தேசம் என்பது வேறு எதுவும் இல்லை இந்தியா எனும் இன்றைய நாடுதான்.. அது எப்படி தமிழ் தேசமாக மாறியது என்பது உங்களுக்கு போக போக புரியும். தமிழ் தேசத்தில் வடநாட்டில் வாழ்பவர்கள் அதை தமிழ் தேஷ் என்றும் தென்னாட்டில் வாழ்பவர்கள் தமிழ் தேசம் என்றும் கூறினர்.
உலகில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை…. உலகில் மட்டுமல்ல பிரபஞ்சத்தில் நடக்கும் எல்லாவித முக்கிய நிகழ்வுகளை பார்ப்பது, தவிர்க்க முடியும் என்பதை தவிர்ப்பது, தவிர்க்க முடியாது என்பதை மாற்றுவது எங்களைப் போன்றோருக்கு நிரந்தர பணி.. எங்களுக்கு தொடக்கமும் இல்லை அழிவும் இல்லை.
70 வயதை கடந்த சித்தன் தான் எழுதியவற்றை சரி பார்க்க துவங்கினார்… ஒருவித அயர்ச்சி, ஒருவித நிம்மதி ஒருங்கே அமைந்த நிலையில்….
அப்போதுதான் நான் அவர் முன் தோன்றினேன்… நான் என்பது உங்களுக்கு புரிவதற்காக கூறுவது… நான் முன்பு கூறியது போல எங்களுக்கு துவக்கமும் இல்லை முடிவும் இல்லை அதைப் பற்றி உங்களுக்கு புரிய வைக்க இப்போது சரியான நேரமும் இல்லை… பூமியில் வாழும் மனித இனம் உள் உணர்வில் வெகுதூரம் செல்ல வேண்டி உள்ளது, அது பரிணாம வளர்ச்சியின் நீண்ட பாதை… அதை விட்டு அங்கு நான் செய்யப்போகும் விடயத்தை மட்டும் விளக்குகிறேன்…
முதலில் என்னை சித்தன் கவனிக்கவில்லை… சற்றென்று என்ன தோன்றியதோ தெரியாது சுற்றி முற்றி பார்க்க துவங்கினார், அதற்கு மேலும் உருவம் இன்றி நான் இருக்க விரும்பவில்லை. ஓரளவிற்கு மனித உருவம் எடுத்து அவர் முன்பு தோன்றினேன். அவர் பேய் நம்பிக்கை இல்லாதவர் என்றாலும் திடீரென்று நான் தோன்றியதால் திடுக்கிட்டு ஒரு வித பயத்தோடு என்னை பார்த்தார். நான் அவரை சமாதானப்படுத்த சிரிக்க முயற்சித்தேன்.. எங்களுக்கு நீங்கள் நினைத்தும் பார்க்க முடியாத அதீத உணர்வு உள்ளது என்றாலும் சிரிப்பு, வருத்தம், அழுகை, கோபம் இவைகளை எல்லாம் கடந்தவர்கள் நாங்கள்.. அதனால் நான் முயற்சித்த சிரிப்பு எனக்கு வரவில்லை.. ஆனால் அந்த உணர்வை அவருக்கு கடத்தி விட்டேன். என்னை உற்று பார்க்கும் போதே நான் யார் என்பதை அவருக்கு உணர்த்தி விட்டேன். தொலைவிலுணர்தல் அல்லது மனதில் நினைப்பதை மற்றவர் மனதிற்கு கடத்துவது உங்களுக்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் டெலிபதி.
இனி டெலிபதியில் நடந்ததை உங்களுக்கு மொழி வடிவிலேயே கூறுகிறேன்..
உங்களை நான் எவ்வாறு அழைப்பது என்று சித்தன் கேட்டார்.
நாங்கள் பார்வையாளர்கள்…உங்களுக்கு புரியும் மொழியில் கூற வேண்டும் என்றால் ஆத்மா என்று அழையுங்கள், அது ஓரளவுக்கு எங்களுக்கு பொருந்தும்.
ஆத்மா, 70 வயதை கடந்த என்னிடம் நீங்கள் எதை எதிர்பார்த்து வந்தீர்கள்?
அதற்கு நான் நேரடியான பதிலைத் தரவில்லை…. மாறாக, இந்தப் புத்தகத்தை நீங்கள் ஏன் எழுதினீர்கள்? என்று கேட்டேன்.
எங்கள் இனம் குமரி கண்டத்தில் முருகன் தோற்றுவித்த இனம் என்று நம்புகிறோம்… ஆயிரக்கணக்கான முன்மாதிரி முன்னோர்கள் எங்களுக்கு இருந்தும் நான் சிறுவயதில் இருந்து என் சமுதாயத்தில் பார்த்தது அவைகளுக்கு நேர் எதிராக இருந்தது.. எங்கள் கலாச்சாரம், பண்பாடு இவைகள் ஏன், எப்படி எங்கிருந்து சீரழிய துவங்கியது என்று யோசிக்கும்போது எனக்கு தோன்றியவற்றை பிற்காலத்திலாவது யாராவது படிக்க வசதியாக இருக்க இதை எழுதினேன்.. என்று சித்தன் பதிலளித்தார்.
சரி எங்கிருந்து அது துவங்கியது என்று நினைக்கிறீர்கள்?
புரிதல் இன்மை தான் என்று நினைக்கிறேன்..
அதற்கு என்ன செய்தால் மாற்ற முடியும் என்று நினைக்கிறீர்கள்?
எவற்றையும் ஆராய்ந்து அறியும் திறனை அவர்கள் வளர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்..
பகுத்தறிவு வேண்டும் என்று எண்ணுகிறீர்கள்…
பகுத்தறிவு என்று தான் கூற நினைத்தேன் ஆனால் அதன் பொருள் கடவுள் மறுப்பு என்று புரிதல் இன்மையில் என் இனம் புரிந்து கொண்டுள்ளது….
அப்படி புரிந்து கொள்ள எது அவர்களை மாற்றியது…
ஒரு சிலரின் தொடர் சொற்பொழிவுகள் அவற்றை மாற்றியது..
அந்த சொற்பொழிவுகள் மட்டுமே அவர்களை மாற்றி விட்டதா?
அப்படித்தான் நினைக்கிறேன்…
நீங்கள் ஏன் மாறவில்லை?
சித்தன் திடுகிட்டு என்னை பார்த்தார்.
எனக்கு ஓரளவு புரிதல் இருந்தது என்று நினைக்கிறேன்…
மற்றவர்களுக்கு ஏன் அந்த புரிதல் வரவில்லை என்று நினைத்தீர்களா?
சித்தன் யோசிக்க துவங்கினார்..
எனக்குத் தெரியவில்லை…
உங்கள் புத்தகத்திலேயே எழுதி இருக்கிறீர்கள் மக்கள் ஆட்டு மந்தைகள் போல், மாட்டு மந்தைகள் போல் பச்சை பசேல் என்ற புல்வெளியை நோக்கி செல்வது போல் சென்றனர் என்று…
ஆமாம்.
அப்படி என்றால் அவைகளுக்கு என்ன தேவை இருந்தது, பசி.. நல்ல உணவை தேடி சென்றது தான்.
ஆனால் என் சக மனிதர்களுக்கு அந்த தேவை இல்லையே!?
ஆடு மாடுகளுக்கு ஆசை, பேராசை இவைகள் இல்லைதானே?
சித்தன் ஆமாம் என்று தலையசைத்தார்..
அப்படி என்றால் உங்கள் இனத்தவரின் புரிதல் இன்மை துவங்கியது ஆசையோ அல்லது பேராசையோ காரணமாக இருந்திருக்க கூடும் இல்லையா?
சித்தன் என்ன பதிலளிப்பது என்று தெரியாமல் ஆமாம் என்று தலையசைத்தார்.
உண்மை கசக்கும் என்று நம்புகிறீர்களா?
ஓரளவுக்கு நம்புகிறேன்.
அப்படி என்றால் உண்மையை வைத்து ஆசையை தூண்ட முடியாது என்றுதானே பொருள்?
ஆமாம்.
இப்பொழுது உங்களுக்கு புரியும் எங்கு இந்த புரிதலின்மை துவங்கியது என்று..
சித்தன் கொஞ்சம் தடுமாற்றத்தோடு குழம்பினார்.
உண்மையையோ, நல்லவற்றையோ கூறி ஆசையை தூண்ட முடியாது.. அதே சமயம் பொய்களையோ ஆசை வார்த்தைகளையோ கூறி நல்லவர்களை, பண்பட்டவர்களை தூண்ட முடியாது… சரிதானே?
ஆமாம்.
பெரும்பாலான மனிதர்கள் இந்த வகையில் இல்லை அவர்களுக்கு அன்றாட வாழ்க்கையிலேயே தடுமாற்றம் இருந்தது.. அதனால் அவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் அதிக தேவையின் காரணமாக மனசபலம் இருந்திருக்க கூடும் இல்லையா?
ஆமாம்.
கடினமான வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு ஆசை பெரிதாக இல்லை என்றாலும் அவர்களை திசை திருப்புவது எளிதானது தானே?
ஆமாம்.
அதுதான் உங்கள் பேரினம் இப்பொழுது திக்கு தெரியாமல் தற்குறித்தனமாக உள்ளது என்று நினைக்கிறீர்களா?
சித்தனுக்கு ஆமாம் என்று சொல்வதைத் தவிர வேறு தோன்றவில்லை.
ஒரு உதாரணத்திற்கு கேட்கிறேன், நீங்கள் எந்த வயதில் இருந்து நடப்பது தவறாக நடக்கிறது என்று உணர்ந்தீர்கள்?
பள்ளிப்படிப்பு முடித்த உடனே அந்த எண்ணம் தோன்றியது..
உங்களுடன் பிடித்த சக நண்பர்களுக்கு அதுபோன்று தோன்றவில்லையா?
என்னைப் போன்று ஒரு சிலரே இருந்தனர்.. மற்றும் ஒரு சிலர் பொதுவுடைமை சித்தாந்தத்தை விரும்பினர்… மற்றவர்கள் எல்லோரும் ஒருவித போதையில் இருந்தது போன்று கவர்ச்சிகர பேச்சில் கட்டுண்டு இருந்தனர்.
ஏன் அவர்களுக்கு உங்களைப் போன்று புரியவில்லை?
சித்தனுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை…
அப்படி என்றால் கவர்ச்சிகர பேச்சில் அவர்களின் ஆசையை தூண்டி விட்டார்கள் என்று தானே பொருள்?
ஆமாம்..
இப்போது இருக்கும் அனுபவத்தை வைத்துக் கொண்டு சொல்லுங்கள் எதை செய்தால் அவற்றை தடுத்திருக்க முடியும்?
அது உண்மைக்குப் புறம்பான பேச்சுகள் வெறும் கவர்ச்சியை கொண்ட பேச்சுகள் என்று புரிய வைத்தால் முடியும் என்று நினைக்கிறேன்.
அதைத்தான் எப்படி செய்வீர்கள்?
சித்தன் குழம்பினார்…
களை எடுத்தல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நாம் விளைவிக்க வேண்டிய பயிர்கள் நன்றாக வளர வேண்டும் என்றால் களை எடுப்பது மிக முக்கியமானது என்று நினைக்கிறேன்.
அதற்கு அப்போது வாய்ப்பு இருந்தது என்று நினைக்கிறீர்களா?
சித்தனுக்கு ஓரளவுக்கு புரிந்தது.. ஆமாம் வாய்ப்பு இருந்தும் ஏன் அப்படி அவர்கள் அந்த சமயத்தில் செய்யவில்லை என்று யோசிக்க துவங்கினார். எதுவும் பிடிப்படவில்லை..
உங்களுக்கு பதில் கிடைத்திருக்கும் என்று நம்பினேன் ஆனால் நீங்கள் குழம்புகிறீர்கள்..
சித்தன் தலைகுனிந்தார்.
சட்டம் ஒழுங்கு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
சற்றென்று சித்தனின் கண்களில் மலர்ச்சி தெரிந்தது.. ஏதோ புரிகிறது போல் தெரிந்தது… ஆமாம் சட்டமும் ஒழுங்கும் சரியாக நடைமுறைப்படுத்தியிருந்தால் பொய்யான கவர்ச்சிகர பேச்சுக்களுக்கு அங்கு இடம் இருந்திருக்காது..
நான் சிரிக்க முயற்சித்தேன்.. பரவாயில்லை சித்தனுக்கு புரிந்து விட்டது.
மிக முக்கியமான தருணத்திற்கு வந்து விட்டோம் இனி நான் கூறப்போவதை, கேட்கப் போவதை மிகவும் உன்னிப்பாக கவனித்து கேட்கவும்..
சரி என்று சித்தன் தலை அசைத்தார்.
காலத்தையும், விண்வெளியையும் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
சித்தனுக்கு நான் கேட்டது புரியவில்லை என்று புரிந்து கொண்டேன்…
சரி விவரமாக கேட்கிறேன்… காலத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
சித்தனுக்கு நான் கேட்டது தர்ம சங்கடத்தை உண்டு படுத்தியது என்று புரிந்து கொண்டேன்..
காலத்தைப் பற்றி காலம் கடந்து கேட்கிறேன் என்று நினைக்கிறீர்களா?
சித்தன் அதிர்ச்சியுற்று என்னை பார்த்தார்..
ஆமாம் அந்தக் காலம் செய்த கோலம் தான் இது.. எல்லாம் காலம் கடந்து விட்டது இனி என்ன செய்வது?
அப்படி என்றால் காலம் நேர்கோட்டில் பயணிக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள் சரிதானே?
ஆமாம் நேர்கோட்டில் அல்லாமல் வேறு எப்படி இருக்க முடியும்?
உங்களுக்கு இருக்கும் அறிவியல் அறிவு கடற்கரையில் இருக்கும் ஒரு சிறு மணல் துளி அளவிற்கு தான்… இந்த அண்டவெளியின் அறிவியல் இந்தப் பரிமாண வளர்ச்சியில் இருக்கும் மனிதர்களுக்கு எட்டாது… மனித இனம் இன்னும் செல்ல வேண்டிய தூரம் எங்கோ இருக்கிறது… உள்ளுணர்வில், நுண்ணுணர்வில் அடைய வேண்டிய தூரம், அடைய வேண்டிய வளர்ச்சி வெகு தூரம் இருக்கிறது… இப்போது நான் சொல்லப்போவது உங்களுக்கு புரிய தேவை இல்லை ஏனென்றால் இந்த நம் பேச்சுக்கள் உங்கள் நினைவிலும் இருக்கப் போவதில்லை….
சித்தன் ஒருவித அதிர்ச்சியுடன் என்னை பார்த்தார்.
காலம் நேர்கோட்டில் மட்டும் பயணிப்பதில்லை… அதீத வளர்ச்சியில் காலத்தை நமக்கு ஏற்றார் போல் மாற்ற முடியும்…
புரிகிறது கால பயணத்தை பற்றி கூறுகிறீர்களா?
அது ஓரளவிற்கு தான், நான் சொல்வது காலத்திலேயே மாற்றி அமைப்பது..
சித்தனுக்கு உண்மையிலேயே எதுவும் புரியவில்லை…. ஏதோ மிகப் பெரிய ஒன்றை கூறப்போகிறேன் என்று நினைத்து பயம் கலந்த உணர்வுடன் என்னை பார்த்தார்.
எவ்வித அதிர்ச்சியும் இல்லாமல் நான் இனி கூறப்போவதை கேளுங்கள்… பயம் வேண்டாம்..
சித்தனுக்கு பயம் அதிகரித்தது…. ஏதோ ஒன்று பெரிதாக கூறப் போகிறேன் என்று புரிந்து விட்டது…
நீங்கள் இதுவரை எழுதியதை பார்க்கும்போது நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை உங்களுக்கு அவ்வளவாக திருப்திகரமாக இல்லை என்று புரிகிறது…
அப்படி இல்லை நான் வாழ்ந்த, வாழும் என் தனிப்பட்ட வாழ்க்கை எனக்கு பிடித்தமான வாழ்க்கை தான். ஆனால் நாட்டை நினைக்கும்போது தான் என்னால் என்றுமே மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை….
அது எனக்கு தெரியும், அதை சரி செய்யத்தான் இவ்வளவு நேரம் உங்களிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
சித்தன் திடுக்கிட்டு என்னை உற்றுப் பார்த்தார்…. அதை எப்படி சரி செய்ய முடியும் என்று அவர் நினைப்பது எனக்கு புரிந்தது.
நான் உங்களை ஒருவித கால பயணத்திற்கு அனுப்பப் போகிறேன்… நீங்கள் எல்லோரும் நினைப்பது போன்ற காலப் பயணம் அது அல்ல… காலத்தையே மாற்றி அமைக்கும் பயணம்.
சித்தன் சிந்திக்கும் திறமையை இழந்தது புரிந்தது எனக்கு… இனியும் விவரித்துக் கொண்டு இல்லாமல் கூற வந்ததை கூற விரும்பினேன்.
நான் உங்களை அனுப்பப் போவது ஒருவித காலப் பயணம்… அனுப்பப் போவது என்பது சரியான விளக்கம் அல்ல…. ஏனென்றால் உங்களின் வாழ்க்கையின் பெரும் பகுதியை இழக்க போகிறீர்கள்…
சித்தன் தன் நிலையை இழக்கத் தொடங்கினார்… வாழ்க்கையின் பெரும் பகுதி இழக்கப் போகிறேனா என்ன சொல்கிறார் என்று சிந்திப்பது புரிந்தது..
உங்களை பள்ளிப் பருவம் முடிந்து தீவிர நல்ல சிந்தனை வந்த அந்த காலத்திற்கு அனுப்புகிறேன்.. சில வாய்ப்புகளும் உங்களை தேடி வரும்… அந்த வாய்ப்புகள் தமிழ்நாட்டின் தல எழுத்தை புரட்டிப்போட உங்களுக்கு வாய்ப்பு தரும். உங்களை நான் அனுப்பியது உங்கள் நினைவுக்கு வராது…. நீங்கள் இப்போது விரும்பும் ஒரு நல்ல நிலைக்கு நாடு வரும் வரை உங்களுக்கு தெரியாமல் உங்களுடனேயே நான் இருப்பேன்… சரியான வாய்ப்புகளை உங்களுக்கு உருவாக்கித் தருவேன்.. அதை ஏற்றுக்கொள்ளும் படியும் செய்வேன் மற்றவற்றை உங்கள் நல்ல மனது நிவர்த்தி செய்யும்…
ஏதேனும் கேள்விகள் இருந்தால் கேட்கவும்…
சித்தனுக்கு இப்போது மரண பயம் உண்டாகியது…. ஆயிரம் கேள்விகள் ஒரு வினாடிக்குள் வந்து மறைந்தது… மிக முக்கியமாக குடும்பமும், பேரன், பேத்திகளும் என்ன ஆகப் போகிறார்களோ என்று….
கவலை வேண்டாம் இதே குடும்பம் உங்களுக்கு அமையுமாறு நான் பார்த்துக் கொள்கிறேன் வேறு ஏதேனும் கேள்விகள் உண்டா?
கேள்விகள் நிறைய இருந்தன… கேட்க சக்தியற்று சித்தன் நிலை குலைந்து இருந்தார்.. இனியும் தாமதிக்க விரும்பாமல் அவர் போற்றி வணங்கும் முருகரின் உருவம் என்னிடத்தில் தெரியுமாறு பார்த்துக் கொண்டேன்..
அவர் முகத்தில் பெரு மகிழ்ச்சி, பேரின்பம் காணக் கண்டேன்.
அவரையும் மீறி சரி என்று தலை அசைத்தார்.
காலத்தை மாற்றும் கால பயணத்திற்கு நான் அனுப்ப சித்தன் தயாராகினார்.
பாகம் ஒன்று முடிந்தது பாகம் இரண்டில் மற்றவை….


