top of page

பாவங்கள் பழி தீர்க்கும்!

  • melbournesivastori
  • Jan 13
  • 8 min read

By சிவா.


அது ஒரு திருமண நிகழ்ச்சி, நான் என் தாத்தாவுடன் வந்தேன்..

என் தாத்தாவிற்கு எப்படியோ, ஆனால் எனக்கு, எப்போதுமே எந்த ஒரு நிகழ்ச்சிக்குமே முன்கூட்டியே செல்ல வேண்டும் என்பது… அதன் காரணத்தால் தாத்தாவை முன்பே அழைத்துக் கொண்டு வந்து விட்டேன். முன்பு என் பெரிய தாத்தா திருச்சியில் இருந்திருக்கிறார்… இப்போது திருச்சியில் யாரும் இல்லை, அதனால் வெறும் மலைக்கோட்டை கோயிலை மட்டும் பார்த்துவிட்டு, இரவு தங்கி விட்டு காலையில் முதல் வேலையாக திருமணத்திற்கு வந்து விட்டோம். இது ஒரு மார்கழியில் நடக்கும் புரட்சித் திருமணம் என்றார்கள் எனக்கு புரட்சி எங்கிருந்து வந்தது என்று ஏதும் புரியவில்லை…..

வாங்க வாங்க, இவ்வளவு சீக்கிரம் வந்தது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கிறது.. சிற்றுண்டி ரெடி சாப்பிட்டுவிட்டு வாங்க.. தாத்தாவிற்கு தெரிந்த தூரத்து உறவினர், மணப்பெண் வீட்டார் வரவேற்றார். அவ்வாறு நாங்களும் சென்று சிற்றுண்டி முடித்து வந்தோம். சாப்பாடு எல்லாம் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன் உக்காருங்க, உட்காருங்க, என்று முதல் வரிசையை காண்பித்தார். நாங்களும் மகிழ்ச்சியாக அமர்ந்தோம். இன்னும் நேரம் இருப்பதால் அவ்வளவாக கூட்டம் இல்லை.

‘என்ன முகுந்தா இதுவரை உன்னுடைய ட்ரிப் எப்படி உள்ளது?’

‘மிகவும் பிடித்திருக்கிறது தாத்தா’

‘அதனால்தான் அடிக்கடி இங்கு வர சொன்னேன், நீ இரண்டு வயதாக இருக்கும் போது வந்தாய் பிறகு 16 வருடம் கழித்து இப்போதுதான் வருகிறாய்.. உனக்கு அந்த தாத்தா பாட்டி தான் பிடிக்கும் என்பது எனக்கு தெரியும் இருந்தாலும் என்னையும் மறக்காதே’

‘அட நீங்க வேற தாத்தா, அப்படி எல்லாம் ஏதுமில்லை சிறுவயதில் எனக்கு நிறைய என் வயது ஒத்த பசங்களும், நண்பர்களும் அங்கிருந்ததால் பிடித்தது…இப்போது தெரிந்து கொண்டேனே…இனி நிறைய முறை வருகிறேன்.’

நாங்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போதே மாப்பிள்ளை வீட்டார் ஏதோ ஒரு முக்கிய நபரை வரவேற்க கூட்டமாக சென்றனர். அந்த முக்கிய நபரையும் அவருடன் வந்த ஒரு கூட்டத்தையும் அழைத்து வந்து நாங்கள் அமர்ந்திருக்கும் முதல் வரிசையையே காண்பிக்க, வேறு வழி இல்லாமல் நாங்களும் அதற்குப் பின்வரிசையில் அமர சென்றோம்.

‘யாரு தாத்தா அவரு?’

‘எனக்கு தெரியாது இந்த ஊர்ல யாராவது பெரிய புள்ளியாக இருக்கும்’

‘புள்ளின்னா?’

‘இம்பார்ட்டண்ட் பர்சன்’

‘ஓ அப்படியா?’

நாங்கள் பேசுவதை கேட்ட பக்கத்திலிருந்து நபர், அவர் இந்த ஊர் வார்டு கவுன்சிலர் என்றார்.

‘அதற்கு ஏன் தாத்தா நம்மளை எழுப்பனும்?’

கவுன்சிலர் கூட வந்த முரட்டு மீசையுடன் இருந்த ஒருவன், எங்களை திரும்பிப் பார்க்க….

நான் கேட்டதற்கு பதில் கூறாமல் என் தாத்தா என் கையை அழுத்தினார்.. இதைப் பற்றி அதற்கு மேல் பேச வேண்டாம் என்பது பொருள்.

ஒரு ஐந்து நிமிடம் உறவினர்கள் பற்றி என் தாத்தா கூற நான் கேட்டுக் கொண்டிருந்தேன். நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் நியூசிலாந்தில்.. அதனால் இங்குள்ள அரசியல் எனக்கு சுத்தமாக தெரியாது புரியவும் புரியவில்லை.. அங்கு என் வீட்டிலும் இதைப் பற்றி பேசாததால் எந்த ஒரு விஷயமும் எனக்கு தெரியாது. உறவு முறைகளும், உறவினர்களும் இந்த தாத்தா கூறியது தான்.

மற்றொரு மாற்றம், அதே மாப்பிள்ளை வீட்டார் நுழைவு வாயில் நோக்கி ஓட.. மற்றொரு முக்கிய புள்ளி அவருடைய கூட்டத்தோடு வர, முன் வரிசையில் இருப்பவர்கள் இரண்டாம் வரிசையில் வர, இரண்டாம் வரிசையில் இருந்த நாங்கள் மூன்றாம் வரிசைக்கு செல்ல… இந்த சர்க்கஸ், தாலி கட்டும் நிகழ்வு நடைபெற இருந்த ஐந்து நிமிடங்களுக்கு முன்பு வரை நடந்தது.. அந்த நிமிடத்தில் நாங்கள் கடைசி வரிசைக்கு முன் வரிசையில் அமர்ந்திருந்தோம். எனக்கு ஏன் இப்படி எங்களை பந்தாடுகிறார்கள் என்று புரியவில்லை.. அதைக் கேட்க முற்படும்போது எப்போதும் போல என் கையை என் தாத்தா அழுத்த அதை அப்போது கேட்கக் கூடாது என்று புரிந்து கொண்டேன். அதே பக்கத்தில் இருந்தவர் வரிசை வரிசையாக எங்களுடன் தாண்டி வந்தவர் கூறினார், ‘முதலில் வந்த கவுன்சிலரைத் தொடர்ந்து இப்போது கடைசியாக வந்தவர் மாவட்ட செயலாளர்’

‘ஓ இது ஃபுட் செயினா’ என்று நான் கேட்டது என் தாத்தாவிற்கும் அவரது பக்கத்தில் இருந்தவருக்கும் புரியவில்லை. எனக்கு இது எதுவுமே புரியவில்லை.. ஆனால் நடப்பதெல்லாம் அநாகரிகமாக தோன்றியது.. என்னுடைய அம்மா எப்போதுமே கூறுவார் உலகில் தலைசிறந்த நாகரிகம் நமது என்று.. அப்படி இருக்க இங்கு நடக்கும் இந்த பந்தாடல் எந்த வகையான நாகரிகம் என்று தெரியவில்லை.

ஒரு பெண் வந்து எல்லோருக்கும் மஞ்சளும் குங்குமம் கலந்த அரிசியை கொடுத்துவிட்டு சென்றார். எதற்காக என்று யோசிப்பதற்குள் ‘கெட்டி மேளம் கெட்டி மேளம்’ என்கிற சப்தம் உரக்க மேடையில் இருந்து கேட்க, கெட்டி மேள சத்தம் காது இரண்டையும் பிளக்க…. ஒரே நேரத்தில் எல்லோரும் எழுந்து நின்று, நின்ற இடத்தில் இருந்தே கையில் இருந்த அரிசியை மேடையை நோக்கி வீச… அது தான் இருக்கும் இடத்தில் இருந்து இரு வரிசைக்கு முன்னால் இருப்பவர்கள் மேல் விழ….இதுதான் திருமணமோ என்று யோசித்து புரியாமல் புரிந்து கொண்டேன். நியூசிலாந்தில் நான் பார்த்த திருமணங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது இங்கு இப்பொழுது தேவையில்லை என்று தோன்றியது… இது வேறு கலாச்சாரம்..

தாலி கட்டிய நிகழ்வுக்குப் பிறகு, எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு மேடையை நோக்கி ஓட..’என்ன தாத்தா ஏன் எல்லோரும் ஓடுகிறார்கள்?’ என்று தாத்தாவைப் பார்த்து நான் கேட்க..

‘ஒன்னும் இல்ல, கிப்ட் கொடுக்க செல்கிறார்கள்’ என்றார்.

‘ஓ பரிசு கொடுக்க செல்கிறார்களா?’ என்று நான் கேட்க, தாத்தாவின் பக்கத்தில் இருந்தவர் ‘பரவாயில்லை தம்பி தூய தமிழில் பேசுகிறாய்!’ என்று என்னை பார்த்து கூறினார்.

‘ எனக்குத் தெரியவில்லை, புரியவில்லை என்றால் தான் நான் ஆங்கில வார்த்தையை பயன்படுத்துவேன்’

‘ வீட்டில் எந்த மொழியை பேசுகிறாய்?’ என்று அவர் கேட்க…

‘ அம்மாவிடம் மற்றும் ஓரிரு தமிழ் குடும்பங்களுடன் மட்டும் தமிழ், மற்ற எல்லோரிடமும் ஆங்கிலம் தான்’ என்று நான் கூற…

‘ பரவாயில்லையே, எப்படி தமிழை இவ்வளவு நன்றாக பேசுகிறாய்?’

‘ எல்லாம் அம்மாவிடம் கற்று, பேச பழகிக் கொண்டது’

‘ உங்க அம்மாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும், என் பேரப்பிள்ளைகள் அனைவரும் ஆங்கிலம் கலந்த தமிழில் பேசினால் தான் எல்லோரும் மதிப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்’

‘அதை கடந்த சில நாட்களாக நானும் கவனித்துக் கொண்டிருக்கிறேன், உங்களை தாத்தா என்று கூப்பிடலாமா?’

‘ அதைவிட பெரு மகிழ்ச்சி எனக்கு ஏது, அப்படியே கூப்பிடுப்பா’ என்றார் அவர்.

என் தாத்தா சற்று எரிச்சலுடன் ‘நாளை ஊர் திரும்பியவுடன் எங்கு செல்லலாம்’ என்று கேட்டார்..

ஏன் இந்த எரிச்சல் என்று எனக்கு ஓரளவு புரிந்தது… பொசசிவ்னஸ்.

‘தாத்தா, வரும் வழியில் ஏதோ ஸ்பெஷல் கேம்ப் என்று பார்த்தோமே என்ன அது அங்கே செல்லலாமா?’

தாத்தாவுக்கு சட்டென்று கோபம் வந்துவிட்டது ஏன் என்று எனக்கு புரியவில்லை…

‘ அதைப் பற்றி ஏன் கேட்கிறாய், அது பயங்கரவாதிகளை அடைத்து வைத்திருக்கும் இடம்’ என்றார்.

அதுவரை அமைதியாக இருந்த பக்கத்தில் இருந்தவர், சற்று கோபத்துடன்.. ‘என்னங்க இது ஊரிலிருந்து வந்த பேரனிடம் இப்படி சொல்றீங்க? நம்மள பத்தி நாமலே பயங்கரவாதி அது, இதுன்னு சொன்னா எப்படிங்க? அவங்கள பத்தி தெரியுமா? அவங்க அனுபவிச்ச கஷ்டம் தான் உங்களுக்கு புரியுமா? நீங்கள் சதா டிவி பாக்குறவருனு நினைக்கிறேன் அதனால்தான் இப்படி புரியாம பேசுறீங்க… தயவுசெய்து உண்மை தெரியலைன்னா உங்க கருத்தை உங்களோட வச்சுக்கோங்க..’ என்று படபடவென்று பொரிந்து தள்ளிவிட்டார்.

கிட்டத்தட்ட என் தாத்தா அவரிடம் சண்டைக்கே சென்று விட்டார்…

‘ என் பேரனிடம் உங்க பயங்கரவாத கருத்துக்களை திணிக்காதீர்கள்… ‘ என்று என் தாத்தா முடிக்கும் முன்னரே…

‘எதுங்க பயங்கரவாத கருத்து, நம் தாய் மண்ணில் நம் தாய் மொழி நமக்கு உயிர் போன்றது என்று சொல்வதா? தாய் மண்ணைக் காக்க போராடுவதா?’ என்று அவர் கூற.

அதற்கு என் தாத்தா பதில் கூறாமல், சற்றென்று என் கையை பற்றி கொண்டு மேடையை நோக்கி சென்றார். இந்த என் தாத்தாவின் செய்கை எனக்கு பிடிக்கவில்லை, இந்த செய்கை தவறு என்று பட்டாலும் நானும் அமைதியாக அவரைப் பின்பற்றினேன்.. என் தாத்தா கவனிக்காத போது அந்த பெரியவரை பார்த்து கண்ணாலே மன்னிப்பை கோரினேன்.

இதன் பிறகு இந்த திருச்சி பயணம் எனக்கு ஒட்டாமல் இருந்தது. திருமணம் முடிந்து ஊர் திரும்பினோம். என் தாத்தாவை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.. அவர் காணும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் என்னால் பார்க்க முடியவில்லை.. அந்த நிகழ்ச்சிகளில் 99 சதவிகிதம் தேவையற்ற விஷயங்களை பார்க்க முடிந்தது.. நான் அங்கு பார்த்த பாமர மக்களின் அன்றாட வேதனைகளும் இன்னல்களும் எந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பார்க்க முடியவில்லை. நான் நேரில் கண்ட நிகழ்ச்சிகளின் பிரதிபலிப்பாக அந்த நிகழ்ச்சிகள் இல்லாமல் ஏதோ நாமெல்லாம் சொர்க்கத்தில் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருந்தது.

அடுத்த மூன்று நாட்கள் சென்றதே தெரியவில்லை.. ரத்தினகிரி முருகனையும், திருத்தணி முருகனையும் தரிசித்து விட்டு சில உறவினர்கள் வீட்டுக்கும் சென்று வந்தோம்… என்ன கலாச்சார வேறுபாடு… எதைச் சொல்ல, எதை விட….. ஏன் தாத்தாவுடன் வீணான விவாதம் என்று அமைதியாக இருந்தேன்.

சென்னையில் இருக்கும் மற்றொரு உறவினர் வீட்டிற்கு சென்று ஊருக்கு திரும்பும் போது பல இடங்களில் ஒரே விதத்தில் வடிவமைக்கப்பட்ட போஸ்டர்களை காண முடிந்தது.. என்னால் தாங்க முடியவில்லை…

‘தாத்தா ஏன் எல்லா இடத்திலும் ஏதாவது எழுதி வைத்திருக்கிறார்கள் இல்லை போஸ்டர் ஒட்டி வைத்திருக்கிறார்கள்? இப்பொழுதுதான் எல்லோரிடத்திலும் கைபேசி இருக்கிறதே அதில் அவர்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளலாமே?!’ என்று தெரியாத தனமாக என் தாத்தாவிடம் கேட்க.. அவரும் ஏன் தான் நான் ஊருக்கு வந்தேனோ என்று என்னை பார்க்க.. அது எனக்கு புரிந்தது..

என் அப்பா, அம்மா, நண்பர்கள் அனைவரும் என்னைப் பற்றி அவர்களின் மனதில் ஓடுவதை அப்படியே என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்று சொல்வார்கள்…அது ஒரு விதத்தில் எனக்கு சாபமே. நியூசிலாந்தில் இருக்கும் வரை அது வரமாகப்பட்டது… இங்கு மனதில் சரி என்று பட்டதை பேசுவதே குற்றமாக பொதுவாக எல்லோரும் பார்க்கும் மனநிலையை புரிந்து கொண்டேன். கோபம் வந்ததை அடக்கி கொண்டு, அது ஒரு வருந்தத்தக்க சூழல் என்று புரிந்து கொண்டேன். இது வேறு கலாச்சாரம்!

‘சரி விடுங்க தாத்தா அந்த போஸ்டரில் யார் அந்த பெண் என்ன செய்தி என்று மட்டும் சொல்லுங்கள்’

தாத்தா வேண்டா வெறுப்பாக,

‘ யாரோ உமா ரத்தினமாம் நார்வே நாட்டின் வெளியுறவு துறை அமைச்சராம், இந்தியா வருகிறாராம்’ என்றார்.

எனக்கு ஆர்வம் மிகுந்தது…. ‘உமா ரத்தினம்… தாத்தா இது தமிழ் பெயராக இருக்கிறதே அவர் எப்படி நார்வை நாட்டின் வெளியுறவு துறை அமைச்சராக வர முடிந்தது?’

தாத்தா எரிச்சல் அடைந்து.. அதைப் பற்றி எனக்கு தெரியாது…ஊருக்கு சென்றவுடன் விரிஞ்சிபுரம் கோவிலுக்கு செல்லலாமா என்று கேட்டார்.

சாதாரண இந்த பேச்சுக்களைக் கேட்ட அந்தக் கார் டிரைவர், ‘ சார் அந்த உமா ரத்தினம் 1983இல் இலங்கையில் நடந்த இனக் கலவரத்தில் ஒரு வருட குழந்தையாக தனக்குத் தெரிந்த குடும்பத்துடன் தாய் தந்தையை பிரிந்து நார்வே நாட்டுக்குச் சென்றவர்’ என்று அவர் கூறி தொடரும் முன்பே என் தாத்தா அவரை தடுத்து.. ‘வேலா, அதெல்லாம் நமக்கு தேவையில்லாத விஷயம்.. நீ ஒழுங்கா ரோடை பார்த்து ஓட்டு’ என்று கூறி வேலனை அதற்கு மேல் விளக்கம் கூறாமல் தடுத்து விட்டார். எனக்கு அதிக ஆர்வம் தொற்றிக் கொண்டது இதைப் பற்றி மேலும் அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று..

‘தாத்தா விரிஞ்சிபுரம் கோயில் என்று ஏதோ சொன்னீர்களே .. ‘இன்று வேண்டாம். நான் ஊருக்கு செல்வதற்கு முன் நேரம் இருந்தால் செல்லலாம்’

‘ தம்பி, விரிஞ்சிபுரம் கோயில் அருமையான கோயில். ஒரு காலத்தில் சம்பூர்வராயர்களின் தலைநகரமாக இருந்தது’என்று வேலன் பேச்சை தொடரும் முன்பே, ‘சரித்திரம் எல்லாம் நமக்கு தேவையில்லை, கோவில் அழகா இருக்கும் பாக்கலாமா?’என்று என் தாத்தா கூற.. இனி எல்லாவற்றையும் நானே ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

‘சரி தாத்தா நாளைக்கு செல்லலாம்.’ என்று முற்றுப்புள்ளி வைத்தேன்.

வீட்டிற்கு வந்ததும் இரவு உணவை முடித்துக் கொண்டு எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த மாடி அறைக்கு சென்றேன். விரிஞ்சிபுரம் கோவிலைப் பற்றி பிறகு பார்த்துக் கொள்ளலாம் முதலில் உமா இரத்தினம் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள கூகுளை நாடினேன்.

1983 இலங்கைத் தமிழர்களுக்கு கொடூர துவக்கம்… குட்டி மணி, ஜெகன் எனும் இரு போராளிகளின் கொடூர கொலைகளை தெரிந்து என் 18 வருட வாழ்நாளில் காணாத வருத்தத்தை கண்டேன். ‘இங்கு தமிழர்கள் மாமிசம் கிடைக்கும்’ இன்னும் பதாகைகள் அந்த சமயத்தில் இலங்கையில் வைக்கப்பட்டிருந்ததை அறிந்து நாகரிக உலகம் என்று நான் கருதிய இந்த உலகத்தில் இப்படியும் நடந்ததா, அதுவும் நான் பிறந்த இனத்திற்கு என்று என்னால் நம்ப முடியவில்லை….. ஏன் யாரும் இதைப் பற்றி என்னிடம் கூறவில்லை என்று கோபமும் ஆத்திரமும் பொத்திக் கொண்டு வந்தது… மேலும் அந்தப் பகுதியை என்னால் படிக்க முடியவில்லை.

உமா ரத்தினத்தைப் பற்றி படிக்க ஆரம்பித்தேன். அந்த 1983 கலவரத்தின் பின் நம் இன தமிழ் மக்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று தங்களிடம் இருக்கும் தங்க நகைகளை மட்டும் எடுத்துக் கொண்டு அதில் பாதிக்கு மேல் பயணத்திற்கு கொடுத்துவிட்டு ஒவ்வொரு திசையாக பல நாடுகளுக்கு அகதிகளாக சென்றதை அறிந்தேன்.. அந்தோ பரிதாபம் உமாவின் தந்தை இன மத வெறியர்களால் கண்டம் துண்டமாக வெட்டப்பட்டு பிணமாக இருக்க அந்த சமயம் உமாவின் தாய் ரங்கநாயகி எதற்காகவோ வெளியே சென்று இருக்க… பக்கத்து வீட்டில் குடியிருந்தவர்கள் ஒரு வயது குழந்தை உமா அழுவதை கேட்டு உடனடியாக அவளைத் தூக்கிக் கொண்டு அகதிகளாக பயணத்தை துவங்க, முருகன் அருள் அவர்களுக்கு இருந்ததோ என்னவோ, நார்வே நாட்டில் தஞ்சம் புகுந்தனர். அந்த 1983 மட்டுமல்லாமல் அதன் பிறகு இனக்கலவரங்களில் இரு முறை வந்த எல்லோருக்கும் நார்வே மட்டுமல்லாமல் பெரும்பாலும் எல்லா நாடுகளும் அகதிகளாக வந்த நம் தமிழ் மக்களுக்கு குடியுரிமை வழங்க, இந்த கோரக் கொடுமைகளை அறியாமல் உமா வளர்ந்து பள்ளி கல்லூரிகளில் நன்றாக படித்து பட்டம் பெற்று அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு நார்வே பார்லிமென்டில் 8 வருடங்களாக எம் பியாக இருந்துவிட்டு மூன்று மாதங்களுக்கு முன்பு தான் தான் சார்ந்த கட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகு முதல் தமிழ் பெண்ணாக நார்வேயின் அயல் உறவுத் துறை அமைச்சராக பதவி ஏற்றார்.

கல்லூரி காலங்களிலேயே தன்னை வளர்த்து ஆளாக்கிய தாய் தந்தையர், தன்னுடைய பிறப்பு தாய் தந்தையர் இல்லை என்று தெரிந்து கொண்டு, வளர்ப்பு தாய் தந்தையரிடம் விளக்கங்களைக் கேட்க….

அதற்கு, குழந்தை உமாவுடன் அழைத்து வரப்பட்ட தங்களின் சொந்த மகன் செல்வத்தை திடுக்கிட்டு பார்க்க… அப்போதுதான் செல்வத்திற்கும் உமா தன்னுடன் பிறந்த தங்கை இல்லை என்றும் வளர்ப்பு தங்கை என்றும் தெரிந்தது… கடந்த காலம் கசப்பாக இருந்தாலும் கண்டிப்பாக தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்று செல்வமும், உமாவும் கட்டாயப்படுத்த….

விளக்கங்களைத் தர முன் வந்தாலும் உமாவின் தந்தையின் கோரக் கொலையை தெரிவிக்க விரும்பாமல் வேறு வழி இல்லாமல் தெரிவித்ததுடன், உமாவின் தாயைப் பற்றி ஏதும் தெரியாது என்றும் பெயர் மட்டும் ரங்கநாயகி என்றும் கூறினார்கள்.

இவற்றைப் படித்து தெரிந்து கொண்ட எனக்கு காலம் நமக்கு செய்த கொடுமையை நினைத்து கண்களின் ஓரத்தில் கண்ணீர் துளிர்த்தது….

காலங்கள் உருண்டோட, கடந்த காலத்தின் பாவங்கள் பாவத்தினை செய்தோரை பிழைத்தீர்க்க ஆரம்பித்தது….

ஆமாம் செல்வம் ஐ எம் எப் எனப்படும் இன்டர்நேஷனல் மானிட்டரி பண்டில் ஒரு உயர் பதவியில் இருக்க, உமா நார்வே நாட்டின் வெளிவரத்து துறை அமைச்சராக பதவியேற்க…. இருவருக்கும் தீவிர உந்துதல் இருந்தது உமாவின் தாயை பற்றிய செய்தியை அறிவதில்.

ஜனவரி 14, 2025 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தினம்… குறைந்தது 50 ஆயிரம் வருட கலாச்சார நாகரீகத்தைக் கொண்ட நம் மாபெரும் அறுவடை நாளை சிறப்பிக்கும் பொங்கல் தினம்!

1983 ஆம் ஆண்டு அகதிகளாக தாயகத்தை விட்டு சென்ற இரு குழந்தைகள்.. காலம் செய்த கொடுமையை காலமே சீரமைத்து பரிகாரம் செய்தது போல்…

ஐஎம்எப்பில் இலங்கை கேட்ட கடனை பரிசீலிக்க ஐ எம் எப் சார்பாக செல்வம் தான் பிறந்த தன் தாயகத்திற்கு செல்ல…..

அதே பொங்கல் தினத்தன்று நம் தாய்களுக்கு எல்லாம் தாயகமான தமிழ்நாட்டிற்கு நார்வே நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மாண்புமிகு உமா ரத்தினம் அவர்கள் பொங்கல் திருநாளை கொண்டாட வருகிறார் என்று பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன…

எனக்கு ஆர்வம் அளவில்லாமல் போய்க்கொண்டிருந்தது…. ஒருபுறம் மகிழ்ச்சி, மறுபுறம் வியப்பு…நாம் வணங்கும் முருகன் நம்மை கைவிடவில்லை என்று மனம் முழுமையாக ஏற்கவில்லை… இன்னும் நடக்க வேண்டியது நிறைய இருக்கிறது… நானும் என் வாழ்நாளில் நம் இனத்திற்காக ஏதாவது சாதிக்க வேண்டும் என்று என் மனதளவில் உறுதி எடுத்துக் கொண்டேன்.

பொங்கல் விடியற்காலையே தூக்கம் இல்லாமல் செய்திகளைப் படிக்க ஆரம்பித்தேன்… தலையில் இடி விழுந்தது போல் இருந்தது… நான் படித்த செய்தி அப்படி.

நார்வே நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மாண்புமிகு உமா இரத்தினம் அவர்கள் பொங்கல் திருநாளை திருச்சியில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் கொண்டாடப் போகிறார் என்ற செய்தி தான் அது. யூடியூபில் பலர் இதுவரை சரியாக பராமரிக்கப்படாமல் இருந்த சிறப்பு முகாம் இப்போதுதான் இருப்பதாகவே தெரிகிறது என்று கிழித்திருந்தனர்… ஒரு சில யூடியூபர்கள் அது தவறு நன்றாக தான் எப்போதுமே இருந்தது என்றும் கூறியிருந்தனர்.

நான் தாத்தாவிடமும் குடும்பத்தாரிடமும் தலைவலி இருப்பதாகவும் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும்.. என்னைத் தவிர்த்து நீங்களே பொங்கலை கொண்டாடிக் கொள்ளுங்கள் என்றும் கூறிவிட்டேன். என் தாத்தாவிற்கு எனக்கு நம் கலாச்சாரத்தின் பெருமை தெரியவில்லை என்ற வருத்தம் இருப்பது எனக்கு புரிந்தது.. என் மீது அவரது புரிதல் அது போல.

நான் அமைச்சர் உமா ரத்தினம் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை லைவில் பார்க்க ஆயத்தமானேன்.

தமிழ்நாட்டை தலை நிமிர வைத்த தமிழ் பெண்ணே வருக வருக!

இதுபோன்ற நூற்றுக்கணக்கான பஞ்ச் டயலாக்குகளுடன் பதாகைகள் எங்கும் காண… அந்த நேரமும் வந்தது.

திருச்சி இதுவரை காணாத அளவிற்கு பரபரப்புக்கு உள்ளானது.. வழிநெடுக காவல்துறை. ஆங்காங்கே அசம்பாவிதம் நடக்காமல் இருக்க தமிழ்நாட்டின் மற்றும் இந்தியாவின் உளவுத்துறை..

பாதுகாப்பு மகிழுந்துகள் பல முன் வர பிறகு வந்த வெளியுறவுத்துறை அமைச்சரின் மகிழுந்து வந்து நிற்க..

தமிழ் தேவதை போல் 42 வயது வெளிவருதுறை அமைச்சர் உமா ரத்தினம் இறங்கி வந்தார். எதிரே மாலை அணிவிக்க வந்த எல்லோரையும் புன்முறுவலுடன் தடுத்து அந்த மாலைகளை வாங்கி அந்த சிறப்பு முகாமில் அகதிகளாக தங்கி இருந்த முதிய தாய்மார்களுக்கு அணிவித்தார். நம் தமிழ்நாட்டு பழக்க தோஷத்தில் எல்லோரும் கைதட்ட, ‘தயவு செய்து கரகோஷம் செய்யாதீர்கள், மனம் நொந்து இருக்கும் இவர்களுக்கு ஆதரவு தேவை, ஆரவாரம் இல்லை’ என்றதும், கூட்டமே சப்தம் இல்லாமல் அடங்கியது.

அமைச்சர் உமா ரத்தினம் சிறப்பு முகாமில் உள்ள ஒரு அதிகாரியை கண்ணால் பார்க்க, அவரும் கண்ணால் ஒரு 63, 64 வயது மதிக்கத்தக்க பெண்மணியை காண்பிக்க….

அதுவரை கம்பீரமாக இருந்த உமா ரத்தினம் அவர்கள், எங்கிருந்து தான் வந்ததோ அந்த அழுகை, காட்டாற்று வெள்ளம் போல்… இல்லை இல்லை நயாகரா நீர்வீழ்ச்சி போல் பீறிட்டு வர அந்த கணமே உடன் சென்று அந்தப் பெண்மணியை கட்டித்தழுவி அழத் துவங்கினார். சுற்றி இருந்த எல்லோரும் அதிர்ச்சியில் உரைய….

உண்மை தெரிந்து, தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்திய துணை கண்டம் மட்டுமல்லாமல், உலகமே உறைய அந்த உண்மை தெரிந்தது…

ஆமாம் அந்தப் பெண்மணி தான் ரங்கநாயகி, நார்வேயின் வெளியுறவுத் துறை அமைச்சர் உமா ரத்தினத்தின் தாயார்.

அப்போது எனக்கு துவங்கிய இந்த ஆனந்த கண்ணீர் இல்லை இல்லை இது ஆழ்ந்த வருத்தத்தின் கண்ணீர்… இதோ என் தாயக நியூசிலாந்துக்கு திரும்பும் விமான பயணத்தில் இப்பொழுதும் துளிர்க்கிறது..

கடைசியாக நான் படித்த செய்தி,

தன் தாயாரை தன்னுடனேயே இல்லை பிறகாவது நார்வே நாட்டுக்கு அழைத்துச் செல்ல அனுமதி அளிக்க உதவுமாறு உமா ரத்தினம் அவர்கள் இந்திய நாட்டிற்கு வேண்டுகோள் விடுத்ததாக.


 
 
bottom of page