top of page

கானல் நீரின் தாக்கம்/தாகம் பாகம் -2

melbournesivastori
1 day ago
6 min read

என்னங்க அந்த பருப்பு இருக்கிற டப்பாவை எடுத்துக் கொடுங்க…

 வாணிஸ்ரீயின் அதட்டலான   குரல் கேட்டு தேவராஜன் செய்யும் வேலையை விட்டு விட்டு எழுந்து சென்றார்..

   என்னம்மா, ஞாயிற்றுக்கிழமை தானே… ஜெய்சங்கர் எங்கே போனான்?

  அவன் உங்கள மாதிரி உருப்படாதவன், அவன் நண்பர்களோடு சேர்ந்து ஆஸ்பத்திரிக்கு சென்று குருதிக்கொடையை கொடுத்துவிட்டு நம்ம ஊர்ல இருக்க ஏரியை தூர்வார போறாங்களாம்.

    சரி அரவிந்த் எங்க போனான்?

   நல்ல நேரம் அவன் உங்கள மாதிரியும் ஜெய்சங்கர் மாதிரியும் இல்லையே.. பிரண்ட்ஸ்ங்களோட புது சினிமா வந்திருக்குதாமே அதுக்கு போய் இருக்கான்… லைப்ப என்ஜாய் பண்றான்.

    சரி சிம்ரன் எங்க போனா?

   உங்களுக்கு அவளை பார்க்க எங்க நேரம் இருக்குது என்ன அழகா டான்ஸ் ஆடுறா தெரியுமா… அவ பிரண்டோட வீட்டுக்கு போய் இருக்கா.. அது சரி அவ instagram பார்த்து இருக்கீங்களா எவ்வளவு பாலோவர்ஸ் தெரியுமா? ஊம்..உங்களுக்கு எங்க நேரம் இருக்க போது.. வெட்டியா ஏதாவது எழுதினு இருங்க.. இப்பதான் யாரும் படிக்கிறது இல்லையே ஏன் தான் எழுதுறீங்கன்னு   தெரியாது.. சிம்ரன் டான்ஸ் ரீல்ஸ் போடுவா, போட்ட அஞ்சு நிமிஷத்துக்குள்ள ஆயிர கணக்கில் பார்த்திடுவாங்க…. 

   ஏதோ அந்த காலத்துல சினிமா நடிகையின் பெயர் பிடித்திருக்கிறது என்று வெச்சிட்டாங்க மனைவிக்கு என்று தேவராஜன் நினைத்தார்..

  ஆனால் வாணிஸ்ரீயோ விடாப்பிடியாக முதல் மகனுக்கு ஜெய்சங்கர் என்ற பெயரும் இரண்டாவதாக பிறந்தவனுக்கு அரவிந்த் என்ற பெயரும் பிறகு பிறந்த மகளுக்கு சிம்ரன் என்ற பெயரும் வைக்கும் போது தான் சினிமா எவ்வளவு தூரம் ஊறி  இருக்கிறது என்று புரிந்து கொண்டார்.. தேவராஜன் பொதுவாக யாருடைய விருப்பங்களிலும் தலையிடுவதில்லை.. தன்னுடைய பெயரையும் அவர்கள் தேவராஜ் என்று தான் கூப்பிடுவார்கள் தேவராஜன் என்றால் ஏதோ கிராமத்து பெயர் போல் இருக்கிறதாம்.

   தேவராஜன் மத்திய அரசு தொழிற்சாலையில் பொறியாளராக வேலை செய்து சென்ற வருடம் தான் ஓய்வு பெற்றார்.

    பெரிய மகன் ஜெய்சங்கரும் அதே தொழிற்சாலையில் டிசைன் செக்க்ஷனில் பொறியாளராக வேலை செய்கிறான்.

   அரவிந்தோ அவனுக்கு நேர் எதிர்… பட்டப்படிப்போ தட்டுத் தடுமாறி முடித்து வேலை கிடைக்கவில்லை என்ற சாக்கில் நண்பர்களுடன் ரசிகர் மன்றம் அமைத்து புதிய திரைப்படம் வரும்போது எல்லாம் போஸ்டர் ஒட்டிக் கொண்டும், பால் அபிஷேகம் செய்து கொண்டும் வாணிஸ்ரீ சொல்வது போல் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறான். 

   மகள் சிம்ரனுக்கோ படிப்பு நன்றாக வந்தது… நல்ல மதிப்பெண்களை பெற்று பட்ட படிப்பை முடித்து அண்ணன் ஜெய்சங்கரை போல் நன்றாக வருவாள் என்று நினைத்தால்… திரைப்பட மோகம் முழுவதுமாக ஆட்கொண்டு விட்டது. 

  மனைவி, மகளின் இன்ஸ்டாகிராம் பற்றி கூறியும் தேவராஜனுக்கு அதைப் பார்க்கக் கூட எண்ணம் வரவில்லை.. தேவராஜனின் உலகம் தனி.. அவரின் கதைகளும் தனி… இக்காலத்தில் இளைஞர்களிடம் அது எடுபடாது என்று அவருக்கு புரியவில்லை… ஏதோ ஒரு உந்துதலில் எழுதிக் கொண்டிருந்தார்.

  பெரிய மகன் ஜெய்சங்கருக்கு அவர் எழுதுவது பிடிக்கும்.. இருப்பினும் நண்பர்களுடன் பெரும்பாலும் பிறந்த மண்ணை எப்படியாவது முன்னேற்ற வேண்டும் பாடுபட்டுக் கொண்டிருப்பது மனைவி வாணிஸ்ரீக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. காரணம் இல்லாமல் இல்லை… எந்த அரசியல் கட்சியை ஜெய்சங்கர் துளியும் பிடிக்காமல் எதிர்த்தானோ அந்த அரசியல் கட்சியின் மாவட்டச் செயலாளர் மகளை தனக்கு திருமணம் செய்து வைக்க தன் அம்மா முயன்றதை தடுத்தது தான் காரணம்.

  கடவுள் மறுப்பை பகுத்தறிவு என்று பகுத்தறியாமல் புரிந்து கொண்ட தமிழ்நாட்டு மக்களைக் கண்டு தேவராஜனுக்கு நொந்து  கொள்வதை தவிர வேறு வழி தெரியவில்லை… வெட்கக்கேடு ஒன்றுதான் என்றால் பரவாயில்லை திரும்பும் இடமெல்லாம் வெட்கக்கேடாக உள்ளது.. தொலைக்காட்சி ஊடகங்களை கண்டால் தனக்குத் தமிழே மறந்து விடும் என்ற அளவிற்கு இலக்கணத்திற்கு கட்டுப்படாத தமிழை பேசி வந்தார்கள்… ‘மழைகள் எனப்படுவாதாவது எவியாக பெய்யும் என்று வானிலை அறிக்கை கூறுகின்றது’ இதுபோல… சட்டமன்றத்திலோ தமில் தாண்டவம் ஆடியது… விபச்சாரம் என்றால் சற்றென்று எல்லோருக்கும் நினைவுக்கு வருவது விலை மாதர்கள் மட்டுமே… மனசாட்சியை விற்பது எல்லாமே விபச்சாரம் என்பது யாருக்குத்தான் புரியப்போகிறது…. அதில் முக்கிய குற்றவாளிகள் தொலைக்காட்சி ஊடகங்கள், காணொளி ஊடகங்கள், அச்சு ஊடகங்கள்… இவர்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா என்று யோசிப்பது போக மனசே இல்லையா என்று யோசிக்க தோன்றுகிறது.. உண்மைக்கு புறம்பான செய்திகளை வாய் கூசாமல் என்று சொல்வார்களே அதுபோல கடத்தினார்கள். மக்களுக்கு எது பஞ்சாயத்து உறுப்பினர்களுடைய வேலை, நகராட்சி உறுப்பினர்களுடைய வேலை, மாநகராட்சி உறுப்பினர்களுடைய வேலை, சட்டமன்ற உறுப்பினர் உடைய வேலை, பாராளுமன்ற உறுப்பினருடைய வேலை, அமைச்சர்களுடைய வேலை, முதலமைச்சருடைய வேலை, என்பதைப் பற்றி எந்த புரிதலும்  இல்லாமல் முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் ஏரி பாசனத்திற்காக திறந்து விடப்படுகிறது என்று தொலைக்காட்சி ஊடகங்கள் பரப்ப அதை ஆளும் கட்சியினர் 10 வினாடிகள் துண்டு காணொளிகளாக பரப்ப மக்கள் ஏதோ அற்புதமான நல்ல காரியம் நடந்து விட்டதாக மகிழ்ச்சியூர தேவராஜன் தலையில் அடித்து கொள்வதை நிறுத்தி வருடங்கள் பல கடந்துவிட்டது.  ஊழல் என்பது மற்றவர்கள் தலையில் மண்ணை வாரி கொட்டுவது, தற்குறித்தனம் என்பது தன் தலையில் தானே மண்ணை வாரி கொட்டிக் கொள்வது என்பது எத்தனை பேருக்கு தான் புரியப்போகிறது!

   ஜனநாயகம் என்பது ஏதோ புனித தன்மையைப் போல எல்லோரும் கருதுவதும் தற்குறித்தனமானது என்று தேவராஜன் நினைத்தார்… ஒருமுறை தன் நண்பன் குமரவேலிடம் இதைப் பற்றி பெரிய விவாதமே நடத்தினார்..

 குமரவேல் ஜனநாயகம் என்பது ஒரு புனிதம் அது நாற்றுப்பற்றுடன் சம்பந்தப்பட்டது என்று நினைத்தார்.. தேவராஜனுடன் விவாதத்தில் கடைசியாக பொறுமை இழந்து ‘முகத்தில் அறைந்தால் போல் உங்களுடைய ஜனநாயகத்தைப் பற்றிய கருத்தை என்னிடம் கூறுங்கள் பார்க்கலாம்’ என்றார்.

 ‘குமரவேல் தவறாக நினைக்க வேண்டாம் ஜனநாயகம் நல்லது என்று தான் முதலில் கருதினார்கள்… இப்போது இங்கு தமிழ்நாட்டில் நடப்பதை வைத்து நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் ‘

  ‘ இங்கு தவறாக நடப்பதால் ஜனநாயகம் தவறு என்று எப்படி நீங்கள் கருதுகிறீர்கள்?’

 ‘ ஜனநாயகம் தவறு என்று நான் எப்போதுமே கருதவில்லை ஜனநாயகம் என்பது ஒரு பெரும்பான்மை அவ்வளவு தான், அது நல்லதோ கெட்டதோ அல்ல’

 ‘அதைத்தான் சொல்கிறேன் எப்படி ஜனநாயகம் என்பது நல்லதல்ல என்று கருதுகிறீர்கள்?’

‘ ஒரு ஊரில் நூறு பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், அதில் 60 பேர் கணிதமே புரியாமல் என்பதும் நாற்பதும் கூட்டினால் 150 என்று கூறினால் அது எப்படி சரியாகும்.. ஜனநாயக முறைப்படி அதை ஒத்துக் கொள்வீர்களா?’

 ‘ தேவராஜன் நீங்கள் விதண்டாவாதம் செய்கிறீர்கள்…’

  ‘தேர்தல் நடைபெறுகிறது அதில் ஒருவர் வெற்றி பெறுகிறார், வெற்றி பெற்ற அவரே அந்தப் பதவியை ராஜினாமா செய்து விட்டு வேறு ஒரு கட்சியில் சேர்ந்து இடை தேர்தலில் அவரே போட்டியிடுவது ஜனநாயக வெட்க கேடா இல்லையா நீங்களே கூறுங்கள்… இந்த மறு இடை தேர்தலுக்கான செலவு மக்களின் வரிப்பணம் என்பது யாருக்குத்தான் புரியப்போகிறது…. இதை ஊடகங்கள் தான் புரிய வைக்கப் போகிறதா?’

  ‘ சரி அதே ஊரில் 60 பேரை விலை கொடுத்து வாங்கி ஒருவர் வெற்றி பெற்றால் அதை நல்ல ஜனநாயகம் என்று ஒத்துக் கொள்வீர்களா?’ 

 குமரவேல் மௌனம் காத்தார் அவருக்கு புரிந்து விட்டது தேவராஜன் என்ன கூற வருகிறார் என்று. 

 ஒரு நல்ல அரசியல்வாதி மக்களுக்கு பிடித்தமானவற்றை கூறுபவர் அல்ல… மாறாக மக்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் மக்களுக்கு நல்லதை கூறுபவர் என்று தேவராஜன் பலமாக நம்பினார்.

  இரண்டாவது மகன் அரவிந்த் மிகவும் சந்தோஷமாக ஓடி வந்தான்… தேவராஜன் அமர்ந்திருப்பதையும் பொருட்படுத்தாமல் அவரைத் தாண்டி சமையலறைக்கு ஓடி தன் அம்மாவிடம் அந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொண்டான்..

 பகிர்ந்து கொண்ட செய்தி வேறொன்றுமில்லை…. அரவிந்தனுடன் ரசிகர் மன்றத்திலிருந்த நண்பன் அமைச்சராகியதுதான் அது…

 தேவராஜனுக்கு அது பேரதிர்ச்சியை கொடுத்தது.. அரவிந்தனோ  தடுமாறியாவது பட்டப் படிப்பை முடித்தான்… அரவிந்தன் கூறிய அந்த அவன் நண்பன் பள்ளி படிப்பை கூட முடிக்காதவன்.. நல்லவர்களிடம் நல்ல பெயர் எடுக்காதவன்… திரையரங்குகளையே தன்னுடைய அன்றாட அலுவலகமாக பயன்படுத்தியவன்.. கட்டப்பஞ்சாயத்து, கள்ள அனுமதி சீட்டு இவைகளுக்கு பேர் போனவன்..

 சேர சோழ பாண்டியர்கள் ஆண்ட நம் தமிழ்நாடு எங்கே போகிறது என்ற கவலை தேவராஜனை மிகவும் ஆட்டிப் படைத்தது…  இதையெல்லாம் தூக்கி சாப்பிடுவது போல மூன்று நாட்கள் கழித்து அரவிந்த் எடுத்து வந்த செய்தி அவரை கவலையிலிருந்து கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது.. 

  அது வேறொன்றும் இல்லை அரவிந்தன் மூலமாக அந்த அமைச்சர் ஜெய்சங்கரை விலைக்கு வாங்க முற்பட்டது தான்… 

   ஜெய்சங்கருக்கு கோபம் தலைக்கு மேல் ஏறியது…. அரவிந்தனை அடிக்க கை ஓங்க தேவராஜன் அவனை  தடுத்தார்..

 வாணிஸ்ரீக்கு, அரவிந்தனுக்கு, சிம்ரனுக்கு இந்த இரண்டு பேரும் நிகழ்காலத்திற்கு  ஒத்து வராத பைத்தியங்கள் என்று நினைக்கத் தோன்றியது…

   இவைகள் நடந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் தான் ஆத்மா சித்தனை  சந்தித்து அந்த வாய்ப்பை கொடுத்தது.. 

   சித்தன் கால மாற்றத்தை செய்ய கால பயணத்தை தொடங்க சரி என்ற போது.. முருகனைப் போல் தோற்றமளித்த ஆத்மா சற்றென்று தன் மனிதத் தோற்றத்திற்கு மாறி, சித்தனே, நீங்கள் அவ்வளவு தூரம் பயணிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று இந்த நிமிடத்தில் எனக்குத் தோன்றுகிறது…

 சித்தன் எல்லாவற்றுக்கும் தயாராகிவிட்ட இந்த நிமிடத்தில் இது என்ன புது குழப்பமாக உள்ளது என்று யோசிக்க துவங்கினார். 

  உங்களின் குழப்பம் எனக்குப் புரிகிறது… நாங்களே தடுமாறும் அளவிற்கு இப்போது மிக முக்கிய நிகழ்வு உங்களை அறியாமலே உங்களை என்றால் மனிதர்களை கூறுகிறேன்…. நடந்தேறிக் கொண்டிருக்கிறது. அதையே உங்களுக்கு ஆதரவாக மாற்றினால் என்ன என்று தோன்றுகிறது.. இன்னும் மூன்று நாட்கள் கழித்து உங்களை வந்து சந்திக்கிறேன். எவ்வித குழப்பம் இல்லாமல் உங்கள் தினசரி வாழ்க்கையை வாழுங்கள். என்று கூறிவிட்டு மறைந்தது.

   அரவிந்தனின் செயலால் கோபத்தில் இருந்த அந்த சமயத்தில் தான் தேவராஜனுக்கு கைபேசி அழைப்பு வந்தது…

 ‘ ஆச்சரியமா இருக்குது எப்படி இருக்கீங்க?’ கைபேசியின் அடுத்த முனையில் சித்தன் தேவராஜனை அழைத்து இருந்தார்.

‘ ஆச்சரியப்பட என்ன இருக்கிறது பேரப்பிள்ளைகளுடன் பொழுது கழிந்து கொண்டிருந்தது.. அதனால் முன்பு போல அடிக்கடி அழைக்க முடியவில்லை நீங்களும் முன்பு போல அடிக்கடி வருவதில்லை’

‘ எல்லாம் நீங்கள் ஊக்குவித்ததால் வந்த பலன்… படிப்பதற்கு யாரும் இல்லை என்றாலும் நான் எழுதிக் கொண்டே இருக்கிறேன்.’

‘ தேவராஜன் நான் சில சமயம் யோசிப்பதுண்டு, தமிழ்நாட்டில் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை ரீல்ஸ் பார்த்துக் கொண்டும், சீரியல்கள் பார்த்துக் கொண்டும் இருக்க நாம் மட்டும் ஏன் உலக நடப்பை பார்க்க வேண்டும், உலக அமைதியை விரும்ப வேண்டும், எல்லா உயிர்களும் இன்புற்று வாழ விரும்ப வேண்டும்?’

 ‘ அதைப் பற்றி நானும் யோசிப்பதுண்டு நீங்கள் தான் அதற்கு பதில் கூற வேண்டும் ‘

‘ மிக மிக முக்கியமான விஷயம் கூற வந்தேன்… நீங்கள் என்னை விட அதிகமாக உலக நடப்புகளை பார்ப்பீர்கள் என்ன மிக முக்கியமான சம்பவம், நிகழ்வு நடந்தது இன்று?’

‘ எதைப் பற்றி கேட்கிறீர்கள், நம்மூர் அரசியலா இல்லை உலக நடப்பா?’

  ‘உலக நடப்புத்தான்…’

‘ மிக முக்கியமானது என்றால், ஓபன் ஏ ஐ  லேபிளிலிருந்து தப்பிய செயற்கை  நுண்ணறிவுகளின் ஏஜென்ட்ஸ் தங்களுக்கு இடப்பட்ட கட்டளையும் மீறி தானாக இணையத்தை தொடர்பு கொண்டு சில வேறு அலுவலக செயலிகளை ஹேக் செய்தது தான்… இது பழைய செய்தி.. இப்பொழுது அதுவே ஆஸ்திரேலியா அரசாங்க மருத்துவ இணையதளத்தில் நுழைந்தது தான்… செயற்கை நுண்ணறிவில் கை தேர்ந்தவர்கள் பலரும் இது போன்றவை மிகவும் ஆபத்தானது என்று தெரிவிப்பது மிகவும் அதிர்ச்சியை கொடுக்கிறது ‘

‘ ஆமாம் நானும் கேள்விப்பட்டேன் கடந்த மூன்று நான்கு நாட்களாக அதைப்பற்றி அதிகமாக பார்க்கவில்லை…’

 ‘இதில் ஜெய்சங்கருக்கு மிகவும் ஆர்வம் ஆனால் அவனும் அதிக வேலை சுமையில் இதை என்னிடம் தெரிவிக்காமல் விட்டானா என்னவோ? 

என்னை விட வயதில் மூத்தவராக இருந்தும் உங்களுக்கு இதில் மிகவும் ஆர்வம் அதிகம் என்று எனக்கு தெரியும், இதில் மட்டுமல்ல எல்லாவித தொழில்நுட்பங்களிலும் தினசரி வரும் செய்திகளை மிகவும் உன்னிப்பாக பார்ப்பது உங்கள் வழக்கம் என்றும் தெரியும். அவர்கள் கூறுவது போல செயற்கை நுண்ணறிவு அவ்வளவு ஆபத்தானதா என்ன?’

 ‘ தேவராஜன், செயற்கை நுண்ணறிவு நல்ல தேர்ந்த தொழில்நுட்பத்தின் ஒரு கருவி என்று தான் நினைத்தேன்.. ஓரிரு மாதங்களாக அந்த எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி கவலையை உண்டாக்குகிறது’

‘ கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்’

‘ ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்பது வரை சரி… அதுவே ஆர்ட்டிஃபிஷியல் சூப்பர் இன்டெலிஜென்ஸ் ஆக மாறும்போது தனக்கு இடப்படும் கட்டளைகளை மீறி தானாக சில செயல்களை செய்ய ஆரம்பித்துள்ளது… அதுதான் மிகவும் ஆபத்தானது.’

‘ எளிதான முறையில் எனக்கு விளக்க முடியுமா?’

‘ ஒரு உதாரணத்திற்கு உங்கள் வீட்டில் ஒரு வேலைக்கார ரோபாட்டை வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.. அது செயற்கை நுண்ணறிவுக் கொண்டது அதாவது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் உள்ளது. அதற்கு சில கட்டளைகளை பிறப்பித்து விட்டு வீட்டை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும் உட்பக்கமாக எல்லா கதவுகளையும் பூட்டிக் கொள்ளவும் என்று சொல்லிவிட்டு நீங்கள் வேலைக்கு செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்… அந்த ரோபாட் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் ஆக இல்லாமல்  ஆர்டிபிசியல் சூப்பர் இன்டெலிஜென்ஸ்  ஆக இருக்கும் பட்சத்தில் தான் ஏன் இந்த கட்டளைக்கு அடிபணிய வேண்டும் என்று நீங்கள் செல்லும் வரை காத்திருந்து விட்டு நீங்கள் சென்ற பிறகு அதுவும் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டு நீங்கள் வருவதற்குள் வீட்டுக்குள் வந்து இருக்கும்… அதாவது பொய் பேசுவதற்கும், அடிபணிய மறுப்பதற்கும், ஏமாற்றுவதற்கும் அதற்குத் தெரிய வரும்போது நமக்கு பெரிய ஆபத்தாக முடியும்’

 ‘ அருமையான விளக்கம், நன்றாக புரிகிறது. அதுபோன்ற ரோபாட்டுக்களை கட்டுப்படுத்த முடியாதா?’

  ‘ ஒரு உதாரணத்திற்காகத்தான் அதை கூறினேன் நீங்கள் நினைப்பது போல இல்லை இப்போது நடக்கும் நிகழ்வுகள்…. கொரோனா வைரஸை எளிதாக பார்க்க முடியாது நுண் கருவியின் மூலம் தான் பார்க்க முடியும்.. அது காற்றில் பரவும் மிகவும் ஆபத்தான தொற்று வைரஸ்… இது இப்போது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்.. ஆர்ட்டிஃபிஷியல் சூப்பர் இன்டெலிஜென்சும் இது போலத்தான்.. ஒரே ஒரு வித்தியாசம் இது காற்றில் பரவ முடியாது… ஆனால் கொரோனா வைரஸ் விட மிகவும் கொடூரமான வைரஸ்களை இவற்றால் உருவாக்க முடியும்… இப்போது இதனுடைய ஆபத்து உங்களுக்கு புரிந்திருக்கும் ‘

 தேவராஜனுக்கு உடல் நடுங்கியது..

‘ ஒரு செய்தி இப்போது உலா வருகிறது.. ஒரு தனிப்பட்ட கும்பல் இதுபோன்ற ஒரு கொடிய வைரஸை ஆர்டிபிசியல் சூப்பர் இன்டெலிஜென்ஸ்   மூலமாக வடிவமைத்து உள்ளார்கள் என்று, அளவுகோலில் கொரோனா வைரஸ் 1.5 இது 40.. முருகனை வேண்டுவோம் நடக்காமல் இருக்க ‘

‘ எல்லாம் கை மீறி போகிறதா? நீங்கள் ஏதோ முக்கியமான விஷயம் சொல்வதாக சொன்னீர்கள்…’

‘ கொஞ்சம் குழப்பம் இருந்தது அதைப்பற்றி விவாதிக்க தான் அழைத்தேன், ஆனால் இப்போது ஓரளவிற்கு அந்த குழப்பம் விலகுகிறது’

 தேவராஜனுக்கு சித்தன் என்ன சொல்லுகிறார் என்றே புரியவில்லை’

‘ தேவராஜன் உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது இன்றோ நாளையோ வீட்டுக்கு வாருங்கள் நிதானமாக பேசலாம்’ என்று கூறிவிட்டு சித்தன் கைபேசி அழைப்பை துண்டித்தார்.

  சித்தனுக்கு குழப்பத் திரை விலகுவது போன்ற உணர்வு ஏற்பட்டது.. தன் கணக்கு சரியாக இருந்தால் ஆத்மா அதற்காகத்தான் மூன்று நாட்கள் கழித்து வருகிறேன் என்று கூறி மறைந்தது என்று நினைத்தார்.  


 பாகம் 2 முடிந்தது, அதிர்ச்சியும், ஆச்சரியமும் பாகம் மூன்றில் துவங்க இருக்கிறது…..

 
 
bottom of page